மாநில கலந்துரையாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாநில கலந்துரையாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 9 மார்ச், 2024

திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் - தஞ்சாவூர்

 Published January 22, 2023, விடுதலை நாளேடு

திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன்  மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து  வரவேற்றனர்.      மாநில மாணவர் கழக  அமைப்பாளர் செந்தூர்பாண்டி குடையை நினைவுப் பரிசாக கழகத் தலைவருக்கு வழங்கினார். (தஞ்சாவூர், 21.1.2023)

திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டோர் (தஞ்சாவூர், 21.1.2023)

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

 


விடுதலை நாளேடு

பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளில் பயிற்சி பெற்றோரை ஒருங்கிணைப்போம்!
 கழகக் களப் பணிகளுக்கு அவர்களை ஆயத்தப்படுத்துவோம்!
 2024 ஆகஸ்டு திராவிடர் கழக எண்பதாம் ஆண்டு – 2025 சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாக்களைக் கொள்கை ரீதியாகக் கொண்டாடுவோம்!
சமூகநீதி – மதச்சார்பின்மை – ஜனநாயகம் – மாநில உரிமைகளுக்கு எதிரான
பாசிச மதவெறி பா.ஜ.க.வை வரும் தேர்தலில் வீழ்த்துவோம்!
திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

சென்னை,பிப்.24 திராவிடர் கழக இளைஞரணி செயல் பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் செயல் திட்டங் களும், மக்களாட்சிக்கு மாறான மதவெறி பா.ஜ.க. ஆட்சியை வரும் தேர்தலில் வீழ்த்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் திராவிடர் கழக இளைஞரணி மாநிலக் கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்டன.
24-02-2024 அன்று முற்பகல் சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடை பெற்ற திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வரு மாறு:

முன்மொழிதல்: மு.சண்முகப்பிரியன்,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 1:
இரங்கல் தீர்மானம்

புதுக்கோட்டை மாவட்ட கழகக் காப்பாளர் பெ.இராவ ணன் வயது 90 (மறைவு 11-2-2024), கோவை மாவட்ட மேனாள் செயலாளர் பொள்ளாச்சி கழக செயல் வீரர் பாரதி வயது 67 (மறைவு 04-2-2024), விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு பெரியார் பெருந்தொண்டர் கு.தாமோதரன் (மறைவு 06-2-2024) திராவிட இயக்க உணர்வாளர் கயல் தினகரன் வயது 88 (மறைவு 14-2-2024), ஆந்திர மாநிலம் – பாரத நாத்திக சமாஜ நிறுவனர் டாக்டர் ஜெயகோபால் வயது 80 (மறைவு 07-2-2024), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கல்லக்குறிச்சி பெரியார் நேசன் வயது 94 (மறைவு 22-2-2024), தமிழ்நாடு அரசின் செய்தி விளம்பரத் துறை, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களது தந்தையார்முத்தூர் சா.பெருமாள்சாமி வயது 94 (22-2-2024) ஆகிய பெருமக்களின் மறைவிற்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இவர்களின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக் கும் இக்கூட்டம் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
முன்மொழிதல்: இரா.வெற்றிக்குமார்,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 2:
பா.ஜ.க.அரசின் மக்கள் விரோதப் போக்கை
முறியடிக்க வேண்டும்

நாடு எதிர்கொண்டிருக்கும் இக்கட்டான சூழலில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவின் வாழ்வா சாவா பிரச்சினையாகும். இந்தியாவின் சமூகநீதி, மதச் சார்பின்மை, ஜனநாயகம், மாநில உரிமை, பன்மைத்துவம் ஆகியவற்றுக்குப் பெரும் ஆபத்தாகக் கடந்த பத்தாண்டு களாக பாஜக – ஆர்.எஸ்.எஸ். மதவாத ஆட்சி நடை பெற்று வருகிறது. இந்திய இறையாண்மைக்குரியோரான மக்களின் அடிப்படை உரிமைகள் பல வகையிலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இந் நிலையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் வளர்ச்சியை யும், ஒருங்கிணைந்த தன்மையையும் முன்னிறுத்திக் களம் காண்பது காங்கிரஸ் – திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணி தான் என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதல்படி, அக் கூட்டணி வெல்லுவதற்கும், இந்தியா காக்கப்படவும் பரப்புரையில் ஈடுபடுவது என இக் கூட்டம் உறுதி ஏற்கிறது.
தமிழ்நாடெங்கும் பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, தெருமுனைப் பிரச்சாரத்திலும், துண்டறிக்கை விநியோகித்தல் உள்ளிட்ட பிரச்சார முறைகளிலும் தீவிரமாக ஈடுபடுமாறு கழக இளைஞ ரணித் தோழர்களையும், பொறுப்பாளர்களையும் இக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
முன்மொழிதல்: எ.சிற்றரசு,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 3(அ):
பெரியாரியல் பயிற்சிப் பட்டறையும் – ஒருங்கிணைப்பும்

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவரும் பெரியாரி யல் பயிற்சிப் பட்டறைகளில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். அவர்களைத் தொடர்ந்து தொடர்பு கொண்டு, முறையாக நெறிப்படுத்தி, திராவிடர் கழகத்தின் இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் ஆகியவற்றில் களப்பணிக்கு உட்படுத்தி, தமிழர் தலைவர் தலைமையில் பெரியார் பணி முடிக்க இக் கூட்டம் உறுதியேற்கிறது.
முன்மொழிதல்: தா.தம்பிபிரபாகரன்,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 3(ஆ):
கலை தொடர்பான பயிற்சிப் பட்டறை

வழக்கமாக நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஒருபக்கம் நடைபெற்றாலும், இசை, நடனம், ஓவியம் உள்ளிட்ட நடிப்புத் துறைகளில் ஆர்வமுள்ள இருபால் இளைஞர்களுக்காக வென்றே தனிப் பயிற்சிப் பட்டறைகளைத் தக்கவர்களைச் கொண்டு நடத்துவது என்றும், பயிற்சிப் பட்டறை மாநில ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட அளவில் கழகத் தோழர்களிடமிருந்து தகவல் பெற்று, தக்கவர்களைத் தேர்ந்தெடுத்து இத்தகைய பயிற்சிகளை சிறப்பாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
முன்மொழிதல்: ம.செல்லதுரை,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 4:
திராவிடர் கழகத்தின் 80ஆம் ஆண்டு – மாநாடு

திராவிடர் கழகத்தின் 80 ஆம் ஆண்டு நிறைவு விழாவை இவ் வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் திராவிடர் கழக இளைஞரணியின் சார்பில் மாபெரும் எழுச்சி மாநாடாக நடத்திட ஆணையிடுமாறு திராவிடர் கழகத் தலைவரை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
முன்மொழிதல்: கோ.வேலு,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 5:
‘திராவிட மாடல்’ அரசுக்குப் பாராட்டு

‘‘வேலை கேட்டு, விண்ணப்பம் போட்டு அலுத்துப் போக மாட்டேன்; வேலை கொடுக்கும் நிலைக்கு என்னை உருவாக்கிக் கொள்வேன்” என்று தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வழங்கிய உறுதிமொழியை இன்றைய இளைஞர்களுக்கு மீண்டும் இக்கூட்டம் நினைவூட்டுகிறது.
சமூகநீதியையும், சீரான வளர்ச்சியையும் உருவாக்கும் வகையில், நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் தொடர்ந்து நல்ல திட்டங்களை மாணவர்களுக்கும், இருபால் இளைஞர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் செயல்படுத்திவரும் ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக் கூட்டம் தனது பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாடு அரசின் திட்டங்களை முறையாகப் பயன்படுத்தி, தொழில் முனைவோராகவும், உயர்கல்வி, ஆராய்ச்சிப் படிப்புகளில் சிறந்தோராகவும் தமிழர்கள் உருவாக அத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும், பிறருக்கு வழிகாட்டவும் நமது இளைஞரணித் தோழர்கள் முன் கை நீட்ட வேண்டும் என்று இக் கூட்டம் தீர்மானிக்கிறது.
முன்மொழிதல்: மு.அருண்குமார்,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 6:
சமூகநீதிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

கடந்த பத்தாண்டுகளில் பல வகையிலும் சமூகநீதிக்கு ஆபத்துகளை உருவாக்கியுள்ளதோடு, பல கண்ணி வெடிகளையும் பாஜக அரசு புதைத்து வைத்துள்ளது. பாசிச பாஜக ஆட்சி ஒழிந்து, புதிய அரசு பதவியேற்றாலும், இந்த ஆபத்துகளிலிருந்து சமூகநீதியைக் காத்து, அதற்கு சட்டப் பாதுகாப்புகளை வழங்கி, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமையை உறுதி செய்ய வேண்டியது பெரும் சவாலான பணியாகும். இந்தச் சவாலை எதிர்கொள்ள, சமூகநீதி குறித்த புரிதலை இளைஞர்களிடமும், பல்வேறு அமைப்புகளிடமும் உருவாக்குதல் அவசியமாகும். மக்களைத் தயார்படுத்தினால்தான், அதன் பின் அரசுகள் செயலாற்ற ஏதுவாக இருக்கும். அரசியல் சூழல் எப்படியாயினும், சமூகநீதிக்கு ஆபத்து வருவதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. அதற்குத் தேவையான பரப்புரைகள், விழிப்பூட்டும் வகுப்புகள், ஒருங்கிணைப்புகள், போராட்டங்களை நடத்திட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டலை ஏற்றுச் செயல்படுவது என இக் கூட்டம் முடிவு செய்கிறது.
முன்மொழிதல்: நா.கமல்குமார்,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 7:
ஜாதி-மதவாதத்தை எதிர்த்துக்
கிராமப் பிரச்சாரம்!

ஜாதி, மதவாதத்தைப் பரப்பி, தமிழ்நாட்டின் சமூகநீதிச் சூழலைச் சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், அதன் தூண்டுதலில் பல ஜாதிய, மதவாத அமைப்புகளும் செயல்பட்டுவருவதை இக் கூட்டம் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனிக்கிறது. சமூக ஊடகங்கள் வாயிலாகவும், பொது ஊடகங்கள் வாயிலாகவும் பொய்ச் செய்தி பரப்புதல், செய்திகளைத் திரித்து வெளியிடுதல் என நயவஞ்சக நோக்கில் மேற்கண்ட அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டு இளைஞர்களிடம் இந்த நச்சுச் செடிகள் பரவிடா வண்ணம் தடுப்பது அனைத்து இயக்கங்கள், அமைப்புகள், கட்சிகள், கல்வியாளர்களின் கடமை என்பதை இக் கூட்டம் கவனத்துடன் சுட்டிக் காட்டுகிறது. அதற்கு முன்னோடியாக கிராமப்புறங்களில் தொடர் பரப்புரைகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.
முன்மொழிதல்: ச.குமார்,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 8:
சுயமரியாதை இயக்கத்தின்
நூற்றாண்டு விழா (2025)

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தோன்றிய நூறாம் ஆண்டு ஆகும். இது வெறும் வரலாற்றுக் குறிப்பு அல்ல – நாம் செல்ல வேண்டிய பாதையை நினைவூட்டும், வழிகாட்டும், விரைவுபடுத்தும் பாடக் குறிப்பும் ஆகும். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டில் பகுத்தறிவு, பெண்ணுரிமை, சமூகநீதி ஆகியவற்றைத் தமிழர்களிடமும், பிற மாநிலத்தவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டியது நமது கடமை ஆகும். நமது இளைஞர்கள் எழுதவும், உரையாற்றவும், ‘மந்திரமா – தந்திரமா?’ உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் வாயிலாகப் பரப்புரை செய்யவும் தயாராக வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, பிற மொழிகளிலும் குறிப்பாக ஆங்கிலத்திலும் தங்கள் ஆளுமையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் இக் கூட்டம் வலியுறுத்துகிறது. அதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில், தகவல் தொழில்நுட்பத் துறையில் நாம் செல்ல வேண்டிய இலக்குகளை மனதில் கொண்டு அவற்றில் தீவிரமாகச் செயல்படும் வகையில் அதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
முன்மொழிதல்: த.ஜெகநாதன்,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 9:
அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) பிரிவின் அடிப்படையில் பாடத்திட்டம்

மானுட வளர்ச்சியில் இன்றைய அறிவியலின் பங்கு மகத்தானது. உலக நாடுகள் அனைத்தும் அறிவியல் துறையில் அளப்பரிய சாதனைகளைப் புரிந்து வருகின்றன. பன்னெடுங்காலமாக விடைதெரியா கேள்விகளுக்கு அறிவியல் விடையளித்து வருவதுடன், புதிய புதிய கேள்விகளையும் எழுப்பிவருகிறது. இத் துறையில் வளர்ச்சியடையும் சமூகமே, நாளைய உலகின் பகுத்தறிவும், ஆளுமையும் மிக்க சமூகமாக உயரும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 51 ஏ(எச்)சும் அதை வலியுறுத்துகிறது. அறிவியல் மனப்பான்மையும், அறிவியல் புத்தாக்கங்களும் பெருகும் வகையில் மாணவர்களையும், இளைஞர்களையும் ஈர்க்கும் வகையில் தனித்தன்மையான விழாக்களை, கண்காட்சிகளை, பயிற்சிகளை, கல்விக் கூடங்களைத் தாண்டியும் பொது மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் அரசு திட்டமிட வேண்டும் என்றும், அறிவியல் சார் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் திராவிடர் கழக இளைஞரணி கேட்டுக் கொள்கிறது.
முன்மொழிதல்: இர.சிவசாமி,
தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர்

தீர்மானம் எண் 10:
அரசமைப்புச் சட்டத்தின்
முகப்புரை பற்றி பாடத்திட்டம்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை வலியுறுத்தும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் தத்துவங்களும், சமூக, அரசியல், பொருளாதார நீதியும், அடிப்படை உரிமைகளும் இந்தியாவின் அனைத்துத் தரப்பினருக்கும் சென்று சேர வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை பள்ளிகள் முதலே கொண்டு வருதல் அவசியமாகும். பள்ளிப் பாடத்திட்டங்களிலேயே அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் குறித்தும், அவற்றைக் காக்க குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் குறித்தும் விளக்கப்பட வேண்டும்; அதற்கேற்ற பாடங்களும் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
முன்மொழிதல்: ரெ.சுப்ரமணியன்,
தஞ்சை மாவட்ட இளைஞரணி தலைவர்

தீர்மானம் எண் 11:
தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் வெளிமாநிலத்தவர்களுக்கா?

இந்திய ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் அந்தந்த மாநில மக்களுக்கு, அந்தந்த பகுதிகளில் வேலையை உறுதி செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட வேண்டும். தமிழ்நாட்டில் ரயில்வே, அஞ்சல் துறை, வங்கிப் பணிகள் உள்ளிட்ட பல அலுவலகங்களிலும், அலுவலகம் சாராத பணிகளிலும் அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குவிக்கப்படுவது கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களிடம் உரசல், மக்களின் தேவைகள் அறியாமல் புறக்கணிக்கப்படுதல் என்று தொடர் பிரச்சினைகள் எழுவதுடன், தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைப் பறிப்பு என்னும் கொடுமை நடந்து கொண்டுள்ளது. இந்நிலை ஏற்கத்தக்கதல்ல. இளைஞர்கள் மத்தியில் பதற்றமான மனநிலை உருவாகி வருகிறது. இதற்கான முடிவுரை ஏற்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

புதன், 29 மே, 2019

திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

வல்லம், மே 27 திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைகழகத்திலுள்ள வள்ளுவர் அரங்கில் 18.05.2019 சனிக்கிழமை மாலை 05.15 மணியளவில் துவங்கி நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார்

தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் ராஜவேல் "கடவுள் மறுப்பு" கூறினார். திராவிடர் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் அனைவரையும் வரவேற்றார்.

கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், பொதுச் செயலாளர்கள் வீ.அன்புராஜ், முனைவர் துரை. சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், கழக மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன் ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்து கருத்துரையாற் றினார்கள்.

மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் தே.காமராஜ், அ.சுரேஷ், ப.வெற்றிச் செல்வன், வெ.ஆசைத்தம்பி, க.கண்ணன், பெரியார் சமுகப் பாதுகாப்பு அணியின் மாநில பொறுப்பாளர் சுரேஷ், தஞ்சை மண்டல இளைஞரணிச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், திருச்சி மண்டல இளைஞரணிச் செயலாளர் வீ.அன்புராஜா, திண்டுக்கல் மண்டல இளைஞ ரணிச் செயலாளர் குணா.அறிவழகன், கோவை மண்டல இளைஞரணிச் செயலாளர் ச.மணிகண்டன், சேலம் மண்டல இளைஞரணிச் செயலாளர் கூ.செல்வம், கடலூர் மண்டல இளைஞரணிச் செயலாளர் ந.பஞ்சமூர்த்தி, வட சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், புதுக்கோட்டை மண்டல இளைஞரணி செயலாளர் வீரைய்யா, புதுச்சேரி மண்டல இளைஞரணிச் செயலாளர் ச.முகேஷ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி தலைவர் சோ.நீலகண்டன் கூட்டத்தில் வடிக்கப்பட்ட தீர்மானங்களை வாசித்தார்.

பங்கேற்றோர்


தஞ்சை மண்டல திராவிடர் கழக தலைவர் ஜெயராமன், செயலாளர் அய்யனார், தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், செயலாளர் வழக்குரைஞர் அருணகிரி, தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன், ஆவடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கலைவேந்தன், காரைக்கால் மாவட்ட இளைஞரணி தலைவர் நாத்திக.பொன்முடி, வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் தயாளன், தருமபுரி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அர்ச்சுணன், கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி தலைவர் இல. ஆறுமுகம், ஒசூர் மாவட்ட இளை ஞரணி தலைவர் செ.டார்வின் பேரறிவு, திண்டிவனம் மாவட்ட இளைஞரணி தலைவர் கே.பாபு, கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் அ.கரிகாலன்,  கடலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் ந.உதயசங்கர், செயலாளர் வேலு, விருத்தாசலம் மாவட்ட இளைஞரணி தலைவர் செ.சிலம்பரசன், நாமக்கல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சு.சேகர், கோவை மாவட்ட இளைஞரணி தலைவர் ச.திராவிடமணி, அமைப்பாளர் விவேக், நீலமலை மாவட்ட இளைஞரணி தலைவர் யா.சத்தியநாதன், செயலாளர் சி.இராவணன், தாராபுரம் கழக மாவட்ட இளைஞரணி தலைவர் நா.மாயவன், செயலாளர் மா.இராமசாமி, திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் ம.ரமேஷ்,கரூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் கா.ஜெகநாதன், பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் பெ.சின்ன துரை, அரியலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் க.கார்த்திகேயன், திருவாரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ, செயலாளர் சி.ராஜமணிகண்டன், பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா.வீரத்தமிழன், அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவர் ப.மகாராஜா, செயலாளர் இரா.யோகராஜ், தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் ம.சுருளிராஜ், மதுரை மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.கண்ணன், மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் பா.முத்துக்கருப்பன், செயலாளர் இரா.பிரபாகரன், விருதுநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் ச.சுந்தரமூர்த்தி, தென்காசி மாவட்ட இளைஞரணி தலைவர் சு.கோபால் உள்ளிட்ட மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக இளைஞரணி பொறுப்பாளர்கள் 250 பேர்,திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் 40 க்கும் மேற்பட்டோர் என 300 பேர் நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். கூட்ட முடிவில் குடந்தை மாவட்ட இளைஞரணி தலைவர் க.சிவக்குமார் நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு 27. 5 .2019

திங்கள், 20 மே, 2019

திராவிடர் கழக இளைஞரணியின் மாநிலக் கலந்துரையாடல் கூட்டம்

அழைக்கிறார் தமிழர் தலைவர்

உயிர் வெல்லமல்ல-வெல்லுவோம், வாரீர்!''




தஞ்சை, மே 19 2019 மே 18 அன்று தான் தஞ்சை வல்லத் தில் பகுத்தறிவாளர் கழகப் பயிற்சிப் பட்டறையும் (ஒர்க் ஷாப்), திராவிடர் கழக இளைஞரணியின் மாநிலக் கலந்துரையாடல் கூட்டமும் ஒரே நேரத்தில் நடைபெற்றன.

இரு நிகழ்வுகளும் கண்களில் ஒத்திக்கொள்ளத் தக்க வைகளாக அமைந்திருந்தன. இந்தக் காலகட்டத்தில் கழகம் பொலிவுடனும், தெளிவுடனும், திட்டவட்டத்துடனும், காலத்துக்கேற்ற வியூகத்துடனும் வீறுநடை போடுகின்றது என்பதற்கான அடையாளமாக இவை அமைந்திருந்தன.

தமிழர் தலைவர் மகிழ்ச்சியில் திளைத்த நாள்களுள் இதுவும் ஒன்றே! காரணம், ‘‘தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் நம்மை நம்பி விட்டுச் சென்ற கழகத்தைக் கருத்துடனும், கம்பீரத்துடனும், வலிமை மிக்கதாக உருவாக்கியிருக்கிறோம்'' என்று  பெருமை கொள்ளத்தக்க வகையில் இருந்தமையால் ஏற்பட்ட மகிழ்ச்சிதான் அது. ஏப்ரல் 27 ஆம் தேதி திராவிடர் கழக மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டல, மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் கூட்டத்தின் எழுச்சியும், மே 15 ஆம் தேதி மாநில மகளிரணி - மகளிர் பாசறையினரின் மகத்தான சந்திப்பும், கலந்துரையாடலும், மே 6 முதல் 10 வரை வல்லத்தில் நடைபெற்ற பெரியார் பிஞ்சுகள் பழகு முகாமும், தஞ்சை, மதுரை, ஈரோடு, திண்டிவனம் ஆகிய இடங்களில் நடைபெற்ற மாணவரணியினரின் கலந்துரையாடல்களும், சென்னையில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையும் (11, 12.5.2019) என்று அலை அலையாகக் கழக அமைப்புப் பணிகள் கழக வரலாற்றில் மிக அடர்த்தியாக நடைபெற்றமை நினைக்க நினைக்க மலைக்கும் - மணக்கும் நிகழ்ச்சிகளின் நிரல்களாகும்!

நேற்று (18.5.2019) நடைபெற்ற இளைஞரணி கலந்துரை யாடலில் தமிழ்நாடு தழுவிய அளவில் பொறுப்பாளர்கள் என்ற முறையில் 250 பேர் பங்கேற்றனர்.

இதைப்பற்றிக் கருத்துச் சொன்ன கழகத் தலைவர், கழகத்தில் தலைமுறை இடைவெளியில்லாமல் அனைத் துப் பருவத்தினரும் நிறைந்து காணப்படுவதைச் சுட்டிக் காட்டினார்.

கழகத்தில் 90 வயதுடைய இளைஞர்களும் இருக்கின் றனர், 25 வயதுடைய முதிர்ச்சியோடு நடந்துகொள்ளும் காளையர்களும் உள்ளனர்.

எந்தவித கைமாறும் எதிர்பார்க்காமல், நன்றி பாராட் டாமல், இழிமொழிகளைக் கண்டு எரிச்சல் அடையாமல், அவற்றை ஏற்று, சிறைச்சாலை என்றாலும், இன்முகத்தோடு செல்லும் இலட்சிய வீரர்களின் பாசறையாக அறிவு ஆசான் தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட ஒரே இயக்கம் திராவிடர் கழகம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார் கழகத் தலைவர்.

நமது படைக்கலன் என்றால், அணுகுண்டல்ல, அரிவாள், துப்பாக்கிகளும் அல்ல, அல்ல!

நமது ஏடுகளும், இதழ்களும், நூல்களும்தான் அவை!

‘‘ஒரு நாள், ஒரு பொழுதேனும் ‘விடுதலை'யைப் படிக்காமல் இருப்பேனா'' என்ற உணர்வு பெறவேண்டும்.

இளைஞரணி தோழர்கள் டார்பிடோக்களாக செயல்பட வேண்டும். பெரிய பெரிய கப்பல்களை மூழ்கச் செய்யும் சப்மரின்களாக வேண்டும். ‘விடுதலை' அறிக்கைகளை, தலையங்கங்களை, கட்டுரைகளைப் படிக்கவேண்டும். தந்தை பெரியார் நூல்களை வாசிக்கவேண்டும் - ஏன் சுவாசிக்கவும் வேண்டும்.

எதிரிகளே கூட பெரியார் இறந்ததாக நினைக்கவில்லை - கொள்கையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்றுதான் நினைக்கிறார்கள். பெரியார் தென்றலாகவும் வீசுவார், அதேநேரத்தில் புயலாகவும் சுழன்றடிப்பார்.

இளைஞர்களே, உங்களுக்கு வழிகாட்ட இயக்கம் என்றென்றைக்கும் இருக்கிறது, அஞ்சாதீர்கள்!

நமக்குக் கிடைத்த தத்துவ ஆசான் போல் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. நாம் இருக்கும் இயக்கம் போல வேறு இயக்கம் கிடையாது நாட்டில்.

நமது கொள்கைக்கு ஈடான - இணையானது வேறு எங்குமில்லை. நாம் இதற்காகப் பெருமைப்படலாம்.

கிராமப் பிரச்சாரங்கள், தெருமுனைக் கூட்டங்கள் எங்கெங்கும் நடக்கட்டும்! நடக்கட்டும்!!

பெரியார் சமுகக் காப்பணி என்னும் தொண்டற அணி யின் பயிற்சி முகாம்கள் திட்டமிட்டபடி நடக்கவேண்டும்.

திராவிடர் கழகம் பிறந்த அதே சேலத்தில் வரும் ஆகஸ்டு 27 ஆம் தேதி திராவிடர் கழக பவள விழா மாநாடு - பல்வேறு அம்சங்களின் அணிகலனாக நடைபெற உள்ளது. பெரியார் சமுகக் காப்பணியில் ஆயிரம் பேர்கள் அரிமா சேனையென அணிவகுக்க வேண்டும்.

சீருடை அணிந்த இளைஞரணி வீறுநடை போட்டு - கொள்கை முழக்கமிட்டுக் கம்பீரமாக நடந்துவர வேண்டும். அவற்றை எல்லாம் கண்டு நாட்டு மக்கள் திகைக்கவேண்டும்.

புத்துயிர்ப் பெற்று புறப்பட்டது காண் புதிய புறநானூற்றுப் பெரும்படை என்று எவரும் நினைக்கும் வண்ணம் இன எதிரிகள், பிற்போக்குச் சக்திகள் நடுங்கும் வண்ணம் கட்டுப்பாட்டின் இலக்கணமாக அமையவேண்டும் என்று தமிழர் தலைவர் சொன்னபொழுது, அரங்கமே குலுங்கும் வண்ணம் பலத்த கரவொலி! கரவொலி!!

இளைஞர்களே, சொந்தக்காலில் நிற்கத் துணிவு கொள்ளுங்கள்! கழகம் உங்களுக்கு வழிகாட்டும்!

இங்கு வரும்போது எப்படி வந்தீர்கள் என்பது முக்கியமல்ல; திரும்பிச் செல்லும்போது முறுக்கேறிய தோள்களோடு, நரம்புகளோடு புது ரத்தம் பாய்ச்சிய புது மிடுக்கோடு வீடு செல்லுவீர்!

சேலம் மாநாடு நமது வலிமையைக் காட்டட்டும்! நமது பொலிவை உணர்த்தட்டும்!

முகநூலில் என்னைப்பற்றி வந்ததைக் காட்டினார்கள். ஜட்ஜாகியிருப்பார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஜட்ஜானால் ரிட்டயர்டு ஆகி, ஓய்வு பெற்று மூலையில் முடங்கி இருப்பேன்!

தந்தை பெரியாரை அடையாளம் கண்டு பத்தாம் வயதில் அவர் கரம் பற்றியதால் ஓய்வு என்றால், என்னவென்று தெரியாமல் உழைப்பதில் மகிழ்ச்சியின் எல்லையில் திளைக்கிறேன்.

வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டால் 365 நாள்களிலும் ஒவ்வொரு வீட்டிலும் என்னை அழைத்து விருந்து படைக்க எண்ணற்ற இயக்கத் தோழர்கள் இருக்கிறார்கள் - இதைவிட எனக்கு என்ன பேறு வேண்டும்? என்று தமிழர் தலைவர் கூறியபோது, ஓர் உருக்கமான நெகிழ்ச்சியான உணர்வு!

உயிர் வெல்லமல்ல இளைஞர்களே!

அய்யா இலட்சியத்தை ஈடேற்றுவோம்! என்ற தமிழர் தலைவரின் முத்து முத்தான சொற்களின் ஓவியம் நம் நெஞ்சச் சுவர்களில் உயிரோட்டமாக வரையப்பட்டு விட்டது.

புதியதோர் உலகு செய்வோம் - கெட்ட ஆரியத்தை வேரோடு சாய்ப்போம்!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!

இளைஞர்களின் குரல்!


கலந்துரையாடல் கூட்டத்தில் உரையாற்றிய இளைஞரணி பொறுப்பாளர்களின் குரல்!

*தமிழ்நாட்டில் வடநாட்டவர்களின் படை யெடுப்பு அதிகரித்து வருகிறது. அதற்கொரு முடிவு கட்டப்படவேண்டும்.

*தமிழர் தலைவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி களுக்குக் காவல்துறையை எதிர்பார்க்கக் கூடாது. நாமே பாதுகாப்பை அளிப்போம் - நம்மால் முடியும்!

*கிராமங்கள்தோறும் நமது அனைத்து அணி களும் கட்டமைக்கப்படவேண்டும்.

*கல்லூரிகள், விடுதிகளில் கழக அணி அமைக் கப்படவேண்டும்.

*அமைப்புக் கூட்டங்கள் குறிப்பிடப்பட்ட இடைவெளியில் நடத்தப்படவேண்டும்.

*பெரியார் சமுகக் காப்பு அணியில் ஆயிரம் பேர் இடம்பெறவேண்டும் - அதற்கான பயிற்சியை அளிக்கவேண்டும்.

*கல்வி, வேலை வாய்ப்புகளில் கழகம் வழிகாட்ட வேண்டும்.

*நம் குடும்பங்களை முதலில் கொள்கை மயமாக்கவேண்டும்.

- கழக இளைஞரணி தோழர்கள் தெரிவித்த  கருத்துக்களின் திரட்டு!

தந்தை பெரியாரின் அழைப்பு


(16.4.1944 அன்று காலை 11 மணிக்கு ஈரோடு பெரியார் மாளிகையில் திராவிட மாணவர் பிரச்சாரத் திட்டம் வகுக்கும் மாநாட்டில் பங்கேற்க மாணவர்களுக்குத் தந்தை பெரியார் அழைப்பு)

அன்புள்ள மாணவர்களே!,

பிற்காலம் உங்களுடையது. நீங்கள் படிப்பதும் படித்ததும் உங்கள் வயிற்றுப்பிழைப்புக்கோ, வாழ் வுக்கோ வகை செய்து கொள்ளுவதற்கு மாத்திரமல்ல. நாட்டைப் பாருங்கள். நாட்டில் உங்கள் இன நிலைமையைப் பாருங்கள். திராவிடர் (தமிழர்) சூத்திரர்களாக இருந்து வருவதும், திராவிட நாடு மிலேச்ச நாடாக கருதப்பட்டு வருவதும், மனித உரிமை இல்லாதிருப்பதும் நீங்கள் அறியாததா? இதற்கு இதுவரை "தெய்வீக சக்தி பெற்ற" பெரியார்களும் உங்கள் சமீப முன்னோர்களும் என்ன செய்தார்கள்? இன்றுள்ள பிரபுக்கள், புலவர்கள், பெரும் பதவி யாளர்கள் தான் ஆகட்டும் இவர்கள் என்ன செய் தார்கள்? குறைந்த அளவு இந்த இழி நிலைக்கு நம்மை ஆக்கியவர்களையாவது அவர்களது ஆயுதங் களையாவது, வேலை திட்ட நடப்பு முறையையாவது விலக்கினார்களா, வெறுக்கவாவது செய்தார்களா? வெறுக்காதவர்களால் விலக்க முடியுமா? இப்படிப்பட்ட இவர்கள் சந்ததியில் வந்த நமக்கு மான உணர்ச்சி வர இடமில்லை என்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். அப்படி நமக்கு மான உணர்ச்சி ஏற்பட்டாலும் அது இயற்கைக்கு விரோதம் தான்.

ஆனாலும் நாம் செயற்கரிய காரியம் செய்ய முற்பட்டவர்கள்; இயற்கையை மாற்ற முடியும் என்பவர்கள்; இதற்கு இந்தக் காலமே வசதி என்று கண்டவர்கள்; இப்போது நாம் செய்யாவிட்டால் இனி செய்வதற்கு ஆட்களும் சந்தர்ப்பமும் கிடையாது என்றும் கருதுகிறவர்கள். ஏனெனில் இன்று நம் மக்கள் நிலை அப்படிப் போய்க் கொண்டிருக்கிறது. ஆதலா லேயே இந்த நிலையை மாற்ற நாமே அருகர்கள். வெற்றி பெறினும், தோல்வி உறினும் நாமே உழைத்துப் பார்க்க வேண்டியவர்களாய் விட்டோம். விழியுங்கள், எழுந்திருங்கள், ஆழ்ந்து சிந்தியுங்கள், உங்கள் தனிப்பட்ட வாழ்வைக் காரித் துப்புங்கள். உங்கள் இனத்தை மனிதத் தன்மையதாக்குங்கள். நம் நாட்டை மேன்மையும் வீரமும் பொருந்திய நாடாக்குங்கள். நாடு நகரம் பட்டிதொட்டி எல்லாம் தன்மானக் குரலெழுப்புங்கள்.

கோழைகளையும், தன்னல வீணர்களையும் எள்ளுருவாக்குங்கள், பெண் மக்களை ஆண்மை யுள்ளவர்களாக ஆக்குங்கள். கீழ் மக்களை, தீண்டப் படாதவர்கள் என்பவர்களை மேன் மக்களாக்குங்கள். இவை உங்களால் முடியும்; கண்டிப்பாக முடியும்; அதுவும் இப்போதே முடியும்; இப்போதுதான் முடியும்.

இவை முடிவதற்கு முன் சுலபத்தில் குடும்பத்தினராக ஆகாதீர்கள், ஆகாதீர்கள். எனவே வாருங்கள்; போர் முனைக்கு வந்து வரிந்து கட்டி நில்லுங்கள்.

- ஈ.வெ.ரா.,

('குடிஅரசு', 15.4.1944)

- தஞ்சையிலிருந்து மின்சாரம்

உயர் ஜாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இடஒதுக்கீடு அளிக்க தமிழ்நாடு அரச முனைப்பு காட்டுவதா?

* கிளை வாரியாக இளைஞரணி அமைப்பு

* பெரியார் சமுகக் காப்பணி பயிற்சி

* பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள்

இளைஞரணி மாநிலக் கலந்துரையாடல் கூட்டத்தின் தீர்மானங்கள்

தஞ்சாவூர், மே 19 திராவிடர் கழக இளைஞரணி அமைப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவது என்றும், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினருக்கு இடஒதுக்கீட்டில் தமிழ்நாடு அரசு முனைப்புக் காட்டுவது கண்டனத்துக்குரியது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

18.05.2019 அன்று தஞ்சாவூர் வல்லத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் : 1

27.04.2019 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில, மண்டல, மாவட்ட தலைவர், செயலாளர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்று செயல்படுத் துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் : 2

கிளைவாரியாக இளைஞரணி

அமைப்பை உருவாக்குதல்

திராவிடர் கழக இளைஞரணி மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் தங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி கிளைக்கழகம், ஒன்றியக்கழகம், நகராட்சி மற்றும் மாநகராட்சி வட்டக்கழக அமைப்புகளை உரு வாக்குவது. இவ்வமைப்புகளுக்கு புதிய உறுப்பினர்களை மேலும் சேர்த்து மாநிலமெங் கும் கழக இளைஞரணி அமைப்பை வலுப் படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் : 3

பெரியார் சமுககாப்பு அணி பயிற்சி

பெரியார் சமுக காப்பு அணி பயிற்சி முகாம் களை பரவலாக முக்கிய பகுதிகளிலும் நடத் திடுவது. எந்த நேரத்திலும் எதற்கும் தயாராக வுள்ள , உடல்வலிவும், உள்ள உறுதியும் கொண்ட மாவட்டத்திற்கு 15 இளைஞர்களை தேர்வு செய்து, பெரியார் சமுக காப்பு அணி பயிற்சி முகாமில் பயிற்சி பெறச் செய்வது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சுற்றுப் பயணத்தில் பெரியார் சமுக காப்பு அணியில் பயிற்சி பெற்ற இளைஞர்களை பங்கேற்க செய்வது மற்றும் பேரிடர் காலங்களில் முன்னின்று மக்களுக்கு உதவும் பணியாற்றுவது என தீர்மானிக்கப்படுகிறது.

இளைஞரணி தோழர்களுக்கு தற்காப்பு கலைகளான சிலம்பம், கராத்தே பயிற்சிகளை இணைத்து நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் : 4

பெரியாரியல் பயிற்சி பட்டறை

மண்டலத்திற்கு ஒரு இடத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் பெரியாரியல் பயிற்சி பட்டறையை தொடர்ச்சியாக நடத்துவது, பெரு வாரியான இளைஞர்களை பங்கேற்கச் செய்வது, கொள்கைத்தெளிவு, இளம் பேச்சாளர்கள் களப் பணியாளர்களை மெருமளவில் உருவாக்குவது என் தீர் மானிக்கப்படுகிறது.

தீர்மானம் : 5

தெருமுனைக் கூட்டங்கள், கருத்தரங்கங்கள்

கழக இளைஞரணி சார்பில் அவ்வப்போது எழும் பிரச்சினைகளை ஒட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கைகளை விளக் கியும் மற்றும் பகுத்தறிவு பிரச்சார தெருமுனைக் கூட்டங்களை நடத்திடுவதையும் தொடர் பணி யாக மேற்கொள்வது எனவும், அவ்வப்போது எழும் பிரச்சினைகளை ஒட்டிய கருத்தரங்கங் களை முக்கிய நகரங்களில் நடத்தி விழிப் புணர்வை ஏற்படுத்துவது எனவும் தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் : 6

ஏழு தமிழர் விடுதலை

மேனாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தீர்ப்பின் படி, 27 ஆண்டுகளாக சிறை யில் வாடும் ஏழு தமிழர்களை விடுதலை செய்யலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு இருந்தும், தமிழ்நாடு அரசின் அமைச்சரவை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியும், ராஜீவ் காந்தியோடு உயிரிழந்த குடும்பத்தினரால் விடுதலையை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குகள் உச்சநீதி மன்றத்தால் தள்ளுபடியான பிறகும் மேலும் காலம் தாழ்த்தாமல் ஏழு தமிழர்களையும் உட னடியாக விடுதலை செய்யுமாறு மேதகு தமிழ் நாடு ஆளுநரை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட் டுக் கொள்கிறது.

தீர்மானம் : 7

உயர் ஜாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபடுவதா?

மோடி அரசு சமுக நீதி கொள்கைக்கு விரோதமாக, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக பொருளாதார அடிப் படையில் உயர் ஜாதியில் உள்ள வசதியற்றவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு என்ற பெயரில் நாடாளுமன்ற தேர் தல் வரும் சூழலில் அவசர அவசரமாக அரசியல் சட்டத் திருத்தத்தை உருவாக்கி, அதை உடனடியாக அர சாங்க பதிவேட்டில் கெசட் செய்யப்பட்டு அவசரமாக மாநில அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

சமுக நீதிக்கு எதிரான, இந்திய அரசமைப்பு சட்டத் திற்கு எதிரான 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன் றத்திலும் திராவிடர் கழகம், தி.மு.க. பிற்படுத்தப்பட்ட அமைப்புகளின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டு விசா ரணைக்கு ஏற்கப்பட்டுள் ளது. இந்நிலையில், பொரு ளாதாரத்தில் நலிந்த பிரிவின ருக்கு 10% இடஒதுக்கீடு வழி காட்டும் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது கடும் கண்டனத்திற்குரியது. சமுக நீதிக்கு விரோதமானது. தமிழ்நாடு சமுக நீதிமண், பெரியார் மண், சமுக நீதிக்கே இந்தியாவிற்கு வழிகாட்டக் கூடியது தமிழ்நாடுதான். எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த சுற்றறிக் கையை திரும்ப பெற வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது. இல்லை யேல் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் அறிவிக்கும் எந்த விதமான போராட்டத்திற்கும் கழக இளைஞரணி சர்வபரித் தியாகம் செய்ய தயாராக உள்ளது என்பதை இக்கூட் டத்தின் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது.

தீர்மானம் : 8

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புகளில்

வட மாநிலத்தவர்களின் ஆதிக்கம்

தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களிலும், தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்புகளிலும், தனியார் துறை வேலை வாய்ப் புகளிலும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களின் ஆதிக்கம் அதிகமாகி வருவதை கண்கூடாகக் காணமுடிகிறது. தமிழர்களின் வாழ்வியல், பொருளாதாரம், அரசியல், சமூக வளர்ச்சி என அனைத்திலும் பொறுப்புணர்வோடு இதை அணுகவேண்டிய தமிழ்நாடு அரசு மெத்தனப் போக்கோடு கண்டுகொள்ளாமல் நடந்து கொள் வது கண்டனத்திற்குரியது. இந்த நிலை தொடர் வதை தடுத்திட தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் எடுக்கும் அனைத்து முயற் சிக்கும் கழக இளைஞரணி களத்தில் நின்று போராடி தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர் காலத்தை பாதுகாப்பது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் : 9

வேளாண் நிலங்களையும் - நீரையும் நாசப்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடுக!

தமிழ்நாட்டில் விழுப்புரம் பகுதியிலும், புதுச்சேரி பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முனைந்துள்ளது

அமெரிக்க, அய்ரோப்பிய நாட்டு மக்கள் தங்கள் நாடுகளில் இத்திட்டத்தை கொண்டுவர முனைந்தபோது, கடும் எதிர்ப்பையும் போராட்டத்தையும் நடத்தி யிருப்பது கவனிக்கத்தக்கது. இத்திட்டத் தால் நதிகளின் நீரும் - மண்ணின் வளமும் - மக்களின் உயிரும் மிகப்பெரும் பாதிப் புக்குள்ளாகும் என்று வெளிநாடுகளே எதிர்க்கும் இத்திட்டத்தை கடும் எதிர்ப் பிக்குப் பிறகும் மீண்டும் தமிழ் நாடு, புதுச் சேரியில் கொண்டுவர முயலும் மத்திய அரசு, மக்கள் நலனுக்கும் - நாட்டின் வளத் திற்கும் எதிரான அரசு என்று சுட்டிக்காட்டு வதோடு, இத்திட்டத்தை அடியோடு ஒழித்துக்கட்ட இளைஞரணி களமிறங்கி போராடும் என் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தமிழ்நாட்டில் 55 இடங்களில் ஹைட் ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ள நிலையில் புதுச்சேரி, முதலமைச்சரைப் போல் தமிழக முதலமைச்சரும் இத்திட்டத் திற்கு தனது அரசின் கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தஞ்சாவூர் வல்லத்தில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந் துரையாடல் கூட்டத்தில் மேற்கண்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


-  விடுதலை நாளேடு, 19.5.19

வியாழன், 8 நவம்பர், 2018

திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடலில் முடிவுகள்

* அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம்


* கிரீமிலேயர் முறையை ஒழித்துக் கட்டுவோம்!

* தமிழர் தலைவர் பிறந்த டிசம்பர் 2 இல் விடுதலை' சந்தாக்களை அளித்து மகிழ்வோம்!



சென்னை, நவ.3 திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 86 ஆம் ஆண்டு பிறந்த நாளான வரும் டிசம்பர் 2 இல் விடுதலை' சந்தாக்களை பிறந்த நாள் பரிசாக அளிப்பது உள்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இன்று (3.11.2018) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1 : இரங்கல் தீர்மானம்

மானமிகு சுயமரியாதைக்காரன்'' என தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்கு திராவிடர் கழக இளைஞரணி ஆழ்ந்த இரங்கலையும், அவரின் அளப்பரியத் தொண்டிற்கு வீரவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம்  2:      பொதுக்குழு தீர்மானங்களைச் செயல்படுத்தல்

06.10.2018 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுக் கூட்டத்தின் தீர்மானங்களை ஏற்றுச் செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 86 ஆவது பிறந்தநாள் விழா  (சுயமரியாதை நாள்)

உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை உலகமயமாக்கும் பணியில் ஓயாது உழைத்துவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு. கி.வீரமணி அவர்களின் 86 ஆவது பிறந்த நாள் விழாவை (சுயமரியாதை நாள்) 2018 டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கி மனிதநேயப்பணிகளான குருதிக்கொடை வழங்குதல், உடற்கொடை வழங்குதல், மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு உணவுப்பொருள்கள் வழங்குதல், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுதல்,  தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களை நமக்கு அளித்த  தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல், கழகக் கொடியேற்றுதல், கொள்கை விளக்கப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி மிகச்சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வது எனத் தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம்  4: உண்மை' சந்தா சேர்ப்புக்குப் பாராட்டு



2017 நவம்பரில் கடலூரில் நடைபெற்ற கழகப் பொதுக் குழுவில் கழக இளைஞரணியினர் 2000 உண்மை' சந்தாக்கள் சேர்த்து அளிக்க வேண்டும் என தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளையை ஏற்று நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு மேலாக 2,220 உண்மை' சந்தாக்கள் சேர்த்து வழங்கிய கழக இளைஞரணி பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கு (குறிப்பாக சென்னை, தஞ்சாவூர், தருமபுரி, கோவை மண்டலம்) இக்கூட்டம் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இப்பணியை ஒரு தொடர் பணியாக செய்திடுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்  5: விடுதலை' சந்தா சேர்ப்பு


உலகின் ஒரே பகுத்தறிவு ஏடான, விடுதலை' சந்தா சேர்ப்புப் பணியில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களோடு இணைந்து 1,000 விடுதலை' சந்தாக்களைச் சேர்த்து 2018 டிசம்பர் 02 அன்று சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களின் 86 ஆவது பிறந்த நாள் பரிசாக வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்  6: இளைஞரணி அமைப்பைக் கட்டமைத்தல்




திராவிடர் கழக இளைஞரணியை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வலுவாக கட்டமைக்கும் வகையில், கழக இளைஞரணி அமைப்பை மாவட்டம், ஒன்றியம், கிளைக் கழகம் வரை புதுப்பிப்பதற்கான சுற்றுப்பயணத்தை, கழக இளைஞரணி மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள்  மேற்கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்  7: தஞ்சையில்  கழக மாநில மாநாடு விளக்க சுவர் எழுத்துப் பணிகள்

2019 பிப்ரவரி 2, 3 ஆகிய தேதிகளில் தஞ்சாவூரில் நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாட்டை விளக்கி, தமிழகம் முழுவதும் உடனடியாக சுவர் எழுத்து விளம்பரப் பணியில் ஈடுபடுவது என முடிவு செய்யப்படுகிறது. மேலும் மாநாட்டு நன்கொடை வசூல் பணிகள் மற்றும் விளம்பரப் பணிகளில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களோடு இணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம்  8 : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா


அறிவுலக ஆசான் தந்தை  பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் வாழ வைத்து தன் வாழ்வை இலட்சியத் திற்காக அர்ப்பணித்து அவர் மறைவிற்குப்பின், திராவிடர் கழகத்திற்கு தலைமையேற்று 5 ஆண்டு காலம் வழிநடத்திய தொண்டறத்தின் தூய உருவம் அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழாவினை 2019 ஆம் ஆண்டு முழுவதும் கொண்டாடிட தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் அறிவித்த 8 செயல்திட்டங்களை செயல்படுத்திட திராவிடர் கழகம் மற்றும் கழக மகளிரணி பொறுப்பாளர்கள், தோழர்களோடு  இளைஞரணி தோழர்கள் இணைந்து செயல்படுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்  9: கிரீமிலேயர் வருமானக் கணக்கீடு தொடர்பான ஆணையை ரத்து செய்க


கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்திட, அரசியல் அமைப்புச் சட்டம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆனால், கிரீமிலேயர் எனும் முறையை அமல்படுத்தி பிற்படுத்தப்பட்டோருக்குத் தொடர்ந்து மத்திய அரசால் அநீதி இழைக்கப்பட்டு வருவது போதாதென்று, தற்போது மத்தியப் பணியாளர் நல அமைச்சகத்தின் 06.10.2017 தேதியிட்ட ஆணை மேலும் எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் அபாய நிலையை உருவாக்கி உள்ளது. பிற்படுத்தப்பட்டோர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாதச் சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற மத்திய அரசாணையை மாற்றியது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்பதை சுட்டிக்காட்டி இந்த ஆணையை மத்திய அரசு உடனே திரும்பப் பெறவேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது. மேலும், இட ஒதுக்கீட்டை ஒழிப்பதே மத்திய பி.ஜே.பி. அரசின் நோக்கமாக இருப்பதைக் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், சிறுபான்மையினரும் புரிந்துகொண்டு போராடிட  கிளர்ந்தெழ வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 10: சபரிமலைக்கு எல்லா வயதுப் பெண்களும் செல்வது தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துக!

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு எல்லா வயதுப் பெண்களும் செல்லலாமா? கூடாதா? என்பதுபற்றி உச்சநீதிமன்றத்தில் வந்த வழக்கில் சனாதனிகளும், பழைமை சம்பிரதாய விரும்பிகளும், பிரபல வழக்குரை ஞர்களையெல்லாம் வாதாட வைத்த நிலையில், 5 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சட்ட அமர்வில் 4 நீதிபதிகள் பெரும்பான்மை கருத்துகளை தீர்ப்பாக எழுதி, எல்லா வயதுப் பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்லலாம்  என்று உரிமை வழங்கியது. ஆனால், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கவேண்டிய மத்திய அரசு குறுக்குசால் ஓட்டாமல், கேரள அரசுக்குத் துணை நின்று,  எல்லா வயதுப் பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 11: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதிட வகை செய்க!

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான மாணவர்கள் தமிழில் தேர்வு எழுதக்கூடாது என்று துணைவேந்தர் அறிவித்திருப்பது தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு விரோதமானது.  மாநில அரசு குறிப்பாக உயர்கல்வித்துறை அமைச்சர்,  கல்வித்துறைச் செயலாளர் உடனடிகவனம் செலுத்தி,   புதிய ஆணை ஒன்று தேவைப்படின்  நிறைவேற்றி முதல் தலைமுறை கிராமப்புற மாணவர்கள்,  தமிழில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் படித்து பட்டதாரிகளாக விரும்பும் மாணவர்களுக்கு அந்த உரிமையை வழங்கவேண்டும் என தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. இப்பிரச்சினையில் காலம் தாழ்த்தினால்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அனுமதி  பெற்று, கிளர்ச்சியில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்படுகிறது.

-  விடுதலை நாளேடு, 3.11.18

ஞாயிறு, 4 நவம்பர், 2018

திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் ஏராளமான இளைஞரணியினர் பங்கேற்பு

தஞ்சாவூரில் நடைபெறும் கழக மாநில மாநாட்டில் இளைஞரணி சார்பில்


சீருடை அணிவகுப்பை நடத்துவது என தீர்மானம்




சிறப்பு தீர்மானம் 13:
இளைஞரணி சீருடை அணிவகுப்பு நடத்துதல்
2019 பிப்ரவரி 2, 3 ஆகிய நாள்களில் தஞ்சாவூரில் நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் சமூகநீதி மாநாட்டில் நடைபெறும் ஊர்வலத்தில் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் மாபெரும் சீருடை அணிவகுப்பை எழுச்சியுடன் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.


சென்னை, நவ. 4 திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில்  3.11.2018 அன்று முற்பகல் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அப்போது அவர் இளைஞரணியினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அணுகு முறைகள் குறித்தும், இளைஞரணிப் பொறுப் பாளர்களோடு கலந்துரையாடி தலைமை யுரையாற்றினார்.

கூட்டத்தின் தொடக்கத்தில் பட்டுக் கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் வீரத்தமிழன் கடவுள் மறுப்பு கூறினார். மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் வரவேற்புரை ஆற்றி னார். கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.

கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நிறைவாக கருத்துரை வழங்கினார். முன்னதாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்து கொண்டு இளைஞரணித் தோழர்களின் பணிகளைப் பாராட்டி, 2019 பிப்ரவரி 2,3 ஆகிய நாள்களில் தஞ்சாவூரில் நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாட்டில் இளைஞரணி சார்பில் மிகுந்த எழுச்சியுடன் மிகப்பெரிய அளவில் சீருடை அணி வகுப்பை நடத்திட வேண்டும். இளை ஞரணி தோழர்கள் உடனடியாக அதற்கான செயல்திட்டத்தில் ஈடுபட வேண்டும் எனத் தெரிவித்தார்.

பின்னர், விழுப்புரம் மண்டலத் தலை வர் க.மு.தாஸ், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தய்யன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் குமார தேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் வில்வநாதன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் ஆனந்தன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் மோகன், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உரையாற்றினர்.

முன்னதாக, மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் ஆத்தூர் சுரேஷ், ப.வெற்றிச்செல்வன், தே.காமராஜ், பொழிசை ச.கண்ணன், தஞ்சை மண்டல இளைஞரணிச் செயலாளர் இரா.வெற்றிக் குமார், ஈரோடு மண்டல இளைஞரணிச் செயலாளர் சா.ஜெயராஜ்செல்லத்துரை, திருச்சி மண்டல இளைஞரணிச் செயலாளர் முனைவர் அன்புராஜா, கோவை மண்டல இளைஞரணிச் செயலாளர் ச.மணிகண்டன், திண்டுக்கல் மண்டல இளைஞரணிச் செயலாளர் குண.அறிவழகன், மதுரை மண்டல இளைஞரணிச் செயலாளர் இரா.அழகர், விழுப்புரம்மண்டல இளைஞ ரணிச் செயலாளர் தா.இளம்பரிதி, காஞ்சிபுரம் மண்டல இளைஞரணிச் செயலாளர் தி.இளந்திரையன், சேலம் மண்டல இளை ஞரணிச் செயலாளர் கூ.செல்வம், சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர் இரா.சிவசாமி, தருமபுரி மண்டல இளைஞரணிச் செயலாளர் ஆறுமுகம், கடலூர் மண்டல இளைஞரணிச் செயலாளர் வீ.திராவிடன், புதுச்சேரி  இளைஞரணித் தலைவர் தி.இராசா, காரைக்கால் மண்டல இளை ஞரணி பொறுப்பாளர் பெரியார் கணபதி, தாம்பரம் மாவட்ட இளைஞரணித் தலைவர் விஜயகுமார், அரியலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் பொன்.செந்தில்குமார், விருத்தாசலம் மாவட்ட இளைஞரணித் தலைவர் செ.சிலம்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணித் தலைவர் அருண்குமார், திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் பழனிச் சாமி, கோவை மாவட்ட இளைஞரணித் தலைவர் திராவிடமணி, திருவொற்றியூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் திலீபன், கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணித் தலைவர் நாகராசன், திண்டிவனம் மாவட்ட இளைஞரணித் தலைவர் பாபு, வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன், தென் சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் தமிழ் சாக்ரடீஸ், குடந்தை மாவட்ட இளைஞரணித் தலைவர் க.சிவக்குமார், ஆவடி மாவட்ட இளைஞரணித் தலைவர் கார்வேந்தன், தருமபுரி மாவட்ட இளைஞரணித் துணைத் தலைவர் பகத்சிங், தஞ்சாவூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஜயகுமார் ஆகியோர் இளைஞரணியின் பணிகள் குறித்தும், எதிர்கால வேலைகள் குறித்தும் பேசினர்.

கூட்டத்தில், மாநில மாணவர் கழக கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் பார்த்தீபன், சென்னை மண்டல செயலாளர் தே.செ. கோபால், திண்டிவனம் மாவட்டத் தலைவர் கந்தசாமி, வடசென்னை மாவட்ட அமைப்பாளர் அன்புச்செல்வன், செந்துறை மதியழகன், அரும்பாக்கம் தாமோதரன், மாவட்ட ப.க. செயலாளர் பழனி மெர்சி ஆஞ்சலாமேரி, விருத்தாசலம் மாவட்ட ப.க. செயலாளர் தே.சுதாகர், தஞ்சை யோவான்குமார், குமார் விருத்தா சலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடராசா, திண்டிவனம் தம்பிபிரபா கரன், சென்னை சண்முகப்பிரியன், செல் வேந்திரன், ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், வடசென்னை மாவட்டச் செயலாளர் கணேசன், விருத்தாசலம் மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியார் மணி, நாகை திலீபன் சக்ரவர்த்தி, சுரேஷ், வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்பரசன், அமைப்பாளர் தயாளன், செந்துறை அறிவன், மத்தூர் இராமஜெயம், தாம்பரம் மாவட்ட இளை ஞரணி செயலாளர் சட்டநாதன், மரக் காணம் அம்சராஜ், திண்டிவனம் தமிழரசு, வடசென்னை மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் பகலவன், விருத்தாசலம் நகர செயலாளர் சேகர், அருப்புக்கோட்டை பெரியார் செல்வம், மரக்காணம் மதிவாணன், விருத்தாசலம், சந்துரு, வீரமுத்து, தீபக்குமார், கல்லக்குறிச்சி சபரிநாதன், விழுப்புரம் கோதண்டராமன், கல்லக்குறிச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் பகவான்தாஸ், விருத்தாசலம் மாவட்ட மாணவர் கழக செயலாளர் இராமராஜ், அசோக் நகர் அகிலன், விருத்தாசலம் வெங்கடேசன், காஞ்சீபுரம் தனுஷ், திருநாவுக்கரசு, குரோம்பேட்டை இனியரசன், தென் சென்னை தாஸ், ஆவடி சரவணன், பெரியார் திடல் கலைமணி, தெய்வசிகாமணி, இன்பரசன், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் பால சுப்பிர மணியன், புழல் அறிவுமானன், வாதுர் அன்பரசன், அர்ச்சுனன், ரேகா உள்பட 150க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற் றனர்.

நிறைவாக மாநில மாணவர் கழக கூட்டுச்செயலாளர் சே.மெ.மதிவதனி நன்றி கூறினார்.

திராவிடர் கழக இளைஞரணி புதிய பொறுப்பாளர்கள்


திருவாரூர் மண்டல இளைஞரணிச் செயலாளர்: சு.இராஜ்மோகன் வேலூர் மண்டல இளைஞரணிச் செயலாளர்: ந.கண்ணன் (குடியாத்தம்)

அரியலூர் மண்டல இளைஞரணிச் செயலாளர்: பொன்.செந்தில்குமார் (செந் துறை) சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர்:  சோ.சுரேஷ் அரியலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர்: சு.அறிவன் (செந்துறை)

வேலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர்: பொ.தயாளன் (காங்கேயநல்லூர்)

மதுரை புறநகர் மாவட்ட இளை ஞரணித் தலைவர்: பா.முத்துக்கருப்பன் (திருமங்கலம்), மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணிச் செய லாளர்: இரா.பிரபாகரன் (கூடல்நகர்)

காரைக்கால் மண்டல இளைஞரணித் தலைவர்: நாத்திக.பொன்முடி, காரைக்கால் மண்டல இளைஞரணிச் செயலாளர்: கோ.மு.பெரியார்கணபதி

சோழிங்கநல்லூர் மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்: எம்.நித்தியானந்தம் (கேளம்பாக்கம்)

திருவொற்றியூர் மாவட்ட இளைஞ ரணித் தலைவர்: சதீஷ் (திருவொற்றியூர்), திருவொற்றியூர் மாவட்ட இளைஞரணிச் செயலாளர்: திலீபன் (திருவொற்றியூர்)

நாகை மாவட்டம்


நாகை மாவட்ட இளைஞரணித் தலை வர்: வெ.தீபன்சக்ரவர்த்தி, நாகை மாவட்ட இளைஞரணிச் செயலாளர்: பா.பாலாஜி, நாகை மாவட்ட இளைஞரணி அமைப் பாளர்: கி.சுரேஷ், நாகை மாவட்ட இளை ஞரணித் துணைத்தலைவர்: கா.குமரேசன், நாகை மாவட்ட இளைஞரணித் துணைச் செயலாளர்: இரா.இரமேஷ்

சேலம் மாவட்டம்


ஆத்தூர் மாவட்ட இளைஞரணிச் செய லாளர்: ப.வேல்முருகன்

திண்டிவனம் மாவட்டம்


திண்டிவனம் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்: ச.செந்தில்

மரக்காணம் வட்டத் தலைவர்: தெ.ஜெகதீசன், மரக்காணம் வட்டச் செயலாளர்: வா.மதிவாணன், மரக்காணம் நகர செயலாளர்: லிகோரி சுரேஷ் வர்சைல், மரக்காணம் நகர அமைப்பாளர்: கா.அம்ச ராஜ், மரக்காணம் நகர துணைத் தலைவர்: பா.மணிகண்டன்

வானூர் வட்டத் தலைவர்: சிவ.கவுரி சிறீதர், வானூர் வட்ட அமைப்பாளர்: மாரிமுத்து

ஒலக்கூர் ஒன்றிய இளைஞரணிச் செயலாளர்: தேவராஜ்

ஈரோடு மாவட்டம்


பவானி ஒன்றிய இளைஞரணிச் செயலாளர்: தே.தேவேந்திரன்

தென்சென்னை மாவட்டம்


மாவட்ட இளைஞரணித் தலைவர்: சி.மகேந்திரன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர்: ந.மணித்துரை, மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்: இரா.கதிரவன்.

திருவள்ளூர் மாவட்டம்


மாவட்ட இளைஞரணி தலைவர்: விஸ்வாகுமார், மாவட்ட இளைஞரணி செயலாளர்: மு.ராக்கி

வடசென்னை மாவட்டம்


மாவட்ட இளைஞரணி செயலாளர்: அ.தமிழ்ச்செல்வன் (எருக்கஞ்சேரி), மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்: கோ.பகலவன்

ஆவடி மாவட்டம்


மாவட்ட இளைஞரணித் தலைவர்: வெ.கார்வேந்தன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர்: க.கலைமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்: ஸ்டீபன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்: சே.கோபாலகிருஷ்ணன், மாவட்ட இளை ஞரணி துணைச் செயலாளர்: இரா.கலை வேந்தன்.

- விடுதலை நாளேடு, 4.11.18