சனி, 6 ஜூலை, 2024

தென்சென்னை திராவிடர் கழக இளைஞர் அணியின் சார்பில் ராயப்பேட்டையில் நடந்த தமிழின எழுச்சி நாள் பொதுக்கூட்டம் -26.11.1991


இயக்க வரலாறான தன் வரலாறு(241) : வன்முறையில் நம்பிக்கையில்லாத இயக்கம் திராவிடர் கழகம்!

உண்மை இதழ்

அய்யாவின் அடிச்சுவட்டில் …

கி.வீரமணி

 

வீரசேகரன்

25.11.1991 அன்று கழக வழக்கறிஞர் வீரசேகரன் அவர்கள் ‘தடா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பத்மநாபா கொலை வழக்கில் தேடப்பட்ட குண்டு சாந்தன் எனும் விடுதலைப் புலியை, தலைமறைவாகி விடும்படி வழக்கறிஞர் வீரசேகரன் கடிதம் எழுதினார் என்று குற்றம் சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து வழக்கறிஞர் வீரசேகரனை ஜாமீனில் விட வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி சித்திக் தள்ளுபடி செய்துவிட்டார். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.    மனுவை விசாரித்த நீதிபதி கே.எஸ்.பக்தவத்சலம், வழக்கறிஞர் வீரசேகரனை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இந்த மனுவின் வழக்கறிஞர் நானே நேரடியாக வழக்கறிஞர் வீரசேகரன் சார்பில் ஆஜரானேன். என்னுடன் மூத்த வழக்கறிஞர் ந.கணபதி, சட்டத்துறை செயலாளர் துரைசாமி, வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் ஆஜரானார்கள். நீதிபதி அளித்துள்ள தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

26.11.1991 அன்று தென்சென்னை திராவிடர் கழக இளைஞர் அணியின் சார்பில் ராயப்பேட்டையில் நடந்த தமிழின எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அப்போது, ஈழத்தமிழர்களாகிய எங்கள் இனத்துக்காரர்களுக்கு நாங்கள் மனிதாபிமானத்தோடு உதவுவது ‘தேசத் துரோகம்’ என்றால், எங்கள் மனிதநேயம் உங்களுக்கு ‘தேசத் துரோகம்’ என்றால்… அந்த “தேசத் துரோகத்தை’ நாங்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருப்போம்! என்று பிரகடனப்படுத்தினேன்.

தந்தை பெரியாருடைய தொண்டன் என்கிற காரணத்தாலே அந்த ஒரு தலைவனைத் தவிர அந்த ஒரு தலைவன் தந்த கொள்கையைத் தவிர என்னுடைய ரத்த நாளத்தினாலே வேறு எதையும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால், ஒன்றைமட்டும் நினைத்தேன்; தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள், “ஒரு மனிதன் நோயினால் சாகக் கூடாது. அவன் லட்சியத்திற்காகச் சாக வேண்டும். அந்தச் சாவை யாசித்தாவது பெறவேண்டும்.’’ அந்த நிலைதான் எனக்கு வரவேண்டும். “நான் மருத்துவமனையில் செத்துப் போய் விடக்கூடாது. சிறைச்சாலையிலோ அல்லது சமுதாயத் தொண்டு புரியும்பொழுது வேறு இடத்திலோ செத்துப் போக வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று நினைக்கும்பொழுது நான் மகிழ்ச்சியுடன் அதை ஏற்கிறேன்’’ என்று.

என்னுடைய மக்கள் வீடிழந்து, வாசல் இழந்து, இழக்கக்கூடாத கற்பை இழக்கும்போது எங்கள் உயிர் என்ன வெல்லமா? என்று கடுமையான மனவேதனையுடன் கண்டித்து உரை நிகழ்த்தினேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக