செவ்வாய், 30 ஏப்ரல், 2019

நன்கொடை வழங்கல்



* காஞ்சி மாவட்டம் செங்கற்பட்டு வட்டத்தைச் சேர்ந்த மதுராந்தகம் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்தவரும், தி.க, தி.மு.க. பற்றாளரும், செங்கற்பட்டு திராவிடர் கழகம் ம.கருணா நிதியின் தந்தையாருமான சி.எஸ்.மணி நினைவு நாளை (2.4.2019) முன்னிட்டு அவரது நினைவாக அவர் குடும்பத்தின் சார்பாக ரூ.1000 திருச்சி, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை அளிக்கப்பட்டது.



* கலைமாமணி கவிஞர் ந.மா.முத்துக்கூத்தன் இல்லத்து வள்ளுவம் சொன்ன வாழ்க்கைத்துணை நலம் ஏற்ற (18.4.2019) விழா மகிழ்வாக மணமக்கள் காவிரிச்செல்வன் - முல்லை (மணமக்கள் சார்பாக) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/- நன்கொடை அன்புடன் வழங்கப்பட்டது.

-  விடுதலை நாளேடு, 30.4.19

திங்கள், 29 ஏப்ரல், 2019

கழகப் பிரச்சாரங்கள் தீவிரமாக நடக்கட்டும், நடக்கட்டும்! பாதுகாப்பு ஏற்பாடுகளை நமக்கு நாமே செய்துகொள்வோம்!


காவல்துறையை நம்பிப் பயனில்லை

மாநில - மண்டல - மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் முக்கிய முடிவு

சென்னை, ஏப்.27 மாநில அளவில் திராவிடர் கழகக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட அறிக்கை வருமாறு:

திட்டக் குறிப்புகள்!

1. இணைய தளப் பிரச்சார அணி

2. கிராமப்புறப் பிரச்சாரம்

3. தெருமுனைப் பிரச்சாரம்

4. கூட்டத் துண்டு அறிக்கையின் பின்பக்கத்தில் கழக முக்கிய கொள்கைகள் இடம்பெறவேண்டும். துண்டறிக்கைகள் அளிப்பு வெளியீடு தொடர் பணியாக அமைதல் அவசியம்.

5. மாணவர்கள் மத்தியில் சமுகநீதி, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பிரச்சாரம்

6. முக்கிய இடங்களில் கொடி மரங்கள்

7.முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர்ப் பொதுப் பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கி இருக்கக்கூடாது.  தேவைப்பட்டால் நாமே முன்னெடுத்து நடத்தலாம், மற்றவர்களின் ஒத்துழைப்போடு. (கழகத் தலைமையின் அனுமதியோடு)

8. கழகக் குடும்பங்களின் கலந்துரையாடல்கள்

9. கிராமங்களில் பெண்கள்பற்றிய பிரச்சினை, உடல்நலம், குழந்தைகள் பராமரிப்பு, வளர்ப்பு, கல்வி  வழிகாட்டல்கள்.

10. பெண்கள் தொடர்பான அச்சுறுத்தல்கள், பாது காப்புகள்பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம்

11. பெரியார் பிறந்த நாள், அம்பேத்கர் பிறந்த நாள், அண்ணா பிறந்த நாள்,  அன்னை மணியம்மையார் பிறந்த நாள், புரட்சிக்கவிஞர் பிறந்த நாள், ஆசிரியர் பிறந்த நாள் விழாக்கள்,  உலக மகளிர் நாள், மேதினம், தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் விழா, நவம்பர் 26 ஜாதி ஒழிப்பு நாள் கொள்கை விழாவாக கொண்டாடப்படவேண்டும்.

12. குற்றாலம், ஒகேனக்கல் என்பதோடு சனி, ஞாயிறுகளில் மாவட்டந்தோறும் பயிற்சிப் பட்டறை.

13. பெரியார் சமுகக் காப்பு அணி வலிமைப்படுத்துதல், பயிற்சிகளைப் பரவலாக அந்தந்த பகுதிகளில்  நடத்துதல், தற்காப்புப் பயிற்சிகள், மாநில அளவில் இதனை ஒருங்கிணைக்க மாநில அமைப்பாளர் ஒருவர் முழு நேரப் பணியாளராக நிமித்தல் - கழகக் கூட்டங்களுக்குப் பாதுகாப்பில்  இவர்களின் பங்கு முக்கியப்படுத்தப்பட வேண்டும். 14. தலைமைக் கழகம் அறிவிக்கும் கூட்டங்களை மட்டும் நடத்தினால்போதும் என்ற நிலை மாற்றப்பட வேண்டும்; பேச்சாளர்களிடம் தேதி வாங்கி கூட்டங்கள் நடத்தும் முறை ஏற்படவேண்டும். மாவட்டப் பொறுப் பாளர் தங்கள் மாவட்டத்துக்கு மூன்று, நான்கு கூட்டங்களுக்குப்  பேச்சாளரிடம் தேதி பெற்று நடத்துவது சிறப்பானதாகும்.

இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணியினர் தத்தம் அமைப்புகள் சார்பாக கழகத் தோழர்களின் ஒத்துழைப்புடன் நடத்துதல் அவசியம்.

15. பேச்சாளர்கள் பயிற்சி, களப்பணி பயிற்சி, மந்திரமா? தந்திரமா? பயிற்சி நடத்தி புதிய தோழர்கள் உருவாக்கப்படவேண்டும்.

16. ஆண்டுக்கு ஒருமுறை கழகத் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் மாவட்டம் அல்லது மண்டல வாரியான கலந்துரையாடல் கூட்டங்கள்.

மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 2 மாதங்களுக்கு ஒருமுறை ஒன்றிய, நகர, கிளைக் கழகக்கூட்டங்களை மாவட்டத் தலைவர், செயலாளர்கள் ஒருங்கிணைந்து நடத்துதல்.

17. ஏடுகளுக்குச் சந்தா சேர்ப்பு - குறிப்பிட்ட காலத்தில் என்பதாக மட்டும் அல்லாமல், அது அன்றாட தொடர் பணியாக இருத்தல். திருமணம் முதலியவைகளுக்கு அன்பளிப்பு - சந்தாவாக அளித்தல்.

18. புத்தகச் சந்தைகள் ஆண்டு முழுவதும் சுழன்று கொண்டே இருக்கும் வகையில் திட்டமிடல்.

19. முழு இரவு கலை நிகழ்ச்சிகள் முக்கிய நகரங்களில் - முக்கிய ஒன்றிய தலைநகரங்களில்.

20. பல்வேறு கட்சிகளில் உள்ள பகுத்தறிவாளர்களை, இன உணர்வாளர்களை இணைக்கும் பெரியார் பேசுகிறார் நிகழ்ச்சிகளை குறைந்தபட்சம் மாதம் ஒருமுறை நடத்துதல்.

21. பகுத்தறிவுக் கரும் பலகைத் திட்டம் - சுவர் எழுத்துப் பணிகள்.

22. பெரியார் ஆயிரம் ஆண்டுதோறும் நடை பெறுவதற்கான ஏற்பாடு.

23. பெரியார் பிறந்த நாள் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, பாட்டுப் போட்டி, விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவாளர் கழக ஆசிரியரணி பொறுப்பு.

24. தொழிலாளர் அணியைப் பொறுத்தவரையில் தொழிலாளர்கள் மத்தியில் பகுத்தறிவுப் பணிகள் - துண்டறிக்கைகள், வாயில் கூட்டங்கள், கரும்பலகைப் பிரச்சாரம், தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி வழிகாட்டுதல்.

25. பெரியார் கல்வி நிறுவனங்கள், அதன் பணிகள் குறித்து - நமது பிரச்சாரத்தினூடே இடம்பெறுதல்.

26. மந்திரமா? தந்திரமா? மூடநம்பிக்கை ஒழிப்பு கண்காட்சி - செய்முறைகள், நூல்கள் விற்பனை, உறுப் பினர் சேர்க்கை உள்ளிட்ட ஒட்டுமொத்த ஏற்பாடுகள் (பேக்கேஜ்) ஒரு வாகனத்தின்மூலம்  நாடு தழுவிய    அளவில் நடந்துகொண்டே இருக்க ஏற்பாடு.

27. உறுப்பினர் சேர்க்கை

28. பெரியார் படிப்பகங்கள் செயல்படும் தன்மையோடு நடக்க ஆவன செய்யப்படுதல்

29. கழகப் பணிகள், செயல்பாடுகள் இவற்றைக் கண்காணிக்கும் ஏற்பாடுகள் முக்கியம்.

30. அமைப்புச் செயலாளர்கள் தத்தம் மாவட்டங்களின் பணிகளை ஒருங்கிணைத்தல், பிரச்சார ஏற்பாடுகளைச் செய்தல் உள்ளிட்ட அனைத்துக்கும் பொறுப்பாவார்கள்.

தலைமைக் கழகத்திற்கு நேரிடைப் பொறுப்பு அவர்களே!

பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகாலமாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக் கப்பட்டார்கள் என்ற நிலையில், அதனைக் கண்டித்து நாடெங்கும் கண்டனங்கள் வெடித்துக் கிளம்பின.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் 12.3.2019 நாளிட்ட விடுதலை'யில் கண்டனம் தெரிவித்து, கடும் நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தி எழுதியிருந்தார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைபற்றி கலாச்சார சீரழிவுக்கான காரணங்கள்'' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதிய துக்ளக்' வார ஏட்டில் (27.3.2019, பக்கம்6).

இந்தக் கலாச்சார சீரழிவுக்கு விதை போடப்பட்டது ஈ.வெ.ரா. காலத்தில்தான் என்றும், அதனைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்து வருகிறார் என்றும்'' அபாண்டமாக வீண்பழி சுமத்தி, உண்மைக்கு மாறாக எழுதியிருந்தது துக்ளக்.'

இது உண்மைக்கு மாறானது என்றும், வாழ்நாள் முழுவதும் பொது ஒழுக்கத்தை ஓம்பியவர் தந்தை பெரியார் என்றும், ஒழுக்கக்கேடுகளுக்கு வித்திடுவது மதம்தான் என்றும் விளக்கி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் சிறப்புக் கூட்டம் ஒன்றில் ஆதாரங்களுடன் விளக்கம் அளித்துப் பேசினார் (22.3.2019).

திராவிடர் கழகத் தலைவர் ஆற்றிய உரையில் பிழை இருக்கிறது - குற்றமிருக்கிறது என்று கருதினால், அவற்றை மறுத்து உரையாற்றலாம், கட்டுரைகள் தீட்டலாம்; ஆனால், கருத்தைக் கருத்தால் சந்திக்க முடியாத பார்ப்ப னர்கள் 30.3.2019 அன்று இந்து ஆலயங்கள் மீட்பு'' என்ற பெயரில் சென்னை பார்த்தசாரதி கோவிலில் கூடியும் - 30.3.2019 அன்றே சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியும் தந்தை பெரியார் அவர்களைப்பற்றியும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்பற்றியும் மிகவும் கீழ்த்தரமாகவும், கொச்சையாகவும் பேசியுள்ளார்கள். EV Ramasamy Rascal என்றும்,  Bloody  கேடி வீரமணி என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள்.

அதுகுறித்து ஆதாரங்களை இணைத்து காவல்துறைத் தலைமை இயக்குநர் அவர்களுக்கு (5.4.2019) சென்னை பெருநகரக் காவல்துறை ஆணையருக்கும் (17.4.2019) புகார் கொடுக்கப்பட்டது.

சி.பி.மீடியா யூடியூப் இணையத்தில் பேசப்பட்ட அந்தத் தரக்குறைவான பேச்சுகள் அடங்கிய ஆடி யோவும் - எழுத்து வடிவமும் இணைக்கப்பட்டு நேரில் அளிக்கப்பட்டது.

இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

இதற்கிடையில் தினமலர்' வார மலரில் (3.3.2019, பக்கம் 10 இல்) கேள்வி - பதில் பகுதியில் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ் என்ற வெள்ளைக்கார கலெக்டரை சுட்டுக்கொன்ற அதே ஜாதிக்காரன் (அதாவது பார்ப்பான்) வீரமணியையும் கொல்லுவான் என்ற பொருள்படும்படி எழுதப்பட்டு இருந்தது.

இதுகுறித்தும் காவல்துறைத் தலைமை இயக்குநருக்கும் (5.4.2019), சென்னை பெருநகர ஆணையருக்கும் புகார் மனு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தலைமைக் கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டது.

சென்னை பெருநகரக் காவல்துறை ஆணையரின்  5.4.2019 நாளிட்டக் கடிதத்தில், சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இல்லையென்று சட்டத் துறை கூறுவதாகவும், நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்து நிவாரணம் தேடிக் கொள்ளுமாறும் பதிலிறுக்கப்பட்டுள்ளது.

இதன்மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படுகிறது.

திருச்சியில் நடந்தது என்ன?

திருச்சி நாடாளுமன்ற திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் திரு. சு.திருநாவுக்கரசர் அவர்களை ஆதரித்து, திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் 04.04.2019 அன்று மாலை 6 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்கூட்டியே முறைப்படி அனுமதி கோரிக் கடிதம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், பீம நகர் பகுதியில் வேறு கூட்டம் இருப்பதாகக் கூறி, வேறு பகுதிக்கு கூட்டத்தை மாற்றச் சொல்லி காவல்துறை சார்பில் சொல்லப்படவே, காவல்துறையின் பரிந்துரைப்படியே தாராநல்லூர், கீரைக்கொல்லை பகுதிக்கு கூட்டம் மாற்றப்பட்டு, கடைசி நேரத்தில் அனுமதி பெறப்பட்டு கூட்டத்திற்கான பணிகள் வெகுவேகமாக நடைபெற்றன.

ஆனால், அந்தத் தேதியில் பீம நகர் பகுதியில் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. காவல்துறை ஏன் அப்படியொரு தவறான தகவலை சொல்ல வேண்டும்?

முதல் கூட்டம் பெரம்பலூரில் முடித்து, அமைதியான முறையில் அடுத்த கூட்டம் திருச்சி கீரைக்கொல்லை பகுதியில் தொடங்கி, ஏராளமான பொதுமக்களின் வரவேற்போடு நடைபெற்று வந்த நிலையில், கழகத்தின் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இந்து முன்னணியைச் சேர்ந்த 12 காலிகள் மேடையை நோக்கி செருப்பையும், கற்களையும் வீசி கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர். தடுக்க வந்த தோழர்கள் மீது, நாற்காலிகளை விசிறியடித்து தாக்குதல் நடத்தினர், பின்னர் அவர்களை வளைத்துப் பிடித்த தோழர்கள், காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்,

அதில் மேலும் இருவரை கழகத் தோழர்கள் காவல்துறையிடம் அடையாளம் காட்டியபோதும், அவர்களைக் கண்டுகொள்ளாமல் காவல்துறை அனுமதித்துவந்தது.

இந்நிலையில் தொடர்ந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் உரையாற்றினார். முதல் பிரச்சாரக் கூட்டத்தை பெரம்பலூரில் முடித்து மேடைக்கு வந்த தமிழர் தலைவருக்கு பெரும் கரவொலியுடன் வரவேற்பு வழங்கினர் பொது மக்கள்.

"கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கவனித்துக் கொள்ளும். பொதுமக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்" என்று அமைதிப்படுத்தியபடி தன்னுடைய உரையைத் தொடங்கிய தமிழர் தலைவர், மோடி அரசின் மோசடிகளையும், அதிமுக அரசின் அடிமைத் தனத்தையும், காங்கிரஸ் - திமுக கூட்டணியின் செயல்திட்டங்கள் குறித்தும் ஆதாரங்களை எடுத்து வைத்து 40 நிமிடம் உரையாற்றினார். பேரார்வத்துடன் பொதுமக்களும் செவிமடுத்தனர்.

சரியாக இரவு 10 மணிக்குள் அமைதியான முறையில் கூட்டம் நடைபெற்று முடிந்து, செய்தியாளர்களையும் சந்தித்துவிட்டு, தமிழர் தலைவரின் வாகனம் கிளம்பிய சில நிமிடங்களில் அந்தச் சாலையின் முனையில் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த இந்து முன்னணி காலிகள் பலர், தமிழர் தலைவரைத் தாக்கும் நோக்கத்தோடு, கையில் கற்களை ஏந்தியபடி தமிழர் தலைவரின் வாகனத்தை நோக்கி தாக்கினர். இரு சக்கர வாகனங் களிலும், ஓடியும் வந்தனர். பின்னால் வந்து கொண் டிருந்த திராவிடர் கழகத் தோழர்கள் மீதும் கல்வீசியும், மூர்க்கத்தனமாக மோதியும் தாக்குதல் நடத்தினர். இதில் திராவிடர் கழகத் தோழர்கள் சிலர் தாக்கப்பட்டு காயமேற்பட்டது,

வன்முறைத் தாக்குதல் நடந்த பின்னரும், காவல்துறையினர் காவல் பணியில் முழு கவனத்துடன் இல்லாமல் இருந்ததே பிந்தைய நிகழ்ச்சிக்குக் காரணமாயிற்று. வழக்கமாக, தலைவர்கள் மீது இத்தகைய தாக்குதல் முயற்சிகள் நடைபெற்றால், பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு, தலைவர்களின் வாகனங்களுக்கு முன்னும் பின்னும் காவல்துறை வாகனங்கள் பாதுகாப்புக்கென அணிவகுத்து வரும். ஆனால், அசாதாரண சூழல் நிலவியதோடு, வன்முறைத் தாக்குதல் ஒன்று நடந்து பலர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அப்படி எந்த பாதுகாப்பு முயற்சியிலும் காவல் துறை ஈடுபடவேயில்லை. , கழகத் தோழர்கள் மட்டுமே தமிழர் தலைவரின் வாகனத்தின் முன்னும் பின்னும் பாதுகாப்புக்காக வாகனங்களில் வந்தனர்.

கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி தலை வர் மணிகண்டன் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு ஒரு மணிக்கு திருச்சி பெரியார் மாளிகையில் திடீரென காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மாவட்ட கழகத் தலைவர் ஆரோக்கியராஜ், செயலாளர் மோகன்தாஸ், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், பெல் ஆறுமுகம், செய்தியாளர் பாலு (எ) செந்தமிழினியன், கனகராஜ், ஆத்தூர் சுரேஷ் ஆகிய கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு, ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். யார் தாக்குதலுக்கு ஆளாகி காயம்பட்டுள்ளார்களோ, மண்டை உடைக்கப்பட்டதோ அவர்கள் மீதே வழக்கைத் தொடர்ந்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை, இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி நிகழ்ச்சியைப் பொறுத்தவரை காவல்துறை நடந்துகொண்ட போக்கு கவலை அளிப்பதாகவே உள்ளது.

