ஞாயிறு, 30 ஜூன், 2024

கோவில்பட்டியில் திராவிடர் எழுச்சி மாநாடு!

 

 இயக்க வரலாறான தன் வரலாறு (337) – கி.வீரமணி

2024 அய்யாவின் அடிச்சுவட்டில் ஏப்ரல் 16-30, 2024

கோவில்பட்டியில்
திராவிடர் எழுச்சி மாநாடு!

கோவில்பட்டியில் 22.1.2005 அன்று தென்மண்டல திராவிடர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. கோவில்பட்டி திராவிடர் கழகக் கொள்கைப் பட்டியானது. எங்குப் பார்த்தாலும் கழகத் தோழர்கள், தோழியர்களாகவே காணப்பட்டனர்.
இளைஞர் அரங்கம் நிகழ்ச்சி தொடங்கியது. மாநில இளைஞரணி அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன் அனைவரையும் வரவேற்றார். கழகச் சட்டத்துறை அமைப்பாளர் வழக்குரைஞர் கி. மகேந்திரன் மாநாட்டிற்குத் தலைமை வகித்து உரையாற்றினார்.
“சங்கராச்சாரி யார்?“ என்னும் தலைப்பில் சி.எம். பெருமாள், ‘புட்டபர்த்தி சாயிபாபா‘ என்ற தலைப்பில் சீனி. விடுதலையரசு, ‘சதுர்வேதி, பிரேமானந்தா வகையறாக்கள்’ என்னும் தலைப்பில் மதுரை வேங்கை மாறன் ஆகியோர் உரையாற்றினர்.

பிறைநுதல் செல்வி

அடுத்து, திராவிடர் எழுச்சி மாநாட்டை பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் சிகாகோ டாக்டர் சோம. இளங்கோவன் திறந்து வைத்து உரையாற்றினார்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் படத்தை ஆந்திர மாநில உயர்நீதி மன்ற மேனாள் நீதியரசர் பி.எஸ்.ஏ.சாமி அவர்கள் மாநாட்டில் கூடியிருந்த மக்களுடைய கரவொலிக்கிடையே திறந்து வைத்து உரையாற்றினார்.

கு.வெ.கி.ஆசான்

அடுத்து, பகல் 12 மணிக்கு மேல் மகளிர் அரங்கம் தொடங்கியது இலட்சுமி கண்ணையன் வரவேற்றுப் பேசினார். கழகத் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி தலைமை தாங்கி உரையாற்றினார். ‘ஒழிக்கப்பட வேண்டியவை மனுதர்மம்’ என்னும் தலைப்பில் ரமா பிரபா, ‘வேதங்கள்‘ என்னும் தலைப்பில் ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம், ‘இதிகாசங்கள்‘ என்னும் தலைப்பில் வீ.கலைவாணி ஆகியோர் உரையாற்றினர். த.அன்புச் செல்வி இறுதி உரையாற்றினார்.

பி.எஸ்.ஏ.சாமி

பிறகு அறிவியல் அரங்கம் தொடங்கியது. தி.ப. பெரியாரடியான் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். துணைப்பொதுச்செயலாளர் கு.வெ.கி.ஆசான் தலைமை வகித்துப் பேசினார். உயிர்கள் தோற்றம், வளர்ச்சி பற்றி பேராசிரியர் நா. வெற்றியழகன், ஆழிப்பேரலைகள் (சுனாமி) பற்றி பாமா, சோதிடம், வாஸ்து அறிவியலா? என்னும் தலைப்பில் பால். ராசேந்திரம் ஆகியோர் உரையாற்றினர். தி. ஆதவன் நன்றி கூற. முற்பகல் மாநாடு முடிவுற்றது.

இலட்சுமி கண்ணையன்

மாலை 5 மணிக்கு சியாமளா திரையரங்கம் அருகிலிருந்து பேரணி புறப்பட்டது. கோவில்பட்டி பெரியார் பெருந்தொண்டர் செல்லத்துரை பேரணிக்குத் தலைமை வகித்தார். திராவிடர் கழகத் தென்காசி மாவட்ட தலைவர் டேவிட் செல்லத்துரை, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மதுரை நா. முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் முனியசாமி மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

பெரியாரடியான்

மாவட்ட வாரியாக பதாகைகளைக் கையில் ஏந்தி கழகத் தோழர்கள், தோழியர்கள் பெரியார் பிஞ்சுகள், இளைஞரணியினர் முழக்கங்களை முழங்கி வந்தனர்.
பொது மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த முழக்கங்கள் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தின.

சோம. இளங்கோவன்

மதுரை தங்கவேல் குழுவினரின் தப்பாட்டம் ஊரை ஒரு கலக்குக் கலக்கியது.

மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகள்:

பட்டுக்கோட்டை மாவட்டம் அத்திவெட்டி கழகத் தோழர்களின் செடில் காவடி கோவில்பட்டி மக்களைப் பெரிதும் கவர்ந்தது.
திராவிடர் கழக மதுக்கூர் ஒன்றிய இளைஞரணித் தோழர்கள் ரஞ்சித்குமார், செல்லப்பா, கருணாகரன் ஆகியோர் முதுகில் அலகுக் குத்திக் கொண்டு சுமோ காரினை இழுத்து வந்த காட்சி பொது மக்களையும் நெற்றியில் பட்டை தீட்டிக்கொண்டு காட்சியளித்த பக்தர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

அணி வகுப்பில் வீறு நடைபோடும் கருஞ்சட்டைக்காரர்கள்…

கடவுள் இல்லை என்று சொல்லி கார் இழுக்கும் தோழர்களைப் பாருங்கள் பாருங்கள்! என்று கூறிச் சென்றனர். கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று முழக்கமிட்டு வந்தனர். பெண்கள் வாயடைத்து நின்றனர். இளைஞர்களும் அவர்களை அறியாமலேயே கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
திராவிடர் கழகப் பெண்கள் கையில் தீச்சட்டி ஏந்திக்கொண்டு வந்ததும் தீச்சட்டி இங்கே மாரியாத்தாள் எங்கே?’ என்று கேள்வி எழுப்பியதும் பார்வையாளர்கள் மத்தியிலே புதிய சிந்தனைகளைத் தட்டி எழுப்பியது. சிறுவன் சிவகளை ஆனந்த் தீச்சட்டியை ஏந்தி வந்து வியப்பை ஏற்படுத்தினான்.

தீச்சட்டி இங்கே, மாரியாத்தாள் எங்கே?
என முழங்கிடும் மகளிர் அணியினர்…

திராவிடர் கழக கோவில்பட்டி மாவட்டத் தலைவரும், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவருமான தோழியர் வ. தமிழரசி கம்பீரமாகக் கழகக் கொடியை கையில் ஏந்தி வீர நடைபோட்டு வந்தார். மாவட்ட வாரியாகக் கழகத் தோழர்கள் அணிவகுத்து வந்தனர்.
பேரணி சத்தியபாமா திரையரங்கில் தொடங்கி, முதன்மைச்சாலை (மெயின் ரோடு) புதுச்சாலை, வக்கீல் தெரு, மந்தித் தோப்பு வழியாக மாநாடு நடக்கும் சர்க்கஸ் மைதானத்தை வந்தடைந்தது.
மாநாடு இரண்டு மணி நேரம் நடைபெற்றது.
மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
1. சுனாமியில் இறந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம்,
2. அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கக் கோரும் போராட்டத் தீர்மானம்
3. இட ஒதுக்கீட்டின் அளவை மாநில அரசுகள் தீர்மானித்துக்கொள்ள சட்ட திருத்தம் தேவை.
தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு அவசியம் தேவை என்றும்,
4. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே நிறைவேற்றக் கோரியும்.
5. காஞ்சிபுரம் சங்கராச்சாரியாரைக் கைது செய்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கையைப் பாராட்டியும்,
6. கழகத்தின் பிரச்சாரத் திட்டங்கள் பற்றியும்,
7. சுனாமியால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நிவாரண உதவி தேவை குறித்தும்,
8. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவியிடங்களை நிரப்புக என்றும்
9. அப்பாவி மக்களின் உயிர் உடைமைகளைப் பறித்த கலவரங்களுக்கு வித்திட்டவர்களுக்கு இறுதி அறிக்கை வந்தவுடன் கடும் தண்டனை சட்டப்படி வழங்க வேண்டுமெனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது – எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அன்றைய மதுரை மாநகர மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வீ.குமரேசன், (இன்றைய கழகப் பொருளாளர்,) ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ ஆங்கில இதழுக்கான நூறு சந்தாக்களைப் பலத்த கரவொலிக்கிடையே எம்மிடம் அளித்தார்.
1000 ‘விடுதலை’ சந்தாக்களுக்கான ரூபாய்
5 லட்சம் மாநாட்டில் எம்மிடம் அளிக்கப்பட்டது.

பிறந்த நாள் பரிசாக முதல் தவணையாக 1000 ‘விடுதலை’ சந்தாக்கள் ஆசிரியரிடம் வழங்கப்பட்டன.

மாநாட்டில் நாம் உரையாற்றுகையில், 1944இல் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே 1909ஆம் ஆண்டிலேயே கோவில்பட்டியில், ‘திராவிடர் கழகம்’ என்ற பெயரில் ஓர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டுள்ளது. அதன் 18ஆம் ஆண்டில் தந்தை பெரியாரும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யும் பங்கு கொண்டனர்.

தமிழ்நாட்டில் காஞ்சி சங்கராச்சாரியாரைக் கைது செய்யப்பட முடிந்தது என்றால் அதற்குக் காரணம் தந்தை பெரியார் ஊட்டிய உரம்.
எதுவரை ஆரியம் இருக்குமோ, அதன் ஆதிக்கம் நிலைக்குமோ, அதுவரை திராவிடர் இயக்கம், சுயமரியாதை இயக்கம், சமரச இயக்கம் இருக்கும் என்று இதே கோவில்பட்டியில் 1927இல் திராவிடர் கழகத்தின் 18ஆம் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் பேசினார்களே- அதே கருத்தை மீண்டும் நினைவூட்டுகிறோம் என்றும் மேலும் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தோம்.
மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் கே. சீவகன் நன்றி கூற, இரவு 10:45 மணிக்கு மாநாடு நிறைவுற்றது.

சனி, 29 ஜூன், 2024

திருவண்ணாமலை திராவிடர் எழுச்சி மாநாடு !

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (334)

2024 அய்யாவின் அடிச்சுவட்டில் மார்ச் 1-15, 2024

திருவண்ணாமலை
திராவிடர் எழுச்சி மாநாடு !

 திருவண்ணாமலையில் 16.10.2004 அன்று தந்தை பெரியாரின் 126ஆம் பிறந்த நாள் விழா மற்றும் “திராவிடர் எழுச்சி மாநாடு” மிகச் சிறப்பாக நடைபெற்றது.

முதலாவதாக, திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் கலை நிகழ்ச்சி, காலை 9.30 மணிக்குத் தொடங்கி மிகச் சிறப்பாக ஒரு மணி நேரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் இயக்கப் பாடல்களுக்கு இசையமைத்த, மறைந்த டி.ஆர். பாப்பா அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது
அடுத்து மாநாடு 10.35 மணிக்குத் தொடங்கியது. வேலூர் மாவட்ட தி.க. தலைவர் குடியாத்தம் வி. சடகோபன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
திராவிடர் கழகத் தலைமை செயற்குழு உறுப்பினர் கு.வெ.கி. ஆசான் மாநாட்டிற்குத் தலைமை வகித்துப் பேசினார்.

திருவண்ணாமலை திராவிடர் எழுச்சி மாநாட்டில் தீச்சட்டி ஏந்தும் ஆசிரியர்

“வருண தர்மம் (கீதை)” என்ற தலைப்பில் பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி மாநிலத்தலைவர்- பெரியார் பேருரையாளர் அ. இறையன், “சங்பரிவார்” என்ற தலைப்பில் கழக தகவல் தொடர்பு துறை அமைப்பாளர் வழக்குரைஞர் அருள்மொழி, “இதிகாசங்கள்” என்ற தலைப்பில் ஆவடி மாவட்ட தி.க., தலைவர் ஆவடி ஆர். திருநாவுக்கரசு, பெண்ணடிமை” என்ற தலைப்பில் கவிஞர் செ.வை. ர.சிகாமணி, “மனு தர்மம்” என்ற தலைப்பில் மாநில இளைஞரணி அமைப்பாளர் க. சித்தனைச்செல்வன், “புராணங்கள்” என்ற தலைப்பில் மு. தமிழ்மொழி ஆகியோர் நண்பகல் வரை நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றினர்.

ஆயிரக்கணக்கானோர் அணி வகுத்து வந்தனர். குறிப்பாக திருப்பத்தூர், மணியம்மையார் மகளிர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் முழக்கமிட்டு வந்தனர். அந்த மாவட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.கே.சி. எழிலரசன் மற்றும் பொறுப்பாளர்கள் விருதினையும் தொகையையும் கழகத் தலைவர் அவர்களிடம் மேடையில் பெற்றுக்கொண்டனர்.

சு.தெ.மூர்த்தி படம் திறந்து வைத்து மரியாதை செலுத்துகிறார் ஆசிரியர்

இரண்டாம் பரிசினை தருமபுரி மாவட்டம் பெற்றுச் சென்றது. பெரிய எண்ணிக்கையில் பங்கு கொண்டனர்.
மாவட்டக் கழகத் தலைவர் மு.மனோகரன், செயலாளர் வேப்பிலைப்பட்டி தமிழ்ச்செல்வன் மற்றும் பொறுப்பாளர்கள் விருதினை தொகையினையும் பெற்றுக்கொண்டனர். அந்த நிதியைக் கழகப் பாதுகாப்பு நிதிக்குத் திருப்பி அளித்தனர்.

கலை வீரமணி அவர்களின் ஏற்பாட்டில் திண்டிவனம் அன்புக்கரங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களின் அணிவகுப்பைப் பற்றிப் பேசாதவர்கள் யாரும் இல்லை.
150 மாணவ, மாணவிகளும், 20 ஆசிரிய மாணவிகளும் இந்த அணி வகுப்பில் பல்வேறு வயதினரும் சிறப்பான சீருடையுடன் முகப்பில் அணிவகுத்து வந்தனர்.
எங்கள் திராவிடப் பொன்னாடே! என்ற பாடல் முழங்க அவர்கள் வீரநடை போட்டு கழகக் கொடிகளைக் கம்பீரமாக ஏந்தி வந்தனர்.

இரவு நடைபெற்ற நிகழ்வில் 1. மதச்சார்பின்மை, சமூகநீதியை வலியுறுத்தியும், பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தனியார் துறையில் இடஒதுக்கீட்டை வற்புறுத்தியும், தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள பணியிடங்களை உடன் நிரப்பக் கோரியும்,
2. வேலை வாய்ப்பைத் தடைசெய்யும் செயல்களில் அரசுகள் ஈடுபடக் கூடாது என்று வலியுறுத்தியும்,
3. உயர்நீதிமன்ற நியமனங்களில் அனைத்து வகுப்பினருக்கும் வாய்ப்பளிக்க வேண்டியும்,
4. பொடா சட்டம் நீக்கத்திற்கு வரவேற்புத் தெரிவித்தும்
5. தமிழில் அர்ச்சனை, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் இவற்றை அமல்படுத்தக் கோரியும்,
6. விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றக்கோரியும்
7. சனாதனத்திற்கு எதிரான பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருவண்ணாமலை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மாநாட்டில் பங்கேற்ற தி.மு.க. பொருளாளர் ஆர்க்காடு நா. வீராசாமி, ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, சி.பி.அய்., மாநிலத் துணைச் செயலாளர் சி. மகேந்திரன் உள்ளிட்டோர் பெரிதும் பாராட்டி அவை நிறைவேற தத்தம் கட்சிகள் துணை நிற்கும் என்று மாநாட்டில் அறிவித்தனர்.
மாநாட்டின் நிறைவாக, தீர்மானங்களை விளக்கியும் வலியுறுத்தியும் மதவெறியைக் கண்டித்தும் நாம் நீண்டதொரு விளக்க உரையாற்றினோம்.

வியாழன், 27 ஜூன், 2024

தந்தை பெரியார் இறுதி முழக்கமும்… நமது உறுதி முழக்கமும்…

 

தந்தை பெரியார் இறுதி முழக்கமும்… நமது உறுதி முழக்கமும்…


 ஜனவரி 1-15, 2024

— தொகுப்பு: வை.கலையரசன் —

தந்தை பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் தந்தை பெரியாரே சமூகநீதிப் போராட்டங்களின் இயங்கு சக்தியாக விளங்குகிறார். சமத்துவம் விரும்பும் போராளிகள் ஏந்தும் ஆயுதமாகவும், ஆதிக்க சக்திகளைத் தூங்கவிடாதவராய் விளங்கிவருகிறார்.

அத்தகைய தந்தை பெரியார் அவர்களை நேரில் கண்ட தலைமுறை, நேரில் காணாத கொள்கை வழியில் ஏற்றுக்கொண்ட தலைமுறை, பெரியாரால் வாழ்கிறோம் என்ற உணர்வு படைத்தவர்கள் என்று அனைத்து தரப்பினரும் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வாக ‘தந்தை பெரியார் இறுதி முழக்கமும் நமது உறுதி முழக்கமும்’ என்னும் தலைப்பில்

18.12.2023 அன்று மாலை தந்தை பெரியார் இறுதிப் பேருரை ஆற்றிய 50ஆம் ஆண்டு சிறப்புக் கூட்டத்தில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற்புரை ஆற்றினார். தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமை உரையாற்றினார்.
நிகழ்வில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தி.மு.க. செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர்
சே.மெ.மதிவதனி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இறுதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரையாற்றினார். அவரது உரையில், “சுயமரியாதை என்பது மனிதர்களுக்கு மட்டும்தான். மிருகங்களுக்கோ, அய்ந்தறிவு படைத்தவைகளுக்கோ உண்டா? கிடையாது.

ஆனால், நமக்கு அந்த சுயமரியாதை உணர்வூட்டி உந்து, உந்து என்று உந்தி உயர்த்தவேண்டும் என்று நினைத்தார். தன்னுடைய உழைப்பு எந்த அளவிற்குப் பயன்பட்டது _ பயன்படவேண்டும் _ எது பாக்கி இருக்கிறது என்பதையெல்லாம் ஒரு கணக்குப் போட்டு, ஒரு காலக்கணக்கீடு சொல்லி, ஒரு வரவு- –_ செலவு திட்டம் போன்று ———_ அரிமா நோக்கு மாதிரி – திரும்பிப் பார்ப்பது என்று சொல்வார்களே அதுபோன்று இயற்கையிலேயே அமைந்த ஓர் உரைதான் 50 ஆண்டுகளுக்கு முன்னால், இதே பகுதியிலே அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் பேசிய பேச்சாகும்.

இயற்கை அமைத்த நல்வாய்ப்பாகவே, அன்றைக்குப் பேசியவன், இன்றைக்கும் பேசக்கூடிய அந்த வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். அதற்குப் பல காரணங்கள்.
அறிவியல் காரணம் _ சமூகவியல் காரணம் _ இயக்கவியல் காரணம் _ வாழ்வியல் காரணம். வாழ்வியலில், அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கக் கூடியவர்கள்; சமூகவியலில், நம்முடைய அமைப்பு, எந்தக் கட்சிக்காரர்களாக இருந்தாலும் உற்சாகம் கொடுப்பது. அதையும் தாண்டி, இயக்கவியலில் _ தோழர்கள் என்னைத் தோளின்மீது தூக்கி, உற்சாகத்தோடு, அய்யா அவர்களுடைய பணி நடந்தாகவேண்டும் என்று எனக்குச் சொல்வது.

தந்தை பெரியார் அவர்களுடைய இறுதி உரையின் தொடக்கத்தில் மிகக் கோபத்தோடு சொல்லுவார். கடுமையான கோபம்! இதுவரையில், அய்யாவின் உரையை நான் எழுதியிருக்கிறேன். நானும், புலவர் அவர்களோ, மற்றவர்களும் எழுதினாலும் _ இந்த உரையில் கொப்பளிக்கின்ற கோபாவேசம் இருக்கிறதே _ அது சாதாரணம் அல்ல! அவ்வளவு வேகமாகப் பேசுவார். அப்படி வேகமாகப் பேசும்பொழுது, ‘‘அம்மா, அம்மா” என்று அவர்கள் வலி தாள முடியாமல், அந்த வேனிலேயே புரண்டு எழுந்து பேசிய காட்சி.

மக்கள் எல்லாம் அதைப் பார்த்து, ‘‘அய்யா, நிறுத்திக் கொள்ளுங்கள், நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று சத்தம் போடுகிறார்கள்.
ஆனால், அய்யா நிறுத்தவில்லை. உரையைத் தொடருகிறார்.

அப்படிப் பேசும்பொழுது, தொடக்கத்திலிருந்து எங்கள் கொள்கை என்ன என்று ஆரம்பித்தார்.
நான் மனிதனாக இருக்கவேண்டும் என்று வாதாடுவது தவறா? அது என்னுடைய உரிமை அல்லவா! பிறப்புரிமை அல்லவா! அதையல்லவா தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய இறுதி முழக்கமாக ஆக்கினார்.

மாநாடு கூட்டியது டிசம்பர் 8 ஆம் தேதி இரவு. தொண்டர்களை அறப்போராட்டத்திற்கு அழைத்தார்.
அடுத்தகட்டமாக எச்சரிக்கை செய்தார்!

நாங்கள் ஏதோ கொஞ்சம் உணர்ச்சியோடு இருக்கிறோம். அதனால், அவன் இன்றைக்கு வாயை மூடிக்கொண்டு இருக்கிறான்.
சில பேர் புரியாமல் கேட்பார்கள், ‘‘ஏங்க, மனுதர்மத்தைப் படித்தால் நாக்கை அறுக்கவேண்டும்; கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்று சொன்னார்களே, இப்பொழுதும் ஊற்றிக் கொண்டிருக்கிறார்களா?” என்று புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்பது போன்று கேட்பார்கள். அதற்கு நான் பல மேடைகளில் பதில் சொல்லியிருக்கிறேன். ‘‘இப்பொழுது இல்லை.!”

ஏன் இல்லை?
நாங்கள் இருக்கிறோம், அதனால் இல்லை!
தந்தை பெரியார் கேட்கிறார்,

‘‘அய்ம்பது வருஷமாய் உழைத்ததிலே ஏதோ கொஞ்சம் மாறுதல். அதுவும் எதிரே நம்மைப் பார்த்து, சூத்திரன் என்று சொல்லமாட்டான். வீட்டிலே பேசுவான் _ இந்தச் சூத்திரப் பசங்க என்றுதான் பேசுவான். இந்த இழிவிலே இருந்து நீங்கணும். ஏதோ சட்டம், சமத்துவம், கடவுள் என்று சொன்னால், ஏதோ அதை உதைக்கிறோம், கடவுளை நாளைக்குச் செருப்பாலே அடிக்கச் சொல்கிறோம்; பல தடவை அடிச்சாச்சு. நாளைக்கும் அடிக்கச் சொல்கிறோம். நம் தாய்மார்களையும் நல்லா சாப்பிட்டு விளக்குமாற்றலே போடச் சொல்கிறோம். சட்டத்திலே இருக்கிறதை என்ன பண்ணுகிறது? ஏதோ கொஞ்சம் உணர்ச்சியோடு இருக்கிறோம்; இன்றைக்கு அவன் வாயை மூடிக்கிட்டு இருக்கிறான். நாளைக்கு பார்ப்பான் வந்துவிட்டான் என்றால், என்ன ஆகும்? எங்களைத் தவிர நாதி இல்லையே இந்த நாட்டில். எத்தனை நாளைக்கு நாம் இப்படியே கட்டிக் காத்துக்கிட்டு இருப்போம்!

எல்லாக் கட்சிக்காரனும் ஒன்றாய்ச் சேர்ந்து இன்றைக்கு இருக்கிற ஆட்சியை ஒழிக்கணும் என்கிறான். ஒழித்தால் ஒழித்துவிட்டுப் போ, எனக்கு ஒன்றும் கவலையில்லை. அப்புறம் என்ன? இன்றைக்குத் திருட்டுத்தனமாக மறைவாகப் பேசுகிறவர்கள் _ நாளைக்கு வெளிப்படையாகப் பேசுகிறான். பேசுகிறவனை பார்ப்பான் மாலை போட்டு வரவேற்கிறான். அவனுக்கு விளம்பரம் கொடுக்கிறான். எனவே, தோழர்களே, நம்முடைய நிலைமை உலகத்திலேயே பெரிய மானக்கேடான நிலைமையாகும்.” என்றார் தந்தை பெரியார்.

பெரியார் சொன்னது இன்றைக்கு நூற்றுக்கு நூறு சரியாக இருக்கிறதா, இல்லையா?
இன்றைக்கு ஏன் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறவேண்டும் என்று நாம் நினைக்கின்றோம்.
ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று ஏன் சொல்கிறோம்?
பார்ப்பனியம் _ பிராமிணோகிரசி _பார்ப்பன நாயகம் முழுக்க முழுக்க இருக்கிறது என்பதுதானே அதன் காரணம்?
பெரியாருடைய நுண்ணறிவு, அனுபவ அறிவைப் பாருங்கள்.
இன்று நாம் காணும் காட்சி _ ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி.

நம்முடைய இயக்கம், நம்முடைய கொள்கை, நம்முடைய ஆட்சி மாறவேண்டும் என்றுதானே அவர்கள் துடிக்கிறார்கள்?
அவர்கள் என்னதான் செய்தாலும், தமிழ்நாட்டில் அவர்களால் காலூன்ற முடியாது. தமிழ்நாடு மட்டுமல்ல, தென்னாடு முழுவதும் தெளிவாக இருக்கிறது என்பதற்கு அடையாளமாக தெலங்கானா மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி நிரூபித்தது.

வடபுலத்தைக் கைகளில் வைத்திருக்கிறார்கள். அங்கேயும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டு சதவிகிதம் அல்லது மூன்று சதவிகிதம்தான் வாக்குகள் வித்தியாசம்!

அன்றைக்குப் பெரியார் அவர்கள் காங்கிரசைவிட்டு வெளியேறினாரோ, அந்த நிலைமை காங்கிரசில் இன்றைக்கு மாறிவிட்டதே!

பெரியாருடைய சமூகநீதிக் கொள்கைப்படி காங்கிரஸ் கட்சியை நிருவாகம் செய்யக்கூடிய வர்கள்கூட இன்னின்னார் இருக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பெரியார் வெற்றி பெற்றுவிட்டாரே!

ராகுல் காந்தி அவர்கள் சமூகநீதியைப் பேசுகிறாரே!
இந்த 50 ஆண்டு காலத்தில் ‘‘ஜெயித்தே ஆகணும்” என்று சொன்னார் பெரியார்.
ஜெயித்துக் கொண்டிருப்போம்;

ஜெயிப்போம், வெற்றி பெறுவோம், நிச்சயமாக! என்று தெரிவித்தார். ♦

திருவல்லிக்கேணி மு.மூர்த்தி – இராஜலட்சுமி ஆகியோரின் இணையேற்பு நிகழ்வை நடத்தி வைத்த ஆசிரியர்

 15.7.2004 அன்று காலை 11 மணிக்கு பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் சார்பில் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதி செயலாளர் மு. மூர்த்தி _ இராஜலட்சுமி ஆகியோருக்கு ஜாதி மறுப்புத் திருமணம் மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் தலைமையில் நடைபெற்றது. திருமண நிலையப் பொறுப்பாளர் திருமகள், பார்வதி, ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், கு. தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை சந்தா ரூ.1000 மற்றும் சட்டப் பாதுகாப்பு நிதிக்கு ரூ.300ம் தமிழர் தலைவரிடம் திருமண நிகழ்ச்சியன்று வழங்கப்பட்டது. ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.

மு.மூர்த்தி – இராஜலட்சுமி ஆகியோரின் இணையேற்பு நிகழ்வை நடத்தி வைக்கும் ஆசிரியர்

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (330)

(கட்டுரையின் ஒரு பகுதி) 

இறப்பு எல்லைக்குச் சென்று மீண்டவர் பா.தட்சிணாமூர்த்தி!

 

இறப்பு எல்லைக்குச் சென்று மீண்டவர் !- வி.சி.வில்வம்


 ஜுன் 16-30 2024

பா.தட்சிணாமூர்த்தி !

சென்னை மற்றும் பல மாவட்டத் தோழர்களில் இந்தப் பெயரை அறியாதவர்கள் இருக்க முடியாது! ஒருமுறை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள், “இயக்கத்திற்காக உயிரைக் கொடுப்பேன் என்று சிலர் சொல்வார்கள், உண்மையிலேயே உயிரைக் கொடுத்து, மீண்டு வந்தவர் பா.தட்சிணாமூர்த்தி”, என்று சொன்னார்கள்!

இயக்க மகளிர் வாழ்க்கை குறித்து ‘விடுதலை’ ஞாயிறு மலரிலும், இயக்க ஆண்கள் குறித்து ‘உண்மை’ இதழிலும் கட்டுரைகள் வருவதைத் தோழர்கள் அறிவார்கள்! அந்த வகையில் தற்போது ஆவடி மாவட்ட காப்பாளராகப் பணியாற்றி வரும் பா.தென்னரசு எனப்படும் பா.தட்சிணாமூர்த்தி அவர்கள் குறித்து, இந்த இதழில் காணலாம்!

பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை பட்டாளம் பகுதியில்! பெற்றோர்கள் வசித்தது வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உமராபாத் எனும் கிராமம். தந்தை பாலகிருஷ்ணன் – தாய் பவுனம்மாள். சிறு வயதில் இருந்தே தம் அத்தை வீட்டில் வளர்ந்தவர் பா.தட்சிணாமூர்த்தி! 1996ஆம் ஆண்டு, பெங்களூர், அலசூர் பகுதியில் நடைபெற்ற தமிழ்ச் சங்க விழாவில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேடையிலேயே அவருக்கு தென்னரசு என்ற இந்தப் பெயரைச் சூட்டினார்!

முதல் பெரியார் கூட்டம்!

மூன்று ஆண்டுகள் அத்தை வீட்டில் வசித்த இவர், உமராபாத் சென்று 8ஆம் வகுப்பு வரை படித்தார். தொடர்ந்து மேல்நிலைக் கல்விக்கு அங்கு வாய்ப்பு இல்லை. எட்டு கிலோமீட்டர் கடந்து ஆம்பூர் செல்ல வேண்டும். இந்நிலையில் 8ஆம் வகுப்பு நண்பர்களுடன் சேர்ந்து, மேல்நிலைப் பள்ளிக்காக அப்போதே போராடி இருக்கிறார்.

