செவ்வாய், 9 ஜூலை, 2024

‘நீட்’ தேர்வின் பின்னணியில் உள்ள சூழ்ச்சிகள் – அவலங்கள்!

விடுதலை நாளேடு

 ‘அஞ்சாமை’ திரைப்படம் வெறும் படம் மட்டுமல்ல –

உண்மையை அப்பட்டமாக வெளிப்படுத்திடும் பாடம்!
‘அஞ்சாமை’ திரைப்படம் பார்த்த பின்னர் தமிழர் தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

சென்னை, ஜூன் 21 ‘நீட்’ தேர்வின் பின்னணியில் உள்ள சூழ்ச்சிகள் – அவலங்கள்! அஞ்சாமை திரைப்படம் வெறும் படம் மட்டுமல்ல – உண்மையை அப்பட்டமாக வெளிப்படுத்திடும் பாடம்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பிரபல மனோதத்துவ மருத்துவர் எம் திருநாவுக்கரசு அவர்கள் தயாரித்துள்ள ‘அஞ்சாமை’ திரைப்படத்தினை நேற்று (20.6.2024) மாலை வடபழனி கமலா திரையரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்களுடன் பார்த்தார்.

திரைப்படத்தின் முடிவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

பேட்டியின் விவரம் வருமாறு:

சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளை அப்படியே ஸ்கேன் செய்ததைப்போல காட்டியிருக்கிறார்கள்!
எதார்த்தமான உண்மையான நிகழ்வுகளை இரண்டு மணிநேரத்தில், நீட் தேர்வால் நாட்டில் நடக்கி்ன்ற அத்தனை செய்திகளையும் – அவலங்களையும், தற்கொலைகளையும் கொஞ்சம்கூட கூட்டாமல், குறைக்காமல், அப்படியே ஸ்கேன் செய்ததைப்போல, சமூகத்தை அப்படியே படம் பிடித்து் ‘அஞ்சாமை’ திரைப்படத்தில் காட்டப்பட்டு இருக்கிறது.

உண்மையை, அதன் நிர்வாணத்தன்மையை
அப்படியே எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்!

சமூகத்தில் எத்தனை தவறுகள் நடக்கின்றன; எத்தனை பேர் முன்னாலே பேசுவது, பின்னாலே தாக்கு வது என்ற நிலைகள் எப்படியெல்லாம் இருக்கின்றன என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லக்கூடிய அளவிலும், ஒரு தேர்வு என்பதை எவ்வளவு முரட்டுத்தனமாக, சமூக விரோதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் உள்நோக்கம் கொண்டவர்கள் – என்பதை இத்திரைப்படத்தில் விளக்கியுள்ளார்கள். இன்றைக்கு விடாப்பிடி யாக இத்தேர்வை நடத்திக் கொண்டு எத்தகைய சூழ்ச்சிகளைக் கையாளுகிறார்கள் என்பதையெல்லாம் நடைமுறை எதார்த்தமாக கொஞ்சம்கூட மிகைப்படுத்தாமல், உண்மையை அப்படியே பச்சையாக – தந்தை பெரியார் மொழியில் சொல்லவேண்டுமானால், ‘‘உண்மையை, அதன் நிர்வாணத்தன்மையை அப்படியே எடுத்துக் காட்டி யிருக்கிறார்கள்.”

‘அஞ்சாமை‘ திரைப்படத்தின்மூலமாக
அஞ்சாமல் செய்திருக்கிறார்கள்

சில நேரங்களில், உண்மை கசப்பாக இருக்கும்; உண்மை சில நேரங்களில், மற்றவர்களால் செரிமானம் செய்யப்படாமல் இருக்கும். ஆனால், உண்மை எப்பொழுதும் உண்மையாகத்தான் இருக்கவேண்டுமே தவிர, உண்மை கலப்படமாக இருக்க முடியாது என்பதை ‘அஞ்சாமை‘ திரைப்படத்தின்மூலமாக அஞ்சாமல் செய்திருக்கிறார்கள்.

தயாரிப்பாளருடைய அஞ்சாமையை முதலில் பாராட்ட வேண்டும். அதேபோல, இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் ஒரு மனோதத்துவ மருத்துவர் என்பதால், மிகச் சிறப்பாக தன்னுடைய அனுபவங்களையும், நடப்புகளையும் இணைத்தி ருக்கிறார். இயக்குநர் முதற்கொண்டு, நடித்தவர்கள் சிறப்பாகத் தொழில் நடிகர்கள், பிரபலமானவர்கள் எப்படி நடிப்பார்களோ அதனை வெல்லக்கூடிய அளவிற்கு நடித்திருக்கிறார்கள்.

வெறும் படம் மட்டுமல்ல – ஓர் அற்புதமான பாடம்!

இது மாணவர்கள் உலகத்திற்கு மட்டுமல்ல, சமூகத்தி னுடைய கோணல்களை சுருக்கக்கூடிய ஒரு திரைப்படம். வெறும் படம் மட்டுமல்ல – ஓர்

அற்புதமான பாடம்!
வாழ்த்துகள், நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

பங்கேற்றோர்

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் நீதியரசர் ஏ.கே. ராஜன், நீதியரசர் அரிபரந்தாமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா. முத்தரசன், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் சு. திருநாவுக்கரசர், அ.இ.அ.தி.மு.க. செய்தி தொடர்பு செயலாளர் வைகைச் செல்வன், மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மருத்துவர்கள் ஜி.ஆர். ரவீந்திநாத், சாந்தி, கமலா திரையரங்க உரிமையாளர் சூர்யா, தயாரிப்பாளர், மருத்துவர் ம.திருநாவுக்கரசு, கதை நாயகன் கிருத்திக் மோகன், இயக்குநர் சுப்புராமன், ஒளிப்பதிவாளர் கார்த்திக், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், மதுரா டிராவல்ஸ் வி.கே.டி. பாலன், அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. மோகன், எழுத்தாளர் ஓவியா, ஊடகவியலாளர்கள், சமூகநீதிப் பற்றாளர்கள், கழகத் தோழர்கள் இத்திரையிடலில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக