இந்தப் பாடத் திட்டங்களை தெருத்தெருவாக கொளுத்தவேண்டும்!
சென்னை சிறப்புக் கூட்டத்தில் வைகோ போர் முழக்கம்
சென்னை, ஜூன் 13- குலக்கல்வி திட்டத்தைவிட மோசமானது மத்திய பி.ஜே.பி. அரசு கொண்டுவரத் துடிக்கும் குருகுலக் கல்வி. சி.பி.எஸ்.இ. பாடத் திட்டமும் நமக்குத் தேவையில்லாதது - இவற்றை தெருத் தெருவாகக் கொளுத்தவேண்டும் என்றார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள்.
”குருகுலக் கல்வி என்னும் பெயரால் மீண்டும் குலக்கல்வித் திட்டமா?”
6.6.2018 அன்று மாலை வடசென்னை மாவட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில், சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் குருகுலக்கல்வி என்னும் பெயரால் மீண்டும் குலக்கல்வித் திட்டமா? எனும் தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உரையாற்றினார்
அவரது உரை வருமாறு:
குருகுலக் கல்வி எனும் பெயரால், குலக்கல்வித் திட்டத் தைவிட கொடுமையான அநீதியைத் திணிக்க முயன்றுவிட்ட மத்திய அரசைக் கண்டித்து, கருப்புடை தரித்தோர் உண்டு கொடுமையை நறுக்கியே திரும்பும் வாட்கள் என்ற உணர் வோடு, சரியான வேளையில், போர் முரசு ஒலிக்கின்ற இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதற்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கின்ற தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் எனது ஆருயிர் அண்ணன் மானமிகு வீரமணி அவர்களே,
இணைப்புரை நிகழ்த்திய திராவிடர் கழக துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
வரவேற்புரை நிகழ்த்திய வடசென்னை மாவட்டத் தலைவர் சகோதரர் வழக்குரைஞர் குமாரதேவன் அவர்களே,
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் இனிய சகோதரர் அன்புராஜ் அவர்களே,
திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் மானமிகு கும ரேசன் அவர்களே, அமைப்புச் செயலாளர் மானமிகு பன்னீர் செல்வம் அவர்களே, மானமிகு ஒளிவண்ணன் அவர்களே, திராவிடர் கழகத் தோழர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களே, விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் செல்வம் அவர்களே, வருக தந்திருக்கின்ற தமிழ்ப் பெருமக்களே, அன்புடைய சகோதரிகளே, இல்லங்களிலிருந்து எங்கள் உரையை செவிமடுத்துக் கொண்டிருக்கின்ற பேரன்பிற்குரிய தாய்மார்களே, பெரியோர்களே, வாலிப வேங்கைகளே, மாணவச் செல்வங்களே, பத்திரிகையாளர்களே, தொலைக்காட்சி ஊடக நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்க்கழகமான திராவிடர் கழகத்தினுடைய கட்டளை
இடி இடித்தாலும், மின்னல் கீற்றுகள் வானிலே பளிச் சிட்டாலும், பெருமழை கொட்டினாலும், அறிவிக்கப்பட்ட கூட்டத்தை நடத்தியே தீருவோம் என்று சொல்லக்கூடிய உறுதி, அறிவாசான் தந்தை பெரியார் காலத்திலிருந்து நிரூபிக்கப்பட்டுக் கொண்டே வருவதால், இந்த நிகழ்ச்சியும் நடக்கிறது. இன்று மாலையில் நான் கோவை செல்வதாக இருந்தேன். அண்ணன் வீரமணி அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வரச் சொன்னபொழுது, மறுமலர்ச்சி தி.மு.க.விலிருந்து முன்னணி தலைவர் ஒருவரை அனுப்புகிறேன் என்று சொன்னபொழுது, இல்லை, நீங்கள்தான் வந்து கலந்துகொள்ளவேண்டும் என்றபொழுது, தாய்க்கழகத்தினுடைய, அனைத்துக்கும் தாய்க்கழகமான திராவிடர் கழகத்தினுடைய கட்டளை என்று நான் ஏற்றுக்கொண்டு, இன்று இரவு பயணத்தை, நாளை காலை பயணமாக மாற்றிக்கொண்டு இங்கே நான் வந்திருக்கிறேன்.
அண்ணன் அவர்களே, முதன்முதலாக உங்களுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு முன்னால், நீங்கள் இருதய வலி ஏற்பட்டு, மருத்துவமனையில் இருந்தபொழுது அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களோடு வந்து நான் பக்கத்தில் நின்று பார்த்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று கருதுகிறேன்.
பலமுறை மருத்துவர்களுடைய கத்தி உங்கள் இருதயத் திலே பட்டிருக்கிறது; உயிர் போவதைப்பற்றி நான் கவலைப் படவில்லை என்றீர்கள்; அறிவாசான் பெரியார் காலத்தில், காமராசர் காலத்தில், அண்ணா காலத்தில் ஏற்படாத கொடு மைகளும், ஆபத்துகளும், அபாயங்களும் நம்மை சூழ்ந் திருக்கின்ற காரணத்தினால், நீங்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழவேண்டும்.
