வியாழன், 25 அக்டோபர், 2018

மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி.தென்சென்னை -மயிலைப் பகுதி தோழர் பொறியாளர் ஈ.குமாரின் தந்தையார் இ.ஈஸ்வரமூர்த்தியின் 11ஆம் ஆண்டு (24.10.2018) நினைவுநாளையொட்டி ஈ.குமார் மற்றும் சகோதரிகள் ஈ.மீனாட்சி, மு.ராஜலெட்சுமி ஆகியோர் சார்பாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு காலை உணவுக்காக ரூ.7,500 வழங்கப்பட்டது. பொறியாளர் ஈ.குமாரின் பிறந்தநாள் (25.10.2018) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000மும் தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினர். (சென்னை - 23.10.2018)
- விடுதலை நாளேடு, 24.10.18

செவ்வாய், 9 அக்டோபர், 2018

புலவர் மா.நன்னன் மருமகன் பகுத்தறிவாளர் செம்மல் மறைந்தாரே!

மறைந்த புலவர் மா.நன்னன் அவர்களின் மருமகனும், சிறந்த பகுத்தறிவாளருமான செம்மல் என்ற இரா.கோவிந்தன் (வயது 69) அவர்கள் நேற்று (7.10.2018) பிற்பகல் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

மானமிகு செம்மல் அவர்கள் யூனியன் வங்கியில் மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். புலவர் மா.நன்னன் அவர்களின் பெரியாரியல் எழுத்துப் பணிக்கு உற்ற துணையாக இருந்தவர். மா.நன்னன் மறைவிற்குப் பிறகும் அவர் எழுதி வெளிவராத நூல்களை வெளியிடும் பணியில் ஈடுபட்டு வந்தவர்.

செம்மல் அவர்களின் மறைவால் பெருந்துயரத்திற்கு ஆளாகியிருக்கும் அவரது வாழ்விணையர் வேண்மாள், மகன் அறிவன், மகள் அணிமலர் மற்றும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கழகத்தின் சார்பில் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

திருச்சி

8.10.2018

கழகத்தின் சார்பில் மரியாதை

பகுத்தறிவாளர் செம்மல் அவர்களின் மறைவு செய்தி அறிந்ததும், இன்று  (8.10.2018) காலை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, அகில இந்திய வங்கி பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் சங்க பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி மற்றும் யூனியன் வங்கி பணியாளர்கள் மற்றும் பெரும் திரளான தோழர்கள் - செம்மல் அவர்களின் உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் கண்ணம்மா பேட்டை சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு, எவ்வித மூட சடங்குமின்றி  எரியூட்டப்பட்டது

