சனி, 28 செப்டம்பர், 2019

பட்டினப்பாக்கம் மு.குணசுந்தரி மறைவுக்கு கழகத்தின் சார்பில் மரியாதைதென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன்  சகோதரியும், பெரியார் திடல் பணித் தோழர் மு.பவானியின் தாயாருமான மு.குணசுந்தரி (வயது 62) அவர்கள் 26.9.2019 அன்று இரவு மறைவுற்றார். மறைவு தகவல் அறிந்ததும் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் நேரில் சென்று மு.குணசுந்தரி உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். பெரியார் திடல் பணித் தோழர்களும் இறுதிமரியாதை செலுத்தினர். (27.9.2019)

- விடுதலை நாளேடு, 28. 9 .19

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில்  ஆ.இராசா எம்.பி.

பெரியார் - அம்பேத்கர் என்கின்ற இரு கருவிகளைப் பயன்படுத்தி, போர்த் தளவாடங்களைப் பயன்படுத்தி, இந்துத்துவா சக்திகளை வீழ்த்துவோம்!

பெரியாரைப் போன்று நாணயமான ஒரு தலைவரை இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே பார்க்க முடியாது


தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில்  ஆ.இராசா எம்.பி.
சென்னை, செப்.26  பெரியாரைப் போன்று நாணயமான ஒரு தலைவரை, இந்தியாவில் மட்டுமல்ல,  உலகத்தி லேயே பார்க்க முடியாது. எதையும் சொல்லிவிட்டுத்தான் செய்திருக்கிறார் என்றார் திராவிட முன்னேற்றக் கழகத் தின் கொள்கைப் பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா அவர்கள் .

தந்தை பெரியாரின் 141 ஆம் ஆண்டு


பிறந்த நாள் பொதுக்கூட்டம்


17.9.2019 அன்று சென்னை தியாகராயர் நகரில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 141 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில்  திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளரும், நாடாளு மன்ற உறுப்பினருமான ஆ.இராசா  அவர்கள் உரை யாற்றினார்.

அவரது உரை வருமாறு:

இன உணர்வோடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தந்தை பெரியார் அவர்களின் 141 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தின் தலைவர் தென் சென்னை திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மதிப்பிற்குரிய வில்வநாதன் அவர்களே,

வரவேற்புரை நிகழ்த்தியிருக்கின்ற மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி அவர்களே,

உரையாற்றி அமர்ந்திருக்கின்ற திராவிட தமிழர் இயக்கப் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே,

திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் மதிப்பிற் குரிய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

எனக்கு முன் உரையாற்றிய திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய சகோதரி அருள்மொழி அவர்களே,

பொதுச்செயலாளர் அன்புச்சகோதரர் அன்புராஜ் அவர்களே, பொருளாளர் குமரேசன் அவர்களே, வழக்குரைஞர் வீரசேகரன் அவர்களே,

நிறைவாக நிறைவுப் பேருரை நிகழ்த்தவிருக்கின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் பெருந்தகை அவர்களே,

வருகை தந்திருக்கின்ற பெரியாரின் பெருந்தொண்டர் களே, பெரியோர்களே, தாய்மார்களே, பத்திரிகையா ளர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணி வான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்திற்கே


ஆயிரம் கேள்விகள் கேட்கும் காவல்துறை


எனக்கு முன் உரையாற்றிய அருள்மொழி அவர் களும், சுப.வீ. அவர்களும் தந்தை பெரியாருடைய இன்றைய தேவை, அவருடைய பெருமை, அவருடைய சிந்தனையைப்பற்றியெல்லாம் இங்கே எடுத்துச் சொன்னார்கள். நம்முடைய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் உரையாற்றுகின்றபொழுது சொன்னார், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட் டத்திற்கே ஆயிரம் கேள்விகளை காவல்துறை கேட்கிறார்கள்; அப்படிப்பட்ட ஒரு அரசாங்கம் இங்கே நடந்துகொண்டிருக்கிறது என்று சொன்னார்; அதி லொன்றும் ஆச்சரியமில்லை.

நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரசாங்கம், இரட்டை இலை அரசாங்கமல்ல; அது நீண்ட காலமாக தாமரை அரசாங்கமாகத்தான் நடந்துகொண்டிருக்கின்றது என்பதை நாம் அறிவோம்.

இரட்டை இலை அரசாங்கமாக இருந்தால்கூட, பெரி யாருடைய எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொண் டதைப்போல, கொஞ்சம் நஞ்சம் ஏற்றுக்கொண் டிருப்பார்கள். ஆனால், நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரசு, மிக மோசமான பாரதீய ஜனதாவினுடைய அரசு என்பதினால், பெரியாரை அவர்கள் அப்படித்தான் பார்ப்பார்கள் என்பதில் வியப்பேதுமில்லை.

பெரியார் அவர்கள் எவ்வளவு பெரிய


தீர்க்கதரிசி


ஆனால், இவையெல்லாம் நமக்கு மிகப்பெரிய ஒரு பாடத்தை உணர்த்துகிறது. ஆசிரியர் அவர்கள் உரை யில் இங்கே குறிப்பிடவிருக்கிறார்கள். தந்தை பெரியார் அவர்களின் இறுதிப் பேருரையில், அன்றைக்கு இருந்த கலைஞர் ஆட்சிக்கு சோதனை ஏற்பட்டால், என்னாகும் என்று பயந்தார்களோ, கணித்தார்களோ அவையெல் லாம் இன்றைக்கு நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஆசிரியர் அவர்கள் இங்கே எடுத்துக் காட்டிட உள் ளார்கள். பெரியார் அவர்கள் எவ்வளவு பெரிய தீர்க்க தரிசி என்பதை பேசியவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

அருள்மொழி அவர்கள் உரையாற்றும்பொழுது சொன்னார், உலக அரசியலை, உலகத் தத்துவத்தை, மானிடப் பற்றை எப்படியெல்லாம் பெரியார் சிந்தித் திருக்கிறார், அவருடைய மண்டைச் சுரப்பை - இந்த உலகிற்கு ஒரு மானிடப் பற்றாளராக எப்படித் தெரிந்தி ருக்கிறது என்பதையெல்லாம் இங்கே எடுத்துச் சொன்னார்.

நானும் அடிக்கடி சொல்கின்ற பெரியாருடைய மேற்கோள் ஒன்று, சுபவீரபாண்டியன் அவர்களும் சொல்வார்கள். பெரியார் அவர்கள் பயன்படுத்துகின்ற வார்த்தைகளில், மிக முக்கியமான வாக்கியங்களை ஒன்றிரண்டை அடிக்கடி நான் பேசுவேன், யோசிப்பேன், அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பேன்.

அதேபோன்று அம்பேத்கர் அவர்கள் சொல்வார்கள், Universal Brotherhood - சர்வதேச சகோதரத்துவம் - அந்த வார்த்தை எனக்கு மிகவும் பிடிக்கும்.

பெரியாரை எதிர்ப்பவர்கள் யார்?


அதுபோல, பெரியார் அவர்களுடைய வார்த்தை களில் எனக்குப் பிடித்தது, அவர் சொல்கிறார்,  எது நாகரிகமான வாழ்க்கை என்றால், நமக்கு என்னென்ன தேவைகள், என்னென்ன பெருமைகள், என்னென்ன வசதிகள் வேண்டுமென்று விரும்புகிறோமோ, அதே வசதி, அதே பெருமை, அதே நண்பர்கள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்று வாழுகின்ற வாழ்க்கைதான் நாகரிகமான வாழ்க்கை.

பெரியாருக்கு என்ன பிரச்சினை? திராவிடத்திற்கு என்ன பிரச்சினை?

எல்லோருக்கும் வேண்டிய என்னென்ன தேவைகள் வேண்டுமோ, பெருமைகள் வேண்டுமோ, வசதிகள் வேண்டுமோ, நன்மைகள் வேண்டுமோ இவையெல்லாம் கிடைக்கவேண்டும் என்று பெரியார் சொன்னார். இந்தத் தேவைகளும், பெருமைகளும், நன்மைகளும் பிறருக் குக் கிடைத்து விடக் கூடாது என்பதில் குறியாக இருந் தவர்கள் பெரியாரை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் யார்? என்று சொல்லிவிட்டு,


பொதுவாழ்க்கைக்கு வந்ததில்லை


அதனால்தான், தந்தை பெரியார் அவர்கள், எனக்குத் தெரிந்து, எந்தத் தலைவரும் நான் யார்? என்று சொல்லிவிட்டு, பொதுவாழ்க்கைக்கு வந்ததில்லை.

தனியாகவே தலைப்பிட்டு, சொந்தப் பேனாவைக் கொண்டு எழுதுகிறார்.

நான் யார்?

‘‘ஈ.வெ.ராமசாமி என்கிற நான், திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகத்தில் இருக்கின்ற பிற சமுதாயத்தின ரைப்போல், அறிவும், மானமும் உள்ள சமுதாயமாக ஆக்குகிற தொண்டினை மேற்போட்டுக் கொண்டிருக்கி றேன். அந்தத் தொண்டை செய்வதற்கு எனக்கு யோக்கியதை இருக்கிறதோ, இல்லையோ, அந்தத் தொண்டை வேறு யாரும் இந்த நாட்டில் செய்ய முன்வராத காரணத்தினால், நான் என்மீது போட்டுக் கொண்டிருக்கிறேன்'' என்றார்.

தமிழகத் தமிழர்கள் மட்டுமல்ல,


உலகமெங்கும் இருக்கின்ற தமிழர்கள்!


நான் யார் என்று சொல்லிவிட்டு, பொது வாழ்க்கைக்கு வந்து, இந்த மண்ணில் இருக்கின்ற ஜாதியக் கொடு மைகளை களையவேண்டும் என்பதற்காக, தன் வாழ் நாட்களை, வத்திக் குச்சிகளாகக் கிழித்துப் போட்டுக் கொண்ட ஒரு மாபெரும் மனிதருக்குத்தான், பிறந்த நாள் விழாவினை, தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமல்ல, உலகமெங்கும் இருக்கின்ற தமிழர்கள் - நம்முடைய சுப.வீ. அவர்கள் சொன்னார்கள், மோடி டிரண்ட் எல்லாம் எங்கே என்று தெரியவில்லை இப்பொழுது. ஏனென்றால், மோடியினுடைய ஆளுமை என்பது இந்தியாவிற்குள்ளேகூட கிடையாது. இந்தியாவில்தான் தமிழ்நாடு இல்லையே!

என்னிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டார், ‘‘நீங்களெல்லாம் பெரியாரிஸ்ட்டுதானே, அத்திவரதரை ஒரு கோடி பேர் பார்த்திருக்கிறார்களே? என்றார்.

அத்திவரதரை போய் பார்த்த ஒரு கோடி பேர்தான், திராவிட முன்னேற்ற கழக அணிக்கு வாக்களித்து, தந்தை பெரியார் அணிக்கு வாக்களித்து, அண்ணா வினுடைய அணிக்கு வாக்களித்து, கலைஞர் அணிக்கு வாக்களித்து - எங்களுக்கு இவர்கள்தான் தேவை என்று சொன்னார்கள்.

கடவுளை நம்பும் நம்பிக்கையாளர்களுக்கும் - கடவுளை நம்பாத


தந்தை பெரியார்தான் தலைவர்


அதற்கு என்ன பொருள் என்றால், 98 விழுக்காடு பேர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு, கடவுளை நம்பாத தந்தை பெரியார்தான், தலைவராக இந்த நூறாண்டு காலம் இருக்கப் போகிறார் என்பதற்கு அச்சாரமாகத்தான் அத்திவரதரைப் போய் பார்க்கிறார்கள்; எங்களுக்கொன்றும் ஆட்சே பனையில்லை.


பெரியாருக்கு என்ன பிரச்சினை? கடவுளுக்கு என்ன பிரச்சினை என்று அவரே சொன்னாரே,

மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது,

கண்ணில் படக்கூடாது,

பார்த்தால் குற்றம்,

தெருவிலே நடக்கக்கூடாது,

படிக்கக்கூடாது,

தண்ணீர் எடுக்கக்கூடாது

என்பதைப்போன்ற கொள்கைகள் தாண்டவமாடும் ஒரு நாட்டை பூகம்பத்தால் எரிக்காமலோ, சண்ட மாருதத்தால் துகளாக்கப்படாமலோ, சமுத்திரம் பொங்கி எழச் செய்யாமலோ, பார்த்த பிறகும்கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால்.

இவ்வளவும் சொல்லிவிட்டு, கடவுள் என்று சொல் கிறானே? வேறு தேசத்தில் வேற்றுமைகளே இல்லையா!

பெரியார் சொல்கிறார்:


பெரியார், 1934, 1935 ஆம் ஆண்டிலேயே சொல்கிறார்,

எனக்குத் தெரிந்து ஒரு மதத்தில், ஒரு சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காரர்களை பெருமளவில் இருக் கிறவர்களை, படிக்கக்கூடாது என்று தரித்திரர்களாகவும், கல்வி அறிவு அற்றவர்களாகவும் வைத்திருக்கின்ற கொள்கையைக் கொண்ட ஒரு மதம் உலகத்திலேயே இந்து மதத்தைத் தவிர இன்னொரு மதம் இல்லை.

1946 ஆம் ஆண்டில், அம்பேத்கர் ஒரு புத்தகத்தில் எழுதுகிறார், இந்து மதம் என்று மட்டும் சொல்லாமல், பிராமின் என்கிற வார்த்தையை சேர்க்கிறார்.

No where in the world that the makers of the constitution have been compelled to deal such  matter.


No intellectual class in the world has prosesecuted the intelligence to find out a philosophy to keep its fellow men in a perpectual state of ignorance and poverty as the Brahmins have done in name of Hindusium.


பெரும்பான்மை மக்களை, தற்குறிகளாகவும், வறுமைக்குள்ளானவர்களாகவும்...


இந்து மதத்தின் தத்துவத்தின் பெயரால், இங்கே இருக்கிற பிராமணர்கள் சமுதாயத்தில் இருக்கின்ற பெரும்பான்மை மக்களை, தற்குறிகளாகவும், வறுமைக் குள்ளானவர்களாகவும் வைத்திருப்பதற்கு ஒரு தத்துவத்தைக் கண்டுபிடித்த வரலாறு இந்து மதத்தைத் தவிர, பிராமணர்களைத் தவிர அல்ல.

Division of Labour இருந்திருக்கிறது; எல்லா ஊர்களிலும் இருந்திருக்கிறது. வெளிநாடுகளில் Shoe Maker என்று போட்டிருக்கிறது; நம்முடைய புத்தி என்ன சொல்கிறது, ‘‘ஏம்பா, நீ அருந்ததியரா? நீ சக்கிலியரா?'' என்று கேட்க முடியுமா?

முடியாது. ஒரு மூன்று மாதத்திற்கு ஷூ தைத்துக் கொண்டிருக்கிறார்; பிறகு அவர் வேறு வேலைக்குச் சென்றுவிடுவார். அங்கே பொற்கொல்லர் உண்டு; ஆனால், பொற்கொல்லர் என்கிற ஜாதி கிடையாது.

இங்கே தொழிலாளர்களைப் பிரித்து


பிறப்போடு முடிச்சுப் போட்ட வரலாறு


அதனால்தான் மிகவும் நுட்பமாக சொன்னார் அம்பேத்கர், Division of Labour is Universal Concept - எல்லா நாடுகளிலும் தொழிலைப் பிரிப்பது என்பது இருக்கிறது. But India is a unique feature of Division of Labourers - இங்கே தொழிலாளர்களைப் பிரித்து பிறப்போடு முடிச்சுப் போட்ட வரலாறு இருக்கிறது என்றால், அதுதான் பிராமணியம் என்று சொன்னார்.

மிக அழகாகச் சொன்னீர்கள். பிராமணீயம் என்று சொல்வது பிராமணர்களுக்கு மட்டுமல்ல. இது பெரியாருடைய பிறந்த நாள் விழா. அம்பேத்கர் மிகத் தெளிவாகச் சொன்னார்,

By Brahminism I do not mean the power and privilege accrued by a community

ஒரு சமூகத்தால் அதிகாரத்தையோ அல்லது பொருளாதாரத்தையோ பெற்றுக்கொண்டு தெனவோடு இருப்பதல்ல பிராமணிசம்.

பிராமணிசம் என்பது  Simple

Negation of Liberty Equality and Fraternity

எது எதுவெல்லாம் சமத்துவத்திற்கு,


சகோதரத் தத்துவத்திற்கு, சகோதரத் தத்துவத்திற்கு எதிரானதோ, அதெல்லாம் பிராமணியம்தான்


எது எதுவெல்லாம் சமத்துவத்திற்கு எதிரானதோ, எது எதுவெல்லாம் சகோதரத் தத்துவத்திற்கு எதிரா னதோ, எது எதுவெல்லாம் சகோதரத் தத்துவத்திற்கு எதிரானதோ, அதெல்லாம் பிராமணியம்தான்.

ஒரு நாடாரோ, ஒரு முக்குலத்தோரோ எனக்குக் கீழே ஒருத்தன் இருக்கிறான் என்று எண்ணினால், அங்கே பிராமணியம் இருக்கிறது.

ஏன்? ஒரு பள்ளர், தனக்குக் கீழே அருந்ததியர் இருப்பதாகவோ, ஒரு பறையர் தனக்குக் கீழே சக்கிலியர் இருப்பதாகவோ எண்ணினால், அந்தப் பறையரும், பள்ளரும்கூட பிராமணியத்திற்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் பொருள். அதுதான் பெரியாருடைய தத்துவம்.

வன்னியர் மாநாட்டில்


தந்தை பெரியார் பேசியது என்ன?


1940 வன்னியர்குல சத்திரியர் மாநாட்டிற்கு பெரியாரை அழைக்கிறார்கள்.

பொதுவாக ஒரு நிகழ்ச்சிக்குப் போனால், நீங்கள் எல்லாம் பெரிய ஜாதி என்று சொல்வது வழக்கம்; அல்லது நீங்கள் எல்லாம் நன்றாகப் படிக்கவேண்டும் என்று சொல்வது வழக்கம்.

1930, ஜூன் 1 ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற வன்னியர்குல சத்திரியர் மாநாட்டில், பெரியார் அவர்கள் வணக்கம் என்று சொல்லி முடித்துவிட்டு,

‘‘பொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந்தால் தங்கள் ஜாதி பெருமையைப் பற்றி பாட்டி கதைகள் பேசி அர்த்தமற்றதுமான பெருமைப் பாராட்டிக் கொள்ளுவதற்காகக் கூட்டுவதாய் இருக்கக்கூடாது என்றும், தங்கள் ஜாதியோ சமூகமோ இன்னும் தனியாகவே பிரிந்திருக்கும்படி வெறும் தங்கள் ஜாதி உயர்வையே பேசிக்கொண்டிருக்கக் கூட்டப்படக் கூடாது என்றும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இம்மகாநாட்டின் பயனாகவாவது நீங்கள் உங்களுக்கு மேல்ஜாதி ஒன்று இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டிருப்பதையும், நீங்கள் சில ஜாதிகளுக்கு மேலானவர்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பதையும் அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்கிற«ன்.

ஏனெனில், நீங்கள் சில ஜாதிக்குப் பெரியார்கள் ஆகவேண்டுமென்னும் ஆசையால் செய்யும் முயற்சியானது மற்றொரு ஜாதியைவிட கீழ் ஜாதியென்று நீங்களாகவே ஒப்புக்கொண்டவராகிறீர்கள். இதனால் உங்களாலேயே உங்களுக்கு கீழ்ஜாதி பட்டம் நிலைத்துவிடுவதோடு நீங்கள் மேல்ஜாதி என்கின்ற உங்களுடைய வறட்டுத் தத்துவம் தகராறில் முடிந்துவிடுகின்றது.''

இதைச் சொல்வதற்கு தைரியம் வேண்டும் அல்லவா? நாணயம் வேண்டும் அல்லவா!

பெரியார் போன்று நாணயமான ஒரு தலைவரை, இந்தியாவில் மட்டுமல்ல,  உலகத்திலேயே பார்க்க முடியாது


பெரியார் போன்று நாணயமான ஒரு தலைவரை, இந்தியாவில் மட்டுமல்ல,  உலகத்திலேயே பார்க்க முடியாது.

எதையும் சொல்லிவிட்டுத்தான் செய்திருக்கிறார். தமிழக விடுதலை, ஜாதி ஒழிப்பு - இந்த இரண்டிற்காகத்தான் எனது இறுதி மூச்சுவரை பாடுபடுவேன். போய் வருகிறேன், போய் வருகிறேன், வணக்கம்! வணக்கம்!! வணக்கம்!! என்று மூன்று முறை சொல்லிவிட்டு, சிறைக்குச் செல்கிறார்.

அவருடைய கடைசி உரை, இங்கே சொன்னார்கள், அருள்மொழி அவர்கள் அழகாக சொன்னார், தந்தை பெரியாரைப்பற்றிப் பாடியதையெல்லாம்.

மரித்தது பெரியாரல்ல,


மாபெரும் தமிழர் வாழ்க்கை!


கவிஞர் கண்ணதாசனே, வேறொரு நிகழ்வில் பேசுகின்றபொழுது, பெரியார் அவர்கள் மறைந்த பொழுது,


‘‘சரித்திரம் மறைந்த செய்தி


தலைவனின் மரணச்செய்தி


விரித்ததோர் புத்தகத்தின் வீழ்ச்சியைக் கூறும் செய்தி


நரித்தனம் கலங்கச்செய்த நாயகன் மரணச் செய்தி


மரித்தது பெரியாரல்ல, மாபெரும் தமிழர் வாழ்க்கை!''


பகவத் கீதையை தூக்கிப் பிடித்த கண்ணதாசன்,


கண்ணனைத் தூக்கிப் பிடித்த கண்ணதாசன்,


அர்த்தமுள்ள இந்து மதத்தைப் பாராட்டி, சிலே கித்து, கட்டுரைகளாக எழுதிக் குவித்த கண்ணதாசன்,


அதனால்தான் சொன்னேன், எத்தனைக் கடவுள் களிடம் போனாலும் தமிழர்கள் தங்களு டைய இன இழிவைத் தீர்த்துக் கொள்ளவேண்டு மானால், தந்தை பெரியார் என்கிற மாமருந்தை விட்டால், வேறு மருந்தில்லை என்கிற காரணத் தினால்தான், கண்ணதாசனே அவருடைய புகழைப் பாடுகின்ற அளவிற்கு ஆளாக்கப்பட்டார் என்பதை இன் றைக்குத் தமிழ்ச் சமுதாயம் உணர்ந்திருக்கிறது.


எங்கள் பெரியாருக்கு


வரலாறு, தத்துவம் இருக்கிறது!


இன்றைக்கு நாடாளுமன்றத்தில் எங்களை எப்படிப் பார்க்கிறார்கள்.

பதவியேற்பின்போது, நாங்கள் எல்லாம் ‘‘பெரியார் வாழ்க!'' என்று சொன்னோம். அவர்கள் ‘‘ஜெய் ராம்'' என்றார்கள்.

எங்களிடம் கேட்டார்கள், Who is Periyar?  என்று.

நான் அவர்களைத் திருப்பிக் கேட்டேன், Who is your Raman? என்று.

எங்கள் பெரியாருக்கு வரலாறு இருக்கிறது,

எங்கள் பெரியாருக்கு தத்துவம் இருக்கிறது,

எங்கள் பெரியார் என்னென்ன சொன்னார் என்று நாங்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம்.

ஆனால், உங்கள் ராமன் மூன்று லட்சம் ஆண்டு களுக்கு முன்பு பிறந்தார் என்று சொல்கிறீர்களே, அவருக்கு இங்கேதான் பிரசவம் பார்த்தேன் என்று சொல்லுகிறீர்களே,

அந்த ராமனை நீங்கள் ‘ஜெய் ராம்' என்று சொல்லும் பொழுது, எங்களை உருவாக்கிய, எங்களைப் படிக்க வைத்த, எங்களை அரசியலுக்கு ஆற்றுப்படுத்திய, நாங்களும் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதற்காகத் தன் வாழ்நாள்களை செலவிட்ட தந்தை பெரியார் வாழ்க என்று சொன்னால், உங்களுக்கு என்ன பிரச்சினை?

தமிழ்நாடு தனித்த அடையாளத்தோடு இருக்கிறதென்றால்...


ஆக, இன்றைக்கு இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாடு தனித்த அடையாளத்தோடு இருக்கிறது என்று சொன்னால், அதற்குக் காரணம், அத்திவரதரை தரிசிக்கப் போன பக்தர்களும் ஒப்புக்கொள்வார்கள், இந்தத் தனித்தன்மைக்குக் காரணம், அத்திவரதர் அல்ல, எங்கள் தந்தை பெரியார் என்பதை அவர்களே ஒப்புக்கொள்வார்கள்.

அருள்மொழி அழகாக சொன்னார்கள், பெரியார் தன்னை தாராளவாதி, நாத்திகவாதி என்று சொல்லிக் கொண்டாலும், கடவுள்களுடைய தேவை இருந்தே தீரும். ஏனென்றால், மனிதர்களுக்குப் பேராசை இருக் கிறது; அவர்கள் பேராசையை ஒப்புக்கொள்ள மாட் டார்கள். இதைவிட  ஹியூமென் சைக்காலஜி படித்த ஒரு மிகப்பெரிய சைக்காலஜிஸ்ட். எம்.ஏ., பிஎச்.டி., படித் திருந்தால்கூட இப்படியெல்லாம் பேசியிருக்க முடியாது.

ஆக, அப்படிப்பட்ட ஒரு பெரிய சுடரை ஏற்றிக் கொண்டுதான் நாம் தமிழ்நாட்டில் இருக்கிறோம்.  அதனால்தான், எங்களுக்கெல்லாம் பெரிய மரியாதை.

நாள்தோறும் காலையில், ஸ்பீக்கர் வணக்கம் வைத்த வுடன், அவர் ஓம் சக்தி என்று சொல்வது மைக்கில் கேட்கிறது.

நாங்கள், லாங் லிவ் செக்குலரிசம் என்போம்.

அவர்கள், ‘ஜெய் ராம்' என்று சத்தம் போடுவார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினரின்


அடாவடித்தனமான பேச்சு!


நாடாளுமன்றத்தில் நான் அய்ந்து முறை இருந் திருக்கிறேன். இந்த முறை போன்று நடக்கும் அநியாயம் எப்பொழுதும் நடந்தது கிடையாது.

ஜாதி வேண்டும் என்று பேசுகிறவர்கள்; நான்கு வருணம் நல்லது என்று பேசுகிறவர்கள். ஒரு எம்.பி. பேசுகிறார்,

In order to maintain the social equilibrium scientifically varnashrama was invented by Hinduism.

இந்த சமூகத்தில் சமநிலை இருக்கவேண்டுமானால், ஒருவன் மலம் அள்ளவேண்டும்; ஒருவன் முடி திருத்த வேண்டும்; ஒருவன் உழைக்கவேண்டும்; நான் ஓத வேண்டும். இது இழிவுக்கான வேலைகளல்ல, இந்த சமூகத்தில், They want  establishment  social equilibrium என்று ஒரு எம்.பி., பேசுகிறார்.

நாங்கள் எழுந்து சத்தம் போட்டோம்.

ஆக, இப்படியெல்லாம் வடநாட்டில் ஒரு நூறாண்டு களுக்குப் பிற்போக்குத்தனம் நிலை கொண்டிருக்கின்ற வேளையில், 50, 60 ஆண்டுகளுக்கு முன்னால், தமிழகம் விழித்துக் கொண்டிருக்கிறது; இவ்வளவு நாகரிகமாகவும், பண்பாடோடும், அறிவோடும் இன்றைக்குத் தாழ்த்தப் பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் இருக்கி றோம் என்று சொன்னால், அதற்கு முழு ஒரே காரணம், தந்தை பெரியார் என்பதை இந்த நேரத்தில் நன்றியோடு நினைப்பது மட்டுமல்ல, நம்முடைய எதிரிகள் விரிந்து கிடக்கிறார்கள்.

ஒரு காலத்தில் 370 இல் கை வைக்கமாட்டார்கள் என்று நினைத்திருந்தோம். இன்று வைத்துவிட்டார்கள்.

பாபர் மசூதி வழக்கு என்னாகும்?


பாபர் மசூதி வழக்கு என்னாகும் என்று தெரிய வில்லை.

அருள்மொழி அவர்கள் சட்டம் படித்தவர்; அருள் மொழியினுடைய சொத்தை, நான் 12 ஆண்டுகள் அருள்மொழிக்குத் தெரிந்தே, நான் பயன்படுத்திவிட்டால், அந்த சொத்து யாருக்கு சொந்தம்?

அருள்மொழி அவர்களின் வீட்டை, என்னிடம் கொடுத்தார்கள்; நான் நான்கு நாள்கள் தங்கிக் கொள்கிறேன் என்று சொல்கிறேன். 12 ஆண்டுகாலம் அருள்மொழிக்குத் தெரிந்தே அந்த வீட்டில் நான் குடியிருக்கிறேன். வாடகை வசூல் செய்த ரசீது என்னிடம் இருக்கிறது; மின் கட்டண பில் என்னிடம் இருக்கிறது. இதையெல்லாம் கொண்டு போய் நீதிமன்றத்தில் கொடுத்தேன் என்றால், அதற்கு சட்டம் என்ன சொல்கிறது என்றால், 12 ஆண்டுகாலம் அருள்மொழிக்குத் தெரிந்தே அந்த இடத்தை நீ அனுபவித்திருந்தால், Advert Possession அது எதிர்நிலை நிலவுடைமைத் தத்துவம்; அதனால், அந்த வீடு ராசாவுக்கு சொந்தம் என்று சட்டம் சொல்கிறது.

400 ஆண்டுகளுக்கு முன்பு


மசூதி கட்டியிருக்கிறான்


12 ஆண்டுகள் இருந்தாலே, அருள்மொழி சொத்து எனக்கு. 400 ஆண்டுகளுக்கு முன்பு மசூதி கட்டியி ருக்கிறான். மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவன் ராமன்; அப்படியென்றால், Advert Possession வராதா? இதற்கு எதற்கு உச்சநீதிமன்றம்?

மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால், பார்த்த பிரசவத்திற்கு சாட்சியம் இல்லை.

400 ஆண்டுகளுக்கு முன்னால் மசூதி இருந்தது என்பதற்கு சாட்சியம் இருக்கிறது.

இதற்கு இந்தியாவில் உள்ள எல்லா சீனியர் கவுன்சிலும் அப்பியர் ஆகி, இந்தியாவினுடைய உச்சநீதி மன்ற நீதிபதியின் தலைமையில், 5, 6 பேர் அமர்ந்து, அதிலும் லைவ் டெலிகாஸ்ட் கேட்கிறார்கள். நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

ஆக, 370 இலும் கை வைத்துவிட்டார்கள். பிறகு பாபர் மசூதி வழக்கு இப்போது நடைபெற்றுக் கொண் டிருக்கிறது.

யூனிஃபார்ம் சிவில் கோடு


அதற்கடுத்து என்ன வரப் போகிறது - யூனிஃபார்ம் சிவில் கோடு (Uniform Civil Code).

இந்த மூன்றையும் முடித்துவிட்டு, அவர்கள் எங்கே வருவார்கள் என்றால், அவர்களிடம் இருக்கும் மிருக பலத்திற்கு - அரசமைப்புச் சட்டத்தை They want to re write the constitution ஏனென்றால், அரசமைப்புச் சட்டத்தின் முதல் வரியே,

இந்த நாடு மதச்சார்பற்ற நாடு

இந்த நாடு சமதர்மம் உள்ள நாடு

“WE, THE PEOPLE OF INDIA,
having solemnly resolved to constitute India
into a SOVEREIGN, SOCIALIST, SECULAR, DEMOCRATIC, REPUBLIC''


இது ஒரு ஜனநாயகக் குடியரசு நாடு

இது ஒரு சமதர்ம நாடு

இது ஒரு மதச்சார்பற்ற நாடு

அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிநாதமாக இருக்கின்ற முகவுரையை மாற்றக்கூடாது


இந்த அடிப்படைத் தத்துவம், பண்புகளை அரச மைப்புச் சட்டத்தில் நீங்கள் எத்தனை முறை வேண்டு மானாலும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிநாதமாக இருக்கின்ற முகவுரையை மாற்றக்கூடாது என்று சொல்லியிருக்கிறது.

அதை மாற்றிவிட்டால், இந்தியா ஒரு இந்து நாடாக சொல்லப்படாமலே ஆகிவிடும் என்ற நம்பிக்கையோடு இன்றைக்கு மத்தியில் ஆட்சி நடத்திக் கொண்டிருக் கிறார்கள்.

பெரியார் வடக்கே இல்லாது போன காரணத்தினால், அவர்களுக்கு அந்தத் துணிச்சல் வந்திருக்கிறது. என்றாலும் நம்பிக்கையோடு இருப்போம்.

இந்துத்துவா சக்திகளை வீழ்த்துவோம் என்ற உறுதியெடுப்போம்!


பெரியார் - அம்பேத்கர் என்கின்ற இரு கருவிகளைப் பயன்படுத்தி, போர்த் தளவாடங்களைப் பயன்படுத்தி, இந்துத்துவா சக்திகளை வீழ்த்துவோம் என்ற உறுதியை இந்த நாளில் எடுத்துக்கொள்வோம்.

வாழ்க பெரியார்!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 26. 9 .19

புதன், 25 செப்டம்பர், 2019

'கடவுள் இல்லை கடவுள் இல்லை' என்ற பகுத்தறிவு பகலவன் பிறந்த நாள் விழா (செப்.17)


- , விடுதலை நாளேடு, 17 .9 .19

-  விடுதலை நாளேடு, 21.9.19

சிந்தாதரிப்பேட்டையில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

தந்தை பெரியார் அவர்களின் 141ஆம் ஆண்டு பிறந்த நாளில் (17.9.2019) சென்னை சிந்தாதரிப்பேட்டை அய்யா முதலி தெரு கிராண்ட் முடிதிருத்தகம் முன்பு வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் படத்திற்கு தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தந்தை பெரியாரின் சொற்பொழிவுகள், பாடல்கள் ஒலிபரப்பி இனிப்புகளை வழங்கினர். நிகழ்வில் குட்டுதெரு சண்முகம், சுப்பையா, கேசவன், டி.ரூபேஷ், திருமலை, செல்லகுட்டி, என்.சண்முகம், பாலசரண் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

- விடுதலை நாளேடு, 24 .9. 19


- விடுதலை நாளேடு, 25. 9. 19


செவ்வாய், 24 செப்டம்பர், 2019

தந்தை பெரியார் இறுதி பேருரையாற்றிய இடத்தில் தந்தை பெரியார் 141ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம்தந்தை பெரியார் அவர்களின் 141ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கழக வெளியீடுகளை மேனாள் மத்திய அமைச்சர் (திமுக) ஆ.இராசா வெளியிட, திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், ஜெ.கருணாநிதி, வழக்குரைஞர் வீரசேகரன், தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் ஏராளமானோர் பெற்றுக் கொண்டனர் (சென்னை, 17.9.2019)

- விடுதலை நாளேடு, 18. 9 .19

சனி, 21 செப்டம்பர், 2019

சென்னையில் தந்தை பெரியார் 141ஆவது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டவர்கள்

சென்னை,செப்.21, தந்தை பெரியார் 141ஆவது பிறந்த நாளில் சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு, அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவிப்பு, பெரியார் திடலில் 21 அடி உயர முழு உருவ தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு, பெரியார் நினைவிடம், அன்னை மணியம் மையார் நினைவிடம், சுயமரியாதை சுடரொ ளிகள் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்பு என ஒவ்வொரு நிகழ்வுகளும் பெருந்திரளான கருஞ்சட்டைத் தோழர்களின் பங்கேற்புடன் தந்தை பெரியார் பிறந்த நாள் எழுச்சி பெருவிழாவாக கொண்டாடப்பட்டது.
பல்வேறு அமைப்பினரும் தமிழினத்தின் மீட்பர் தந்தை பெரியாரே என்று நன்றி காட்டும் வகையில் பெரியார் நினைவிடத்தில் குவிந்தனர். பலரும் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மகிழ்வுடன் கொண்டாடினர்.
பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மராட் டிய மாநிலத்  தலைநகர் மும்பையிலிருந்தும், தெலங்கானா மாநிலத்திலிருந்தும், மலேசியா விலிருந்தும் தோழர்கள் ஆர்வ மிகுதியுடன் தந்தை பெரியார் 141ஆவது பிறந்த நாளில் பெரியார் திடலுக்கு வருகைபுரிந்து காலை முதல் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர்.
கலந்துகொண்டவர்கள்

மலேசிய திராவிடர் கழகத் தோழர் அன் பழகன் தம் வாழ்விணையருடன் வருகைபுரிந்து சிறப்பித்தார். மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரவிச்சந்திரன் தம் வாழ் விணையருடன் வருகைபுரிந்து சிறப்பித்தார்.
தெலங்கானா மாநிலத்திலிருந்து இந்திய நாத்திக சங்கத்தைச் சேர்ந்த ஜி.டி.சாரய்யா தலைமையில் ஒரு குழுவினர் வருகைதந்து சிறப்பித்தனர்.
கவிஞர் கண்மதியன், வா.மு.சே.திருவள் ளுவன், திண்டிவனம் சிறீராமுலு, காரைக்குடி சாமி.திராவிட மணி, நெய்வேலி அரங்க.பன்னீர் செல்வம், மங்களுரு தாண்டிநாதன்,
தென்சென்னை

மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.பாலு, துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், துணை செயலாளர் சா.தாமோதரன், துணை செய லாளர் கோ.வீ.ராகவன், சூளைமேடு கோவிந்த ராஜ், மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழகன், இளைஞரணி செயலாளர் ந.மணித்துரை, ஆயிரம் விளக்கு மு.சேகர், கு.அய்யாத்துரை, கோ.மஞ்சநாதன், மு.சீனிவாசன், பா.சுரேஷ், ந.இராமச்சந்திரன்,பிடிசி.இராஜேந்திரன்
வடசென்னை

மண்டல செயலாளர் தே.செ.கோபால், மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன், செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், துணைச் செய லாளர் சி.பாஸ்கர், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் நா.பார்த்திபன், மாவட்ட ப.க அமைப்பாளர் ஆ.வெங்கடேசன், மாவட்ட மாணவர் கழக தலைவர் வ.கலைச்செல்வன், செயலாளர் வ.வேலவன், அமைப்பாளர் பா.பார்த்திபன், கொடுங்கையூர் அமைப்பாளர் கோ.தங்கமணி, பெரம்பூர் தலைவர் து.தியாகராசன், செம்பியம் தலைவர் பா.கோபால கிருட்டிணன், முத்தமிழ்நகர் அமைப்பாளர் வி.பிரபாகரன், பெரியார் சமூகக் காப்பணி பயிற்றுநர்வில்லிவாக்கம் சி.காமராஜ், மங்கள புரம் டில்லிபாபு, வாணியம்பாடி கலைச் செல்வன்
தாம்பரம்

மாவட்டத் தலைவர் ப.முத்தையன், மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், தாம்பரம் சீ.இலட்சுமிபதி, கு.சோமசுந்தரம், திலீபன், குணசேகரன், ரூபன் தேவராஜ், விர்ஷாகன், இராமண்ணா, சிகாமணி, அறிவுசெல்வன், அனகை கரிகாலன்
பெரியார் நூலக வாசகர் வட்டம்

தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், செய லாளர் கி.சத்தியநாராயணன், பொருளாளர் ச.சேரன், துணைச் செயலாளர் தென்மாறன், கு.தென்னவன், க.செல்லப்பன், ஜெ.ஜனார் தனம், சோமசுந்தரம், கோ.தீனன், கோ.பரந் தாமன், விழிகள் ப.வேணுகோபால்
மகளிரணி

துணைப்பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, சென்னை மண்டல மகளிரணி செயலாளர் ஓவியா அன்புமொழி, சி.வெற்றிச்செல்வி, வழக்குரைஞர் அருள்மொழி, பர்சானா, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் த.மரகதமணி, தங்க.தனலட்சுமி, வி.வளர்மதி, பி.அஜந்தா, மு.பவானி, சந்திரா முனுசாமி, பண்பொளி, வழக்குரைஞர் மணியம்மை, இறைவி, பசும்பொன் செந்தில்குமாரி, பூவை செல்வி, செல்வி முரளி, எஸ்.நூர்ஜஹான், அழகுமணி, சாந்தி, பெரியார் செல்வி, அன்பு மதி, அருள்மதி, ரேணுகா, ஹேமா, கிருஷ்ண வேணி, மஞ்சுளா, மும்பை ஜூலியட், குடியாத்தம் தேன்மொழி, சுமதி, வெண்ணிலா, சீர்த்தி, நாகவள்ளி, கனிமொழி, சந்திரா, விசித்ரா, விமலாதேவி, வளர்மதி, அஜந்தா, நல்லினி ஒளிவண்ணன், சந்திரா, எல்.கமலேஸ்வரி, ஜீவா.பாக்கியவதி, க.கலைச் செல்வி, ம.கயல்விழி, கிருஷ்ணவேணி, மஞ்சுளா, பவானி, மோகனா, மோகனப்பிரியா, அன்புச்செல்வி, பூங்குழலி, ஜெயந்தி, எப்சிபா, கோகிலா, ஜெயசுதா, பெரியார் பிஞ்சுகள் இளந்தென்றல் மணியம்மை, தண்வி உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
 - விடுதலை நாளேடு, 21.9.19

வியாழன், 19 செப்டம்பர், 2019

சென்னை தியாகராயர் நகரில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியார் 141ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம்

சென்னை,செப்.18, சென்னையில் தந்தைபெரியார் 141ஆவது பிறந்த நாள் பெருவிழாவில் காலை முதல் பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. மாலையில் பொதுக் கூட்டம் சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்றது.
சென்னை மண்டலம் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தைபெரியார் 141ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை தியாக ராயர் நகர் முத்துரங்கம் சாலையில் தந்தை பெரியார் நினைவுத் திடலில் நேற்று (17.9.2019) மாலை நடைபெற்றது. தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற்றார்.
பொதுக்குழு உறுப்பினர் எம்.பி. பாலு, மாவட்ட அமைப்பாளர் மு.ந. மதியழகன், மாவட்ட துணைத் தலைவர்கள் சி.செங் குட்டுவன், டி.ஆர்.சேதுராமன், தியாக ராயர் நகர் பகுதி தலைவர் ஏழுமலை, கு.அய்யாத்துரை, மாவட்ட துணை செயலாளர்கள் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், மாவட்ட இளைஞரணித் தலைவர் ச.மகேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர்  ந.மணித்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணைப்பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, கோ.வீ. ராகவன், அரும்பாக்கம் சா.தாமோதரன் ஆகியோர் உரையாற்றி னார்கள்.
இந்திய நாத்திக சங்கம் தெலங்கானா மாநில தலைவர் ஜி.டி.சாரய்யா தலை மையில் குழுவினர் தெலுங்கு மொழியில் பகுத்தறிவு பாடல்களை பாடினார்கள். தொடர்ந்து பகுத்தறிவு பாடல்களை புழல் அறிவுமானன் பாடி பார்வை யாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.
நூல் வெளியீடு

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய திராவிட இயக்க வரலாறு இரண்டு தொகுதிகள், தந்தை பெரியார்  141ஆவது பிறந்த நாள் விடுதலை மலர், “தாய்க் கழக மாநாடுகளில் தளபதியின் முழக்கங்கள்”  ஆகிய நூல்களை திமுக கொள்கை பரப்பு செயலாளர் மக்கள வை உறுப்பினர் ஆ.இராசா வெளியிட்டார்.
திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பெற்றுக்கொண்டார். திமுக பகுதி செயலாளர் ஜெ.கருணாநிதி திராவிட இயக்க வரலாறு 2 தொகுதிகள் மற்றும் தந்தை பெரியார் பிறந்த நாள்விழா மலர்  5 புத்தகங்களைப்  பெற்றுக்கொண் டார். திராவிட இயக்க வரலாறு இரண்டு தொகுதிகள் நன்கொடை மதிப்பு ரூ.700. பெரியார் 141ஆவது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் ரூ.600க்கும் பெரியார் 141ஆவது பிறந்த நாள் விழா விடுதலை மலர் நன்கொடை ரூ.200க்கும், தாய்க்கழக மாநாடுகளில் தளபதி மு.க.ஸ்டாலின் முழக்கங்கள் நூல் நன்கொடை ரூ.50க்கு அளிக்கப்பட்டது.
நூல்களைப்

பெற்றுக்கொண்டவர்கள்

கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, மலேசிய திராவிடர் கழகத் தோழர் அன்பழகன், மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரவிச்சந்திரன், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன்,  சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தின சாமி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன்செந்தில் குமாரி, அய்யாதுரை, வேலூர் பாண்டு, ஆவடி மாவட்டச் செயலாளர் இள வரசன், அம்பத்தூர் இராமலிங்கம், வடசென்னை மாவட்டத் துணைத் தலைவர் செம்பியம் கி.இராமலிங்கம், சைதை மு.ந.மதியழகன், மயிலை டி.ஆர்.சேதுராமன், திராவிட மாணவர் கழகம் தொண்டறம், வேலவன் உள்பட ஏராளமானவர்கள் புத்தகங்களை ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டனர்.
தலைவர்கள் உரை

சென்னை தியாகராயர் நகரில் தென் சென்னை மாவட்டக் கழக தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் நடைபெற்ற பெரியார் 141ஆவது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப் பினர் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.இராசா, பேராசிரியர் சுப.வீரபாண்டி யன், கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பிரச் சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். திராவிடர் கழகத் தலைவர் தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள் பொதுக்கூட்ட நிறைவுரை சிறப்புரை ஆற்றினார்.
கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன்,  துணைத் தலைவர் கி.இராம லிங்கம், செயலாளர் கணேசன், சோழிங்க நல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி. வீரபத்திரன், சி.வெற்றிசெல்வி, பெரியார் களம் இறைவி, தங்க.தனலட்சுமி, கோ.தங்கமணி, பெரியார் மாணாக்கன் உள்பட கழகப் பொறுப் பாளர்கள் ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டில் நன்கொடை வசூல் பணிகளில் ஈடுபட்டு பணியாற்றிய புரசை அன்புசெல் வன், பசும்பொன் செந்தில்குமாரி, மு.பவானி உள்ளிட்ட தோழர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். கூட்ட முடிவில் மு.சேகர் நன்றி கூறினார்.
 -  விடுதலை நாளேடு, 18.9.19
 ஆந்திர நாத்திக சங்க சாரையா குழுவினரின் பாடல் நிகழ்ச்சி

 அறிவுமானனின் பாடல் நிகழ்ச்சி
 உரை வீச்சுதந்தை பெரியார் இறுதியாக உரையாற்றிய பெரியார் நினைவுத் திடலில் பெரியார் 141 ஆம் ஆண்டு விழாப் பொதுக்கூட்டம்

எந்த இடத்திலும் அறிவு நாணயத்தோடு கொண்ட கொள்கையை முழங்குபவர் பெரியார்!

ஒரு கருத்துக் கோவைசென்னை, செப்.18 நேற்று (17.9.2019) சென்னையில் நடை பெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில், எந்த இடமாக இருந்தாலும் தனது கொள்கையை வெளிப் படையாக அஞ்சாமல் எடுத்துக் கூறும் அறிவு நாணயத்துக்கும், நேர்மைக்கும் சொந்தக்காரர் தந்தை பெரியார் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
தந்தை பெரியார் 141 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா தமிழ்நாட்டையும் கடந்து, இந்தியாவையும் தாண்டி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் எழுச்சியுடன் நடைபெற் றுள்ளது.
எந்த ஆண்டையும்விட இந்த ஆண்டு பிறந்த நாள் விழாவில் எழுச்சி அதிகமாகக் காணப்பட்டது. மாணவர்களும், இளைஞர்களும், மகளிரும் கிளர்ந்தெழுந்து விழாவைக் கொண்டாடியுள்ளனர்.
இந்து மதவாதம் திமிர் முறித்து, தறிகெட்டுத் தாண்டவ மாடுவதால் இந்த வெறியை விரட்டியடிக்க ஈரோட்டுச் சவுக் குத்தான் சரியானது என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்!
சென்னையில் எல்லாப் பகுதிகளிலும் அய்யா விழா நடைபெற்றது. சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தோழர்களுடன் திரண்டு வந்து தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினர்.
மாலை 6 மணிக்கு சென்னை தியாகராயர் நகரில் தந்தை பெரியார் இறுதியாக உரையாற்றிய (19.12.1973) பெரியார் நினைவுத் திடல் அருகில் தந்தை பெரியார் 141 ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக் கூட்டத்தை - தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.
கூட்டத்தில் பேசிய அனைவரும், பெரியார் வாழ்ந்த காலத்தைவிட அவர் மறைந்த இந்தக் காலகட்டத்தில் மிக அதிகமாகப் பேசப்படுகிறார்; அவரின் தேவை முன்னிலும் இப்போது தேவை என்று உணரப்படுகிறது என்பது குறித்துப் பேசினர்.
கூட்டத்தில் நிறைவுரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் - இதே இடத்தில்தான் 1973 டிசம்பர் 19 அன்று தந்தை பெரியார் தன் இறுதி உரையை நிகழ்த்தினார். அது மரண சாசனம்'' என்ற பெயரில் நூலாக வெளிவந்ததை எடுத்துக் கூறினார்.
'சூத்திரனாக விட்டு சாகப் போகிறேனே!'

உங்களை எல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டு சாகப் போகிறேனே'' என்று தந்தை பெரியார் கூறியதை தமிழர் தலைவர் எடுத்துக் கூறியபோது, கூடியிருந்த மக்கள் மத்தியிலே நிசப்தம் மேலோங்கி நின்றது.
எல்லாக் கட்சிக்காரர்களும் ஒன்றாக சேர்ந்து தி.மு.க. ஆட்சியை ஒழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒழித் தால் ஒழித்துவிட்டுப் போங்கள்; எனக்கு ஒன்றும் கவலை யில்லை. தி.மு.க. ஆட்சி போகுமானால், என்ன நடக்கும்? கலைஞர் ஆட்சி போகுமானால் என்ன நடக்கும்? இன்றைக் குத் திருட்டுத்தனமாக, மறைவாகப் பேசுகிற பேச்சை, நாளைக்கு வெளிப்படையாகப் பேசுவான்'' என்றார் தந்தை பெரியார்- அந்தக் கடைசிக் கூட்டத்தில்.
தந்தை பெரியாரின் தொலைநோக்கு எத்தகையது என் பதை நேரில் இப்பொழுது பார்த்துக் கொண்டுதானே இருக்கி றோம்.
ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று கூறுவோர் எல்லோரும் ஒரே ஜாதி என்று சொல்லவேண்டியதுதானே - அதைக் கூறுவதில் என்ன  தயக்கம்? என்ற கேள்வியை தமிழர் தலைவர் எழுப்பியபோது, அதில் உள்ள நியாயத்தை அனைவரும் உணர்ந்தனர். தொடர்ந்து இந்த அரும்பெரும் கேள்வியை திராவிடர் கழகத் தலைவர் முன்வைத்து வருகிறார் - பதில்தான் இல்லை. தமிழர் தலைவரின் இந்தக் கேள்வி முதனிலையில் செங்குத்தாக எழுந்து நிற்கிறது.
இந்து மதத்தைப்பற்றி ஏதோ நாங்கள்தான் விமர்சிக்கிறோம் என்று கருதக் கூடாது என்று சொன்ன கழகத் தலைவர், மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ் வதியின் முக்கிய ஆலோசகராக விளங்கிய அக்னிஹோத்திரம் இராமானுஜ தத்தாச்சாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற நூலிலிருந்து சில முக்கிய எடுத்துக் காட்டுகளை ஆதாரத்துடன் விளக்கினார்.
ஆரியர்கள் சிந்து நதி இமயமலை என பள்ளத்தாக்கு களைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்தனர். நதிக்குக் கரையில்லாத காலமது, காடு, மலை, விலங்குகள் இவற்றை யெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. வரும் பெண்கள் வரலாம், வராதவர்கள் இங்கேயே இருக்க லாம். ஆப்கானிஸ்தானை விட்டு ஆரியக் கூட்டம்  கிளம்பி இந்தியாவிற்குள் நுழைந்தபோது, கூட வந்த பெண்கள் கம்மி... ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், மனுஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்'' என்று அக்னிஹோத்திரம் இராமானுஜ தத்தாச்சாரியார் சொன்னதையும் எடுத்துக் காட்டினார்.
இந்த மனுதர்மத்தைத்தான் இந்தியாவின் அரசமைப்புச் சட்டமாக்கவேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸின் கொள்கையாகும் என்பதை மறந்துவிடக் கூடாது.
ஆ.இராசா எம்.பி.,கூட்டத்தில் பேசிய தி.மு.க. கொள்கைப் பரப்புச் செய லாளர் ஆ.இராசா எம்.பி., அவர்கள் இந்தியாவில் தமிழ்நாடு தனித்தன்மையாக விளங்குவதற்குக் காரணம் தந்தை பெரியாரே என்று கூறினார்.
நாடாளுமன்றத்திலே நாங்கள் பெரியார் வாழ்க என்று முழக்கமிடுகிறோம். பி.ஜே.பி.யினரோ ஜெய்ராம்' என்று முழக்கமிட்டனர்.
எங்களைப் பார்த்து அவர்கள் கேட்டார்கள், Who is Peiryar? என்று கேட்டனர். நாங்கள் திருப்பிக் கேட்டோம், Who is Rama??  என்று.
பெரியார் வாழ்ந்தார், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டார், பெண்ணுரிமைக்காகப் பாடுபட்டார் - இது நடந்த வரலாற்றுச் செய்தி. உங்கள் இராமனோ வெறும் புராண, இதிகாசக் கற்பனைப் பாத்திரம். இரண்டையும் ஒப்பிடு வது தவறு என்றோம்.
ஜாதி மாநாட்டுக்குச் சென்றாலும், தந்தை பெரியார் ஜாதி உயர்வு பேசும் போக்கினைக் கண்டித்தார். உங்களுக்குக் கீழே இருக்கும் ஜாதியைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தால், உங் களுக்கு மேலே இருக்கும் ஜாதியைப்பற்றி என்ன நினைப்பது என்ற வினாவை அந்த ஜாதி மக்கள் மாநாட்டிலேயே அழுத்தமாக எழுப்பிய அறிவு நாணயத்துக்குச் சொந்தமான ஒரே தலைவர் தந்தை பெரியார் என்று மானமிகு ஆ.இராசா சொன்னபொழுது, கூட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பு.
அத்திவரதரைத் தரிசிக்க இலட்சக்கணக்கான மக்கள் கூடினார்களே - உங்கள் பகுத்தறிவுக் கொள்கை தோற்று விட்டதா? என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு எங்களின் பதில், அப்படி அத்திவரதரைத் தரிசிக்கச் சென்றவர்கள் பி.ஜே.பி.,க்கு வாக்களிக்கவில்லையே - மாறாக, எங்களுக் குத்தானே வாக்களித்தார்கள் என்று மானமிகு ஆ.இராசா எழுப்பிய வினாவுக்கு இதுவரை எந்தப் பதிலையாவது சொல்ல முடிந்ததா? பெரியார் ஆன்மீகத்தையும் கடந்து மதிக்கப்படும் தலைவராக தமிழ்நாட்டில் ஒளிவீசுகிறார்!
அம்பேத்கர் கூறியதென்ன?

அண்ணல் அம்பேத்கர் சொன்ன ஒரு கருத்தையும் ஆ.இராசா அவர்கள் பதிவு செய்தார். இந்து மதத் தத்துவத்தின் பெயரால் இங்குப் பிராமணர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்தினார்கள் என்ற அம்பேத்கரின் கருத்து மிக முக்கியமானது.
(இன்றுகூட கேரள உயர்நீதிமன்ற நீதிபதியம், மக்களவை சபாநாயகரும் பிராமணர்கள் பிறவியில் உயர்ந்தவர்கள் என்று தாங்கள் வகிக்கும் அரசியல் சாசனத்தின் சரத்தைக் கூடத் தூக்கி எறிந்து பேசுவதைப் பார்க்கும்பொழுது, ஆ.இராசா அவர்கள், அண்ணல் அம்பேத்கர் கூற்றினை எடுத்துக் கூறியது துல்லியமானதுதானே!)
பேராசிரியர் சுப.வீ.இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள், நீதிமன்ற நீதிக்கும் நீதி சொன்ன'' தந்தை பெரியார் அவர்களின் கருத்தினை எடுத்து விளக்கினார். கடவுளைக் கும்பிடுகிறேன்'' என்பது வேறு; கும்பிடுகிறேன் சாமி'' என்ற நிலை வேறு.
இந்த இரண்டாவது நிலையைத்தான் நாம் முக்கியமாகக் கருதுகிறோம். மாற்றவும் விரும்புகிறோம். அதுதான் தந்தை பெரியார் விரும்பிய சமூக மாற்றம் என்றார் சுப.வீ.
திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்தவர் ஆர்.எஸ்.மலையப்பன். அவர் அளித்த தீர்ப்பினை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சொன்ன கருத்தினைக் கடுமையாக விமர்சித்தார் தந்தை பெரியார்.
மலையப்பன் அவர்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் அளித்த தீர்ப்பை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிகாரம் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
அதேநேரத்தில், எல்லையைத் தாண்டி அவர் மாவட்ட ஆட்சியராக இருக்கத் தகுதியில்லை என்றும், அவருக்குப் பதவி உயர்வு கொடுக்கக்கூடாது என்றும் தம் மனப்போக்கில் தீர்ப்புரையில் எழுதியதைக் கண்டித்துத்தான் தந்தை பெரியார் போர்க் குரல் கொடுத்தார். இன்னும் சொல்லப்போனால், அந்தத் தீர்ப்பையே பகிரங்கமாக ஒரு பொதுக்கூட்டத்தில் கொளுத்தினார்.
இவ்வளவுக்கும் மாவட்ட ஆட்சியர் மலையப்பன் அவர்களை தந்தை பெரியார் சந்தித்ததுகூட கிடையாது.
தந்தை பெரியார்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது.
நீதிமன்றத்திலே தந்தை பெரியார் எதிர்த்து வழக்காடவில்லை; மாறாக ஓர் அறிக்கையை தந்தை பெரியார் படித்தார் (23.4.1957)
நீதிபதிகள் ஆசனத்தில் இருந்தவர்கள் இருவரும் பார்ப்பனர்களே! அத்தகைய சூழலில் பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு கடும் புலி வாழும் காடு'' என்று சொன்னதை பேராசிரியர் சுப.வீ. எடுத்துக்காட்டியதன்மூலம், எந்த இடத்திலும், எவ்வளவு உயரமான அதிகாரம் படைத்த இடங்களிலும்கூட தன் கருத்தை ஒளிவுமறைவின்றித் தெரிவிக்கும் கொள்கைக்கு - அறிவு நாணயத்துக்குச் சொந்தக்காரர் தந்தை பெரியார் என்று அழகாக எடுத்துக் கூறினார் பேராசிரியர் சுப.வீ.
திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, கடவுள்பற்றி தந்தை பெரியார் கூறிய கருத்தின் ஆழத்தை விளக்கினார்.
தேவையற்ற இடம் கடவுள் இல்லாத இடம் என்று தந்தை பெரியார் கூறிய கருத்தினை விளக்கினார்.
- விடுதலை நாளேடு, 18.9.19

தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவில்  தமிழர் தலைவர் விளக்கவுரை


சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற கொடுமையை மாற்றி அமைத்து வெற்றி பெற்றவர் தந்தை பெரியார்!
தந்தை பெரியாரின் இறுதி உரை மரண சாசனமானது

இளைஞர்களே, பெரியாரை வாசிப்பதோடு, சுவாசியுங்கள்!

தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவில்  தமிழர் தலைவர் விளக்கவுரைசென்னை, செப்.19 சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வி யைக் கொடுக்காதே என்ற கொடுமையை மாற்றி அமைத்து வெற்றி பெற்றவர் தந்தை பெரியார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் .
தந்தை பெரியாரின் 141 ஆம் ஆண்டு

பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

17.9.2019 அன்று சென்னை தியாகராயர் நகரில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 141 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
மிகுந்த எழுச்சியோடு, இங்கு மட்டுமல்ல, உலகத்தினுடைய பல்வேறு நாடுகளிலும் நடைபெறக்கூடிய அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய 141 ஆவது ஆண்டு பிறந்த நாள் பெருவிழா என்பதைப் பயன்படுத்தி, அவருடைய கொள்கை களை, அவர்களுடைய தேவைகளை இன்றைய சமுதாயத் திற்கு நினைவூட்டவேண்டிய ஒரு கடமைதான் இந்த சிறப்பான நிகழ்ச்சி என்ற பெருமையோடு நடைபெறக்கூடிய அவர்களு டைய 141 ஆவது பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய தென்சென்னை மாவட்டத் தலைவர் மானமிகு செயல்வீரர் வில்வநாதன் அவர்களே,
வரவேற்புரையாற்றிய மாவட்டச் செயலாளர் அன்பிற்குரிய பார்த்தசாரதி அவர்களே, முன்னிலை வகிக்கக்கூடிய அருமைத் தோழர்கள் எம்.பி.பாலு அவர்களே, மதியழகன் அவர்களே, செங்குட்டுவன் அவர்களே, டி.ஆர்.சேதுராமன் அவர்களே, ஏழுமலை அவர்களே, அய்யாத்துரை அவர்களே, கோ.வீ.ராகவன் அவர்களே, தாமோதரன் அவர்களே, மகேந் திரன் அவர்களே, மாவட்ட இளைஞரணி செயலாளர் மணித் துரை அவர்களே, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இங்கே சிறப்பாக உரையாற்றி அமர்ந்துள்ள கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
எந்நாளும் உரிமைக்காகக் குரல் கொடுக்கக்கூடிய பகுத்தறிவாளர் ஆ.இராசா சற்று முன்னால் சிறப்பான ஒரு உரையை ஆற்றி, வேறொரு நிகழ்ச்சி இருக்கின்ற காரணத்தினால், விடைபெற்று சென்றி ருக்கக்கூடிய மேனாள் அமைச்சர் என்று சொல்வதைவிட, எந்நாளும் உரிமைக்காகக் குரல் கொடுக்கக்கூடிய பகுத்தறி வாளர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அருமைச் சகோதரர் மானமிகு ஆ.இராசா அவர்களே,
அதேபோல், நம்மோடு என்றைக்கும் இணைந்து இந்தக் கொள்கைகளுக்கு ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும், மேடை தோறுமல்ல, வாய்ப்புக் கிடைக்கின்ற எல்லா இடங்களிலும் முழங்கிக் கொண்டிருக்கக்கூடிய திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் மானமிகு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே,
நம்முடைய இயக்கத்தின் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்களே, பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே, வழக்குரைஞரணி தலைவர் வீரசேகரன் அவர்களே, மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொள்கின்ற அருமை நண்பர்களே, மலேசிய பெரியார் தொண்டர்களில், மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவராக இருந்த திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி அவர்களின் அருமைச் செல்வனும், சீரிய பகுத்தறிவாளருமான அன்புச் சகோதரர் மானமிகு அன்பழகன் அவர்களே, அவருடைய வாழ்விணையர் அவர்களே,
மும்பையிலிருந்து வந்திருக்கக்கூடிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பொறியாளர் ரவிச்சந்திரன் அவர்களே, மற்றும் அனைத்து இயக்கங்களையும் சார்ந்த பெருமக்களே, திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழக, மற்றும் அனைத்து இயக்கங்களைச் சார்ந்த அருமைப் பெரியோர்களே, நண்பர் களே, தாய்மார்களே, கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மகளிரணி பொறுப்பாளர் பொறியாளர் இன்பக்கனி அவர்களே, உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
46 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட

அந்த உணர்ச்சி அலைகளோடு...

இந்த இடத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், 46 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அந்த உணர்ச்சி அலைகளோடு இந்த மேடைக்கு வந்தேன்.
அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள்,  கடைசியாக அவருடைய முழக்கம் என்பது இந்த இடத்தில்தான், தியாகராயர் நகர் பேருந்து நிலையத்திற்குப் பக்கத்தில் இருக்கின்ற இந்த இடத்தில்தான் அது இறுதி முழக்கமாக அமைந்தது.
தந்தை பெரியாரின் இறுதி உரை -

‘மரண சாசனம்'

ஆனால், அந்த உரையைக் கேட்ட யாருக்குமே அது இறுதி முழக்கம் என்று தெரியாது.
தியாகராயர் நகரில் அய்யா அவர்கள் ஒரு அற்புதமான உரையை நிகழ்த்தினார்கள். அந்த உரை ‘மரண சாசனம்' என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. அந்த நூல் பல பதிப்புகளாக வெளிவந்திருக்கிறது.
அதில், தான் எதற்காக இந்தக் கொள்கையைத் தொடங் கினோம்; எதற்காக இந்தக் கொள்கை? எந்த அளவிற்கு இந்த இயக்கம் வளர்ந்திருக்கிறது? அடுத்து என்ன செய்யவேண்டும்? போர்க் களத்திலே, போராட்டக் களத்திலே அவர்கள் நிற்கக் கூடிய அளவிற்கு அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மிகத் தெளிவாக அந்த உரை அமைந்தது, எதிர்பாராமல்.
தொடக்கத்தில், இயக்கத்தினுடைய கொள்கை என்ன என்று ஆரம்பித்து, எல்லா செய்திகளையும் அய்யா அவர்கள் சொல்கின்ற அந்த உரை இருக்கிறதே - தந்தை பெரியார் அவர்களுடைய இறுதிப் பேருரை - ‘மரண சாசனம்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது.
அவர்களுடைய சிந்தனைப் போக்கு, தொலைநோக்கு இருக்கிறது என்பது இருக்கிறது - அவருடைய கருத்து வளத்தைப்பற்றி, அவர்களுடைய தத்துவ ஞானத்தைப்பற்றி - அவர்களுடைய கொள்கையினுடைய உறுதியைப்பற்றி - எல்லாத் துறைகளிலும் துணிவைப்பற்றி, தெளிவைப்பற்றி இங்கே உரையாற்றிய நண்பர்கள் எடுத்துச் சொன்னார்கள். சுப.வீ. அவர்களும், அருள்மொழி அவர்களும், இராசா அவர்களும், நம்முடைய கவிஞர் அவர்களும் எல்லோருமே சிறப்பாக சொன்னார்கள்.
இந்த உரையை, மிக வேடிக்கையாக சொல்லவேண்டு மானால், அய்யாவிற்கு நாங்கள் கொடுத்த வேனிலே, இங்கே அமர்ந்துகொண்டு அவர்கள் பேசிய கடைசி உரை அது.
தொடர்ச்சியான ஒரு இயக்கம் என்பதற்கு இது ஓர் அருமையான எடுத்துக்காட்டு

அப்பொழுது மலேசிய திராவிடர் கழகத் தலைவர் திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி அவர்கள் வந்திருந்தார்கள். இப்பொழுது அவருடைய மகன் இருக்கிறார்.  இது தொடர்ச்சி யான ஒரு இயக்கம் என்பதற்கு இது ஓர் அருமையான எடுத்துக்காட்டு.
46 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த இளைஞர்கள், இன் றைக்குப் பெரியார் வாழ்க! பெரியார் தேவை! என்று சொல்லக் கூடிய அளவிற்கு, இந்தக் கொள்கை ஆழமாக வேரூன்றி இருக்கிறது.
பல செய்திகளைச் சொல்லிக் கொண்டு வருகின்ற நேரத் தில், அய்யா அவர்களுடைய உரையிலே எளிமையாக சில செய்திகளை, சாதாரணமாக சொல்லுவதுபோன்று அவர்கள் சொல்லிவிடுவார்கள்.
சமூகநீதிக்குக் குழி தோண்டப்படுகிறது?

ஆனால், இன்றைக்கு அந்த உரையைத் திரும்பத் திரும்ப படிக்கின்றநேரத்தில், அது சாதாரண உரையல்ல என்பது தெரிகிறது.
நாடாளுமன்றத்தில் எப்படிப்பட்ட கூத்துகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன?
நீதிமன்றங்களில் எப்படிப்பட்ட வேடிக்கைகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன?
அதேபோன்று நிர்வாகத் துறையில் எப்படி சமூகநீதிக்குக் குழி தோண்டப்படுகிறது?
இதுவரையில் தைரியமாக, துணிச்சலாக ஜாதியை ஆதரித்துப் பேசக்கூடிய துணிச்சல் எவருக்கும் வரவில்லை.
இந்த இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம், பேரறிஞர் அண்ணா, அதற்குப் பிறகு ஒப்பற்ற தலைவராக, அண்ணா அவர்களாலே உருவாக்கப்பட்டு, அய்யா அவர்களுடைய ஈரோட்டுக் குருகுலத்தில் இருந்த நம்முடைய மானமிகு சுயமரி யாதைக்காரரான கலைஞர் ஆட்சி- இவை அத்தனையும் இருந்த காரணத்தால், மிகப்பெரிய அளவிற்கு நடந்த எத்த னையோ செய்திகளைப்பற்றி அய்யா அவர்கள் சொல்கிறார்.
இன்றைக்கு ஜாதியை ஆதரித்துப் பேசுகிறார்கள். இந்தத் துணிச்சல் எப்பொழுது வந்தது?
நூற்றுக்கு நூறு நம்முடைய பிள்ளைகள் படித்துவிட்டார்களா?

கல்விக் கொள்கையைப்பற்றி இங்கே சொன்னார்கள். நம்முடைய பிள்ளைகள் படிப்பதற்கே சங்கடப்படக் கூடிய சூழ்நிலையில், ஆரம்பப் பள்ளிக் கூடத்திலேயே சேர்வதற்கு ஆளில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு, சோறு போட்டு படிப்பைக் கொடுத்தால்தான், பட்டினியில்லாமல்  பிள்ளைகள் படிக்கும் முடியும் என்று,          உணவு கொடுத்து, அதற்குப் பிறகு உடை கொடுத்து, அதற்குப் பிறகு இலவசக் கல்வி கொடுத்தாலும், நூற்றுக்கு நூறு நம்முடைய பிள்ளைகள் படித்துவிட்டார்களா என்று சொன்னால், கேரளாவைப் போலவோ, மற்ற மாநிலங்கள் போலவோ இன்னமும் அந்த இலக்கை நாம் அடைய முடியவில்லை.
எம்.பி.பி.எஸ். படித்தாலும்,

நெக்ஸ்ட் தேர்வு - இதென்ன கொடுமை?

இந்தக் காலகட்டத்தில், அடிப்படையிலே, முளையிலேயே கிள்ளி எறிவதைப்போல, மிகப்பெரிய கொடுமை என்ன வென்றால், 5 ஆம் வகுப்புக்கு ஒரு நுழைவுத் தேர்வு - 8 ஆம் வகுப்புக்கு ஒரு நுழைவுத் தேர்வு - 10 ஆம் வகுப்புக்கு ஒரு பொதுத் தேர்வு - 11 ஆம் வகுப்பிற்கு ஒரு பொதுத் தேர்வு - இதையெல்லாம் தாண்டி கல்லூரிக்குப் போகவேண்டுமானால், அதற்கு ஒரு தேர்வு. சரி, கல்லூரிக்குப் போய், நீட் தேர்வை யெல்லாம் முடித்துவிட்டு, எம்.பி.பி.எஸ். படிப்பை படித்தாலும், அதற்குமேல் நெக்ஸ்ட் தேர்வு இதென்ன கொடுமை?
தமிழ்நாட்டில் எத்தனைப் பிள்ளைகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அனிதா தொடங்கி இன்றுவரை யில் அந்தக் கொடுமைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை.
இராஜகோபாலாச்சாரியாரை,

பதவியை விட்டு ஓட வைத்த இயக்கம்!

இப்படி வடிகட்டல். இந்த வரலாறு தெரியாதவர்கள் இந்த நாட்டில் பலர் இருக்கிறார்கள். இந்த இயக்கம் போராடிப் போராடி - குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராடிய பொழுது - இராஜகோபாலாச்சாரியார், ‘‘ஆள்வது நானா?'' என்று கேட்ட நேரத்தில், இட்லரும், இராமானுஜரும், மற்றவர் களும் யாரைக் கேட்டார்கள் - நீங்கள் யாரைக் கேட்டு செய்தீர்கள்? என்று சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் கேட்டநேரத்தில், இராஜகோபாலாச்சாரியார் இப்படி சொன் னார். அதே இராஜகோபாலாச்சாரியாரை, பதவியை விட்டு ஓட வைத்த இயக்கம் இந்த இயக்கம் என்ற வரலாற்றை இன்றைய ஆளுங்கட்சியினர் மறந்துவிடக்கூடாது, புரிந்து கொள்ளவேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு மறுபடியும் பழைய கதை திரும்பி வருகிறது. பழைய கருப்பனாக இருந்தவர்களை மாற்றி, படிக்க வைத்து, நீதிக்கட்சிக் காலத்தில் தொடங்கிய புரட்சி, தொடர்ச்சியாக பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காமராசர் காலத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற கல்விப் புரட்சிக்கு இன்றைக்குத் தடை போட நினைக்கிறார்கள்.
அக்னிஹோத்திரம் இராமானுஜ தத்தாச்சாரியார்

இதோ என்னுடைய கைகளில் இருப்பது ‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற நூல். இதை எழுதியது தந்தை பெரியாரோ, நாங்களோ, கலைஞரோ அல்ல. இதை எழுதியது அக்னிஹோத்திரம் இராமானுஜ தத்தாச்சாரியார். 101 வயதுவரை வாழ்ந்தார். அவர் நக்கீரன் பத்திரிகையில் வாரம் தவறாமல் தொடர்ச்சியாக எழுதிய கட்டுரையின் தொகுப்புதான் இந்த நூல்.
கடைசி காலகட்டத்தில் உறுத்தல் உணர்வு ஏற்பட்டதால், இவ்வளவு நாள்களாக மக்களை ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்திருக்கிறதே ஒரு கூட்டம் - இறக்கும்பொழுதாவது உண்மையைச் சொல்லவேண்டும் என்கிற எண்ணத்தில் எழுதியதுதான் அந்த புத்தகம்.
சிறைச்சாலைக்குச் செல்வதென்றால்கூட, முன்ஜாமீன்கூட கேட்கமாட்டோம்

அதிலிருந்து ஒரு செய்தியை சொல்கிறேன். எங்கள்மீது கோபப்படுகிறவர்கள் கோபப்படுங்கள், ஆத்திரப்படுங்கள், திட்டுங்கள், அவதூறாகப் பேசுங்கள், வழக்குப் போடுங்கள் - அதனை சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் பெரியார் தொண்டர்கள், நாங்கள் வேறு எங்கும் போவதற்குக் கவலைப்படாதவர்கள். சிறைச்சாலைக்குச் செல் வதென்றால்கூட, முன்ஜாமீன்கூட கேட்கமாட்டோம்; ஜாமீனே கேட்கமாட்டோம், பிறகு என்ன முன்ஜாமீன். அதுவும் எங்களுக்கு மாற்று இடம்தானே தவிர வேறொன்றுமில்லை.
‘‘இந்து மதம் எங்கே போகிறது?''

‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' நூலில் அக்னிஹோத்திரம் இராமானுஜ தத்தாச்சாரியார் என்ன எழுதியிருக்கிறார் என்பதைப் பாருங்கள்:
‘‘ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?
நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றையெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக் கணிக்கப்பட்டது.
‘வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்’ என்கிற நிலை.
ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் கம்மி.வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான். ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள்'' என்கிறார் இராமானுஜ தாத்தாச்சாரியார்.
பெண்களை, ஆரியப் பெண்கள் உள்பட அவர்கள் ‘‘நமோ சூத்திரர்கள்'' என்றுதான் அழைக்கிறார்கள்.
அடுத்த வரிதான் மிகவும் முக்கியம். இன்றைக்கு ஏன் இந்தப் போராட்டம்? ஏன் இந்த இயக்கம்? மீண்டும் ஏன் பெரியார் தேவைப்படுகிறார்? எப்போதும் தேவைப்பட்ட தைவிட, ஏன் பெரியார்  இப்போது அதிகம் தேவைப்படுகிறார் என்பதற்கு இதுதான் அடையாளம்.
‘‘இந்து மதம் எங்கே செல்கிறது?'' என்ற நூலில் உள்ள வற்றைப் பார்ப்போம்:
ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள்.ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.
மனுஸ்மிருதியைக் கொண்டு வந்ததன் விளைவாகத்தான் என்ன நடந்தது? என்று சொல்கிறபொழுது இங்கே சொல்கிறார்.
பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை ‘மனு’ பிளவாக்கியது.
கூடவே, இவர்களைத் தாண்டி ‘சூத்திரர்கள்’ என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக் காரர்களாகவே ஆக்கியது மனு. பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு - சூத்திரனைப்பற்றி இப்படி எழுதியது.
யானைக்கு மதம் பிடிக்கும்;

எங்களுக்கு மதம் பிடிக்காது

நாங்கள் இதைச் சொல்லவில்லை, இராமானுஜ தத் தாச்சாரியார் சொல்கிறார்.
ஏன் இந்து மதத்தை மட்டும் பேசுகிறீர்களே என்று சொன்னால், எங்கே புண் இருக்கிறதோ, அங்கேதான் மருந்து போடவேண்டும்.
புண் இல்லாத இடத்தில் சொறிந்துவிடவேண்டும்; அந்த இடத்தில் கட்டுப் போடவேண்டும் என்று சொன்னால், என்ன அர்த்தம்?
எங்களுக்கு இந்த மதம் பிடிக்கும், அந்த மதம் பிடிக்காது என்றில்லை. யானைக்கு மதம் பிடிக்கும்; எங்களுக்கு மதம் பிடிக்காது.
மனுதர்மம் என்ன சொல்கிறது?

.“சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோபதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை” இப்படிப் போகிறது மனு.
வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கவேண்டும் என்றும் பிராமணர்கள் செய்த திட்டம் ‘நன்றாகவே’ வேலை செய்தது.
இன்றைக்கு வரையில் வேலை செய்துகொண்டிருக்கிறது. இப்பொழுது அதி நன்றாகவே வேலை செய்யக்கூடிய அளவிற்கு இருக்கிறது என்று சொன்னால், அதனுடைய விளைவு, இன்றைக்கு வேகமாகக் கொண்டு வந்து - அதையே இப்பொழுது ஆட்சியில் இருக்கின்ற ஆர்.எஸ்.எஸ்., அதனு டைய அரசியல் வடிவமான பா.ஜ.க. - அதனுடைய அடிமை கள், ஆட்சிகள் இருக்கின்றன. அதற்குத் தலையாட்டவேண்டிய ஆட்சிகள் இருந்தால், இருக்கலாம்; இல்லையானால், அவர்களை ஒழித்துவிடுவோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, கட்டை விரலை வாங்கிய துரோணாச்சாரிகள் கதை இருக்கிறதே அதுபோல, மிகப்பெரிய வாய்ப்பு.
சூத்திரன் என்றால் கவுரவப் பட்டமா?

இது ஆர்.எஸ்.எஸ். தலைவர் எழுதுகிறார். அது என்ன வென்று சொன்னால்,
வருண அமைப்பு
ஜாதி முறை
பெரியார் தொடங்கிய போராட்டம் என்ன? சூத்திரன் என்றால் கவுரவப் பட்டமா?
பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன். நம்முடைய பெண்கள் அத்துணைப் பேரும் தாசிகள், வைப்பாட்டிகள்.
இந்த இடத்தில் கடைசியாக அய்யா சொன்னார், எனக்கு வயதாகி விட்டது; இன்னும் எவ்வளவு நாள் இருப்பேன் என்று சொல்ல முடியாது. நான் போராட்டத்தை அறிவிக்கிறேன். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற போராட்டம்தான் அது.


உங்களையெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டு சாகிறேனே

என்ற வருத்தம்தான்!

நான் சாவதைப்பற்றி கவலைப்படவில்லை; என் றைக்கும் நான் தயாராக இருக்கிறேன். ஆனால், உங்களை யெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டு சாகிறேனே என்ற வருத்தம்தான் என்று சொன்ன ஒரே தலைவர் பெரியா ரைப் போன்று இந்த நாட்டில் வேறு யாராவது உண்டா?
ஜீவாத்மாக்கள், மகாத்மாக்கள், பரமாத்மாக்கள் எல்லோரும் வந்திருக்கிறார்களே, யாராவது மனிதத் தன்மையைப்பற்றி கவலைப்பட்டார்களா?
மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்று சொல்லக்கூடிய அந்த மனிதன், இவ்வளவுக் கொச்சைப் படுத்தப்பட்டு, ஆபாசப்படுத்தப்பட்டு, நம்முடைய தாய்மார்கள், நம்முடைய சகோதரிகள் காலங்காலமாக இந்த இழிவை சுமந்து கொண்டிருந்தார்கள் என்று சொன்னால், அந்த இழிவை எதிர்த்துப் போராடுவதற்கு இந்த இயக்கத்தைத் தவிர, தந்தை பெரியாரைத் தவிர வேறு விடை உண்டா? என்று தயவு செய்து எண்ணிப் பாருங்கள்.
பெரியாரை நீங்கள் வாசியுங்கள் என்று சொல்வதைவிட, பெரியாரை சுவாசியுங்கள்!

எனவேதான், அருள்கூர்ந்து வயதானவர்கள் எப்படியாவது போகட்டும்; இளைஞர்களே, இப்பொழுது நீங்கள் சரியான திசைக்கு வந்திருக்கிறீர்கள்.  மேலும் ஆழமாக பெரியாரை நீங்கள் வாசியுங்கள் என்று சொல்வதைவிட, பெரியாரை சுவாசியுங்கள். அதுதான் மிகவும் முக்கியம்.
பெரியார் உங்களுக்கு மூச்சுக் காற்றாக இருக்கவேண்டும்; பெரியாருக்காக அல்ல; உங்களுக்காக - உங்களுடைய எதிர்காலத்திற்காக. வருங்கால சந்ததியினருக்காக.
மருந்து சாப்பிடுகிறோமே எதற்காக? மருந்து வியாபாரம் ஆகவேண்டும் என்பதற்காகவா? மருந்து கடைக்காரர் வருத் தப்படுவார் என்பதற்காகவா? அல்லது டாக்டர் எழுதிக் கொடுத்துவிட்டார் என்பதற்காகவா? இல்லவே இல்லை. நம்முடைய நோயைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்ப தற்காகத்தான்.
சமுதாய நோயைத் தீர்ப்பதற்கு,

பெரியார் என்ற மாமருந்து தேவை!

எனவேதான், பெரியாருக்குக் கவலையில்லை. ஆனால், பெரியார் நமக்குத் தேவை என்று நினைக்கும்பொழுது, நம்முடைய சமுதாய நோயைத் தீர்ப்பதற்கு, பெரியார் என்ற மாமருந்தைத் தவிர வேறு மருந்து கிடையாது.
இன்றைக்கு வெளிப்படையாகவே சொல்கிறார்கள், ஜாதி யைப்பற்றி பேசும்போது, நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் என்று இராசா அவர்கள் வருத்தப்பட்டார்களே - வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.
ஏன் பெரியார் இன்னும் தேவைப்படுகிறார்?
ஏன் திராவிடர் கழகம் அழுத்தமாகத் தேவைப்படுகிறது?
தேர்தல் நேரத்தில் மக்கள் எப்படி இருப்பார்கள் என்பது வேறு செய்தி. அவர்களைப் பக்குவப்படுத்துவோம். இனிமேல் தமிழ்நாடு தனியாக அதனுடைய முத்திரையைக் காட்டுவது மட்டுமல்ல, தமிழ்நாட்டு வழியிலேயே இந்தியா எப்பொழுதும் நடந்துதான் வரும். அதற்கு முன்னோட்டமாக தமிழ்நாடு இருக்கும் - பெரியார் மண் இருக்கும் - திராவிட மண் இருக்கும்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கரின் ‘ஞானகங்கை!'

ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் எழுதிய புத்தகம் ‘ஞானகங்கை' - இதுதான் அவர்களுக்கு வேத புத்தகம் - வேத புத்தகத்தைவிட மிக முக்கியம்.
அந்த புத்தகத்தில் கோல்வால்கர் சொல்கிறார்,
‘‘ஞானகங்கையில், நம்முடைய சமுதாயத்தின் மற்றொரு விசேஷ அம்சம் நான்கு வருண அமைப்பாகும். இன்று அது ஜாதிவாதம் என்று கூறி, கேலி செய்யப்படுகிறது. வருண அமைப்பு என்று கூறுவதே கேவலமானது என்று நம் மக்கள் எண்ணுகின்றனர்.''
இந்த இயக்கம் எவ்வளவு பெரிய பிரச்சாரம் செய்திருக்கிறது என்பதன் தாக்கம்தான் அது.
எதிர் எதிர் இடையே இருக்கக்கூடிய கொள்கைகள். திராவிடம் - ஆரியம் என்பது இருக்கிறதே, அது ரத்தப் பரிசோதனையில் வருவதில்லை.
அனைவரும் உறவினர் என்பது திராவிடம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது திராவிடம்.
இன்னாருக்கு இன்னது என்று சொல்வது ஆரியம்.
மேலும் கோல்வால்கர் சொல்கிறார்:
‘‘இந்த நால் வருண அமைப்பில் உருவாகிய சமுக அமைப்பினையே, சமுக சமநீதிக்குப் புறம்பானது என்று தவறாக எண்ணுகின்றனர்.''
நால்வருணத்தினால்தானே துரோணாச்சாரியார், ஏகலை வனிடம் கட்டை விரலை வாங்கவேண்டியதாயிற்று.
நால்வருணத்தினாலேதானே, இராம ராஜ்ஜியத்தில் என்ன செய்தார்கள்?
சூத்திர சம்பூகன் தவம் செய்தான் என்று அவர்கள் கதைப் படி, நாங்கள் எழுதியதல்ல. இராமாயணத்தில் உத்திர காண்டத்தில் இருக்கின்ற பகுதி.
இராமராஜ்ஜியம் என்று சொல்கிறார்களே, ஒரு பார்ப்பன சிறுவன் இறந்துவிட்டான் என்றவுடன், இராமனிடம் கொண்டு போய், ‘‘இராமா, உன்னுடைய ராஜ்ஜியத்தில் அநீதி நடைபெறுகிறது!'' என்றார்கள்.
என்ன அதர்மம்? என்று இராமன் கேட்கிறான்.
இதோ என்னுடைய பிள்ளை இறந்து விட்டான்.
எதனால் இறந்து போனான்? என்று இராமன் கேட்க,
சூத்திரன் தவம் செய்கிறான், அதனால்தான் இறந்து போனான் என்று சொல்கிறார்கள்.
சூத்திரனுக்கு பிராமணனே மேலான தெய்வமாம்

மனுதர்மப்படி,
மூடனானாலும், ஞானியானாலும் சூத்திரனுக்கு பிராம ணனே மேலான தெய்வம். அவன் நேரிடையாக கடவுளை தொழுவதற்கு உரிமை கிடையாது.
ஆகவே, சூத்திரனான சம்பூகன் தவம் செய்ததால், தர்மம் கெட்டுவிட்டது; அதனால், என்னுடைய மகன் இறந்துவிட்டான் என்கிறார்கள்.
அதற்கு என்ன செய்யவேண்டும்? என்று இராமன் கேட்க,
அதர்மத்தை அழிக்கவேண்டும் என்று இவர்கள் சொல் கிறார்கள்.
உடனே இராமன் வாளை எடுத்துக்கொண்டு செல்கிறான்.
ஊருக்கு வெளியே சம்பூகன் தவம் செய்கிறான். தவம் செய்கிறான் என்றால், கண்களை மூடிக்கொண்டு யோசனை செய்துகொண்டிருக்கிறான். இல்லாத கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறான்; இல்லாத மோட்சத்திற்குப்  போகவேண்டும் என்று விரும்புகிறான்.
அங்கே சென்ற இராமன், விசாரணை ஏதுமின்றி, வாளை எடுத்து சம்பூகனின் தலையை வெட்டி விடுகிறான்.
உடனே இறந்துபோன பார்ப்பனச் சிறுவன் உயிர்ப் பெற்று எழுகிறான்.
அதர்மம் அங்கே வீழ்த்தப்படுகிறது - ஜாதி தர்மம் வருகிறது.
இதை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று நினைக் கிறார்கள். இன்றைக்கு அதுதான் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
தியாகராயர் நகரில் திடீர் பிள்ளையார்!

இந்த இடத்தில் அய்யா பேசுகிறார்,
தி.மு.க. ஆட்சி, அய்யா அன்றைக்கு உரையாற்றும்பொழுது கலைஞர் அவர்கள்தான் முதலமைச்சர்.
இங்கே திடீர் பிள்ளையாரை கொண்டு வந்து வைத்து விட்டார்கள்.
கே.எம்.சுப்பிரமணியம் என்ற பார்ப்பனர் கவுன்சிலராக இருந்தார். திடீர் பிள்ளையாரை வைத்தார்கள்.
இந்தப் பிள்ளையார் எப்படி வந்தது? என்று ஜெயேந்திர சரசுவதி அவர்களிடம் கேட்டார்கள்.
அவர் சொன்னார், தவறாக சொல்லக்கூடாது; அது சுயம்பு, தானே கிளம்பும் என்றார்.
அங்கே கூட்டம் கூட ஆரம்பித்து, நிறைய பேர் உண்டி யலில் காசு போட ஆரம்பித்துவிட்டார்கள்.
ஒரே ஒரு டெவலப் என்னவென்றால், இதுவரையில் பார்ப்பான் ஏமாற்றினான்; இப்பொழுது சிவகங்கையில் நம்மாளே ஏமாற்ற ஆரம்பித்துவிட்டார், ஜீவசமாதி ஆகப் போகிறேன் என்று.
உடனே, அங்கே கூட்டம் கூடிவிட்டது - ஏன் கூட்டம் சேராது; சென்னையில் உள்ள கூவம் நதியை யாராவது பார்க்கட்டும், உடனே கூட்டம் சேர்ந்து அனைவரும் எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.
ஆகவே, இங்கே பிள்ளையாரை வைத்து, உண்டியல் வைத்து, மாலை நேரத்தில் உண்டியலில் இருந்த காசை எடுத்துக்கொண்டு போனார்கள்.
முதலமைச்சர் கலைஞரின் அறிவிப்பு!

முதலமைச்சர் கலைஞர் என்ன செய்தார் தெரியுமா? இதுபற்றிய தகவல்களை அறிக்கையாக வாங்கி, ‘‘அறநிலையப் பாதுகாப்புத் துறை அந்த இடத்தை எடுத்துக்கொள்ளும்; அந்த உண்டியல் அறநிலையப் பாதுகாப்புத் துறைக்குப் போகும்'' என்று சொன்னார்.
பிறகு உண்டியல் வைப்பதை நிறுத்திவிட்டார்கள்.
அய்யா அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தவுடன், அதற்கு முதல் நாளே பிள்ளையார் காணாமல் போய்விட்டார், எடுத்துவிட்டார்கள்.
பிறகு குமுதம் பத்திரிகையில் அதுபற்றி ஒரு செய்தி வந்தது.
தலைமைக் காவலராக இருந்த செல்வராஜ் என்பவர் 84 ரூபாய்க்கு பிள்ளையார் சிலையை வாங்கி வந்து வைத்தார் என்ற தகவல் வெளியானது.
வழக்குரைஞர்களுக்குமேல்

சட்ட அறிவுள்ளவர்கள் எங்கள் தோழர்கள்!

நாங்கள் ஆதாரத்தோடுதான் சொல்கிறோம். சந்தேகம் இருந்தால், கேளுங்கள். வழக்குத் தொடுப்போம் என்று சொன்னால், உங்களுடைய வழக்கை தூக்கி குப்பையில் போடுங்கள். நீதிமன்றத்தை நாங்கள் சந்திக்கக் கூடியவர்கள். நாங்கள் வழக்குரைஞர்; வழக்குரைஞரைத் தேடவேண்டிய அவசியமில்லை. எங்கள் ஆள் ஒவ்வொருவரும் ‘விடுதலை' படிக்கக்கூடியவர்கள். அவர்கள் வழக்குரைஞர்களுக்குமேல் சட்ட அறிவுள்ளவர்கள். ஆகையால், வழக்குகளைப்பற்றி கவலைப்படவேண்டிய அவசியமில்லை.
அன்றைக்கு திடீர் பிள்ளையார்; இன்றைக்கு அத்திவரதர் வருகிறார்.
ஒரே ஒரு டெவலப் என்னவென்றால், முன்பெல்லாம் அத்திவரதர் நின்றுகொண்டே இருந்தார்; இப்பொழுது படுத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால், உட்கார வைக்க முடியாது; உட்கார வைத்துக் காட்டட்டும்.
இன்றைக்குத் திருட்டுத்தனமாக மறைவாகப் பேசுகிற பேச்சை

நாளைக்கு வெளிப்படையாகப் பேசுவான்

அய்யா இந்த இடத்தில் பேசும்போது சொல்கிறார்,
‘‘எல்லாக் கட்சிக்காரர்களும் ஒன்றாகச் சேர்ந்து, இன்றைக்கு இருக்கின்ற தி.மு.க. ஆட்சியை ஒழிக்கவேண்டும் என்கிறார்கள். ஒழித்தால், ஒழித்துவிட்டுப் போங்கள், எனக்கு ஒன்றும் கவலையில்லை.
தி.மு.க. ஆட்சிப் போய்விட்டால், கலைஞர் ஆட்சிப் போய்விட்டால், இன்றைக்குத் திருட்டுத்தனமாக மறைவாகப் பேசுகிற பேச்சை நாளைக்கு வெளிப்படையாகப் பேசுவான்'' என்றார்.
எவ்வளவு பெரிய தீர்க்கதரிசனம், எவ்வளவு பெரிய தொலைநோக்கு. அன்றைக்கு அய்யா சொல்லியபடி இன் றைக்கு நடக்கிறதா? இல்லையா?
உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எத்தனை பேர் நீதிபதிகளாக இருக்கிறார்கள்?

நீதிபதிகளாக இருக்கின்ற இரண்டு பேர், கொச்சியில் நடைபெறுகின்ற பார்ப்பன மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள். பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உயர்ந்த அறிவுள்ள வர்கள் என்று பேசுகிறார்கள்.
சபாநாயகராக இருந்த ஓம்பிர்லா என்பவர், அவர்களைப் போல அறிவாளிகள் உலகத்தில் கிடையாது என்று பேசுகிறார்.
அதேபோன்று, நான்கு பேர் நீதிபதிகளாக உச்சநீதிமன் றத்திற்கு நியமிக்கவேண்டும் என்ற நிலை வரும்பொழுது, அந்த நான்கு பேரும் பார்ப்பனர்களைத் தவிர வேறு கிடையாது.
உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எத்தனை பேர் நீதிபதிகளாக இருக்கிறார்கள்? யாருக்குமே தகுதி இல்லையா? தாழ்த்தப்பட்ட நீதிபதிகளே கிடையாதா? பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையா?
சமூகநீதி குழிதோண்டி புதைக்கப்படுகிறது, பகிரங்கமாக - வெளிப்படையாகவே செய்கிறார்கள்.
பார்ப்பனர்களை உச்சநீதிமன்ற நீதிபதிகளாகப் போடுவது கூட பரவாயில்லை. அவர்களுக்கு சீனியாரிட்டி இருக்கிறது என்று சொன்னாலும் பரவாயில்லை - அது சமூகநீதிக்கு விரோதமாக இருந்தாலும், சட்டப்படி செய்கிறார்கள் என்று சமாதானம் சொல்வதற்கு வாய்ப்பில்லை.
சீனியாரிட்டிப்படி

29 ஆவது இடத்தில் இருக்கிறார்!

நம்மாள் சீனியாரிட்டிப்படி 29 ஆவது இடத்தில் இருக்கிறார்; அவரை நியமிக்காமல், 45 ஆவது இடத்தில் இருப்பவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கிறார்கள். அவருக்கு முதுகில் பூணூல் போட்டிருக்கிறது.
தனிப்பட்ட முறையில் அவரைப்பற்றி நான் எதுவும் சொல்லமாட்டேன். மற்ற பார்ப்பனர்களைப் பார்க்கும்பொழுது, கொஞ்சம் பரவாயில்லை இவர் என்று சொல்லலாம். அவரை நியமித்ததைப்பற்றி எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. எங்கள் ஆள் சீனியாரிட்டிப்படி முன்னாலே இருக்கிறாரே, அவருக்குக் கொடுத்துவிட்டுத்தானே, பின் வரிசையில் இருப்பவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
இதைக் கேட்பதற்கு நாதியுண்டா தோழர்களே, நினைத்துப் பாருங்கள்.
இப்படியே போனால், முழுக்க முழுக்க என்னாகும்? எல்லாமே பார்ப்பன மயம்; எல்லாமே வருணாசிரம தர்மம் - மனுதர்ம ஆட்சி என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு நடந்துகொண்டிருக்கிறது என்றால், இதற்கெல்லாம் எதிர் சவால் விட்டு இதை நடத்தக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றால், அது தந்தை பெரியார் என்ற தத்துவத்தின் மூலமாகத்தான் இதற்கு விடை காண முடியும்.
நாடாளுமன்றத்திலும் ‘பெரியார் வாழ்க!'
இங்கே இராசா சொன்னாரே, நாடாளுமன்றத்தில் அவர்கள் ஜெய்ராம் என்று சொன்னால், நம்மாட்கள் ‘பெரியார் வாழ்க!' என்று சொல்வதுதானே இப்பொழுது வேலை செய்கிறது.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே குடும்ப அட்டை - இதற்கு என்ன அர்த்தம்? பல கூட்டங்களிலும் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறேன், இந்தக் கூட்டத்திலும் கேட்கிறேன்,
ஒரே ஜாதி என்று ஏன் சொல்லமாட்டேன் என்கிறீர்கள்?

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே குடும்ப அட்டை என்று சொல்கிறீர்களே, ஏன் ஒரே ஜாதி என்று சொல்லமாட்டேன் என்கிறீர்கள். ஒரே ஜாதி என்று ஏன் சட்டம் போடக்கூடாது? அப்படி சட்டம் கொண்டு வந்தால், உங்களுக்கு நாங்களே மாலை போடுவோமே!
சொல்ல முடியுமா உங்களால், சொல்ல முடியாது. ஏனென்றால், மனுதர்மம் உங்களை சுற்றிக்கொண்டிருக்கிறது.
ஆகவே, இந்த நிலையில், ஒரே மொழி என்று சொல் கிறீர்களே, இது யாருடைய விளையாட்டு. இது பண்பாட்டுப் படையெடுப்பு அல்லவா!
அண்ணா அவர்கள், இருமொழிக் கொள்கையைக் கொண்டு வந்துவிட்டு சொன்னார். தாய்த் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தபொழுது அண்ணா அவர்கள் சொன்னார்கள், அதை மட்டும் நினைவூட்டக் கடமைப்பட்டு இருக்கிறேன்.
அண்ணாவினுன் முழக்கம் என் காதுகளில் இன்றைக்கும் ரீங்காரமிடுகிறது!

கலைவாணர் அரங்கத்திற்குப் பக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அண்ணா அவர்கள் பேசிய அந்தப் பேச்சு இன்னமும் என்னுடைய செவிகளில் அது ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது; ஒலித்துக்கொண்டே இருக்கிறது - மறக்க முடியாத அந்த சொற்கள்.
அண்ணாவினுடைய முழக்கம்:
இங்கே இருக்கிறவர்கள், நான் முப்பெரும் சாதனைகளை இந்த ஓராண்டிலே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, என்னுடைய ஆட்சி செய்திருக்கிறது.
1. சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட வடிவம்
2. தாய்த் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர்
3. இருமொழிக் கொள்கை - தமிழ், ஆங்கிலம்
இதையெல்லாம் மாற்றவேண்டும் என்று இப்பொழுது துடிப்பதாக நான் கேள்விப்படுகிறேன்.
அவ்வளவு காலமும் அண்ணாத்துரைதான்

இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்

சரி, நீங்கள் எங்களைப் பதவியைவிட்டு விலக்கலாம்; அது முடியுமா? என்று நான் சவால் விட மாட்டேன்; முடியும். ஆனால், எங்களை நீக்கிவிட்டு நீங்கள் வந்து உட்கார்ந்தால், இதையெல்லாம் நாம் இல்லாதபோது, அவர்கள் அல்லவா செய்துவிட்டார்கள். ஆகவே, அதையெல்லாம் மாற்றலாம் என்று நினைத்தால், அடுத்த நிமிடம் மாற்றினால் என்னாகும் நம்முடைய நிலை, நாட்டினுடைய நிலை எப்படிப்பட்ட எதிர்ப்புக் கிளம்பும் என்று நினைக்கும்பொழுது, ஒரு அச்சம் உங்களை உலுக்கும் - அந்த அச்சம் எவ்வளவு காலம் உங்களிடம் இருக்கிறதோ, அவ்வளவு காலமும் அண்ணாத் துரைதான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்'' என்று சொன்னார்.
அண்ணா அவர்கள் இறுதி மூச்சு அடங்கும்வரை பகுத்தறிவு, இனநலம், தந்தை பெரியார் கொள்கைகளில் உறுதியோடுதான் இருந்தார். அய்யா - அண்ணா கொள்கை களைக் கட்டிக் காத்து, அவர்கள்வழியில் நடப்போம் என்று உறுதியேற்போம்!
தூத்துக்குடி துறைமுகத் திட்டம் வெற்றிகரமாக முடிந்த தற்காக மத்திய அமைச்சர் வி.கே.ஆர்.வி.ராவ் காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலுக்கு அழைத்தபோதுகூட, நான் கோவிலுக்கு வருவதில்லை என்று சொன்னவர் முதலமைச்சர் அறிஞர் அண்ணா என்பதை மறக்கவேண்டாம்.
தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய அளவிற்கு இருக்கிறது

இதைவிட மிகப்பெரிய அரசியல் விளக்கம் வேறு கிடை யாது. அந்தக் காலகட்டம் இன்றைக்கும் இருக்கிறது. அதனு டைய விளைவுதான் நண்பர்களே, தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய அளவிற்கு இருக்கிறது.
ஒருமொழிதான் அடையாளம் என்று நீங்கள் சொல்வது இருக்கிறதே, நிச்சயமாக வீண்வம்பை விலைக்கு வாங்கு கிறீர்கள்.
நீங்கள் விதையுங்கள் - அதனுடைய விளைவுகளை நீங்களே அறுவடை செய்யுங்கள்!

இன்றைக்குக்கூட செய்தியாளர்கள் கேட்டபொழுது ஒரு நல்ல உதாரணத்தை சொன்னேன்,
‘‘காற்றை விதைத்து புயலை அறுவடை செய்ய ஆயத்த மாகிறார்கள்'' என்று.
விதைக்கட்டும். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்மூல மாகத்தான் ஒரு பெரிய ஆட்சியே இங்கே வந்தது. அந்தக் காலத்திலும் சரி - இயக்கமே வந்தது.
அதுபோலத்தான், மொழியை, பண்பாட்டை எதிர்த்து நீங்கள் வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டிருந்தால், வாருங்கள், நீங்கள் விதையுங்கள் - அதனுடைய விளைவுகளை நீங்களே அறுவடை செய்யப் போகிறீர்கள்.
உரிமைப் போருக்கு என்றைக்கும்

துணை நிற்கும்

அதனுடைய விளைவுதான், பெரியார் என்ற மாபெரும் தத்துவம். அந்த மாபெரும் எதிர்நீச்சல் தத்துவம். அந்த அறிவாயுதம், இந்த உரிமைப் போருக்கு என்றைக்கும் துணை நிற்கும்.
அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் பெரியார் தேவை!

பெரியார் அன்றைக்கும் தேவை!
இன்றைக்கும் தேவை!
நாளைக்கும் தேவை!
எப்பொழுதும் தேவை!
எங்கும் தேவை!
உலகம் உணர்ந்திருக்கிறது!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
 - விடுதலை நாளேடு, 19 .9 .19

புதன், 18 செப்டம்பர், 2019

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் : தலைவர்கள் மரியாதை

தந்தை பெரியார் நினைவிடத்திற்கு அணிவகுத்து வந்த கழகத் தோழர்கள் (17.9.2019)

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் : தலைவர்கள் மரியாதை
திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் தந்தை பெரியார் சிலைக்கு   மாலை அணிவித்து மரியாதை
(முதல் படம்)
அமெரிக்காவில் நடைபெறவிருக்கும்பன்னாட்டு பெரியார் மனிதநேய சுயமரியாதை மாநாடு அழைப்பிதழை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிஅவர்கள் சி.பி.எம். மாநிலசெயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரிடம் வழங்கினார். (சென்னை - 17.9.2019)
தந்தை பெரியார் நினைவிடத்தில்
தமிழர் தலைவர் தலைமையில்
உறுதிமொழி ஏற்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தந்தை பெரியார் நினைவிடத்தில்  மரியாதை
திராவிடன் நிதியின் சார்பில் தந்தை பெரியார் நினைவிடத்தில்  மரியாதை
மாணவர் அணியின் சார்பில்  அன்னை மணியம்மையார்  நினைவிடத்தில்  மரியாதை
மகளிர் பாசறையின் சார்பில்  தந்தை பெரியார் நினைவிடத்தில்  மரியாதை
சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடத்தில் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மரியாதை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் தோழர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை
ஆந்திரா, தெலங்கானா மாநில தோழர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் உணர்ச்சிப் பாடல்கள் பாடி மரியாதை

- விடுதலை நாளேடு, 17. 9 .19