குலக்கல்வித் திட்டத்தைவிட கொடுமையானது குருகுலக் கல்வி
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, நான் ஒரு வழக்குரைஞர் என்கிற முறையில் சொல்கிறேன், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையெல்லாம் எடுத்துச் சொல்லி, இப்படி வாதிடு, இப்படி வாதிடு என்று சொன் னால்தான், ஒரு வழக்குரைஞன் சரியாக வாதிட முடியும். அப்படி எங்களுக்கு ஆவணங்களை, கோப்புகளை சேகரித்து, உங்களுடைய ஆங்கில புலமையாலும், அறிவாற்றலாலும், எங்கெங்கே கேடுகள் வருகிறது என்று - நாங்கள் பரபரப்பான அரசியலில் ஓடிக்கொண்டே இருக்கிறோம் - நீங்கள் எங்களுக்குச் சுட்டிக்காட்டுகிறபொழுதுதான், இப்படியொரு ஒரு ஆபத்து வந்திருக்கிறதா? அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் குருகுலக் கல்வியை தீர்மானமாக கொண்டு வந்த நேரத்தில், எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இது குலக்கல்வித் திட்டத்தைவிட கொடுமையானது.
அண்ணன் மானமிகு வீரமணி அவர்கள் கொண்டு வந்திருக்கக்கூடிய இந்த தீர்மானத்தை எழுத்து பிசாகாமல் அப்படியே அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவோம் என்று திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் என் ஆருயிர் சகோதரர் மானமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள்.
அனைவரும் ஆர்.எஸ்.எஸ். குருகுலத்திலிருந்து வந்தவர்கள்
குருகுலக் கல்வியினுடைய கொடுமைகளைப்பற்றி அண்ணன் வீரமணி அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.
2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடியின் ஆட்சி மத்தியில் அமைந்தவுடன், நம்மீது தொடுக்கப்பட்ட அஸ்திரம் - சமஸ்கிருத கல்வி வாரியம் என்று 2015 ஆம் ஆண்டு அறிவித்து, அதற்கு ஒரு ஆணையம் அமைத்து, அதில் 13 பேரை நியமித்தார். அவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். குருகுலத்திலிருந்து வந்தவர்கள். தேர்தல் ஆணையராக இருந்த கோபால்சாமி அவர்களை அந்த ஆணையத்திற்குத் தலைவராக நியமித்தார்கள்.
அவர்களுடைய பரிந்துரையின்படி, யுனெஸ்கோ நிறுவனத் திற்கு, சமஸ்கிருதத்தை அவர்கள் வளர்ப்பதற்கு 300 கோடி ரூபாய் வழங்கவேண்டும் என்று அறிவித்து, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுவிட்டதாக நான் அறிகிறேன்.
சர்வாதிகாரி நாட்டில்கூட, இட்லரின் சர்வாதிகாரத்தில்கூட...
ஒன்றல்ல, இரண்டல்ல - அவர்களின் சமஸ்கிருத பாடங்களை அனைத்துக் கல்விச் சாலைகளிலும் கொண்டு வரவேண்டும்; தகவல் ஊடகங்களில் கொண்டுவரவேண்டும்; மின்னணு பொறிகளில் கொண்டு வரவேண்டும். இந்த சமஸ்கிருதம்தான் இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் இடம்பெறவேண்டும். இந்தியில் இலக்கணமும் கிடையாது; இலக்கியமும் கிடையாது. அதைப்பற்றி நாம் பேசவேண்டியதில்லை. இது செத்துப்போன மொழி சமஸ் கிருதம். மீண்டும் எங்களை சாகடிக்கத் தூண்டாதே! எங்கே எடுத்துக்கொண்டு வந்து திணிக்கிறாய்! சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்று வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு, அவரே மதிப்பெண் போட்டுக்கொண்டு 10 ஆம் வகுப்பில் சேரலாம் என்றால், உலகத்தில் வேறு எந்த நாட்டிலும், சர்வாதிகாரி நாட்டில்கூட, இட்லரின் சர்வாதிகாரத்தில், தர்பாரில்கூட அவர் இதை நிறைவேற்றியதில்லை.
யூதர்களை ஒழிக்கவேண்டும் என்கிற விதத்தில், நேஷ னல் சோசலிசம் என்று சொல்லிக் கொண்டிருந்தவன், நான் ஒரு ஆரியன் என்று சொல்லிக் கொண்டிருந்தவன் - அவன்கூட இப்படிப்பட்ட கல்வி முறையை ஜெர்மனியில் கொண்டுவரவில்லை.
எனவே, இந்த சமஸ்கிருத மொழி என்பதைத் திணிக்க முற்பட்டிருக்கக் கூடிய வேளையில்தான், நம்முடைய ஒடுக் கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட சகோதரர்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மை மக்கள் - நம்முடைய பிள்ளைகள் இனி டாக்டராக முடியாது; எம்.பி.பி.எஸ்.சில் சேர முடியாது. 91.1 சதவிகிதம் பள்ளி இறுதித் தேர்வில் தமிழகத்தில் மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். வட மாநிலங்களில் 60 சதவிகிதம், 65 சதவிகிதம்தான் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆனால், மருத்துவக் கல்லூரி நீட் தேர்வில் நாம் 34 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டோம்.
அனிதாவும், பிரதீபாவும் ஏன் தன்னுயிரை
அனிதா ஏன் தன்னுயிரை முடித்துக்கொண்டாள்? பிரதீபா ஏன் தன்னை சாகடித்துக் கொண்டாள்? அனிதாவிற்கு பள்ளி இறுதி வகுப்பில், மூட்டைத் தூக்கும் தொழிலாளியின், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தலித் தொழிலாளியின் மகள் 1,176 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். 1,176 மதிப்பெண் களைப் பெற்ற பெண்ணுக்கு மருத்துவப் படிப்பு படிப்பதற்கு, நீட் தேர்வால் இடம் கிடைக்கவில்லை. இந்த உலகில் நான் வாழ விரும்பவில்லை.
மத்திய அரசுக்கு குற்றேவல் புரிகிற எடுபிடி அரசு
ஒரு கூலித் தொழிலாளி வீட்டில், குடிசை வீட்டில், தாய், தந்தைக்கு உதவியாக வேலை செய்துகொண்டே படித்து, 1,176 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார். நான் ஒரு டாக்டராகி சேவை செய்யவேண்டும்; என் கனவு கானல் நீராகிவிட்டதே, என்னை நானே அழித்துக்கொள்கிறேன் என்று தன்னை தானே அழித்துக்கொண்டாள். இந்த சாவிற்குக் காரணம் மத்திய அரசு. மத்திய அரசுக்கு குற்றேவல் புரிகிற எடுபிடி அரசு தமிழ்நாட்டில் நடைபெறுகிறது.
பிரதீபா 1125 மதிப்பெண் பெற்றிருக்கிறார். கொடுமை என்ன தெரியுமா? கடந்த ஆண்டு நீட் தேர்விலும் மதிப்பெண் பெற்றாள். ஆனால், அரசு கல்லூரியிலே அவளால் சேர முடியவில்லை. தனியார் கல்லூரியில் சேருவதற்கு அவர்களிடம் பணம் இல்லை. நான் அடுத்த ஆண்டு, அரசு கல்லூரியில் சேருவதற்குரிய மதிப்பெண்களைப் பெற்றுவிடுவேன் என்று சொன்னாள். அய்யோ, செத்துப் போனாள்.
டாக்டர் தணிகாசலத்தைவிடஇருதயசிகிச்சையில்
சிறப்பான டாக்டர் இந்தியாவில் உண்டா?
தமிழகத்தில் உள்ள டாக்டர்களைவிட உயர்ந்த டாக்டர்கள் உலகத்தில் இருக்கிறார்களா? டாக்டர் தணிகாசலத்தைவிட இருதய சிகிச்சையில் சிறப்பான டாக்டர் இந்தியாவில் உண்டா? நான் இப்படி பட்டியலை வெளியிட முடியும். இவர்கள் எல்லாம் நம்முடைய பள்ளியில் இறுதித் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தவர்கள்.
ஒட்டுமொத்தமாக வடபுலத்தில் இருப்பவர்களைக் கொண்டு வந்து திணித்து, எங்கள் ஏழை, எளிய வீட்டுப் பிள்ளைகளை, தாழ்த்தப்பட்ட வீட்டுப் பிள்ளைகளை, பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துப் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்வி என்பதே கிடையாது. பல் மருத்துவக் கல்லூரிகளில் இடம் இல்லை என்கிறார்கள். இதை பொறியியல் கல்லூரிகளிலும் கொண்டு வரப் போகிறோம் என்கிறார்கள்.
பகைவர்களுடைய கவசங்களை உடைத்துத்
தகர்க்கின்ற வாளாக இருக்கும்
அதனால்தான் சொன்னேன், பெரியார் காலத்தில் இவ் வளவு பெரிய ஆபத்து வரவில்லை; காமராசர் காலத்தில் இவ் வளவு பெரிய ஆபத்து வரவில்லை; அண்ணா காலத்தில் இவ்வளவு பெரிய ஆபத்து வரவில்லை. ஆனால், அவர்களால் வார்ப்பிக்கப்பட்ட நாங்கள் இருக்கிறோம். அண்ணன் வீரமணி அவர்களே, உங்கள் வாயால் சொன்னீர்கள், திராவிட இயக்கத்தின் போர் வாள் என்று - வழக்கமாக நான் எந்தப் பட்டத்தையும் ஏற்றுக்கொள்பவன் அல்ல - ஆனால், உங்கள் வார்த்தைப்படி இந்த வாள் உறைக்குள் இனி போகாது; இந்த வாள் பகைவர்களுடைய கவசங்களை உடைத்துத் தகர்க்கின்ற வாளாக இருக்கும். லட்சியங்களுக்காக வாழ்வேன். தமிழ் இனத்தின் உயர்வுக்கு வாழ்வேன். தன்மானத்திற்காக, தமிழர்களின் உயர் வுக்காக, சமூகநீதி தழைப்பதற்காக, மதச்சார்பின்மை என்ற கொள்கையை காப்பதற்காக, இந்துத்துவாவின் சக்திகளின் இடுப்பை உடைத்து, பொடிப்பொடியாக நொறுக்கி, தூள் தூளாக ஆக்குவதற்காக நான் வாழ்வேன்.
இடது பக்கத்தில் அண்ணன் வீரமணி - வலது
பக்கத்தில் சகோதரர் தளபதி ஸ்டாலின்
54 ஆண்டுகள் ஓடி மறைந்தவிட்டன என்னுடைய பொதுவாழ்க்கை. ஆனால், நான் இன்றைக்கு மன மகிழ்ச்சியோடு இருக்கிறேன். இடது பக்கத்தில் அண்ணன் வீரமணி - வலது பக்கத்தில் சகோதரர் தளபதி ஸ்டாலின். நான் மனமகிழ்ச்சியோடு இருக்கிறேன். திராவிட இயக்கமாக இருக்கிறோம்.
ஆனால், எனக்கு வருகிற வேதனை என்னவென்றால், இந்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தினுடைய புகழ்மிக்க, நேர்மை தவறாத, குன்றிமணி அளவும் குறை காண முடியாத, உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், லோகூர், குரியன் ஜோசப் ஆகிய நான்கு நீதிபதிகளும், ஜஸ்டீஸ் செல்லமேஸ்வர் தலைமையில் கூடி, பாசிச பாதையில் இந்த நாடு போகிறது என்றார்கள்.
நீதியைக் கொன்று குழிதோண்டி புதைத்துவிட்டார்
இப்படி இந்திய நாட்டின் வரலாற்றில் நீதிபதிகள் சொன்ன வரலாறு கிடையாது. நான்கு நீதிபதிகளும் புகழ்மிக்க நீதிபதிகள். தலைமை நீதிபதியாக இருக்கிறாரே, நீதிபதி மிஸ்ரா. நான் குற்றம்சாட்டுகிறேன், காவிரி பிரச்சினையில், தமிழகத்திற்கு வஞ்சகமும், கேடும் செய்து நீதியை குழிதோண்டி புதைத்தவர் இந்திய நாட்டினுடைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. ஏழு தொலைக்காட்சிகள் என்னுடைய உரையினைப் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. அய்.பி. ஒரு பக்கத்தில் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ரிப்போர்ட்டை அனுப்புங்கள். இந்திய நாட்டினுடைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நீதியைக் கொன்று குழிதோண்டி புதைத்துவிட்டார் காவிரி பிரச்சினையில்.
I accused the Cheif Justice of the Supreme Court of India who has betrayed the tamils on Cauvery issue buried justice.
இப்படியே போடு - தமிழில் சொன்னால் எங்களுக்குப் தெரியாது என்பீர்கள், அதனால்தான் ஆங்கிலத்தில் சொன் னேன்.
பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தது உண்டா?
இந்தக் கட்டத்தில்தான் சகோதரர்களே, தாத்ரியிலே ஒரு முகமது சகோதரன் முகமது அக்லக்,104 டிகிரி டைபாய்ட் காய்ச்சலில் படுத்துக் கிடந்தார். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. பசு மாட்டைக் கொன்று இறைச்சி வைத்திருக்கிறார் என்று அவரை அடித்தே கொன்றனர் பாவிகள். பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தது உண்டா? காஷ்மீரிலே கது வாவில், ஆசீபா என்கிற ஒரு முசுலிம் பெண். சின்னஞ்சிறு 8 வயது பெண் - கோவிலின் கர்ப்பக்கிரகத்திற்குப் பின்னால் நாசமாக்கப்பட்டாள். யார் கோவிலைப் பழிப்பது - நாங்களா?
டாக்டர் கலைஞர் சொன்னதைப்போல, பராசக்தி படத்தில், கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்; கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடிய வர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன், அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேசமாகிவிட்டது என்பதை வெளிப்படுத்துவதற்காக.
இன்றைக்கு ஆசீபா என்ற பெண் கோவில் கர்ப்பக் கிரகத்திற்குப் பக்கத்தில் நாசமாக்கப்பட்டுவிட்டாள். கொல்லப்பட்டு விட்டாள். கண்டனம் தெரிவித்தாரா மோடி?
அதைவிட கொடுமை உத்தரப்பிரதேசத்தில், குல்தீப் சிங் பாரதீய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர், 17 வயது பெண்ணை நாசப்படுத்திக் கொன்று விட்டான். அந்தப் பெண்ணின் தந்தை, புகார் கொடுத்தார் காவல் நிலையத்தில். புகார் கொடுத்த நான்காவது நாள் அவர் கொல்லப்பட்டார்.
