புதன், 27 ஜனவரி, 2021

அருமைத் தோழர் சைதை எஸ்.பி.தட்சிணாமூர்த்தி அவர்கள் 25.2.1992 அன்று இயற்கை எய்தினார்.


எஸ்.பி.தட்சணாமூர்த்தி

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், முன்னாள் தென்சென்னை மாவட்டக் கழகத் தலைவரும் ‘மிசா’வில் ஓராண்டு சென்னை சிறையில் இருந்தவரும் இயக்கப் போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்டு சிறை சென்றவருமான அருமைத் தோழர் சைதை எஸ்.பி.தட்சிணாமூர்த்தி அவர்கள் 25.2.1992 அன்று இயற்கை எய்தினார். நான் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த, சென்னை மாவட்ட தலைவர் சைதை எம்.பி.பாலு, மாவட்டச் செயலாளர்கள் எம்.கே.காளத்தி ஆகியோருடன் சைதை மசூதி தெருவில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினோம். அவரின் துணைவியார் மகன்கள், மகள்கள் மற்றும் குடும்பத்தினருக்கு கழகத்தின் சார்பில்  ஆறுதல் கூறினோம்.

26.2.1992 அன்று இறுதி ஊர்வலத்தில் கழகத் தோழர்கள் பங்கேற்று அவரது உடலுக்கு கழகக் கொடி போர்த்தப்பட்டது.

பி.ஈ.பக்தவச்சலம்

அதேநாளில் (25.2.1992) வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவரும், திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு உறுப்பினரும், சென்னை மாநகராட்சியின் முன்னாள் உறுப்பினரும் கழகம் நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றவருமான முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், கடைசி மூச்சு அடங்கும் வரை கட்டுப்பாடு மிக்க கழக செம்மலாக வாழ்ந்த சென்னை அயன்புரம் பி.ஈ.பக்தவத்சலம் அவர்கள் மறைவுற்றார். அவரது இழப்பு கழகத்திற்கு ஈடுசெய்ய முடியாதது என்று குறிப்பிட்டு, அவரது இறுதி ஊர்வலத்தில் கழகத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர்.  தலைமை நிலையத்தின் சார்பில், கழகப் பொதுச்செயலாளர் என்கிற முறையில்  கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஏராளமான கழகத் தோழர்களுடன் சென்று இறுதி மரியாதை செய்யப்பட்டது.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 16-31.1.20

சேலத்தில் நீதிக்கட்சி பவழவிழா மாநாடு (14, 15.2.1992 )

சேலத்தில் 14, 15.2.1992 ஆகிய இரு நாள்களிலும் முதல் நாள் திராவிடர் கழக மாநில மாநாடும், இரண்டாம் நாள் நீதிக்கட்சி பவள விழா மாநாடும் (சமூகநீதி மாநாடும்) சிறப்பாக நடைபெற்றன. முதல் நாள் மாநாட்டில் 16 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அதில், தமிழகத்து மய்ய அரசு நிறுவனங்களின் அலுவல் மொழியாகத் தமிழே இருக்க வேண்டும், வெளிநாடு வாழ் தமிழர்க்கு தமிழ் கற்க தமிழக அரசு உதவ வேண்டும், அனைத்திலும் தமிழ்ப் பெயர்களே சூட்ட வேண்டும், தமிழகத்தில் இதர மொழிப் பெயர்ப் பலகைகள் கூடாது, புரட்சிக்கவிஞர் நூலை அரசே மலிவு விலையில் வெளியிட வேண்டும், தமிழிசை இயக்கத்தின் தேக்க நிலையை நீக்குக, கர்நாடகத் தமிழர்கள் மீண்டும் தத்தம் இருப்பிடங்களில் வாழ உத்தரவாதம் தேவை மற்றும் தமிழிசை இயக்கத்தின் தேக்க நிலையை நீக்கவும், ‘தடா’ சட்டப் பிரயோகத்தை தமிழக அரசு விலக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

15.2.1992 அன்று சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாளில் திராவிடர் கழகத்தின் தென்மாநில சமூகநீதி மய்யத்தின் தலைவர் தமிழக மூதறிஞர் குழுத் தலைவர் ஜஸ்டிஸ் திரு.பி.வேணுகோபால் அவர்கள் தலைமையில் நீதிக்கட்சி பவளவிழா (75ஆம் ஆண்டு) மாநாடு நடந்தது. அதில் 14 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

முதல் தீர்மானமாக பொது நிறுவனங்கள், சாலைகள், வளாகங்களுக்கு நீதிக்கட்சி தலைவர்கள் பெயர்களை சூட்டுக, வரலாற்று நூல்களில் நீதிக்கட்சி உரிய இடம் அளிக்க வேண்டும், ஜாதி ஒழிப்பு மாநாடுகள், பெண்கள் இழிவுகள் நீக்கவும், இடஒதுக்கீடு வழங்கவும், பெண்ணுரிமை பாதுகாப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் பத்தே நிமிடத்தில் முடிந்த 7 மண விழாக்கள் குறிப்பிடத்தகுந்ததாகும். துண்டு ஏந்தி வழக்கு நிதியைத் திரட்டி வந்தேன். கருஞ்சட்டைப்படை தோழர்கள் அனைவரும் எழுந்து நின்று சபதம் செய்தனர். 18 மணி நேரம் மாநாடு தொடர்ந்து நடைபெற்று சாதனை படைத்தது.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 16-31.1.20

திங்கள், 25 ஜனவரி, 2021

குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமனுக்கு கருப்புக்கொடி!

காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டுக்குத் துரோகம், மண்டல் கமிஷன் பிரச்சினையில் மத்திய அரசின் துரோகம்,  குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் ஆரம்பத்திலிருந்தே போட்டு வந்த முட்டுக்கட்டை, குடியரசுத் தலைவரை சந்திக்கச் சென்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சந்திக்க மறுத்த அநீதி ஆகியவற்றைக் கண்டிக்கும் வகையில் திராவிடர் கழகத்தின் சார்பில் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனுக்கு கருப்புக் கொடி காட்ட 9.11.1991 அன்று என் தலைமையில் அனைத்து மாவட்டங்களி லிருந்தும் தோழர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்திற்கான காரணங்களை விளக்கிப் பேசினேன். கழகத் தோழர்களுடன் கைதாகி சிறை சென்றேன்.

 காவிரி நீர்ப் பிரச்சனையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க மறுத்த குடியரசுத்தலைவருக்கு ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் கருப்புக் கொடி காட்டும் காட்சி.

 கைதாகி மீனம்பாக்கம் முத்து திருமண மண்டபத்தில் இருந்த போது பெரியார் பேருரையாளர் பேராசிரியர் அ.இறையன் _ திருமகள் ஆகியோரின் செல்வன் இசையின்பன் மதுரை முனியசாமி _ பொன்னுத்தாய் ஆகியோரின் மகள் செந்தில்குமாரி(தற்போதைய பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்) ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்தேன். உரிமைப் போரில் கைது செய்யப்பட்டிருந்த போது நடைபெற்ற இந்தத் திருமணம் ஏடுகளில் பரபரப்பானது.

