தடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 ஜூலை, 2026

நீட்’, EWSசை எதிர்த்து இரு சக்கர வாகனப் பயணத்தைத் தடை செய்த தமிழ்நாடு அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!


மற்றவை

சென்னை, ஜூலை 30 ‘நீட்’ தேர்வையும், உயர் ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று (30.7.2026) முதல் 2.8.2026 வரை இரு சக்கர வாகனத்தின் மூலம் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டு முறைப்படி காவல் துறைத் தலைமை இயக்குநர் அவர்களிடம் (டிஜிபி), திராவிடர் கழகத்தின் சார்பில் கடந்த 18.7.2026 அன்று அனுமதி கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (30.7.2026) காலை புறப்பட இருந்த இந்தத் தருணத்தில், திராவிடர் கழகத்தின் இரு சக்கர வாகனப் பயணத்திற்கு  காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று (30.7.2026) காலை 9 மணியளவில் பெரியார் திடலில் இருந்து இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணம் தொடங்க இருந்த நிலையில், காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறுகையில்:

‘‘தடையை மீறி இந்தப் பிரச்சாரப் பயணத்தை நடத்த முடியும் என்றாலும், முதலில் சட்ட ரீதியாக இப்பிரச்சினையை கழகம் அணுகும். அரசியலமைப்புச் சட்டப்படியான நமது அடிப்படை கருத்து, பேச்சு, ஜனநாயக உரிமைக்கு நீதிமன்றத்தின் மூலமாகப் பரிகாரம் தேடப்படும். தற்போதைக்கு திராவிடர் கழகம் திட்டமிட்டிருந்த இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் ஒத்திவைக்கப்படுகின்றது’’ என்று தெரிவித்துள்ளார்.

மற்றவை

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ. கோபால், மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன், மாநில இளைஞரணி இணை செயலாளர் சோ. சுரேஷ், தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, எம்.ஆர்.மாணிக்கம், வட சென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு. அன்புச்செல்வன், காப்பாளர் கி. இராமலிங்கம், துணைத் தலைவர் நா. பார்த்திபன், பொதுக் குழு உறுப்பினர் கி. தளபதிராஜ், பொதுக்குழு உறுப்பினர் தங்க. தனலட்சுமி, வழக்குரைஞர் துரை அருண், வழக்குரைஞர் செ. துரை, மாநில மகளிரணி துணை செயலாளர் வி.கே.ஆர். பெரியார்செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வடசென்னை மகளிர் பாசறைத் தலைவர்
த. மரகதமணி, உத்ரா, க.கலைமணி, சி. காமராசு, அரும்பாக்கம் சா.தாமோதரன், அயன்புரம் சு. துரைராசு,   கோ. தங்கமணி  உள்ளிட்ட தோழர்கள் பெருந்திரளாக கூடியிருந்தனர்.

- விடுதலை நாளேடு, 30.07.2026


வியாழன், 24 அக்டோபர், 2024

உச்சநீதிமன்ற தடை ஆணையை எதிர்த்து போராட்டம் - தடை ஆணை தமிழகம் முழுவதும் எரிக்கப்பட்டது. (10.10.1990)

 

உச்சநீதிமன்ற தடை ஆணையை தீயிட்டு எரிக்க கழகத்தினருடன் செல்லும் ஆசிரியர்.

மண்டல் குழு பரிந்துரை அமலாக்கத்திலிருந்து எக்காரணம் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை என்ற நம் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் நிலைகண்டு, பார்ப்பனர் கொதித்துக் கிடக்கின்ற நிலையில், மண்டல் குழுவின் செயலாக்கத்தினைத் தடுத்து நிறுத்த பார்ப்பனர்கள் தங்கள் இறுதி முயற்சியாக உச்சநீதி மன்றத்தில் இடைக்காலத் தடை ஆணை பெற்றனர்.

நீதிபதி

ரங்கநாத் மிஸ்ரா

1.10.1990 அன்று நான், அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கழக  கொள்கைப் பிரச்சார பயணங்களை முடித்துக்கொண்டு சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தேன். கழக நிருவாகிகள், தோழர்கள், தோழியர்கள் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்கள். அதனைத் தொடர்ந்து, 4.10.1990 அன்று சென்னை பெரியார் திடலில், “மண்டல் பரிந்துரையும் உச்சநீதிமன்றத் தடையும்’’ என்னும் தலைப்பில் திராவிடர் கழக சட்டத் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் வழக்கறிஞர்கள் த.வீரசேகரன் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் பி.வேணுகோபால் ஆகியோரும் உரை நிகழ்த்தினார்கள். அதன் பிறகு நான் உரையாற்றும்போது, பார்ப்பன சதி அடங்கியிருப்பதை அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்துக்காட்டி உரை நிகழ்த்தினேன்.

 உச்சநீதிமன்ற தடை ஆணையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் கழகத்தினர்.

10.10.1990 அன்று உச்சநீதிமன்றத்தின் தடை ஆணை தமிழகம் முழுவதும் எரிக்கப்பட்டது. என் தலைமையில், சென்னையில் வீரர்கள் அணிவகுத்து எழுச்சி முழக்கங்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்டு தடை ஆணையைக் கொளுத்துவதற்கு இளைஞர்கள் தீப்பந்தங்களை ஏந்தி வந்தனர். அய்யா சிலைக்கு மாலை அணிவித்தோம். எங்களை போலிஸ் தடுத்தது. உடனே உச்ச நீதிமன்ற தடை ஆணையை உணர்ச்சி முழக்கங்களிடையே தீயிட்டுக் கொளுத்தினோம். தோழர்கள் கட்டுக்கோப்பாக ஆணையை எரித்தனர். நாங்கள் அனைவரும் கைது செய்யப்பட்டோம். தமிழகம் முழுவதும் தோழர்கள் கைது. உச்சநீதிமன்ற தீர்ப்பு சாம்பலானது. ஏற்கெனவே, தலைமை நிலையத்தின் சார்பில், தடை ஆணையை எரித்து அதன் சாம்பலை அரைகுறையாக எரிக்கப்பட்ட பகுதியை அஞ்சல் உறையில் போட்டு கீழ்க்கண்ட முகவரிக்கு உடனடியாக அனுப்பி வையுங்கள் என்று கேட்டுக்கொண்டோம். அந்த முகவரி:

HON’BLE JUSTICE,
RENGANATH MISRA,
CHIEF JUSTICE,
SUPREME COURT OF INDIA,
NEW DELHI.

போராட்டத்துக்குப் போகும்போதே மேற்கண்ட முகவரியை எழுதி அஞ்சல் உறையைத் தயாராக எடுத்துச் செல்லுங்கள் என்று குறிப்பிட்டிருந்தோம்.

10.10.1990 அன்று சுப்ரீம் கோர்ட் ஆணையைக் கொளுத்தும் முதற்கட்டப் போராட்டத்தை அறிவித்து இருந்தேன். மேலும், நாம் ஒவ்வொருவரும் ஒரே அணியில் கட்சி, ஜாதி, மதக் கண்ணோட்டம் இன்றி இடஒதுக்கீடு பாதுகாப்புப் படை அணி (Reservation Protection Force -RPF) என்னும் படையை விரைவில் அமைத்திடவும் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

இயக்க வரலாறான தன் வரலாறு(237) : 

நவம்பர் 01-15 2019

அய்யாவின் அடிச்சுவட்டில்…

செவ்வாய், 23 மார்ச், 2021

ஐநாவிடம் அளிக்க திராவிடர் கழகத்தின் சார்பில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து

ஈழத்தில் நடக்கும் இனப் படுகொலையைக் கண்டித்து _ தமிழகம் முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி அய்.நா.வின் மனித உரிமைக் கமிஷனுக்கு அனுப்ப கழகம் திட்டமிட்டு, சென்னை மாநகரத்தில் 20 நாள்களாக 170 தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களை கழக இளைஞரணியினர் நடத்தி கையொப்பங்களைப் பெற்றனர். அப்படிப் பெறப்பட்ட பத்து லட்சம் கையொப்பங்களை கழக பொதுச் செயலாளர் என்னும் முறையில் என்னிடம் ஒப்படைக்க பொதுக் கூட்டத்திற்கு புதுப்பேட்டை காவல்நிலையத்தில் அனுமதி கேட்டனர். அதற்கு காவல் துறையினர் ‘வினாயகர் சிலைகள்’ வைத்திருப்பதாகக் கூறி பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி 31.8.1995 அன்று திட்டமிட்ட இடத்தில் கூட்டம் நடைபெறும் என அறிக்கை வெளியிட்டு, காரியத்தில் இறங்கினோம். பெரியார் திடலுக்கு ஏராளமான கழகத் தோழர்கள் உணர்ச்சியோடு திரண்டனர். வெளியே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

பொதுக்கூட்டத்திற்கு கழகத் தோழர்களின் அணிவகுப்போடு தலைமை ஏற்று, “தந்தை பெரியார் வாழ்க! கருத்துரிமையை பறிக்காதே! மனித உரிமைகளுக்குக் குரல் கொடுக்கவும் தடையா? என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. அப்போது போலீசார் எங்களைத் தடுத்து நிறுத்தினர். அப்படியே சாலையில் அமர்ந்தோம். போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. அப்போது தோழர்களிடம் உரையாற்றுகையில், “ஈழத்தில் நடக்கும் இனப் படுகொலையைக் கண்டித்து ஒரு கோடி கையொப்பங்களைப் பெற்று, அய்.நா.மனித உரிமைக் குழுவுக்கு அனுப்ப நாம் திட்டமிட்டு புதுப்பேட்டையில் நிறைவு விழா கூட்டத்திற்கு காவல் அனுமதி தர மறுப்பது கண்டிக்கத்தக்கது. புதுப்பேட்டை பகுதி என்றாலே _ அது இந்து முன்னணிக்கே குத்தகைக்கு விடப்பட்டு அவர்களுக்கே தாரை வார்த்துக் கொடுத்தது போல் காவல்துறை நடந்துகொள்வது எதனால்?

ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையைக் கண்டித்து  தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்தி கைதாகும் ஆசிரியர் மற்றும் கழகத்தினர்

இந்த ஆட்சியில் உள்துறை செயலாளராக ஒரு பார்ப்பனர், தலைமைச் செயலாளராக ஒரு பார்ப்பனர், சென்னை மாநகர காவல்துறை அதிகாரியாக ஒரு மலையாளி. இப்படி தமிழர் அல்லாதவர்களை காவல் துறையில் நியமித்துக் கொண்டு வருகிறார்கள். காவல் துறையில் உள்ள தமிழர் அதிகாரிகள் நாதியற்றுப் போய்விட்டார்கள் என்று தமிழ்நாடு அரசு கருதுகிறதா? இது முடிவானதல்ல, இதுதான் துவக்கம். மீண்டும் சட்டப் போராட்டம் செய்து வென்று இதே இடத்தில் இந்த தடை செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தை நடத்துவோம்’’ என பல கருத்துகளை எடுத்துக் கூறினேன். 200க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் என்னோடு கைது செய்யப்பட்டு, இரவு 10:00 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டோம்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி,

- உண்மை இதழ், 1-15.3.21