உனாவிலே, தலித் இளைஞர்கள் கட்டி வைத்து சித்திரவதை செய்யப்பட்டார்கள். கல்புர்கி கொல்லப்பட்டார் கருநாடகத்தில். சிந்தனையாளர் கோவிந்த் பன்சாரே கொல்லப்பட்டார். நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டார் - இவர்கள் எல்லாம் பொதுவுடைமை சித்தாந்தத்திலே வளர்ந்தவர்கள். எல்லாவற் றையும்விட மிகக் கொடுமை - கவுரி லங்கேஷ் - சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் - மதச்சார்பற்ற தன்மை யைக் காப்பதற்காக போராடியவர் - இந்துத்துவா சக்திகளின் முகத்திரையைக் கிழித்தவர். வீட்டு வாசலிலே வைத்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். லங்கேஷ் என்ற பத்திரிகை ஆசிரியரான கவுரி லங்கேஷ்.
சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை - தெருத்தெருவாகப் போட்டு
தீ வைத்துக் கொளுத்தவேண்டும்
ஆக, படுகொலையாளர்கள் இவர்கள் -சிந்தனை யாளர்களை கொலை செய்கிறார்கள். எதிர்ப்பவர்களை கொலை செய்கிறார்கள். கோட்சேவுக்கு சிலை வைக்கவேண்டும் என்கிறார்கள். கோவில் கட்டுவோம் என்கிறார்கள். இதையெல்லாம்விட கொடுமை, இந்த ஆண்டு பாடத் திட்டம் - சி.பி.எஸ்.இ. மத்திய இடைநிலைக் கல்வித் திட்டத்தில், 12 ஆம் வகுப்புப் பாடத்தில், நரேந்திர மோடியைப்பற்றி ஒரு அத்தியாயம் இருக்கிறது. அவர் தேர்தல்களில் வெற்றி பெற்ற கீர்த்திகளைப் பாராட்டி ஒரு அத்தியாயம் இருக்கிறது. அவர் ஒரு பெரிய மகான் என்ற வர்ணனை இருக்கிறது. இந்துத்துவா என்ற கொள்கைக்கு விளக்கம் இருக்கிறது. தீ வைத்துக் கொளுத்தவேண்டும் இந்த சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை - தெருத்தெருவாகப் போட்டு தீ வைத்துக் கொளுத்தவேண்டும்.
மகாத்மா காந்தியின் படுகொலைக்குக் காரணமானவன் சாவர்க்கர்
மகாத்மா காந்தியார் பெயர் அதில் கிடையாது; பண்டிதர் நேரு பெயர் அதில் கிடையாது. வீரசவார்க்கர், ஒரு காலத்தில் லண்டனில் இருந்தபொழுது, விடுதலைக்குப் போராடி இருக் கலாம். பிரான்சு நாட்டு ஓரத்தில், தப்பிச் செல்ல முயன்றபொழுது கைது செய்யப்பட்டு இருக்கலாம்; அந்தமான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருக்கலாம்; சுதந்திரப் போர் எரிமலை என்ற புத்தகத்தை எழுதியிருக்கலாம். எட்டப்பன் முதலில் நல்லவனாக இருந்தான், அவன் துரோகம் செய்த பிறகு, அந்தத் துரோகத்தை காறி உமிழ்கிறோம் அல்லவா! அதைப்போல, வெள்ளைக்கார அரசாங்கத்திடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவன்தான், வீரசாவர்க்கர் என்ற சாவர்க்கர். மகாத்மா காந்தியின் படுகொலைக்குக் காரணமானவன் சாவர்க்கர்.
நாங்கள் மத சமயங்களுக்கு விரோதியல்ல. அய்யா பெரியாருடைய வழியில், நாங்கள் சுடரேந்தி வந்தாலும்கூட, இங்கே என் உரையைக் கேட்டுக்கொண்டிருக்கின்றவர்கள் அனைவரும் நாத்திகம் பேசுகிறவர்கள், இவர்கள் எல்லோரும் கடவுள் விரோதிகள் என்று நினைக்கக்கூடாது.
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
பெரியாரிடமே கேட்டார்கள், கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்கிறீர்களே, கடவுள் நேரே வந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? என்று.
உடனே பெரியார் சொன்னார், இருக்கார் என்று சொல்லிவிட்டுப் போகிறேன் என்றார்.
தேவாரம் ஒலிக்கட்டும், திருவாசகம் ஒலிக்கட்டும், தமிழ்ப் பண்கள் ஒலிக்கட்டும், சோமனுக்கு ஒரு நாள் மனைவியாக இருந்துவிட்டு, கந்தர்வனுக்கு ஒரு நாள் மனைவியாக இருந்துவிட்டு, அக்னிக்கு ஒரு நாள் மனைவியாக இருந்து விட்டு, இப்பொழுது போனால் போகுது என்று உனக்கு மனைவியாக்குகிறேன் என்று சொல்லும் சமஸ்கிருத மொழிக்கு அர்த்தம் புரிந்தால், செருப்பாலடித்து கையை உடைத்துவிடுவார்கள்.
நமக்கெல்லாம் தெரியாததை அய்யா
பெரியார் அவர்கள் கண்டுபிடித்திருக்கிறாரே!
சுயமரியாதைத் திருமணம் தந்தை பெரியார் கொண்டு வந்தார் என்றால், அதை சட்டமாக்கும்பொழுது, அண்ணா அவர்கள் டபுள் எம்.ஏ. பட்டம் பெற்றவர். சட்டத்துறை செய லாளர்கள் எல்லாம் அந்த சட்டத்திற்கான பில்லை அய்யாவிடம் கொண்டு போய் காட்டுகிறார்கள்.
and tying of Thali - தாலியைக் கட்டுவதும் சேர்த்து என்று அதில் இருக்கிறது. ஆங்கிலத்தில்தான் அந்த டிராப்ட் இருக்கிறது.
அய்யா அவர்கள் அந்த அதிகாரியைப் பார்த்து,and tying of Thali என்று சொன்னால், தாலி கட்டவில்லை என்றால், அந்த மணமுறை செல்லாது என்று ஆகிவிடுமே! என்றார்.
இந்தத் தகவலை அண்ணா அவர்களிடம் சொன்னதும், அண்ணா அவர்கள், வீரமணி, நான் எம்.ஏ., படித்திருக்கிறேன்; நீ எம்.ஏ.,பி.எல்., படித்திருக்கிறாய். சட்டத்துறை செயலா ளர்கள் எல்லாம் சட்ட நுண்ணறிவு பெற்றவர்கள். நமக் கெல்லாம் தெரியாததை அய்யா பெரியார் அவர்கள் கண்டு பிடித்திருக்கிறாரே என்றாராம்.
சட்டக்கல்லூரி விடுதி விழாவில் தந்தை பெரியார்!
சட்டக்கல்லூரி விடுதியின் ஆண்டு விழாவில் உரையாற்ற தந்தை பெரியார் அவர்களை அழைத்திருந்தோம். சமுதாய சீர்திருத்தம் என்ற தலைப்பில் பேச ஆரம்பித்தார். கல்லூரிக்குச் செல்லாத கிழவனை நீங்கள் அழைத்துக் கொண்டு, எனக்கு இவ்வளவு பெரிய கவுரவத்தைக் கொடுத்திருக்கிறீர்கள் என்று பேசினார். 20 நிமிடங்களில் மின்சாரம் நின்று போனது; நாங்கள் ஜெனரேட்டர் வைக்கவில்லை.
நாங்கள் எல்லாம் பயந்துகொண்டே இருந்தோம் ஏனென்றால், அது விடுதி நாள் என்பதால், மாணவர்கள் விசில் அடித்து கலாட்டா செய்வார்களோ என்பதால்தான்.
15 நிமிடங்களும் ஒரு சத்தமும் இல்லாமல் கடந்தது. மின்சாரம் வந்து வெளிச்சம் வந்தவுடன், பெரியார் பேச ஆரம்பித்தார். சட்டக் கல்லூரி பையன்கள் மிகவும் முரட்டுப் பையன்கள் என்றார்கள். ஆனால், கல்லூரி காணாத இந்தக் கிழவனுக்காக இந்த 15 நிமிடமும் நீங்கள் அமைதி காத்தீர்களே, நான் அதை மறக்கமாட்டேன் என்று சொன்னார்.
அந்த நிகழ்வுதான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. கடைசி நிமிடம் மூச்சு அடங்குகிற வரை தியாகராயர் நகரில், அறிவாசான் பெரியார் அவர்களே, நீங்கள் என்ன முழங்கினீர்களோ, அது எங்கள் இருதயத்திற்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அந்த முழக்கத்தை நாங்களும் எழுப்பி, அந்தக் களத்தை தயார்படுத்துகிற ஒரு நாள் வரும் என்கிற நம்பிக்கையில் நாங்கள் இருப்போம்.
உலக பொது மன்னிப்பு ஸ்தாபனம் - அம்னெஸ்டி இன்டர்நேசனல் சொல்லியிருக்கிறது - இந்தியாவிலே மத சகிப்பின்மை ஆபத்தாக வளர்ந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு பெரிய ஆபத்து நம்மை சுற்றி வளைக்கிறது என்று பாருங்கள்.
ஆக, இத்தனை நிலைமைகளும் நடக்கிறபொழுது, பகவத் கீதையை தேசிய நூலாக்க வேண்டும் என்கிறாய். கீதையைப்பற்றி ஆசிரியர் அண்ணன் அவர்கள் எழுதிய புத்தகத்தை படிக்கச் சொல்லி அவர்களுக்கு அனுப்பவேண்டும்.
திருக்குறளைவிட உயர்ந்த நூல் உலகத்தில் வேறொன்று இருக்கிறதா? திருக்குறள் உலகப் பொது மறை. ஆனால், ஒருவகையில், இன்றைக்கு நான் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மத்தியில் உள்ள ஆட்சி அகற்றப்பட்டால், இந்த நாட்டின் ஒருமைப்பாடு நிலைக்கும். கொடுமையான, அக்கிரமமான ஆட்சி நீடிக்காது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிகபட்சமாக 145 இடங்களைத்தான் பெறும் என்பது என்னுடைய கணக்காகும்.
