27, 28, 29.4.1990 ஆகிய மூன்று நாள்கள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவின் முதல் நாள் நிகழ்வு 27.4.1990 அன்று தென்சென்னை திராவிடர் கழகத்தின் சார்பில் மயிலையில் நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வு 28.4.1990 அன்று வடசென்னை திராவிடர் கழகத்தின் சார்பில் புதுவண்ணாரப் பேட்டையில் சிறப்புற நடந்தது. நிறைவு விழா சென்னை, கலைவாணர் அரங்கில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பெரியார் நூலக வாசகர் வட்டம் அமைப்புகள் சார்பில் எழுச்சியும் மகிழ்ச்சியும் குலுங்க நடைபெற்றது. கழகக் குடும்பங்கள், பொதுமக்கள், நிரம்பி வழியும் வண்ணம் தமிழர்கள் கூடியிருந்தனர்.
முதல்வர் கலைஞருக்கு “மகளிர் உரிமை ஆட்சி மாண்பாளர்” என்னும் பட்டம் மகளிரணியினரால் அளிக்கப்படுகிறது. உடன் ஆசிரியர் கி.வீரமணி
விழாவில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் கலந்துகொண்டார்கள். தமிழ்நாட்டுப் பெண்கள் முன்னேற்றத்திலும், தந்தை பெரியார் கண்ணோட்டத்திலும் மகளிர் உரிமைக்கான சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பிலும், மகளிரணி சார்பிலும் தமிழக பெண்குலத்தின் சார்பிலும், “மகளிர் உரிமை ஆட்சி மாண்பாளர்’’ என்னும் பட்டம் அளிக்கப்பட்டது. அரங்கம் அதிர்ந்தது கையொலிகளால்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவில் மகளிரணி கலந்து கொண்டு சிறப்பித்த காட்சி
விழாவில், உரையாற்றும்போது, “தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் என்று நடைமுறையில் இருக்கும் ஆண்டு அமைப்பு மாற்றப்பட்டு, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றம் செய்யப்பட்டு திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கை மேற்கொள்ளத் தமிழக முதல்வர் அவர்கள் ஆணை பிறப்பிக்க வேண்டும்“ என்று கோரிக்கை வைத்தேன். உடனே பதில் அளித்த முதல்வர் கலைஞர் அவர்கள், “தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் முதல் துவக்க வேண்டும் என்று இளவல் வீரமணி குறிப்பிட்டார். தளபதி வீரமணியின் சிந்தனையையும், சிந்தையில் தேக்கி, மற்றவர்களையும் கலந்து பேசி அறிவிக்கப்படும் என்றும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
இயக்க வரலாறான தன் வரலாறு(236) :
அய்யாவின் அடிச்சுவட்டில்…
கி. வீரமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக