ஜாதி ஒழிப்பு மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாதி ஒழிப்பு மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 ஜூலை, 2024

ராமேசுவரம் மற்றும் திருப்பத்தூரில் திராவிடர் கழகத்தின் சார்பாக ஜாதி ஒழிப்பு மாநாடு

 

அய்யாவின் அடிச்சுவட்டில் …: இயக்க வரலாறான தன் வரலாறு(257)

டிசம்பர் 01-15, 2020

கி.வீரமணி


ராமேசுவரம் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் கழகக் கொடியை ஏற்றிவைக்கும் ஆசிரியர் உடன் பொறுப்பாளர்கள்.

25.2.1995 அன்று ராமாநாதபுரம் மாவட்ட கழகத்தின் சார்பில் ராமேசுவரத்தில் ஜாதி ஒழிப்பு மாநாடு பெரிய கடை வீதி காந்தி சிலை அருகில் சுயமரியாதைச் சுடரொளி இரா.சண்முகநாதன் நினைவுக் கொடி கம்பத்தில் கழகக் கொடியை ஏற்றிவைத்து துவங்கி வைத்தேன். கழகத் தோழர்களும், பொறுப்பாளர்களும் மோட்டார் சைக்கிள், ஆட்டோ ரிக்ஷாக்கள், ஜீப், வேன்கள் புடைசூழ அழைத்துச் சென்றனர். சாலையின் இருபுறமும் பொதுமக்கள் வணக்கம் செலுத்தி வரவேற்றனர். பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு, வீதி நாடகம், மந்திரமா? தந்திரமா?, சொற்பொழிவு என மாநாட்டினை மாவட்ட பொறுப்பாளர்கள் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். இரண்டு மணி நேரம் ஆற்றிய உரையை மக்கள் இறுதிவரை இருந்து கேட்டுச் சென்றனர்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

26.2.1995 அன்று பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் திருப்பத்தூரில் திராவிடர் கழகத்தின் சார்பாக ஜாதி ஒழிப்பு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருப்பத்தூர் பெரியகடை வீதியில் சுயமரியாதைச் சுடரொளி சிவகங்கை இரா.சண்முகநாதனார் நினைவுத் திடலில் நடைபெற்ற மாநாட்டிற்கு மாவட்ட கழகத் தலைவர் ச.இன்பலாதன் தலைமை வகித்தார். முன்னதாக சுயமரியாதைச் சுடரொளி திருப்பத்தூர் நா.பள்ளிகொண்டான் அவர்களின் நினைவுக் கொடிக் கம்பத்தில் தோழர்களின் வாழ்த்து முழக்கங்களுடன் கழகக் கொடியை ஏற்றி வைத்தேன். தொடர்ந்து ஜாதி ஒழிப்பு வீரர்களுக்குப் பாராட்டும், பெரியார் பெருந்தொண்டர்களுக்குச் சிறப்பும் செய்யப்பட்டது. பட்டிமன்றம், மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், வீதிநாடகம், தீர்மான அரங்கம் என மாநாடு கழகத் தோழர்களால் சிறப்பாக வழிநடத்தப்பட்டது. மாநாட்டை ஒட்டி திருப்பத்தூர் நகரமே கழகக் கொடி தோரணங்களால் விழாக்கோலம் பூண்டிருந்தது.

திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு தீர்மான விளக்கம் மற்றும் மாவட்ட ஜாதி ஒழிப்பு மாநாடு விழுப்புரம் (கன்னியாகுளம் சாலை) _ 18.2.1995

அய்யாவின் அடிச்சுவட்டில் …: இயக்க வரலாறான தன் வரலாறு(257)

டிசம்பர் 01-15, 2020

கி.வீரமணி

 18.2.1995 திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு தீர்மான விளக்கம் மற்றும் மாவட்ட ஜாதி ஒழிப்பு மாநாடு விழுப்புரம் கன்னியாகுளம் சாலையில் சுயமரியாதைச் சுடரொளி சிவகங்கை சண்முகநாதன் அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விழுப்புரம் பேருந்து நிலையத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த கழகக் கொடிக் கம்பத்தில் கழகக் கொடியை ஏற்றி மாநாட்டை துவக்கி வைத்தேன். வழிநெடுக கழக வாசகங்கள் அடங்கிய தட்டிகளும், பெரிய பதாகைகளும் பார்ப்போரைப் பிரமிக்க வைத்தன. ஜாதி ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்களும், கழகத் தோழர்களும் வந்த வண்ணமிருந்தனர். மாநாட்டைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த கழகத் தோழர்களின் அயராத உழைப்பைப் பாராட்டி மாவட்டத் தலைவர் தங்கவேலனைப் புகழ்ந்துரைத்தேன்.

மாநாட்டில் சிறப்புரையாற்றும் ஆசிரியர்

சேலம் மாவட்டம் மேச்சேரியில் ஜாதி ஒழிப்பு மாநாடு - 4.2.1995

 

அய்யாவின் அடிச்சுவட்டில் …: இயக்க வரலாறான தன் வரலாறு(257)

டிசம்பர் 01-15, 2020

உலகில் ஒப்பற்றது சுயமரியாதை இயக்கம்!

கி.வீரமணி

4.2.1995 சேலம் மாவட்டம் மேச்சேரியில் ஜாதி ஒழிப்பு மாநாடு எழுச்சியோடு நடைபெற்றது. கழக இளைஞரணித் தோழர்கள் பங்கேற்ற வீதிநாடகம், சத்தியமங்கலம் முத்துவின் ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சியைத் தொடர்ந்து மேடையிலேயே சேலம் அர்த்தனாரி _ ஆராயம்மாள் ஆகியோரின் மகன் இராமுவுக்கும் சங்ககிரி வட்டம் சமுத்திரம் ஆரோக்கியசாமி _ பாக்கியம் ஆகியோரின் மகள் பிரகாசமேரிக்கும், ஜாதி மறுப்புத் திருமணத்தை நடத்த வைத்து வாழ்த்தினேன். 1957இல் சட்ட எரிப்புப் போரில் ஈடுபட்டு சிறையேகிய அம்மாப்பேட்டை எஸ்.தனபால், பெ.முத்து, பி.குழந்தைசாமி, மல்லூர் பழனிச்சாமி, அப்பாய் கோவிந்தராஜ், எஸ்.எஸ்.இளஞ்செழியன், ஏ.கே.திருமலை, கே.சி.கந்தசாமி, டி.என்.சின்னு, சி.ஆ.பெருமாள், மேகநாதன் உள்ளிட்ட பலருக்கும் பாராட்டுச் சான்றிதழும், சால்வையும் போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தோம். தருமராசன்_சாந்தி ஜாதி மறுப்புத் தம்பதியினரின் இரண்டாவது பெண் குழந்தைக்கு ‘அன்புச் செல்வி’ எனப் பெயர் சூட்டினேன். மாநாட்டு ஏற்பாடுகளை இளைஞரணியினர் சிறப்பாகச் செய்திருந்தனர். மாநாட்டுப் பேரணி அணிவகுப்பில் தொடர்ந்து நான்காவது முறையாக சேலம் மாவட்ட இளைஞரணியினர் முதல் பரிசு பெற்றனர். அவர்களுக்கு பரிசளித்து, பாராட்டையும் தெரிவித்தேன்.

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றும் ஆசிரியர்,
மேடையில் கழகப் பொறுப்பாளர்கள்


மாநாட்டில் நடைபெற்ற ஜாதி மறுப்பு மத மறுப்புத் திருமண
இணையரை  வாழ்த்தும் ஆசிரியர்

வியாழன், 4 ஜூலை, 2024

நாகை காயிதே மில்லத் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நன்னிலத்தில் ஜாதி ஒழிப்பு மாநாடு - 9.4.1995

 9.4.1995 நாகை காயிதே மில்லத் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நன்னிலத்தில் ஜாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. நன்னிலம் சுந்தரராசு_வேதாம்பாள் நினைவுக் கொடிக் கம்பத்தில் கழகக் கொடியை ஏற்றிவைத்து மாநாட்டை துவக்கி வைத்தேன். பேருந்து நிலையம் அருகில் கழகத்தின் சார்பில் ஜாதி ஒழிப்பு போராட்ட வீரர்களின் நினைவாக மிகச் சிறப்பாக அமைக்கப்பட்ட மணிக்கூண்டைத் திறந்து வைத்தேன்.

அ.சுந்தரராசன் நினைவுக் கல்வெட்டு அருகில் அமைக்கப்பட்ட அவரது துணைவியார் சு.வேதாம்பாள் நினைவுக் கல்வெட்டையும் திறந்துவைத்தேன்.
பெரியார் பெருந்தொண்டர் நினைவரங்கத்தில் இருந்து மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடத்தப்பட்டது. வீதி நாடகம், பெரியார் பெருந்தொண்டர்களின் இயக்கப் பணிகளைப் பாராட்டி அவர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து சிறப்பித்தேன். ஜாதி ஒழிப்பு வீரர்களுக்குப் பாராட்டுப் பத்திரத்தை வழங்கி அவர்களை சிறப்பித்தோம். மேடையில் கழகத் தோழர்களின் குழந்தைகளுக்கு அஞ்சாநெஞ்சன், அன்புநெஞ்சன், மணியம்மை என பெயர் சூட்டினேன். தீர்மான அரங்கம் நடத்தப்பட்டு ஜாதி முறையை ஒழிக்கப் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அடிமைச் சின்னமாம் தாலி அகற்றல் நிகழ்வில் பங்கேற்ற பெண்களைப் பாராட்டி அவர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து சிறப்பித்தோம். மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் விதவைகளுக்குப் பூச்சூட்டும் நிகழ்வும் நடைபெற்றது.

மாநாட்டில் திருவாரூர் வீரய்யன்_ராஜம்மாள் ஆகியோரின் மகள் கமலத்திற்கும், திருவாரூர் தங்கராசு_ராஜாத்தி ஆகியோரின் மகன் கரிகாலனுக்கும், லால்குடி தியாகராசன்_ நாகம்மாள் ஆகியோரின் மகள் ரேணுகாவுக்கும், நெய்க்குப்பை கோபால்_ஜெயம் ஆகியோரின் மகன் இளங்கோவனுக்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியைக் கூறச் செய்து இரண்டு சுயமரியாதைத் திருமணங்களையும நடத்தி வைத்தேன்.
சோழங்கநல்லூர் அந்தோணிசாமி நினைவரங்கத்தில் நடைபெற்ற இம்மாநாட்டை ஒட்டி நகரம் முழுவதும் சிறப்பான மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டும், பதாகைகள் வைக்கப்பட்டும் கழகப் பொறுப்பாளர்களால் மிகச் சிறப்பாக மாநாடு நடத்தப்பட்டது பாராட்டுக்குரியதாகும்.

-கி.வீரமணி

அய்யாவின் அடிச்சுவட்டில் (258)

அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் செந்துறையில் ஜாதி ஒழிப்பு மாநாடும், தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவும் , திருச்சி (மேற்கு) மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக குளித்தலையில் பேருந்து நிலையம் அருகில் ஜாதி ஒழிப்பு மாநாடு

 14.4.1995 அன்று அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் செந்துறையில் ஜாதி ஒழிப்பு மாநாடும், தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பெண்ணாடத்திலிருந்து ரயில் மூலம் செந்துறைக்குச் சென்றபோது கழகப் பொறுப்பாளர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். புலவர் வை.நாத்திகநம்பி மாநாட்டில் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். சி.காமராஜ் மாநாட்டைத் திறந்து வைத்தார். பெரியார் பேருரையாளர் பேராசிரியர் அ.இறையன், பகுத்தறிவு ஆசிரியரணி செயல்முறைத் தலைவர் ந.வெற்றியழகன் ஆகியோர் பேசினார்கள்.

அறிவு ஆசான் தந்தை பெரியார் முழு உருவச் சிலையை தோழர்களின் பலத்த வாழ்த்து முழக்கங்களுக்கிடையே திறந்து வைத்து உரையாற்றுகையில், பக்தி மோசடி, ஜாதி ஏன் ஒழிய வேண்டும் என்பதற்கான காரணங்கள், திராவிடர் கழகத்தின் அணுகுமுறை ஆகியவை பற்றி விரிவாகக் கூடியிருந்த மக்களுக்கு எடுத்துரைத்தேன். மாநாட்டையொட்டி, மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் தீ மிதித்தல் மற்றும் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டு நிகழ்வில் கூவாகம் ரவி_தேன்மொழி ஆகியோரின் பெண் குழந்தைக்கு மணியம்மை எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தேன். ஜாதி ஒழிப்பு வீரர்களைப் பாராட்டிச் சிறப்பித்தேன். அடிமைச் சின்னமாம் தாலி அகற்றல் நிகழ்வில் பெருவாரியான பெண்கள் கலந்து கொண்டனர். நிறைவாக முரசொலி முகிலனின் ஈரோட்டுப் பூகம்பம் என்னும் தலைப்பில் சிறப்பான நாடகமும் நிகழ்த்தப்பட்டது. மாநாட்டிற்காக செந்துறை நகரமே வண்ண வண்ண சுவரெழுத்துகளால் எங்கு பார்த்தாலும் பளிச்சிட்டன.

 

 

 

15.4.1995 அன்று திருச்சி (மேற்கு) மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக குளித்தலையில் பேருந்து நிலையம் அருகில் ஜாதி ஒழிப்பு மாநாடு சிறப்பாக நடைபெற்றது. குளித்தலை நகர தலைவர் கி.திராவிடமணி கழகக் கொடியை ஏற்றி வைத்தார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனக் கட்டடத்தில் தந்தை பெரியார் படிப்பகத்தைத் திறந்து வைத்தேன். கட்டடத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த சுயமரியாதைச் சுடரொளிகளின் படத்தையும் திறந்து வைத்தேன். நிகழ்ச்சியில் தென் மாவட்ட பிரச்சாரக் குழு தலைவர் கல்வி வள்ளல் மதுரை பே.தேவசகாயம், உரத்தநாடு இரா.குணசேகரன், மதுரை மாவட்ட மகளிரணித் தலைவர் அன்னத்தாயம்மாள் உடனிருந்தனர்.

பெரியார் பாலத்திலிருந்து மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும், நா.சந்தானகிருட்டினன் அரங்கில் எஸ்.பி.செல்வத்தின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியும் நடைபெற்றது. சட்ட எரிப்புப் போராட்ட வீரர்களுக்கு பாராட்டுப் பத்திரத்தை வழங்கியும், பெரியார் பெருந் தொண்டர்களுக்கு கைத்தறி ஆடைகளை அணிவித்தும் சிறப்பித்தோம். ஈட்டி கணேசன்_லட்சுமி ஆகியோரின் ஆண் குழந்தைக்கு அறிவுச்செல்வன் எனப் பெயர் சூட்டினேன். தெற்குநத்தம் சித்தார்த்தன் குழுவினரின் கருத்துச் செறிவுமிக்க வீதி நாடகமும் மேடையில் நடத்தப்பட்டது.

மாவட்ட கழகப் பொருளாளர் கவிஞர் பழ.ராமசாமி நாணயங்களாலான மாலையும், ஓட்டல் அதிபர் சீனன் நோட்டுகளால் ஆன மாலையையும் அணிவித்து மகிழ்ந்தனர். மாநாடு மேடைக்குச் செல்லும் வழி நெடுகிலும் கழகப் பொறுப்பாளர்களும், பொதுமக்களும், பல்வேறு அமைப்பைச் சேர்ந்த தோழர்களும் வணக்கம் செலுத்தி சிறப்பான வரவேற்பை அளித்தனர். மாநாடு முடியும் வரை மக்கள் பெரும் கூட்டமாக இருந்து உரையை செவிமடுத்துக் கேட்டுச் சென்றனர்.

-கி.வீரமணி

அய்யாவின் அடிச்சுவட்டில் (258)

உத்திரமேரூர், புழல், தாம்பரம் இந்திரா நகர் ஜாதி ஒழிப்பு மாநாடுகள் - 1995

 


1.4.1995 செங்கை எம்.ஜி.ஆர் (தெற்கு) மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகில் கே.எம்.ராசகோபால் நினைவுப் பந்தலில் ஜாதி ஒழிப்பு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் கழகக் கொடியை சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ந.சி.ராசவேலு ஏற்றி வைத்தார். பெரியார் பெருந்தொண்டர்களுக்கும், மாநாட்டை சிறப்புற நடத்திட ஒத்துழைப்பு நல்கிய கழக இளைஞரணித் தோழர்களுக்கும், கழகப் பொறுப்பாளர்களுக்கும் பாராட்டுத் தெரிவித்து, கைத்தறி ஆடை அணிவித்துச் சிறப்பித்தேன். சித்தார்த்தன் குழுவினரின் வீதி நாடகம், சமூக அவலங்களை எடுத்துரைக்கும் பட்டி மன்றம், கருத்தரங்கம் என சிறப்புடன் நடத்தப்பட்டு மக்களின் பாராட்டைப் பெற்றன. மாநாட்டையொட்டி நகரம் முழுவதும் விழாக் கோலம் பூண்ட மாதிரி தோரணங்கள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து கழகத் தோழர்கள் வந்து சிறப்பித்தனர்.

 

 

 

2.4.1995 அன்று வடசெங்கை எம்.ஜி.ஆர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் புழல் காமராஜர் திடலில் ஜாதி ஒழிப்பு மாநாடும், தந்தை பெரியார் முழு உருவச் சிலை திறப்பு நிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டுக் கொடியை பெரியார் பெருந்தொண்டர் வடகரை முனுசாமி ஏற்றி வைத்தார். புழல் சிறைச்சாலை முன் மிகச் சிறப்பான வகையில் அமைக்கப்பட்டிருந்த அறிவு ஆசான் தந்தை பெரியாரின் முழு உருவச் சிலையை தோழர்களின் பலத்த வாழ்த்து முழக்கங்களுக்கிடையே திறந்துவைத்தேன். மாநாட்டில் அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர். அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணியின் மாநிலத் தலைவர் பூவை.மூர்த்தி சால்வை அணிவித்து மகிழ்ந்தார். வீதி நாடகங்களில் ஆர்.எஸ்.எஸ். கலவரம், திடீர் பிள்ளையார், ஜாதிக் கலவரம், பெண்ணடிமை, சாமியார்களின் மோசடிகள் போன்றவற்றை விளக்கி சிறப்பாக நடத்தப்பட்டது.

3.4.1995 அன்று தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை இந்திரா நகர் தண்ணீர் தொட்டி அருகில் ஜாதி ஒழிப்பு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக இந்திரா நகர் ரெங்கநாதபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தந்தை பெரியார் இலவச நூலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையில், மக்களுக்குச் சிறப்பாகப் பயன்படும் இலவச நூலகத்தையும், இளைஞர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வியல் பிரச்சினைகளைத் தீர்க்கும் மய்யத்தையும் திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

 

ஒரு நல்ல படிப்பகத்தைத் திறப்பதன் மூலம் இளைஞர்களிடையே ஒழுக்கமும் அறிவும் வளர இந்த நூலகம் பெரும் பங்காற்றும், இந்த நூலகத்திற்கு வருகின்ற இளைஞர்கள் போகும்போது துணிச்சல் மிகுந்தவர்களாகவும், தன்னம்பிக்கை உணர்வு உள்ளவர்களாகவும் செல்வார்கள் என பல கருத்துகளை எடுத்துரைத்தேன். மாநாட்டை யொட்டி வீதி நாடகமும், கருத்தரங்கமும் நடத்தப்பட்டன. ஜாதி ஒழிப்பு வீரர்களுக்குப் பாராட்டுப் பத்திரமும் வழங்கிச் சிறப்பித்தேன். மாநாட்டில் பெருமளவில் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

-அய்யாவின் அடிச்சுவட்டில் (258)

கடலூரில் ஜாதி ஒழிப்பு மாநாடு - 24.3.1995

 24.3.1995 அன்று கடலூரில் கழகத்தின் சார்பாக ஜாதி ஒழிப்பு மாநாடு எழுச்சியோடும், சிறப்பாகவும் நடைபெற்றது. முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களுக்கும், ஜாதி ஒழிப்புப் போராட்ட வீரர்களுக்கும், மாநாடு சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த கழகப் பொறுப்பாளர்களுக்கும் கைத்தறி ஆடை அணிவித்து பாராட்டினையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தேன்.

மாநாட்டில் ஆபாசத்திலும், ஒழுக்கக் கேட்டிலும், மோசடியிலும் விஞ்சி நிற்பவர் _ பிரேமானந்தாவே! சாய்பாபாவே! என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட பட்டிமன்றம் மக்களுக்கு போலிச் சாமியார்களின் முகத்திரையைக் கிழித்து வெளிக்காட்டும் வகையில் சிறப்பாக அமைந்திருந்தது. மக்களும் இறுதி வரையிலும் அமைதியாகக் கேட்டனர்.
மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி, வீதி நாடகம் என சிறப்பாக பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு உரையாற்றுகையில், தந்தை பெரியார் அவர்கள் இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக வைக்கம் மண்ணில் மனித உரிமைக்காகப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார்கள். அந்த வைக்கத்தில் ஜாதி ஒழிப்பு மாநாட்டை, இந்தியாவில் இருக்கிற எல்லா மாநிலங்களும் பின்பற்றக்கூடிய அளவுக்கு அகில இந்திய மாநாடாக நடத்தப் போகின்றோம். இந்திய அரசியல் சட்டத்திலே ஜாதி பாதுகாக்கப்படுகிறது. ஜாதியை எந்தெந்த அமைப்புகள் பாதுகாக்கின்றனவோ அவற்றையெல்லாம் நாம் உடைத்தாக வேண்டும் என ஜாதி ஒழிப்பு அவசியம் குறித்து பல கருத்துகளைக் கூறினேன்.

-கி.வீரமணி

அய்யாவின் அடிச்சுவட்டில் (258)