புதன், 27 பிப்ரவரி, 2019

திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவரும்  கவிஞர் அவர்களே!


நமது கழக துணைத் தலைவர் கவிஞர் அவர்கள்

தஞ்சை கழக மாநில மாநாட்டிற்கு மட்டுமல்ல;


எனக்குப் பிறகு திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவரும் அவரே!


தமிழர் தலைவர் ஆசிரியர் மாநாட்டில் பிரகடனம்




தஞ்சை, பிப்.23 இந்த மாநாட்டுத் தலைவராக இருக்கக்கூடிய நம்முடைய கழக துணைத் தலைவர் அருமை சகோதரர் கவிஞர் அவர்கள், இந்த மாநாட்டிற்கு மட்டுமல்ல, திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராகவும் அவர்தான் இருப்பார் என்பதை பிரகடனப்படுத்தினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

தஞ்சையில் இன்று (23.2.2019) தொடங்கப்பட்ட திராவிடர் கழக மாநில மாநாட்டின் நோக்கம்பற்றி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

வெற்றிகரமான ஏவுகணையாக...


இந்திய வரலாற்றின் மிக முக்கியமான ஒரு காலகட்டமான இந்த காலகட்டத்தில், அறிவு ஆசான் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கம், இன்றைக்கு தமிழ்நாட்டிலே பிறந்தாலும், அந்த சமூக விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட சுயமரியாதை மாமருந்து என்பது உலகம் முழுவதும் எங்கெங் கெல்லாம் நோய்கள் இருக்கின்றனவோ, எங்கெங்கெல்லாம் பிறவி நோய்கள் இருக்கின்றனவோ,  எங்கெங்கெல்லாம் மனித குல பேதம் இருக்கின்றனவோ,  எங்கெங்கெல்லாம் மனிதகுல சமத்துவத்திற்கு கேள்வி எழும்பியிருக்கின்றதோ, எங்கெங் கெல்லாம் பெண்ணடிமை நிலைக்கப்பட வேண்டும் என்று மதங்கள் ஆனாலும்,  அமைப்புகளானாலும் போராடுகின்ற நேரத்தில், அதனை எதிர்த்து, அதைத் தாக்குவதற்குரிய வெற்றிகரமான ஏவுகணையாக, இங்கே கருவியாக அமைத்துக் கொண்டிருக்கக்கூடிய இயக்கம் - இந்தத் தஞ்சை தரணியில், இரண்டு நாள் மாநாட்டினை தொடங்கியிருக்கின்ற நேரத்தில், குடும்பம் குடும்பமாய் வந்திருக்கின்ற, வந்துகொண்டிருக்கக்கூடிய அருமைக் கருஞ்சட்டைத் தோழர்களே, இயக்கப் பகுத்தறிவாளர்களே, நம்முடைய அன்பான கொள்கைக் குடும்பத்தினரே, ஆதரவாளர்களே, சான்றோர்களே, மாநாட்டின் தலைவர் மகத்தான செயல்வீரர், இந்த இயக்கத்தினுடைய தொடர்ச்சிக்கு அவர்தான் அடுத்த தலைவர் என்று நாங்கள் பிரகடனப்படுத்துவதைப்போல, இன்றைக்கு இந்த மாநாட்டிற்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

இந்த மாநாட்டினைத் திறந்து வைத்திருக்கக்கூடிய செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களே,

கழகக் கொடியேற்றி வைத்த கழகப் பொருளாளர் மானமிகு வீ.குமரேசன் அவர்களே,

இந்நிகழ்வில் பங்கேற்கக்கூடிய பெரியோர்களே, தந்தை பெரியார் படத்தினைத் திறந்து வைத்த திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர், அன்பிற்குரிய லட்சிய கொள்கையாளர், நெறியாளர் அன்பிற்குரிய தோழர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே,

மேடையில் இருக்கக்கூடிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள்  இராசகிரி கோ.தங்கராசு அவர்களே, பொத்தனூர் க.சண்முகம் அவர்களே மற்றும் இயக்கத் தோழர்களே, பொறுப்பாளர்களே, நண்பர்களே, ஊடகவியலாளர் களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களையெல்லாம் வாட்டிக் கொண்டிருக்கிறது; வதைத்துக் கொண்டிருக்கிறது!


என்னுடைய உரைக்கு முன்  ஒரு செய்தியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த மாநில மாநாட்டிற்கும், இன் றைக்குத் தஞ்சையில் நடைபெறக்கூடிய மாநில மாநாட்டிற்கும் இடையில், எத்தனையோ சோகமான, சொல்லொணாத ஈடுசெய்ய முடியாத இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அந்த இழப்புகளில், நாம் யாரை அழைத்தால், இந்த மாநாட்டிற்கு வந்து பெருமைப்பட தன்னுடைய முழக்கத்தினால், நம்மையெல்லாம் உற்சாகப்படுத்துவாரோ, அந்தத் தலைவர், வழிகாட்டக் கூடிய தலைவர், ஆட்சியை அமைக்கும்பொழுதெல்லாம் அண்ணா அவர்கள் வழியில், தந்தை பெரியாருக்கு அளிக்கப்பட்ட காணிக்கை என்று அழைக்கப்பட்ட அந்த வழியில், மிகத் தெளிவாக, ஆட்சியையே அய்யாவிற்குக் காணிக்கை என்றாலும், அய்யா எங்களுடைய ஆட்சியில் போராடக் கூடாது என்று சொல்லி, மிகப்பெரிய அளவிற்கு, தந்தை பெரியார் விரும்பிய ஜாதி ஒழிப்பினுடைய ஒரு கட்டத்தினை அண்ணா நிறைவேற்றினார். சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும்; சூத்திரனுக்குத் திருமண உரிமை இல்லை என்பதை அகற்றுவோம் என்பதை அண்ணா செய்தார். அதனுடைய  இன்னொரு பாகத்தை, சூத்திர இழிவு, பஞ்சம இழிவு போகவேண்டும் என்று அதனுடைய தொடர்ச்சியை செய்தவர்; மானமிகு சுயமரியாதைக்காரராக, என்றைக்கும் நம்முடைய நெஞ்சங்களில் நிலைத்திருக்கக் கூடியவரும், முதல்வராக பதவியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி இதே கொள்கையை முழங்கிய, மானமிகு சுயமரியாதைக்காரர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், இன்றைக்கு நம் நெஞ்சில் நிறைந்தவராக இருக்கிறார். அவர் இந்த மேடையில் இல்லையே என்கிற கலக்கம் எங்களையெல்லாம் வாட்டிக் கொண்டிருக்கிறது; வதைத்துக் கொண்டிருக்கிறது.

அதுபோலவே நண்பர்களே, ஏராளமான தந்தை பெரியார் அவர்களின் பாசறையில் இருந்த இயக்க மூத்த தோழர்கள், பணியாளர்கள் எண்ணற்றவர்களை நாம் இந்த இடைவெளியில் இழந்திருக்கின்றோம். அவர்களுக்கும் சரி, மானமிகு சுயமரியாதைக்காரராக, பாராட்டிப் போற்றி வந்த பழைமை ஸ்லோகம், ஈரோட்டு பூகம்பத்தால்

இடியுது பார்!

என்று கவிதை எழுதி தொடங்கிய அவர், முதலமைச்சரான பிறகும், தன்னை ஆளாக்கிய தலைவர், ஈரோட்டு ஆசான், தந்தை பெரியார் அவர்கள்  மறைந்த நேரத்தில், அவருக்கு அரசு மரியாதை கொடுக்கவேண்டும் என்று சொன்னார். அதனால், என்னுடைய ஆட்சி போனாலும் பரவாயில்லை, தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை செய்வதுதான் முக்கியம் என்றார். மரியாதை செய்த பிறகும், நான் அரசு மரியாதை கொடுத்து அவருடைய உடலடக்கத்தை செய்தேனே தவிர, அவருடைய நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றவில்லையே என்று ஆதங்கப்பட்டார். பிறகு மறுபடியும் ஆட்சிக்கு  வந்து, அந்த முள்ளை அகற்றிய மாபெரும் தலைவர்தான், புரட்சியாளர்தான் நம்முடைய பெருமைக்குரிய கலைஞர் அவர்களாவார்கள்.

தலைவணங்கி வீர வணக்கம்!




கலைஞர் அவர்களுடைய மறைவு, நம்முடைய எண்ணற்ற சுயமரியாதைச் சுடரொளிகள், கருப்பு மெழுகுவர்த்திகளின் மறைவு, அண்மையில் மதவெறியினால் ஏற்பட்ட தீவிரவாதத்திற்குப் பலியான, நம் நாட்டு எல்லையில் கடமையாற்றக் கூடிய இராணுவ வீரர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் உள்பட அவர்களின் தியாகத்திற்கு இந்த மாநாடு வீர வணக்கம் செலுத்துகிறது.

வீர வணக்கம் செலுத்துகின்ற வகையில், கலைஞருக்கு, நம்மோடு இருந்து உழைத்த கருப்பு மெழுகுவர்த்திகளுக்கு, நம்முடைய மறைந்த இராணுவ வீரர்களுக்கு அனைவரும் எழுந்து வீர வணக்கம் செலுத்துகிறது, தலை வணங்குகிறது.

(அனைவரும் எழுந்து நின்று வீர வணக்கம் செலுத்தினர்)

இந்த மாநாட்டிற்குக் கழகத் தோழர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறார்கள். குடும்பம் குடும்பமாய் சங்கமமாகி இருக்கிறார்கள். மாநாட்டில் மிக முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன.

விதை நெல்லைக் கொண்டு சமையல் செய்வதைப்போல...


எல்லாவற்றையும்விட, ஜனநாயகம் இந்த நாட்டில் தொடரவேண்டுமா? அல்லது பாசிசம் நிலைக்கவேண்டுமா?  இந்த நாட்டில் மக்களாட்சி தேவையா? அல்லது ஒரு பாசிச ஆட்சி தேவையா?

பசுவுக்கு இருக்கின்ற பாதுகாப்பு, இந்த நாட்டில் உழைக்கின்ற என்னுடைய சகேதாரனுக்கு, மக்களுக்குக் கிடையாது;, பெண்களுக்குக் கிடையாது;  அறிவார்ந்த மக்களுக்குக்கூட கிடையாது, அவர்களுக்கெல்லாம் புதுப்பெயர் வைத்து அர்பன் நக்சலைட் என்று பெயரிட்டு, அவர்கள் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதப் படையினால் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள். அல்லது குற்றவாளிகளாக நிறுத்தப்படுகிறார்கள் என்ற இந்தக் கொடுமையான, கருத்துரிமை இழந்த, பேச்சுரிமை பறிக்கப்பட்ட பல்வேறு கட்டங்களில், ஏழை, எளியவர்கள், விவசாயிகள், பாட்டாளி மக்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், அத்துணைத் தரப்பினரும் இந்த ஆட்சிக்கு விரோதமாக இருக்கிறார்கள். எல்லாவற்றையும்விட ரிசர்வ் வங்கி ஆளுநர்கூட இந்த ஆட்சியில், மோடி ஆட்சியில் இருக்க முடியாது என்று இரண்டு பேர் ஓடிப் போகிறார்கள்.   விதை நெல்லைக் கொண்டு சமையல் செய்வதைப்போல, இன்றைக்கு மூலதனத்திலிருந்து பணம் வாங்கக்கூடிய கட்டம் இருக்கிறது. இவைகளையெல்லாம் கொண்ட பாசிச ஆட்சி மத்தியில்.

நகைச்சுவையோடு பேசியவரே, நகைச்சுவையானார்!


இங்கே ஒரு அடிமை ஆட்சி; திடீரென்று ஓடிப்போனவர் சொன்னார், திராவிடக் கட்சிகளை, கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும், பார் உள்ளளவும், பார்'க்குக்கூடிய புதிய விளக்கம் எல்லாம் சொல்லி நகைச்சுவையோடு பேசினார்; இன்றைக்கு அவரே நகைச்சுவைக்கு ஆளாகிவிட்ட பரிதாபகரமான வெட்க கரமான இந்தக் காலகட்டத்தில், ஒன்று மிக முக்கியம்.

திராவிட இயக்கங்களோடு கூட்டு சேர மாட்டோம் என்று சொன்னார்; இன்றைக்கு அ.தி.முக..வோடு கூட்டு சேர்ந்ததின் மூலமாக, ஒரு நல்ல பிரகடனத்தை நாட்டிற்குச் சொல்லியிருக்கிறார். கேட்டிலும்கூட, தீமையிலும்கூட ஒரு நன்மை தெளிவாகத் தெரிகிறது. அதுதான், எது உண்மையான திராவிடர் இயக்கம் என்பதை நாட்டு மக்களுக்கு அதிகாரப் பூர்வமாக மோடியோடு, அங்கு தோடி ராகம் பாடிய காரணத்தினால், ஓடிய காரணத்தினால், மிகத் தெளிவாக இங்கே பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள்.

குறைந்தபட்சம் கூட்டணிக்கு என்ன பெயர் என்று முடிவெடுங்கள்!


இன்று காலையில் வெளிவந்த இந்து ஏட்டில் ஒரு செய்தி வந்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தார்; அய்ந்து இடங்கள்தான் என்பதற்கு ஆதங்கப்பட்டார். இரண்டு பேரையும் அழைத்து உத்தரவு போட்டிருக்கிறார். இவர்கள் கைகட்டிக் கொண்டு மதுரை விமான நிலையத்திற்குச் சென்றிருக்கிறார்கள்.

உங்களுடைய கூட்டணியை, மோடி தலைமையில் இருக் கின்ற கூட்டணி அல்ல என்றுதான் சொல்லவேண்டுமே தவிர, அ.தி.மு.க. கூட்டணி  அல்ல என்று  உத்தரவுப் போட்டிருக்கிறார். அதற்கு அவர்களும் கைகட்டி, வாய் பொத்தி வந்திருக்கிறார்கள். எனவே, அவர்களுக்குள்  முதலில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினை, குறைந்தபட்சம் கூட்டணிக்கு என்ன பெயர் என்று சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

எனவே, கொள்கைக் கூட்டணி இந்த மேடையில் இருக்கிறது; நாளைக்கும் வரவிருக்கிறது. கொள்கையற்றவர்கள் வேறு பக்கத்தில் இருக்கிறார்கள்.

திராவிடர் கழகம் யாரை அடையாளம் காட்டுகிறதோ...


தமிழர்களே, தமிழர்களே!  இந்த மாநாடு உங்களுக்குச் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், எது பலமான, எது வெற்றிகரமான கூட்டணி என்றால்,  திராவிடர் கழகம் யாரை அடையாளம் காட்டுகிறதோ,  எந்த அணியை அடையாளம் காட்டுகிறதோ, அந்த அணிதான் பிணி தீர்க்கும். அந்த அணிதான் மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும்.

காரணம், எங்களுக்கென்று எதுவும் கிடையாது; எங்களுக்கென்று ஆசாபாசங்கள் கிடையாது. திராவிடர் கழகத்தினுடைய பார்வை ஒரு விஞ்ஞானப் பார்வை; பெரியாரின் பார்வை. ஆகவே, அந்த விஞ்ஞானப் பார்வையோடுதான் இந்த மாநாடு தொடங்கியிருக்கிறது.

ஒரு விரல் புரட்சி!


எனவே, இந்த மாநாட்டிற்கு வந்திருப்பவர்கள் அத்துணை பேருக்கும் முக்கியமான கடமை என்னவென்றால், நாம் புரட்சி செய்யவேண்டும். அந்தப் புரட்சிக்கு ஆயுதம் தூக்கவேண்டிய அவசியமில்லை. பொத்தான் இருந்தால் பொத்தான், அல்லது வேறு முறை என்றால், அந்த முறையில், ஒரு விரல் புரட்சி என்பதன்மூலமாக, ஒரு அமைதிப் புரட்சியை செய்து, மதவெறி யையும், பாசிச வெறியையும் வெளியே அனுப்பவேண்டும்.

அவரே சொல்லியிருக்கிறார், எங்களுடைய கூட்டணியினுடைய பலன் லஞ்சத்தையும், அதேபோல, ஊழலையும் ஒழிக்கக்கூடிய கூட்டணி என்று சொல்கிறார்கள்.

ஒரு பக்கத்தில் கூட்டணி வைத்துக்கொண்டு, கொஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் நேற்றுகூட வருமான வரித்துறை சோதனைகள் நடைபெறுகின்றன.

இதுபோன்ற ஒரு அதிசயத்தை இந்திய நாடு எந்தக் கால கட்டத்திலும் பார்த்ததே கிடையாது. எனவேதான், கோலெடுத் தால், குரங்கு ஆடும் என்பதைப் போல, ஆட்டிப் படைக்கிறார்கள். இதை எச்சரிக்கையாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதை விளக்கி,

மாநாட்டிற்கு மட்டுமல்ல; கழகத்தின் அடுத்த தலைவராக...


சமூகநீதியைக் காப்பாற்ற

ஜாதியை ஒழிக்க

பெண்ணடிமையை நீக்க

உலகக் குடையின் கீழ் அனைவரையும் ஒன்றாக்க

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்

என்ற கருத்தைக் கொண்ட கொள்கை விளக்கத்தை பின்பு சொல்லவிருக்கின்றோம். ஆகவே, அதனைப் புரிந்து கொள்ளவேண்டும் என்று கேட்டு, இந்த மாநாட்டுத் தலைவராக இருக்கக்கூடிய நம்முடைய கழக துணைத் தலைவர் அருமை சகோதரர் கவிஞர் அவர்கள், இந்த மாநாட்டிற்கு மட்டுமல்ல, அடுத்த தலைவராகவும் அவர்தான் இருப்பார் என்பதை பிரகடனப்படுத்தி அமைகிறேன், நன்றி வணக்கம்.

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 23.2.19

சமுகநீதி மாநாட்டில் மாநாட்டின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் எச்சரிக்கை! எச்சரிக்கை!!

பாசிச பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுகநீதி - பெண்களுக்கான சொத்துரிமை எல்லாமே செத்தே போகும்

பொதுத் துறைகளை தனியார்த் துறைகளாக மாற்றப்படுவதன் சூழ்ச்சி என்ன?


சமுகநீதி மாநாட்டில் மாநாட்டின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் எச்சரிக்கை! எச்சரிக்கை!!


நமது சிறப்புச் செய்தியாளர்




தஞ்சை, பிப்.25  பாசிச பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருமேயா னால், மனுதர்மம்தான் இந்திய அரசமைப்புச் சட்டமாகும் என்று எச்சரித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

24.2.2019 ஞாயிறு முற்பகலில் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர், கல்வி வள்ளல் காமராசர், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் படங்கள் திறக்கப்பட்டன. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டு நிறைவரங்கத்தில் நிறைவுரை யாற்றுகையில், முத் தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களை நினைவு கூர்ந்து தன் உரையைத் தொடங்கினார்.

இதே மேடையில் எத்தனையோ மாநாடுகளிலும், எத்தனையோ நிகழ்ச்சிகளிலும் கலைஞரோடு அமர்ந்து கலந்துறவாடிய நினைவுகளையெல்லாம் நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்து தன் உரையைத் தொடங்கினார்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை இயற்றிய கலைஞர் அவர்களுக்கு இதே இடத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்தியபோது, தான் குறிப்பிட்ட ஒன்றையும், அதற்குக் கலைஞர் கலகலப்பாக அதனை இரசித்ததையும் எடுத்துக் கூறினார்.

பக்கத்தில் இருப்பது தஞ்சைப் பெருவுடையான் கோவில்! அதனைக் கட்டியவன் மாமன்னன் ராஜராஜசோழன். அந்த மாமன்னனின் சிலையை, அவனால் எழுப்பப்பட்ட அந்தக் கோவிலுக்குள் வைக்கவேண்டும் என்று முதலமைச்சர் கலைஞர் விரும்பினார்.

ஆனால், அந்தக் கோவிலோ மத்திய அரசின் தொல் பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருந்ததால், அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.

முதலமைச்சர் கலைஞர் என்ன செய்தார்? அதுதான் கலைஞர். மாமன்னன் சிலையைக் கோவிலுக்குள்ளேதானே வைக்க அனுமதியில்லை. இதோ அந்தக் கோவில் வளாகத்தில், கோவிலின் முகப்பிலேயே திறக்கிறேன் என்று கூறித் திறந்து வைத்தார் அல்லவா! இதனை, கலைஞருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் நினைவூட்டிப் பேசிய நான் ஒரு கருத்தைச் சொன்னேன்.

கோவில் கட்டிய தமிழனெல்லாம் வீதியில்தான் நிற்பான் - கோவில் கட்டுவதற்கு எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாதவன், உழைக்காதவன் எல்லாம் கோவிலுக்குள்தான் இருப்பான்'' என்று நான் அந்த விழா மேடையில் சொன்னதை கலைஞர் அவர்கள் வெகுவாக ரசித்தார் என்பதை மாநாட்டு மேடையில் ஆசிரியர் சொன்னபோது ஒரே கலகலப்பு!

இதேபோல எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் - கலைஞர் அவர்கள் இல்லாத நிலையில், அவர் படத்தினைத் திறந்து வைக்க நேர்ந்ததை மிகவும் உருக்கத்துடன் குறிப் பிட்டார் ஆசிரியர் அவர்கள்.

எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, பிற்படுத்தப்பட்டவர்களைப் பாதிக்கும் வகையில் அவரால் கொண்டு வரப்பட்ட ஆண்டு வருமானம் ஒன்பதாயிரம் ரூபாய்த் தொடர்பான சமூகநீதிக்கு எதிரான அந்த ஆணையை எரிக்கும் போராட்ட விளக்க மாநாடு இதே தஞ்சையில் இதே மேடையில்தான் நடைபெற்றது (17.9.1979).

அந்த ஆணையை எரித்து கோட்டைக்குச் சாம்பலை அனுப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் பின்னடைந்தோருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்னும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 93 ஆம் சட்டத் திருத்த நகலும் எரிக்கும் போராட்டத்தை அறிவிக்கும் நிலையும் ஏற்படும் என்று தமிழர் தலைவர் அறிவித்தபோது மக்கள் கடலின் ஆரவாரம் அடங்க வெகு நேரமாயிற்று.

சமுகநீதி மாநாட்டின் தலைவர் என்ற முறையில் திராவிடர் கழகத் தலைவர் அது தொடர்பான கருத்துகளையும், தகவல்களையும் எடுத்து வைத்தார்.

கருநாடக மாநிலத்தில் அமைக்கப்பட்ட ஹாவானூர் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையில் மிக முக்கியமாக இடம்பெற்றிருந்த கருத்தைக் குறிப்பிட்டார். இந் தியாவில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோருக்கான உரிமைகளும், நலன்களும் பாதுகாக்கப்படும் என்று ஜவகர்லால் நேரு அவர்கள் குறிப்பிட்டிருந்ததை (1946) அந்த அறிக்கையிலிருந்து எடுத்துக்காட்டினார்.

நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு தேவை என்று இம்மாநாட் டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டிய கழகத் தலைவர், உச்சநீதிமன்றத்தில் 31 நீதிபதிகள் இருக்கிறார்களே, இதில் ஒரே ஒரு நீதிபதியாகவாவது தாழ்த்தப்பட்டவர்  உண்டா? என்ற வினாவை எழுப்பியவர் - இந்தியாவிலேயே தாழ்த்தப்பட்டவர்களும், பெண்களும் அதிக எண்ணிக்கையில் நீதிபதிகள் இருப்பது சென்னை உயர்நீதிமன்றத்தில் தான், அதற்குக் காரணம் தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் தானே என்று சொன்னபொழுது பலத்த கரவொலி!

பொதுத் துறைகள் ஒழிக்கப்படுவதன் இரகசியம்


இன்றைக்கு மத்திய பி.ஜே.பி. ஆட்சியில் பொதுத் துறை நிறுவனங்கள் எல்லாம் வேக வேகமாக தனியார்த் துறைகளாக ஆக்கப்பட்டு வருகின்றன. கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கக் கைகள் ஓங்கிக் சொண்டுள்ளன.

தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு இல்லாத காரணத் தாலும், அதேநேரத்தில் பொதுத் துறைகளில் இட ஒதுக்கீடு இருப்பதாலுமே இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட இன்னொரு வகையில் இந்த வேலை நடக்கிறது என்ற ஒன்றை நுட்பமாகச் சுட்டிக்காட்டினார்.

பெண்களுக்கான சொத்துரிமைபற்றிக் கூறும் போது, 1929 ஆம் ஆண்டில் செங்கற்பட்டில் இதே மாதத்தில் கூட்டப் பெற்ற சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாட்டில் பெண் களுக்கான சொத்துரிமை குறித்துத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

அண்ணல் அம்பேத்கர் மத்திய சட்ட அமைச்சராக இருந்த நிலையில், அதற்கானதோர் சட்டத்தைக் கொண்டு வர முயற்சித்தபோது அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதுபோன்ற அடிப்படையான சட்டத்தைக் கூட நிறைவேற்ற முடியாத நிலையில், சட்ட அமைச்சராக இருந்து என்ன பயன் என்று பதவியைத் தூக்கியெறிந்து விட்டு வெளியேறியவர் அண்ணல் அம்பேத்கர் ஆவார். கொள்கையை நிறைவேற்றத் தான் பதவிகள் என்பதை இதன்மூலம் உணர்த்தியவர் அவர். இந்த உணர்வு யாருக்கு வரும்? என்று கேட்டபோது, மாநாட்டுப் பந்தலே நிசப்தம்!

1929 ஆம் ஆண்டிலேயே சுயமரியாதை இயக்கத்தின் தீர்மானமான பெண்களுக்கும் சொத்துரிமை என்ற தீர்மானம்.

(இன்னும் சொல்லப்போனால் சென்னையில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய சீர்திருத் தக்காரர்கள் மாநாட்டிலேயே இதுகுறித்த தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது). தி.மு.க. இடம்பெற்ற அய்க்கிய முற் போக்குக் கூட்டணி ஆட்சியிலே பெண்களுக்குச் சொத் துரிமைக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது (2008).

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் அதற்கு முன்னதாகவே இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது (1989). இதையெல்லாம் திராவிடர் கழகத் தலைவர் தலைமை உரையில் சுட்டிக்காட் டினார்.

இந்த நாட்டில் பெண்களைப் பார்த்த பார்வையை ஒரு பழமொழிமூலம் சுட்டிக்காட்டினார்.

ஆசைக்கு ஒரு பெண்ணும்; ஆஸ்திக்கு ஓர் ஆணும் என்பதுதான் அந்தப் பழமொழி. அது என்ன ஆசைக்கு? இது என்ன பார்வை? என்ற வினாவை எழுப்பிய திராவிடர் கழகத் தலைவர் பெண்களுக்குச் சொத்துரிமை குறித்து சங்கர மடம் - இந்து மதத்தின் பார்வை என்னவாக இருந்தது என்பதையும் எடுத்துக்காட்டத் தவறவில்லை.

சீனியர் சங்கராச்சாரியார் என்று சொல்லப்படும் காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரசுவதி இதுகுறித்துக் கூறியதை - சங்கராச்சாரியாரின் ஆத்ம நண்பர் - ஆலோசகர் அக்னி ஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியாரின் நூலிலிருந்து எடுத்துக்காட்டினார்.

ஸ்திரீகளுக்கு சொத்துரிமை வந்துவிட்டால், இஷ்டப்பட்ட வாளுடன் ஓடிவிடுவா'' என்று சொன்னவர் சங்கராச்சாரியார். இதுகுறித்துக் கழகத் தலைவர் தெரிவித்த கருத்து பெரும் அலையை ஏற்படுத்தியது.

இஷ்டப்பட்டவாளுடன் தானே போகிறார்? அதில் என்ன தப்பு?''

பெண்களுக்குச் சொத்துரிமை அளிக்கப்பட்டால், ஸ்திரீதர்மம் அழிந்து போகும் என்று கவலைப்படுகிறார் சங்கராச்சாரியார் - அதற்கு மனுதர்மத்திலிருந்து எடுத்துக் காட்டையும் எடுத்துக் கூறியிருக்கிறார்.

இந்த நேரத்தில் வாக்காளர்களில் சரி பகுதியாக இருக்கக் கூடிய பெண்கள் கருதவேண்டிய கருத்து ஒன்று உண்டு.

பி.ஜே.பி. மறுபடியும் ஆட்சிக்கு வருமேயானால், இந்த மனுதர்மம்தான் அரசமைப்புச் சட்டமாக மாற்றப்படும் - பெண்களுக்கான சொத்துரிமை சட்டம் என்பது வாபசாகும்.

இவர்களுக்கு வாக்களிக்கலாமா? என்று பெண்கள் சிந்திக்கவேண்டும்.

பெண்கள் வாக்களிக்காமல் இருப்பதோடு, அவர்களின் கடமை முடிந்துவிடாது. இந்தப் பாசிச இந்துத்துவா ஆட்சி மீண்டும் வராமல் தடுக்கும் வேலையிலும் பெண்கள் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்றும் மாநாட்டுத் தலைவர் கேட்டுக்கொண்டார்.

சமூகநீதி மாநாட்டின் தலைமை உரை - நிறைவுரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கவலையளிக்கக்கூடிய ஓர் உணர்வை சுட்டிக்காட்டினார். அது மிகவும் முக்கியமானது.

வாக்குரிமையை விலைக்கு விற்காதீர்!


தங்கள் வாக்குரிமையை விலைக்கு விற்கும் அந்த மனப்பான்மைதான் - கேவலம் பணத்துக்காக வாக்களிக்கும் புத்தி கூடவே கூடாது - உங்கள் உரிமையை விலைக்கு விற்கலாமா? என்று கேட்ட ஆசிரியர் வாக்குரிமையை விற்றால் நல்லாட்சி வளருமா? சமூகநீதியின் நிலை என்னாகும்? விலைக்கு வாங்கியவனிடம் உரிமையோடு கேட்க நம் கையில் எதுவும் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடாதா?

ரூபாய் 50-க்கும், ரூ.500-க்கும், ரூ.5000-த்திற்கும் வாக்குரிமையை விற்றால் சொத்துரிமை மட்டுமில்லாமல் எல்லா உரிமைகளும் செத்தே போகும் என்று எச்சரித்தார் தமிழர் தலைவர் (முழு உரை பின்னர்).

-  விடுதலை நாளேடு, 25.2.19

தஞ்சை சமுகநீதி மாநாட்டில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் முழக்கம்

தி.மு.க.வின் பாதையை தீர்மானிப்பது பெரியார் திடலே திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்தவே முடியாது.

தமிழர் தலைவர் ஆசிரியர் நீண்ட காலம் வாழ்ந்து எங்களுக்கு வழிகாட்டவேண்டும்


தஞ்சை சமுகநீதி மாநாட்டில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் முழக்கம்




தஞ்சாவூர், பிப்.25 திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது; தி.மு.க. செல்லவேண்டிய பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடலே என்றும், தமிழர் தலை வர் ஆசிரியர் நீண்ட காலம் வாழ்ந்து வழிகாட்டவேண் டும் என்றும் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் முரசொலித்தார்.

தஞ்சாவூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று (24.2.2019) நடைபெற்ற சமுகநீதி மாநாட்டில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:

திராவிடர் கழகத்தினுடைய மாநில மாநாடாக அதிலும் குறிப்பாக சமுக நீதி மாநாடு என்ற தலைப்பில் நேற்றும் இன்றும் மிகுந்த எழுச்சியோடு ஏற்றத்தோடு உணர்ச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த மாநாட்டில் இரண்டாவது நாளாக நடைபெறக்கூடிய இந்த மாலை நேரத்தில் நானும் பங்கேற்கிற ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நேரத்தின் அருமைக் கருதி சுருக்கமாக உரையாற்றக்கூடிய வாய்ப்பினை நான் பெற்றிருக் கின்றேன். இந்த வாய்ப்பினை எனக்கு உருவாக்கித் தந்திருக்கக் கூடிய மாநாட்டுக் குழுவைச் சார்ந்திருக்கக் கூடிய அத்துணை பேருக்கும், குறிப்பாக நம்முடைய ஆசிரியர் அவர்களுக்கு - என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை, வணக்கத்தை தெரிவித்துக் கொள்ள விரும்பு கின்றேன்.

தாய் வீட்டிற்கு வந்திருக்கக்கூடிய உணர்வோடு இந்த மேடையில், இந்த மாநாட்டில் நான் பங்கேற்றிருக் கின்றேன்.

தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் என்பார் கலைஞர்! தலைவர் கலைஞர் அவர்கள், எப்போதுமே திரா விடர் கழகம் என்று சொல்லமாட்டார். தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் என்று அடிக்கடி அல்ல; தொடர்ந்து எடுத்துச் சொல்வார்.

அதனைப் பின்பற்றித்தான் தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் அழைத்தவுடனே, ஆசிரியர் அவர்கள் எந்தச் சூழ்நிலையில் எந்தப் பணிகள் இருந்தாலும் இந்த மாநாட்டிற்கு வந்தே தீர வேண்டும் என்று அன்பு அழைப்பாக அல்ல; அன்புக் கட்டளையாக எனக்கு வழங்கி அந்தக் கட்டளையை நானும் சிரமேல் ஏற்றுக் கொண்டு இந்த மாநாட்டில் பங்கேற்க வந்திருக்கின்றேன்.

தாய் என்றால் - உயிர் கொடுத்தவள்; உணர்வைக் கொடுத்தவள், தாய் என்றால் நம்மை வளர்த்தவள், ஏன் வழிகாட்டக் கூடியவள். ஆமாம் திராவிடர் கழகம் தான்! திராவிட உணர்வுக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

திராவிடர் கழகம்தான் திராவிட இயக்கத்திற்கு உணர்வைக் கொடுத்திருக்கிறது, திராவிட உணர்வை வளர்த்தெடுத்து, வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. நேற் றைக்கும் வழிகாட்டியது, இன்றைக்கும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறது, நாளைக்கும் அது தான் வழிகாட்டப் போகிறது.

ஆசிரியர் பிறந்த நாளில் நான் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி!


கடந்த டிசம்பர் 2ஆம் நாள் நம்முடைய மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள். அந்த பிறந்த நாளிற்கு வாழ்த்துச் செய்தி சொல்ல, நான் ஒரு அறிக்கையை வெளியிட்டேன். அந்த அறிக்கையில் நான் குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் செல்ல வேண்டிய பாதையை பெரியார் திடல் தான் தீர்மானிக்கிறது. கலங் கரை விளக்கமாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய தாய்க் கழகம் தான் திராவிடர் கழகம் என்பதை நான் அதில் சுட்டிக்காட்டியிருக்கின்றேன்.

தி.மு.கழகத் தலைவராக பொறுப்பேற்ற நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்க வந்திருக்கின்றேன். திரா விடர் கழகம் நடத்தியிருக்கும் எத்தனையோ நிகழ்ச்சி களுக்கு நான் வந்ததுண்டு. ஏன்; திராவிடர் கழக மாநாடுகளிலும் நான் பங்கேற்று உரையாற்றி யது உண்டு. ஆனால், இப்பொழுது, தி.மு.கழகத் தலைவராகப் பொறுப்பேற்று முதன் முதலில் நடைபெறக்கூடிய இந்த மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுகின்றபோது பூரிப்படைகின்றேன். புளகாங்கித உணர்வோடு இந்த மேடையில் நின்று கொண்டிருக்கின்றேன்.

நம்முடைய ஆசிரியர் அழைத்தால் நிச்சயமாக அந்த அழைப்பை என்னால் தட்ட முடியாது, எப்போதும் வருவேன்! இப்போது மட்டுமல்ல; எப்போதும் வருவேன். எந்த நேரத்திலும் வருவேன், எந்தச் சூழ்நிலையிலும் வருவேன், எந்தக் காலக்கட்டத்திலும் வருவேன்.

அய்யா ஆசிரியர் அவர்கள் தந்தை பெரியார் அவர் களுடைய பெருந்தொண்டர், அய்யா ஆசிரியர் அவர் கள் தலைவர் கலைஞர் அவர்களுடைய உற்ற நண்பர். நான் இந்த மேடையில் நிற்கின்ற நேரத்தில் ஒன்றை நினைத்துப் பார்க்கின்றேன். என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி.

சிறையிலிருந்து கொள்கை வீரனாக நான் வெளிவர ஆசிரியரே காரணம்!


தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி 76 ஜனவரி மாதம் 31ஆம் தேதி கலைக் கப்படுகின்றது. கலைக்கப்பட்டதற்குப் பின்னால், மிசா என்ற ஒரு கொடுமையான சட்டம் தமிழ்நாட்டில் பாய்கின்றது. அதையொட்டி, தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு அரசியல் கட்சியினுடைய தலைவர்கள் கைது செய்யப்பட்டு, தமிழகத்தில் இருக்கக் கூடிய பல்வேறு சிறைச்சாலைகளில் மிசா கைதிகளாக அடைக்கப்படுகின்றார்கள். அப்போது சென்னை சிறைச் சாலையில் ஓராண்டு காலம் நானும் அடை பட்டிருந்தேன் என்று சொன்னால் - அடைபட்டு ஒரு கொள்கை வீரனாக சிறையிலிருந்து வெளி வந்தேன் என்று சொன்னால் - அதற்கு முழுக் காரணம் இங்கே அமர்ந்திருக்கக்கூடிய அய்யா ஆசிரியர் அவர்கள்தான். அதைத்தான் நினைத்துப் பார்க்கின்றேன். முதன் முதலில் சிறைக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு மிசா சட்டத் தின் மூலம் தான் எனக்கு கிடைத்தது.



மாநாட்டில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி, பேராசிரியர் காதர் மொகிதீன், இரா.முத்தரசன், பேராசிரியர் அருணன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் அவர்கள் பயனாடை அணிவித்தும், நூல்கள் வழங்கியும் சிறப்பு செய்தார்


அப்பொழுது கைது செய்யப்பட்டு இரவு 12 - 1 மணி அளவில் மயானத்திற்குள் சென்றால் எப்படி இருக்குமோ அதுபோல் என்னை அழைத்துச் சென்று அந்தச் சிறையில் இருக்கக்கூடிய கடைசிக் கொட்டடி 9ஆம் நம்பர் பிளாக் - நாங்கள் அடை படுவதற்கு முதல் நாள் வரையில் அந்த இடத்தில் அடைக்கப் பட்டிருந்தவர்கள் யார் என்று சொன்னால், தொழு நோய் இருக்கக்கூடிய கைதிகள் அடைக்கப்பட்டிருந்த பிளாக். ஒவ்வொரு அறையிலும் 9 பேர் 10 பேர் படுத்திருக்கின்றார்கள்.

கையை ஒரு பக்கம்கூட தூக்கிப் போட முடியாது. புரள முடியாது. அசந்து கூட காலை மடக்க முடியாது, அப்படிப்பட்ட அறையில் அனைவரும் படுத்திருக் கின்றார்கள்.

அந்த இருட்டில் ஒரு அறையைத் திறந்து என்னை உள்ளே செல்லச் சொன்னார்கள், நான் சென்ற போது என்னுடைய கால் தடுத்து இடறியது. அப்போது என்னைத் தடுத்த கால் நம்முடைய ஆசிரியருடைய கால்கள். உடனடியாக, என்னுடைய கையைப் பிடித்துக் கொண்டு எப்படி இருக்கின்றாய். எப்பொழுது நீ கைது செய்யப்பட்டாய், என்ன நிலைமை வெளியில்? அவர் முதல் நாள் காலையிலேயே கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று விட்டார். நான் அடுத்த நாள் இரவு செல்லுகின்றேன். வெளியில் இருக்கக்கூடிய செய்திகளை யெல்லாம் கேட்டுவிட்டு தலைவர் எப்படி இருக்கின்றார் என்று எனக்கு தெம்பு கொடுத்து தைரியம் கொடுத்து அந்த ஓராண்டு காலம் முழுவதும் ஒரு கொள்கை வீரனாக என்னைப் பயிற்று வித்திருக்கக் கூடிய ஒரு ஆசிரியராக அய்யா அவர்கள் இருந்தார்கள்.

கடைசி நிமிடம் வரை பயணத்தை நிறுத்தாதவர் பெரியார்!


அன்றைக்கு என்னுடைய வயது 23. அய்யா ஆசிரியருடைய வயது 40. இன்றைக்கு அவருடைய வயது 86. அப்பொழுது எப்படிப் பார்த்தேனோ அதே ஆசிரியராக, மன்னிக்கவும் -அதே இளைஞராக - இப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.


தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய உயிர் பிரிகின்ற கடைசி நிமிடம் வரையில் தன்னுடைய பயணத்தை அவர் நிறுத்தியது கிடையாது. சுற்றுப்பயணத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்த தலைவர் உலகத்தில் ஒருவர் உண்டென்று சொன்னால், தந்தை பெரியார் அவர்கள் தான். வாழ்நாள் முழுவதும் பயணம் பயணம் தான். அவரிடத்தில் பலர் சென்று சொல்லுவார்கள் ஓய்வெடுக்கக் கூடாதா? என்று!


அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள் என்ன பதில் சொல்லியிருக்கின்றார் என்று சொன்னால்,


நாதஸ்வரக் குழலாக இருந்தால் ஊதியாக வேண்டும்,


மத்தளமாக இருந்தால் அடிபட்டாக வேண்டும்,


மனிதனாக இருப்பவன் உழைத்தாக வேண்டும் என்பார்.


பெரியாரிடத்தில் பயிற்சி பெற்றவரல்லவா ஆசிரியர் அவர்கள். அப்படித்தான் ஆசிரியர் அவர்களும் தொடர்ந்து உழைத்துக் கொண்டி ருக்கின்றார். தலைவர் கலைஞர் உழைத்தார். இதோ இங்கு நின்று கொண்டிருக்கக் கூடிய நானும் உழைப்பதற்காக ஓரளவிற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன். காரணம் நம்முடைய சமுதாயம் மேம்படவேண்டும். தன்மானத்தோடு இருந்திடவேண்டும், சுயமரியாதை உணர்வு பெற்ற வராக இருந்திட வேண்டும். அதற்கு, திராவிடர் கழகத்தை விட்டால் நாதி கிடையாது, திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டால் நாதி கிடையாது.


இரட்டைக் குழல் துப்பாக்கி என்றார் அறிஞர் அண்ணா!


`தி.க.,வும் தி.மு.க.,வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று நம்முடைய பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றார்கள். இந்த இரண்டு இயக்கங்களும் இந்த இனத்தினுடைய காவல் தெய்வங்களாக, விளங்கிக் கொண்டிருக்கின்றன என்று சொன்னால் மிகையாகாது. இந்த இரண்டு கழகங்கள் இருக்கின்ற வரையில் எத்தனைக் காவிகள் வந்தாலும் சரி; அது எத்தனை மத அமைப்புகளைக் கூட்டிக்கொண்டு வந்தாலும் சரி; எத்தனை சாதி அமைப்புகளை கூட்டிக் கொண்டு வந்தாலும் சரி; திராவிடர் இயக்கத்தை வீழ்த்த எந்தக் கொம்பனாலும் முடியாது. அதற்கு சாட்சிதான் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய சமூக நீதி மாநாடு என்பதை நான் பெருமையோடு தெரிவிக்க விரும்புகின்றேன்.

உலகில் எந்த சமூக சீர்திருத்தவாதிகளுக்கும் கிடைக்காத பெருமை தந்தை பெரியாருக்குக் கிடைத்தது. எந்தக் கொள்கைக்காக அவர் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டினாரோ அந்தக் கொள்கைக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் கிடைத்தது என்று சொன்னால், அதற்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் என்பதை யாரும் மறந்திட மறுத்திட முடியாது. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், 1967இல் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஆட்சியின் தலைவனாக தமிழக முதல்வராக அறிஞர் அண்ணா அவர்கள் அன்றைக்கு பொறுப்பை ஏற்றுக்கொண்டு சட்டமன்றத்திற்குள் நுழைந்து முக்கிய மான மூன்று தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றித் தந்தார்கள்.

தந்தை பெரி யாரின் வாழ்நாளிலேயே சுயமரியாதைத் திருமணங்கள் அவர் நினைத்தது. அவர் வாழ்ந்த காலத்திலேயே அண்ணா முதலமைச்சராக இருந்து அதை சட்டமாக்கி தந்தார்கள். சீர்திருத் தத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும்.

அதேபோல் 1972 தந்தை பெரியாருடைய மிகப்பெரிய கனவு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற தீர்மானத்தை, தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது சட்டமாக்கித் தந்தார்கள்.

இன்னொரு குறை தந்தை பெரியாருக்கு நீண்ட நாட்களாக இருந்தது. தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்று. 1967 இல் அண்ணா ஆட்சிக்கு வந்து 1968இல் அது நிறைவேற்றப்படுகின்ற நேரத்தில் சட்டமன்றத்தில் அண்ணா அவர்கள் தீர்மானத்தை முன்மொழிந்து ஏகமனதாக நிறைவேற்றி அதற்குப் பிறகு அதற்காக ஒரு பாராட்டு விழா நிகழ்ச்சி நடத்தப் பட்டது.

இப்போது கலைவாணர் அரங்கமாக இருக்கக்கூடிய அரங்கம் அன்றைக்கு மாணவர் அரங்கம். அந்த அரங்கத்தில் தான் அந்த விழா நடைபெறுகின்றது. ஆனால், அண்ணா அவர்களால் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், வந்தார்.

உடல் நலிவுற்ற நிலையிலும் விழாவிற்கு வந்தவர் அண்ணா!


காரணம், அவர் உடல் நலிவுற்று கடுமையான வலி தாங்க முடியாத நிலையில் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றார்.

அப்பொழுது தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் கிடைத்த விழா அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. மருத்துவர்கள் போகக்கூடாது என்று தடுக்கின்றார்கள். வீட்டில் இருக்கக்கூடிய உற வினர்கள். அவரது குடும்பத்தைச் சார்ந்திருக்கக் கூடியவர்கள் கட்டாயப்படுத்துகின்றார்கள் போகக்கூடாது என்று, ஏன்; அவரைச் சுற்றி என்றைக்கும் இருக்கக்கூடிய கழகத் தம்பி மார்கள் அத்துணை பேரும் தடுத்தார்கள், முடியாது. நான் போய் தான் தீருவேன் என்று பிடிவாதமாக அத்துணை அறிவுரைகளையும் நிராகரித்துவிட்டு நேரடியாக விழாவிற்கு வருகின்றார். வந்து பேசுகின்ற போது சொல்லுகின்றார்.

இந்த விழாவிற்கு என்னை போகக் கூடாது என்று உடல் நலத்தைக் கருதி சொன்னார்கள். அதையும் மீறி வந்திருக்கின்றேன் என்று சொன்னால், தமிழ்நாட்டிற்கு தமிழ் நாடு என்று பெயர் கிடைத்திருக்கக்கூடிய இந்த விழாவில் நான் பங்கேற்கவில்லை என்று சொன்னால் இந்த உடல் இருந்து என்ன பயன்? என்ற உணர்வோடு நான் வந்திருக் கின்றேன் என்று சொன்னார்.

தந்தை பெரியாரின் மனக்குறையாக இருந்த நம்முடைய தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயரும் சூட்டப்பட்டது. இந்த மாநாட்டிற்கு அய்யா ஆசிரியர் அவர்கள் சமுக நீதி மாநாடு என்று பெயர் சூட்டியிருக்கின்றார்கள். சமுகத்தில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கக்கூடிய அநீதிகள் ஆக்கிரமிக்கும் வேளையில் உண்மையிலே, இந்த சமுகநீதி மாநாடு தேவை தான். கட்டாயம் தேவைதான். நடத்தப்பட வேண்டும் என்பது அவசியம் தான்.

மாநாடு அல்ல - போராட்டங்களை நடத்த வேண்டியது அவசியம்!


இன்னும் சொன்னால், சமுக அநீதி என்பது மத்திய அரசாங்கத்தின் அநீதியாக, மாநில அரசாங்கத்தின் அநீதியாக மாறிவிட்ட காலத்தில் சமுக நீதியைக் காக்க மாநாடு அல்ல, பல போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியத் திற்கு நாம் வந்திருக்கின்றோம்.

மத்தியில் ஆளக்கூடிய மோடி தலைமையில் இருக்கக்கூடிய மத்திய ஆட்சி இந்த சமுக நீதியைக் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு அரசாக அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. குழி தோண்டிப் புதைப்பதைக்கூட நேரடியாகச் செய்யாமல் மறைமுகமாக தந்திரமாக செய்து கொண்டிருக் கக்கூடிய நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக் கீடு வழங்கிட வேண்டும் என்பதுதான் சமுக நீதி. சமுக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் காலம்காலமாக யாரெல்லாம் புறக் கணிக்கப் பட்டார்களோ, பின் தங்கி இருக்கிறார்களோ அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட முதல் திருத்தம் அதுதான். அந்த சாதனைக்குக் காரணமானவர் தான் நம்முடைய தந்தை பெரியார் அவர்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு அன்றைக்கே ஜவஹர்லால் நேரு எதிர்த்தார்!


நாடாளுமன்றத்துக்கே போகாத தந்தை பெரியார் இந்த சாதனையை சாதித்துக் காட்டினார். அப்படிப்பட்ட அந்தச் சூழ்நிலையில் சமூக ரீதியாக மற்றும் கல்வி ரீதியாக என்று மட்டும் இல்லாமல் பொருளாதார ரீதியாக கொண்டு வர வேண்டும் என்று அன்றைக்கே சிலர் கோரிக்கை வைத்தார்கள். அன்றைக்கு பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அவர்கள் அதை திட்டவட்டமாக மறுத்திருக்கின்றார்கள். முழுமனதோடு சொல்லியிருக்கின்றார், அதை ஏற்க முடியாது என்று. பொருளாதார அளவுகோல் என்பது மாறி விடும், இன்று ஏழையாக இருப்பவர் அடுத்த ஆண்டு பணக்காரராக மாறிவிடுகிறார். அது போல் இன்று பணக்காரராக இருப்பவர், அடுத்தாண்டு மாறிவிடக்கூடிய சூழ்நிலை. அதனால் பொருளாதார அளவுகோல் சரியாக வராது என்று பிரதமர் நேரு அவர்கள் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். பொருளாதார அளவு கோல் என்பது அன்றைக்கே கைவிடப்பட்டிருக்கின்றது.

நாடாளுமன்றத்தில் இதற்கான விவாதமும் நடை பெற்றிருக்கின்றது, அதன்பிறகு வாக்கெடுப்பும் நடை பெற்றிருக்கின்றது, அந்த வாக்கெடுப்பில் பொருளாதார அளவு கோலுக்கு ஆதரவாக 5 எம்.பி.க்கள். அன்றைக்கு அதை எதிர்த்தவர்கள் 243 எம்.பி.க்கள். அப்படிப்பட்ட பொருளாதார அளவு கோலை தான் இப்போது நரேந்திரமோடி அவர்கள் கொண்டு வருகிறார். உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாக இருந்த சின்னப்ப ரெட்டி அவர்கள் ஒரு தீர்ப்பில் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார். இடஒதுக்கீடு என்பது கல்வி, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்துக்குத் தானே தவிர, அது வறுமை ஒழிப்புத் திட்டம் இல்லை என்று அந்த நீதியரசர் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்.

சமுகநீதிக் கொள்கையை குழிதோண்டிப் புதைப்பது ஆகும்!


சமுக நீதி என்ற பெயரால் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு தருவது சமுக நீதிக் கொள்கையை குழி தோண்டிப் புதைப்பது ஆகும்.


பொருளாதார இட ஒதுக்கீடு என்ற பெயரால் மோடி கொண்டு வந்திருப்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல, சமுக நீதியை ஒழிக்கும் திட்டம். மாதத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கக் கூடியவர்கள் ஏழைகளா? 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் ஏழைகளா? இதிலிருந்து என்ன தெரிகிறது என்று சொன்னால் வாக்குக்காக அரசியல் இலாபத்திற்காகத்தானே தவிர, வேறு எந்தக் காரணமும் கிடையாது.


அண்மையில் அய்ந்து மாநிலத் தேர்தலில் மோடி தோற்றுப் போனார். தோற்றுப்போன காரணத்தால் மக்களை எப்படியாவது ஏமாற்றி வாக்குகளை எப்ப்படியாவது வாங்க வேண்டும். வாக்குக்குப் பணம் கொடுக்கக்கூடிய நிலையில் இன்றைக்கு இந்தத் தந்திரத்தை அவர் கையில் எடுத்திருக்கின்றார். அதனால் தான் இப்பொழுது பார்க்கின்றோம், விவசாயிகளுக்கு 6 ஆயிரம் பணம் கொடுக்கப்போகின்றேன் என்கிறார்.

6 ஆயிரத்தை ஒரே தவணையாக அல்ல; 3 தவணையாக 2000, 2000, 2000 என்று மூன்று தவணையாகப் பிரித்துக் கொடுக்கப்போகின்றேன் என்று அறிவித்திருக்கின்றார். நான் கேட்கின்றேன், இதே விவசாயப் பெருங்குடி மக்களுக்கு, எத்தனையோ போராட்டங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; நம்முடைய தலைநகராக இருக்கக்கூடிய டில்லிக்கே சென்று போராடினார்களே, விதவிதமான போராட்டங்களை நடத்தினார்களே, சாலையில் உருண்டு போராட்டம் நடத்தினார்கள். பிச்சையெடுத்து போராட்டம் நடத்தி னார்கள். கண்ணில் கருப்புத்துணி கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தினார்கள். அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினார்களே, வெட்கத்தை விட்டுச் சொல்லுகின்றேன், முழு நிர்வாணப் போராட்டம் நடத்தினார்களே, இதைவிட கேவலம் இந்தியாவிற்கு தேவையா? அவர்கள் வைத்த கோரிக்கை என்ன? கோரிக்கை ஒரு பக்கம் இருக்கட்டும். பிரதமர் எங்களை அழைத்துப் பேசட்டும் என்றார்கள். பேசினாரா? அழைத்துப்பேசினார்களா? கிடையாது

விவசாயப் பெருங்குடி மக்களுக்கு கலைஞர் செய்த சாதனை!


இதே தலைவர் கலைஞர் அவர்கள் விவசாயப் பெருங்குடி மக்களுக்காக செய்த சாதனைகள் எத்த னையோ உண்டு. மறைந்த எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில் இதே விவசாயப் பெருங்குடி மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு மிகப்பெரிய போராட்டம் நாராயணசாமி நாயுடு தலைமையில் போராட்டம் நடத்தினார்களே. என்ன போராட்டம் என்றால், மின்சாரக் கட்டணம் குறைக்க வேண்டும். எவ்வளவு? 1 பைசா. 1 பைசா குறைக்க வேண்டும் என்று சொல்லி போராடு கின்ற நேரத்தில் செவிமடுத்துக் கேட்டார்களா? அன்றைக்கு இருந்த ஆட்சியாளர்கள் முடியாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்கள். ஆனால், 89இல் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு யாரும் கோரிக்கை வைக்காத நேரத்தில் சட்டமன்றத்தில் அறிவிப்பாக வெளியிட்டார்.

தி.மு.க. அடையாளம் காட்டுபவரே அடுத்த பிரதமர்!


அதேபோல், 2006 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி வந்ததும், ஏழாயிரம் கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்தாரே தலைவர் கலைஞர் அவர்கள்.

இப்படி சொன்னதை செய்தவர் தலைவர் கலைஞர் அவர்கள், சொல்லாததையும் செய்தவர் தான் தலைவர் கலைஞர் அவர்கள்.

ஆனால், இன்றைக்கு ஓட்டுக்காக இந்த அறிவிப்பு கள். பூச்சி மருந்துகூட வாங்க உதவாது. நரேந்திர மோடி அவர்களால் இன்றைக்கு இந்தியா 15 ஆண்டுகாலம் பின்னோக்கிப் போயிருக்கிறது. மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தால் - வரப்போவது இல்லை - வருவதற்கான வாய்ப்பே இல்லை. விரைவிலே வரவிருக்கின்ற நாடாளு மன்றத் தேர்தலால் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வரப்போகிறது.

