வியாழன், 18 ஜூலை, 2024

1984 இல் எம்.ஜி.ஆர். கொண்டுவந்த நுழைவுத் தேர்வை 2006 இல் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் ஒழித்துக் கட்டியவர்கள் நாம்! ‘நீட்’ எதிர்ப்புப் போராட்டத்திலும் எந்த விலை கொடுத்தும் ஒழித்துக் கட்டுவோம்!

 


விடுதலை நாளேடு

* அய்ந்து முனைகளிலிருந்து இருசக்கர வாகனத்தில் நீட் எதிர்ப்புப் பரப்புரை செய்த இளைஞர்களுக்குப் பாராட்டு!

* ஒத்துழைப்புக் கொடுத்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி! நன்றி!!

* கொட்டும் மழையிலும் சேலத்தில் தமிழர் தலைவர் கொட்டிய கொள்கை முரசு!

சேலம், ஜூலை 16 எம்.ஜி.ஆர். ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நுழைவுத் தேர்வை போராடிப் போராடி நாம் ஒழித்துக் கட்டியதுபோல், இந்த நீட்டையும் ஒழித்தே தீருவோம். தமிழ்நாட்டின் 5 முனைகளிலிருந்து இரு சக்கர வாகனத்தில் நீட் எதிர்ப்புப் பரப்புரைப் பயணம் மேற்கொண்ட இருபால் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பாராட்டுகள் – வாழ்த்துகள்! ஒத்துழைத்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி! நன்றி!! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகனப்
பரப்புரையின் நிறைவு விழா!
நேற்று (15.7.2024) மாலை சேலத்தில், நீட் தேர்வு ஒழிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் கடந்த 11 ஆம் தேதி தொடங்கிய அய்ந்து குழுக்களின் இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பயண நிறைவு விழாப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:

“இந்தப் படை போதுமா?
இன்னும் கொஞ்சம் வேண்டுமா?’’
மிகுந்த எழுச்சியோடு அய்ந்து அணிகளாக வந்த இளைஞர் பட்டாளம் – “இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?”, ‘‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?” என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மிகப்பெரிய அளவிற்கு உணர்ச்சியோடு வந்திருக்கக்கூடியவர்களை இந்த சேலம் மாநகரம் அவர்களை வரவேற்று இருக்கிறது.
சேலம் மட்டுமல்ல, இயற்கையும் வரவேற்றுதான் – இந்த நீட் தேர்விற்கு எத்தனை அனிதாக்கள் கண்ணீர் விட்டார்களோ, அதையெல்லாம் ஒட்டுமொத்தமாக மழைமூலம் காட்டிக் கொண்டிருக்கின்றது.
அப்படிப்பட்ட இந்த நிறைவு விழாவிற்கு – சேலம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அருமைத் தோழர் இளவழகன் உள்பட, முன்மொழிந்த அருமைத் தோழர்கள் உள்பட அனைவருக்கும் வணக்கம். நம்முடைய இராசா இந்தியா வையே கலக்கி வரக்கூடிய, ஒரு காலத்தில் அவரைப்பற்றி எழுதத் தொடங்கினாலே பூஜ்ஜியம், பூஜ்ஜியம், பூஜ்ஜியம், பூஜ்ஜியம், பூஜ்ஜியம், பூஜ்ஜியம் என்று போட்டு, பூஜ்ஜியத்தில் ராஜ்ஜியம் நடத்துபவர்கள் எல்லாம் இன்றைக்குத் திணறக் கூடிய அளவிற்கு, அலறக்கூடிய அளவிற்கு அவர்களை தக்க இடத்தில் வைத்துக் கொண்டிருக்கின்ற எங்கள் இராசா அழகாகச் சொன்னார், ‘‘இராசா கையை வைச்சா அது ராங்கா போனதேயில்லை” அதுதான் மிக முக்கியமான விஷயமாகும். நான் அந்தத் திரைப்படத்தைப் பார்த்துவிட்டுச் சொல்லவில்லை. இப்படி சொல்லுவதைக் கேட்டிருக்கிறேன்.

இராசாக்கள் எல்லாம் முடி சூட்டிக்கொண்டவர்கள் அல்ல; முடி துறந்தவர்கள்!
‘‘இராசாக்கள் கையை வைத்தால்” என்பதுதான் மிகவும் முக்கியம். இந்த இராசாக்கள் எல்லாம் முடி சூட்டிக்கொண்டவர்கள் அல்ல; முடி துறந்தவர்கள். முடியை நோக்கிப் பார்க்கக் கூடியவர்கள் அல்ல; முடிவை நோக்கிப் பயணித்து, அதனை உருவாக்கக் கூடியவர்கள்.
நீட் தேர்வு ஒழிக்கப்படும்வரையில் நாம் போராடு வோம் – இறுதிவரையில் போராடுவோம்!
ஆகவேதான், நீட் தேர்வு என்பது இருக்கிறதே, அது ஒழிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. அதுவரையில் நாம் போராடுவோம். இறுதிவரையில் போராடுவோம்.
‘‘குடிசெய்வார்க்கில்லை பருவம்” – கொளுத்துகின்ற வெயிலா? கொட்டும் மழையா? புயலா? எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. எங்கள் உயிர் துச்சமானது.
1938 ஆம் ஆண்டு ஹிந்தி எதிர்ப்பு வந்தபொழுது, தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி படைத்தளபதியாக இருந்து, சென்னைக்குச் சென்றது.
அந்த நேரத்தில் நண்பர்களே, ‘‘எத்தனைப் பேர் ஹிந்தியை எதிர்க்கிறார்கள்’’ என்று இராஜ கோபாலாச்சாரியார் கேட்டுவிட்டு, ‘‘இரண்டு பேர்தானே எதிர்க்கிறீர்கள்?” என்று சர்.ஏ.டி. பன்னீர்செல்வத்தையும், பெரியாரையும் பார்த்துக் கேட்டார்.
அதற்கு பன்னீர்செல்வம் சொன்னார், ‘‘எதிர்ப்பவர்கள் நாங்கள் இரண்டு பேர்தான்; ஆனால், ஹிந்தியை ஆதரிக்கின்றவர் நீங்கள் ஒருவர் மட்டும்தான்” என்று பதில் கூறினார்.

இரண்டு பேர் மெஜாரிட்டி, ஒன்று மைனாரிட்டி!
அதிலும் மூன்று பேர் மெஜாரிட்டி, ஒன்று மைனாரிட்டி என்று அழகாக அன்றைக்குப் பதில் சொன்னார்.
‘‘ஆள்வது நானா? இராமசாமி நாயக்கரா?” என்று சட்டமன்றத்தில் கேட்டவர் இராஜகோபாலாச்சாரியார். தந்தை பெரியாரை பெல்லாரி சிறைச்சாலைக்கு அனுப்பிய கொடுமை அன்றைக்கு நடந்தது. அவருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்ட பிறகு, பயந்து போய் வெளியில் விட்டார்கள்.
பிறகு என்னாயிற்று தெரியுமா? நண்பர்களே!
இராஜகோபாலாச்சாரியாரைவிட
மோடி ஒன்றும் புத்திசாலியல்ல!
திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இணைந்து, அதே இராஜகோபாலாச்சாரியார் நமது மேடையில் வந்து அமர்ந்து, ‘‘Hindi Never; English Ever” என்று அவரை சொல்ல வைத்த இயக்கம் இந்த இயக்கம். இராஜகோபாலாச்சாரியாரைவிட மோடி ஒன்றும் புத்திசாலியல்ல.
உடம்பெல்லாம் மூளை என்று வர்ணிக்கப்பட்டவர் இராஜகோபாலாச்சாரியார். அதுபோன்று இராஜாஜிக்கு உடம்பெல்லாம் மூளை இருக்கிறதோ இல்லையோ, ஆனால், வியூகம் வகுப்பதில் அவர் கெட்டிக்காரர்.
நெருக்கடி காலத்தைப்பற்றி இப்பொழுது பேசுகிறார் பிரதமர் மோடி அவர்கள்.
நெருக்கடி காலத்தில் சிறைச்சாலைக்குப் போய் அடிபட்டவர்கள் நாங்கள். இன்றைய முதலமைச்சர், அடித்துக் கொல்லப்பட்ட சிட்டிபாபுகள், மற்றவர்கள் எத்தனைப் பேர் உயிரை விட்டார்கள் சிறைச்சாலையில். அந்தத் தியாகத்தைப் படைத்த ஓர் இயக்கம். உயிர் எங்களுக்கு வெல்லமல்ல என்று சொல்லக்கூடிய இளைஞர்கள் அன்றும், இன்றும், என்றும் வந்தார்கள்.
பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கமே இருக்காது; பெரியாருக்குப் பின்னால் வயதான நான்கு பேர் இருப்பார்கள்; அவர் போனால், அதோடு இந்த இயக்கம் தீர்ந்து போய்விடும் என்று சொன்னார்கள்.

ஒன்றிய உள்துறை அமைச்சராக இருந்த
உமாசங்கர் தீட்சித்
தந்தை பெரியாருக்கு வருமான வரித் தொல்லை களைக் கொடுத்தபொழுது, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த உமாசங்கர் தீட்சித் என்பவர் ஒன்றிய உள்துறை அமைச்சராக இருந்தார். ஷீலா தீட்சித்தினுடைய மாமனார் அவர்.
அவர் செய்தியாளர்களிடம் அன்று சொன்னார், ‘‘பெரியாருக்கு வயதாகிவிட்டது; அவர் இன்னும் கொஞ்ச நாள்தான் இருப்பார். ஆகவே, அவரைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம்” என்றார்.
This is the most uncharitable unkindest cut of all – ஒரு வரி உண்டு ஆங்கிலத்தில்.
அன்று மாலை தந்தை பெரியார் அவர்கள் கோவை தெப்பக்குளம் மைதானத்தில் உரையாற்றவிருந்தார். அப்பொழுது ஒன்றிய அமைச்சர் சொன்னதைப்பற்றி சொன்னேன்.
அன்றைய ஒன்றிய அமைச்சர் சொன்னதைப்பற்றி தந்தை பெரியார் அவர்கள் கவலைப்படவில்லை.
‘‘அவ்வளவுதானே” என்று சொல்லிவிட்டு, தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றத் தொடங்கினார்.

என்னுடைய கட்சிக்கு வயதாகிவிட்டதா?
என்னுடைய கொள்கைக்கு வயதாகிவிட்டதா?
‘‘ஒன்றிய உள்துறை அமைச்சர் உமாசங்கர் தீட்சித் என்பவர் இதுபோன்று சொல்லியிருக்கிறார். அவர், நேரு வீட்டுக் கணக்குப் பிள்ளை. அப்படிப்பட்டவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பாருங்கள். ‘‘எனக்கு வயதாகிவிட்டது” என்று.
ஆமாம், உண்மையைத்தான் அவர் சொல்லி யிருக்கிறார். எனக்கு வயதாகிவிட்டது உண்மைதான். எனக்கு வயதாகிவிட்டதே தவிர, என்னுடைய கட்சிக்கு வயதாகிவிட்டதா? என்னுடைய கொள்கைக்கு வய தாகிவிட்டதா? என் கொள்கை இத்தோடு முடிந்து போய்விடுமா?” என்று கேட்டார் தந்தை பெரியார் அவர்கள்.
இன்றைக்கு இந்த இளைஞர்களைப் பார்க்கும்பொழுது நீங்களெல்லாம் என்ன நினைக்கிறீர்கள்?
எங்களோடு வந்திருக்கின்ற இவ்வளவு பேர் இளைஞர்கள் வந்திருக்கிறார்கள். எங்கள் சகோதரர்கள், அரசியல் கட்சி நண்பர்களும் இங்கே இருக்கிறார்கள். அந்தக் கட்சிகளில் சேர்ந்தால், குறைந்தபட்சம் ஒரு பஞ்சாயத்துத் தலைவரோ, நகராட்சித் தலைவராகவோ ஆகலாம் என்று இருக்கலாம். அது தவறும் இல்லை.

‘‘எங்கள் பின்னால் வந்தால், ஜெயிலுக்குத்தான் போகவேண்டியிருக்கும்!’’
ஆனால், திராவிடர் கழகத்தை நோக்கி வரக்கூடிய இளைஞர்கள், எங்கள் பின்னால் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு நாங்கள் என்ன சொல்லியிருக்கி றோம் தெரியுமா? ‘‘எங்கள் பின்னால் வந்தால், ஜெயிலுக்குத்தான் போகவேண்டியிருக்கும்” என்று சொல்லியிருக்கிறோம்.
நல்ல விஷயத்திற்காகத்தான் சிறைச்சாலைக்குச் செல்ல நேரிடும்; தவறு செய்துவிட்டு சிறைச்சாலைக்குச் செல்வது என்று அர்த்தமல்ல.
கொள்கைக்காக விலை கொடுக்கவேண்டிய அளவிற்கு இருக்கவேண்டும். நாங்கள் எல்லாம் சிறைச்சாலைக்குச் சென்றோம். அத்தோடு இந்த இயக்கம் அழிந்துவிட்டதா?
அறிவு நாணயம் இல்லாத ஒரு கட்சி பா.ஜ.க. அதற்கு என்ன அடையாளம்? பிரதமர் மோடி அவர்கள், பட்டுக்கோட்டைக்கு வழி என்னவென்று கேட்டால், கொட்டைப் பாக்கின் விலையைச் சொல்லுகிறார்.

மோடி அவர்களே, உங்கள் ஆட்சி பொறுப்பேற்ற நாள்தான் துக்க நாள்!
எமர்ஜென்சியைக் கொண்டு வந்த நாள் ஒரு துக்க நாள் என்று சொன்னார். நாங்கள் சொல்கிறோம், உங்கள் ஆட்சி பொறுப்பேற்ற நாள்தான் துக்க நாள் என்று.
அன்றைக்கு இந்திரா காந்தி அம்மையார் அவர்கள், சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபொழுது, நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், ‘‘நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!” என்று சொன்னார். அந்தப் பொதுக்கூட்டத்தில் நானும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். சாட்சியத்தோடு சொல்கிறேன், ஆதாரத்தோடு சொல்கிறேன் – நாடாளுமன்ற உறுப்பி னர்கள் மற்றவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால், அந்த மேடையில் இந்திரா காந்தி அம்மையார் உரையாற்றும்பொழுது, ‘‘அந்த நெருக்கடி காலத்திற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பெருந்தன்மையோடு சொன்னார்.

தவறு செய்வது முக்கியமல்ல; அந்தத் தவறுக்கு மன்னிப்புக் கேட்பதுதான் பெருந்தன்மை!
மனிதன் தவறு செய்வது முக்கியமல்ல; அந்தத் தவறைத் திருத்திக்கொண்டு, வருத்தப்பட்டு மன்னிப்புக் கேட்பதுதான் அதைவிட பெருந்தன்மையான ஒன்றாகும்.
இந்திரா காந்தி அம்மையார், அன்றைக்கு மன்னிப்புக் கேட்டார். மறுபடியும் ஆட்சிக்கு வந்தார்.
இன்றைக்கு மோடியின் ஆட்சி எப்படி நடக்கிறது? அறிவிக்கப்படாத நெருக்கடி ஆட்சிதானே – அரசமைப்புச் சட்டத்தின்படி.
இங்கே ஓர் அருமையான கேள்வியை கேட்டார் நம்முடைய இராசா அவர்கள்.
அந்தக் கேள்விக்கு அவர்களால் பதில் சொல்ல முடியாது.

நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் திருத்தியிருக்கவேண்டாமா?
மாற்றியிருக்க வேண்டாமா?
நெருக்கடி காலம் மோசமான காலம் என்று சொல்கிறீர்கள் அல்லவா? அப்படியென்றால், அந்த நெருக்கடி காலத்தில், அரசமைப்புச் சட்டத்தில் என்னென்ன மாற்றங்களைச் செய்தார்களோ, அவற்றையெல்லாம் நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் திருத்தியிருக்கவேண்டாமா? மாற்றியிருக்க வேண்டாமா?
இன்னுங்கேட்டால், நேரிடையாக இதற்குப் பதில் சொல்லவேண்டும்.

முதலமைச்சர் மோடியும்- பிரதமர் மோடியும்!
குஜராத் மாநில முதலமைச்சராக மோடி அவர்கள் இருந்தபொழுது என்ன சொன்னார், ‘‘நீட் தேர்வை என்னுடைய பிணத்தின்மீதுதான் நடைமுறைப்படுத்தவேண்டும்” என்று சொன்னாரா, இல்லையா? அதேபோன்றுதான் ஜி.எஸ்.டி.
அன்றைக்கு சொன்னதற்கு மாறாக, இன்றைக்குத் தலைகீழாக நடந்துகொள்கிறார் பிரதமர் மோடி அவர்கள்.
நீட் தேர்வினுடைய அடிப்படை என்ன?
நீட் தேர்வு குளறுபடிகள்பற்றி மிக அழகாகச் சொன்னார்கள் இங்கே.
நீட் தேர்வினுடைய தத்துவமே, இந்திய அரசமைப்புச் சட்டத்தில், மாநில உரிமைகள், கூட்டாட்சி என்பதைப் பிரிப்பதுதான்.

‘ப்ரண்ட் லைன்’ பத்திரிகையில் வெளிவந்த செய்தி!
ஒரே நாடு, ஒரே தேர்வு என்று இருக்க முடி யாது. அப்படி இருந்தால் என்னாகும்? அது குளறுபடி யாகத்தான் முடியும் என்று நாங்கள் சொல்லவில்லை, இதோ என்னுடைய கைகளில் இருப்பது இந்து பத்திரிகையினுடைய ‘ப்ரண்ட் லைன்’ பத்திரிகை.
அதில், ‘‘1 Nation + 1 Exam = 1 Fiasco” என்று செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது.
இன்னொரு செய்தியை நம்முடைய இராசா அவர்களும், ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களும் சொன்னார்கள். அதையொட்டி நான் ஒன்றைச் சொல்லக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.
ஒரு முக்கியமான தகவல், அந்த நேரத்தில் மக்களுக்குத் தெரியாத ஒரு தகவல் – ஒரு செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும். இங்கே செய்தியாளர் நண்பர்களும் இருக்கிறார்கள். இது பதிவு செய்யப்படவேண்டிய, நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் முக்கியமானதாகும்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து, ஜனதா கட்சி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வருகிறது. அதில் ஆர்.எஸ்.எஸ். உள்பட அங்கம் வகிக்கிறது.

42 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம்!
ஏற்கெனவே இந்திரா காந்தி அம்மையார் அவர்கள், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் செய்த மாற்றங்களையெல்லாம், திருத்துகிறார்கள். அப்படி திருத்துகின்றபொழுது,
42 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தில், ஓராண்டிற்குள்ளாக என்ன நடந்தது என்று சொன்னால், என்னென்னவெல்லாம் மாற்றங்கள் நடந்ததோ, அந்த மாற்றங்கள் எல்லாம் திரும்பப் பெறப்பட்டன.
அந்த மாற்றங்களுக்கு முன்னால், எப்படி அரசமைப்புச் சட்டம் இருந்ததோ, அதே நிலைக்குக் கொண்டுவந்து, விவாதம் செய்து, எல்லாவற்றையும் நிறைவேற்றிக் கொண்டே வருகிறார்கள்.
அப்பொழுது ஒரு முக்கியமான செய்தி; இன்றைக்கு நீட் தேர்வினுடைய அடிப்படைக்குப் போகிறோம். அதனுடைய அடிப்படை என்னவென்றால்,
கல்வி, மாநிலப் பட்டியலில் இருந்தது. ஏனென்றால், காஷ்மீரில் இருக்கின்ற பாடத்திட்டங்கள் வேறு; அங்கே இருக்கின்ற கலாச்சாரம் வேறு.
தமிழ்நாட்டில் இருக்கின்ற மக்களின் நிலை வேறு; அங்கே இருக்கின்ற மக்களின் நிலை வேறு.
ஆகவேதான், ‘‘வேற்றுமையில் ஒற்றுமை” (Unity in Diversity) என்பது.

நாடாளுமன்றத்தில் அறிஞர் அண்ணா!
நாடாளுமன்றத்தில் அண்ணா அவர்கள் உரையாற்றும்பொழுது ஒரே வார்த்தையில் சொன்னார், ‘‘Unity” என்று சொல்லக்கூடிய அய்க்கியம் இருக்கிறதே, அதைக்கூட நீங்கள் வடநாட்டுக்காரர்கள் குழப்பிக் கொள்கிறீர்கள்.‘‘Unity is different from Uniformity” என்று சொன்னார். ஒரே மாதிரி இருக்கவேண்டும் என்று சொல்வது அது வித்தியாசம். பன்முகமாக இருந்தாலும், அவர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு இருக்கவேண்டும் என்கிற விளக்கங்களையெல்லாம் சொன்னார்.
அந்த வகையில், அன்றைக்கு 42 ஆவது அரசமைப்புச் சட்டத்தில் உள்ளவற்றைத் திருத்திக் கொண்டே வந்தார்கள்.
அப்பொழுது என்ன நடந்தது என்று சொன்னால் நண்பர்களே, கன்கரண்ட் லிஸ்ட் – ஒத்திசைவுப் பட்டியல்; மாநில அரசும் சட்டம் செய்யலாம்; ஒன்றிய அரசும் சட்டம் செய்யலாம் என்பதுதான் ஒத்திசைவுப் பட்டியல். அது பொதுப் பட்டியல் அல்ல.

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக்
கொண்டு வரும் மசோதா!
கன்கரண்ட் என்றால், ஒப்புதல் கொடுக்கவேண்டும் என்று அர்த்தம்.
‘‘I Concur” என்றால், ஒப்புக்கொள்கிறேன் என்று அர்த்தம்.
அப்படிப்பட்ட கன்கரண்ட் லிஸ்ட்டை மாற்றினார்கள் பாருங்கள், அதைத் திரும்பவும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருகின்ற மசோதா திருத்தம் வந்தது.
அந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. அடுத்தபடியாக அந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டியது எங்கே என்றால், மாநிலங்களவையில். அங்கேயும் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு இருந்தால், மறுபடியும், மாநில உரிமைக்குக் கல்வி வந்திருக்கும்.
ஆனால், அன்றைக்கு என்ன செய்தார்கள் என்றால், அன்றைய ஜனதா ஆட்சி கவிழ்ந்தது.
அதற்குப்பிறகு, கன்கரண்ட் லிஸ்ட் என்று சொல்லுகின்ற அதற்கு அரசமைப்புச் சட்டத்தில்கூட அவர்களுக்கு உரிமை இல்லை என்பதுதான் மிக முக்கியமானதாகும்.
அன்றைய ஜனதா ஆட்சி முடிந்து போய்விட்டது. மறுபடியும் உங்களுக்கு அந்த உரிமை இல்லையா? ஆகவே, அதை நீங்கள் செய்யவேண்டாமா? என்று கேட்கிறார்களே, இந்தக் கேள்வி எவ்வளவு நியாயமான கேள்வி.
நீங்கள் செய்திருக்கவேண்டாமா? உங்களுக்கு அந்த வாய்ப்புகள் உண்டு அல்லவா!

கூட்டாட்சித் தத்துவத்திற்கு நீட் விரோதமானது!
கூட்டாட்சித் தத்துவத்திற்கு நீட் விரோதமானது. எப்படி ஒரே தேர்தல் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதோ, அதேபோன்று, ஒரே தேர்வு என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அதுமட்டுமல்ல, இன்னொரு செய்தியை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

5 பல்கலைக் கழகத்திற்கும் சேர்த்து
ஒரே தேர்வை நடத்த முடியுமா?
ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்கும் தனித்தனி சட்ட விதிகள். 5 பல்கலைக் கழகத்திற்கும் சேர்த்து ஒரே தேர்வை நடத்த முடியுமா? ஏன், தமிழ்நாட்டிற்குள் இருக்கின்ற பல்கலைக் கழகங்களுக்கு ஒரே தேர்வை நடத்த முடியுமா? என்றால், முடியாது.
unity இருக்கலாம் பல்கலைக் கழகங்களுக்குள். ஆனால், uniformity என்று சொல்லி, ஒரே தேர்வு என்று இருக்க முடியாது.
அந்த அடிப்படையில் நண்பர்களே, நீட் தேர்வு என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும்.
நீட் என்ற எண்ணமே தவறானது. இதை நாங்கள் தொடக்கத்தில் இருந்தே சொன்னோம், கூட்டாட்சித் தத்துவத்திற்குக் குழி பறிக்கின்ற வேலை என்று.
என்.டி.ஏ. ஆட்சியில் ஊழல் இல்லை, ஊழல் இல்லை என்று சொன்னார்கள். ஆனால், அது தோண்டத் தோண்ட வந்துகொண்டே இருக்கிறது.

எங்கள் பிள்ளைகளுடைய கதி என்னாவது?
அதுமட்டுமல்ல நண்பர்களே, மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கு ஏழைகளுக்கு இடம் உண்டா? 12 ஆம் வகுப்புவரை நம் பிள்ளைகளைப் போராடிப் படிக்க வைக்கின்றோமே, அந்தப் பிள்ளைகள் 12 ஆம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்களுக்குக் மதிப்புக் கிடையாதா? நீட் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்தான் மருத்துவக் கல்லூரிக்குச் சேர தகுதி என்றால், பிறகு எதற்கு மேனிலைப் பள்ளிக்கூடங்கள் எல்லாம்? மேனிலைப் பள்ளிகளையெல்லாம் மூடிவிடலாமே! சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் மட்டும்தான் நீட் தேர்வில் கேள்விகள் என்றால், எங்கள் பிள்ளைகளுடைய கதி என்னாவது? எதற்காக நம் பிள்ளைகள் படிக்கவேண்டும்? 8 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு, 10 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு, 11 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு, 12 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு என்று பொதுத் தேர்வு, பொதுத்தேர்வு என்று மேலே வந்து, கடைசியாக இந்தப் பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் எல்லாம் போதாது; நீட் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்தான், மதிப்பெண் என்று சொல்கிறார்கள்.
சரி, நீட் தேர்வின் நிலை என்ன?
புத்திசாலிகள், திறமைசாலிகள், ஊழலை ஒழிக்கின்ற உத்தமர்கள் என்பதற்கு அடையாளம் நீட் என்று சொன்னார்களே, இப்பொழுது அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
நீட் தேர்விற்குக் கருணை மதிப்பெண் கொடுக்கிறார்கள். பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றாலும், கருணை மதிப்பெண் போடலாம் என்று சொல்கிறார்கள்.
இதுதான் உங்களுடைய தகுதி, திறமைக்கு அடையாளமா?
பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கினாலும், கருணை மதிப்பெண் போடுவது என்பது ஒரு தேர்வா? இதுபோன்று உலகத்தில் வேறு எங்கேயாவது நடந்திருக்கிறதா? அறிவார்ந்த வாதத்திற்குமுன் அவர்கள் நிற்கமாட்டார்கள்.
ஆகவேதான், முழுக்க முழுக்க மனுதர்மத்தை, மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவரவேண்டும் என்பதற்கான ஏற்பாடுகள்தான் இது.
எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்கு, கீழ்ஜாதிக்காரனுக்கு படிப்பு கூடாது.
உயர்ஜாதிப் பெண்கள் உள்பட எல்லாப் பெண்களும் ‘‘நமோ சூத்திரர்கள்” என்று சொன்னார்களே, இது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை நினைத்துப் பாருங்கள்.

நீட் தேர்வு என்பது, இது ஒரு சூழ்ச்சிப் பொறி!
ஆகவே நண்பர்களே, இந்த நீட் தேர்வு என்பது, இது ஒரு சூழ்ச்சிப் பொறி!
நீட் தேர்வில் ஏதோ ஊழல் நடந்துவிட்டது, தவறு நடந்துவிட்டது – அதற்காக நாங்கள் எதிர்க்கின்றோம் என்று சொல்ல முடியாது.

வித்தைகளிலேயே மிகப்பெரிய
வித்தை மோடி வித்தை!
அந்த நீட் தேர்வே ஊழல். நீட்டே அடிப்படைத் ததத்துவத்திற்கு, பன்முகத்தன்மைக்கு விரோதமானது, நியாய விரோதமானது. அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நம்முடைய பிரதமர் மோடி செய்யும் வித்தைதான், வித்தைகளிலேயே மிகப்பெரிய வித்தையாகும்.
நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் பதவிப் பிராமணம் ஏற்றுக்கொண்டார்கள். மற்ற மாநில உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டார்கள்.
சென்ற முறை பதவிப் பிரமாணத்தின்போது, ‘‘பெரியார் வாழ்க”, ‘‘அண்ணா வாழ்க”, ‘‘கலைஞர் வாழ்க” என்று சொன்னார்கள்.

ராமனைக் கைவிட்டுவிட்டார்கள்; காரணம், ராமன், அவர்களைக் கைவிட்டுவிட்டான்!
அதற்குப் பதிலாக பா.ஜ.க. உறுப்பினர்கள், ‘‘ஜெய் ராம்” என்று சத்தம் போட்டார்கள்.
ஆனால், இப்பொழுது அவர்கள் ஜெய் ராமை விட்டுவிட்டார்கள்; ராமனைக் கைவிட்டுவிட்டார்கள். காரணம், ராமன், அவர்களைக் கைவிட்டுவிட்டான்.
பா.ஜ.க.விற்கு அயோத்தியில் மட்டும் தோல்வியில்லை. அதைச் சுற்றியுள்ள பல தொகுதிகளில் தோல்விதான்.
நாடாளுமன்றத் தேர்தலில்தான் அவர்களுக்குத் தோல்வி என்றால், இடைத்தேர்தல் நடைபெற்ற பத்ரிநாத் போன்ற தொகுதிகளிலும் தோல்விதான். அந்தக் கடவுளும் அவர்களைக் கைவிட்டுவிட்டனர்.
இப்பொழுது ஒடிசாவில் அறையைத் திறந்துப் பார்க்கின்றார்கள் பாருங்கள், ‘‘ஜெய் ஜெகன்னாத்” என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார் பிரதமர் மோடி. எப்பொழுது இவர்களைக் கைவிடுவார் என்று தெரியாது. அது நமக்கு முக்கியமல்ல!

‘‘சேலம் செயலாற்றும் காலம்’’ என்றார் அண்ணா!
இந்த சேலத்தை நாங்கள் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் என்னவென்றால், ‘‘திராவிடர் கழகம் என்று நீதிக்கட்சிக்குப் பெயர் மாற்றிய இடம்.” ‘‘சேலம் செயலாற்றும் காலம்” என்ற தலைப்பில் அண்ணா அவர்கள் அற்புதமான தலையங்கம் எழுதினார்.

நான் இப்போது வாழ்வது
போனஸ் வாழ்க்கைதான்!
எனக்கு வயதாகிவிட்டது, வயதாகிவிட்டது என்று ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். எனக்குப் பிடிக்காத ஒன்று அதுதான். எனக்கு 91 வயதில்லை. அப்படியே திருப்பிப் போடுங்கள், 19 வயதுதான்! உங்களையெல்லாம் பார்த்த பிறகு. அப்படிப்பட்ட உணர்வோடுதான் நாங்கள் இருக்கிறோம். நான் வாழ்வதெல்லாம் இப்போது போனஸ் வாழ்க்கைதான். அந்த போனஸ் வாழ்க்கையில், இதுபோன்ற கொடுமைகளையெல்லாம் ஒழிக்கவேண்டும் என்பதுதான் மிக முக்கியமானதாகும்.
அந்த அடிப்படையில் சொல்கிறேன், ‘‘இராசா கையை வைச்சா” என்று சொன்னபொழுது, நீங்கள் எல்லோரும் சிரித்தீர்கள்.
எந்த இராசா?
வெண்தாடி வேந்தர் இராசா!
அந்த இராசாவின் பதிப்புகள்தான், நகல்கள்தான் இங்கே இருக்கின்ற இராசாக்கள் எல்லாம்.
ஆகவே, அந்த உறுதியின் முன் நாம் போராடித் தீரவேண்டும்.
மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு 10 ஆண்டுகள் ஆனது.

எத்தனை ஆண்டுகள் போராட்டங்களை
நடத்தினோம் தெரியுமா?
முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் 1984 இல் நுழைவுத் தேர்வை கொண்டு வந்தபொழுது, திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஒன்றாக இணைந்துப் போராடினோம். மற்றவர்களுக்கு விளங்க வைப்பதற்கே மிகவும் கஷ்டமாக இருந்தது. அதற்காக எத்தனை ஆண்டுகள் போராட்டங்களை நடத்தினோம் தெரியுமா?
22 ஆண்டுகளாகப் போராடினோம். 2006 இல் நமது முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில்தானே ஒழிக்கப்பட்டது. நீட்டையும் ஒழித்தே தீருவோம்!

எல்லாப் பிள்ளைகளும் அனிதாக்களாக
பலி பீடத்தில் நிறுத்தப்படவேண்டுமா?
காரணம், எங்களுக்காக அல்ல நண்பர்களே, இந்த மேடையில் இருக்கின்ற தலைவர்களுக்காக அல்ல நண்பர்களே, இங்கே இருக்கின்ற கட்சிகளுக்காக அல்ல நண்பர்களே!
தோழர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்காகத்தான். (பலத்த கரவொலி)
உங்கள் வீட்டுப் பிள்ளைகள் டாக்டர்களாக வேண்டாமா?
உங்கள் வீட்டுப் பிள்ளைகள் டாக்டர்களாக வேண்டும் என்று விரும்பவேண்டாமா?
எல்லாப் பிள்ளைகளும் அனிதாக்களாக பலி பீடத்தில் நிறுத்தப்படவேண்டுமா?
எங்கள் பிள்ளைகள் படிப்பது தவறா?
படிக்க ஆசைப்படுவது குற்றமா?
இதுதான் மிக முக்கியமான கேள்வி, கேட்கப்படவேண்டிய ஒரு செய்தி.
ஆகவே நண்பர்களே, இந்த நீட் தேர்வு எந்த ரூபத்தில் வந்தாலும், எந்த வகையில் வந்தாலும், அதை ஒழித்துக் கட்டுவதைத் தவிர வேறு வழியே கிடையாது.

மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்பது பதவிக் கூட்டணி அல்ல;
கொள்கைக் கூட்டணி!
கூட்டணி ஏன் இவ்வளவு பலமாக இருக்கிறது என்று சொன்னால், மற்ற கூட்டணிகள் எல்லாம் பதவிக் கூட்டணிகள். ஆனால், இந்தியா கூட்டணி இருக்கிறதே, இங்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக்கக் கூடிய இந்தக் கூட்டணி – மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்பது பதவிக் கூட்டணி அல்ல; கொள்கைக் கூட்டணி!
பதவிக்கும், கொள்கைக்கும் போராட்டம் நடந்தால், கொள்கைதான் வெற்றி பெறும். பதவி வெற்றி பெறாது என்பதுதான் மிக முக்கியம். இதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.
சில நாள்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று இருக்கிறது. தமிழ்நாட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மட்டும் இந்தியா கூட்டணி வெற்றி பெறவில்லை. இந்தியா முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று இருக்கிறது.
மறுபடியும் பா.ஜ.க. என்பது வராது, வரக்கூடாது என்கிற உணர்வை மக்கள் பெற்றிருக்கிறார்கள்.

பிரதமர் நாற்காலிக்கு முட்டுக்கொடுக்கின்ற
ஆட்சிதான் இப்பொழுது!
இப்பொழுது ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி இருக்கிறதே என்று நீங்கள் சொல்லலாம். அது பா.ஜ.க. ஆட்சி அல்ல; மோடி தலைமையில் இன்றைக்கு அமைந்திருக்கின்ற ஆட்சிக்குப் பெயர் பா.ஜ.க. ஆட்சி அல்ல. அது தேசிய ஜனநாயக முன்னணி என்று பிரதமர் நாற்காலிக்கு முட்டுக்கொடுக்கின்ற ஆட்சியாகும்.
அந்த நாற்காலிகளுக்குக் கால்களை இரவல் வாங்கியிருக்கிறார்கள். அந்த நாற்காலி எப்பொழுது வேண்டுமானாலும் ஆடலாம்; அதில் ஒன்றும் சந்தேகமேயில்லை. நாற்காலி ஆடுவதற்கு நாங்கள் காரணமாக இருக்கமாட்டோம். அவர்களே ஆடுவதற்குக் காரணமாக இருப்பார்கள்.

