வியாழன், 4 ஜூலை, 2024

உத்திரமேரூர், புழல், தாம்பரம் இந்திரா நகர் ஜாதி ஒழிப்பு மாநாடுகள் - 1995

 


1.4.1995 செங்கை எம்.ஜி.ஆர் (தெற்கு) மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகில் கே.எம்.ராசகோபால் நினைவுப் பந்தலில் ஜாதி ஒழிப்பு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் கழகக் கொடியை சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ந.சி.ராசவேலு ஏற்றி வைத்தார். பெரியார் பெருந்தொண்டர்களுக்கும், மாநாட்டை சிறப்புற நடத்திட ஒத்துழைப்பு நல்கிய கழக இளைஞரணித் தோழர்களுக்கும், கழகப் பொறுப்பாளர்களுக்கும் பாராட்டுத் தெரிவித்து, கைத்தறி ஆடை அணிவித்துச் சிறப்பித்தேன். சித்தார்த்தன் குழுவினரின் வீதி நாடகம், சமூக அவலங்களை எடுத்துரைக்கும் பட்டி மன்றம், கருத்தரங்கம் என சிறப்புடன் நடத்தப்பட்டு மக்களின் பாராட்டைப் பெற்றன. மாநாட்டையொட்டி நகரம் முழுவதும் விழாக் கோலம் பூண்ட மாதிரி தோரணங்கள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து கழகத் தோழர்கள் வந்து சிறப்பித்தனர்.

 

 

 

2.4.1995 அன்று வடசெங்கை எம்.ஜி.ஆர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் புழல் காமராஜர் திடலில் ஜாதி ஒழிப்பு மாநாடும், தந்தை பெரியார் முழு உருவச் சிலை திறப்பு நிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டுக் கொடியை பெரியார் பெருந்தொண்டர் வடகரை முனுசாமி ஏற்றி வைத்தார். புழல் சிறைச்சாலை முன் மிகச் சிறப்பான வகையில் அமைக்கப்பட்டிருந்த அறிவு ஆசான் தந்தை பெரியாரின் முழு உருவச் சிலையை தோழர்களின் பலத்த வாழ்த்து முழக்கங்களுக்கிடையே திறந்துவைத்தேன். மாநாட்டில் அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர். அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணியின் மாநிலத் தலைவர் பூவை.மூர்த்தி சால்வை அணிவித்து மகிழ்ந்தார். வீதி நாடகங்களில் ஆர்.எஸ்.எஸ். கலவரம், திடீர் பிள்ளையார், ஜாதிக் கலவரம், பெண்ணடிமை, சாமியார்களின் மோசடிகள் போன்றவற்றை விளக்கி சிறப்பாக நடத்தப்பட்டது.

3.4.1995 அன்று தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை இந்திரா நகர் தண்ணீர் தொட்டி அருகில் ஜாதி ஒழிப்பு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக இந்திரா நகர் ரெங்கநாதபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தந்தை பெரியார் இலவச நூலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையில், மக்களுக்குச் சிறப்பாகப் பயன்படும் இலவச நூலகத்தையும், இளைஞர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வியல் பிரச்சினைகளைத் தீர்க்கும் மய்யத்தையும் திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

 

ஒரு நல்ல படிப்பகத்தைத் திறப்பதன் மூலம் இளைஞர்களிடையே ஒழுக்கமும் அறிவும் வளர இந்த நூலகம் பெரும் பங்காற்றும், இந்த நூலகத்திற்கு வருகின்ற இளைஞர்கள் போகும்போது துணிச்சல் மிகுந்தவர்களாகவும், தன்னம்பிக்கை உணர்வு உள்ளவர்களாகவும் செல்வார்கள் என பல கருத்துகளை எடுத்துரைத்தேன். மாநாட்டை யொட்டி வீதி நாடகமும், கருத்தரங்கமும் நடத்தப்பட்டன. ஜாதி ஒழிப்பு வீரர்களுக்குப் பாராட்டுப் பத்திரமும் வழங்கிச் சிறப்பித்தேன். மாநாட்டில் பெருமளவில் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

-அய்யாவின் அடிச்சுவட்டில் (258)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக