வெள்ளி, 5 ஜூலை, 2024

20.8.1993 மதுரையில் இளைஞர் அணி மாநாடும், 21.8.1993இல் சமூக நீதி மாநாடும் சிறப்பாக நடைபெற்றது. (27% இடஒதுக்கீடு ஆணை பெற்று இமாலயச் சாதனை)

 

அய்யாவின் அடிச்சுவட்டில் … : இயக்க வரலாறான தன் வரலாறு (249) 27% இடஒதுக்கீடு ஆணை பெற்று இமாலயச் சாதனை

மே 16 - ஜுன் 15, 2020

கி.வீரமணி

 20.8.1993 மதுரையில் இளைஞர் அணி மாநாடும், 21.8.1993இல் சமூக நீதி மாநாடும் சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் இளைஞர் அணி மாநாட்டிற்கு தோழர் கொளத்தூர் மணி தலைமையேற்று உரையாற்றினார். “ஜாதி மறுப்புத் திருமணங்கள் அதிகம் நடைபெற வேண்டும்; வடமொழிக் கலப்பற்ற தமிழில் பயன்படுத்தப்பட வேண்டும்; தொலைக்காட்சி, வானொலி, பார்ப்பன ஏடுகளில் வரும் கண்டனத்திற்குரிய செய்திகளுக்கு உடனுக்குடன் தோழர்கள் கடிதங்கள் அதிக அளவில் எழுத வேண்டும்’’ போன்ற கருத்துகளை வலியுறுத்திப் பேசியிருந்தார்.

மாநாட்டில் சிறப்புரையாற்றுகையில், “திராவிடர்களை இழிவுபடுத்தும் இந்து மதத்திற்கு நாங்கள் எதிர்ப்பாளர்கள் தான்.  இந்து மதம் தமிழர்களின் மதமல்ல; திராவிடர்களின் மதமல்ல; இந்து மதம் என்பது பார்ப்பனர்களுடைய மதம். இந்து என்பதே தமிழ்ச் சொல் அல்ல; உனக்கு தைரியமிருந்தால் வா! இதோ ஆதாரத்தை வைத்திருக்கிறேன்; சென்னை உயர்நீதிமன்றத்திலே ஜஸ்டீஸ் ராஜமன்னார் அளித்த தீர்ப்பு இருக்கிறது; அதில் ‘இந்து’ என்ற சொல் இந்தியாவிலே எந்த மொழியிலும் இருக்கிற சொல் அல்ல என்று எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. அதற்கு ஒரு குறிப்பிட்ட கொள்கை கிடையாது என்று ஜஸ்டீஸ் ராஜமன்னார் மிக ஆழமாக எழுதி இருக்கிறார். எனவே நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை; தமிழர்களை சம்பந்தப்படுத்துவது அல்ல; ஆகவேதான், அதைக் கடுமையாக எதிர்க்கிறோம்.

நான் தெளிவாகவே உங்கள் முன்னால் வைக்க விரும்புகிறேன்; அய்யா காலத்தில் அவர்கள் தொடுத்த போரை – நாம் முடித்தாக வேண்டும்; இனிமேலும் நம்முடைய சமுதாயத்தில் சூத்திரப் பட்டம் நமக்கு இருக்கக் கூடாது; எந்தக் கூட்டம் காலம் காலமாக நம்மை அழுத்தி – நம்மை “பார்ப்பானுடைய வேசி மக்களாக’’ ஆக்க நினைக்கிறதோ, அந்தக் கூட்டத்தின் ஆதிக்கத்துக்கு – அதன் கல்லறையின் கடைசிக் கல்லை நாம் கட்டியாக வேண்டும்.’’ போன்றகருத்துகளை எடுத்துக் கூறினேன்.

21.8.1993 இரண்டாம் நாள் சமூக நீதி மாநாட்டில் முதல் நிகழ்வாக புரபசர் சுப.பெரியார் பித்தன் அவர்களின் மந்திரமா தந்திரமா நிகழ்வு வயிற்றைக் கத்தியால் கிழித்து குடலை உறுவி எடுக்கும் காட்சிகள் மெய்சிலிர்க்கச் செய்து காட்டி “மந்திரமல்ல தந்திரமே’’ என்று விளக்கினார். மதுரை வழக்கறிஞர் மகேந்திரன் வரவேற்புரையாற்ற, கு.வெ.கி. ஆசான் அவர்கள் தலைமையில் “ஆரிய திராவிடப் போராட்டம்’’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. பேராசிரியர் நம் சீனிவாசன், வழக்கறிஞர் வை.பாண்டிவளவன், விடுதலை இராசேந்திரன், முனைவர் பு.இராசதுரை ஆகியோர் சமூக நீதி குறித்தும், பார்ப்பன ஆதிக்கம் குறித்தும் உரையாற்றினர்.

மதுரை மாநாட்டில் இளைஞரணி பேரணியை பார்வையிடும் ஆசிரியர் மற்றும் சிறப்பு விருந்தினர்

மாலை 3 மணிக்கு மதுரையே மணக்கும் அளவிற்கு மாபெரும் சமூக நீதி பேரணி ‘தினமணி’ திரையரங்கம் அருகிலிருந்து புறப்பட்டு மாநாட்டு மேடையைச் சென்று அடைந்தது. தந்தை பெரியாரின் படத்தைத் திறந்து வைத்து புலவர் கோ.இமயவரம்பன் உரையாற்றுகையில், தந்தை பெரியாருக்கும், அன்னை மணியம்மையாருக்கும் “குற்றேவல்” செய்வதற்காக என்னை ஒப்படைத்துக் கொண்டேன். தொடர்ந்து ஆசிரியர் அவர்களின் அரிய பணிக்கு உறுதுணையாக இருந்து வருகிறேன் என்று உணர்வு பொங்கக் குறிப்பிட்டார்.!

அதன்பின் மாநாட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அடுத்து துரைச் சக்கரவர்த்தி தலைமையில் “கழகச் செயற்பாடுகள் பணிகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

கருத்தரங்கை தொடர்ந்து மாநாட்டு மேடையில் மூன்று மணவிழாக்களை நான் நடத்தி வைத்தேன்.

கோ.இமயவரம்பன்

தென்னாற்காடு மாவட்டம் அனந்தபுரம் கிருட்டிணன்- – உண்ணாமலை ஆகியோர் மகள் சம்பத்ராணி, கொசப்பாளையம் பெரியசுவாமி- – வள்ளியம்மை ஆகியோரது மகன் பாரதி மணவிழாவினை முதலாவதாக நடத்தி வைத்தேன். தொடர்ந்து ஜோலார்பேட்டை துரைசாமி– ஜீவராணி ஆகியோரது மகள் தமிழ்ச்செல்வி, ஜோலார்பேட்டை தங்கவேலு- – கண்ணம்மாள் ஆகியோரது மகன் சவுந்தரபாண்டியன் மணவிழாவினை நடத்தி வைத்தேன். மூன்றாவது திருமணமாக பழனி முனியப்பன்- – முத்துலெட்சுமி ஆகியோரது மகள் செல்வி, கள்ளிக்குடி ஆறுமுகம்- – நாகம்மாள் ஆகயோர் மகன் சேகர் மணவிழாவினை தலைமையேற்று நடத்தி வைத்தேன்.

திருமணங்களுக்குப்பின் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் நிகழ்வும், நமது பண்பாட்டை மீட்டெடுக்கும் நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.

மாநாட்டில் மத்திய சமூகத்துறை அமைச்சர் சீதாராம் கேசரி பேசுகையில் முதலில் “நான் தந்தை பெரியார் பற்றாளன், சமூகநீதி கொள்கையில் அவருடைய கொள்கைகளை பின்பற்றுபவன்’’ என்று நெகிழ்வுடன் தெரிவித்தார்.

சீதாராம் கேசரி

இறுதியில், நான் மாநாட்டு நிறைவுரை ஆற்றினேன் அதில், “திராவிடர் கழகத்தை மிரட்டும் பார்ப்பன மதவெறி சக்திகளுக்கு இளைஞரணி மாநாட்டில் கடும் எச்சரிக்கை விடுத்தேன். திராவிடர் கழகத்திடம் மீறி வாலாட்டினால் அதை சந்திக்க தயார். நாங்கள் வன்முறைக்கு போகமாட்டோம். ஆனால் எங்களை தாக்க வந்தால், எதிரியை கொல்லும் வேளையில் சாவோம் என்று தந்தை பெரியார் கூறிச் சென்ற கருத்தை அப்படியே நிறைவேற்றுவோம்.’’ என்று குறிப்பிட்டேன்.

மாநாட்டில் மலேசிய திராவிடர் கழக தேசிய தலைவர் திருச்சுடர் இராமசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

‘8.9.1993 அன்று சமூக நீதி வரலாற்றில், பிற்படுத்தப்பட்டோர் வாழ்வில் என்றும் நிலைத்து நிற்கும் அறிவிப்பு வெளிவந்து நம்மையெல்லாம் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்ளச் செய்தது.

ஆம். மண்டல் குழு அறிக்கையின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. எத்தனை காலப் போராட்டம், எத்தனை சட்டப் போர்கள், இடையிடையே வந்த சதிகளுக்கெதிரான வியூகங்கள் அப்பப்பா… சொல்லி மாளுமா?

ஆனால், சோர்வு, துயரங்கள், இடர்கள் அத்தனையும் இந்த வெற்றிக்கனி கிடைத்த மாத்திரத்தில் மறைந்து போய், மகிழ்வும், நிறைவும் குடிகொண்ட உணர்வைச் சொல்ல வார்த்தைகளை வடிக்க முடியாது. அப்படிப்பட்ட ஓர் உச்சநிலை மகிழ்வு.

மத்திய சமூகத் துறை அமைச்சர் சீதாராம் கேசரி சிறந்த பெரியார் பற்றாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டது நமக்கு இன்னும் கூடுதல் மகிழ்ச்சி தந்தது.!

இத்தனையும் தந்த இந்த நாட்டின் ஈடில்லா பிரதமர் சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் அவர்களைத்தான் கோடானு கோடி பிற்படுத்தப்பட்டோர் உள்ளங்கள் கசிந்து நன்றியை வெளிப்படுத்தினர். இந்த நாட்டின் பிரதமர் பதவியை அல்லவா அவர் விலையாகக் கொடுத்து, நமக்கு இந்த நீதியைக் கிடைக்கச் செய்தார். எத்தனை ஆண்டுகள் பிரதமர் பதவியில் இருந்தாலும் பெற முடியாத பெருமையை ஒரு நாளில் பெற்று சமூகநீதியின் சிகரத்தில் நிரந்தரமாய் அமர்ந்தார்.

வி.பி.சிங்

அறிவிப்பு வந்தவுடன் அளவு மிகுந்த  மகிழ்விலும் நன்றிப் பெருக்கிலும் அறிக்கை ஒன்றை வெளியிட்டேன், அதில்,

“13 ஆண்டுகள் போராடியதற்குப் பிறகு மண்டல் குழுப் பரிந்துரை அமலாகி நாளை முதல் 27 சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்கிற மத்திய அரசின் அறிவிப்பானது. சமூகநீதிப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். அரசியல் சட்டத்தில் இல்லாத பொருளாதார வரம்பினை இதில் உள்ளடக்கி இருப்பது பாராட்டத்தக்கதல்ல என்ற போதிலும், எப்படியோ இதுவரை திறக்கப்படாத மத்திய அரசு பணிமனைகளின் கதவுகள் ஓரளவுக்காவது திறக்கப்பட இருப்பது வரவேற்கத்தக்கதே. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதைய ஆணை மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும் என்று மத்திய நலத்துறை அமைச்சர் திரு.சீதாராம் கேசரி அவர்களின் அறிவிப்பு ஓரளவுக்கு ஆறுதல் தருகிறது. இதற்காகவும், மண்டல் கமிஷனை மேலும் கிடப்பில் போடாமல் நடப்பில் கொண்டு வந்ததற்காகவும் பிரதமரையும், நலத்துறை அமைச்சரையும், இதனை விரைவுபடுத்த தன் வாழ்வையே தியாகம் செய்ய முன்வந்த சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களையும் நெஞ்சாரப் பாராட்டி நன்றி செலுத்துகின்றோம்.’’ என்று  அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.

9.9.1993 அன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கி – பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஊழியர் சங்கப் பேரவைக் கூட்டத்தில் வி.பி.சிங்கையும் என்னையும் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அதில் “புதை பொருளாய் மறைந்திருந்த மண்டல குழுவின் அறிக்கையினை அகழ்ந்தெடுத்து மீட்டுவந்து – அரசாணையாக உருமாற்றிய வரலாற்றுச் சாதனைக்காரர்’’ என்று கழகப் பொதுச்செயலாளர் பற்றி தீர்மானத்தில் கட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் சமூகவரலாற்றில் – மறக்கமுடியாத சாதனை நாயகர் என்றும் வி.பி.சிங் அவர்களைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (பார்க்க:பெட்டிச்செய்தி)

இடஒதுக்கீடு ஆணைக்கு முன்பே நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

3.4.1993 அன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கி – பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஊழியர் சங்கப் பேரவைக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் பற்றி நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்

“சமுதாய நீதிக்காக சமர் புரிந்து இன்னல் பல எதிர்கொண்டோர் ஏராளம், அவர்களிடையே தலைசிறந்த பகுத்தறிவாளராக, ஒப்புவமையற்ற சீர்திருத்தச் செம்மலாக வரலாறு காணாத சுயமரியாதைச் சுடரொளியாக வாழ்ந்து, தம் வாழ்நாளின் பெரும்பகுதியை – முக்கால் நூற்றாண்டுக் காலத்தை – சமுதாயப் பணிக்காகவே உவந்தளித்த தந்தை பெரியார் அவர்கள், துணிவு, தூய்மை, எளிமை என எண்ணிறந்த பண்புகளின் உறைவிடமாய் வாழ்ந்தார்.

அப்பெருந்தகையின் மறைவிற்குப் பின்னரும் தந்தை பெரியாரின் லட்சியக் கனவுகளைத் தன் சிந்தையிலே கொண்டு அயராது உழைத்துச் சமுதாயப் பணியாற்றும் தனிப் பேராற்றல் கொண்டவர்; தந்தை பெரியார் போர்ப் பாசறையின் தளபதி எனப் போற்றப்படும் திரு.கி.வீரமணி அவர்கள், புதைபொருளாய் மறைந்திருந்த மண்டல குழுவின் அறிக்கையினை அகழ்ந்தெடுத்து – மீட்டு வந்து – அரசாணையாக உருமாற்றிய வரலாற்றுச் சாதனை, “பெரியார் விட்டுச் சென்ற பெரும் பணியைத் தொடர சரியான படைத் தலைவர் இவரே!” என்பதைப் பிற்படுத்தப்பட்ட மக்கள் மன்றத்தில் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது.

“ரிசர்வ் வங்கி – பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஊழியர் சங்கப்” பேரவைக் கூட்டம் – இத்தீர்மானத்தின் வாயிலாகத் தளபதி வீரமணி அவர்களின் அரும்பணியை பாராட்டி அளப்பரிய நன்றியை உரித்தாக்குகிறது.’’

அயராது போராட்டத்தின் அறுவடை வெற்றியென்பதை இந்த இடஒதுக்கீடு அறிவிப்பு உணர்த்தியது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக