வியாழன், 17 ஏப்ரல், 2025

ஒன்றிய அரசின் மும்மொழித் திணிப்பை கண்டித்தும், கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் மாற்றிட வலியுறுத்தியும் மயிலாப்பூரில் நடைபெற்ற கழகப் பொதுக் கூட்டம்

 

விடுதலை நாளேடு

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ஒன்றிய அரசின் மும்மொழித் திணிப்பை கண்டித்தும், கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் மாற்றிட வலியுறுத்தியும் நடைபெற்ற கழகப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு அவர்களுக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் பயனாடை அணிவித்தார். தி.மு.க. தென் மேற்கு மாவட்ட செயலாளரும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை த. வேலு சிறப்புரையாற்றினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் மதிவதினி, கழகப் பேச்சாளர் தே. நர்மதா, மயிலை கிழக்கு பகுதி செயலாளர் எஸ். முரளி, சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ரேவதி, இந்திய கம்யூனிஸ்ட் எஸ்.கே.சிவா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மய்யக் குழு உறுப்பினர் பி. சாரநாத், தி.மு.க. வட்ட செயலாளர் அ. தவநேசன், மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, மாநில ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியார் யுவராஜ், மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன் ஆகியோர் உள்ளனர். (மயிலை, 3.4.2025)

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருக! மயிலாப்பூரில் கழகப் பொதுக்கூட்டம்


திராவிடர் கழகம்

மயிலாப்பூர், ஏப். 17- தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் இளைஞர் அணி சார்பில் 03.04.2025 அன்று மாலை 6.30 மணி அளவில் மயிலாப்பூர், டாக்டர் அம்பேத்கர் பாலம் அருகில், மாவட்ட இளைஞர் அணி செயலாளர், பெரியார் யுவராஜ் தலைமையில் ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை திணிப்பை கண்டித்து, கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் மாற்றிட வலியுறுத்தி மாபெரும் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், மாவட்டத் துணைச் செயலாளர் கரு.அண்ணாமலை, மாவட்ட இளைஞரணி தலைவர் ந.மணிதுரை ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

மாவட்டத் துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன் தொடக்க உரையாற்றினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மய்யக் குழு மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் வி. சாரநாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர்
எஸ்.கே.சிவா, கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றினர்.
மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரை யாற்றினார். கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, கழக பேச்சாளர் தே.நர்மதா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
துணை பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றும் போது; இந்த மயிலாப்பூர் பகுதி சிறப்பு வாய்ந்த பகுதியாகும். இங்கேதான் இரண்டு வகையான மக்கள் குடி இருக்கிறார்கள். இங்கே இருக்கக்கூடிய டீகடை வைத்திருப்பவர்கள், மளிகைக்கடை வைத்திருப்பவர்கள், காய்கறி கடை வைத்திருப்பவர்கள், தள்ளுவண்டி வைத்திருப்பவர்களில் அனைவரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களே ஆகும். டீக்கடை நடத்தும், மளிகைக்கடை நடத்தும், தள்ளு வண்டியிலே காய்கறி விற்பனை செய்யும், ஆட்டோ ஓட்டும் எந்த நபராவது பார்ப்பனர்களாக இருக் கிறார்களா? இருக்க மாட்டார்கள்! அவர்கள் உயர் பதவிகளிலே தான் இருப்பார்கள்.

திராவிடர் கழகம்

நாம் கேட்கிறோமா?
ஒன்றிய அரசே பட்டியல் வெளி யிட்டுள்ளது. அதில் நூற்றுக்கு மூன்று பேராக இருக்கக்கூடிய பார்ப்பனர்கள், நூற்றுக்கு 97 விழுக்காடு உயர் பதவி களில் இருக்கிறார்கள். இதை யார் கேட்க வேண்டும்? தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவரான நாம்தான் கேட்க வேண்டும். ஆனால் நாம் கேட்கிறோமா?
தந்தை பெரியார் ஒருவர் தான் போர்க் குரலை உயர்த்தினார். எந்த உயர் பதவிகளையும் வகிக்காமல் சாதனைகளை செய்து காட்டினார்.
அன்று கல்வி ஒரு சிலருக்கு மட்டுமாகவே, அதுவும் பார்ப்பனர்களுக்கு மட்டுமாகவே இருந்தது. கிறித்தவ மதம் கல்வியில் ஒரு மாற்றத்தை உண்டாக்கியது.
தந்தை பெரியாரின் பகுத்தறிவு பரப்புரையின் காரணமாக மக்கள் விழிப்படைந்து கல்வியில் பெரும் முன் னேற்றத்தைக் கண்டு சமூக தர நிலையை பெற்றனர்.

குலக்கல்வித் திட்டம் விரட்டப்பட்டது
தந்தை பெரியார் என்ன செய்து விட்டார் என்று சிலர் கேட்கிறார்கள்;
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியில் முன்னேறுவதை தடுப்ப தற்காக அப்பொழுது முதலமைச்சராக இருந்த இராஜகோபாலாச்சாரியார் குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்தார். தந்தை பெரியார் போராட்டங்களை முன்னெடுத்து குலக் கல்வி திட்டத்தை விரட்டியடித்தார்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோ ரின் கல்வி வேலைவாய்ப்புக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை தடை செய்த போது; தந்தை பெரியார் வெகுண்டெழுந்து போராட்டங்களை நடத்தி, இந்திய அரசமைப்புச் சட்டத் தையே முதல் முதலாக திருத்த வைத்தவர் தந்தை பெரியாரும்,திராவிடர் கழகமும்தான்.
69 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆபத்து வந்தபோது, பார்ப்பனர்களான பிரதமர், குடியரசுத் தலைவர், முதலமைச்சர் ஆகியோரைக் கொண்டே சட்டத்தை திருத்த வைத்து பாதுகாப்பைப் பெற்று தந்தது திராவிடர் கழகம்! தமிழர் தலைவர் ஆசிரியர்! யாரோ ஒருவர் மட்டுமே படித்துக் கொண்டிருந்த போது; அதாவது பார்ப்பனர்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்தபோது; எல்லா மக்களும் படிக்க வேண்டும் என்று போராடியது தான் திராவிடர் கழகம் – பெரியார்!
தமிழர்கள் படிக்க கூடாது என்பதற் காகவே திட்டமிட்டு அன்றைய முதலமைச்சர் இராஜகோபாலாச்சாரியார் குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்தார்; தந்தை பெரியார் போராடியதன் பயனாக இராஜகோபாலாச்சரியை ஒடவிட்டு, குலக்கல்வியை விரட்டி அடித்து அனைவரும் படிக்க வழி வகுத்தது திராவிடர் கழகம்!’நான் தமிழை ஆதரிப்பதற்கு காரணம், தமிழர்களின் முற்போக்குக்கு தமிழ் பயன்படுவதால் தான்’ என்றார் பெரியார்.

உயர்கல்வியில் முதலிடம்
ஆங்கிலம், ஆங்கிலேயர்களின் மொழி; ஆனால் ஆங்கிலம் நம்மை அந்நியப்படுத்திய மொழி அல்ல. ஹிந்தியும், சமஸ்கிருதமும் தான் நம்மை அடிமைப்படுத்தியது, அந்நிய படுத்தியது.
தமிழையும் ஆங்கிலத்தையும் மட்டுமே படித்த தமிழ்நாடு எந்த வகையில் தாழ்ந்து போனது! இந்தியாவிலேயே தமிழ்நாடு தானே, உயர்கல்வியில் முதல் இடத்தில் உள்ளது. இதை ஒன்றிய அரசே பட்டியலிட்டு கூறியுள்ளதே!
இன்று வக்பு திருத்த சட்டம் மூலம் இசுலாமியர்களிடம் கை வைத்திருக்கிறார்கள். நாளை கிறித்தவர்கள் மீது கை வைப்பார்கள் அதற்கு அடுத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் மீது கை வைப்பார்கள். ஆகையால் அனைவரும் விழிப்புடன் இருந்து பிஜேபி யை எதிர்க்க வேண்டும். வலிமை வாய்ந்த திராவிடர் கழகம் சொல்கிறது; ஒத்திசைவு பட்டியலுக்கு எடுத்துச் சென்ற கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.

ஒழிக்கும் வரை ஓய்வில்லை
திராவிடர் கழகத்தையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அம்பேத்கர் இயக்கங்களையும், பொதுவுடைமை இயக்கத்தையும் நசுக்க நினைத்தால், உங்களை ஒழிக்கும் வரை ஓய மாட்டோம்!
நீட் தேர்வை தீவிரமாக எதிர்த்து போராடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும்,திராவிட மாடல் அரசையும் வெகுவாக பாராட்டுகிறோம்’ என்று கூறி எழுச்சியுரையாற்றி முடித்தார்.

பங்கேற்றோர்
மாமன்ற திமுக உறுப்பினர் அ.ரேவதி, மயிலாப்பூர் கிழக்கு பகுதி திமுக செயலாளர் எஸ்.முரளி, மயிலாப்பூர் மேற்கு பகுதி திமுக செயலாளர், நந்தனம் மதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் கி.குமரப்பா, மண்டல செயலாளர் ரூதர்,கார்த்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் து.கா. பகலவன் ஆகியோர் பங்கேற்றனர்.
125ஆவது வட்ட திமுக செயலாளர் அ.தவநேசன் நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
சா.தாமோதரன், ச.மாரியப்பன், இராயப்பேட்டை கோ.அரிஹரன், ஈ.குமார், ச.மகேந்திரன், அய்ஸ் அவுஸ் அன்பு, அ.அன்பரசன், ச.துணைவேந்தன், ச.சந்தோஷ், வி.வளர்மதி, ஜெ. சொப்பன சுந்தரி, க.விசயராசா, பி.அஜந்தா, மு.பவானி, மு.பாரதி, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி,ஜெயசங்கரி, பெரியார் மணிமொழியன், டைலர் கண்ணன், உதயா, மயிலாப்பூர் பாலு, கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, வே.பாண்டு, க. தமிழ்ச் செல்வன், சு.மோகன்ராஜ், சோ. சுரேஷ், வை.கலையரசன், மு.பசும்பொன், மு.செல்வி, செ.பெ. தொண்டறம், பெரியார் மாணாக்கன், உடுமலை வடிவேல், சு.அன்புச்செல்வன், பா.சிவகுமார், ச.தாஸ், சி.சண்முகம், சி.மெர்சி ஆஞ்சலாமேரி, சு.திலீபன், சோ.பாலு, அ.நாகராஜன், பரணி, கோ.தர்மன்,
ந. அய்யனார், ஆவடி நாகராசன், மேனாள் மாமன்ற உறுப்பினர் மு. தம்பிதுரை, ஆர். கிருஷ்ணவேணி, வி. சவுமியா, எ.லலிதா, ஜி.சோமு,ஆர். ஞானபிரபு, கே. சுகுமார், எ.குமாரி, தெ.கோ. வேலன், எம்.புகழேந்தி, கே. நித்தியானந்தம்,
கே.பாஷா, அ.மாதன்குமார், ம.நவந்துன், விசு, ஜி.சண்முகம், சி.தங்கசாமி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஹிந்தி திணிப்பு, மும்மொழித்திணிப்பு மற்றும் கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதற்கான விளக்கங்களை செவிமடுத்து எழுச்சியுடன் சென்றனர். முன்னதாக அறிவுமானனின் சிறப் பானதொரு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து நன்றியுரையாற்றினார்.
ஆங்காங்கே நெகிழித்திரைகளும், பரவலாக கழகக்கொடிகளும் நடப் பட்டிருந்தன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி ஆதலால் பயணிப்போர் செவிமடுத்துச் சென்றனர்.


-பொதுக்கூட்டம்,03.04.2025,மாலை 6.00 மணி, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர்.

திங்கள், 14 ஏப்ரல், 2025

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் உறுதிமொழி இது! தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை

 

விடுதலை நாளேடு
இரங்கல் அறிக்கை

அண்ணல் அம்பேத்கரை அணைத்து அழிக்கப் பார்க்கிறார்கள்;
நாம் எச்சரிக்கையாக இருந்து அதனை முறியடிப்போம்!

புத்த மார்க்கத்தை அணைத்து அழித்ததுபோல, அண்ணல் அம்பேத்கரையும் ஆரிய சக்திகள் அணைத்து அழிக்கப் பார்க்கின்றன. எச்சரிக்கையாக இருந்து அதனை முறியடிப்போம் – இதுவே, அவரின் பிறந்த நாளில் நாம் எடுக்கும் உறுதிமொழி என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

உலகத் தலைவர் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (14.4.2025).

உலகமெங்கும் உள்ள சமத்துவ விரும்பிகளும், சமூகநீதிப் போராளிகளும் தங்களது வழிகாட்டிகளாக தந்தை பெரியார், ‘பாபா சாகேப்’ அம்பேத்கரை ஏற்று, இன்றைய உரிமைப் போராட்டங்களுக்கு அவர்க ளையே வலிமைமிக்க பேராயுதங்களாக, போர்க் கருவிகளாகக் கொண்டு களப் பணிகளை மிகுந்த உற்சாகத்துடன் நடத்தி மகிழ்கிறார்கள்!

காரணம், பல்லாயிரம் ஆண்டு பழைமையான ஸநாதனத்தினை எதிர்த்து, சமத்துவ, சகோதரத்துவ, சுதந்திர அறிவுள்ள மக்கள் சமூகத்தினை ஒருங்கிணைக்க இவ்விரு புரட்சியாளர்களை விட்டால், விடியலுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் (மகளிர் உள்பட) உரிமைக்கு வேறு யாரும் கிடைக்கவே மாட்டார்கள் என்பது கல்லுப் போன்ற உண்மையாகும்!

பவுத்தத்தையே அணைத்து
அழித்தவர்கள் எச்சரிக்கை!

புரட்சியாளர் அம்பேத்கரை எதிர்த்து அழிக்க முடியாத காரணத்தால், ஆரியம் அதற்கே உரிய சூழ்ச்சித் திட்டமாகிய அணைத்து, புகழ்ந்து அழித்து விட ஆயத்தமாகி நிற்கும் பேரபாயம் நம்முன்னே உள்ளது!

எதிரிகளின் புகழ் வார்த்தைகள் – பாராட்டுரைகளை அம்பேத்கரின் உண்மைச் சீடர்கள் நம்பினால், இறுதியில் ஏமாற்றம்தான் மிஞ்சும்; தலைசிறந்த ஒழுக்க அறிவு மார்க்கமான பவுத்தத்தினை அணைத்து அழித்த வரலாற்றை – இந்திய மண்ணிலிருந்து விரட்டிய கொடுமையை – அதனை எவரே மறக்க முடியும்?

எனவே, ‘பாராட்டுகிறவர்கள்’ யார் என்பதை அறிந்து, அவர்களின் பாசாங்குத்தனத்தினைப் புரிந்து அம்பேத்கரை பரப்புவதைவிட முக்கியம் – தத்துவம், கொள்கை, லட்சிய ரீதியாக பாதுகாப்பதே முக்கியம்! வெகுமுக்கியம்!!

அண்ணலின் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்தவர் நமது முதலமைச்சர்!

‘திராவிட மாடல்’ அரசின் ஒப்பற்ற நமது முதல மைச்சர், அம்பேத்கரின் பிறந்த நாளை ‘‘சமத்துவ நாளாக‘‘ அறிவித்து, உறுதிமொழி ஏற்கச் செய்துள்ள சாதனைக்கு – வரலாறு அவருக்கும், அவரது சிறப்புமிகு ஆட்சிக்கும் என்றென்றும் வாழ்த்துக் கூறும் என்பது நிச்சயம் – காரணம், அது ‘திராவிட ஆட்சியின் லட்சியம்’ அல்லவா! திராவிடர் இயக்க வரலாற்றில் இது ஒரு மைல்கல்!!

இருவரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தானே!!!

வாழ்க அம்பேத்கர்! வாழ்க பெரியார்!

 

 

       கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
14.4.2025   

அண்ணல் அம்பேத்கரின் 135ஆவது ஆண்டு பிறந்த நாள் தமிழர் தலைவர் தலைமையில் சிலைக்கு மாலை – உறுதிமொழி ஏற்பு

சனி, 5 ஏப்ரல், 2025

இராஜா அண்ணாமலைபுரத்தில் தமிழ்நாடு அரசாணைக்கு எதிராக கட்டப்பட்டுள்ள கோவிலை இடித்து அப்புறப்படுத்தக் கோரி புகார் மனு!

தமிழ்நாடு அரசாணைக்கு எதிராக கட்டப்பட்டுள்ள கோவிலை இடித்து அப்புறப்படுத்தக் கோரி புகார் மனு!

ஞாயிறு மலர், தமிழ்நாடு
சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த இராஜா அண்ணாமலைபுரம் முதன்மை சாலையில் அமைந்துள்ள ‘தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை நிலைய வளா’கத்திற்குள் மதச்சார்பின்மைக்கு எதிராகவும், சட்ட விரோதமாகவும், தமிழ்நாடு அரசின் அரசாணையை மதிக்காமலும் இந்து மத கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இக் கோவிலை இடித்து அப்புறப்படுத்தக் கோரி, தென் சென்னை மாவட்ட கழக இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து 28.03.2025ஆம் நாள் சென்னை மாநகராட்சிக்கு இணைய வழியில் (ஆன் லைனில்) புகார் அளித்துள்ளார்.
இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 23 மார்ச், 2025

துண்டறிக்கைக் கொடுத்தவர் துணைவர் ஆனார்!-வி.சி.வில்வம் - செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அவர்களிடம் நேர்காணல்

 

இயக்க மகளிர் சந்திப்பு (53) துண்டறிக்கைக் கொடுத்தவர் துணைவர் ஆனார்!-வி.சி.வில்வம்

விடுதலை நாளேடு
கட்டுரை

துண்டறிக்கைக் கொடுத்தவர் துணைவர் ஆனாரா? அது என்ன கதை?

அப்போது காயிதே மில்லத் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்துக் கொண்டிருந்தேன். மறைமலை இலக்குவனார் அவர்களின் வாழ்விணையர் தான், எனக்குப் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தார். ஒருநாள் கல்லூரி முடித்து வெளியே வரும்போது, ஒருவர் துண்டறிக்கைக் கொடுத்துக் கொண்டிருந்தார். வாங்கிப் படித்தால், அதில் பெரியார் கருத்துகள் இருந்தது. உடனே அது தொடர்பாய் அந்தத் தோழரிடம் பேசினேன். பெரியார் கருத்துகளை நேரடியாக அதுவரை அறிந்ததில்லை. எனினும் எனது தந்தையார் எம்.எஸ்.ஆறுமுகம் வள்ளலார் கொள்கையில் தீவிரமாக இயங்கியவர். மேடைகளிலும் அதுதொடர்பாய் பேசக் கூடியவர்.

எனவே எங்கள் வீட்டிலும் மூடநம்பிக்கைக் கருத்துகளோ, சிலை வழிபாட்டு முறைகளோ இருந்ததில்லை. ஆதலால் பெரியார் கருத்துகளைப் படித்ததும் சீக்கிரம் பிடித்துப் போனது. எனக்குத் துண்டறிக்கை வழங்கிய அந்தத் தோழரின் இயற்பெயர் மனோகரன், சைதை தென்றல் என்று இயக்கத்தில் அழைப்பார்கள். அவர் அஞ்சல் அலுவலகத்தில் பணியாற்றியவர். தோழராக அறிமுகமாகி, நட்பாகி, காதலாகி, இணையராக இணைந்துவிட்டோம்.
வள்ளலார் வழி முற்போக்குப் பாதை என்றாலும், அது மென்மையான முறை. அப்படியிருக்க புரட்சிகர பெரியார்

இயக்கத் தோழரைத் தங்கள் தந்தையார் ஏற்றுக் கொண்டாரா?

சைதை தென்றல் அவர்கள் நேரடியாகவே என் அப்பாவிடம் வந்து பெண் கேட்டார். தொடக்கத்தில் அப்பா மறுத்துவிட, சைதை எம்.பி.பாலு மூலம் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. 1982 ஆம் ஆண்டு பேராசிரியர் க.அன்பழகன், ஆசிரியர் கி.வீரமணி இருவரும் எங்களின் ஜாதி மறுப்பு, தாலி மறுப்புச் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். 1978 ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பெரியார் திடலில் நடைபெற்றது. அப்போதில் இருந்தே சைதை தென்றல் மும்மரமாக இயங்கியவர்.

அரசுப் பணியில் இருந்ததால் மனோகரன் என்கிற இயற்பெயர், சைதை தென்றலாக மாறியது. அந்தக் காலத்தில் சைதாப்பேட்டை பகுதித் தலைவராகவும் செயல்பட்டவர். போராட்டங்களில் ஈடுபடுவது, தீவிரமாகத் தம்மை வெளிக்காட்டிக் கொள்வது போன்ற காரணங்களால் இணையருக்குப் பணி உயர்வு என்பது இறுதிவரை கிடைக்கவில்லை.

அந்தளவு தீவிரத்தன்மை கொண்டவரா
உங்கள் இணையர்?

தீவிரம் என்பது அவரின் மிகுந்த ஈடுபாட்டைக் குறிக்கிறது.

ம.வீ.கனிமொழி, ம.வீ.அருள்மொழி ஆகிய எங்கள் பிள்ளைகளிடமும், என்னிடமும் கொள்கைகள் குறித்து நிறைய பேசுவார். பெரியார் மற்றும் ஆசிரியரின் வாழ்வியல்கள் குறித்து எடுத்துக் கூறி, அதை எப்படி முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் எனவும் எடுத்துரைப்பார். கனிமொழி அமெரிக்காவில் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி செய்கிறார், அருள்மொழி அரசு வழக்குரைஞராகத் தமிழ்நாட்டில் இருக்கிறார். பெரியாரின் கொள்கை நெறி அவர்களுக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கின்றன. இருவருக்குமே ஆசிரியர் அய்யா தான் சுயமரியாதைத் திருமணம் செய்து வைத்தார்கள்.

ஆசிரியர் அவர்கள் சிறை செல்லும் போராட்டம் அறிவித்தால், இணையரும் பெயர் கொடுப்பார். அரசு ஊழியராக இருப்பதால் நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம் என ஆசிரியர் மறுப்பார். 1982 ஆம் ஆண்டு சைதாப்பேட்டையில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு இடம் வேண்டும் என்கிறபோது, எனது தந்தையார் தான் ஒரு பள்ளிக்கூட மைதானத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார். அந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக அப்பா இருந்தார். இதற்கு உதவியாக எம்.பி.பாலு உள்ளிட்ட சைதாப்பேட்டை கழகத் தோழர்களுடன் எனது இணையரும் இருந்தார். அந்த மாநாட்டில் நான் முதன்முதலில் பேசினேன். அப்போது நடந்த ஊர்வலத்திலும் கலந்து கொண்டேன். அப்பா வள்ளலார் கொள்கையில் இருந்தாலும், பெரியார் கொள்கையின் மீதும் உணர்வுடன் இருந்தவர்.

தங்கள் அம்மா குறித்து எதுவும் கூறவில்லையே?

அது மிகப்பெரிய துயரம். எங்கள் அம்மா பெயர் ரமணிபாய். எனக்கு 2 வயது இருக்கும் போதே அம்மா மறைந்துவிட்டார். இப்போது எனக்கு 65 வயதாகிறது. அம்மாவை நான் ஒளிப்படத்தில் கூட பார்த்ததில்லை. அது பெரும் குறை என்றாலும், எனது அப்பாதான், எனக்கு அம்மாவாக இருந்து பார்த்துக் கொண்டார்.‌ என்னுடன் பிறந்தவர்கள் 4 பேர்.

2 அண்ணன், 2 அக்கா, கடைசியாக நான். எங்கள் அப்பா தான் சமையல் செய்வது, பள்ளிக்கு அனுப்புவது உள்ளிட்ட அனைத்துப் பராமரிப்புப் பணிகளைச் செய்வார். உடன்பிறந்தோர் அனைவருமே நல்ல பணியில் இருக்கிறோம். நான் எம்.எட்., படிக்கிற காலத்தில் தந்தையும் என்னை விட்டு மறைந்துவிட்டார்.

அந்தக் காலத்தில் இருந்தே பெரியார் திடல் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். எனது கல்வி, வேலைத் திட்டம் குறித்து ஆசிரியர் அடிக்கடி கேட்பார். தொடர்ந்து முன்னேறுவதற்கான ஊக்கத்தை எப்போதும் அவர் கொடுப்பார். எனது இந்த வளர்ச்சிக்கு ஆசிரியரின் பங்கும் மிக முக்கியமானது. என்னைக் குறித்து அக்கறையோடு விசாரிக்கும் ஒவ்வொரு தருணத்திலும், ஆசிரியரை எனது தந்தையாகவே உணர்வேன்.

உங்களின் கல்வி நிலை என்ன?

நான் எம்.ஏ., எம்.எட்., முடித்து 10 ஆண்டுகள் பொருளாதார ஆசிரியராகப் பணி புரிந்தேன். பிறகு பி.எல்., முடித்து வழக்குரைஞர் ஆனேன். தொடர்ந்து இளஞ்சிறார்களுக்கான மனோதத்துவம் பயின்றேன். வழக்குரைஞர் தொழிலில் 26 ஆண்டுகள் அனுபவம். இதில் 24 ஆண்டுகளாக இலவச சட்ட உதவி மய்யத்திலும் பணி செய்கிறேன்.
1998 காலகட்டத்தில் வழக்குரைஞர் பணிக்கு மகளிர் மிகக் குறைவாகவே வருவார்கள். இன்றைக்கு ஆண்களுக்குச் சரிநிகராக வந்துவிட்டார்கள். நான் கிரிமினல் வழக்குகளை எடுத்து நடத்துவேன். கொலை வழக்கு, குண்டுவெடிப்பு வழக்கு போன்றவற்றை எல்லாம் எடுத்து நடத்தியுள்ளேன். பொதுவாகக் கிரிமினல் வழக்குகளை மகளிர் எடுத்து நடத்துவதில்லை.

திராவிடர் கழகத் தோழர்களை
உங்கள் பார்வையில் எப்படி மதிப்பிடுவீர்கள்?

மிக உயர்வாக மதிப்பிடுவேன். கொள்கை என்பது நமது தோழர்களால் உறுதிப்படுத்தப்படுகிறது. கும்பகோணம் மாநாட்டிற்காக நாங்கள் போகும்போது விபத்தில் சிக்கிக் கொண்டோம். நள்ளிரவு நேரத்தில் துரை.சக்ரவர்த்தி அய்யா எடுத்த முயற்சியால் மீண்டு வந்தோம். அதேபோல ஈரோடு நிகழ்ச்சி முடித்து இரவு 12 மணி வரை பேருந்து இல்லை. பேராசிரியர் காளிமுத்து, சண்முகம் இருவரும் கடைசி வரை இருந்து உதவி செய்தார்கள். பேச்சு, எழுத்து எதுவாக இருந்தாலும் கவிஞர் கலி.பூங்குன்றன் அய்யா ஆலோசனைகள் கூறுவார்கள். அதேபோல மறைந்த பெரியார் சாக்ரடீசு ‘உண்மை’ இதழில் சட்டத்துறை தொடர்பான கேள்வி – பதில் எழுதச் சொன்னார்.

புலவர் இராமநாதன் அவர்கள் சொல்லிக் கொடுத்த பாரதிதாசன் கவிதைகள் என்றும் நினைவில் நிற்கும். எனது அப்பா இறந்தபோது இடுகாடு செல்லாத நான், எம்.பி.பாலு அவர்கள் இறந்தபோது இடுகாட்டில் சென்று இரங்கல் கூட்டத்தில் பேசி வந்தேன். “கொள்கை என்பது நமது தோழர்களால் உறுதிப் படுத்தப்படுகிறது” என்பதை வலுவாக நான் நம்புகிறேன்.

தங்களின் இயக்கப் பணிகள் குறித்துக் கூறுங்கள்?

எனக்குச் சொந்த ஊரே சென்னை, சைதாப்பேட்டை என்பதால் பெரியார் திடல் வருகை என்பது எளிதானது. எனினும் திருமணத்திற்குப் பிறகே இணையருடன் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குச் செல்ல ஆரம்பித்தேன். தென் சென்னை மாவட்ட மகளிரணி பொறுப்பாளர், வழக்குரைஞரணி மாநில இணைச் செயலாளர், வழக்குரைஞரணி மாநிலச் செயலாளர், வழக்குரைஞரணி மாநில அமைப்பாளர் எனப் பல்வேறு பொறுப்புகளை ஆசிரியர் வழங்கி, என்னை இயங்கச் செய்தார்.

அத்துடன் பெரியார் திடலில் வாரந்தோறும் திங்கட்கிழமையில் நடைபெறும் “புதுமை இலக்கியத் தென்றல்” அமைப்பில் செயலாளராக நியமிக்கப்பட்டேன். அதனைத் தொடர்ந்து 20 ஆண்டுகள் தலைவர் பொறுப்பிலும் இருந்தேன். கரோனா காலத்திலும் வாரந்தோறும் இணைய வழியாகக் கூட்டங்களை நடத்தினோம். தற்சமயம் வியாழன் தோறும் நடைபெறும் “பெரியார் நூலக வாசகர் வட்டத்தின்” தலைவராக இரண்டு ஆண்டுகளாக இருந்து வருகிறேன். ஆசிரியர் அவர்களால் செயலவைத் தலைவர் எனும் பொறுப்பிற்கும் நியமிக்கப்பட்டுள்ளேன்.

இயக்கப் போராட்டங்களில் பங்கேற்று
சிறை சென்ற அனுபவம் உண்டா?

1986ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையின் நகலை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீயிட்டுக் கொளுத்தினர். அதில் நானும் கலந்து கொண்டு, சென்னை மத்தியச் சிறையில் 15 நாட்கள் காவலில் இருந்தேன்.

சிறையில் க.பார்வதி, செ.ஹேமலதா தேவி, ஏ.ஜோதி, தையல்நாயகி, பட்டம்மாள், அறிவுக்கொடி, செ.மீரா (ஜெகதீசன்), எம்.சந்திரா, க.கங்கேஸ்வரி, உண்ணாமலை, க.மீனாட்சி, செல்வி இந்திராணி, சொர்ணா (ரங்கநாதன்) உள்ளிட்டோர் ஒன்றாக இருந்தோம். இதில் பெங்களூர் தோழர் சொர்ணா (ரங்கநாதன்) சிறையில் இருந்தவாறே எனக்கு எம்.எட்., படிப்புச் சொல்லிக் கொடுத்தார்.

அதேபோல தாலி அகற்றும் நிகழ்வு 2015 ஆம் ஆண்டு பெரியார் திடலில் நடைபெற்றது. அதை நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. உடனே கழகச் சட்டத்துறை மூலம் நீதிமன்றத்தை அணுகிய போது, நீதியரசர் அரிபரந்தாமன் அவர்கள் நிகழ்ச்சி நடத்த ஒப்புதல் தந்தார். தீர்ப்பைப் பெற்று மகிழ்வாய் வந்த வேளையில், ஆசிரியர் அவர்கள், “இப்போது நாம் அனுமதி வாங்கினாலும் நாளை காலை அவர்கள் மேல்முறையீட்டிற்குச் செல்வார்கள்”, எனக் கூறினார்கள். எனவே 10 மணிக்கு முன்பாகவே நாம் நிகழ்ச்சியை நடத்திவிட வேண்டும் என அறிவித்து, அவ்வாறே தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிகளில் அது குறிப்பிடத்தகுந்தது. இது பெரியார் மண்தான் என நிரூபித்த தருணங்களில் அதுவும் ஒன்று எனத் தம் இயக்க வரலாற்றை நம்முடன் பகிர்ந்து கொண்டார் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அவர்கள்!

செவ்வாய், 18 மார்ச், 2025

அன்னை மணியம்மையார் நினைவு நாள் – நினைவிடங்களில் மரியாதை, அன்னையார் சிலைக்கு மாலை அணிவிப்பு (சென்னை, 16.3.2025)

அன்னை மணியம்மையார் நினைவு நாள்

விடுதலை நாளேடு
திராவிடர் கழகம்

 அன்னை மணியம்மையார் நினைவு நாள் : கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை!

தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் நினைவு நாள்

திராவிடர் கழகம்

அன்னையார் சிலைக்கு மாலை அணிவித்து நினைவிடத்தில் மரியாதை

சென்னை, மார்ச் 16- தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 47ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (16.3.2025) அவரது சிலைக்கு மாலை அணிவித்து, நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

அன்னையார் சிலைக்கு மலர் மாலை
தந்தை பெரியாரை 95 ஆண்டுகாலம் வாழ வைக்கத் தன்னை அர்ப்பணித்த தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாளான இன்று (16.3.2025) காலை 10 மணிக்கு சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு திராவிடர் கழக மகளிரணியினர் மற்றும் கழகத் தோழர்கள் பெருந்திரளாக ஊர்வலமாகச் சென்று மலர் மாலை அணிவித்தனர்.

அய்யா, அம்மா நினைவிடங்களில் மரியாதை
இதையடுத்து பெரியார் திடலில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திராவிடர் கழக மகளிர், அணியினர் பாசறையினரால் அன்னை மணியம்மையார் நினைவிடம். சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடம், தந்தை பெரியார் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
திராவிடர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிட தொழிலாளரணி, பெரியார் மணியம்மை மருத்துவமனை, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல அமைப்பு, திராவிடன் நிதி, பெரியார் அய்.ஏ.எஸ்., பயிற்சி மய்யம், பெரியார் நூலக வாசகர் வட்டம் ஆகியவற்றின் சார்பில் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.


பங்கேற்றோர்


இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், செயலவைத் தலைவர் ஆ.வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், மேனாள் மாவட்ட நீதிபதி இரா.பரஞ்சோதி, திராவிடன் நிதி பொது மேலாளர் அருள்செல்வன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், வழக்குரைஞர் சு.குமாரதேவன், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் சோ.சுரேஷ், சி.வெற்றிச்செல்வி, க.பெரியார் செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன்,

மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள்
தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பெரியார் யுவராஜ், கரு.அண்ணாமலை, விருகை செல்வம், வெ.கண்ணன், டி.ஆர்.சேதுராமன், ச.மாரியப்பன், அரங்க.இராஜா, அரும்பாக்கம் சா.தாமோதரன், மயிலை பாலு, பா.மேகராஜன். வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், கி.இராமலிங்கம், சி.பாசுகர், நா.பார்த்திபன், சி.காமராஜ், கோ.தங்கமணி, சொ.அன்பு, அ.புகழேந்தி, த.மு.யாழ்திலீபன், சு.பெ.தமிழமுதன்.
சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு, ஆவடி – பூவை தமிழ்ச்செல்வன், உடுமலை வடிவேல், பெரியார் மாணாக்கன், க.கலைமணி, வை.கலையரசன், சக்திவேல், முகப்பேர் முரளி, படப்பை சந்திரசேகரன், திருவொற்றியூர் பெ.செல்வராசு, ஓவியர் பெரு.இளங்கோ, சரவணன், ச.சனார்த்தனன், மு.நா.இராமண்ணா, இருதயநாத், தஞ்சாவூர் கே.கருணாநிதி, ப.பிரசாத், நம்பியூர் இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

கழக மகளிரணி
இறைவி, சண்முகலெட்சுமி, மா.தமிழரசி, சீர்த்தி, செ.பெ.தொண்டறம், நூர்ஜகான், மு.பவானி, வி.வளர்மதி, த.மரகதமணி, செ.உமா, ராஜேஸ்வரி, இ.இந்திரா, பூங்குழலி, இலக்கியா, முகப்பேர் செல்வி, பெரியார் பிஞ்சுகள் மகிழன், பிரபு, யாழிசை மற்றும் திரளான மகளிர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அன்னை மணியம்மையார் நினைவு நாள் – நினைவிடங்களில் மரியாதை, அன்னையார் சிலைக்கு மாலை அணிவிப்பு (சென்னை, 16.3.2025)

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

சீர்காழியை சேர்ந்த பெரியார் பெருந் தொண்டர் கு.ந.இராமண்ணா – ேஹமா ஆகியோரின் குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு 14ஆவது தவணையாக நன்கொடை ரூ.5,000 கழகத் துணைத் தலைவரிடம் வழங்கினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், வழக் குரைஞர் த. வீரசேகரன். (இதுவரை வழங்கியது ரூ.55,000)

திராவிடர் கழகம்

அன்னையார் தலைமையில் நாம் எடுத்த உறுதிமொழி!

பெரியார் கல்வி நிறுவனங்கள்
தோழர்களே, தோழர்களே,
தந்தை பெரியார் மறைந்த நிலையில் திருச்சியில் அன்னை மணியம்மையார் தலைமையில் கூடிய நமது திராவிடர் கழகப் பொதுக் குழுவில் ஒரு மனதாக நாம் எடுத்த தீர்மானம் என்ன?
“திராவிடர் கழகத்தவராகிய நாங்கள், தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை, அவர் போட்டுத் தந்த பாதையில், எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல் வென்று முடிப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்கிறோம்!” (6.1.1974)
இதன்படி அன்னையார் தலைமையிலும், அவர்களின் மறைவிற்குப் பிறகும் தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்றியிருக்கிறோம்; ஜாதி ஒழிந்த சமத்துவ சமுதாயம் மலரும் வரை நம் பணிகள் தொடரும்! தொடரும்!!
அதற்காக எந்த விலையும் கொடுக்கத் தயார் தயார் என்று அன்னையார் நினைவு நாளாகிய இன்று உறுதி எடுத்து உழைப்போம்! உழைப்போம்!
வாழ்க தந்தை பெரியார்!
வாழ்க அன்னையார்!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்