மேகலாயா நடைபெற்ற தேர்தலுக்காக 36 ஆயிரம் கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறார்களாம்; ஒரு ஓட்டிற்கு 50 ஆயிரம் கொடுத்தார்களாம்.
தமிழகத்தில் உள்ள முதலமைச்சர், துணை முதலமைச்சர்மீதெல்லாம் பிரச்சினை இருப்பதினால், இவர்களை வளைத்துப் போட்டுக்கொண்டு, அ.தி.மு.க. எதிர்ப்பு ஓட்டுகளையெல்லாம் தி.மு.க. அணிக்குப் போகாமல் தடுப்பதற்காக என்னென்ன உபாயங்களை நீங்கள் செய்ய முனைகிறீர்களோ - சாணக்யத்தனத்தினை நீங்கள் செய்கிறீர்கள்.
அ.தி.மு.க.வின் எதிர்ப்பு ஓட்டுகள் - தி.மு.க. அணிக்குப் போகக்கூடாது - இதற்காக நீங்கள் புதிய புதிய உத்திகளை கையாளுகிறீர்கள்.
பாஷாணத்தில் புழுத்த புழு என்று அண்ணா ஒருமுறை சொன்னார். யாரிடம் வந்து உங்கள் வேலையைக் காட்டுகிறீர்கள். இவர்கள் தப்பித் தவறி இன்னொருமுறை மத்தியில் ஆட்சிக்கு வந்தார்களேயானால், இந்தியா ஒன்றாக இருக்காது. அதிலொன்றும் சந்தேகம் வேண்டாம்.
நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க முனைபவர்கள் - உபகண்டத்தை ஒரு நாடாகவே தொடர்ந்து நீடிக்க விரும்புகிறவர்கள் - இந்துக்களும், இசுலாமியர்களும், கிறித்துவர்களும், சீக்கியர்களும், பவுத்தர்களும், சமணர்களும், பகுத்தறிவாளர்களும் எல்லோரும் இணைந்து கரம் கோர்த்து வாழ முடியும் என்ற நம்பிக்கை உடையவர்கள்.
ஒருசேர களத்தில் திரளவேண்டிய காலகட்டம் வந்திருக்கிறது. தெற்கு திசை தமிழ்நாடு அதற்கு வழிகாட்டட்டும். இந்தக் குரல் எங்கும் ஒலிக்கட்டும்.
சமூகநீதியைக் கொண்டு வந்த பெரியாரை வடநாட்டில் மதிக்கிறார்கள். பிஷம்பர்நாத் பாண்டே என்பவர் மாநிலங்களவை வைஸ் சேர்மனாக இருந்தார். காங்கிரசு கட்சியில் பெரிய தலைவர். வயது 80-க்கு மேல் இருக்கும். நான் அப்பொழுதுதான் மாநிலங்களவைக்குச் சென்றிருந்தேன். சேர்மன் நாற்காலியில் அவர் அமர்ந்திருப்பார். எனக்கு ஏழு நிமிடம்தான் ஒதுக்கியிருப்பார்கள். நான் 10, 15 நிமிடம் பேசுவேன். பேச விடுவார்.
நான்கூட நினைப்பேன். நான் புதிய ஆளாயிற்றே! எனக்கு சட்டசபை பயிற்சியும் கிடையாது. நான் சென்ட்ரல் ஹாலில் வருகிறபொழுது, என்னை அழைத்தார். நான் அவரிடம் சென்றேன், உட்கார் என்றார்.
பெரியார் வீட்டிற்குச் சென்று மூன்று மாதம் பயிற்சி எடுத்துக்கொண்டுவா!
நான் ஏன் உனக்கு ஒவ்வொரு நாளும் பெல் அடிக்காமல் நேரம் கொடுக்கிறேன் தெரியுமா? என்றார்.
என்மேல் உங்களுக்கு ஏதோ ஒரு அன்பு என்றேன்.
காந்தியார் அவர்கள் சொன்னார், ஈரோட்டிலுள்ள பெரியார் வீட்டிற்குச் சென்று மூன்று மாதம் பயிற்சி எடுத்துக்கொண்டு வா என்றார். நான் 22 வயது இளைஞனாக, ஈரோட்டிற்கு வந்து, மூன்று மாதம் பெரியாரிடம் இருந்தேன். உன்னைப் பார்க்கும்பொழுதெல்லாம், பெரியாருடைய பேரன் போன்ற ஞாபகம் வருகிறது. அதற்காகத்தான் உனக்குப் பேசுவதற்கு அனுமதி கொடுக்கிறேன் என்றார்.
அதைக் கேட்டு நான் பூரித்துப் போனேன்.
பெரியாருக்கு - அண்ணா எழுதிய கடிதம்!
அண்ணா அவர்கள் அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கிலிருந்து எழுதுகிறார்கள்.
உடல் தேறி வருகிறது; குணம் பெற்று வருகிறது. ஆனால், களைப்பாக இருக்கிறது. கொஞ்சம் பசியின்மை இருக்கிறது. என்னை விமான நிலையத்தில் வழியனுப்ப வந்தபொழுது, உங்கள் முகத்தில் கலக்கத்தைக் கண்டேன். சமீபத்தில் நான் துறவியாகப் போய்விடுவேனோ என்று நீங்கள் எழுதிய கட்டுரையைப் பார்த்தேன் தந்தைக்குத் தனயன் - தலைவருக்குத் தலைமாணாக்கன் எழுதுகிறார்.
உலகத்தில் எந்த சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைக்காத வெற்றியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்று அண்ணா, பெரியாருக்கு எழுதுகிறார்.
அந்த வார்ப்புகள்தான் நாம் இருக்கிறோம். ஒரு உறுதியை எடுத்துக்கொள்ளவேண்டும். இன்றைய விடுதலையில் மிக அருமையான அறிக்கையை அண்ணன் அவர்கள் எழுதியிருக்கிறார். அதனை துண்டறிக்கையாக வெளியிட்டு, எல்லா இடங்களிலும் கொடுக்கவேண்டும்.
நீட்டை ஒழித்துக்கட்டவேண்டும். நீட் பிரச்சினைபற்றி பேசுவதற்கு ஒரு முதலமைச்சரையே சந்திக்க நேரம் ஒதுக்கமாட்டேன் என்கிறார் பிரதமர்.
உதாசீனப்படுத்தி விட்டீர்கள்!
தமிழ்நாட்டில் உள்ள ஏழரை கோடி மக்களின் பிரதிநிதிகளாக முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும், அனைத்துக் கட்சித் தலைவரும் பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கவேண்டும் என்று கேட்டால், மிஸ்டர் நரேந்திர மோடி, சந்திக்க முடியாது என்று மறுக்கின்ற அதிகார ஆணவத் திமிராக அல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்? ஏழரை கோடி மக்களை நீங்கள் உதாசீனப்படுத்தி விட்டீர்கள். அதனை என்றைக்கும் நாங்கள் மறக்கமாட்டோம்.
எனவே, மத்தியில் இப்பொழுது உள்ள அரசு மீண்டும் ஆட்சிக்கு வராது. வரக்கூடாது. மதச்சார்பின்மையைப் பாதுகாக்கின்ற ஆட்சிதான் வரவேண்டும். வரும்.
செக்குலரிசத்தையே பிரியாம்பிளிலிருந்து எடுத்துவிடவேண்டும் என்கிறார்கள்.
ஆனால், எல்லா இடங்களிலும் மரண அடி விழுந்து கொண்டிருக்கிறது தேர்தல்களில். ராஜஸ்தான் கைவிட்டுப் போய்விட்டது; மத்தியப் பிரதேசம் கைகழுவப் பட்டுவிட்டது. கருநாடகாவிலும் அடிவாங்கியிருக்கிறீர்கள்.
ஒரு மாநிலத்திலும் இனிமேல் நீங்கள் வெற்றி பெற முடியாது. ஆகவே, அத்தகைய முடிவை எடுத்துக்கொண்டு, இங்கே வந்திருக்கின்ற தோழர்கள் ஒவ்வொருவரும் 100 பேராக மாறவேண்டும்.
அய்யா பெரியாரின் கனவுகள் நனவாகும்
நம்முடைய களம் சமூகநீதியைக் காக்க, ஜனநாயகத்தைக் காக்க, மதச்சார்பின்மையை காக்க -நம்முடைய பிள்ளைகள் டாக்டர்களாக, என்ஜினியர்களாக, பல் மருத்துவர்களாக வருவதற்கு இந்த நீட் தேர்வு என்கிற இந்த நாசகார திட்டத்தை குப்பைத் தொட்டியில் கிழித்துப் போடுகிற நிலையை உருவாக்க - இந்த அரசு அகலும் - புதிய அரசு அமையும். அந்த அரசு திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் பங்கெடுத்து அமைகின்ற அரசாக இருக்கும். அய்யா பெரியாரின் கனவுகள் நனவாகும்.
எப்பொழுது அழைத்தாலும் வைகோ வருவான்!
அண்ணன் வீரமணி அவர்களே, எப்பொழுது அழைத்தாலும் வைகோ வருவான்; வைகோ மட்டுமல்ல, என் சகாக்களும், என் சகோதரர்களும் வருவார்கள். நாளைய போராட்டக் களத்திற்கு இங்கே டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் வந்திருக்கிறார், மாவட்டச் செயலாளர் ஜீவன் வந்திருக்கிறார், மாவட்டச் செயலாளர் கழகக் குமார் வந்திருக்கிறார், மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி வந்திருக்கிறார், மாவட்டச் செயலாளர் மகேந்திரன் வந்திருக்கிறார். இவர்கள் எல்லோரும் நாளை நடைபெறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின்முன் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவேண்டும் என்று கேட்டு அமைகிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உரையாற்றினார்.
- விடுதலை நாளேடு, 13.6.18