ஒரு தலைவர் பேசி முடித்த பிறகு அவர் பயணம் செய்யும் வாகனத்தைப் பின் தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பு கொடுப்பது வழக்கம். அதுவும் ஒரு வன்முறை நடவடிக்கை திட்டமிட்டு நடந்த தருணத்தில், சூழ்நிலையில் திருச்சி காவல்துறை அந்தக் கடமையைச் செய்யத் தவறியது ஏன்?

இந்து முன்னணியினர் கலவரம் செய்யும் நோக்கில் திட்டமிட்டு கூட்டத்திற்கு வந்திருப்பதைக் குறித்து முன் கூட்டியே தகவல் தெரிந்தும் காவல்துறை வேடிக்கை பார்த்தது - அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியோ என்றே எண்ண வேண்டியுள்ளது.

அதைவிடப் பெருங்கொடுமை தாக்குதலுக்குக் காரணமானவர்களையும் தாக்குதலுக்கு ஆளான திராவிடர் கழகத் தோழர்களையும் சமமான ஒரே கண் ணோட்டத்தில் பார்ப்பதும் பாதிக்கப்பட்ட திராவிடர் கழகத் தோழர்கள் மீதே பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறைக்கனுப்புவதும் எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

திருச்சி நிகழ்ச்சிக்குப் பிறகு திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் அவர்கள் 5.4.2019 அன்று கடலூர், சிதம்பரம் மக்களவைத் தொகுதிகளிலும், 6.4.2019 அன்று மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியிலும், 7.4.2019 அன்று தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று தேர்தல் பரப்புரை செய்தார். எந்தப் பிரச்சினையும் இல்லை.

8.4.2019 அன்று பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திராவிடர் கழகத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில், திருச்சியில் நடைபெற்ற நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி பொள்ளாச்சியில் கூட்டத்திற்கு அனு மதி மறுக்கப்படுவதாக காவல்துறைத் துணைக் கண் காணிப்பாளரால் கடிதம் கொடுக்கப்பட்டது.

திருச்சியில் ஏப்ரல் 4 சம்பவங்களுக்குப் பிறகு தொடர்ந்து மூன்று நாள்கள் பல்வேறு மக்களவைத் தொகுதிகளில் திராவிடர் கழகத் தலைவர் உரையாற்றுவதற்கு அனுமதியளித்த அதே காவல்துறை, தேர்தல் அதிகாரிகள் பொள்ளாச்சிக்கும், மறுநாள் 9.4.2019, 10.4.2019 நாள்களில் நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும், 11.4.2019 அன்று ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் அனுமதி மறுத்தது எந்த அடிப்படையில்?

ஊருக்கு ஒரு சட்டமா? ஆணையா? என்ற கேள்வி எழுகிறது.

8.4.2019 அன்று திருப்பூர் மக்களவைத் தொகுதியில் - திருப்பூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், மேனாள் மேயருமான மானமிகு செல்வராஜ் அவர்களின் தீவிரமான முயற்சியாலும், சரியான அணுகுமுறையாலும் திராவிடர் கழகத் தலைவர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

திருப்பூரில் தங்கும் விடுதியிலிருந்து புறப்பட்டுச் சென்ற காரில், திராவிடர் கழகத் தலைவரைக் குறிபார்த்து கல்லை வீசி உயிருக்கு உலை வைக்க திட்டமிட்டு செயல்படுத்தவும்பட்டது. மயிரிழையில் கழகத் தலைவர் உயிர் தப்பினார் என்றே சொல்லவேண்டும்.

திருப்பூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் மானமிகு செல்வராஜ் அவர்களின் செயல்திறனும், உரிமைக்காகப் போராடும் குணமும், தாய்க் கழகத் தலைவர் கண்டிப்பாகப் பேசியே தீரவேண்டும் என்ற வைராக்கிய உணர்வுடனும் செயல்பட்டதானது பாராட்டத்தக்கது என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

எந்த எதிர்ப்பு வந்தாலும், அச்சுறுத்தல் வந்தாலும் எம் பயணம் தொடர்ந்தே தீரும் என்ற - தமிழ் தலைவர் ஆசிரியருக்கே உரித்தான போராட்டக் குணத்தோடு தொடர்ந்து தருமபுரி, திருவள்ளூர், சென்னை மக்களவைத் தொகுதிகளில் தன் பிரச்சாரத்தைத் தொடர்ந்துகொண்டே இருந்தார்.

கடைசி நாள், கடைசி கட்ட நேரப் பிரச்சாரத்தையும் தஞ்சையில் நிகழ்த்தியே கழகத் தலைவர் சென்னை திரும்பினார்.

பொள்ளாச்சியில் கழகத் தலைவரின் பிரச்சாரத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறை, அதே பொள்ளாச்சியில் திராவிடர் கழகத் தலைவரைக் கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு (14.4.2019) அனுமதியளித்தது என் றால், தமிழகக் காவல்துறை அசல் ஏவல் துறையாக மாறிவிட்டது என்பதற்கு அடையாளமே!

இதுகுறித்தும் தமிழகத் தேர்தல் அதிகாரிக்கும், காவல்துறைத் தலைமை இயக்குநருக்கும் தலைமைக் கழகத்தின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது (15.4.2019).

உரிய முறையில், உரிய காலத்தில் திராவிடர் கழகத் தலைமை நிலையம் சார்பில் காவல்துறைக்குப் புகார் கொடுக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படாதது - காவல்துறையின் ஒரு சார்பு நிலையைத்தான் வெளிப்படுத்துகிறது.

திராவிடர் கழகத் தலைவர் - கிருஷ்ணன் கடவுளைப் பற்றி அவதூறாகப் பேசினார் என்று கூறி, இந்துத்துவா சக்திகள் பல இடங்களில் காவல்துறையிடம் புகாரும் கொடுத்துள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்துவிட்டது. தினமலர்' வார மலரில் கழகத் தலைவர்மீது கொலை வெறியைத் தூண்டும் கேள்வி - பதில் பகுதி குறித்தும் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கழகத் தோழர்கள் ஆங்காங்கே காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். இதன்மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், கழகப் பிரச்சாரக் கூட்டங்களை விரிவான அளவில் நடத்தித் தீரவேண்டிய காலகட்டம் இது என்பதால், கழகத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில், மற்றும் கழகப் பிரச்சார நிகழ்ச்சிகளில் பாதுகாப்பைக் காவல்துறையிடம் எதிர்ப்பார்க்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.

மம்சாபுரம் (20.7.1982), சென்னை இராயபுரம் (11.4.1985), வடசென்னை புதுவண்ணை (27.4.1985), சேலம் தம்மம்பட்டி (28.8.1987), விருத்தாசலம் (28.9.2013), திருச்சி (4.4.2019), திருப்பூர் (8.4.2019) என்று கழகத் தலைவரின் உயிருக்குக் குறி வைக்கப்பட்டுள்ள நிலையிலும், சற்றும் தளராமல் இந்த 86 ஆம் வயதிலும் அவர்களின் சுற்றுப்பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தந்தை பெரியாருக்குப் பிறகும் திராவிடர் கழகம் வீறுகொண்டு செயல்படுவதையும் பொறுக்காத காவிகள் ஏதோ ஒரு  திட்டத்தோடு கழகத் தலைவர்மீதான வன்முறைகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பது கவனத்திற்கும், கவலைக்கும் உரியதாகும்.

ஜாதிய வாதமும், மதவாதமும் தலைதூக்கி நிற்கும் இந்தக் காலகட்டத்தில், அரசியல், தேர்தல், பதவிகள் என்பனவற்றையெல்லாம் தாண்டி மக்கள் மத்தியில் மதச் சார்பின்மை, சமுகநீதி, பகுத்தறிவு, மொழி உணர்வு, மண்ணுக்கான உரிமைத் தளங்களில் மிகப்பெரிய அளவுக்குத் தீவிரப் பிரச்சாரம் செய்வதிலும், களம் காண் பதிலும் இளைஞர்களை ஆயத்தப்படுத்தும் கடமையும், பணியும் முன்னிலும் அதிகமாக நம்முன் எழுந்து நிற்கிறது. நூற்றாண்டுக்கால திராவிட இயக்கத்திற்குச் சவால்கள் தோன்றியுள்ளன. இதனைக் கண்டிப்பாக சந்திப்போம் - சாதிப்போம் என்று சூளுரைத்துச் செயல்படுவோம்!

திராவிடர் கழகத்தின் கடவுள், மத எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரம் என்பது யாரையோ புண்படுத்துவது என்பது அசல் மாய்மாலமாகும். இவர்கள் நம்பும் கடவுளும், மதமும் ஜாதியைப் பாதுகாப்பதாகும். நான்கு வருணங்களையும் உண்டாக்கியது நானே - அப்படி உண்டாக்கிய நானே நினைத்தாலும் அதை மாற்ற முடியாது; வைசியர்களும், பெண்களும், சூத்திரர்களும், பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கிருஷ்ணன் என்ற கடவுள் சொல்லுவது கீதையில் இடம்பெற்றுள்ளது. இத்தகு கடவுள்மீதும், மதம்மீதும் விமர்சனம் வைப்பதுதான் யோக்கியமான மனிதத் தொண்டாகும். தந்தை பெரியார் அவர்களின் கோட்பாடாகும்.

மிகப்பெரிய கூச்சலாலும், ஊடகப் பலத்தாலும் இந்தப் பிரச்சாரத்தை ஒடுக்க வேண்டும் என்று நினைக்கும் சக்திகளின் சூழ்ச்சியையும், தந்திரத்தையும் புரிந்துகொள்ளாமல், சுயஆதிக்கக்காரர்களின் கூச்சலுக்கு அரசியல்வாதிகள் பயந்து பணிந்தால், நூறு ஆண்டுகாலம் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், கலைஞர் போன்றோரும், திராவிட இயக்கமும் உருக்கிய உணர்வுகள் உருக்குலைந்து போகும் என்பது நமது அசைக்க முடியாத ஆணித்தரமான கருத்தாகும்.

முற்போக்குச் சக்திகளை ஒருங்கிணைத்து இந்த வகையில் கூட்டு இயக்கத்தை நடத்துவது அவசிய மாகிறது. இதற்கான ஒருங்கிணைப்பை உருவாக்கும் தகுதியும், நம்பகத்தன்மையும் தமிழர் தலைவர் அவர்களையே சார்ந்ததாகும்.

தந்தை பெரியார் சிலைகளைச் சேதப்படுத்துவது, அவமதிக்கும் வேலைகளில் ஈடுபடுவது என்பதெல்லாம் தொடர்கதையாகவே திட்டமிட்ட வகையில் நடந்து வருகிறது; ஆனால், குற்றவாளிகள்மீதோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

தற்காப்பு - பாதுகாப்பு என்கிற வகைகளில் நாம் மேற்கொள்ளவேண்டிய திட்டங்களையும்,  பிரச்சாரங்கள் பற்றியும் ஆலோசனைகளைக் கூறுமாறு கழகப் பொறுப்பாளர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்ட அறிக்கையை கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அளித்தார்

- விடுதலை நாளேடு, 27.4.19

"குகைகளை விட்டு சிங்கங்களே வெளியே வருக!''

விஞர் கலி.பூங்குன்றன்




சென்னை, ஏப்.28 திராவிடர் கழகத்தின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்கள் எத்தனையோ முறை நடந் துள்ளன. ஆனாலும், நேற்று (27.4.2019) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டல, மாவட்ட திராவிடர் கழக தலைவர்கள், செயலாளர்கள் கூட்டம் இயக்க வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றே சொல்லவேண்டும்.

17 ஆவது மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் இத்தகையதோர் கூட்டம் - தேவையின் அடிப்படையிலும், கசப்பான அனுபவங்களின் எதிரொலியிலும் அமைந்தது என்றுகூட எடுத்துக்கொள்ளலாம்.

மாநிலம் தழுவிய அளவில் பொறுப்பாளர்கள் எடுத்து வைத்த கருத்துகள், வெளியிட்ட சில தகவல்கள் பல்வேறு எண்ணங்களின் வண்ணக் கலவையாகும்.

சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் அவர்கள் தொடங்கி புரட்சிகரமான எண்ணங்களை எடுத்துச் சொன்னபொழுது, பக்தியிலும், மூடத்தனத்திலும் மூழ்கிக் கிடந்த நம் மக்கள், எதிர்வினை ஆற்றியதுண்டு. தந்தை பெரியார் பேசிய கூட்டங்களில் பாம்பை விட்டதுண்டு. முரட்டுக் காளைகளை விரட்டிவிட்டதுண்டு. கழுதையின் வாலில் வெடியைப் பற்ற வைத்து கூட்டத்திற்குள் ஊடுருவ விட்டதும் உண்டு.

முட்டைக்குள் மலத்தை வைத்து முகத்துக்கு நேரே வீசியதுண்டு. சின்னாளப்பட்டியில் தந்தை பெரியார் பேசிக்கொண்டு இருந்தபோது சரமாரியான கல் வீச்சுகள், சால்வையை முண்டாசாகக் கட்டிக் கொண்டு பேச்சை நிறுத்தாமல் சொன் மாரி பொழிந்தார் அந்தச் சுயமரியாதைச் சூரியன்.

கூட்டத்தில் இருந்தவர்களையும் முண்டாசு கட்டிக் கொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார் அந்தத் தென்னாட்டுச் சாக்ரட்டீஸ்.

மாயவரம் நடராசனும், நாகை மணியும், திருவாரூர் தண்டவாளங்களும் புறப்பட்டு தந்தை பெரியார் அவர்களுக்கு மெய்க் காப்பாளர்களாக வலம் வந்தனர்.

அந்தக் காலத்தை எல்லாம் கடந்து யார் கல் வீசி னார்களோ, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அடுத்தடுத்த தலைமுறையினர் தந்தை பெரியாருக்கு ரோஜா மாலை சூட்டினர். மாலைக்குப் பதில் பணம் கொடுத்தனர். தந்தை பெரியாருடன் படம் எடுத்துக்கொள்வதற்கும், குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கும் - ஆட்டோ கிராபில் கையொப்பம் பெறுவதற்கும் பணம் கொடுத்து கியூவில் நின்றனர் பிற்காலத்தில்.

தஞ்சையிலே ஒருமுறை தந்தை பெரியார் சொன்னார், அவர் 80 ஆம் ஆண்டு பிறந்த நாளுக்கு 80 பரிசுப் பொருள்களைக் கொடுத்தபோது - தந்தை பெரியார் பேசினார்.

"தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?''


மதுரை வரலாறு படைத்தது!


"தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?'' எனும் நூல் வெளியீட்டு விழா மதுரை எட்வர்டு மன்றத்தில் 25.4.2019 அன்று மாலை நடைபெற்றது. 1064 நூல்கள் மேடையிலேயே விற்றுத் தீர்ந்தன. அதற்கான தொகை 80,500 ரூபாயை முதல் தவணையாகக் கழகத் தலைவரிடம் அமைப்புச் செயலாளர் வே.செல்வம், தே.எடிசன்ராசா, வழக்குரைஞர் கணேசன், எரிமலை, சிவகுருநாதன் ஆகியோர் பலத்த கரவொலிக்கிடையே அளித்தனர் - பாராட்டுகள்!


எனக்கொரு சந்தேகம் - இதே ஊரில், இதே திடலில் ஒரு காலத்தில் நான் பேசியபோது கல்லால் அடித்தார்கள்; காலித்தனங்களில் ஈடுபட்டனர். அதே ஊரில், அதே திடலில் என் பிறந்த நாள் என்ற பெயரில், இவ்வளவுப் பொருள்களையும் தந்துள்ளனர் என்றால், எனக்கொரு சந்தேகம்! நான் ஏதாவது கொள்கையில் பல்டி அடித்துவிட்டேனா அல்லது உங்களுக்குப் புத்தி வந்தது என்று காட்டிக் கொண்டுள்ளீர்களா?'' என்று கேட்ட தலைவர் உலகத்தில் தந்தை பெரியாரை தவிர வேறு எவராகத்தானிருக்க முடியும்?

அந்தக் கேள்விக்குத் தந்தை பெரியாரே பதிலும் கூறிவிட்டார் அதே நிகழ்ச்சியில்,

என்னைப் பொறுத்தவரை நான் என் கொள்கையில் மேலும் மேலும் தீவிரமாகத்தான் இருந்து வருகிறேன். அப்படியென்றால், உங்களுக்குப் புத்தி வந்திருக்கிறது என்று காட்டிக் கொண்டுள்ளீர்கள்'' என்று சொன்ன பொழுது, அப்படியொரு ஆர்ப்பாட்டம்,  சலசலப்பு!

தந்தை பெரியார் மறைந்து 45 ஆண்டுகள் ஓடிவிட்டன. அன்னை மணியம்மையார் அவர்கள் மறைந்து 41 ஆண்டுகள் ஓடிவிட்டன.

ஆனாலும், இந்த இயக்கம் நடக்கிறதே - முன்பைவிட  வீறுகொண்டு நடக்கிறதே - ஆயிரக்கணக்கான கருஞ் சட்டை இளைஞர்கள் திரள்கிறார்களே என்கிற கோபம், ஆத்திரம் இன எதிரிகளுக்கு - அவர்கள் இந்து' என்ற மதப் போர்வையை அணிந்துகொண்டு பக்தி முகமூடியை அணிந்துகொண்டு, நம் அப்பாவி மக்களைக் கிளப்பிவிட்டு கலகம் விளைவிக்க முயலுகிறார்கள்.

இன எதிரிகள் யார் என்று திராவிட இயக்கத்தால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் அதனைத் திசை திருப்பிட - சிறுபான்மையினரை எதிரிகளாகச் சித்தரித்து சூ' காட்டுகின்றனர்.

அந்தச் சூழ்ச்சியையும், பித்தலாட்டத்தையும் அம் பலப்படுத்துகிறதே இந்த திராவிடர் கழகம் - அதன் தலைவர் வீரமணி என்ற ஆத்திரத்தில் பழைய கதையைத் தொடர நினைக்கிறார்கள்.

மத்தியிலும், மாநிலத்திலும் இருக்கும் அதிகார சக்திகள் இவர்களுக்கு ஆலவட்டம் சுற்றுவதாலும், பணக்கத்தைகளை வாரி இறைப்பதாலும், மலிவாக விலை போகும் மனிதர்கள் இந்தச் சமுதாயத்தில் கிடைப்பதாலும், அவர்களைக் கொண்டு, காலித்தனத்தில் இறங்கி திராவிடர் கழகப் பிரச்சாரத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உரையாற்றும் கூட்டங்களை முடக்கவேண்டும்  - வன்முறையால் அடக்கவேண்டும் என்பது அவர்களின் திட்டம்.

மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் - நிகழ்ச்சிகள்


திராவிடர் கழக மாநில, மண்டல, மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்கள், செயலாளர்கள் கூட்டம் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நேற்று (27.4.2019) காலை 10.30 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அழைப்பு அனுப்பப்பட்ட 200 தோழர்களில் 165 பேர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.


மாநில மாணவரணி கூட்டுச் செயலாளர் - சட்டக் கல்லூரி மாணவி மதிவதினி கடவுள் மறுப்பு வாசகங்களைக் கூறிட, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார்.


பொதுச்செயலாளர் டாக்டர் துரை.சந்திரசேகரன் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார். அனைவரும் எழுந்து நின்று ஒரு மணித்துளி அமைதி காத்தனர்.


தொடர்ந்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அண்மைக் காலத்தின் நாட்டு நடப்புகள், கழக செயல்பாடுகள், சந்தித்த பிரச்சினைகள், தேர்தல் பரப்புரை - பரப்புரையின்போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் - காவல்துறையிடம் நமது புகார்கள் பற்றி ஒரு விரிவான அறிக்கையை வழங்கினார்.


கழகப் பொறுப்பாளர்கள் அளித்த செயல் திட்டங்களைத் தெரிவு செய்து, 30 அம்சங்களைக் கொண்ட அந்தத் திட்டங்களையும் நிரல்படுத்தினார்.


தென்மாவட்டப் பிரச்சாரக் குழுத் தலைவர் மதுரை தே.எடிசன்ராசா, கழக அமைப்புச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பொதுச்செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார், அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்வம், வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தூத்துக்குடி மண்டல திராவிடர் கழகத் தலைவர் பால்.இராசேந்திரம், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், சென்னை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி,  மாநில வழக்குரைஞரணித் துணைத் தலைவர் மதுரை கணேசன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, மாநில மகளிர்ப் பாசறை செயலாளர் செந்தமிழ்ச் செல்வி, சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச்செயலாளர் டாக்டர் துரை.சந்திரசேகரன், புதுக்கோட்டை மண்டலக் கழகத் தலைவர் பெ.இராவணன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் உரையாற்றியதற்குப் பிறகு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழிகாட்டும் நிறைவுரையை வழங்கினார்.


கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி நன்றி கூறிட, பிற்பகல் 3 மணிக்குக் கலந்துரையாடல் நிறைவு பெற்றது. அனைவருக்கும் மதிய உணவு அளித்து உபசரிக்கப்பட்டது.


அட அடிமுட்டாள்களே, அடிக்க அடிக்க எழும் பந்து இது. அரைக்க அரைக்க மணக்கும் சந்தனம் இது. சுடச்சுட ஒளிரும் பொன்னிது - என்பதை அறியாமல் ஆட்டம் போடுகிறார்கள் - அவர்களின் வாலை நறுக்கக் கிளம்பிற்றுக் காண் வீரச் சிங்கப் பட்டாளம் என்பதன் வீச்சுதான் நேற்றைய பெரியார் திடல் சங்கமம்.

அவர்களின் பேச்சில் கோபக்கனல் இருந்தது - அதிலும் கொள்கை மணம் கமழ்ந்தது!

நம்முடைய பிரச்சாரக் கூட்டம் முன்னிலும் அதிகமாக நடக்கவேண்டும் - கழகப் பிரச்சாரக் கூட்டங்கள் எங்கெங்கும் நடந்துகொண்டே இருக்கவேண்டும் - தேன் கூட்டில் கை வைத்து விட்டோமே என்று எதிரிகளும், துரோகிகளும் கலக்கமடையவேண்டும்.

வன்முறைக்கு போகவேண்டாம் - அதில் நமக்கு உடன்பாடில்லை - அப்படிச் சொல்லியும் அய்யா நம்மை வளர்க்கவும் இல்லை.

ஆனால், நமது செலவில் முறைப்படி காவல்துறை அனுமதியும் பெற்று கூட்டம் நடத்தினால், எவ்வளவுக் கொழுப்பு' இருந்தால் நமது கூட்டத்திற்கே வந்து கலகம் விளைவிப்பார்கள் - காவல்துறையின் கண்ணெதிரே இவை நடக்கின்றன என்றால், இது காவல்துறையா? ஏவல் துறையா? என்ற கேள்வி எழுகிறதல்லவா!

இதனைத்தான் நமது தோழர்கள் எடுத்து வைத்தார்கள். நாம் யாருக்காகப் பிரச்சாரம் செய்யப் போகிறோமோ, அவர்களே பல இடங்களில் கண்டுகொள்வதில்லை என்ற தோழர்களின் ஆதங்கம் புரிந்துகொள்ளத்தக்கதே!

தோழர்களின் கனல் கக்கும் உரைகளையும், உணர்வு களையும் பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் - அய்யாவின் அணுக்கத் தீயில் புடம் போட்ட சொக்கத் தங்கம் அல்லவா - எனக்குப் பின் வீரமும், துணிவும், உணர்ச்சியும் கொண்ட ஒருவன் தலைவனாக வருவான், கழகத்தை வழி நடத்துவான் என்று சிவகங்கையில் தந்தை பெரியார் அவர்கள் தொலைநோக்கோடு சொன்னார்களே, அந்த வகையில் வரலாறு நமக்குத் தந்த தலைவர் வீரமணி அவர்கள் 50 மணித்துளிகள் உதிர்த்த ஒவ்வொரு சொல்லும் கோடி பொன் பெறும்.

எதிர்ப்புகள் தான் நமக்கு உரம் - எதிர்ப்பு நீச்சலில் வளர்ந்ததுதான் நமது கழகம் - எதிர்ப்புகளை நான் வரவேற்கிறேன் - எதிர்ப்புகள் வரும்போது நாம் உற்சாகம் பெறுகிறோம் - முன்பைவிட இன்னும் வேகமாகப் பணியாற்ற நாம் துடிக்கிறோம் என்பதை இங்கே பேசிய தோழர்களின் உணர்வே அதனை எடுத்துக்காட்டுகிறது.

குமரிமுதல் திருத்தணிவரை உள்ள இயக்கப் பொறுப்பாளர்கள் வேறு எந்த நேரத்திலும் வராத அளவுக்குத் திரண்டுள்ளீர்களே - இதற்குக் காரணம் இந்த எதிர்ப்புகள்தானே என்று கழகத் தலைவர் எடுத்துக்காட்டியபோது பலத்த ஆரவாரம் - கரவொலி!

இயக்கத்தைப் பலப்படுத்துங்கள், மேலும் இளை ஞர்களை இயக்கத்தை நோக்கி அழைத்து வாருங்கள் - எங்கும் வாரந்தோறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளை நடத்துங்கள்.

65 மாவட்டங்கள் என்றால், 650 சமுகக் காப்பு அணிக்கான இளைஞர்களை ஈர்த்து பயிற்சி களைக்கொடுங்கள். மக்கள் தொண்டாற்றும் பயிற்சிகளைக் கொடுங்கள். கஷ்ட காலத்தில் மக்களுக்கு எப்படியெல்லாம் உதவிக்கரம் நீட்ட வேண்டுமென்ற வழிமுறைகளைக் கற்றுத்தாருங்கள். கழகக் கூட்டங்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேர்த்தியாக எப்படி எப்படியெல்லாம் செய்வதற்கான பயிற்சிகளை நன்முறையில் அளியுங்கள்!

இந்த இயக்கத்தின் வளர்ச்சி நாட்டுக்கான வளர்ச்சி - இன நலனுக்கான வளர்ச்சி! இது நிலைநாட்டப்பட்டால் எனக்கென்று தனிப் பாதுகாப்புத் தேவைப்படாது என்று கூறிய கழகத் தலைவர் - நம்முன் நிற்கும் பிரச்சினைகளைப்பற்றி ஆழமாக எடுத்துரைத்தார்.

நாம் தி.மு.க.வையோ, அதன் கூட்டணிக் கட்சி களையோ ஆதரிப்பது - அவர்களுக்காக அல்ல - நமது கொள்கையின் அடிப்படையில்தான் ஆதரிக்கிறோம்!

இந்த அணி வெற்றி பெற்றால்தான் மதச்சார் பின்மைக்கும், சமுகநீதிக்கும் உத்தரவாதம் என்ற அடிப்படையில் ஆதரிக்கிறோம். இந்த நிலையில், அவர்கள் நமக்கு உதவிக்கு வருகிறார்களா - ஆதரவு காட்டுகிறார்களா, மதிக்கிறார்களா என்ற கேள்விக்கே இடமில்லை.

ஒரு அரசியல் கட்சியை ஆதரிப்பது - எதிர்ப்பது என்பதற்கான அணுகுமுறையைத் தந்தை பெரியார் அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

அப்படி தந்தை பெரியார் தந்த புத்தி இருக்கிறதே, அதில் சபலத்துக்கு இடமில்லை, சுயநலத்துக்கும் இடமில்லை.

அந்த அடிப்படையில்தான் நாம் எந்தப் பிரச்சி னையையும் அணுகுகிறோம் - அணுகவும் வேண்டும்.

திராவிடர் கழகத்தையும், தி.மு.க.வையும் எதிர்ப்பதில் எதிரிகள் ஒன்றாகவே இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். (தி.மு.க. தலைவர் ஸ்டாலின், வீரமணியிடமிருந்து விலகி இருக்கவேண்டும்'' - துக்ளக்' குருமூர்த்தி) நம்மிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பார்கள் - ஊடகங்களின் துணை கொண்டு - இதில் நாம் ஏமாந்துவிடக் கூடாது - விழிப்போடு இருக்கவேண்டும் - தி.மு.க.வே ஆட்சிக்கு வரவேண்டும்.

ஒன்று முக்கியமானது; திராவிடர் கழகத்தின் சமு தாயக் கொள்கைப் பலத்தால்தான், பிரச்சாரத்தால்தான் நமக்கான அரசியலையும் இங்கே உருவாக்க முடியும்.

திராவிடர் கழகப் பிரச்சாரத்தால் அரசியலிலோ, தேர்தலிலோ நாம் ஆதரிக்கும் கட்சிகளுக்குப் பலகீனம் ஏற்பட்டு விடாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

தந்தை பெரியார் வகுத்த திராவிட இயக்கக் கொள்கைதான், உழைப்புதான் ஒரு நூற்றாண்டு கால தமிழ்நாட்டின் வரலாறு என்பதை மறந்துவிடக் கூடாது - இதனைப் புரிந்துகொள்வதில் தெரிந்தோ தெரியாமலோ தவறு இழைத்தால் நமது பலத்தை நாமே பலகீனப்படுத்துபவர்களாக ஆகிவிடுவாம் என்ற பொருளில் தமிழர் தலைவர் தெரிவித்த கருத்துகள் மிகவும் முக்கியமானவை.

தேர்தலுக்குச் சம்பந்தமில்லாத முறையில் கிருஷ் ணன் பற்றி நாம் பேசியதை இந்தத் தேர்தலில் நமது இன எதிரிகள், காவிகள் பெரும் அளவுக்குப் பிரச்சாரம் செய்து, நாம் ஆதரிக்கும் கட்சிகளுக்கு எதிரான ஒரு நிலையை உருவாக்கலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள். தமிழ்நாட்டின் வரலாற்றை உணர்ந்தவர்கள் நன்கு அறிவார்கள் - இதிலும் அவர்கள் தோல்வியைத்தான் அடைவார்கள் - வெற்றி பெறவே முடியாது.

1971 ஆம் ஆண்டு ஜனவரியில் சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டினை மய்யப்படுத்தி, ராமனை செருப்பால் அடித்த பெரியார் ஆதரிக்கிற தி.மு.க.வுக்கா ஓட்டு என்று சுற்றி வளைத்துப் பிரச்சாரப் புழுதியைப் புயல் போல கிளப்பினார்கள்.

தேர்தல் முடிவு எதுவாக அமைந்தது? 1967 ஆம் ஆண்டில் 138 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. 1971 ஆம் ஆண்டில் 184 இடங்களில் வெற்றி பெற்றது நினைவில் இருக்கட்டும்!  இப்பொழுதும் அதே நிலைதான் தொடரும். காரணம், இது பெரியார் மண் - திராவிட இயக்கத்தால், சுயமரியாதை இயக்கத்தால் பக்குவப்படுத்தப்பட்ட மண் என்ற வரலாற்றுத் தகவல்களை - அய்யாவின் பாடங்களை தமிழர் தலைவர் சொல்லிக் கொடுத்தார். நமது கொள்கைகள் தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும், ஏன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எசுக்குக் கடும் எதிர்ப்பு இருப்பதற்குக் காரணம் நமது இயக்கம்தான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். நாகர்கோவிலில் அவருக்குப் பெரியார்பற்றிய  ஆங்கில நூலை கொடுத்தது நன்கு வேலை செய்துள்ளது. (அதை மோடிக்கும் கொடுத்துள்ளார்).

நிறைவாக தந்தை பெரியார் அவர்கள் 1939 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மாநாட்டில் கூறிய அருமையான பொறுக்கு மணி போன்ற ஒரு கருத்தை முத்தாய்ப்பாக எடுத்துக்காட்டினார்.

"நமது இலட்சியங்கள் பெரிதும் வாலிபம் நிறைந்தவை. எனவே, வாலிப உலகு, இந்த இலட்சியங்களை நாம் வெற்றிகரமாகப் பெற முன்வந்து உதவவேண்டும்.


நாம் நடத்துவது பெரும் போர், இதிலே கொதிக்கும் ரத்தமும், கொள்கையில் பற்றும், எத்துணை எதிர்ப்புக்கும் அஞ்சா நெஞ்சமும் படைத்த வாலிப சிங்கங்கள் தேவை. அவைகள் தங்கள் சொந்த வாழ்க்கை எனும் குகைகளை விட்டு வெளி வந்து கர்ஜிக்க வேண்டுகிறேன்.


தோழர்களே, நாம் உண்மையில் வெற்றி பெறவேண்டுமானால், நாம் தியாகம் செய்தே தீரவேண்டும். சிலருடைய பொருள், நேரம், உங்கள் அனைவரின் உழைப்பு, அர்ப்பணம் செய்யப்படவேண்டும். சிலரின் தொழில் வாழ்வு, உத்தியோகம் கெடினும் கவலையில்லை. முதலில் நமது மானத்தைக் காப்பாற்றிக் கொள்வோம் என்ற உணர்ச்சி கொண்டு ஒற்றுமையுடன் தமிழர் பணியாற்ற வரும்படி உங்களை அன்புடன் அழைத்து மறுபடியும் உங்கள் பேரன்புக்காக எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டு எனது தலைமை உரையை முடிக்கிறேன்.''


என்று இன்றைக்கு 80 ஆண்டுகளுக்குமுன் தந்தை பெரியார் பேசிய பேச்சினை, விடுத்த வேண்டுகோளை மிகப்பொருத்தமாக கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் எடுத்துக்காட்டினார்.

குகைகளை விட்டு வெளியே வாருங்கள் சிங்கங்களே! குல்லூகப் பட்டர் பரம்பரை குதித்தாடும் குரங்குகளாகக் குதிக்க ஆரம்பித்துள்ளன! அதன் வாலை நறுக்கக் கொள்கை வாளாக - கட்டுப்பாடு காக்கும் கவசங்களாக - தொண்டறம் புரியும் தூய தொண்டர்களாக பணியாற்றிட இருபால் இளைஞர்களே வாருங்கள்! வாருங்கள்!! என்ற அழைப்பைக் கொடுத்தது நேற்றைய கலந்துரையாடல்! புது ரத்தம் பாய்ச்சப்பட்ட உணர்வோடு தோழர்கள் விடைபெற்றுச் சென்றனர்.

நடக்கட்டும்! நடக்கட்டும்!! பிரச்சாரம் அடை மழையாகப் பொழியட்டும்! பொழியட்டும்!! கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்ட திட்டங்கள் தீரமுடன் நடக்கட்டும்! நடக்கட்டும்!!

நாளை நமதே!!!

இரங்கல் தீர்மானம்


27.04.2019 சனியன்று சென்னை - பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில, மண்டல, மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானம்:

இரங்கல் தீர்மானம்


மேனாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் (வயது 88, மறைவு 29.1.2019), தமிழ் அறிஞர் பெருமகனார் சிலம்பொலி செல்லப்பன் (வயது 91, மறைவு 6.4.2019), மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர், எண்ணற்ற நூல்களின் ஆசிரியர் க.ப.அறவாணன் (வயது 78, மறைவு 22.12.2018), கல்வெட்டு ஆய்வாளரும், தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தில் ஆர்வம் கொண்டவரும், தினமணியின் மேனாள் ஆசிரியருமான அய்ராவதம் மகாதேவன் (வயது 88, மறைவு 26.11.2018), கூத்துப்பட்டறை முத்துசாமி (வயது 82, மறைவு 24.10.2018), மேனாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி (வயது 58, மறைவு 13.10.2018), மலேசிய இந்தியன் காங்கிரஸ் மேனாள் துணைத்தலைவர் ஜோகூர் டான்சிறீ கோ.பாலகிருஷ்ணன், அமெரிக்க தமிழ்ச் சங்க நிறுவனர் சாக்ரட்டீஸ் வாழ்விணையர் பூவழகி (22.10.2018), பெரும்புலவர் தமிழகப் புலவர் குழுவின் தலைவர் பெரும் புலவர் அரங்கசாமி (வயது 97, 19.11.2018), மும்பை பெருநகர திமுக துணைச் செயலாளர் அமீரா மீரான் (8.12.2018).

சென்னை பெரியார் திடல், பெரியார் மணியம்மை மருத்துவமனை மேனாள் இயக்குநரும், சென்னை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், இன உணர்வாளருமான டாக்டர் வி.பி.நாராயணன் (வயது 79, மறைவு 9.12.2018), பேராசிரியர் ரெஜினா பாப்பா, சீரிய ஆங்கில எழுத்தாளரும், சென்னை வரலாற்றை காலவரிசைப்படி கட்டுரைகள் வடித்தவருமான எஸ்.முத்தையா (வயது 89, 22.4.2019) ஆகிய பெருமக்களின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. நமது அரும்பெரும் திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி  (வயது 72, மறைவு 4.12.2018)

தந்தை பெரியாரின் தனிச் செயலாளரும், திராவிடர் கழக அறக்கட்டளை உறுப்பினருமான திருச்சி தி.மகாலிங்கன் (வயது 89, மறைவு 25.11.2018)

பகுத்தறிவாளர் கழக மேனாள் மாநில பொதுச் செயலாளரும் கல்வியாளருமான கோ.அரங்கசாமி (வயது 93, மறைவு 12.3.2019, உடற்கொடை)

மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் வடசேரி இளங்கோவன் (வயது 69 - மறைவு 31.10.2018)

சட்ட எரிப்புப் போராட்ட வீரர்கள் கூடுவாஞ்சேரி மன்னார் (வயது 85 - மறைவு 21.11.2018)

விருதாங்கநல்லூர் எல்.மணி (5.2.2019)

கழகப் பொதுக்குழு உறுப்பினர் கரூர் கவிஞர் பழ.இராமசாமி, தஞ்சை சாலியமங்கலம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் வெ.துரைராசன் (வயது 84, மறைவு 14.11.2018)

கழகப் பொதுக்குழு உறுப்பினர் திண்டிவனம் டாக்டர் வே.மணி (3.11.2018), இலால்குடி கீழவாளாடி பெ.அமராவதி (9.10.2018), கரூர் பெரியார் பெருந்தொண்டர், பெரியார் பெருங்கவிஞர் பாரி (வயது 80, மறைவு 24.10.2019), சேலம் தாதகாப்பட்டி அங்கம்மாள் (வயது 85, மறைவு 30.10.2018, உடற்கொடை).

கடலூர் மாவட்டக் கழக மகளிரணி தலைவர் சீனியம்மாள் (வயது 70- 20.10.2018 - உடற்கொடை)

மன்னை எடமேலையூர் கழகத் தலைவர் மீசை எம்.சவுந்தரராசன் (14.11.2018)

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி பெரியார் பெருந்தொண்டர் கூ.கர்ணன் (வயது 106, மறைவு 25.11.2018).

திருச்சி ஜெயில்பேட்டை மாதவன் (வயது 70, 25.11.2018)

நெல்லை மாவட்டம் சிவகளை கழக வீராங்கனை கஸ்தூரி (வயது 71, மறைவு 26.11.2018, உடற்கொடை).

காட்டுமன்னார்குடி நத்தமலை சுயமரியாதை வீரர் க.பன்னீர்செல்வம் (வயது 61, மறைவு 27.11.2018).

மதுரை மாவட்ட மேனாள் மண்டல செயலாளர் மீ.அழகர்சாமி (வயது 64, மறைவு 1.12.2018)

திருத்துறைப்பூண்டி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ந.பழனிவேல் (வயது 64 - மறைவு 3.12.2018, உடற்கொடை)

திருவாரூர் ஒன்றிய கழக செயலாளர் சோழங்கநல்லூர் இராமமூர்த்தி (7.12.2018)

பாபநாசம் பெரியார் பெருந்தொண்டர் உ.குணசேகரன் (10.12.2018), தஞ்சை காவளூர் பெரியார் பெருந்தொண்டர் சி.தங்கவேல் (வயது 84 - மறைவு 4.12.2018), தஞ்சை அம்மாப்பேட்டை நெய்க்குன்னம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சு.நடராசன் (வயது 97 - மறைவு 3.12.2018), காளாஞ்சிமேடு முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சு.சுப்பையன் (வயது 97 - மறைவு 18.12.2018), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் குடவாசல் மஞ்சக்குடி பி.சிவானந்தம் (வயது 87, மறைவு 20.12.2018)

தருமபுரி, வரகூர் பெரியார் பெருந்தொண்டர் வி.பி.முனுசாமி (வயது 82, மறைவு 16.12.2018)

அறந்தாங்கி மாவட்ட மேனாள் திராவிடர் கழகத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கு.கண்ணுசாமி (வயது 90, மறைவு 2.1.2019),

முதுபெரும் பெரியார் ருநதொண்டர் திருவாரூர் பி.எஸ்.அகமதுபாய் (வயது 90, மறைவு 25.12.2018)

தென்சென்னை கழக மகளிரணி மேனாள் தலைவர் ந.நீலாயதாட்சி (வயது 92, மறைவு 2.1.2019)

காரைக்கால் நிரவி பெரியார் பெருந்தொண்டர் பெரிய நாயகம் (வயது 80, மறைவு 17.1.2019),

மன்னார்குடி மேலவாசல் பெரியார் பெருந்தொண்டர் கோ.அப்பராசு (19.1.2019)

மயிலாடுதுறை கழகத் தோழர் எஸ்.இராமநாதன் (15.1.2019)

திருத்துறைப்பூண்டி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் ஆசைத்தம்பி (வயது 60, மறைவு 25.1.2019)

ஓசூர் நகர திராவிடர் கழக செயலாளர் பெ.செல்லதுரை (வயது 53, மறைவு 27.1.2019)

நாகை திருப்புகலூர் பெரியார் பெருந்தொண்டர் வை.சோமு (வயது 95, மறைவு 31.1.2019)

லால்குடி மாவட்டம் ஆங்கரை முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் உலகநாதன் (வயது 89, மறைவு 3.2.2019),

தருமபுரி மாவட்டம் சாலிமங்கலம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் நந்திக் கண்ணன் (11.2.2019),

கண்கொடுத்தவனிதம் ஏ.இலட்சுமணன் (வயது 70, மறைவு 18.2.2019)

வேலூர் சத்துவாச்சாரி பெரியார் பெருந்தொண்டர் மு.பெருமாள் (வயது 76, மறைவு 20.2.2019)

திருக்கோவிலூர் நகர திராவிடர்கழக செயலாளர் தி.பி.சண்முகம் (24.2.2019)

தி.மு.க. இலக்கிய அணி முன்னாள் செயலாளர் திருவில்லிபுத்தூர் ச.அமுதன் (வயது 81, 17.3.2019)

கழக சொற்பொழிவாளர் கோபி கருப்பண்ணன் (18.3.2019)

சிதம்பரம் பூந்தோட்டம் பெரியார் பெருந்தொண்டர் மா.சுப்பிரமணியன் (வயது 85, மறைவு 20.3.2019).

செயங்கொண்டம் உட்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் சி.பரமசிவம் (வயது 84, மறைவு 21.3.2019)

நெல்லை சுள்ளிக்குளம் கோவிந்தராசு (21.3.2019)

கரூர் மாவட்டம் திராவிடர் கழகத் துணைச் செயலாளர் தி.செல்வராசு (வயது 52, மறைவு 24.3.2019)

திருவாரூர் எருகாட்டூர் மாசிலாமணி (26.3.2019),

ஆவடி கழகத் தோழர் ஜெ.இராமப்பா (வயது 57, மறைவு 28.3.2019)

தருமபுரி பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் இளங்கோ (வயது 93, மறைவு 1.4.2019, உடற்கொடை)

தாராபுரம் கழகப் பொதுக்குழு உறுப்பினர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ப.வடிவேல் (வயது 78, மறைவு 13.4.2019, உடற்கொடை)

ஒட்டன்சத்திரம் சுயமரியாதை வீரர் க.முத்துசாமி (வயது 91, மறைவு 14.4.2019),

சிதம்பரம் பெருமத்தூர் கணபதி (வயது 74, மறைவு 16.4.2019), திருப்பூர் - மேட்டுப்பாளையம் தோழர் உ.பொன்னுசாமி (6.4.2019), பகுத்தறிவாளர் தோழர் செம்மல் (வயது 69, மறைவு 7.11.2018), மும்பை மேனாள் கழக செயலாளர் தருமராசன் (வயது 61, 8.11.2018), சங்கரன்கோவில் பெரியார் பற்றாளர் தி.ஆ.நாராயணசாமி (வயது . ), கிருட்டிணகிரி மாவட்டம் பையூர் கழகத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் ப.பெரியசாமி (மறைவு 12.7.2019), குடந்தை பெரியார் பெருந்தொண்டர் கோ.துரைசாமி (வயது 105) நெய்வேலி மணிமேகலை மருதப்பிள்ளை (வயது 92 - 4.2.2019). ஆகிய தோழர்களின் மறைவிற்கு இக்கூட்டம் தனது துயரத்தைத் தெரிவிப்பதுடன் இப்பெரு மக்களின் அளப்பரும் இயக்கத் தொண்டுக்கு, ஈகத்திற்கு இக்கூட்டம் தனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

இவர்களின் பிரிவால் ஆறாத துயரத்திற்கு ஆளாகி இருக்கும் குடும்பத்தினர்க்கும் உற்றார், உறவினர்களுக்கும், தோழர்களுக்கும் இக்கூட்டம் தனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது..

- விடுதலை நாளேடு, 28.4.19

மானமிகு வசந்தி ஸ்டான்லி மறைவு: கழகத்தின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது



சென்னை, ஏப்.28 தி.மு.க.வைச் சேர்ந்த மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் மானமிகு வசந்தி ஸ்டான்லி (வயது 56) அவர்கள் நேற்று (27.4.2019) இரவு 11 மணியளவில் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறைவுற்றார்.

அவரின் மறைவு தகவல் அறிந்ததும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியூர் நிகழ்ச்சியில் இருந்த நிலையில் சகோதரி வசந்தி ஸ்டான்லி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை கொடுத்திருந்தார்.

இன்று (28.4.2019) காலை 10 மணிய ளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள   லாயிட்ஸ் காலனி ஏ3 இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வசந்தி ஸ்டான்லி அவர்களின் உடலுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகி யோர் கழகத் தலைவரின் சார்பில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி, அவரது  குடும்பத்தாருக்கும், அவரது சகோ தரர் கணேஷ் அவர்களுக்கும் கழகத் தலைவர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையை கொடுத்து ஆறுதல் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வில் தென் சென்னை மாவட் டக் கழகத் தலைவர் இரா. வில்வநாதன், துணைத்தலைவர் மயிலை  சேதுராமன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, விருதுநகர் மாவட்ட தலைவர் இல. திருப்பதி, விமல் குமார், ஆனந்த் ஆகியோரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

மானமிகு வசந்தி ஸ்டான்லி அவர் களின் மறைவு தகவல் அறிந்ததும் திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வசந்தி ஸ்டான்லி அவர்களின் உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், திமுக வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே. சேகர் பாபு, பேராசிரியர் தமிழச்சி தங்கபாண்டியன், மேனாள் காவல்துறை அதிகாரி சந்திர சேகர், துறைமுகம் காஜா, எழும்பூர் தேவநிதி, ஈரோடு இறைவன் உள்ளிட்ட பலர் வசந்தி ஸ்டான்லி உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
- விடுதலை நாளேடு, 28.4.19

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 129ஆம் ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை



சென்னை, ஏப். 29, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 129ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 129ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2019) காலை 10 மணியளவில் சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  கழகத் தோழர் - தோழியர் புடைசூழ மலர் மாலை அணிவித்தும், அவரது படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், திருமதி.மோகனா அம்மையார், திருமதி.சுதா அன்புராஜ், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்கள் யாழ்.திலீபன், நா.பார்த்திபன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, தொழிலாளரணி தோழர்கள் திருவொற்றியூர் செல்வராஜ், பழநி பாலு, பொறியாளர் ஈ.குமார், தென்சென்னை மாவட்டத் துணைத்  தலைவர் மயிலை சேதுராமன், சி.செங்குட்டுவன், ராஜபாளையம் சிவக்குமார், சி.யாழ்பிரபா, தென்சென்னை மாவட்ட கழக இளைஞரணி மு.சண்முகபிரியன், அரும் பாக்கம் சா.தாமோதரன், ஆயிரம் விளக்கு சேகர், அரும் பாக்கம் தமிழ்ச்செல்வன்,  பசும்பொன் செந்தில்குமாரி, பவானி, அமுதரசன், சோ.சுரேஷ், மகேசு, கலையரசன், பெரியார் நூலகர் வாசகர் வட்ட க.செல்லப்பன், முரளி கிருஷ்ணன், சின்னதுரை ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், கவிஞர் பொன்னடியான், கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், கவிஞர் கண்மதியன், காஞ்சி மணி மொழியார் தமிழ் பேரவை நா.இளவரசன், வழக்குரைஞர் அருணாசலம் மற்றும் திரளானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

- விடுதலை நாளேடு, 29.4.19

நன்கொடை



புரட்சிக்கவிஞர் அவர்களின் 129ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையை தமிழர் தலைவர் அவர்களிடம் தென்சென்னை இளைஞரணி சார்பாக மு.சண்முகப்பிரியன் வழங்கினார்.

- விடுதலை நாளேடு, 29.4.19

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன்-வளர்மதி வாழ்விணையேற்ற 21ஆம் ஆண்டு நிறைவு

விடுதலை வளர்ச்சி நிதி ரூ.2000 கழகத் தலைவரிடம் வழங்கல்!



தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன்-வளர்மதி வாழ்விணையேற்ற 21ஆம் ஆண்டு நிறைவை யொட்டி (19.4.2019) விடுதலை வளர்ச்சி நிதிக்காக நன்கொடை ரூ.2000 தமிழர் தலைவரிடம் வழங்கினர். அவர்களுக்கு பயனாடை அணிவித்து கழகத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். உடன் திருமதி மோகனா அம்மையார் உள்ளார்.

- விடுதலை நாளேடு, 19.4.19

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்கள் டாக்டர் கே. ஜெயக்குமார், முனைவர் தமிழச்சி தங்க பாண்டியன் ஆகியோரை ஆதரித்து சென்னை ஆவடி, சைதை பகுதியில் தமிழர் தலைவர் பிரச்சாரம்



மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை ஆதரித்து சைதைப் பகுதியில் 14.4.2019 அன்று தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார்.


சென்னை, ஏப்.15 மதச் சார்பற்ற தேசிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து ஆவடி மற்றும் சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தேர்தல் பரப்புரை செய்தார். விவரம் வருமாறு:

ஆவடி


திருவள்ளூர் மக்களவை தொகுதி மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் காங்கிரசு கட்சி வேட்பாளர் டாக்டர் கே.ஜெயக்குமார் அவர்களை ஆதரித்து ஆவடி நகராட்சி அலுவலகம் அருகில் நேற்று (14.4.2019) நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு மாவட்ட கழக தலைவர் பா.தென்னரசு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் க.இளவரசன் அனைவரையும் வரவேற்று பேசினார். கழக பொதுச் செய லாளர் துரை.சந்திரசேகரன் தொடக்கவுரை நிகழ்த்தினார்.

நிறைவாக திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

பரப்புரை கூட்டத்தில் திராவிடர் கழக துணை தலைவர் கலி.பூங்குன்றன், கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், காங்கிரசு கட்சி முன்னணி நிர்வாகி உ.பலராமன், தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் டி.ஆர்.ஆர்.செங் குட்டுவன், சி.பி.அய். மாவட்ட செயலாளர் மாரியப்பன், ம.தி.மு.க. தீர்மானக்குழு உறுப்பினர் அந்திரிதாஸ், சி.பி.எம். நகர செயலாளர் ராஜன், சி.பி.எம்.மாவட்டகுழு உறுப்பினர் பூபாலன், ம.ம.க. மாவட்ட செயலாளர் அஸ்காப், காங்கிரசு கட்சி நகர செயலாளர் ராஜசேகர், தி.க.அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மண்டல தலைவர் ரெத்தினசாமி, மண்டல செயலாளர் தே.செ.கோபால், மாவட்ட துணை தலைவர் ஏழுமலை, தாம்பரம் மாவட்ட தலைவர் முத்தையன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேலு, பொதுக் குழு உறுப்பினர் கந்தசாமி, மாநில ப.க.பொதுச்செயலாளர் தமிழ்செல்வம், கும்மிடிப்பூண்டி மாவட்ட தலை வர் புழல் ஆனந்தன் உள்ளிட்ட தோழர்களும் கூட் டணி கட்சியினரும் கலந்து கொண்டனர். முடிவில் ஆவடி நகர செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

சைதை


மக்களவை தேர்தல் தென் சென்னை தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தி.மு.க. வேட் பாளர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை ஆதரித்து நேற்று (14.4.2019) நடைபெற்ற பரப்புரை கூட்டத்திற்கு சைதை பகுதி தி.மு.கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி  தலைமை வகித்தார்.

திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

பரப்புரை கூட்டத்தில் திராவிடர் கழக துணை தலைவர் கலி.பூங்குன்றன், கழக பொதுச் செய லாளர்கள் வீ.அன்புராஜ், முனைவர் துரை.சந்திர சேகரன், இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், தி.மு.க.மாவட்ட செயலாளர் மேனாள் மேயர் மா.சுப்பிர மணியம், இ.கம்யூ.கட்சி பொறுப்பாளர் தோழர் ஆனி ராஜா, தி.மு.க பகுதி பொறுப்பாளர்கள் அன்பரசன், நாகா, சிறீதர்,  எஸ்.பி. கோதண்டம், எஸ்.பி. செல்வராஜ்,  மற்றும் கீழ்வேலூர் மாதவன், ம.தி.மு.க. நிர்வாகி ப.சுப்பிர மணியம், திராவிடர் கழக மாவட்ட  தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் பார்த்த சாரதி, பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.பாலு, அமைப்புச் செயலாளர் பன்னீர்செல்வம், மாநில வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், வழக் குரைஞர் வீரமர்த்தினி, வழக்குரைஞர் மா.வீ. அருள்மொழி, சைதை தென்றல், சைதை எத்திராஜ் சகோதரர்கள், சைதை மதியழகன், தரமணி மஞ்சு நாதன், சோழிங்நல்லூர் கழக மாவட்டத் தலைவர் ஆர்.டி. வீரபத்திரன், அரும்பாக்கம் தாமோதரன், ஆயிரம் விளக்கு சேகர், கோ.வீ. ராகவன் உள்ளிட்ட தோழர்களும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

தமிழர் தலைவர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு (14.4.2019)

சைதாப்பேட்டை தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களுக்கு மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் உற்சாக வரவேற்பு (14.4.2019)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் ஆனி ராசா அவர்கள் தமிழர் தலைவரை வரவேற்றார் (14.4.2019)

 

சைதாப்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் தமிழர் தலைவர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார் (14.4.2019)

 தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (சைதாப்பேட்டை, 14.4.2019)

- விடுதலை நாளேடு, 15.4.19