அப்படி வந்தால், தமிழ்நாட்டில் திராவிடமுன்னேற்றக் கழகம் அடையாளம் காட்டுபவர் தான் பிரதமர். ராகுல் காந்தி அவர்கள் தான் பிரதமர் என்று ஏற்கெனவே அறிவித்து இருக்கிறேன், நிச்சயம் அந்த நிலை உருவாகப் போகிறது.

நாடாளுமன்றத்துக்கே வராத, உச்ச நீதி மன்றத்தையே மதிக்காத, ரிசர்வ் வங்கியை, சி.பி.அய். அதிகாரிகளை பந்தாடுகிற, மாநில அரசுகளை மதிக்காத, மாநில முதலமைச்சர் களை அடிமைகளாக நினைக்கிற நரேந்திர மோடியின் ஆட்சியை அப்புறப்படுத்தும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் - கம்யூனல் - கரப்ஷன் மூன்றையும் அடிப்படையாக வைத்து நடக்கும் அரசு தான் மோடியின் அரசு. அதாவது ஊழல், முதலீடுகள், பண்பாடு ஆகிய மூன்றும் ஒரே இடத்தில் குவிய வேண்டும் என்று மோடி நினைக்கிறார். மோடியுடன் சேர்ந்துள்ள அனைவரையும் நாம் எதிர்க்கிறோம். இந்த மதவாத சக்தி களை தேர்தல் களத்தில் முறியடிக்க பிரச்சாரக் களத்தில் திராவிடர் கழகம் கை கோர்க்க வேண்டும் என்று அழைக்கிறேன்.

இந்த மாநாட்டில் அய்யா ஆசிரியர் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோளை வைக்கலாம் என கருதுகிறேன். வேறொன்றும் இல்லை. உங்கள் உடல்நலத்தை மனதில் வைத்துக்கொண்டு சுற்றுப் பயணத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். சுற்றுப் பயணத்தை மேற்கொள்வது தான் உங்களுக்கு உற்சாகம், ஊக்கம். அது எங்களுக்கும் தெரியும். எங்களு டைய ஆசை தந்தை பெரியாரைப் போல் தலைவர் கலைஞரைப் போல நீங்கள் நீண்ட ஆண்டு காலம் வாழ வேண்டும். நீண்ட ஆண்டு காலம் வாழ்ந்து இந்த சமூகத்துக்கு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும், வாதாட வேண்டும். வாழ்வியல் சிந்தனைகள் எழுதி வரும் அவருக்கு நான் இதனைச் சொல்லத்தேவையில்லை.

இன எதிரிகளை வீழ்த்திட வாரீர்! தயாராவீர்!


திருவாரூரில் 1948ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் கூட்டிய தென் மண்டல திராவிட மாணவர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசியவர் நம்முடைய ஆசிரியர் அவர்கள். அவ்வளவு அழகாக உணர்ச்சி ததும்ப பேசியது மாநாட்டில் பதிவாகி இருக்கின்றது. அந்த மாநாட்டை நடத்திய போது தலைவர் கலைஞருக்கு வயது 24. ஆசிரியருக்கு வயது 14. இதோ ஆசிரியர் நடத்தும் மாநாட்டுக்கு கலைஞரின் மகனாக நான் வந்திருக்கின்றேன். இன எதிரிகளை வீழ்த்திட வாரீர்!

தயாராவீர் என்று சொல்லி வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.
-  விடுதலை நாளேடு, 25.2.19

தஞ்சை சமுகநீதி மாநாட்டில் சிறப்பான தீர்மானங்கள்

மண்டல் குழுவில் கூறியுள்ள பதவி உயர்வில் இடஒதுக்கீடு நீதித்துறையில் இடஒதுக்கீடு மற்றும் நலவழ்வுத் திட்டங்களை செயல்படுத்துக


* நீட் மற்றும் கிரீமிலேயரை அறவே நீக்குக!

* தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை

* உயர்ஜாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு மோசடியானதே!

* சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடு வழங்குக



தஞ்சாவூர், பிப். 24 தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு சிறுபான்மையினருக்கும் இடதுக்கீடு, மண்டல் குழு பரிந்துரைகளில் இடம் பெற்ற - நீதித்துறையில் இடஒதுக்கீடு - நல்வாழ்வுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு முதலியவற்றை மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டும் என்றும், நீட் தேர்வும், கிரீமிலேயரும் நீக்கப்பட வேண்டும் என்றும், 16 தீர்மானங்கள், தஞ்சையில் இன்று நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

24.2.2019 ஞாயிறு அன்று தஞ்சாவூரில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற சமுக நீதி மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

"1947இல் சுதந்திரம்" அடைந்து 72 ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்றளவும், ஒடுக்கப்பட்ட மக்கள் - தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான் மையினர் - அரசின் உயர்பதவிகளில் மிகக் குறைந்த அளவே பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். சமுக நீதி எனும் கோட்பாடு, அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலேயே வலி யுறுத்தப்பட்டுள்ளது. ஒடுக்கப் பட்ட மக்களுக்கு, அரசின் வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் இட ஒதுக்கீடு அளித்திட உரிய பிரிவுகளும், அதன் அடிப்படையில் சட்டங்களும் உள்ளன. ஆனாலும், அரசின் உயர் பதவிகளிலும், பார்ப்பனர் கள் மற்றும் உயர்ஜாதியினர் 70 விழுக்காட்டிற்கு மேல் ஆக்கிரமித்த நிலையில், அரசின் எந்த சட்டங்களும் நடை முறைப்படுத்துவதில் பல முட்டுக்கட்டைகள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, 69 விழுக்காடு இட ஒதுக்கீடு, திராவிடர் கழகத்தின் கருத்தினை ஏற்று,  அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன், தமிழக சட்டமன்றம் அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 31-சி-இன் படி, சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஒன்பதாவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டதால், பாதுகாப்பு பெற்றுள்ளது. சமுகப் புரட்சியாளர் தந்தை பெரியார் போராடிப் பெற்ற உரிமைகள், பாபா சாகிப் அண்ணல் அம்பேத்கர் அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழியே தந்த உரிமைகள், இதன் அடிப்படையில், மத்திய அரசின் அனைத்து நிலைகளிலும், ஒடுக்கப்பட்டோர் பெற்ற உரிமைகள் மிகக் குறைவே. பெற வேண்டிய உரிமைகள் மிக அதிகம். இதனைக் கருத்தில் கொண்டு, திராவிடர் கழகம் நடத்தும் இந்த சமுக நீதி மாநாட்டில், நாம் நிறைவேற்றும் தீர்மானங்களின் அடிப்படையில் ஒத்த கருத்துள்ள அனைத்துக் கட்சிகளும், ஒருங்கிணைந்து அகில இந்திய அளவில் ஓர் இயக்கமாக, சமுக நீதி உரிமையை பெற வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.

சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு - உடன் சட்டத் திருத்தம் தேவை!!


தீர்மானம் எண் 1:

இட ஒதுக்கீட்டிற்கான சட்டம்


தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திராவிடர் கழகம் அளித்த சட்ட முன் வரைவு அனைத்துக் கட்சிகளாலும் ஏற்கப்பட்டு, சட்டமன்றத்தில் சட்டமாகி, பின்னர் அரசியல் அமைப்பின் ஒன்பதாவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டு, பாதுகாக் கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசில் இத்தகைய சட்டம், குறிப்பாக வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கிட சட்டம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, அர சின் ஆணைகள் மூலமாகத்தான்  நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, நீதிமன்றத்தில் பல தடைகளும் அவ்வப்போது ஏற்பட்ட வண்ணம் உள்ளன.

முந்தைய அய்க்கிய முன்னணி அரசில் 2005 ஆம் ஆண்டில், இட ஒதுக்கீடு சட்டம் குறித்து, நாடாளுமன்ற உறுப் பினர் டாக்டர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான குழு அறிக்கை மூலம் நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைத் தும் இன்றளவும் அந்த அறிக்கைமீது அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழகத்தில் உள்ளதுபோல், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு சட்டம் மத்திய அரசிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இந்த சமுக நீதி மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2

மண்டல் குழு பரிந்துரை அனைத்தையும் நிறைவேற்றிடுக!


அ) அரசியல் அமைப்புச் சட்டத்தின் 340 ஆவது பிரிவின்படி அமைக்கப்பட்ட மண்டல் தலைமையில் அமைக் கப்பட்ட இரண்டாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த பரிந்துரை 31.12.1980 அன்று அரசிடம் அளிக்கப்பட்டு, 38 ஆண்டுகள் ஆகிய நிலையிலும் கூட, அதன் இரண்டு பரிந்துரைகள்  கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய பரிந்துரைகள்  பதவி உயர்வில் இட ஒதுக்கீடு, நீதித்துறையில் இட ஒதுக்கீடு மற்றும் நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு  இவை இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை.

ஆ) நாட்டின் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப் பட்ட மக்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்கள் அனைத்தும் தற்போது சமுக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறையின் மூலமாகவே நடைபெற்று வருகின்றன. தமிழகம் உள் ளிட்ட சில மாநிலங்களில் உள்ளதுபோல், தனியாக பிற்படுத்தப்பட்டோர்க்கு என அமைச்சகம் மத்திய அரசில் உருவாக்கப்படவில்லை. பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர்க்குத் தனி அமைச்சகம் இருப்பது போல், பிற்படுத்தப்பட்டோரின் நலன் சார்ந்த திட்டங்கள் அதிக முக்கியத்துவம் பெற, தனி அமைச்சகம் அமைத்திட மத்திய அரசை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

இ) பிற்படுத்தப்பட்டோர்அனைத்துத் துறைகளிலும் உரிய பங்கீடு பெற வேண்டுமாயின், மண்டல் குழு பரிந்துரைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என இந்த சமுக நீதி மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 3:

"கிரீமிலேயர்" எனும் கிருமி ஒழிக்கப்பட வேண்டும்


அரசமைப்புச் சட்டம், சமுகரீதியாக, கல்விரீதியாகப்  பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிட உரிமை தந்துள்ளது. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளித்திட எந்த பிரிவும் இல்லை. அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் உருவானபோதே, பொருளாதார அளவுகோல் தேவையற்றது என நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் வாக்களித்தனர். வேலைவாய்ப்பில் பிற் படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் (மண்டல் வழக்கு), உச்சநீதிமன்றம் "கிரீமிலேயர்" எனும் முறையை தேவையின்றிப் புகுத்தியது.  இதன் காரணமாக, பிற்படுத்தப்பட்டோரில் தகுதி படைத்த பலரும், இட ஒதுக்கீடு உரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டது. இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல. வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, அரசின் அனைத்து நிலைகளிலும் பங்குபெற ஏற்பட்ட ஒரு கருவியாகும். இதில் பொருளாதார அளவுகோலைப் புகுத்தும் "கிரீமிலேயர்" முறை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்.

தீர்மானம் எண் 4:

தனியார்த் துறைகளிலும் தேவை இடஒதுக்கீடு


தாராளமயம், தனியார்மயம், உலகமயம் (LPG) என் பதற்கான பொருளாதாரக் கொள்கைகளும், செயல்பாடுகளும் விரிந்துவரும் இந்தக் காலகட்டத்தில் அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள சமுகநீதியின் அடிப்படையில், தனியார்த் துறை சார்ந்தும் இடஒதுக்கீடு தேவை என்பது முன்னிலும் அதிகமான அளவில் அவசியமாகிவிட்டது.

அரசுத் துறைகள், பொதுத் துறைகளில் உள்ள தாழ்த் தப்பட்டோருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் சட்டப்படி யாகக் கிடைத்திருக்க வேண்டிய இடஒதுக்கீடு விகிதாச்சாரம் இன்னும் தேவையான அளவு எட்டப்படவில்லை என்பது வேதனைக்குரியது.

இந்த நிலையில், நிதி ஆயோக்கின் துணைத் தலைவரான ராஜிவ் குமார் என்பவர் தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு கூடாது என்று கூறியிருப்பதன்மூலம் பி.ஜே.பி ஆட்சி எத்தகையவர்களை எல்லாம் மிகப் பொறுப்பான பதவிகளில் அமர்த்தியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவில் உள்ள பெரு முதலாளிகள் வெளிநாடுகளில் தொழில்களைத் துவங்கும்போது அந்நாட்டு மண்ணுக்குரிய மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிவரும் நிலையில், உள் நாட்டில் மட்டும் தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு அளிக்காததும், பொறுப்பான பதவிகளில் உள்ளவர்கள் தனியார்த் துறை இடஒதுக்கீட்டை எதிர்ப்பது, வெகு மக்களின் உரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும் எதிரானது என்பதை இந்த "சமுக நீதி" மாநாடு சுட்டிக்காட்டி, தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 5:

சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு - உடன் சட்டத் திருத்தம் தேவை!!


மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கக்கூடிய பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் உள்ள 543 இடங்களில் கிடைத்துள்ள இடங்கள் வெறும் 62தான். விழுக்காட்டில் பதினொன்றே!

அதேபோல இந்தியா முழுதும் உள்ள 4030 சட்டமன்ற உறுப்பினர்களில் பெண்கள் பெற்றுள்ள இடங்கள் வெறும் 311 மட்டுமே. விழுக்காட்டில் எட்டு மட்டுமே!

இது மக்கள் பிரதிநிதித்துவம் என்ற முறையில் சமுகநீதிக்கு மிகவும் எதிரானதே! இந்த நிலையில் தேவேகவுடா பிரதமராக இருந்தபோது பெண்களுக்கு 33.3 விழுக்காட்டுக்கான மசோதா (108ஆம் திருத்தம்) 1996 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இதற்கு மேலும் காலந்தாழ்த்துவது எந்த வகையிலும் நியாயமற்றது - அநீதியானது என்பதால் பெண்களுக்கு உள் ஒதுக்கீட்டுடன் கூடிய (தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோருக்குத் தனித்தனி ஒதுக்கீடு) சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருமாறு மத்திய அரசையும், அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும்  "சமுக நீதி" மாநாடு கேட்டுக் கொள்கிறது. உள் ஒதுக்கீடு இல்லாவிடின், உயர் ஜாதியினரே இந்த இடங்களை பறித்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என்பதையும் எச்சரிக்கையுடன் இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.

தீர்மானம் எண் 6:

நீதித்துறையில் இட ஒதுக்கீடு


இந்திய நாட்டு உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் தான் உண்மையாக இன்றைய அரசியல் சட்ட ஜனநாயக முறையில் ஆளுகின்ற அமைப்புகள். மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றும் சட்டம்கூட சரியா - தவறா என்று தீர்ப்பளிப் பவையாகும். எனவே, அந்த மன்றங்களில் சமுகநீதிக் கொடி பறந்தாகவேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் 31 நீதிபதிகள். அதில் சில இடங்கள் காலியாகவும் உள்ளன. கடந்த பல ஆண்டுகளாக நமது தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களைச் சேர்ந்த நீதிபதிகள் (உயர்நீதிமன்றங்களில் சிறந்த மூத்த வழக்குரைஞர்கள், சட்ட நிபுணர்களாக இருந்தும்கூட) மருந்துக்குக்கூட ஒருவர் இல்லை. இது மாபெரும் சமுக அநீதியாகும்.

அதேபோல், மக்கள் தொகையில் 70 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுகங்களிலிருந்து நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் எத்தனைப் பேர்? ஒரே ஒருவர். இந்த நிலையில், மாவட்ட நீதிபதிகள் நியமனத்திலும், அகில இந்திய தேர்வைப் புகுத்தி, சமுக நீதியைக் குழி தோண்டிப் புதைத்திட மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது அரசின் முதன்மைத் துறைகளுள் நிர்வாகம், சட்டமன்றம் ஆகிய இரண்டிலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை உள்ள நிலையில், மூன்றாவது துறையான நீதித்துறையில், உச்ச நீதிமன்றம் வரை, இட ஒதுக்கீடு அளிப்பதுதான் சரியானது. இதனை மத்திய அரசு உணர்ந்து உரிய சட்டம் இயற்றிட இந்த சமுக நீதி மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 7:

"நீட்" தேர்வை நிரந்தரமாக நீக்குக!


மருத்துவம், பல் மருத்துவக் கல்வி ஆகியவற்றிற்கு அகில இந்திய அளவில் "நீட்" எனும் நுழைவுத் தேர்வுமுறை சமுகநீதிக்கு எதிரானது என்றும், தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்கும், கிராமப் புறத்தினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் திராவிடர் கழகமும், முக்கிய அரசியல் கட்சிகளும், சமுகநீதி அமைப்பு களும் எச்சரித்தபடியே, தொடர்ந்து நடைபெற்ற 2017-2018, 2018-19ஆம் ஆண்டுக்கான "நீட் தேர்வின் முடிவுகள்" அமைந்துவிட்டன.

இந்தியா முழுவதும் பல்வேறு கல்வி முறைகள் இருக்கும் நிலையில், குறிப்பிட்ட சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தின் அடிப்படையில் சி.பி.எஸ்.இ. நிர்வாகமே "நீட்" தேர்வை நடத்துவது என்பது மிகப் பெரிய சதியும் மோசடியுமாகையால் நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் "நீட்" தேர்வுக்கான விலக்குக் கோரி நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்திட வேண்டும் என்றும் மத்திய அரசினை இம்மாநாடு வலியுறுத்துகிறது. நீட் தேர்வு என்பது தொடக்கம் முதலே பல்வேறு மோசடிகளையும், குழப்பங்களையும், குறைபாடுகளையும் கொண்டுள்ளது என்பதையும் இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.

சமுகநீதியில் அக்கறை உள்ள அத்தனைக் கட்சிகளும் அமைப்புகளும், தலைவர்களும் ஓரணியில் எழுந்து நின்று மிகப் பெரிய அளவுக்கு மக்கள் வெள்ளம் கரைபுரண்டு எரிமலையாகக் கிளர்ந்தெழுந்து களம் அமைத்துப் போராடி வெற்றி பெற இம்மாநாடு அழைப்பு விடுக்கின்றது.

உயிரனைய இப்பிரச்சினைக்காக தொடக்கம் முதல் தொய்வின்றிக் குரல் கொடுப்பது - டில்லி வரை சென்று போராடுவது என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள திராவிடர் கழகம் இதற்கு முதலிடம் கொடுக்கிறது என்பதையும் இம்மாநாடு அறிவித்துக்கொள்கிறது.

இதற்கு ஒரே நிரந்தரத் தீர்வு - மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கே கொண்டுவருவதே. அதற்கான அரிய முயற்சி முன்னெடுக்கப்படுதல் வேண்டும்.

தீர்மானம் எண் 8:

உயர்ஜாதியினரில் பொருளாதார அடிப்படையில் நலிந்தோர்க்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு எனும் மோசடி


100 ஆண்டு கால நடைமுறையையும், பல்வேறு போராட்டங்களையும் வரலாறாகக் கொண்ட இட ஒதுக்கீடு என்ற பெயரால் உள்ள சமுகநீதியின் அடிப்படையைத் தகர்க்கும் வகையில், பொருளாதார அடிப்படையில் உயர்ஜாதியினரில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு, கல்வி வேலைவாய்ப்புகளில் அளிக்கப்படும் என்ற அரசியல் சட்டத் திருத்தத்தை, இரண்டே நாட்களில் மக்களவை, மாநிலங்களவைகளில் மத்திய அரசு நிறைவேற்றி விட்டது. அவசர அவசரமாக குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்று, மத்திய கெசட்டிலும் வெளியிட்டு, 14.1.2019 முதல் அமலாக்கத்திற்கு வந்துவிட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை அமைப் புக்கு எதிராக உள்ள இந்த சட்டத்தை எதிர்த்து, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சில சமுக அமைப்புகள் வழக்கு தொடுத்துள்ளன. இட ஒதுக்கீடு என்பது சமுக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களுக்கானது என்ற அளவு கோலில் பொருளாதார அளவுகோலையும் இப்பொழுது உள்ளே திணித்தால், அடுத்து, தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக் கீட்டிலும் 15(4) 16(4) பொருளாதாரத்தை மட்டுமே அளவுகோலாக்கி சட்டம் இயற்றும் ஆபத்து இருக்கிறது என்பதையும் இந்த சமுக நீதி மாநாடு  தொலைநோக்குடனும், எச்சரிக்கையுடனும் தெரிவித்துக் கொள்கிறது. ஏற்கெனவே, பிற்படுத்தப்பட்டோருக்கு, "கிரீமிலேயர்" என்ற பெயரில், பொருளாதார அளவுகோல், மறைமுகமாக திணிக்கப் பட்டுள்ளது.

உயர் ஜாதிக்காரர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக அவர்களை வீக்கர் செக்சன் என்று குறிப்பிடுவது அப்பட்ட மான மோசடியாகும். கல்வி, வேலை வாய்ப்புகளில் உயர் ஜாதியினர் ஏழை - பணக்காரர் வேறுபாடின்றி பெரும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுள்ளனர் என்பதுதான் உண்மை. தகவல் அறியும் உரிமையின்கீழ் பெறப்பட்ட தகவலும் அதனை உறுதிப்படுத்துகிறது. ஆண்டுக்கு எட்டு லட்சம் ரூபாய் (மாதம் 65 ஆயிரம் ரூபாய்) வருமானம் உள்ள உயர்ஜாதியினரை ஏழைகள் என்று அடையாளப்படுத்துவது கேலிக்குரியது.

சமுகநீதியைக் குழிதோண்டி புதைக்கும் மத்திய பி.ஜே.பி. அரசின் - உயர் ஜாதியினருக்கான பொருளாதார அடிப்படையிலான இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்திட அனைத்து சமுக அமைப்புகளும் ஓரணியில் நின்று போராட வேண்டும் என இந்த சமுக நீதி மாநாடு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

தீர்மானம் எண் 9:

இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு


"தூர்தர்ஷன்" - "பொதிகை" மற்றும் "வானொலி"களில் மாநிலச் செய்திகளில்கூட மாநிலச் செய்திகளுக்கு உரிய இடம் கொடுக்காமல், முற்றிலும் மோடி புராணம் பாடுவதும், மத சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை, இந்தி மொழித் திணிப்பு  என்னும் வகையில் செயல்படுவது சட்ட விரோதமும், நியாய விரோதமும், மாநில உரிமை விரோதமுமாகும். வானொலியில் ஒழிக்கப்பட்டிருந்த ஆகாஷ்வாணி மறுபடியும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

அண்மைக் காலமாக, எஃப்.எம் வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகளில், தேவையின்றி இடையிடையேயும், இதே போன்று, திரையரங்குகளிலும், இந்தியில் விளம்பரங்கள் செய்வதும் நடைபெற்று வருகிறது.

நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பணம் செலுத்தும் படிவங்களில் இடம் பெற்ற தமிழ் நீக்கப்பட்டு, அந்த இடங்களில் எல்லாம் இந்தி திணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணிமனைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல வகைகளிலும் இந்தி கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மாறாக மத்திய அரசு மொழி வெறியோடு செயல்பட்டால் விபரீத விளைவு ஏற்படும் என்று இம்மாநாடு எச்சரிக்கிறது.

தீர்மானம் எண் 10:

மத்திய அரசின் அனைத்து தேர்வுகளும் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும்


தற்போது, மத்திய அரசின் பணிகள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கான குடிமைப் பணி தேர்வு (சிவில் சர்வீஸ்), மத்திய பணியாளர் ஆணையம் (எஸ்.எஸ்.சி.), நடத்தும் தேர்வு, ரயில்வே, வங்கி, காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் நடத்தப்படும் தேர்வுகள் அனைத்தும், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் கேள்வித்தாள் வழங்கப்பட்டு நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக, வட மாநிலங்களில் இருந்து, குறிப்பாக, பீகார், ஜார்கண்ட், ஒரிசா போன்ற மாநிலங்களில் இருந்து பெரும் அளவில் தேர்ச்சி பெற்று, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். அண்மைக் காலமாக, இந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. மேலும், குரூப் "சி" மற்றும் "டி" பதவிகள், வங்கிகளில் கிளார்க் பதவிகளுக்கு, அந்தந்த மாநில மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற விதியையும் மாற்றி, முன்னுரிமை என்று மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மொழி தெரியாத வட மாநிலத்தவர், இந்த பதவிகளிலும் வரக்கூடிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில்  இந்த நிலை  அதிகரித்து வருகிறது. தமிழ் நாட்டில் படித்து, பட்டம் பெற்று வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக மாறி வருகிறது.

இது மிக மோசமான சமுகக் கொந்தளிப்பை தென் மாநிலங்களில் உருவாக்கி வருகிறது. "சமுக நீதி" என்பது வெறும் இட ஒதுக்கீடு மட்டுமல்ல. மாநில உரிமையையும் உள்ளடக்கியதே. இந்த அடிப்படையில், 1. மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பதவிகளுக்கான தேர்வு அரசியல் அமைப்பின் எட்டாவது அட்டவணையில் கூறப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்திலும்  நடத்தப்பட வேண்டும். 2. அதிகாரி பதவிகளுக்கான தேர்வுகள், அகில இந்திய அளவில் என்றில்லாமல், மண்டல வாரியாக (தென் மாநிலங்கள் உள்ளடக்கிய தென் மண்டலம்) என்ற வகையில் தேர்வுகள் இருப்பதுதான் அந்தந்த மாநிலத்தில் உள்ள கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு வாய்ப்பினை உருவாக்கும். ஒரு மாநிலத்தில் பணியாற்றும் அனைவரும் அந்த மாநில அரசின் அலுவல் மொழியைத் தெரிந்திருப்பது கட்டாயம் என்பதையும் உறுதிப்படுத்திட வேண்டும்.

இதற்கு ஏற்ற வகையில் உரிய சட்டத்தினை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என இந்த சமுக நீதி மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 11:

சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு


சிறுபான்மை மக்களாகிய முஸ்லீம் மக்களின் சமூகம், கல்வி, பொருளாதார நிலையை ஆராய்ந்து அது குறித்து அறிக்கையை நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையில் நவம்பர் 2006-ல் மத்திய அரசிடம் அளித்தது. ஆனால், இன்றுவரை அந்த அறிக்கையின் பரிந்துரைகள், அரசுத்துறையில் போதிய பிரதிநிதித்துவம் உள்ளிட்ட எதனையும் இன்றுவரை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. சச்சார் கமிட்டி பரிந்துரைகளை விரைந்து நிறைவேற்றிட இந்த மாநாடு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 12:

பள்ளிகளை மூடுவது தவறானஅணுகுமுறை


போதிய அளவு மாணவர்கள் வருவதில்லை என்று காரணம் காட்டி, அரசுப் பள்ளிகள், உள்ளாட்சி நடத்தும் பள்ளிகள் மூடப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும். மாணவர்களின் வருகைக் குறைவுக்கான காரணங்களைக் கண்டாய்ந்து, அந்தக் குறைகளை நீக்கவேண்டுமேயன்றி, அதற்காகப் பள்ளிகளை இழுத்து மூடுவது தவறான அணுகுமுறையாகும். இதனால் கிராமப்புறங்களில் மாண வர்கள் கல்விக் கூடங்களுக்குச் செல்லுவது இடையில் நிற்கும் (Drop outs) அபாயம் ஏற்படும் என்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.

தீர்மானம் எண் 13:

பல்கலைக் கழக ஆசிரியர் தேர்வில் இட ஒதுக்கீடு தேவை!


பல்கலைக்கழகங்களுக்கான ஆசிரியர்கள் தேர்வு தொடர்பான விளம்பரத்தில் இடஒதுக்கீடு பற்றிய விவரம் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு இம்மாநாடு தனது கண்ட னத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மத்திய பல்கலைக் கழகங்கள் உள்பட அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் எல்லா வகையிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 14:

தொடர் பொதுத் தேர்வுகள் தவிர்க்கப்பட வேண்டும்


அய்ந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு என்ற கருத்து முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

ஏற்கெனவே 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு என்று தொடர்ந்து மூன்றாண்டுகள் பொதுத் தேர்வு, அய்ந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு போன்றவற்றிற்கு பொதுத்தேர்வு என்பது, மாணவர்களை வடிகட்டித் திருப்பியனுப்பும் முறையாகும். இதனால் ஒடுக்கப்பட்ட, முதல் தலைமுறை கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். 8ஆம் வகுப்பு வரை தேர்ச்சியையே நிறுத்தக் கூடாது என்ற கல்வியாளர்கள் வலியுறுத்தி, அது நடைமுறையிலும் உள்ள நிலையில், பா.ஜ.க.வால் நிறுவப்பட்டு, கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்ட புதிய கல்விக் கொள்கை 2016இன் பரிந்துரையை தனித்தனியாக இப்படி அமலுக்குக் கொண்டுவரும் மறைமுக குறுக்கு வழிகள் அடைக்கப்பட வேண்டும்.  மாணவர்களிடம் மன அழுத்தத்தைக்  கொடுக்கக் கூடியதாக தொடர் தேர்வுகள் இருக்கும் என்று கருதப்படுகிறது.

தனியார் பள்ளிகள் மேல்நிலைக் கல்வியின் அடிப்படையான 11ஆம் வகுப்புப் பாடத்தை நடத்தாமல், நேரடியாக 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்துகிறார்கள் என்ற நிலை இருக்குமானால், அதை மாற்றிட வேறு வழிகள் யோசிக்கப்படலாம். எனவே, பொதுத்தேர்வுகள் குறித்து மறுபரிசீலனை செய்யப்படவேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 15:

தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2017 திட்டத்தைக் கைவிடுக!


இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956-ன் படி அமைக்கப்பட்ட  மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவர்களை ஒழுங்குபடுத்தும் தன்னாட்சி பெற்ற இந்திய மருத்துவர் கவுன்சிலில் சில குறைபாடுகள் ஏற்பட்டதாகக் கூறி, அதற்குப் பதிலாக திருத்தப்பட்ட "தேசிய மருத்துவ ஆணைய மசோதா (NMC) 2017" என்ற ஒன்றைக் கொண்டு வந்திருப்பது பல வகைகளிலும் கேடானது என்பதை இம்மாநாடு திட்டவட்ட மாகத் தெரிவித்துக் கொள்கிறது.

ஏற்கெனவே உள்ள மருத்துவக் கவுன்சிலுக்கு அனைத்து மாநிலங்களில் இருந்தும் விகிதாசார அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆனால், புதிய ஆணையத்தில் மொத்தமுள்ள 25 உறுப்பினர்களுள் 20 உறுப்பினர்களை மத்திய அரசே நியமிக்கும். இவர்கள் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களும் அல்லர். மாநிலங்கள் சார்பாக 5 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பார்கள். இதனால் பெரும்பாலான மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும். மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குக் கீழும் போய்விடும்.

சமூகநீதிக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரானது இந்தப் புதிய ஆணையம் என்பது வெளிப்படை.

ஏற்கெனவே உள்ள மருத்துவக் கவுன்சிலின் சட்டப்படி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65 அரசு ஒதுக்கீட்டுக்கும், 35 நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்பட்டு வந்தன.

புதிய ஆணையத்தின் விதிப்படி அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் 40 நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்கள் 60 என்று வரையறுக்கப்பட்டுள்ளன. இதனால் பண வசதி பெற்றவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நுழையவும், குறைந்த கட்டணத்தில் படிக்கக் கூடிய அரசு மருத்துவக் கல்லூரிக்கான இடங்கள் குறைவதால் பொருளாதார வசதியற்றவர் மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்படுகின்றன.

புதிய ஆணையத்தின் விதிப்படி மருத்துவப் பட்டப் படிப்புப் பெற்று வெளியேறக் கூடியவர்கள், தரம் மேம் படுத்துதல் என்ற முறையில் நெக்ஸ்ட் நேஷனல் எக்ஸிட் தேர்வு என்ற மற்றொரு புதிய நுழைவுத் தேர்வு எழுதுவது கட்டாயமாகிறது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவராகவே முடியும். இத்தேர்வில் தோல்வியுற்றால் ஆறு மாதங்கள் காத்திருக்கவேண்டும் என்பதெல்லாம் அய்ந்தாண்டுகளுக்குமேல் படித்து பல்கலைக் கழகத் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களை சிறுமைப்படுத்தும், எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் ஏற்பாடாகும். முதல் தலைமுறையாக டாக்டர்கள் ஆவோருக்குப் போடும் தடைக்கற்கள் இவை என்பதால், இந்தப் புதிய தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 2017 என்பதை விலக்கிக்கொண்டு, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மருத்துவக் கவுன்சிலின் குறைகளை நீக்கி செயல்படுத்தவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 16:

மாற்றுத் திறனாளிகளுக்கான சமூகநீதி


உடலியல் மற்றும் மனநிலை பாதிப்பு, இயற்கை பன்முகத் தன்மையின் ஒரு முகமேயன்றி, அது ஒரு குறைபாடில்லை (Disability is not a Deficit. But part of Natural’s diversity) என்பதை பகுத்தறிவு மற்றும் சமூகநீதியின் பார்வையின் வழிநின்று இம்மாநாடு தெளிவுபடுத்துகிறது. அனைத்துவிதமானமாற்றுத்திறனுடையோரும் சுயமரியாதைக்கும், சமத்துவத்திற்கும் பாத்திரமானவர்களே என்பதால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் சமத்துவத்தை வலியுறுத்தும் சட்ட சரத்தில் திருத்தம் செய்து, சட்டத்தின் முன் மாற்றுத்திறனுடையோர் மற்றவர்களுக்கு இணையானவர்களே என்ற தத்துவத்தை நிலைநாட்ட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

கடைக்கோடி மனிதர்கள் என்ற வகையிலும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் அவசியத்தின் பேரிலும் 5% விழுக்காட்டிற்கு மேல் இருக்கும் மாற்றுத்திறனுடையோருக்கும் உள்ளடங்கிய அரசியல் பிரநிதித்துவம் (Inclusive representation) தேவை என்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

-  விடுதலை நாளேடு, 24.2.19