 இசையின்பனுக்கு செந்தில்குமாரி மோதிரம்

அணிவிக்கும் காட்சி

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி, 

- உண்மை இதழ், 1-15.1.20

செவ்வாய், 19 ஜனவரி, 2021

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது

• Viduthalai

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 15.01.2021 முற்பகல் 11.00 மணி அளவில், திருவள்ளுவர் நாளை முன்னிட்டு  மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர்  சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது. மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, மாவட்ட துணைத் தலைவர் டி .ஆர். சேதுராமன் மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் கோ.வீ.ராகவன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட தலைவர் இரா,வில்வநாதன் மாலை அணிவித்தார். ஈ.குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.மணித்துரை, இரா.பிரபாகரன், மு.சண்முகப் பிரியன், பிடிசி ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரியார் சிலைக்கு தமிழ்ப் புத்தாண்டை (தி.பி.2052) முன்னிட்டு மாலை அணிவிக்கப்பட்டது

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தியாகராய நகர் தந்தை பெரியார் சிலைக்கு தமிழ்ப் புத்தாண்டை (தி.பி.2052) முன்னிட்டு மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, மாவட்ட அமைப்பாளர் மு.ந. மதியழகன், மாவட்ட துணைத்தலைவர் சி.செங்குட்டுவன் மற்றும் காப் பாளர் கோ.வீ.ராகவன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட தலைவர் இரா,வில்வநாதன் மாலை அணிவித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன், தரமணி கோ. மஞ்சநாதன், ஈ. குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் சா.மகேந்திரன், மு.சண்முகப்பிரியன், வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், பெரியார் சேகர், பிடிசி ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 12 ஜனவரி, 2021

வழக்கறிஞர் த.வீரசேகரன் டாக்டர் பெ.வசந்தி வாழ்க்கை ஒப்பந்த விழா

வழக்கறிஞர் த.வீரசேகரன் டாக்டர் பெ.வசந்தி ஆகியோருக்கு வாழ்க்கை ஒப்பந்த விழாவை நடத்தி வைக்கும் ஆசிரியர் அவர்கள்.

பெரியார் பெருந்தொண்டர் தர்மராஜ்_மணியம்மாள் ஆகியோர்களுடைய செல்வனும், சென்னை மாவட்ட மேனாள் கழக இளைஞரணி தலைவருமான வழக்கறிஞர் த.வீரசேகரன்_டாக்டர் பெ.வசந்தி ஆகியோர்  18.11.1985 வாழ்க்கை ஒப்பந்த விழா என் தலைமையிலும், திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் சாதிக்பாட்சா அவர்கள் முன்னிலையிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மணமக்களுக்கு வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா உறுதிமொழியினைக் கூறி திருமணத்தை நடத்தி வைத்தேன். ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர். சுயமரியாதைத் திருமணச் சட்டம் அண்ணாவால் நிறைவேற்றப்பட்ட வரலாற்றை விளக்கிப் பேசினேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 16-31.1.19

இந்தி எழுத்து அழிப்பு ரயில் மறியல்

மத்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டம், 22.09.1985 அன்று நடைபெற்றது. நான் 18ஆம் தேதி முதல் ரயில் பயணம் மேற்கொண்டு 80க்கும் மேற்பட்ட தொடர்வண்டி நிலையங்களில் கழகத் தோழர்களை சந்தித்து போராட்ட வீரர்கள் பட்டியலைப் பெற்றுக்-கொண்டு 21.09.1985 அன்று சென்னை திரும்பினேன்.

22.09.1985 அன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் என் தலைமையில் இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு தார்சட்டி அளித்து பொன்னாடை அணிவித்து பெரியார் திடலிலிருந்து என்னை வழியனுப்பி வைத்தார்.

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் டாக்டர் மா.நன்னன் தலைமையிலும், திருச்சியில் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி தலைமையிலும், தஞ்சையில் பிரச்சார செயலாளர் செல்வேந்திரன் தலைமையிலும், கோவையில் இளைஞரணி செயலாளர் கு.இராமகிருஷ்ணன் தலைமையிலும், கடலூரில் தொழிலாளர் அணி செயலாளர் வழக்கறிஞர் தி.இராமதாஸ் தலைமையிலும், ஈரோட்டில் அமைப்புச் செயலாளர் நா.சேதுபதி தலைமையிலும், நெல்¬லையில் அமைப்புச் செயலாளர் டி.ஏ.தியாகராசன் தலைமையிலும், திருவாரூரில் விவசாய அணிச் செயலாளர் சு.சாந்தன் தலைமையிலும், மதுரையில் தென் மாவட்டங்கள் பிரச்சார குழு தலைவர் பே.தேவசகாயம் தலைமையிலும், ஜோலார்-பேட்டையில் மகளிர் அணிச் செயலாளர் பார்வதி தலைமையிலும் இந்தி அழிப்புப் போராட்டம் அனைத்து புகைவண்டி நிலையங்களிலும் நடைபெற்றது. கழக துணைப் பொதுச்செயலாளர் கோ.சாமிதுரை அவர்களும், தலைமை நிலையச் செயலாளர் துரைசாமியும் வெளியில் இருந்து கழகப் பணிகளை ஆற்றினர்.


தொடர்வண்டி நிலையங்களில் இந்தி எழுத்துகளை அழித்து நான் எழும்பூரில் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டேன். இந்தியை அழிக்கச் சென்ற கழகத் தோழர்கள் மற்றும் தோழியர்கள் 5000 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தக் கிளர்ச்சியில் 3 தம்பதிகள் சண்முகநாதன் அவரது துணைவியார் இராமலக்குமி, மதுரை மாவட்டத் தலைவர் தேவசகாயம், அவரது துணைவியார் அன்னத் தாயம்மையார், திருப்பத்தூர் ஏ.டி.கோபால் அவரது துணைவியார் சந்திரா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையேகினர்.

கழகம் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஆனந்த விகடன்கள் பொறுமியது! ஆத்திரத்திலும் அவசர கோலத்திலும் தலையங்கத்தில் திராவிடர் கழகத்தின் மீது கண்டனக் கணைகளைப் பாய விட்டிருந்தது!

“இந்தியை எதிர்ப்பதற்கு நியாயமான காரணங்கள் இன்று முளைத்திருந்தாலும்கூட இந்த சமயத்தில் அதற்கான கிளர்ச்சிகளுக்குத் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவு ஒருபோதும் கிடைக்காது’’ என்று கூறிவிட்டு, அடுத்த வரியிலேயே “தமிழகத்தில் இந்தியைக் கட்டாயமாக நுழைப்பதற்கே வழி இல்லை’’ என்றும் எழுதியிருக்கிறது! என்று ஆனந்த விகடன் அன்று எழுதியது.

போராட்டத்தில் ஈடுபட்டு போராட் வீரர்கட்கும் வீராங்கனைகட்கும் நன்றி தெரிவித்து 25.09.1985 அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 1-15.1.19 


ஈழ விடுதலை தலைவர்களை நாடு கடத்தியதற்காக ரயில் மறியல்

தமிழ் ஈழ விடுதலை ஆதரவு அமைப்பின் (‘டெசோ’)வின் அவசரக் கூட்டம் 25.08.1985 அன்று கலைஞர் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் என்னுடன், பேராசிரியர் அன்பழகன், ‘முரசொலி’ மாறன் எம்.பி., சி.டி.தண்டபாணி, வை.கோபால்சாமி எம்.பி., செ.கந்தப்பன், டி.ஆர்.பாலு ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். தமிழர் அய்க்கிய முன்னணி பொதுச் செயலாளர் அமிர்தலிங்கமும் இதில் பார்வையாளராகக் கலந்துகொண்டனர். கூட்டத்தின் பின்பு,    இலங்கையிலிருந்து வந்து தமிழ்நாட்டில் புகலிடம் தேடி, தமிழ்ப் போராளிகட்கும், தமிழ்ப் பிரதிநிதிகட்கும் தோன்றாத் துணையாக இருந்த டாக்டர் பாலசிங்கத்தையும் தந்தை செல்வாவின் அருமைச் செல்வமும் ஈழத்தின் மனித உரிமை அமைப்பின் தலைவருமான தோழர் சந்திரகாசனையும் டில்லி அரசு, தமிழக அரசின் ஒப்புதலோடு நாடு கடத்தியது கொடுமையிலும் கொடுமையாகும்!

இந்து ஏட்டில் புதுடெல்லி நிருபர் திரு.ஜி.கே.ரெட்டி இந்த நாடு கடத்தல் என்பது மனிதாபிமான முற்றிலும் விரோதமான செயல். இப்படி ஒரு யோசனையைப் பிரதமர் திரு.ராஜீவ்காந்திக்கு எந்த ‘பிரகஸ்பதி’ சொல்லிக் கொடுத்தாரோ? அதன் விளைவு, “சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தாகிவிட்டதே’’ என்று  எழுதினார். இதனைக் சுட்டிக்காட்டி “நாடு கடத்தியது கொடுமை!’’ என்ற தலைப்பில் 28.08.1985 அன்று ‘விடுதலை’யில் வேதனையை வெளிப்படுத்தியிருந்தேன்.

இந்த அறிக்கையை எழுதி முடிக்கும்போது, திரு.சந்திரகாசன் பம்பாய் வந்து விமான நிலையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார் (Detained) என்று செய்தி வந்துவிட்டது. நாடுகடத்தப்பட்ட நாள்முதல் அந்நாள் வரை உணவு உட்கொல்லாமல் உள்ள அவரது உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாகுமோ என்ற கவலை ஏற்பட்டது! இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 30ஆம் தேதி ரயில் ஓடவில்லை என்பதை அமைதி வழியில் டில்லிக்கு உணர்த்திக் கட்டுப்பாட்டுடன் காரியமாற்றுவோம் என்று அந்த அறிக்கையின் மூலமாக கேட்டுக்கொண்டேன்.

30.08.1985 அன்று தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி 30ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் உணர்ச்சிபூர்வமாக கழகத் தோழர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு ஏராளமான தோழர்கள் பங்கேற்று சிறை சென்றனர். வட சென்னை மாவட்டச் செயலாளர் சே.ஏழுமலை தமது மகன் திருமணம் அடுத்த 15 நாட்கள் உள்ள நிலையில் கைதாகி சிறை சென்றனர்.

பேரணியின் இறுதியில் தேனாம்பேட்டை “அன்பகத்திற்-கு’’ எதிரே கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இன எழுச்சி முழக்கமிட்டு உரையாற்றினேன். ஈழத்தில் எங்கள் தமிழினம் வெட்டிச் சாய்க்கப்படும் போது, எங்கள் சகோதரிகள் கற்பழிக்கப்படும் போது, சொத்துகள் சூறையாடப்படும்போது மான உணர்ச்சியுள்ள தமிழர்கள் எல்லாம் புலிகளாக மாறினார்கள். அவர்களின் தாகம்தாம் ‘தமிழ் ஈழம்’ என்பதை வரலாறு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் தமிழ் ஈழப் போராளிகளின் தலைவர்களை மத்திய அரசு நாடு கடத்தியிருப்பதன் மூலம் மகத்தான ‘கறை’யை ஏற்படுத்திவிட்டது. இந்தக் ‘கறை’ அடுத்த சில நாட்களிலேயே துடைக்கப்பட்டாக வேண்டும் என்பதை இங்கே திரண்டிருக்கும் கூட்டத்தின் சார்பாக மட்டுமல்ல. இங்கே வருவதற்கு இயலாத நிலையில் உணர்ச்சி கொந்தளிப்போடு இருக்கும் லட்சோபலட்சம் தமிழர்களின் சார்பில் நாங்கள் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் பகுதி

- உண்மை இதழ், 1-15.1.19

கழக மாநில மாநாடு மற்றும் இடஒதுக்கீடு பாதுகாப்பு மாநாடு - 1985

கலைஞர் கழக மாநாட்டுக்கு வருகை தந்தபோது, பெரியார் தற்காப்பு இளைஞர் அணியினர் அணிவகுப்பு மரியாதையுடன் மாநாட்டு மேடைக்கு அழைத்துச் சென்றபோது எடுத்த படம்; பொதுச்செயலாளர் அவர்களும் உடன் வருகிறார். (13.7.1985)


மாநாட்டில் நடந்த படத்திறப்புகள் (1) புரட்சிக்கவிஞர் படத்தை பேராசிரியர் ராமநாதனும் (2) நடிகவேல் எம்.ஆர்.ராதா படத்தை கவிஞர் முகவை ராஜமாணிக்கமும் (3) ஜாதி ஒழிப்பு வீரர்கள் படத்தை பிரச்சார அணி செயலாளர் செல்வேந்திரனும் (4) தமிழ் ஈழம், படத்தை உணர்ச்சிக் கவிஞர் காசி. ஆனந்தனும் (5) ஆஞ்சா நெஞ்சன் அழகிரி படத்தை - எம்.கே.டி. சுப்பிரமணியமும் (காமராசர் காங்கிரஸ் கட்சி செயலாளர்) திறந்து வைத்தபோது எடுத்த படம்

05.07.1985 அன்று சைதாப்-பேட்டை தேரடி திடலில் நடந்த மாநாட்டு விளக்க பொதுக்-கூட்டத்தில் கலந்து-கொண்டு,  குஜராத் முதல்வர் சோலங்கி சமூகநீதிக் கொள்கையில் உறுதியாக நின்றதை உணர்ச்சியோடு சுட்டிக்காட்டி உரையாற்றினேன்.

 

 

 

“குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் சோலங்கி ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். ‘வீக்’ (Week) வாரப் பத்திரிகை சோலங்கியைப் பற்றி எழுதும்போது ‘Solanki was following foot steps of Periyar’  என்று எழுதியது. (சோலங்கி பெரியார் பாதையை பின்பற்றிக்கொண்டிருக்கிறார்) குஜராத் காந்தியார் பிறந்த மாநிலம். அங்கே இப்போது காந்தியார் வெளியே போய்விட்டார், பெரியார் புகுந்துவிட்டார்.

தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் செய்ததைப் போல பார்ப்பனரே இல்லாத ஓர் அமைச்சரவை அமைத்துக் காட்டியிருப்பவர் சோலங்கி. அது மட்டுமல்ல. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரையே அந்த மாநிலத்தின் போலீஸ் அமைச்சராக அவர் நியமித்திருக்கிறார்.

 

அவரைப் பணியை விட்டு, பதவியை விட்டு அனுப்ப வேண்டும் என்று சொல்லக்கூடிய உரிமை ஓட்டுப் போட்ட மக்களுக்குத்தான் உண்டு! ஆனால், பார்ப்பனர்களும், உயர்ஜாதிக்காரர்களும் அவரை விரட்டப் பார்க்கிறார்கள். இதேபோன்று அநியாயங்கள் பார்ப்பன _ பனியா ஆளும் வர்க்கம் நினைத்ததைச் செய்கிறது என்று கூட்டத்தில் எடுத்துக் கூறினேன்.

13, 14.07.1985 ஆகிய தேதிகளில் கழக மாநில மாநாடு மற்றும் இடஒதுக்கீடு பாதுகாப்பு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாடு துவங்குவதற்கு முதல் நாளே இதன் வெற்றிக்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்து-விட்டன. நமது கழகக் குடும்பங்கள் தமிழ் மான உணர்வு படைத்தோர் அனைவரும் கட்சி எல்லைக்கு அப்பாற்பட்டு வந்து திரள வேண்டும் என்று வேண்டிக் கொண்டதற்-கிணங்க, சென்னைக் கருங்கடல் என்று கண்டோர் வியக்கத்தக்க வண்ணமும் தமிழுணர்வு உள்ள அத்துணைப் பேர்களது சங்கமக் கடல். அந்தக் கருங்கடல் பெரியார் திடல் முழுவதும் நிரம்பி வழிந்ததால் பொதுவானவர்கள் பலரும் பாராட்டினார்கள், வியந்தனர், நம்பிக்கை கொண்டனர்.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் சீருடை அணிந்த தற்காப்புப் படை அணிவகுத்து இருந்தது. மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர், பொருளாளர் கா.மா.குப்புசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, கருநாடக மாநில தி.க. மகளிர் அணி அமைப்பாளர் சொர்ணாம்மாள் எம்.ஏ. அவர்கள் கழகக் கொடியினை ஏற்றிவைத்து உரையாற்றினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் வருகை தந்து மாநாட்டில் கலந்து-கொண்டார். மாநாட்டில் அன்னை நாகம்மையார் உருவப் படத்தை ஈரோடு சுப்பையாவும், அஞ்சாநெஞ்சன் அழகிரி படத்தை காமராஜ் காங்கிரஸ் செயலாளர் எம்.கே.டி.சுப்பிரமணியமும், புரட்சிக்கவிஞர் படத்தை பெரியார் பேருரையாளர் பேராசிரியர் புலவர் இராமநாதனும், நடிகவேள் எம்.ஆர்.இராதா படத்தை கவிஞர் முகவை இராசமாணிக்கமும், அன்னை மணியம்மையார் படத்தை வழக்கறிஞர் சிவகங்கை சண்முகநாதனும், சுதந்திர தமிழ் ஈழ படத்தை கவிஞர் காசி.ஆனந்தனும், பேரறிஞர் அண்ணா படத்தை மதுரை ஆதீனகர்த்தரும் திறந்து வைத்து உரையாற்றினர்.

மாநாட்டில் தாலி அகற்றுதல் நிகழ்ச்சியும், வேம்பையன் அவர்கள் தமது துணைவியார்  சுசிலா அணிந்திருந்த பவுன் தாலியை கழற்றி, தமிழன் குரலாக ஒலிக்கும் விடுதலையின் வளர்ச்சிக்கு நன்கொடையாகத் தருவதாக அறிவித்தார்கள். அதுபோல மு.கங்காதரன் அவர்களின் துணைவியார் அவர்களும் தமது தாலியை அகற்றிக் கொண்டார்.

தொடர்ந்து நான் மேடையில் ஒரு குழந்தைக்கு ‘விடுதலை மணி’ என்று பெயர் சூட்டினேன். தொடர்ந்து லண்டன் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழினத் தொண்டருமான வீரசிங்கம், தோழர் கருணாநிதி உள்ளிட்டோருக்கு பயனாடை அணிவித்துப் பாராட்டினோம்.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் பி.வேணுகோபால் அவர்களும், மேடையில் மூத்த உறுப்பினர்களுக்கு இயக்கத்தின் மத்திய நிர்வாகக் குழு மூத்த உறுப்பினர்களாக இருப்பவர்களும், வழிகாட்டியாக இருப்பவர்களுமான இயக்க வீரர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் தூக்குமேடை நாடகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

முதல் நாள் மாநாட்டில் தலைமை உரையை நிகழ்த்தினேன். அப்போது தந்தை பெரியார் அவர்கள் மறைவுச் செய்தி கேட்டு ஆரியர் கூத்தாடி மகிழ்ந்து, சிற்சில இடங்களில் பாயாசம் சாப்பிட்டவர்கள் உண்டு. பெரியார் என்ற மாமலை சாய்ந்துவிட்டது. இனிமேல் நாம் அச்சமின்றி நாம் ஆதிக்கபுரியில் அமர்ந்து ஆட்சி செலுத்தலாம் என்று அவசரக் கணக்கு போட்டது. அந்தக் கணக்கு ஒரு தப்புக் கணக்கு என்பதை இன்று நாடே கண்டு ஒப்புக்-கொள்ளும் நிலை ஏற்பட்டது. தான் வாழ்ந்த காலத்தில் தமிழகத்திலும், ஒரு சில தென்னாட்டு மாநிலங்களில் மட்டுமே தந்தை பெரியார் வாழ்ந்தார் என்ற நிலைமை மாறி இப்போது தந்தை பெரியார் வடமாநிலங்களுக்கும் சென்றுவிட்டார்.

“தந்தை பெரியார் ஒரு தனி மனிதர் அல்ல. ஒரு காலகட்டம், ஒரு சகாப்தம், ஒரு திருப்பம்’’ என்று அறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள். அவர்கள் மறைந்த உண்மை அகிலத்திற்கெல்லாம் புலனாகிறது.

தந்தை பெரியார் அவர்களுடைய வருமுன்னர் சொல்லும் அறிவும், வருமுன்னர்க் காக்கும் செயலும் அவரை உலகின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு பெரும் சிந்தனையாளராக உயர்த்திக் காட்டுகிறது. இந்த ஜாதி ஒழிப்புப் பிரச்சினைக்கு பிரிட்டிஷ்-காரர்கள் இந்த நாட்டில் இருக்கும்போதே ஒரு தீர்வு ஏற்படாவிட்டால் இனி எதிர்காலத்தில் ஜனநாயகம் (Democracy) இந்த நாட்டில் மலராது, பார்ப்பன நாயகம் (Brahminocracy) தான் வரும் என்றார். அதைத்தானே கடந்த காலத்திலும் இன்றும் நாம் கண்டு வருகிறோம் என்று எடுத்துக்காட்டி உரையாற்றினேன்.

முதல் நாள் மாநாட்டில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றும்போது, இந்தியாவினுடைய அரசியல் சட்டத்தில் இதுவரையிலே அய்ம்பதுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் வந்திருக்கின்றன என்றாலும்கூட, முதல் திருத்தம் தந்தை பெரியாரால், அண்ணாவால், நாம் நடத்திய போராட்டத்தால்தான் உருவாக்கப்பட்டது என்கிற வரலாற்றை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் சமுதாயத்திலே இடஒதுக்கீடு தேவை. அது எந்த அடிப்படையிலே என்றால் பொருளாதார அடிப்படையிலே அல்ல, சமூக அடிப்படையில் கல்வி அடிப்படையில் Socially and Educationally என்ற சொற்றொடரோடு அந்த அரசியல் சட்டத் திருத்தம் இந்திய அரசியல் சட்டத்திலே முதன்முதலாக ஏறியதை மறந்துவிடக் கூடாது’’ என்று கூறினார்கள்.

தூக்குமேடை நாடகத்தில் எம்.ஆர்.ராதாரவி தோன்றும்

ஒரு காட்சி (13.7.1985 மாநாட்டில்)

முதல் நாள் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் அரசு பணிகளில் மகளிர்க்கு 50 சதவீத இடஒதுக்கீடு, இளைய சமுதாயமே! ஆபாச போதைகளிலிருந்து விடுபட மாற்று ஏற்பாடுகள், காலில் விழும் பழக்கத்தை ஒழித்திடுக, தீக்குளிப்பை கைவிடுக, ஜாதி மதக் கலவரங்களை ஒடுக்க நடவடிக்கை, ஜாதி ஒழிய கலப்பு மணம், இந்தி திணிப்பை ஒழிக்கப் போராட்டம், மாநிலப் பட்டியலில் கல்வி உள்ளிட்ட தீர்மானங்கள் அவற்றுள் அடங்கும்.

இரண்டாவது நாள் நடைபெற்ற இடஒதுக்கீடு காப்பு மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீடு 18 சதவீதத்திற்கும் அதிகமாக தருக, பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கும் குறையாது காப்பீர், மண்டல் அறிக்கையை உடனடியாக நடைமுறைப்-படுத்தும். இடஒதுக்கீடு சட்டத்தை மேலும் விரிவுபடுத்துவீர் உள்ளிட்ட தீர்மானங்-களிலும் ஜாதி சான்றிதழ், மாணவருக்கு உதவித் தொகை, மாணவர் வருகைப் பதிவு, உள்ளிட்டவைகளில் தமிழக அரசு மனிதாபிமானத்தோடு இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும் என்று இந்த மாநாடு தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்தது, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சமூகநீதி வரலாற்றில் இம்மாநாடு மிகுந்த பலன் தந்த மாநாடாகும்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் சில பகுதிகள்

உண்மை இதழ், 16-31.12.18


புரடசிக்கவிஞர் பிறந்த நாள் விழா -1984

சென்னை கடற்கரையில் காந்தி சிலை அருகே பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட புரடசிக்கவிஞர் பிறந்த நாள் விழாவான தமிழர் கலை விழா 29, 30.04.1985 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது.

இரண்டு நாளும் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் கலைஞர் கலந்து கொண்டார்கள். “இந்தக் கலைவாணன் பொம்மலாட்டம் குழுவினுடைய அரும்பணியினை கொள்கை விளக்கப் பணியினை தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துக்களை, சிற்றூர், பட்டிதொட்டி, குக்கிராமம் இங்கெல்லாம் பரப்புகின்ற வகையில் இந்தக் கலை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இந்தக் குழுவின் அரும்பணியாற்றி வருகின்ற முத்துக்கூத்தனுக்கும், அருமைசெல்வன் கலைவாணனுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்கள்.

இவ்விழாவில் நான் உரையாற்றும்போது, “பார்ப்பனர்கள் என்னை அழிக்க வேண்டும் என்ற பார்ப்பன பெரு உள்ளங்கள் பார்ப்பன மூலவர் சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்று சொன்னால் அவர்கள் அதிலே வெற்றி பெறாமல் போய்விடுவார்களா அல்லது நாங்கள் அந்த வெற்றியைத் தாண்டி வெற்றி பெற்றுவிடுவோமா என்று நான் நினைத்துப் பார்த்ததுண்டு. என்னுடைய இறுதி மூச்சு எத்தனை நாளைக்கு இருக்கும் என்பதைப் பற்றி யாருக்கும் உத்தரவாதம் கிடைக்காது என்பதைப் போல -_ அந்த இறுதி மூச்சு என்னிடமிருந்து பிரிக்கப்படுகின்ற வரையிலே மானத்தையும், அறிவையும் இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஊட்டுவதற்குத் தந்தை பெரியார் வழியில், பேரறிஞர் அண்ணா வழியிலே, புரட்சிக்கவிஞர் வழியிலே நின்று நித்தம் நித்தம் உழைப்பேன்’’ என்று உரை ஆற்றினேன். கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக மாநாடு போல் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

குட்டிமணி தங்கதுரை படுகொலை

08.08.1983 அன்று சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் நடந்த ஈழத் தமிழர்கள் பாதுகாப்புக் கூட்டத்தில் நான் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினேன். “குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் போன்ற இளைஞர்கள் சரித்திரத்திலே இருபதாம் நூற்றாண்டுக்கான இளம் சிங்கங்கள் வீரர்கள் அவர்கள்.’’

குட்டிமணி அவர்கள், “நான் இறந்த பிறகு என் கண்களை எடுத்து ஒரு கண்ணில்லாத தமிழனுக்குக் கொடுங்கள். அவன் பார்வை பெறட்டும். அந்த பார்வை மூலமாக சுதந்திர மண்ணாக என்னுடைய மண் மலர இருப்பதை நான் பார்த்து மகிழ இருக்கிறேன். தான் உயிரோடு இல்லாவிட்டாலும்கூட’’ என்று அவர் உணர்ச்சியோடு சொன்னார்.

அதை மனதில் வைத்துக்கொண்டு சிங்கள வெறியர்கள் சிறைச்சாலையைத் திறந்து வெளியே கொண்டுவந்து நிறுத்தி அடித்துக் கொன்று முதலிலே அவருடைய கண்களை கீழே போட்டு காலால் நசுக்கினார்கள். இத்தகைய கொடுமைகளைக் களைய தமிழ்ப் பெருமக்களை நாங்கள் கட்சி வேறுபாடு இல்லாமல் வேண்டிக் கொள்கிறோம்’’ என்று உணர்வு பொங்க வேதனையால் நெஞ்சுவேகப் பேசினேன்.

-அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 1.8.18திங்கள், 11 ஜனவரி, 2021

மாநில இளைஞரணி மாநாடு சென்னை (1983)

மாநில இளைஞரணி மாநாடு 09.07.1983 அன்று எழுச்சியுடன் சென்னை பெரியார் திடலில் துவங்கியது. தமிழ்நாடு முழுவதுமிருந்தும் ஏராளமான இளைஞரணி தோழர்களும், கழகத் தோழர்களும், தோழியர்களும் பெரியார் திடல் முழுவதும் நிரம்பியிருந்தனர்.

தொடர்ந்து இளைஞரணி செயலாளர் கோவை கு.இராமகிருஷ்ணன் எழுச்சிமிக்க வரவேற்புரை ஆற்றினார்.

நான், ஈழத்தமிழர்கள் கொடுமையை விளக்கும் கண்காட்சியை திறந்து வைத்து எழுச்சி உரையாற்றினேன். அதனைத் தொடர்ந்து 06.07.1983 அன்று சோலையார் பேட்டையிலிருந்து புறப்பட்டு வடஆற்காடு மாவட்ட இளைஞர் அணியின் எழுச்சி சைக்கிள் பேரணி வழிநெடுக பிரச்சாரம் செய்துகொண்டு பெரியார் திடலை அடைந்தது.

திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் நான் ஆற்றிய எழுச்சிமிக்க உரையில், “தந்தை பெரியார் வழியில் இளைஞர்கள் சுயநலம் பாராது ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி எடுத்துக் கூறினேன்.

09.07.1983 அன்று இரவு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா அரங்கில் நடைபெற்ற அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடக விழாவில் கலந்துகொண்டேன்.

மறுநாள் (10.07.1983 அன்று) சென்னை பெரியார் திடலில் ‘தமிழர் கலைப் பெருவிழா’ விழாவில், தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களும், தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களும், பேராசிரியர் தமிழ்க்குடிமகன், டாக்டர் மா.நன்னன், எம்.ஏ.அப்துல் லத்தீப், பொருளார் கா.மா.குப்புசாமி, அறந்தை நாராயணன் உள்ளிட்ட கழக முக்கிய பொறுப்பாளர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டார்கள்.

விழாவில், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றும்போது, “ஈரோடு நகரத்தில் ‘குடிஅரசு’ அலுவலகத்தில் துணை ஆசிரியராகத் தந்தை பெரியார் அவர்களி டத்திலே பணியாற்றிக் கொண்டி ருக்கிறேன். அப்பொழுது திருவையாறு தியாகையர் உற்சவம்.

திருவையாற்றில் மறைந்துவிட்ட நம்முடைய இசையரசர் தண்டபாணி தேசிகர் அவர்கள் பாடுவதற்காகச் சென்றார்கள். அவர் தமிழ்ப்பாடல்களாகவே பாடினார். அவர் பாடி முடித்தப் பிறகு உயர்ந்த சமுதாயத்தை சேர்ந்த இன்னொரு மகாவித்துவான் அந்த மேடையில் பாட வேண்டும். அந்த வித்துவானை அழைத்தபோது அவர் சொன்னார், “மேடை தீட்டாகி விட்டது. தமிழிசை பாடப்பட்ட காரணத்தால் மேடை தீட்டாகிவிட்டது. எனவே, மேடையைக் கழுவி சுத்தம் செய்து தோஷம் கழித்து புண்ணியதானம் செய்த பிறகு தான் நான் இந்த மேடையிலே ஏறுவேன்’’ என்று சொல்லி, அவர் சொன்னாவறு காரியங்கள் நடைபெற்று அதற்குப் பிறகு அவர் அந்த மேடையேறி தெலுங்குப் பாடல்களை _ வடமொழிப் பாடல்களைப் பாடினார் என்பது கற்பனையல்ல, நடந்த செய்தி!

இந்தச் செய்தி வந்தவுடன் தந்தை பெரியார் அவர்கள் கொதித்தார்கள், குமுறினார்கள். “என்னிடத்தில் செய்தியைத் தந்து ‘குடிஅரசு’ பத்திரிகையில் ஒரு துணைத் தலையங்கம் எழுது’’ என்று சொன்னார்கள். இன்றைக்கும் நீங்கள் காணலாம். பழைய ‘குடிஅரசு’ ஏட்டை எடுத்துப் பார்த்தால் ‘தீட்டாயிடுத்து’ என்ற தலைப்பில் நான் எழுதினேன்.’’ என்று பழைய வரலாற்று நிகழ்வை நினைவுகூர்ந்து தமிழர்களுக்கு உணர்வூட்டினார்.

பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள், தமிழர்களின் இனவுணர்வு புத்துயிர் பெற இதுபோன்ற விழாக்கள் கட்டாயம் என்று வலியுறுத்தினார்.

கலை விழா நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய நான், தமிழர்கள் கலையில் ஆரியர்கள் செய்த சூழ்ச்சிகளையும், அதை முறியடிக்க தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா சொன்ன கருத்துகளையும் சுட்டிக்காட்டி எழுச்சியான உரை நிகழ்த்தினேன்.


4.JPG - 4.73 MB
இளைஞரணி மாநாடு - தமிழர் கலைவிழாவையொட்டி நடந்த பேரணி (ஜூலை 10)

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி
உண்மை இதழ்,16.7.18

சென்னையில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

சென்னை மண்டல கழகத்தின் சார்பில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்து கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் உரையாற்றினார். 'பெரியார் ஓர் அறிமுகம்' எனும் தலைப்பில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பயிற்சியாளர்களுக்கு வகுப்பு நடத்தினார். கழகச் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம், சென்னை மண்டல தலைவர் தி.இரா. இரத்தினசாமி, செயலாளர் தே.செ. கோபால்,  தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி,அமர்சிங்,  வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சு. குமாரதேவன் உள்ளனர். (சென்னை பெரியார்திடல், 10.1.2021)

கழகத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டங்கள் - (2020ம் ஆண்டு)

கழகத்தின் சார்பில்

 நடைபெற்ற போராட்டங்கள்

8.5.2020 டாஸ்மாக் திறப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

15.7.2020 ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

17.7.2020 தந்தை பெரியார் சிலை அவமதிக்கப் பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

27.8.2020 நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

5.10.2020 பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

22.11.2020 நெல்லை பல்கலைக்கழகத்தில் அருந்ததிராய் எழுதிய பாடத்தை நீக்கியதை கண்டித்து போராட்டம்

7.12.2020 அரசு பொதிகை தொலைக்காட்சியில் செத்த மொழி சமஸ்கிருதத்தை திணிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதன், 6 ஜனவரி, 2021

செத்த மொழி' சமஸ்கிருதத்தில் சென்னை தொலைக்காட்சியில் (தூர்தர்ஷன்) செய்தி ஒளிபரப்பா? கண்டன ஆர்ப்பாட்டம், கைது

'


தந்தை பெரியார் சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் மாலை அணிவித்தார். போராட்ட நிறைவில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் விளக்கவுரையாற்றினார். (7.12.2020)சென்னை தொலைக்காட்சி (தூர்தர்ஷன்) நிலையம்முன் திராவிடர் கழகம் தடையை மீறி ஆர்ப்பாட்டம் - கைது!


செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு சிங்காரமா - ஆரிய ஆட்சியின் அகங்காரமா?


செத்த மொழி சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்பா?சென்னை, டிச.7 செத்த மொழியாம் சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்புவதைக் கண்டித்து சென்னை தொலைக்காட்சி (தூர்தர்ஷன்) நிலையம் முன்பு இன்று (7.12.2020) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்ட கழகத் தோழர்கள் அண்ணா சாலை, பெரியார் பாலம் சிம்சன் அருகே  தடுத்து நிறுத்தப்பட்டு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.


‘‘அனைத்து மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் தூர்தர்ஷன் என்ற அரசு தொலைக்காட்சியில், கேட்பாரற்ற, கேட்டாலும் புரிவார் இல்லாத, நடைமுறையில் தேவை சிறிதுமற்ற செத்துச் சுண்ணாம்பாகிப் போன சமஸ்கிருதத்தை தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி - திட்டமிட்டே திணிப்பது ஜனநாயகம் ஆகாது; பச்சைப் பாசிச முறையாகும்!


22 மொழிகளில் இது வெகுமக்களுக்குச் சம்பந்தமில்லாத ‘‘தேவ பாஷை'' என்ற மகுடம் சூட்டிக்கொண்ட ஒரு மொழி.


இந்தித் திணிப்பைவிட மிக மோசமான திணிப்பு. மற்ற 21 மொழிகளை ஆட்சி மொழியாக்கி அந்தந்த வட்டங்கள், மாநிலங்களில் அந்தந்த மொழிகளில், ஆட்சிப் பணியில் - மத்திய அரசு தகவல் பரிமாற்றங்கள் நடைபெறுவதே அனை வருக்கும் மனநிறைவளிக்கும் முறை!


தேவையின்றித் திணிக்கும் சமஸ்கிருத திணிப்பைத் திரும்பப் பெற வேண்டும் - நாட்டின் ஒருமைப்பாட்டை காப்பாற்ற வேண்டி மத்திய அரசு இதுபோன்ற திணிப்புகளால் அதற்கு வெடி வைத்துத் தகர்த்திடும் முயற்சிக்கு முன்னுரை எழுதுகிறது!


வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் சென்னை தொலைக்காட்சி நிலையத்திற்கு முன்பு திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தும்'' என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 30.11.2020 அன்று அறிக்கை விடுத்தார்.


அதன்படி இன்று (7.12.2020) காலை 11 மணியளவில் சென்னை அண்ணா சாலை பெரியார் பாலம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் மாலை அணிவித்தார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்ட கண்டன உரையாற் றினர்.


கழகத் தோழர்கள் எழுப்பிய ஒலி முழக்கங்கள்


‘‘மத்திய அரசே, பி.ஜே.பி. அரசே!


திணிக்காதே... திணிக்காதே,


சமஸ்கிருதத்தைத் திணிக்காதே!


செத்த மொழிக்குச் சிங்காரமா?


ஆரிய ஆட்சியின் அகங்காரமா?


அனுமதியோம், அனுமதியோம்


பொதிகைத் தொலைக்காட்சியில்


சமஸ்கிருதத்தில் செய்தியா?


அனுமதியோம், அனுமதியோம்!


செம்மொழித் தமிழ் என்றால் இளக்காரமா?


செத்த மொழிக்குச் சிங்காரமா?


அரசுத் தொலைக்காட்சியா?


ஆர்.எஸ்.எஸ்.சின் தொலைக்காட்சியா?


போராடுவோம், போராடுவோம்


மொழியுரிமைக்குப் போராடுவோம்!


கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்


மொழித் திணிப்பைக் கண்டிக்கிறோம்!


எட்டாம் அட்டவணையில் 22 மொழிகள்


ஆதிக்கம் செலுத்துவது இரண்டே


மொழிகளா?


சமஸ்கிருதம் தேவ பாஷையா?


தமிழ் உங்களுக்கு நீச பாஷையா?


எங்கள் நாடு தமிழ்நாடு!


மொழித் திணிப்பைப் பொறுக்காது!


இந்தியையும், சமஸ்கிருதத்தையும்


எங்கள் நாடு ஏற்காது!


எச்சரிக்கை, எச்சரிக்கை


மத்திய அரசுக்கு எச்சரிக்கை!


போராடுவோம், வெற்றி பெறுவோம்!


வெற்றி கிட்டும்வரை போராடுவோம்!


நிதியில்லை, நிதியில்லை


செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு


நிதியில்லை, நிதியில்லை!


பல்லாயிரம் கோடி ரூபாய்களை


செத்த மொழிக்குக் கொட்டி அழுவதா?


அனுமதியோம், அனுமதியோம்'' போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


பின்னர் ஊர்வலமாகச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு பெரியார் பாலம்  அருகே தோழர்களை காவல்துறையினர் கைது செய்து புதுப்பேட்டை வீரபத்திரன் தெருவிலுள்ள சமுதாய நலக் கூடத்தில் வைத்துள்ளனர்.


திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் வரவேற்புரையாற்றினார்.


திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மண்டலச் செயலாளர் தே.செ.கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர்  வழக்குரைஞர் பா.மணியம்மை, திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் சே.மெ.மதிவதினி, மண்டல மாணவர் கழக செயலாளர் வேலவன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத் திற்கு முன்னிலை வகித்தனர்.


மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பொழிசை கண்ணன் நன்றி கூறினார்.


திராவிடம் வெல்லும்: வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியின்மூலம் மதவெறி மண்ணல்ல திராவிடம்; தமிழகம் சமூகநீதியின் வற்றாத ஊற்று, வறளாத ஜீவநதி என்பதை உலகறிய உறுதியேற்போம்!


தந்தை பெரியார் நினைவு நாளில் தமிழர் தலைவரின் சூளுரை

‘திராவிடம் வெல்லும்' என்பதை கல்லில் செதுக்க, உறுதியேற்போம்;  உழைத்து ஈட்டும் வெற்றியை தி.மு.க.வின்மூலம் மதவெறி மண்ணல்ல திராவிடம்; தமிழகம் சமூகநீதியின் வற்றாத ஊற்று, வறளாத ஜீவநதி என்பதை உலகறிய உறுதியேற்போம்!  ஒரே இலக்கு - திராவிடம் வெல்லும் -பெரியார் தத்துவம் அதைச் சொல்லும்! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஒப்பாரும் மிக்காருமிலா நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன் உடலால் நம்மை விட்டுப் பிரிந்து 47 ஆண்டுகள் உருண் டோடிவிட்டன!

‘மானமிகு' பட்டம் கொடுக்கும் பகுத்தறிவுப் பல்கலைக் கழகம்

அவர் புதைக்கப்பட்டவராக இல்லாத தத்துவத் தலைவரானதால், விதைக்கப்பட்ட வித்தகராகி, வீரியத்துடன் அவ்விதை முன்னிலும் வேகமான வளர்ச்சியைக் காணுகிறோம். உலகத்திற்கே ஒளியூட்டி வழிகாட்டும் லட்சியச் சுடரை பலதரப்பட்டவர்களும், பற்பல நாடுகளிலும் ஏந்திக்கொண்டு, தங்களது லட்சியப் பயணத்திற்குத் துணையாய்க் கொள்கின்ற நிலை - பெரியார் என்பது அறிவுப் புரட்சி, சுயமரியாதைப் பாடம் சொல்லி ‘மானமிகு' பட்டம் கொடுக்கும் ஒரு பகுத்தறிவுப் பல்கலைக் கழகம் என்பதை உலகம் கண்டு வியந்து வருகிறது!

எப்படியாவது அந்த ஆலமரத்தை சாய்த்திட காவிகளின் புழுதிப் புயல், சில அரசியல் அடிமைகளின் முதுகில் சவாரி செய்கிறது; மூச்சைப் பறிக்க முனைந்து, மூக்குடைப்பட்டு, வருகிறது - பல வாடகைக் குதிரைகளை சவாரிக்கு அழைத்து களத்தில் நிற்க கச்சை கட்டுகின்றது.

மின்மினிப் பூச்சுகளை வைத்து மின்சாரத்தை தோற்கடிக்க எண்ணும் பேதமை

எத்தனையோ சுனாமிகளைக் கண்டு, அசையாமல் நிற்கும் இந்த லட்சியத்தின் ஆணிவேர்பற்றி அறியாத அரசியல் ஆணவக்காரர்களது திட்டம் - மின்மினிப் பூச்சுகளை வைத்து மின்சாரத்தைத் தோற்கடிக்க எண்ணும் பேதமை என்பதை உலகுக்குக் காட்ட உன்னதமான ஓர் அரிய வாய்ப்பு தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 மூலம் வருகிறது.

வரலாறு திரும்பும் என்று காட்டுவோம்!

வரலாறு திரும்பும் - 1971 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பெரிய பெரிய தலைவர்களின் கூடா நட்பும், பார்ப்பனர்களின் இடையறாத விஷமப் பிரச்சாரமும் பலமான புயல்போல் வீசிய நேரத்தில்கூட, திராவிடம் பெருஉரு (விஸ்வரூபம்) கொண்டு எழுந்து, முன்பு எப்போதும் தி.மு.க. அணிக்குத் தராத வெற்றியைத் தந்த அந்த வரலாறு திரும்பும் என்று காட்டுவோம்!

திராவிடம் வெல்லும் -

பெரியார் தத்துவம் அதைச் சொல்லும்!

‘திராவிடம் வெல்லும்' என்பதை கல்லில் செதுக்க, உறுதியேற்போம்;  உழைத்து ஈட்டும் வெற்றியை தி.மு.க.வின்மூலம் மதவெறி மண்ணல்ல திராவிடம்; தமிழகம் சமூகநீதியின் வற்றாத ஊற்று, வறளாத ஜீவநதி என்பதை உலகறிய உறுதியேற்போம்!

ஒரே இலக்கு - திராவிடம் வெல்லும் -

பெரியார் தத்துவம் அதைச் சொல்லும்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

24.12.2020

திங்கள், 4 ஜனவரி, 2021

திராவிட மாணவர் கழக மண்டல புதிய பொறுப்பாளர்கள்

 திராவிட மாணவர் கழக மண்டல புதிய பொறுப்பாளர்கள் 

மண்டலம் பெயர் 
சென்னை வ.வேலவன் 
காஞ்சிபுரம் மோ.பகுத்தறிவாளன் வேலூர் க.வெங்கடேசன் 
தருமபுரி மா.செல்லதுரை 
கடலூர் ஆர்.பி.பண்பாளன் விழுப்புரம் த.பகவான்தாஸ் 
சேலம் இதமிழர் தலைவர் 
ஈரோடு தா.சிவபாரதி 
கோவை மு.ராகுல் 
திருச்சி க .சசிகாந்த் 
அரியலூர் செ.வெற்றிசெல்வன் தஞ்சை ச.சற்குணம் 
திருவாரூர் அ.ஜெ.உமாநாத் புதுக்கோட்டை இரா.குமார் சிவகங்கை அ.பிரவின் முத்துவேல் திண்டுக்கல் வி.சு.பெரியார் மணி மதுரை சு.சித்தார்த் 
நெல்லை அ.வ.சவுந்தரபாண்டியன் 

திராவிட மாணவர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் 
தஞ்சாவூர் 
தலைவர் இரா .கபிலன் 
செயலாளர் ஜெ.மானவீரன் அமைப்பாளர் ரா.மகேந்திரன் 

திருச்சி 
தலைவர் ந.கண்ணன் 
செயலாளர் ஆ . அறிவுசுடர் 
அமைப்பாளர் க.அயாழினி 

பட்டுக்கோட்டை 
தலைவர் சு.ரஞ்சித்குமார் அமைப்பாளர் கே.நாடிமுத்து க.ரூபன் 

திருவாரூர் 
தலைவர் எம் . கோபிநாத் 
செயலாளர் ஏ . அருண்பிரபாகரன் அமைப்பாளர் மு.க.ஹரிணி 

தலைமை நிலையம் , 
திராவிடர் கழகம்