இந்தியா சுதந்திரம் பெற்ற 1947இல் பிறந்திருந்தாலும், தமிழ்நாட்டு “விடுதலை”யைச் சுவாசித்த பின்னரே, இவரது சுயமரியாதை வாழ்க்கை தொடங்கி இருக்கிறது.

ஆம்! 1962இல் தம் ஊருக்கு அருகேயுள்ள பாலூர் கிராமத்திற்குப் பெரியார் வந்துள்ளார். இதன் காரணம் கூட வித்தியாசமானது. ஆமாம்! பாலூர் கிராமத்தில் குப்புசாமி அய்யங்கார் என்கிற ஒருவர் இருந்துள்ளார். அவர்தான் அந்த ஊரில் இருந்த சீனிவாச பெருமாள் கோயிலின் அறங்காவலர். அது மட்டுமின்றி சர்க்கரை ஆலையின் இயக்குநராகவும் இருந்துள்ளார். அவர் அந்தக் கிராமத்தில் கடுமையான தீண்டாமைக் கொடுமைகளைச் செய்துள்ளார். ஒவ்வொரு தனி மனிதரின் சுயமரியாதையையும் சீண்டிப் பார்த்துள்ளார். இதையறிந்த பெரியார், அங்கு கூட்டம் நடத்தி அதனைக் கண்டித்துள்ளார்!

தந்தை தந்த தண்டனை!

இதில் பா.தட்சிணாமூர்த்தி அவர்கள் கலந்து கொண்ட போது வயது 15. இந்தக் கூட்டத்திற்கு இவரை அழைத்துச் சென்றவர் பெயர் பெருமாள். வேடிக்கையைப் பாருங்கள்! இவர் பெயர் தட்சிணாமூர்த்தி, அவர் பெயர் பெருமாள். இரண்டுமே சாமி பெயர்கள். எந்தச் சாமியையும் பெரியார் விட்டு வைத்ததில்லை! 15 வயதில் பெரியார் கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், 17ஆம் வயதில் இருந்து ‘விடுதலை‘ நாளிதழை வாசிக்கத் தொடங்குகிறார். அதுவும் தனது ஊரில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரம் இருந்த ஆம்பூர் நூலகம் சென்று படிக்கிறார்!

ஆக, இவர் நாத்திகராகவும், ‘விடுதலை‘ படிப்பவராகவும் மாறியதால், அவரின் தந்தை அவரைக் கட்டி வைத்து உதைத்திருக்கிறார். “கோவிந்தா, கோவிந்தா” என்று சொல்லவும் வற்புறுத்தி இருக்கிறார். இந்நிலையில் தொழில் நிமித்தமாக உமராபாத் கிராமத்தில் இருந்து, சென்னைக்கு இடம் பெயர்கிறார். அங்கு 1967ஆம் ஆண்டு பக்கிங்காம் கர்நாடிக் (B&C MILL) நூற்பாலையில் வேலை கிடைக்கிறது. அது வெள்ளையர்கள் நிருவாகத்தில் அப்போது இருந்தது!

தொழிலாளர் நலன்!

அந்த ஆலையில் அவர் சேர்ந்தவுடன் முதலில் செய்தது பகுத்தறிவாளர் கழகம் தொடங்கியதுதான்! பிறகு 1970ஆம் ஆண்டு தோழர்கள் இணைந்து திராவிடர் தொழிலாளர் சங்கத்தை (DWU – Dravidar Welfare Association) உருவாக்குகிறார்கள். அதனைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பட்டாளம் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தொடங்கி வைத்துள்ளார். இந்தச் சங்கத்தில் 70 தோழர்களுக்கும் மேல் இருந்துள்ளனர்.

ஒருமுறை இந்த நூற்பாலைக்குச் சங்கராச்சாரியார் வந்துள்ளார். “ஓடிப்போன சங்கராச்சாரிக்கு இங்கு என்ன வேலை?”, என நுழைவாயிலில் பதாகை வைத்திருக்கிறார்கள். தவிர, தோழர்கள் திரண்டு அன்றைய தினம் கருப்புச் சட்டையில் போயிருக்கிறார்கள். விளைவு, அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிலாளர் நலத்திற்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் திராவிடர் தொழிலாளர் சங்கம் தொடர்ந்து போராடி இருக்கிறது!

களை கட்டிய பிரச்சாரம்!

அந்தக் காலகட்டத்தில் சென்னை மாவட்டத் திராவிடர் கழகத் தொழிலாளரணிச் செயலாளராக தென்னரசு (பா.தட்சிணாமூர்த்தி) அவர்களும், தலைவராக அ.குணசீலன் அவர்களும் இருந்துள்ளனர். அ.குணசீலன் அவர்கள் இரயில்வே துறையில் பணியாற்றியவர். இருவரும் இணைந்து, போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு வாயிற் கூட்டங்கள் நடத்தி, புதியக் கிளைகளை உருவாக்கியுள்ளனர்!

1996ஆம் ஆண்டு முதல் வட சென்னை மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்று, 6 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியவர். வட சென்னை என்பது 72 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. அதனால் 3 துணைத் தலைவர்கள், 3 துணைச் செயலாளர்களைப் பொறுப்பில் அமர்த்தி, இயக்க வேலை செய்தார்கள்! ஏராளமான பகுதிக் கழகங்களை உருவாக்கியதோடு, உழைப்பைக் கொடுப்பவர்கள் நன்கொடை தர வேண்டாம், ஏனைய நிருவாகிகள் தர வேண்டும் எனப் பணத்தைச் சேமித்து, இயக்கப் பிரச்சாரத்தைக் “களை” கட்ட‌ வைத்தவர்!

வயிற்றில் நுழைந்து, முதுகைத் துளைத்த கத்தி!

சென்னையில் 100 கூட்டங்கள் நடத்த வேண்டும் என்கிற ஆசிரியரின் அறிவிப்புக்கு இணங்க, நாளொன்றுக்கு 2 கூட்டங்கள் வீதம் ஒருங்கிணைத்தவர்களில் இவர் முக்கியமானவர். அப்படிக் கூட்ட ஏற்பாடுகள் நடந்த போதுதான், அந்தக் கொடூரச் சம்பவம் நடந்தது. பெரம்பூரில் 23ஆம் கூட்டத்தை முடித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். வீட்டை நெருங்கிய அந்தக் கணத்தில்தான், திராவிடர் கழக தொடர் பிரச்சாரத்தை கண்டு எரிச்சலடைந்த கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அவர் வயிற்றில் குத்திய கத்தி முதுகுப் பக்கமாய் வெளிவந்தது. அவ்வளவு நீளக்கத்தி ஆழமாய்ப் பாய்ச்சப்பட்டது.!

இது நடந்தது 1996 ஆம் ஆண்டு. பிறகு மருத்துவமனையில் 3 மாதம் சிகிச்சை பெற்று, பெரியார் திடல் மருத்துவமனையில் 1 மாதம் ஓய்வெடுத்து, பின்னர் குணமாகியுள்ளது. தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் முழுப் பாதுகாப்பிலும், மேற்பார்வையிலும் இருந்து நலம் பெற்று எழுந்தார். பெரியார் திடல் மருத்துவமனையில் இருந்த போது, கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் இணையர் வெற்றிச்செல்வி அவர்கள்தான் ஒரு மாத காலமும் உணவு வழங்கிப் பராமரித்துள்ளார்!

பெரியார் மாளிகைப் பணிகள்!

பெரம்பூர் பகுதியில் வசித்தாலும், சென்னை முழுவதும் இவரைப் பார்க்கலாம். குறிப்பாக ஆசிரியர் அவர்களின் சென்னைச் சுற்றுப் பயணங்களில் கண்டிப்பாக இவர் இடம் பெற்றிருப்பார். வட சென்னை வாழ்க்கையில் இருந்து, 2001ஆம் ஆண்டு ஆவடிப் பகுதிக்கு இடம் பெயர்கிறார். தற்போது வயது 77 ஆகிறது. அங்கே சென்ற பின்பு அவர் அமைதியாக இல்லை! ஆவடியிலும் தொடர்ந்து இயக்கப்பணிகளை செய்து வருகிறார். திராவிடர் கழகத்திற்கு சொந்தமான இடத்தில், பெரியார் மாளிகை ஒன்றை எழுப்பும் முயற்சியில் தீவிரமாய்ச் செயல்பட்டார்.

தோழர்களின் கூட்டு முயற்சியில் தரைத்தளம் படிப்பகம், முதல் தளம் கூட்ட அரங்கு, இரண்டாம் தளம் வாடகை அரங்கம் என முத்தாய்ப்பாய் 3 தளங்களை உருவாக்கி இருக்கிறார்கள்! அந்த மாளிகையில் இதுவரை தென்னரசு அவர்கள் செய்து வைத்த ஜாதி மறுப்புத் திருமணங்கள் 15. மற்ற இடங்களில் செய்ததையும் சேர்த்தால் 75 கணக்காகிறது!

இயக்கமே இயக்கம்!

ஆவடி பெரியார் மாளிகையில் ‘உண்மை’ வாசகர் வட்டம் ஒன்றை உருவாக்கினார். இதன் சார்பில் தொடர்ந்து நிகழ்ச்சியைத் தோழர்கள் இணைந்து நடத்தி வருகிறார்கள். இதனை இயக்குபவராக இருந்து ஊக்கப்படுத்தி வருகிறார். இதுவரை பல்வேறு போராட்டங்களில் 13 முறை கைதாகி, அதிகபட்சம் 15 நாள்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளார்! 2009 முதல் முதல் 2023 வரை ஆவடி மாவட்டத் தலைவராகவும், செயலாளராகவும் பணியாற்றி தற்போது காப்பாளராக இருந்து மாவட்டப் பொறுப்பேற்றுள்ள இளைஞர்களை வழி நடத்துகிறார்.

க.பலராமன், எம்.எஸ்.மணி, சபாபதி, விசுவாசவரம், ஜக்கரியா, வி.எம்.நாராயணன், கவுதமன், எம்.பி.பாலு, எம்.கே.காளத்தி, அ. குணசீலன், மு.அ. கிரிதரன், செ.வை.ர.சிகாமணி, குடந்தை கோவிந்தராஜன் போன்ற எண்ணிடலங்கா பெரியார் பெருந் தொண்டர்களுடன் இணைந்து

பணியாற்றிய பெருமை இவருக்குண்டு!

இணையர் பெயர் உமாராணி. இவரும் இயக்கத்திற்குப் பெரும் பங்காற்றியவர். இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள். ஜீவராணி, மீனா, சித்ரா. “சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு” என்கிற பெரியாரின் வரிகளுக்கு ஏற்ப சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்!

செவ்வாய், 25 ஜூன், 2024

மேனாள் இந்தியப் பிரதமர், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் 94ஆவது பிறந்த நாள் – தமிழர் தலைவர் மரியாதை



Published June 25, 2024

மேனாள் இந்தியப் பிரதமர், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் 94ஆவது பிறந்த நாளான இன்று (25.6.2024) சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள வி.பி.சிங் உருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: சென்னை நில கல்லூரி முதல்வர் முனைவர் இரா. ராமன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழகச் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், மயிலை சேதுராமன், தனலட்சுமி தங்கமணி, மரகதமணி, தாம்பரம் மோகன்ராஜ், அரும்பாக்கம் தாமோதரன், சுரேஷ் மற்றும் தோழர்கள் உள்ளனர்.

 

சென்னை, ஜூன் 25 இந்தியாவின் மேனாள் பிரதமர், பிற்படுத்தப்பட்டோருக்கான மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் 94ஆவது ஆண்டு பிறந்த நாளான இன்று(25.6.2024) காலை 10 மணியளவில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்தும், சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மாநில இளைஞரணி துணை செயலாளர் வழக்குரைஞர் சோ. சுரேஷ், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், துணைத் தலைவர் மயிலை டி.ஆர்.சேதுராமன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், வழக்குரைஞர் வேலவன், தாம்பரம் சு.மோகன்ராஜ், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், த.மரகதமணி, பவானி, உத்திரா, தங்க. தனலட்சுமி, கொடுங்கையூர் கோ.தங்கமணி, போளூர் பன்னீர்செல்வம், கு. சோமசுந்தரம், மடிப்பாக்கம் ஜெயராமன், அரும்பாக்கம் சா.தாமோதரன், நா.பார்த்திபன், க.கலைமணி, செந்தமிழ் சேகுவோரா, பூவை. தமிழ்ச் செல்வன், மாணிக்கம் ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்தினார். இந்நிகழ்விற்கு வருகை தந்த தமிழர் தலைவரை முன்னதாக வந்திருந்த சென்னை மாநிலக் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. ராமன் அவர்கள் வரவேற்றார். மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் இரகு. இக்கல்லூரியின் தி.மு.க. மாணவர் பேரவையைச் சேர்ந்த நிர்வாகிகள் அரிகரன், கோகுல், ஈஸ்வரன் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

சமூகநீதிக் கொள்கைக்காகப் பிரதமர் பதவியைத் தூக்கி எறிந்த பெருமகன்! அவர் காண விரும்பிய எஞ்சிய உரிமைகளை மீட்டெடுக்கவும் உறுதியேற்போம்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை



Published June 25, 2024

சமூகநீதிக்காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களது 94 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (25.6.2024)!
பெரியார் பூமியான திராவிட மண்ணில் அவரது முழு உருவச் சிலை – அரிய வரலாற்றுச் சாதனை!

சமூகநீதிக்காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் 94 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (25.6.2024). பெரியார் பூமியான திராவிட மண்ணில் அவரது முழு உருவச் சிலை – அரிய வரலாற்றுச் சாதனை! கொள்கைக்காகப் பிரதமர் பதவியைத் தூக்கி எறிந்த பெருமகன்! அவர் காண விரும்பிய எஞ்சிய உரிமைகளை மீட்டெடுக்கவும் உறுதியேற்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இன்று (25.6.2024) சமூகநீதிக்காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களது 94 ஆம் ஆண்டு பிறந்த நாள்!
27 விழுக்காடு ஒதுக்கீட்டுக்கு
ஆணை பிறப்பித்த பெருமை!
இந்திய நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 70 விழுக்காட்டுக்கு மேலே உள்ள மக்களான பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு, இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்ட பிறகும்கூட, சுமார் 40 ஆண்டுகளான பின்பும்கூட – ஒன்றிய அரசின் பதவிகள் – பணிகளில், கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தரப்படாமல் இருந்த நிலையைப் போக்கிட – இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் – மண்டல் அவர்கள் தலைமையில் நியமிக்கப்பட்டு, பரிந்துரைகளை ஒன்றிய அரசு பெற்றும்கூட, சுமார் 10 ஆண்டுகாலம் கிடப்பில் போடப்பட்ட பிறகு, தமிழ்நாடு – பெரியார் மண்ணிலிருந்து கிளம்பிய ஆவேசம், வடபுலத் தலைவர்களோடு இணைந்து எடுத்த தொடர் முயற்சிகளால் (இந்தியா முழுவதும் 46 மாநாடுகள், 16 போராட்டங்கள் புதுடில்லி உள்பட) மண்டல் பரிந்துரை கிளர்ச்சி நாடு தழுவிய நிலையில், ஒன்றிய அரசின் மவுனத்தைக் கலைத்து, தனது ஆட்சிக்காலத்தில் மண்டல் பரிந்துரைகளில் வேலைவாய்ப்புக்கான 27 விழுக்காடு ஒதுக்கீட்டுக்கான ஆணையைப் பிறப்பித்த பெருமை அந்நாள் பிரதமர்
வி.பி.சிங் அவர்களையே சாரும்.

(அப்போது கல்வித் துறைக்கான இட ஒதுக்கீடு நிலுவையில் இருந்தது)
அதற்காகவே அன்று வி.பி.சிங் ஆட்சிக்குக் கொடுத்த ஆதரவினைப் பின்வாங்கி, அவரது ஆட்சியைக் கவிழ்த்தது பி.ஜே.பி. – ஆர்.எஸ்.எஸ்.
எத்தனை முறை வேண்டுமானாலும் பிரதமர் பதவியை இழக்கத் தயார் என்று மார்தட்டிய மாவீரன்தான் மாமனிதர் வி.பி.சிங்!
ஆட்சி இழப்புப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், ‘‘இதுபோன்ற நல்ல பொருள்களைப் (பிற்படுத்தப்பட்டோர் முதன் முறையாக வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தரும் 27 சதவிகித ஆணை பிறப்பித்தமை, ‘கமண்டல்’ – இராமர் கோவில் பாபர் மசூதியை இடித்த இடத்தில் கட்டும் இயக்கம் – ‘மண்டலுக்கு எதிரான கமண்டல்’ உண்டாக்கினர்) பெற நல்ல விலை கொடுப்பது தேவைதான். எத்தனை முறை வேண்டுமானாலும் நான் பிரதமர் பதவியை இழக்கத் தயார்” என்று மார்தட்டிய மாவீரன்தான் மாமனிதர் விசுவநாத் பிரதாப் சிங் அவர்கள்!
அவர் பிறந்த மண்ணான உத்தரப்பிரதேசத்தில்கூட அவருடைய சிலை எழுப்பப்படவில்லை; அவரை மிகவும் நேசித்த பெரியார் பூமியான திராவிட மண்ணில் அதன் திராவிட ஆட்சி நாயகரால் முழு உருவச் சிலை நிறுவி, திறந்து வைக்கப்பட்டது – அரிய வரலாற்றுச் சாதனை!

சமூகநீதியைக் காக்கவும், எஞ்சிய உரிமைகளை மீட்டெடுக்கவும் உறுதியேற்போமாக!
மண்டல் பரிந்துரையை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பிப்பதற்கு அவரது கட்சிக்குள்ளேயே இருந்த பிற்போக்குவாதிகளான கூட்டாளிகளும்கூட எவ்வளவோ இடையூறுகள் செய்தும், அவர் அதில் உறுதியாக நின்றார், வென்றார்!
அவரது 94ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (25.6.2024) சமூகநீதிச் சூரியக் கதிர்களின் ஒளி வீச்சுப் பரவிய நாளில், அவரது நினைவைப் போற்றி, இன்னமும் அதன் எதிரிகளிடமிருந்து சமூகநீதியைக் காக்கவும், எஞ்சிய உரிமைகளை மீட்டெடுக்கவுமான தொடர் அறப்போரில் உறுதியேற்போமாக! 

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
25.6.2024