திசை திருப்பினார் மோடி!
நெருக்கடி காலத்தைக் காட்டி, திசை திருப்பினார் மோடி உடனே அங்கே இருக்கின்ற ஓர் அமைச்சர், மராட்டிய பார்ப்பனர் நிதின்கட்காரி பதில் சொல்லியிருக்கின்றார்.
‘‘நாம் எதைக் குற்றம் என்று சொன்னோமோ, காங்கிரஸ் செய்த நெருக்கடி காலம் போன்றவற்றை குற்றம் சொன்னோமோ, அதே குற்றத்தை நாம் செய்துகொண்டிருந்தால், மக்கள் நம்மை மதிப்பார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

உங்கள் முகாமிலேயே
கேள்விக் குறி வந்துவிட்டது!
எனவே, கேள்விக்குறி எங்களிடமிருந்து மட்டும் கிளம்பவில்லை. உங்கள் முகாமிலேயே கேள்விக் குறி வந்துவிட்டது.
அப்படி என்றால் என்ன அர்த்தம்?
விரிசல் விரிகிறது என்று அர்த்தம்.
ஜனநாயகத்தை ஒழிக்கலாம் என்கிற எண்ணத்தை உங்களால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது.
எனவேதான் நண்பர்களே! நாங்கள் சொல்கிறோம், நீட் தேர்வு என்பது மனித உரிமைப் பறிப்பு மட்டுமல்ல; நாட்டின் உரிமைப் பறிப்பாகும்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தை, அறவே ஒழித்துவிட்டு, அந்த இடத்தில் மனுதர்மத்தைக் கொண்டு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பதற்கான அடையாளமாகும்.

மாநிலத்தினுடைய உரிமைகள் காப்பாற்றப்படவேண்டும்!
எனவேதான், எங்கள் பிள்ளைகள் வாழவேண்டும். எங்கள் உரிமைகள் காப்பாற்றப்படவேண்டும். எங்கள் உரிமைகள் மட்டுமல்ல, மாநிலத்தினுடைய உரிமைகள் காப்பாற்றப்படவேண்டும். அது எந்த மாநிலமாக இருந்தாலும் அந்த மாநிலத்தின் உரிமைகள் காப்பாற்றப்படவேண்டும்.
நல்லதே நடக்கும்; அரசமைப்புச் சட்ட முதல் திருத்தம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல சமூகநீதி, இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பயன்படக் கூடிய அளவிற்கு சமூகநீதி வந்தது.

வெற்றிக்காக உழைக்கக்கூடிய உங்களுக்கு ஓய்வில்லை, ஒழிவில்லை!
ஆகவே, தோழர்களே! இந்த வெற்றிக்காக உழைக்கக்கூடிய உங்களுக்கு ஓய்வில்லை, ஒழிவில்லை. இராணுவ வீரர்களுக்கு ஓய்வு கிடையாது. காவல்துறைக்கு ஓய்வு கிடையாது. காற்றுக்கு ஓய்வு கிடையாது. நெருப்புக்கு ஓய்வு கிடையாது. சமூகத்தில் எப்படி பஞ்ச பூதங்கள் என்று கருதக்கூடிய அத்தனையும் ஓய்வின்றி இயற்கையில் உழைக்கின்றனவோ, அதுபோன்று உழைத்துத் தீரவேண்டும்.
எனவே, கருஞ்சட்டைப் பட்டாளத்தின் இராணுவக் கட்டுப்பாடு, எல்லோரையும் திரட்டும் – திரட்டவேண்டிய அளவிற்கு இருப்பார்கள்.
எங்களுடைய அனிதாக்களின் மரணங்கள் வீணாகாது. அந்த மரண சாசனம் இன்றைக்கு நிச்சயமாக பல மாணவர்களைக் காப்பாற்றக் கூடிய மருத்துவங்களாக மாற்றப்படுவது நம்முடைய கைகளில்தான் இருக்கிறது.

நாங்கள் வெளியில் போராடுவோம்;
இராசா போன்றவர்கள் நாடாளுமன்றத்தின் உள்ளே போராடுவார்கள்!
எனவே, ஆதரவு தாரீர்!
அடுத்தக்கட்ட போராட்டத்தை விரைவில் அறிவிப்போம். நாங்கள் வெளியில் போராடுவோம்; இராசா போன்றவர்கள் நாடாளுமன்றத்தின் உள்ளே போராடுவார்கள்.
நீங்கள் எந்த வகையில் இருந்தாலும் உங்களுடைய ஆதரவைத் தாருங்கள். இதில் கட்சி இல்லை, ஜாதி இல்லை, மதம் இல்லை, அரசியல் இல்லை. நம் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வுதான் இருக்கிறது.
எனவே, அடுத்த தேர்தலைப்பற்றி நினைப்பதைவிட, அடுத்தத் தலைமுறையைப்பற்றி நாங்கள் நினைக்கக் கூடியவர்களாக இருக்கிறோம்.
ஆகவேதான், நீட் தேர்வு ஒழிப்பு என்பது, தலைமுறை தலைமுறைகளைக் காப்பாற்றுமே தவிர, தேர்தல் வித்தைகள் இவை என்று தவறாக நினைக்கவேண்டாம், இதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.

பெரியார் தோற்றதில்லை –
நியாயங்கள் வெல்லுவது இயல்பு!
ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
மழைக்கும் நன்றி!!
உங்களுடைய அன்பிற்கும் நன்றி!
வாழ்க பெரியார்!
ஒழிப்போம், ஒழிப்போம்! நீட்டை ஒழிப்போம்!
ஓயமாட்டோம், ஓயமாட்டோம்,
நீட் தேர்வு ஒழிகின்ற வரையில் ஓயமாட்டோம்!
வெற்றி நமதே!
பெரியார் தோற்றதில்லை –
நியாயங்கள் வெல்லுவது இயல்பு!
நன்றி, வணக்கம்!
(தமிழர் தலைவர் இந்த முழக்கங்களைச் சொல்லச் சொல்ல கூடியிருந்த பொதுமக்களும் அந்த முழக்கங்களை திரும்பிச் சொன்னார்கள் என்பது குறிப்பிடத்தக்கது).
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக