வியாழன், 27 ஏப்ரல், 2017

உழவர்களுக்காக முழு அடைப்பு - எழும்பூர் போராட்டம்.

கார்ப்பரேட்டுகளுக்கு ரூ.அய்ந்தரை லட்சம் கோடியை அள்ளிக் கொடுக்கும் மோடி அரசு
விவசாயிகளுக்கு ரூ.72 ஆயிரம் கோடியைத் தள்ளுபடி செய்ய முடியாதா?
மனுநீதி ஆட்சியை வீழ்த்துவோம் - இது தொடக்கமே!
எழும்பூர் போராட்ட விளக்கக் கூட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!


சென்னை, ஏப்.25 மத்தியில் உள்ள மோடி அரசு கார்ப்பரேட்டுகளுக்கும், சாமியார்களுக்கும் துணை போகும் ஆட்சி - விவசாயிகளைப் புறக்கணிக்கும் ஆட்சி - ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் இந்த மனு நீதி ஆட்சியை வீழ்த்திட இது தொடக்கமே என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தமிழக உரிமைகளை காத்திட, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிட மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தி இன்று (25.4.2017) தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடை பெற்றது. சென்னை எழும்பூரில் நடைபெற்ற அறப்போராட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
அத்துணை பேரும் ஒத்துழைப்பை
நல்கியிருக்கிறார்கள்
மிகுந்த எழுச்சியோடு நாம் ஏற்கெனவே தோழமைக் கட்சிகளுடைய கூட்டத்தில் எடுத்த முடிவுக்கு ஏற்ப இன்றைக்கு இந்தப் பொது வேலை நிறுத்தம் - முழு அடைப்பு என்பது முழு வெற்றியாகி இருக்கிறது என்பது இப்பொழுதே தெளிவாகப் புரிந்திருக்கிறது. பெயருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக வீம்புக்காக சில பேருந்துகளை அரசு வம்புக்காக ஓட்டினாலும்கூட, கடைகள் அத்துணையும் நம்முடைய அழைப்பை ஏற்று மூடியிருக்கிறார்கள், வணிகர்கள் சங்க வெற்றியைக் காட்டியிருக்கிறார்கள். திரைப்படக் கலைஞர்கள் உள்பட அத்துணை பேரும் ஒத்துழைப்பை நல்கியிருக்கிறார்கள்.
இந்த காலகட்டத்தில், இந்தப் போராட்டத்தி னுடைய ஒரு முத்திரையாக ஒரு முழுமையான வெற்றியினுடைய முனைப்பாக இங்கே சிறப்பாக வந்திருக்கக் கூடிய டில்லியில் இடை விடாது 41 நாள்கள் இடையறாது போராட்டம் நடத்தி-போராட்டம்என்றால்,இதற்குமேல் வடிவங்கள் எடுப்பதற்கு எதுவுமே இல்லை என்று போராட்டத்திற்கே ஒரு முடிவு கட்டக் கூடிய அளவிற்கு,  அத்தனை விதவிதமான போராட்டங்களை செய்துவிட்டு, நம்முடைய போராட்டத் தலைவர், போராட்டமே வாழ்க் கையாக ஆக்கிக் கொண்டிருக்கக்கூடிய அருமை விவசாயிகளுடைய  ஒப்பற்ற தலைவர் அய்யாக்கண்ணு அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்; அவருடைய தோழர்கள் விவசாயப் பெருங்குடி மக்கள் வந்திருக்கிறார்கள். முதற்கண் அவர்களை தமிழகம் வருக! வருக! என்று வரவேற்கிறது, வாழ்த்துகிறது! நீங்கள் உயிரோடு வந்திருக்கிறீர்களே,  உங்களை உயிரோடு விட்டிருக்கிறார்களே - அதற்காக வன்கொடுமையான உணர்வு படைத்த டில்லியாளர்களுக்கும் நாம் நம்முடைய தன்மையை மீறி நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். நீங்கள் அவர்களை கோவணத்தோடு அனுப்பியிருக்கிறீர்கள், பரவாயில்லை!
நிர்வாணமாகப் போராட்டம் நடத்தினாலாவது....
டில்லியில் நிர்வாணமாகக்கூட போராட்டத்தை நடத்தியிருக்கி றார்களே விவசாயிகள், இது நியாயம்தானா? என்று சில ஊடக நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள்.
நான் அவர்களிடம் சொன்னேன்,
கும்பமேளா சாமியார்களை நிர்வாணமாகப் பார்ப்பது போலாவது - வருவோம் என்று வருவார்கள் உள்ளே இருப்பவர்கள். அப்படி போனாலாவது வருவார்களா என்று பார்த்தார்கள் - அதிலும் தோல்வி அடைந்து விட்டார்கள் எங்கள் விவசாயிகள்.
மதவாதத்திற்கு முடிவு கட்டவேண்டிய
நாள் நெருங்கி விட்டது
அந்த அளவிற்கு ஈவு இரக்கமில்லாத ஒரு ஆட்சி டில்லியில் நடந்துகொண்டிருக்கிறது என்றால், இந்த மதவாதத்திற்கு முடிவு கட்டவேண்டிய நாள் நெருங்கி விட்டது என்பதுதான் அதற்கு அடையாளம்.
இந்தப் போராட்டம் ஒரு அரசியல் கண்ணோட்டத்தோடு நடத்தப்படக்கூடிய அரசியல் கூட்டணி போராட்டமல்ல. தமிழ்நாட்டின் பறிபோகக்கூடிய உரிமைகள் - விவசாயிகள் உரிமைகளிலிருந்து - மருத்துவர்களுடைய உரிமைகளிலிருந்து மற்ற மற்ற உரிமைகள் அத்துணையும் காப்பாற்றப்படவேண்டும் என்பதற்காக, வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டை மீண்டும் வாழ வைக்கவேண்டும் என்பதற்காக இந்தப் போராட்டம் இப்பொழுது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தளபதிக்குத் தமிழகம் தலைவணங்கி
நன்றி செலுத்தவேண்டும்
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிர்க்கட்சி  அந்தஸ்தை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். ஆளும் கட்சி தவறுகிறபோது, அந்த கடமையை செய்யவேண்டிய ஜனநாயகப் பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவராகிய எங்களுக்கே உண்டு என்று காட்டிய தளபதிக்குத் தமிழகம் தலைவணங்கி நன்றி செலுத்தவேண்டும்.
இது ஜனநாயக ரீதியான, அரசியல் சட்ட ரீதியான உலகத்திற்கே எடுத்துக்காட்டான ஒரு சிறப்பு.
அரசியல் பார்வையை
நீங்கள் பார்க்காதீர்கள்
எனவே, இங்கே இருக்கிறவர்களுக்குச் சொல்கிறோம் - எல்லா தலைவர்களும் சொல்லவேண்டும் - கொளுத்துகின்ற வெயிலிலே உங்களுக்குச் சொல்லுகின்றோம். இதில் அரசியல் கிடையாது - இதில் அரசியல் பார்வையை நீங்கள் பார்க்காதீர்கள்!
விவசாயிகள் தண்ணீர், தண்ணீர், வறட்சி, வறட்சி என்று துடிக்கிறார்கள். குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லை. ஆனால், கருநாடகத்துக்காரன், கொஞ்சம்கூட ஈவு இரக்கமில்லாமல், குடிக்கக்கூட தண்ணீர் கொடுக்கமாட்டேன் என்று சொல்லி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கச் சொன்ன உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் புறந்தள்ளும் பி.ஜே.பி. ஆட்சி மத்தியில் நடக்கிறது. நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
தண்ணீர், தண்ணீர் என்றால்,
பன்னீர், பன்னீர் என்கிறார்கள்!
இங்கே அவர்கள் பொம்மலாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தண்ணீர், தண்ணீர் என்று டில்லியிடம் நாம் கேட்டால், அதோ பன்னீர், பன்னீர் - அங்கே போங்கள் என்று சொல்லக்கூடிய விவஸ்தைக் கெட்ட ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.
எனவேதான் நண்பர்களே , இது வேடிக்கைக்காக அல்ல, அல்லது தியாக முத்திரை குத்திக் கொள்வதற்காக அல்ல - வம்பு செய்வதற்காக அல்ல - இந்த நாட்டின் மானத்தை, உரிமையை காப்பாற்றுவதற்காக. விவசாயிகள் என்று சொன்னால், இந்த நாட்டினுடைய முதுகெலும்பு!
முதுகெலும்பையே பறிக்கக்கூடிய ஒரு சூழலை இன்றைக்கு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவிற்கே தமிழ்நாடுதான் வழிகாட்டியாக இருக்கக்கூடிய மாநிலம்
இந்தப் போராட்டம் ஏன் தேவை? ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள் என்பதற்குரிய ஒரே ஒரு விளக்கத்தை மட்டும் கூறி என்னுடைய சிற்றுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
விவசாயிகள் தேசிய வங்கிகளில் கடன் பெற்ற தொகை இந்தியா முழுவதும் 72,000 கோடி ரூபாய். அதைத்தான் அவர்கள் தள்ளுபடி செய்யவேண்டும் என்று அய்யாக்கண்ணு அவர்கள் போராட்டம் நடத்தினார். வழக்கமாக இந்தியாவிற்கே தமிழ்நாடுதான் வழிகாட்டியாக இருக்கக்கூடிய மாநிலம்.
இங்கிருந்து குரல் கொடுத்தால், டில்லியினுடைய செவிட்டுக் காதுகள் கேட்காது என்பதற்காக, டில்லிக்கே சென்று போராட்டம் நடத்திக் குரல் கொடுத்தார்கள். இருந்தாலும், அவர்கள் கேட்காமல், காதுகளை மூடிக் கொண்டார்கள்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு
மத்திய அரசு அறிவித்துள்ள சலுகை 5,51,200 கோடி ரூபாய்
அதேநேரத்தில், இந்த ஆட்சி சாமியார்களைக்கூட கார்ப்பரேட் சாமியார்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்ற மோடியினுடைய மதவாத ஆட்சி - காவி ஆட்சி - கடந்த ஆண்டு மட்டுமே - நன்றாக கவனியுங்கள் ஊடக நண்பர்களே - குறித்துக் கொள்ளுங்கள் - கடந்த ஆண்டு மட்டுமே 2016 இல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள சலுகை 5,51,200 கோடி ரூபாய்.
நன்றாக நீங்கள் எண்ணிப் பாருங்கள், 5,51,200 கோடி ரூபாய் பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு, அம்பானிகளுக்கு, அதானிகளுக்கு, புதிய புதிய கார்ப்பரேட் முதலாளிகளாக இருக்கக்கூடிய சாமியார்களுக்கு அளித்துக் கொண்டிருக்கின்ற மோடி அரசு - கோவணம் மட்டுமே கட்டிக்கொண்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த ஏழை எளிய விவசாயிகளுடைய வேதனையைத் தீர்ப்பதற்கு முன்வரவில்லை.
மல்லையாக்களுக்கு ஒரு நீதி - அய்யாக்கண்ணுகளுக்கு இன்னொரு நீதியா?
இவர்கள் கேட்டது, தேசிய வங்கிளில் 6 ஆயிரம் கோடி ரூபாய்  கடன்தானே தள்ளுபடி செய்யவேண்டும் எங்களுக்கு என்று அய்யாக்கண்ணு கேட்டார். 6 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டில் மட்டும்தான் என்று சொன்னால், அதேநேரத்தில், ஒரு மல்லையா 9 ஆயிரம் கோடி ரூபாயை ஏமாற்றி விட்டு, வெளிநாடுகளில் சுற்றிக் கொண்டிருக்கிறார். மல்லையாக்களுக்கு ஒரு நீதி - அய்யாக்கண்ணுகளுக்கு இன்னொரு நீதி என்றால், அதற்குப் பெயர்தான் மனுநீதி என்பதை மறந்துவிடாதீர்கள்.
இந்த அணிகள் பெருகவேண்டும் - தமிழ்நாட்டில் அரசியலில் இருக்கின்ற பிணிகள் ஒழியவேண்டும்
எனவேதான், மனுநீதி ஆட்சி மீண்டும் வரக்கூடாது; புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாடு - மீண்டும் வாழ வைக்கப்பட வேண்டுமானால், இந்த அணிகள் பெருகவேண்டும் - தமிழ்நாட்டில் அரசியலில் இருக்கின்ற பிணிகள் ஒழியவேண்டும்.
எனவே, இது அமைதியான அடையாள ஒரு நாள்  அறப்போராட்டத்தோடு முடிவதல்ல. இதுதான் தொடக்கம். எனவே, இதில் வன்முறையைக் கிளப்பலாம் என்று நினைக்கக் கூடும். சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக்கலாம் என்று கூட நினைப்பார்கள். தமிழ்நாட்டில் ஏதோ சட்டம் - ஒழுங்கு இருப்பதைப் போலவும், இனிமேல்தான் இந்த அணி அதனை சீர்குலைப்பதுபோலவும் சொல்கிறார்கள்.
கொட நாடு எஸ்டேட்டே கொள்ளை போகிறது என்றால், இந்த நாட்டில் எதையும் காப்பாற்ற முடியாதவர்கள் - சட்டம் ஒழுங்கைப்பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? என்ன யோக்கியதை இருக்கிறது? என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
சரித்திரத்தில் திருப்பம் ஏற்படுத்தக்கூடிய தொடக்கம்!
எனவேதான், இது அறப்போர் உரைகள் கோட்டமே தவிர, இது அடங்காதவர்களுடைய பிடாரிகள் கூட்டமல்ல. எனவேதான், கட்டுப்பாடாக இந்தப் போராட்டத்தினை நடத்துவோம் - அடுத்த கட்டத்திற்குச் செல்லுவோம். இது முடிவல்ல - தொடக்கம் - நல்ல தொடக்கம் - புரட்சிகரமான தொடக்கம் - சரித்திரத்தில் திருப்பம் ஏற்படுத்தக்கூடிய தொடக்கம்!
வெற்றி பெறுவோம்! வாகை சூடுவோம்!
விவசாயிகளை வாழ வைப்போம்!
ஆட்சி மாற்றம் நிச்சயமாக வரும்!
வாழ வைப்போம், நிச்சயமாக டில்லி சென்று போராடிய நீங்கள் திரும்பி வரும்போது - இப்பொழுது நீங்கள் இருக்கின்ற உருவத்தோடு இருக்கமாட்டீர்கள். ஆட்சி மாற்றம் நிச்சயமாக வரும் - அந்த ஆட்சி மாற்றத்திலே எப்படி 7 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்கின்ற முதல் உத்தரவை கலைஞர் அன்றைக்குப் போட்டார்களே -அதுபோன்ற ஒரு காட்சியை நீங்கள் விரைவில் காணக்கூடிய வாய்ப்பு ஏற்படும், ஏற்படும்! அதனை ஏற்படுத்துவோம்! அதனை ஏற்படுத்தக்கூடிய அணிதான் இங்கே உருவாகியிருக்கிறது என்பதை கூறி முடிக்கிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
------------------------------------------

‘‘பெரியாரப்பற்றித்தான் பேசினார்கள்!’’ - அய்யாக்கண்ணு


வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைக்காக டில்லியில் 41 நாள்களாகப் பல் வேறு வடிவங்களில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு அவர்கள் சென்னை எழும்பூர் - உடுப்பி ஹோம் அருகில் நடைபெற்ற போராட்ட விளக்கப் பொதுக்கூட்டத்தில் இன்று (25.4.2017) உரையாற்றியபோது முக்கியமாகக் குறிப்பிட்ட தாவது:
முதலாவதாக உங்கள்முன் கோவணத்துடன் நிற்பதற்கு எங்களது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
டில்லியில் நாற்பது நாள்களுக்குமேல் பல வடிவங்களிலும் விவசாயிகளின் உரிமைக்காக - தமிழ்நாட்டின் காவிரி உரிமைக்காக போராட்டம் நடத்தினோம். சாலையிலேயே நாள் முழுவதும் தங்கினோம். உணவு உண்டோம்; உறங்கினோம். எங்களுக்கு ஆதரவுகள் நாளும் பெருகி வந்தன. தளபதி மு.க.ஸ்டாலின் விமானம்மூலம் பறந்து வந்து எங்களோடு ஒருவராய் அமர்ந்து பிரச்சி னையைப்பற்றிப் பேசினார் - ஆறுதலும் கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் எங்களோடு ஒருவராக அமர்ந்து பேசினார். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவிஞர் கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன் போன்றவர்களெல்லாம் எங்களைச் சந்தித்தனர். மாணவர்கள் எங்களுக்கு உணவளித்தனர். தலைவர்கள் எல்லாம் என்ன உதவி தேவை என்று கரிசனத்தோடு கேட்டனர். உங்கள் ஆதரவே போதும் என்றோம்.
உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள் எல்லாம் எங்களைச் சந்தித்த வண்ணம் இருந்தனர். பேசிய அனைவருமே பெரும்பாலும் தந்தை பெரியார் அவர்களைப்பற்றியே பேசினார்கள்.
அன்று பெரியார் 1950 வாக்கில் இட ஒதுக் கீட்டுக்காக டில்லியை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றார். பெரியார் கொடுத்த அந்த உணர்வில் இப்பொழுது நீங்கள் எல்லாம் டில்லியை எதிர்த்துப் போராடி வருகிறீர்கள் - அன்று பெரியார் டில்லியை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றதுபோலவே, நீங்களும் வெற்றி பெறுவீர்கள் என்று வாழ்த்தினார்கள்.
தந்தை பெரியார் அவர்களைப்பற்றி ஒவ் வொருவரும் சொல்லும்பொழுது தமிழ்நாட்டைச் சேர்ந்த எங்களுக்கு மிகவும் பெருமையாகவே இருந்தது.
இப்பொழுதுகூடபோராட்டத்தைநிறுத்தி விடவில்லை. எங்கள் கோரிக்கை நிறைவேற்றப் படவில்லையானால், மீண்டும் டில்லியில் வரும் மே 25 ஆம் தேதிமுதல் போராட்டத்தைத் தொடங் குவோம் என்று அறிவித்து விட்டுத்தான் இங்கே வந்துள்ளோம்.
டில்லி காவல்துறை எங்களைப் பல்வகையிலும் அச்சுறுத்தியது. ஒருவர் தலையைத் துண்டித்து உங்கள் முன்னால் போட்டுவிட்டு, நீங்கள்தான் கொலை செய்தீர்கள் என்று கொலைக் குற்ற வழக்கில் உங்களைக் கைது செய்து சிறையில் தள்ளுவோம் என்கிற அளவுக்குப் போனார்கள். எது வேண்டுமானாலும் செய்யுங்கள் - எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் இங்கிருந்து போக மாட் டோம் என்று உறுதியாகத் தெரிவித்த பிறகுதான் அடங்கினார் கள்.
பி.ஜே.பி. காரர்கள் எங் களைப் பற்றி அவதூறாக எல்லாம் எழு திக் கொண்டு இருக்கிறார் கள்.பிரச்சார மும் செய்து கொண்டுஇருக் கிறார்கள். அதைப்பற்றியெல்லாம் நாங்கள் கவ லைப்படவில்லை. உண்மையும், நீதியும் வெல்லும்!
எங்கள் போராட்டம் வீண் போகவில்லை - இவ்வளவுப் பெரிய ஆதரவைக் காட்டியுள்ளீர்கள் - வரவேற்பைக் கொடுத்துள்ளீர்கள் - நன்றி, நன்றி என்று நா தழுதழுக்கப் பேசினார் டில்லி போராட்டக் குழுத் தலைவர் வழக்குரைஞர் அய்யாக்கண்ணு அவர் கள்.


முழு அடைப்புப் போராட்ட விளக்கக் கூட்டம் 51ஆம் முறையாக தமிழர் தலைவர் கைது
சென்னை, ஏப்.25 தமிழக உரிமைகளை காத்திட, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி, திமுக செயல்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலை மையில் கூடிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்ற தீர்மானத்தின் படி, இன்று (25.4.2017) தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் அனைத்து வணிக நிறுவனங்களும் போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும்  அனைத்துக்கட்சியினரும் ஒட்டுமொத்த மாக கைது செய்யப் பட்டுள்ளார்கள். பல்வேறு பகுதிகளிலும் கைது செய்யப்பட்டவர்களை வாகனங் களைக்கொண்டு அழைத்துச்செல்லாமல் நடத்தியே அழைத்துச்சென்று மண்டபங்களில் காவல்துறையினர் அடைத்துள்ளனர்.
சென்னை எழும்பூர் பகுதியில் திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு தலை மையில்  முழு அடைப்புப் போராட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத் தில் திமுக, திராவிடர் கழகம்,  தமிழ்நாடு காங்கிரசு கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முசுலீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி,  சமூக நீதிப் பேரவை, கிறித்தவ நல்லெண்ண இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
டில்லி போராட்ட விவசாயிகள் பங்கேற்பு
டில்லியில் 41 நாள்களாக கோரிக்கைகளை வலி யுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்திவந்த விவசாயிகள் அனைவரும் இன்று (25.4.2017) முழு அடைப்புப் போராட்டத்தை யொட்டி சென்னைக்கு வருகைதந்தனர்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக காங்கிரசு கட்சி தலைவர் சு.திருநாவுக்கரசர், குமரி அனந்தன், சமூக நீதிப் பேரவை  எஸ்றா சற்குணம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்ட செயலாளர் மு.சம்பத், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர்  இராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் முகமது யூசூப், இந்திய யூனியன் முசுலீம் லீக் பொதுச்செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர், பெருந் தலைவர் மக்கள் கட்சி என்.ஆர்.தனபாலன், விவசாயிகளின் போராட்டக்குழு ஒருங் கிணைப்பாளர் அய்யாக் கண்ணு ஆகியோர் போராட்டத்தின் நோக்கங்களை விளக்கமாக எடுத்துக்கூறினார்கள்.
தமிழர் தலைவர் கைது
அனைத்துக்கட்சித் தலைவர்களின் உரை யைத் தொடர்ந்து அனைத்துக்கட்சிகளின் தலைவர்கள், பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட அனை வரும் எழுச்சிமிக்க முழக்கங்களை எழுப்பினார்கள். கைது செய்யப்பட்டவர்கள் போராட்டப்பகுதி யிலிருந்து  மோதிலால் மண்டபத்துக்கு நடத்தியே அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புரசை ரங்கநாதன், தாயகம் கவி, எழும்பூர் ரவிச் சந்திரன் மற்றும் மாநிலங்களவை மேனாள் உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி, வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன், உள்பட பலரும், காங்கிரசு கட்சியின் மாவட்ட செயலாளர்கள்   ராயபுரம் மனோ, ரங்கபாஷ்யம் உள்பட பலரும், விடு தலை சிறுத்தைகள் கட்சி தலைமை நிர்வாகி செல்வம், அகில இந்திய வங்கிப்பணியாளர்கள் சங் பொதுச்செயலாளர் பார்த்தசாரதி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகத்தினர் பங்கேற்பு
போராட்ட விளக்கக்கூட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கோ.வீ. ராகவன், பிரபாகரன், குமார், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் ஆனந்தன், செயலாளர் நாகராஜ், புழல் க.ச.க.இரணியன், புழல் அறிவு மானன், அர்ஜுன், அருள், மயிலை பாலு,  சூளை மேடு இராமச்சந்திரன்,  அண்ணா.இராமச்சந்திரன், செஞ்சி ந.கதிரவன், காரல்மார்க்ஸ், அம்பேத்கர், இனநலம், தென் சென்னை மகளிரணி வி.வளர்மதி, பி. அஜந்தா, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, சி.சகனபிரியா, பெரியார் பிஞ்சு வி.நிலா, க.கவிதா, கலைமதி, சீர்த்தி, பொன்னேரி செல்வி உள்பட ஏராள மானவர்கள் கலந்துகொண்டார்கள்.
அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
-விடுதலை,25.4.17

வெள்ளுடைவேந்தர் சர். பிட்டி தியாகராயர் பிறந்த நாள்

சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஏப்.27 வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி தியாகராயர் அவர்களின் 166 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (27.4.2017) அவரது சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நீதிக்கட்சியைச் தோற்றுவித்த மும்மணிகளுள் முக்கியமானவரான வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி தியாகராயர் அவர்களின் 166 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (27.4.2017) காலை 11 மணிக்கு சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கழகத் தோழர்கள் புடைசூழ திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக தமிழர் தலைவரை சர். பிட்டி தியாக ராயர் பேரவையின் நிர்வாகி மகாபாண்டியன் அவர்கள் வரவேற்று பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பெரியார் திடல் மேலாளர் ப.சீதா ராமன், வெள்ளையாம்பட்டு சுந்தரம், பெரியார் நூலக வாசகர் வட்ட பொருளாளர் மா.சேரன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மயிலை டி.ஆர்.சேதுராமன், அரும்பாக்கம் சா.தாமோதரன், வடசென்னை மாவட்ட துணைச் செயலாளர் கி.இராம லிங்கம், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய நிர்வாகி பசும்பொன் செந்தில்குமாரி, பொறியாளர் சீர்த்தி,போக்குவரத்துத்தொழிலாளர்கள் நல் லாளம் வடிவேல், பெரியார் மாணாக்கன், அசோக், மகேஷ், கலையரசன், யுவராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுடைய உரிமைக்குரல் இருக்கின்றவரை தியாகராயர் நினைவு வாழும்!

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

சர். பிட்டி தியாகராயர் பிறந்த நாளான இன்று (27.4.2017) அவரது சிலைக்கு மாலை அணிவித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

சர். பிட்டி தியாகராயர் அவர்கள் சென்னை மேயராக இருந்தபொழுதுதான், முதல் முறையாக இந்தியாவிலேயே கார்ப்பரேசன் பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு பகல் உணவு என்ற மதிய உணவுத் திட்டத்தினை 1920 ஆம் ஆண்டுகளிலேயே கொண்டு வந்தார். அதுதான் பிறகு காமராசர் ஆட்சிக் காலத்தில் பகல் உணவுத் திட்டமாக, பிறகு எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆட்சியில் சத்துணவுத் திட்டமாகப் பரிந்துரைக்கப்பட்டது .

பிரதமர் பதவி என்று அந்தக் காலத்தில் அழைக் கப்படுவது முதல்வர் பதவியாகும். பிரிக்கப்படாத சென்னை ராஜதானியினுடைய  அந்த முதலமைச்சர் பதவியை, வெள்ளைக்கார கவர்னர்கள் தனக்கு அளித்தும்கூட, அதனை ஏற்க மறுத்துவிட்டார் - அதற்குப் பதிலாக தன்னுடைய கட்சியில் உள்ள வேறொருவர் முதல்வராக வரட்டும் என்று சொன்னார். பதவி வேட்கை இல்லாத ஒரு மாபெரும் தலைவராக நம்முடைய தியாகராயர் இருந்தார்.

எனவே, திராவிட இயக்கத்தவர்களுக்கெல்லாம் பதவி வேட்கைதான் என்று சொல்லுவதில் ஒன்றும் பொருளில்லை. அந்த வகையில், கடைசிவரையில் வள்ளல் பெருமானாகவே தியாகராயர் திகழ்ந்தார்.

அன்றைக்கு அவர் அடித்தளமிட்ட மேடைதான், இன்றைக்குப்பார்ப்பனரல்லாததிராவிடப்பெருங் குடி மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் படிப் புத் துறையிலும், கல்வித் துறையிலும் ஓங்கி நிற் பதற்கும், உத்தியோகத் துறையில் சமூகநீதியைப் பெற்றுள்ளதற்கும் அடித்தளமாகும்.

எனவே, அப்படிப்பட்ட தியாகராயர் பெருமான் அவர் களுடைய  அந்த நினைவு என்பது இருக்கிறதே - கடைசி ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுடைய உரிமைக்குரல் இருக்கின்றவரை வாழும் - தந்தை பெரியார் போன்றவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறி செய்த பணியை  மிகச் சிறப்பாக செய்தவர் தியாகராயர் அவர்கள்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

-விடுதலை,27.4.17

புதன், 26 ஏப்ரல், 2017

ஆர்.எஸ்.எஸ்.காரர் தருண் விஜய்யைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 




சென்னை, ஏப்.14 தென்னாட்டு மக்களைக் கறுப்பர் என்று அடை யாளம் காட்டும் தருண் விஜய்க்குக் கண்டனம் தெரிவித்து இன்று (14.4.2017) தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் கண் டன ஆர்ப்பாட்டங்கள் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றன.

பி.ஜே.பி.பிரமுகரும்,மேனாள் நாடாளுமன்றஉறுப்பினருமான தருண் விஜய் தென்னாட்டவர் களைக் கறுப்பர்கள் என்று அடையாளம் காட்டும் வகையில் தெரிவித்துள்ள கருத்தினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான இன்று (14.4.2017) மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 11.4.2017 அன்று அறிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலை நகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் மிகுந்த எழுச்சியுடன் தருண் விஜய்க்குக் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் மிகுந்த எழுச்சியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

பி.ஜே.பி. பிரமுகரும், ஆர்.எஸ்.எஸ். இதழான ‘பஞ்சான்யா’வின் மேனாள் ஆசிரியருமான தருண் விஜய் - டில்லியில் ஆப்பிரிக்க மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி விட்டது.

இந்தியர்கள் இனவெறியர்கள் அல்ல; நாங்கள் இன வெறியர்களாக இருந்தால், கறுப்பர்களாக இருக்கும் தென்னிந்தியர்களுடன் எப்படி இணைந்து வாழ முடியும் என்று கூறியுள்ளார்.

இதனைக் கண்டிக்கும் வகையில், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான இன்று இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறோம் என்று கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தமது கண்டன உரையில் தெரிவித்தார்.

முன்னதாக சென்னை மண்டல கழக செயலாளர் வி.பன்னீர்செல்வம் வரவேற்றுப் பேசினார். கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார். வடசென்னை மாவட்டத் தலைவர் சு.குமாரதேவன் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினார். கழக அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன் நன்றி கூறினார்.



ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் கழகத் தோழர் - தோழியர்களுடன் சேர்ந்து தருண் விஜய்யைக் கண்டித்துப் பாடல்களையும், ஒலி முழக்கங்களையும் எழுப்பினார்.

மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி பெரும் பூகம்பத்தை ஏற் படுத்தி விட்டது.

இந்தியர்கள் இனவெறி யர்கள் அல்ல; நாங்கள் இன வெறியர்களாக இருந்தால், கறுப்பர்களாக இருக்கும் தென்னிந்தியர்களுடன் எப் படி இணைந்து வாழ முடியும் என்று கூறியுள்ளார்.

இதனைக் கண்டிக்கும் வகையில், அண்ணல் அம் பேத்கர் அவர்களின் பிறந்த நாளான இன்று இந்த ஆர்ப் பாட்டத்தை நடத்தி இருக் கிறோம் என்று கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் தமது கண் டன உரையில் தெரிவித்தார்.

முன்னதாக சென்னை மண்டல கழக செயலாளர் வி.பன்னீர்செல்வம் வரவேற் றுப் பேசினார். கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார். வடசென்னை மாவட் டத் தலைவர் சு.குமாரதேவன் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற் றினார். கழக அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தின் தொடக் கத்தில் மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார் அவர்கள் கழ கத் தோழர் - தோழியர்களுடன் சேர்ந்து தருண் விஜய்யைக் கண்டித்துப் பாடல்களையும், ஒலி முழக்கங்களையும் எழுப் பினார்.

துணைத்தலைவர் பேட்டி

செய்தியாளர்களிடையே கழகத்துணைத் தலைவர்  கவி ஞர் கலி.பூங்குன்றன் தெரிவித்ததாவது:

டில்லியில் நைஜீரிய மாண வர்கள் தாக்கப்பட்ட நிகழ் வைத் தொடர்ந்து, அது அகில உலக பிரச்சினையாக மாறிவிட்டது. இந்தியாவின் வெளி யுறவு சம்பந்தமான பிரச்சி னையாக வெடித்துக்கிளம்பி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் பிரத மரோ, வெளியுறவுத்துறை அமைச்சரோ கருத்து சொல் லாத நிலையில் பிஜேபியின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஆர்.எஸ்-.எஸ். சின் பஞ்சான்யா ஏட்டின் மேனாள் ஆசிரியர் தருண் விஜய், நாங்கள் நிறபேதம் பேசக்கூடியவர்கள் அல்ல, எடுத்துக்காட்டாக தென்னாட் டில் இருக்கக்கூடியவர்கள் கறுப்பர்களாகத்தான் இருக் கிறார்கள். அவர்களோடு நாங் கள் நேசமாகத்தானே பழகிக் கொண்டிருக்கிறோம் என்ற கருத்தை சொன்னார்.

இந்தக்கருத்து இன்றைக்கு இந்தியா முழுவதும் பெரிய புயலை உண்டாக்கி இருக் கிறது. ஆகவே, கறுப்பர், சிவப்பர் என்கின்ற நிற பேதத்தை இதன்மூலமாக தருண் விஜய் வெளிப்படுத்தி இருக்கிறார்.

நமது நாட்டின் வரலாற் றைப் பொருத்த வரையில், ஆரியர் - திராவிடர் போராட் டம் என்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது என்று சொன்னபொழுது, அதனை ஏற்றுக்கொள்ளாத ஆர்.எஸ்.எஸ்.,- பிஜேபி சக்திகள் இன் றைக்கு அவர்கள் வாயாலேயே கறுப்பு, சிவப்பு என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

இன்றைக்கு இருக்கின்ற பிஜேபி கட்சியின் ஆட்சி யைப் பொறுத்தவரையிலே, அது பார்ப்பனிய, இந்து மத, ராமராஜ்ஜியத்தை உண்டாக் கக்கூடிய ஆட்சியாகும்.

அதனுடைய வெளிப் பாடாகத்தான் தென்னாட்டவர் களை கறுப்பர் என்று சொல் லியிருக்கிறார். அதன் நோக் கம் நிறபேதமே! திராவிட இன உணர்ச்சியை வெளிப் படுத்துகின்ற வகையில், அவ ருடைய சவாலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கி றோம் என்பதை வெளிப்ப டுத்து வதற்காகத்தான் இந்தப் போராட்டத்தை ஆர்ப்பாட் டத்தை தமிழ்நாடுமுழுவதும் நாங்கள் நடத்திக்கொண்டிருக் கிறோம் என்று கழகத் துணைத் தலைவர் ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பங்கேற்றோர்

அண்ணல் அம்பேத்கர் 127ஆம் ஆண்டு பிறந்த நாளை யொட்டி அவரது சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்த நிகழ்விலும், கண்டன ஆர்ப் பாட்டத்திலும் கலந்துகொண் டவர்கள் விவரம் வருமாறு:

இரா.வில்வநாதன், ப.முத்தையன், பா.தென்னரசு, த.ஆனந்தன், தே.ஒளிவண் ணன், செ.ர.பார்த்தசாரதி, கோ.நாத்திகன், த.சிவக் குமார், இரா.இரமேஷ், நா. பார்த்திபன், பொழிசை கண்ணன், சி.வெற்றிசெல்வி, பா.மணியம்மை, தங்கமணி, தனலட்சுமி, ச.இ.இன்பக் கனி, நாகரத்தினம், டி.,கே.நடராசன், கோ.வீரமணி, விழிகள் வேணுகோபால், சேரன், சிதம்பரம் ராமதுரை, தமிழ் சாக்ரடீஸ், வழக்கு ரைஞர் ந.விவேகானந்தன்,

கும்முடிப்பூண்டி மாவட்டம்

சுதாகர், அருள், கார்த்திக், சுபா, இனியவன், செல்வி, நாகராஜ், க.ச.க.இரணியன், உதயகுமார்

வடசென்னை

துரை ராவணன், மோ.விஜயா, ஏ.மணிவண்ணன், ம.யுவராணி, மரகதமணி, கலைச்செல்வன், புகழேந்தி, சிற்றரசு, ந.ராசேந்திரன், தாமோதரன், வெங்கடேசன் (ப.க.), சீர்த்தி, பசும்பொன், ரகுபதி, தியாகராசன், பாஸ் கர், நதியா, பார்த்திபன், ஜீவா, நாகேந்திரன், தமிழ்செல்வன், செந்தமிழ்தாசன், சு.செல்வம், தி.வே.சு.திருவள்ளுவன், யாழினி, கருத்தோவியன்.

தென்சென்னை

சி.செங்குட்டுவன், கோ.வீ.இராகவன், சா.தாமோ தரன், அ.பாபு, க.வெற்றி வீரன், டி.ஆர்.சேதுராமன், வி.வளர்மதி, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, கிருத்திக், வரு ணிக்கா, நிலா, மு.பவானி, ப.தீட்சா, கோ.மஞ்சநாதன், க.தமிழ்ச்செல்வன். ப.தீப்த்தி, த.விக்கி, கு.செல்வேந்திரன், ந.இராமச்சந்திரன், பி.சீனிவா சன், குமார், சேத்பட் பாபு.

ஆவடி

சு.சிவக்குமார், ஏழுமலை, கார்வேந்தன், கண்ணன், ரகு பதி, ராமதுரை, கலையரசன், கார்த்திக். அ.வெ.நடராசன், மோகனபிரியா, ராமலிங்கம், பால முரளி, உடுமலை வடி வேல், தமிழ்செல்வன், பூவை செல்வி, கலைமணி, எழில ரசி, இளவரசு, துரை.முத்து கிருட்டிணன், வேலு, கா.சு. இனியன்

தாம்பரம்

கோ.நாத்திகன், ப.முத்தை யன், ஜெயராமன், மோகன் ராஜ், சோமசுந்தரம், கே.எம்.சிகாமணி, கூடுவாஞ்சேரி இராசு, மா.குணசேகரன், கு. ஆறுமுகம், விஜயகுமார், தே. சுரேஷ், பா.சு.ஓவியசெல்வன், நாகரத்தினம், இராமாபுரம் ஜெனார்த்தனம், சவுரியப்பன், அரங்க.பொய்யாமொழி, மு.முத்துகிருட்டிணன் மற் றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பெரியார் திடல்

போட்டோ சிவக்குமார், செஞ்சி ந.கதிரவன், காரல் மார்ஸ், அம்பேத்கர், ஆனந்த், மகேஸ்வரன், யுவராஜ், கலை மதி, தமிழ்ச்செல்வி, சுதன், வேலவன்

‘பாபா சாகேப்’ அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள்: சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை



புரட்சியாளர் ‘பாபா சாகேப்’ அண்ணல் அம்பேத்கரின் 127 ஆம் பிறந்த நாளான இன்று (14.4.2017) சென்னை நேரு ஸ்டேடியத்திற்கு அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில், தோழர்கள் புடைசூழ மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் கழகத் தோழர்கள் உள்ளனர் (செய்தி உள்ளே காண்க).

14- அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 127 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (14.4.2017) அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஒடுக்கப்பட்ட டமக்களின் உரிமைக் குரலாய் திகழ்ந்த சட்டமேதை பாபா சாகேப் டாக்டர் அண்ணல் அம்பேத் கரின் 127ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (14.4.2017) சென்னை நேரு விளையாட்டு அரங்க நுழைவு வாயிலில் உள்ள அவரது சிலைக்கு கழ கத் தோழர்கள் புடைசூழ சென்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் மலர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார். இந்நிகழ்வில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவி ஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், மாநில மாணவரணி செயலா ளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், மண்டலச் செயலாளர் வி. பன்னீர்செல்வம் உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தோழர் --தோழியர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.

-விடுதலை,14.4.17


தமிழ்நாட்டுக்கு ‘நீட்’ நுழைவுத் தேர்விலிருந்து நிரந்தர விலக்குக் கோரி தமிழ்நாடு கல்வி உரிமைப் பாதுகாப்பு

கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்



சென்னை.ஏப்,20. நீட் தேர்வுக்கு -தமிழ்நாட்டில் நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாகப் பெற்றுத் தருமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள ஆசிரியர் இயக் கங்களில் 30க்கும் மேற்பட்ட சங்கங்கள் மற்றும் அறிவியல் இயக்கங்கள் இணைந்து தமிழ்நாடு கல்வி உரிமைப் பாதுகாப்பு என்ற கூட்டமைப்பை உருவாக்கி மாண வர்கள் மற்றும் கல்வி வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறது. அந்த வகையில் பி.ஜே.பி அரசு கொண்டுவந்துள்ள மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர் வைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (19.04.2017) மாலை 4மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அள வில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டி ருந்ததை ஒட்டி திராவிடர் கழகத் தலைவர் அனைத்து இடங்களிலும் கழகத்தோழர்கள் மற்றும் பொறுப்பாளர் களை இதில் கலந்துகொள்ள ஆணையிட்டிருந்தார். அந்த வகையில் சென்னை யில் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கலந்துகொண்டு பேசினார். அவர் தனது உரையில், நுழைவுத்தேர்வு கூடாது என்று மாறுபட்ட தீர்ப்பளித்த நீதிபதி யான அனில் ரமேஷ் தவே தலைமையிலான அமர்வுக்கே இதற்கான மறு சீராய்வு மனு அளிக்கப்பட்டது. இதுவே பெரிய அளவில் அய்யப்பாட்டை ஏற் படுத்துகிறது என்று கூறிவிட்டு, எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் நுழைவுத் தேர்வு வந்ததிலிருந்து இன்றுவரையிலுமான வரலாற்றையும், பார்ப்பனர் களின் சூழ்ச்சியையும் புள்ளிவிபரங்களு டன் எடுத்துரைத்தார். இது மாநிலங் களின் உரிமையைப் பறிப்பதாகும். ஒரேநாடு இந்துநாடு, ஒரே மொழி சமஸ் கிருதம், ஒரே கலாச்சாரம் பார்ப்பனிய கலாச்சாரம் என்று கொண்டுவருவதற் கான சதிதான் என்றும் ஏன் இதைக் கொண்டுவர நினைக்கிறார்கள் என்பதற் கான பின்னணியைச் சொன்னார். இந்த மண்ணுக்கென்று ஒரு தன்மை உள்ளது. அதை நிறைவேற்ற பெரியாரைத்தான் கையில் எடுக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து இதை முறியடிக்க வேண்டும். அதற்கு திராவிடர் கழகம் எல்லா வகை யிலும் ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறு வனத் தலைவர் அ. மாதவன் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்டத் தலை வர் கா. வசந்தகுமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதைத் தொடர்ந்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் தலைவர் ப. இரத்தினசபாபதி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்டத் தலைவர் ஆர். பெருமாள்சாமி மற்றும் இந்தக்கூட்டமைப்பின் சார்பில் பல் வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் இந்தக்கோரிக்கை நிறைவேற வருகிற மே 5 ஆம் தேதி சென்னையில் இந்தக் கூட்டமைப்பின் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.மாயவன் அறிவித்தார்.

நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் மாணவரணி மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தென்சென்னை மாவட்டத்தின் தலைவர் வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டத்தின் செயலாளர் ஒளி வண்ணன், செந்துறை இராசேந்திரன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடு மலை வடிவேல், பெரியார் திடல் சுரேஷ், அம்பேத்கர், ஆனந்த் மற்றும் கழகத்தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

-விடுதலை,20.4.17

புதன், 12 ஏப்ரல், 2017

ஏற்றம் தந்த ஏலகிரி!

நமது சிறப்பு செய்தியாளர்


ஏலகிரி, ஏப்.9 வேலூர் மாவட்டம் - திருப்பத்தூரை யடுத்த ஏலகிரி கடல் மட்டத்திலிருந்து 1048 மீட்டர் உயரத்தில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாகும். 400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தப் பகுதியில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.   கிட்டதட்ட 4000 பேர் வாழ்ந்து வருகிறார்கள்.
பெரிய அளவு சுற்றுலா மய்யமாக வளரவில்லை யென்றாலும் அதற்கான அடிப்படைக் கூறுகள் நிரம்ப உண்டு. அத்தகு இயற்கை மணம் வீசும் ஏலகிரியில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஏப்.7, 8) செம்மையாக நடைபெற்றது.


இது ஒரு வித்தியாசமான பெரியாரியல் பயிற்சிப் பட்டறை! இயற்கை மணமும், இலட்சிய மயமும் தோகை விரித்தாட பெரியாரியல் பயிற்சி பட்டறை தூள் கிளப்பியது. 105 பயிற்சியாளர்களில் 46 பெண்கள் என்பது இந்தப் பட்டறைக்கான தனித்தன்மையாகும். பட்டதாரிகள் - 37, டிப்ளமோ - 3, பிளஸ் 2 - 23, பத்தாம்வகுப்பு - 13, பிறர் - 29. சென்னை வட்டாரத்திலிருந்து மட்டும் 30க்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும். கோவை விரைவு தொடர் வண்டியில் வந்தவர்களை திருப்பத்தூர் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் அன் போடு வரவேற்றனர். ஏலகிரிக்கு தனிப்பேருந்து ஏற் பாடு செய்யப்பட்டது. ஜோலார்பேட்டை ரயிலடியில், ஏலகிரியில் உள்ள தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பட்டறை தன் பட்டை தீட்டும் பணியினை மேற்கொண்டது.
இவ்வாண்டு கோடை வெப்பம் 1048 மீட்டர் உய ரத்தில் உள்ள ஏலகிரியையும் தாக்கியது; வழமையாக அதிகபட்சமாக 31 டிகிரி பாகை செல்சியசும், குறைந்த பட்சமாக 11 பாகை செல்சியசும் இருக்கும். இவ்வாண்டு இதில் ஒரு சரிவே! என்றாலும் வகுப்புகள் எல்லாம் குளிர்ச்சியாகவே நடைபெற்றன. ஏப்ரல் 1, 2 நெய்வேலியில் தொடங்கிய பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஜூலையில் குற்றாலத்தில் நிறைவுபெறுகிறது. ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்த பட்டறையின் பயணம் தொடர்கிறது.
மதவாதம் தலைக் கொழுத்து தான்தோன்றித்தனமாக துள்ளித் திரியும் இந்தக் காலகட்டத்தில், சரியான மாற்று மூலிகை தந்தை பெரியாரே என்று உணரப்படும் காலக்கட்டம் இது.
பிஜேபி - சங்பரிவார் கும்பலை முன்னிறுத்தி வெறும் பொருளாதார கொள்கை தார்கொண்டு அடக்கிட முடியாது. அதன் உயிர் நாடி அதன் இந்துத்துவா கொள்கையில் இருக்கிறது. பார்ப்பனீய சூளுக்குள் பத்திரமாகப் பதுங்கி இருக்கிறது.
ஈரோட்டு நுண்ணாடி எனும் ரேடியம்தான் அதன் அங்க மச்ச அடையாளங்களையும், அதன் சூட்சம முடிச்சுக்களையும் சிதைக்கும் பேராற்றல் கொண்டது.


இன்றைக்குக் கூட அந்தக் குழவிக்கல்லின் பக்கத்தில் பார்ப்பனரைத் தவிர வேறு யாரும் அண்டக்கூடாது என்பதில் சர்வ விழிப்போடு இருப்பதற்கு அதுதான் காரணம்.
ஒரு சிறிய குட்டிக் கடவுள் இருக்கும் வரை நாம் சூத்திரர்கள் தானே! (‘விடுதலை’ - 3.2.1956) நாம் ஒரு சிறியதாக ஆறறிவு பெற்றுப் பகுத்தறிவு வாதிகள் ஆகிவிட்டோமானால் கொல்லுவாரின்றியே பார்ப்பான் செத்தான் (விடுதலை - 4.3.1970) என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.
உச்சநீதிமன்றம் வரை உச்சிக்குடுமியின் செல்வாக்கு கரங்கள் நீள்கிறது என்றால் அதன் கள பரிமாணத்தைத் தெரிந்து கொள்ளலாமே!
அதிகாரம் ஆரியத்தின் நுனி நகத்தில் நடனமாட ஆரம்பித்து விட்டது. வடபுலப் பார்ப்பனரல்லாத மக்கள் அதனை உணரத் தலைப்பட்டு விட்டனர்.


மதச்சார்பின்மை சக்திகள் ஓரணியில் ஒன்று சேர வேண்டும் என்று லாலு பிரசாத் குரல் கொடுத்திருக்கின்றார். பீகாரில் ஏற்படுத்தப்பட்டது போன்று கட்டாய கூட்டணி அவசியத் தேவை என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் கருத்து தெரிவித்துள்ளார்.
பொதுவாகப் பிரதமர்களை உருவாக்கும் உ.பி.யில் பச்சையான ஒரு சாமியார் முதலமைச்சர் பீடத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார்.
அந்தப் பத்துத்தலை இந்துத்துவா பாம்பு படமெடுத்து ஆட ஆரம்பித்து விட்டது. செத்துப் புதைக்கப்பட்ட முசுலிம் பெண்களைத் தோண்டியெடுத்து - இந்துக்களே புணருங்கள் என்று கூறும் ஒரு புழுத்துப் போனவரை முதல் அமைச்சராக்கி  அழகு பார்க்கிறது ஆரியம்.
ஆரியம் நேரடியாக அதிகார ஆசனத்தில் அமர்ந்தால் பளிச்சென்று மக்கள் மத்தியில் புரிந்து விடும்; அதனால் பார்ப்பனீயத்திற்கே உரித்தான முகமூடி வேலை அரங்கேறியிருக்கிறது. பிரதமர் மோடியும் அப்படிதானே! ஒரு பிற்படுத்தப்பட்டவரை பிரதமராக்கியிருக்கிறோம்  பாரீர்! என்று பசப்பு வார்த்தைகளைக் கொட்டுகிறார்களே!
மிகச் சரியாகவே தந்தை பெரியார் சொன்னார். நிஜப் புலியை விட வேடம் போட்ட புலி அதிகமாகக் குதிக்கும் என்று. அப்படிதான் நரேந்திர தாமோதரதாஸ் மோடி குதிக்கிறார். உ.பி. ஆதித்தியநாத்தும் அட்டகாசம் செய்கிறார்.


ராமன் கோயிலைக் கட்டுவோம் என்கிறார்கள், கீதையை தேசிய நூலாக அறிவிப்போம் என்கிறார்கள், இடஒதுக்கீட்டை ஒழிப்போம் என்கிறார்கள். இது வெல்லாம் இன்னும் கூட அதிகமாக ஆர்ப்பரிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் பாஜக பழைய பார்ப்பனீய மனுதர்ம கொடியை ஏற்றும் வேலையில் இறங்கிவிட்டது என்று இந்தியாவினுடைய கடைகோடி மனிதனுக்கும் தெரியும்போதுதான், புரியும்போதுதான் தமிழ்நாட்டை நோக்குவார்கள் - பகுத்தறிவுப் பகலவன் தத்துவத்தை நோக்கி தங்களின் கவனத்தைச் செலுத்துவார்கள்.
இப்பொழுது காசி பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது. உஸ்மானிய பல்கலைக்கழகத்தில் நரகாசூரன் விழா நடத்தப்பட்டது. சென்னை கிண்டியில் அய்அய்டியில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்திற்கு மத்திய பார்ப்பன பாரதிய ஜனதா ஆட்சி தடை விதித்ததன் விளைவு என்ன தெரியுமா?
டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், மும்பைப் பல்கலைக்  கழகங்களிலெல்லாம் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் தொடரும்; மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் புதிய பூபாளம் வெடிக்கும், புரட்சியின் அர்த்தம் என்ன என்பதையும் விளக்கும்.
தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் அதற்கான தளத்தை, தடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பெரியாரியல் பயிற்சிப் பட்டறை என்பது தொலைநோக்கினை உள்ளடக்கமாகக் கொண்டது. அவர்கள் வன்முறை ஆயுதங்களைத் தூக்குகிறார்கள். நாமோ அறிவாயுதத்தை ஏந்துபவர்கள்  உடல் வலிமை மிக்க காட்டு மிருகங்களை சர்க்கசில் ஒரு ரிங் மாஸ்டர் ஒடுக்குவதில்லையா - பணிய வைப்பதில்¬லா?
பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பல தலைப்புகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பெரியாரில் பெரியார், சுயமரியாதை இயக்கம், நீதிக்ட்சி, திராவிடர்கழகம், இந்துத்துவா பேராபாயம், மூடநம்பிக்கை, பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பு, கடவுள் மறுப்புத் தத்துவம், ஜாதி ஒழிப்பு என்னும் தலைப்புகளில் அனுபவம் பெற்றவர்கள் வகுப்புகளை நடத்துகிறார்கள். மாணவர்களின் அய்யப்பாடுகள் அந்தந்த வகுப்புகளிலேயே நீக்கப்படுகின்றன. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர்கள் டாக்டர் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ், டாக்டர் பிறைநுதல்செல்வி ஆகியோர் வகுப்புகளை எடுத்தவர்கள் ஆவார்கள். இருபால் மாணவர்களும், இந்த பட்டறையில் காட்டிய ஆர்வமும், அக்கறையும், மெட்சத்தகுந்ததாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும் இருந்தன.


இப்பயிற்சிப் பட்டறைகளில் பயிற்சி பெற்றவர்களில் பொறுக்கு மணியாகத் தேர்வு செய்யப்பட்டவர்களை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தும் வகையில் மேல்நிலைப்பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்று ஒரு புதிய கருத்தை இந்தப் பட்டறையில் கழகத்தலைவர் தெரிவித்தது அற்புதமானது - பரிணாம வளர்ச்சியை உள்ளடக்கமாகக் கொண்டது.
தமிழ்நாட்டிலேயே இத்தகு பட்டறைகளை முறையாக நடத்தக்கூடிய ஒரே சமூக புரட்சி இயக்கம் திராவிடர் கழகமே! தோய்வின்றித் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
இந்த முகாமில் மகளிர் 46 பேர்கள் கலந்து கொண்டனர் என்றால் அவர்களுக்கென சிறப்பாகத் தனிப்பயிற்சி தரப்பட்டுள்ளது.
பெண்களுக்கொன்று இருக்கக்கூடிய பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள், உடல் பிரச்சினைகள் என்று மனம் விட்டு ஒவ்வொருவரும் பேசினர், கருத்துகளையும் தெரிவித்தனர். இது அவர்களுக்கு ஒரு தனி அனுபவம் என்பதில் அய்யமில்லை. இதுவரை ஒலிப்பெருக்கி முன்னாலே வந்துபேசுவதற்குப் தயங்கியவர்களெல்லாம் டாண் டாண் என்று போட்டுடைத்தனர்.
பெண்கள் தங்களுக்குள்ள உடல் நல பாதிப்பை தங்கள் துணைவரிடம் கூட சொல்லக் கூசுகின்றனர் அல்லது அச்சப்படுகின்றனர்.  மார்பகப் புற்றுநோயின் தொடக்கம், வீக்கம் என்பது பெண்களுக்கு தொடக்கத்தில் தெரியக் கூடியவைதான். அதனை வெளியில் சொல்லத் தயங்கி தயங்கி கடைசியில் முற்றி உயிருக்கு உலை வைக்கும் பரிதாப நிலை பற்றியெல்லாம் பெண்களுக்குள் பேசப்பட்டது.
மாதவிடாய் - அக்கால கட்டத்தில் பெண்களின் மனநிலை பற்றி உளவியல் மருத்துவர்கள், பட்டறையில் பங்கேற்றதால் அதுகுறித்த புரிதல் முக்கியமாக இடம்பெற்றது. நோயில் கூட பெண் சீக்கு என்று சொல்வதெல்லாம் எத்தகைய அயோக்கியத்தனம்! ஆண்களும் அதற்கு காரணம் அல்லவா?
பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கான பெரியாரியல் உயர் எண்ணங்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்டன; விவாதிக்கப்பட்டன. பெண்கள் காதலித்தால் பெருங்குற்றம் போல் ‘பூதாகரப்படுத்தும்‘ புன்மை எண்ணங்கள், பொடிப்பொடியாகப் அடித்து நொறுக்கப்பட்டன.
எவ்வளவு அதிகம் படிக்க முடியுமோ, வயது தடையின்றி படித்து அதற்கு பின் திருமணம் என்பதுதான் பெண்ணுரிமை திசையில் சரியான மைல் கற்களாகும்.
ஆண் அதிகம் படித்திருக்க வேண்டும்; பெண் ஆணை விட குறைவாகப் படித்திருக்க வேண்டும், ஆணை விட பெண்ணின் வயது குறைவாக இருக்க வேண்டும், உயரமும் குறைவாக இருக்க வேண்டும் என்ற பத்தாம் பசலித்தனங்களும் நார்நாராக உரிக்கப்பட்டன.
பாரதி காணவிரும்பியது புதுமைப் பெண்ணென்றால், பெரியார் படைக்க விரும்பியது புரட்சிப் பெண்ணே  - என்றெல்லாம் விரிவாகவே விவாதிக்கப்பட்டன. ஏலகிரி மலையில் மகளிர் கால் பதித்தபோது இருந்த மனநிலைக்கும், பட்டறைப் பயிற்சி முடிந்து மலையை விட்டு கீழே இறங்கியபோது அவர்களிடம் இருந்த மனோ நிலைக்கும் உள்ள வேறுபாடு - மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள தூரத்திற்கு ஒப்பானதாகும்.
பாசறையில் பட்டைத் தீட்டப்பட்டு உருவாக்கும் போது அதன் வீச்சம் சமூகத்தின் சகல பரப்புக்கும் சென்றடைய செய்ய வேண்டும்; இனி ஒவ்வொரு பெரியாரியல் பயிற்சி பட்டறையிலும் மகளிருக்கான இந்தத் தனிப்பயிற்சி தொடரும். அந்த வகையில் ஏலகிரி புதிய திருப்பத்திற்கான வழிகாட்டியாகும்.
விரைவில் மாநில அளவிலான மகளிர் கலந்துரையாடல் கூட்டம் கழகத் தலைவர் தலைமையில் தமிழ்நாட்டின் நடுநாயக இடமான திருச்சியில் கூடவிருக்கிறது.
புரட்சிகரமான திட்டங்கள் தீட்டப்பட்டு கழகத்தின் அணிகளில் மகளிர் பாசறை புது உத்வேகத்தோடு களத்தில் இறங்கும். மாணவியர் சந்திப்பும் நடைபெறும். அவர்கள் மத்தியில் தந்தை பெரியார் அவர்களின் புரட்சிகர மகரந்தங்கள் தூவப்படும்.
ஏலகிரியில் இருபால் பயிற்சி மாணவர் களுக்கு மத்தியில் ஒரு புதுமையான அம்சம் அரங்கேற்றப்பட்டது. இன்றைய சமூகப் பிரச்சினைகளும், தீர்வுகளும் எனும் தலைப்பில் பயிற்சிக்கு வந்த தோழர்கள் (இருபாலரையும் இனிமேல் இப்படிதான் அழைக்க வேண்டும் என்பது கழகத்தலைவரின் கட்டளை) தத்தம் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
இந்தப் புது முயற்சி எந்த அளவு வெற்றிகரமாக அமையும் என்ற தயக்கம், பயிற்சி நடத்திய ஆசிரியர்களுக்கே கூட இருந்ததுண்டு.
முதல்நாள் இரவு (7.4.2017) நடைபெற்ற இந்த அரங்கத்தில் தோழர்கள்   எடுத்து வைத்த கருத்து மயிர் கூச்செரியச் செய்தது. இன்றைய இளைஞர்கள் எந்த அளவு சிந்தனை வளம் உடையவர்களாக - முற்போக்கு கருத்தாளர்களாக - சமூகத்தின் நடப்புகளை ஊடுருவக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது.
குறிப்பாக ஜாதிப்பிரச்சினை, கவுரவக் கொலை என்னும் அகவுரவக் கொலை, காதல் உணர்வு, ஜாதி ஒழிப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் பிள்ளைகளுக்கு தனி ஒதுக்கீடு, (மிழிஜிணிஸி-சிகிஷிஜிணி
னிஹிளிஜிகி) முதல் தலைமுறையாகப் படிக்க வருபவர்களுக்கான தடைகள் மார்க் எனும் அளவுகோல், நுழைவுத்தேர்வு, அளவுக்குமீறிய நுகர்வுக் கலாச்சாரம், விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி அஞ்ஞானத்தை வளர்க்கும் அயோக்கியத்தனம். ஊடகங்கள் யார் கைகளில்?, கருத்துகளை உருவாக்கும் இடத்தில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள், தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீட்டின் அவசியம், ஜாதி அரசியலில் மதவாதப் போக்குகள், பாடத்திட்டங்களில் தேவையான மாற்றங்கள், ‘நீட்’ தடைக்கல், புதிய கல்வி எனும் குலக்கல்வி, கல்வியில் காவிமயம் என்று சமுதாயத்தில் புரையோடும்  பல்வேறு பிரச்சினைகள் குறித்து கூர்த்த மதியோடு தோழர்கள் அலசி எடுத்துத் தோலையுரித்து தொங்கப் போட்டது - ஆச்சரியமாகவும், புருவங்களை உயர்த்துவதாகவும் அமைந்திருந்தன.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஏலகிரி கழக வரலாற்றில் நடந்தவைகளில் கூட ஒரு புதிய வெளிச்சத்தை வாரி இறைப்பதாக அமைந்திருந்தது என்றே சொல்ல வேண்டும்.
... நேரம் தவறாமை, பயிற்சியில் உரத்த சிந்தனை உரையாடல், சிறப்பான உணவு, தங்கும் வசதி என எல்லா வகைகளிலும் திருப்திதான் - திருப்திதான்!. ஏலகிரி ஏற்றமாக இருந்தது - ஏலகிரி உயரத்தில் இருப்பதுபோல இந்தப் பட்டறையும் உயரத்தில் வைத்து பாராட்டப்படத்தக்கதே!
ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் பாராட்டு! பாராட்டுகள்!!
தமது ஆப்பிரிக்கப் பயணத்தையும் ஒத்தி வைத்து இந்தப் பட்டறைக்காக பல வகைகளிலும் சுழன்று பணியாற்றி வெற்றிகரமாக பயிற்சிப் பட்டறையை  கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.சி.எழிலரசன், கழகப் பொறுப்பாளர்கள் ஒத்துழைப்போடு நடத்திய பாங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
அடுத்தடுத்த பட்டறைகள் மேலும் புதிய மைல் கற்களை எட்டட்டும்
ஏலகிரியின் ஏற்றத்திற்கு காரணமானவர்கள்!
தலைமை செயற்குழு .உறுப்பினர் கே.சி. எழிலரசன், திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் அகிலா எழிலரசன், மாவட்ட செயலாளர் இளங்கோவன்  மாநில பகுத் தறிவாளர் கழகத் துணைத் தலைவர், அண்ணா.சரவணன், மண்டலத் தலைவர்  பழ.வெங்கடாசலம், மாவட்ட துணை செயலாளர்  எம்.கே.எஸ்.இளங்கோவன், மாவட்ட மகளிரணி கவிதா இளங்கோவன், மண்டல மாணவரணி செயலாளர் சி.இ.சிற்றரசன்,  பகுத்தறி வாளர் கழக தலைவர், தமிழ் செல்வன், ப.க. அமைப்பாளர் சித.வீரமணி, பழனிசாமி மாவட்ட இளை ஞரணி, மகளிரணி இந்திரா காந்தி மற்றும் தோழர் களின் அயராப் பணியும், ஒத்துழைப்பும் ஏலகிரியை ஏற்றம் பெறச் செய்தது.
ஏலகிரியின் மணம்
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஏலகிரி தோன்பாஸ்கோ பயிற்சி மய்யத்தில் ஏப்ரல் 7, 8 - வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களில் நடைபெற்றது. இந்த வளாகத்துக்குப் பொறுப்பு அதிகாரி அருள் தந்தை அலெக்ஸ் தாமஸ் அவர்களது அன்பும், அரவணைப்பும், ஒத்துழைப்பும் அளப்பரியதாகும். கழகத் தலைவர் அவரைப் பாராட்டி சால்வை அணிவித்துச் சிறப்பித்தார். எப்பொழுது வேண்டுமானாலும் இந்த மய்யம் உங்களுக்காகத் திறந்திருக்கிறது என்று அருள் தந்தை சொன்னதை அனைவரும் வரவேற்கும் வகையில் கர ஒலி எழுப்பினர்.
திருப்பத்தூர் தூய நெஞ்சர் கல்லூரியின் (இந்தியாவின் சிறந்த 100 கல்லூரிகளில் 95ஆம் இடம் இக்கல்லூரிக்குக் கிடைத்தது  குறிப்பிடத்தக்கதாகும்) முதல்வர் மரிய  ஆண்டனி ராஜ் அவர்களும், அக்கல்லூரியின் பொருளாளர் ஜான் போரிக் அவர்களும், பயிற்சிப் பட்டறைக்கு வருகை தந்து தமிழர் தலைவரைச் சந்தித்து சால்வை அணிவித்து மகிழ்ந்தனர்.
-விடுதலை,9.4.17

செவ்வாய், 11 ஏப்ரல், 2017

ஏலகிரி பெரியாரியல் பயிற்சி முகாமில் தமிழர் தலைவர்



பயிற்சி முகாமிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு வாணியம்பாடியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.சி.எழிலரசன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உடன் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் அகிலா எழிலரசன், மாவட்டச் செயலாளர் இளங்கோ, தொழிலதிபர் கணேஷ்மல், ஏலகிரி செல்வம், சங்கர் மற்றும் கழகத் தோழர்கள் உள்ளனர்.



.-விடுதலை,8.4.17

ஏலகிரியில் பெரியாரியல் பயிற்சி முகாம் தொடங்கியது


ஏலகிரி, ஏப்.7  திருப்பத்தூர், தர்மபுரி, கிருட்டி ணகிரி, மாவட்டங்கள் உள்ளடங்கிய தர்மபுரி மண்டலப் பெரியாரியல் பயிற்சி முகாம் ஏலகிரியில் நடை பெறுவது முன்னிட்டு இன்று (7.4.2017) காலை ஜோலார்ப்பேட்டையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங் கோவன் தலைமையில் மாலை அணி விக்கப்பட்டது. பின்அனைத்து தோழர்களும் ஏலகிரி சென்றடைந்தனர்.
ஏலகிரி பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.சி. எழிலரசன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு, பயிற்சி முகாமுக்கான நுழைவு சீட்டு பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டு, காலை 11 மணிக்கு டான்பாஸ்கோ கேம் சைட் என்ற இடத்தில் பயிற்சி முகாம் தொடங்கியது. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் வரவேற்புரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் கே.சி.எழிலரசன் தலைமையேற்றார்.


“பெரியார் ஓர் அறிமுகம்“
கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் முதல் வகுப்பைத் தொடங்கினார். இந்நிகழ்ச்சி யில் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், அமைப்பு செயலாளர் ஊமை செயராமன், ப.க.செயல் தலைவர் தகடூர் தமிழ்செல்வி, மாநில கழக மகளிரணிச் செயலாளர் கலைச்செல்வி, திராவிடர் மகளிர் பாசறை மாநில செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, மாநில ப.க. துணைத்தலைவர் அண்ணா. சரவணன், மண்டல தலைவர் பழ.வெங்கடாசலம், செயலாளர் கரு. பாலன், மாவட்ட செயலாளர் இளங்கோ, கிருட்டி ணகிரி மாவட்ட இணைச் செயலாளர் சு.வன வேந்தன், திருப்பத்தூர் மாவட்ட துணை செயலாளர் எம்.கே.இளங்கோவன், பொறியாளர் இன்பக்கனி, தர்மபுரி மாவட்ட துணைத் தலைவர் மாதன், ஊற்றங்கரை சித.வீரமணி, ப.க. தலைவர் தமிழ் செல்வன், துணைச் செயலாளர் தங்க அசோகன், மண்டல மாணவர் அணி செயலாளர் சிற்றரசு, யோகா மாஸ்டர் மல்லிகா ராஜமாணிக்கம், வெற்றி செல்வி பூங்குன்றன், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தர்மபுரி மாவட்ட அவைத் தலைவர் கிருட்டிணமூர்த்தி உள்ளிட்ட கழகத் தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
பயிற்சி பட்டறையில் 55 மகளிர், 61 ஆண்கள் என இருபாலர் 116 நபர்கள் கலந்து கொண்டனர்.


-விடுதலை,7.4.17