-  விடுதலை நாளேடு, 9.10.18

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

களை கட்டிய தஞ்சாவூர் பொதுக்குழு

கடும் மழை - புயல் எச்சரிக்கைகளைக் கடந்து குமரி முதல் சென்னை வரை கழகத்தினர் திரண்ட எழுச்சி! களை கட்டிய தஞ்சாவூர் பொதுக்குழு
தஞ்சாவூர், அக்.7 திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டம் தஞ்சாவூர் புதுப் பேருந்து நிலையம் அருகில் உள்ள இராமசாமி திருமண மண்டபத்தில் நேற்று (6.10.2018) மாலை 5 மணிக்கு திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமையில் கூடியது.
கழக கலை இலக்கிய அணிச் செயலாளர் தெற்குநத்தம் சித்தார்த்தன் கடவுள் மறுப்புக்கூற, தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் வரவேற்புரையாற் றினார்.
பொதுக்குழுவிற்குத் தலைமை வகித்த திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும் என்றும், அன்னை மணியம்மையார் நூற்றாண்டை ஒட்டி திரட்டப் படும் ஒரு கோடி ரூபாய் நன் கொடை என்ற இலக்கில் எங்கள் குடும்பத்தின் பங்களிப்பாக ஒரு லட்சம் ரூபாய் அளிப்போம் என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.
14 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டதைத் தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன், கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி, கழக மாநில மகளிரணி - மகளிர் பாசறை அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் ஊமை செயராமன், கடலூர் மண்டல இளைஞரணி செயலாளர் திராவிடன், மாநில மாணவர் கழக கூட்டுச் செயலாளர் மதிவதனி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் தேவகோட்டை பேராசிரியர் முனைவர் மு.சு.கண்மணி ஆகி யோர் உரையாற்றினர்.
கழகப்  பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கடந்த கடலூர்  கழகப் பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பின் (2017 அக்டோபருக்குப் பின்) ஓராண்டுக் காலத்தில் நடைபெற்ற கழக நடவடிக்கைகள், கழகத் தலைவர் சுற்றுப்பயண விவரங்களை விரிவாக எடுத்துரைத்தார்.
தொடர்ந்து திராவிடர் கழக துணைத் தலைவர்  கலி.பூங்குன்றன், அன்னை மணியம் மையார் அவர்களின் அடக்க உணர்வு, தன்னை முன்னிலை நிறுத்தாமை காரணமாக அவர்களைப் பற்றிய பெரும்பாலான ஆற்றலும், தொண்டும், தலைமைத்துவமும் வெளியு லகிற்குத் தெரியவில்லை. அவர்களுக்கு நாம் கொண்டாட இருக்கும் நூற்றாண்டு விழாவின் மூலம் அவற்றை வெளியில் கொண்டு வருவது அவருக்குச் செய்யும் மகத்தான மரியாதை என்று எடுத் துரைத்தார். கழகத்  தோழர்கள் ஒவ்வொருவரும் விடுதலை சந்தாதாரர் ஆக வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத் தினார். நமது ஆசிரியர் அவர்கள் மிசாவில் சிறையில் இருந்த போது அன்னை மணியம் மையார் அவர்களின் நேரடிப் பார்வையில் ஒவ்வொரு நாளும் அவர்களின் ஆணையை ஏற்று செயல்படும் பாக்கியம் தனக்கு கிடைத்த தையும், விடுதலை தலையங்கத்தை எழுத வேண்டும் என்று கட்டளையிட்டதையும் நினைவு கூர்ந்து கழகத் தலைவர் தங்கள் குடும்பத்தின் சார்பில் ரூ.1 லட்சம் நிதியை அறிவித்தார்.
கழகத் தலைவர் முடிவுரை வழங்கிட, தஞ்சாவூர் திராவிடர் கழக செயலாளர் அருணகிரி நன்றி கூறிட இரவு 9 மணிக்கு பொதுக்குழு நிறைவுற்றது.
கடுமையான மழை, புயல் எச்சரிக்கையை வானிலைத்துறை அறிவித்திருந்த நிலையிலும், குமரி முதல் தலைநகர் சென்னை வரை கழகத் தோழர்கள் திரண்டு வந்திருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.
தஞ்சை கழகப் பொதுக்குழுவையொட்டி நகரமெங்கும் கழகக் கொடிகள் கட்டப்பட்டு பொதுமக்களின்  கவனத்தை ஈர்த்தன.
அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிதியாக ரூ.1,00,000/- தமிழர் தலைவரிடம் வழங்கினர்

தஞ்சையில் நடைபெற்ற கழக பொதுக்குழுக் கூட்டத்தில் (6.10.2018) காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளிகள் என்.ஆர்.சாமி - -பேராண்டாள் அம்மாள் ஆகியோரது நினைவாக அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிதியாக ரூ.1,00,000/-&க்கான காசோலையை  சிவகங்கை மண்டல தலைவர் சாமி.திராவிடமணி, பொதுக்குழு உறுப்பினர் தி.செயலெட்சுமி,மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமை கழக பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
Print
கழகத்தினரின் கவனத்துக்குக் கழகத் தலைவர்!
- நமது செய்தியாளர் -
தஞ்சை கழகப் பொதுக்குழுவில் உரையாற்றிய கழகத் தலைவர் ஆசிரி யர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சில முக்கிய தகவல்களையும், வழிகாட்டும் வெளிச்சத்தையும் பாய்ச்சி இருக்கிறார்.
அன்னை மணியம்மையார் பெய ரால் அவர்களின் நூற்றாண்டு தொடங்க இருக்கும் கட்டத்தில் மூல நிதி என்று வரும்பொழுது, நமது தோழர்கள் வாய்ப்புள்ளவர்கள் குடும்பம் சார்பாக ஒரு லட்சம் அளிப்பு என்பது வரவேற் கத்தக்கதே! அதே நேரத்தில் கழகத் தினர்தான் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மக்களி டம் செல்லுங்கள் - நிதியைத் தாரீர் என்று கூச்சம் இல்லாமல் கேளுங்கள், நாம் கேட்பது - நம் தனிப்பட்ட நலனுக் காக அல்ல - பொது நலனுக்காக, மக்கள் பணிக்காக என்பதால் நாம் உற்சாகத் துடன் பொது மக்களைச் சந்திக்க வேண்டும். புத்த மார்க்கத்தில் பிக்குகள் பிச்சை எடுத்துதான் வாழ்வைக் கடத் துவார்கள். துண்டு ஏந்தி மக்களிடம் செல்ல நானும் தயார்!
நாம் கேட்கும்பொழுதெல்லாம் மக்கள் மனம் மகிழ்ந்து அளித்துக் கொண்டு தானே இருக்கிறார்கள். அவர் களுக்கு மிக நன்றாகவே தெரியும். திராவிடர் கழகத்திடம் அளிக்கப்படும் ஒவ்வொரு காசும்  மிகச் சரியாகவே பிழை ஏதுமின்றி செலவிடப்படும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உண்டு என்று கழகத் தலைவர் குறிப்பிட்டார். உண்மைதான்! இந்த அறிவு நாணயம்தான் தந்தை பெரியார் நம்மிடம் விட்டுச் சென்ற அசையாத மாபெரும் சொத்தாகும் அல்லவா!
தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் உரையாற்றிய தந்தை பெரியார் ஒரு முத்திரைக் கருத்தினைக் கூறினார்.
"நாம் எதிர்பார்த்த இலட்சியத்தில் எதிலும் தோற்றுவிடவும் இல்லை. பெரிதும் வெற்றி பெற்றுக் கொண்டு மற்றவர்களும் ஏற்கும்படிதான் வளர்த்து வருகிறோம்.
இந்த நிலை, பெருமை மாறாமல் இருக்க வேண்டும். இப்படியே இருந்து வரும் நிலையிலேயே நான் சாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நமது கழகத் தோழர்களும் கட்டுப் பாடாகவுமே இருக்கிறார்கள்.
நமது கொள்கையில் ஓட்டை விழுந்தால்கூட பரவாயில்லை. ஆனால் நாணயத்தில், ஒழுக்கத்தில் தவறு இருக்கக் கூடாது, அதுதான் ஒரு கழகத்துக்கு முக்கியமான பலம்.
பணம் காசைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியது இல்லை. நான் கழகத்துக்கு வரும்போது கழகத்துக்குப் பணம் இல்லை. சொந்தக் காசுதான் செலவு செய்தேன்."
- ('விடுதலை', 11.10.1964, பக். 3)
பெரியார் உலகம்
திருச்சி சிறுகனூரில் உருவாகும் "பெரியார் உலகம்" பற்றி விளக்கப்படம் மூலம் விவரித்தார் பேராசிரியர் ப.சுப்பிரமணியம்.
தந்தை பெரியார் சிலையின் உயரம் 95 அடி என்றும் பீடம் 40 அடி என்றும்தான் ஏற்கெனவே சொல்லப்பட்டது. அதில் மிகப் பெரிய மாற்றம் 40 அடி பீடத்தையும் சேர்த்து தந்தை பெரியார் சிலையின் உயரம் 188 அடி என்று சொன்னபொழுது கழகக் குடும்பத்தினர் அடைந்த மகழ்ச்சிக்கோர் எல்லையே இல்லை!
மத்திய, மாநில அரசுகளிடமிருந்து ஏழு வகையான அனுமதித் தேவைப்படும் இந்த திட்டத்திற்கு இதுவரை ஆறு அனுமதிகள் கிடைக்கப் பெற்றன.
இன்னும் ஒன்றே ஒன்றுதான் நிலுவையில் இருக்கிறது. அதுவும் விரைவில் கிடைக்கப் பெறும் என்று அறிவித்தார்.
சுற்றுச்சுவர்கள் எழுப்பபட்டுள்ளன. அந்த வளாகத்தில் ஓர் அலுவலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது. 200 பேர்களுக்கு மேல் நாள்தோறும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நூலகம், ஆவணக் காப்பகம், சிறுவர் பூங்கா , உணவகம், நூல்கள் விற்பனையகம் உள்ளிட்ட பல அம்சங்கள் பெரியார் உலகம் வளாகத்தில் இடம் பெறும் என்று பட விளக்கத்துடன் திரையிடப்பட்டு விளக்கப்பட்டது.
தந்தை பெரியார் அவர்கள் கையாண்டுள்ள ஒவ்வொரு சொல்லும் உவமை சொல்ல முடியாத அளவுக்கு உயர் எண்ணத்தின் செறிவான முத் தாகும். இதை நம் கைப்பையில் வைத் துக் கொண்டு அவ்வப்போது முகத் தைக் கண்ணாடியில் பார்ப்பது போல பார்த்துக் கொண்டு நாம் நமது ஒவ் வொரு அடியையும் எடுத்து வைப் போம்!
"நம்மீது மக்கள் நம்பிக்கை வைத்து, நாம் கேட்கும் பொழுதெல்லாம் நிதி யைத் தாராளமாக தந்து வருகிறார்கள்" என்று கழகத் தலைவர் நேற்று அழுத்த மாகச் சொன்னதற்கான அடித்தளம் தந்தை பெரியார் அவர்களின் மேற் கண்ட கருத்தின் பலத்திலிருந்துப் பூத்த தாகும்.
ஒரு கடவுள் மறுப்பு இயக்கந்தான் ஒழுக்க நெறியின் உச்சம் ஆகும். கொள் கையால் மட்டுமல்ல நம் ஒழுக்கத்தால், நன்னடத்தைகளால் இளைஞர்கள் இந்த வகையில் கவரப்பட வேண்டும்.
கழகத்தின் அமைப்பு முறை செயல் பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தரவுகளையும் கழகத் தலைவர் பொதுக்குழுவில் அறிவித் தார். 1. மாவட்டக் கழகக் கூட்டம் - இரு மாதங்களுக்கு ஒரு முறை
2. மண்டலக்குழுக் கூட்டம் - 3 மாதங்களுக்கு ஒரு முறை
3. நகர, ஒன்றிய, கிளைக் கழகக் கூட்டம் மாதம் ஒரு முறை
4. பொதுக்குழுக் கூட்டம் 6 மாதங்களுக்கு ஒரு முறை
5. தலைமைச் செயற்குழுக் கூட்டம் தேவைப்படும் பொழுதெல்லாம்
இந்தச் செயல்பாட்டின் அறிக்கையினை மாதந்தோறும் தலைமைக் கழகத்துக்கு சம்பந்தப்பட்ட பொறுப் பாளர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
காரைக்குடி மாவட்டக் கழகத்தின் சார்பில் அதன் செயலாளர் தோழர் வைகறை தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைத்ததைப் பாராட்டி, அதனை மற்ற மற்ற மாவட்டக் கழகத் தோழர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் கழகத் தலைவர் கேட்டுக் கொண்டார்.
கழகத்தில் மூத்த தோழர்கள் அடுத்த தலைமுறையினருக்கு, இளைஞர்க ளுக்கு, மாணவர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும், தோள் கொடுக்க வேண்டுமே தவிர, காலைப் பிடித்து இழுக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்.
'விடுதலை' பற்றி
'விடுதலை' ஏட்டைப் பற்றி 'விடுதலை' ஆசிரியர் - கழகத் தலைவர் குறிப்பிட்டதும் முக்கியமானதாகும்.
நமது இயக்க ஏடான 'விடுதலை' என்பது மட்டும் இல்லாமல் போனால் சமூக மாற்றம் கிடையாது - நமது இயக்கம் என்ற ஒன்று இருப்பதாகவே யாருக்கும் தெரியாது.
காலமாற்றத்திற்கேற்ப 'விடுதலை'யி லும் பல மாற்றங்களையும் செய்திருக்கி றோம். இணைய தளத்தில் முதன் முதலாக வெளிவந்தது நமது 'விடுதலை' தான்.
பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளோம், நேர்த்தியாகக் கொண்டு வருகிறோம் - அதைக் கொண்டுபோய் சேர்ப்பது நமது முதல் பணியல்லவா என்று கேட்டார் கழகத் தலைவர்.
நிகழ்ச்சியின் போது மாவட்டக் கழகத் தோழர்கள் 'விடுதலை' சந்தாக் களையும் கழகத் தலைவரிடம் அளித் தனர்.
Print
தீர்மானம் எண்: 1
முன்மொழிதல்: கலி. பூங்குன்றன்
மானமிகு கலைஞர் அவர்களின் மறைவிற்கு இரங்கல்
13 வயதில் மாணவர் பருவத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, தந்தை பெரியார் கொள்கையை மாணவர் பருவத்திலேயே பரப்புவதற்குக் கையெழுத்து ஏடு நடத்தி, பிரச்சார நாடகம் எழுதி நடித்து, ஈரோடு குடிஅரசு அலுவலகத்தில் புடம் போடப்பட்டு, திரை உலகில் புகுந்து தனி எழுத்தாற்றலைப் பதித்து, திராவிடர் கழகத்தின் எழுத்தாளராக, பேச்சாளராக சுடர்விட்டு, அறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க.வில் இணைந்து தனது கடும் உழைப்பால், ஆற்றலால் மேலும் மேலும் உயர்ந்து, தேர்தலில் தோல்வி என்ற பேச்சுக்கே இடமின்றி 13 முறை சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அய்ந்து முறை முதல் அமைச்சராக  ஒளி வீசி, ஆட்சியை சமுதாயக் கொள்கைகளுக்குச் சட்ட வடிவம் கொடுக்கும் கருவியாகப் பயன்படுத்தி, பெண்கள் மறுமலர்ச்சிக்கான எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வளர்ச்சிக்கு அரும் பெரும் திட்டங்களைச் செயல்படுத்தி, சமூகநீதி காத்து, மதச்சார்பின்மை கொள்கைகளை நெஞ்சில் தேக்கி, அரை நூற்றாண்டுக் காலம் தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பை ஏற்று, நெருக்கடி காலத்தை எதிர்த்து எதிர் நீச்சல் போட்டு ஏற்றம் - தாழ்வு என்ற இருநிலைகளிலும் சீராகவே நிமிர்ந்து நின்று, கட்சியைக் கட்டிக் காத்து பல்திறன் கொள்கலனாக விளங்கியவர் மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் என்பதை திராவிடர்  கழகப் பொதுக்குழு பெருமிதத்துடன் போற்றுகிறது. அத்தகு பெருமகனாராகிய மானமிகு கலைஞர் அவர்களின் மறைவு (7.8.2018) என்பது தி.மு.க.வுக்கு மட்டுமல்ல; திராவிட இயக்கத்திற்கு மட்டுமல்ல; தமிழ்நாடு மக்களுக்கு மட்டுமல்ல; உலக முழுவதும் உள்ள தமிழின மக்களுக்கே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். எளிதில் மறக்க முடியாத - ஈடு செய்ய இயலாத இந்தப் பேரிழப்பால் ஆறாத் துயரத்தில் மூழ்கி இருக்கும் கலைஞர்தம் குடும்பத்தினருக்கும், திமுகவுக்கும், கலைஞரைத் தன் உயிரினும் மேலாக நேசிக்கும் திமுக தோழர்களுக்கும், குறிப்பாக பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன், தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் கலைஞர் மறைவால் பெரும் துயரத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் திராவிடர் கழகம் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து மானமிகு சுயமரியாதைக்காரரின் அளப்பரிய பெருந்தொண்டுக்கு திராவிடர் கழகப் பொதுக்குழு தம் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
உலகப் பகுத்தறிவுப் பேரறிஞர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் (வயது 76 மறைவு 14.3.2018)
பெரியார் பேருரையாளரும் பகுத்தறிவாளர் கழக மேனாள் மாநிலத் தலைவரும் தந்தை பெரியார் பற்றி ஏராளமான நூல்களை எழுதித் தமிழ் மண்ணுக்கு மிகப்பெரிய அளவில் அறிவுக்கொடை அளித்தவருமான புலவர் மா.நன்னன் (வயது 94 - மறைவு 7.11.2017)
உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி - சமூகநீதியாளர் இரத்தினவேல் பாண்டியன் (வயது 89 மறைவு 28.2.2018)
ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் மகனும் பிரபல கண் மருத்துவருமான டாக்டர் ஏ.டி.செல்வம். (வயது 92 - மறைவு 28.11.2017)
இலண்டன் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சேகர் (வயது 84 - மறைவு 30.10.2017)
பெரியார் பற்றாளரும் பகுத்தறிவாளருமான டாக்டர் பி.கே.தருமலிங்கம் (வயது 86 - மறைவு 13.1.2018)
திராவிடர் இயக்க உணர்வாளர், தொழிலதிபர் வேதாரண்யம் எ.கே.எம்.காசிநாதன் (மறைவு 16.1.2018)
தெலுங்கில் பெரியார் திரைப்படம் தயாரித்தவரான பில்வேல்லி சுனில் (வயது 43 - மறைவு 22.1.2018)
மேனாள் தமிழக அமைச்சர் செ.மாதவன், அமைச்சர் இராசாங்கம் (வயது 85 - மறைவு 3.4.2018)
சென்னை மேனாள் மேயரும் சீரிய சுயமரியாதை வீரருமான சா.கணேசன் (வயது 88 - மறைவு 13.4.2018)
ஈரோடு எஸ்.ஆர்.கண்ணம்மாள் அவர்களின் மருமகளும் எஸ்.ஆர்.சாமி அவர்களின் வாழ்விணையருமான சாரதா சாமி (வயது 85- மறைவு 30.5.2018)
புதிய பார்வை ஆசிரியர் மா.நடராசன் (வயது 75 - மறைவு 10.3.2018)
அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் லெ.ப.கரு.இராமநாதன் (செட்டியார்) (வயது 104 - மறைவு 14.4.2018)
பேராசிரியர் ம.லெனின் தங்கப்பா (வயது 84 _மறைவு 31.5.2018)
எழுத்தாளரும் பகுத்தறிவாளருமான குல்தீப் நய்யார் (வயது 95- மறைவு 22.8.2018)
விஜயவாடா நாத்திக மய்யத்தின் பொறுப்பாளர் சென்னபடி வித்யா (வயது 84- மறைவு 18.8.2018)
இனமொழிப் போராளி புலவர் கி.த.பச்சையப்பன் (வயது 84- மறைவு 20.9.2018)
ஆகிய பெருமக்களின் மறைவிற்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த துயரத்தினையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது. இப்பெருமக்களின் கடந்த கால தொண்டுக்கு வீரவணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறது.
முதுபெரும் பெரியார் பெருந்தாண்டர் பொன்மலை கணபதி (வயது 95 - மறைவு 5.2.2018)
செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழக தலைவர் அ.கோ.கோபால்சாமி (வயது 91 - மறைவு 2.11.2017)
மாநிலக் கலைத்துறை செயலாளர், கழக சொற்பொழிவாளர் இனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன் (வயது 74 - மறைவு 13.3.2018)
சட்ட எரிப்புப் போராட்ட வீரர் எடமேலையூர் கே.எஸ்.காசிநாதன் (வயது 96 - மறைவு 10.3.2018)
மொழிப்போர் தியாகி கங்களாஞ்சேரி இரா.நடேசன் (வயது 88 -  மறைவு 23.3.2018)
அத்திமாஞ்சேரிப்பேட்டை பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் பி.எஸ்.சக்கரபாணி (வயது 100- மறைவு 31.12.2017)
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பெருவளப்பூர் இரா.சாமிநாதன் (வயது 84 - மறைவு 25.1.2018)
குமரி மாவட்ட திராவிடர் கழக முன்னாள் செயலாளர் எம்.முகம்மதப்பா (வயது 102 - மறைவு 8.2.2018)
சட்ட எரிப்புப் போராட்ட வீரர் அன்டகுண்டன் எஸ்.எம்.மாரியப்பா (வயது 86 - மறைவு 14.9.2018)
போடி - சங்கராபுரம் பகுத்தறிவாளர் கழக ஆசிரியர் பே.ஆங்கன் (மறைவு 2.9.2018)
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சி.ஜெ.ஜெயகுருநாதன் (வயது 89 -  மறைவு 5.9.2018)
வேலூர் சத்துவாச்சாரி - மாவட்ட கழக அமைப்பாளர் ச.கி.செல்வநாதன் அவர்களின் வாழ்விணையரும், கழகப் போராட்டங்களில் பங்குகொண்டவருமான பாப்பம்மாள் (வயது 82 - மறைவு 22.10.2017)
பெண்ணாடம் திராவிடர் கழகத் தலைவர் கடலூர் செ.சுவாமிநாதன் (மறைவு 4.5.2018)
சேலம் குகைகருங்கல்பட்டி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தா.நாகராசன் (வயது 85 - மறைவு 3.5.2018)
கிருட்டினகிரி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஜி.வி.வெங்கட்ராமன் (வயது 90 - மறைவு 9.7.2018)
கரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ப.காமராஜ் (வயது 64 - மறைவு 11.7.2018)
நெல்லை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் பிரின்ஸ் (மறைவு 8.8.2018)
லால்குடி- மேலவாளாடி பெரியார் பெருந்தொண்டர் தனபால் (மறைவு 18.9.2018)
மதுரை புறநகர் பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஜெ.சுப்பிரமணியன் (மறைவு 27.9.2018)
திண்டுக்கல் நகர கழக செயலாளர் இரா.இரமேஷ் கண்ணா (வயது 43 - மறைவு 18.1.2018)
திருவாரூர் நகர முன்னாள் தலைவர் ஆசிரியர் பொன்.இராமையா (வயது 75-மறைவு 7.4.2018)
மயிலாடுதுறை கழக இளைஞரணி தோழர் குண்டு கலியபெருமாள் (வயது 66 - மறைவு 3.2.2018)
திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் மேனாள் மாவட்ட செயலாளர் சக்திவேல் (மறைவு 13.4.2018)
செங்கற்பட்டு நகர திராவிடர் கழகத் தலைவர் நாகப்பன் (வயது 75- மறைவு 16.2.2018)
செய்யாறு பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கே.முனுசாமி (வயது 48 - மறைவு 14.2.2018)
கிருட்டினகிரி ஒன்றிய கழக அமைப்பாளர் தேவசமுத்திரம் செ.பத்மநாபன் (வயது 45 - மறைவு 2.4.2018)
சிதம்பரம் நகர முன்னாள் கழகத் தலைவர் புலவர் இராஜாங்கம் (வயது 93 - மறைவு 28.11.2017)
திருச்சி மாநகர மேனாள் செயலாளர் திருச்சி ஜங்சன் என்.எம்.முருகேசன் (மறைவு  - 20.10.2017)
விழுப்புரம் நகரக் கழக அமைப்பாளர் கு.அ.பெரியதம்பி (வயது 96-  மறைவு 24.10.2017)
பகுத்தறிவாளர் கழக மேனாள் மாநிலத் துணைத் தலைவர் கோ.அண்ணாவி (மறைவு 18.11.2017)
தஞ்சை மாவட்ட பகுத்தறிவு கலை இலக்கிய அணித் தலைவர் கவிஞர் சித்தார்த்தன் (வயது 59 - மறைவு 7.4.2018)
காஞ்சி ஆர்.ஜானகிராமன் (வயது 85- மறைவு 28.11.2017)
குடந்தை வட்டம் சாமிமலை நகரக் கழகத் தலைவர் நமச்சிவாயம் (வயது 85 - மறைவு 14.12.2017)
பெரியகுளம் கழக செயலாளர் அ.பரசுராமன் (மறைவு 17.12.2017)
கடலூர் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.
எஸ்.சுப்பராயன் அவர்களின் வாழ்விணையர் இராஜராஜேஸ்வரி (வயது 87 - மறைவு 16.1.2018)
வத்திராயிருப்பு ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் வெ.கருப்பையா (வயது 46- மறைவு 17.1.2018)
உரத்தநாடு ஒன்றியம் வடசேரி விவசாய அணி செயலாளர் புண்ணியகோடி (மறைவு 26.1.2018)
பட்டுக்கோட்டை ஒன்றிய கழகத் தலைவர் எம்.எஸ்.முத்துக்குமாரசாமி (மறைவு 28.1.2018)
கரூர் - மண்மங்கலம் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ம.கு.கணேசன் (மறைவு 30.1.2018)
புதுக்கோட்டை மேனாள் மகளிரணி அமைப்பாளர்  சுடர்மதி தங்கையா (மறைவு 31.1.2018)
தருமபுரி மாவட்டம் - மொரப்பூர் ஒன்றிய கழகத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் இராமியம்பட்டி ஆர்.வி.சாமிக்கண்ணு (வயது 90 - மறைவு 2.2.2018)
இலால்குடி இடையாற்றுமங்கலம் சட்ட எரிப்புப் போராட்ட வீரர் நாகராஜன் (வயது 80- மறைவு 12.4.2018)
கோவை மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் பாவலர் தென்மொழி ஞானபாண்டியன் (வயது 88 -  மறைவு 12.4.2018)
சேலம் பெருமாள்கோயில்மேடு சட்ட எரிப்புப் போராட்ட வீரர் இளஞ்செழியன் (மறைவு 12.7.2018)
சட்ட எரிப்புப் போராட்ட வீரர் செம்பனார்கோயில் _  பரசூலூர் முனுசாமி (வயது 82 - மறைவு 25.5.2018)
சேலம் மாவட்டம் திராவிடர் கழக முன்னாள் செயலாளர் கடவுள் இல்லை சிவகுமார் (வயது 61-மறைவு 26.8.2018)
உடற்கொடை அளித்தவர்கள்
உடற்கொடை அளித்த பெருமக்கள்- பாராட்டு
நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் திரு. ப.பழனியப்பன்  (வயது 86 - மறைவு 19.2.2018)
கன்னியாகுமரி மாவட்ட திங்கள் நகர் கிளைக்கழகத் தலைவர்  திரு.சா.பாலையன் (வயது 68 - மறைவு 17.2.2018)
சேலம் மாநகர திராவிடர் கழகத் தலைவர் திரு.பூ.வடிவேல் அவர்களின் வாழ்விணையர் திருமதி எல்லம்மாள் (வயது 78 - மறைவு 23.2.2018)
சென்னை பகுத்தறிவாளர் கழகத் தோழர்  திரு.அரங்க.இராமச்சந்திரன் அவர்களின் தந்தையார் பெரியார் பெருந்தொண்டர் திரு.தஞ்சை ரெங்கநாதன் (வயது 78 - மறைவு 10.2.2018)
திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் சென்னை திருமதி. குஞ்சிதம் நடராசன்  (வயது 75 -மறைவு 7.9.2018)
குறிஞ்சிப்பாடி நகர திராவிடர் கழக அமைப்பாளர் திரு.இந்திரஜித் அவர்களின் அன்னையார் திருமதி. சின்னம்மாள் (மறைவு 15.10.2017)
தேனி கெங்குவார்ப்பட்டி கழக செயல்வீரர் திரு. கு.முத்துவேல் (மறைவு 27.10.2017)
குடியாத்தம் கழகத் தோழர் திரு.ஓவியர் சிவா அவர்களின் அன்னையார் திருமதி. பெரியநாயகி (மறைவு 24.4.2018)
சட்டஎரிப்புப் போராட்ட வீரர் திருவானைக்காவல் திரு. முத்துக்குமாரசாமி (வயது 88)
தேனி - கம்பம் நகர கழகத் தலைவர் திரு. சொ.குமரேசன் (வயது 70- மறைவு 30.6.2018)
ஆகிய பெருமக்களின் மறைவிற்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த துயரத்தினையும், இரங்கலையும் கூறி, உடற்கொடை அளித்த இப்பெருமக்களுக்குப் பாராட்டுத் தெரிவிப்பதுடன் இவர்களின் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் இப்பொதுக்குழு ஆறுதல் தெரிவிப்பதுடன் இவர்களின் விலைமதிப்பில்லா இயக்கத் தொண்டுக்கு இப்பொதுக்குழு வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
- விடுதலை நாளேடு, 7.10.18

வியாழன், 4 அக்டோபர், 2018

சிந்தாதிரிப்பேட்டையில் 140ஆவது ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சி


சிந்தாதரிப் பேட்டை


17.9.2018 அன்று காலை 9 மணிக்கு எண். 60, அய்யா முதலி தெரு, சிந்தாதரிப்பேட்டை கிராண்டு முடிதிருத்தகம் கேசவன் கடையின் முன் தந்தை பெரி யாரின் படத்திற்கு மாலை அணிவித்து 140ஆவது ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சி நடை பெற்றது.

பெரியாருடைய கும்ப கோணம் பேச்சும், வானொலி பேச்சும், கழக பிரச்சார பாடல்கள் ஒலிபரப்பியும் இனிப்புகள் வழங்கப்பட்டன. அன்பர்கள் சுப்பையா, கேச வன், செல்லக் குட்டி, தம்பிதுரை, என்.சண்முகம் மற்றும் சிந்தாதரிப் பேட்டையை சார்ந்தவர்கள் இவ்விழாவில் கலந்து கொண் டனர். விழா ஒரு கொள்கை நிகழ்ச்சியாக நடைபெற்றது.

- விடுதலை நாளேடு, 28.9.18

புதன், 3 அக்டோபர், 2018

திண்டுக்கல் பெரியார் பிஞ்சுகள் மாநாட்டின் பிரகடனம்

* படிப்பென்றால் பயம் என்ற நிலையை உருவாக்கக் கூடாது - ஆசையோடு செல்ல உந்த வேண்டும்

* புத்தக மூட்டைகளின் சுமைதாங்கியாகப் பிள்ளைகளின் முதுகை நொறுக்கக் கூடாது

* பெற்றோர்களோ, ஆசிரியர்களோ பிள்ளைகளை அடிக்கக் கூடாது

திண்டுக்கல் பெரியார் பிஞ்சுகள் மாநாட்டின் பிரகடனம்
திண்டுக்கல், செப்.30 18 வயதுக்கு முன் ஜாதி - மதங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது என்பது உட்பட முக்கிய கருத்துகள் நேற்று (29.9.2018) திண்டுக்கல் பெரியார் பிஞ்சுகள் மாநாட்டில் பிரகடனமாக அறிவிக்கப் பட்டது.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இதனை வெளியிட்டு, அதற்கான விளக்கங் களையும் அளித்தார். அந்தப் பிரகடனம் வருமாறு:

நம் நாட்டில் குழந்தைகளுக்குச் சட்டப்படி தெளிவான பக்குவம் 18 வயதில்தான் வருகிறது என்று அரசுகள், சட்டங்கள் கூறுகின்றன. அதனால்தான் பெற்றோர் களையோ அல்லது உற்றார், உறவினர்களையோ குழந்தை களின் காப்பாளர்களாக (Guardians) போடுகிறார்கள்! 18 வயதுக்குப் பிறகுதானே அவர்களுக்கு வாக்குரிமை தரப்படுகிறது - நமது ஜனநாயகத்தில்!

* அப்படி இருக்கும்போது குழந்தைகளை இந்த மதத்தவர், இந்த ஜாதியினர் என்று எப்படி முத்திரை குத்துகிறீர்கள்? சட்டப்படி எப்படி அப்படிக் குறிப்பிடுகின்றீர்கள்?

* 18 வயதுக்குப் பின் எந்த மதம், என்று தேர்வு செய்யவோ அல்லது எந்த மதமும், ஜாதியும் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் - நாங்கள் மனிதர்கள் என்று அறிவித்திடவோ அவர்களை அனுமதிக்க வேண்டும் என்பதுதானே நியாயம் - அதுதானே மனித உரிமையும்கூட!

* அதுவரை குழந்தைகளுக்கு ஜாதி, மத, முத்திரை குத்தாமல் மனிதர்கள் என்று சொல்ல உரிமை தரவேண்டும் என்பது அடிப்படைக் கோரிக்கையாகும்.

* மத சுதந்திரம் என்பதில் இதுவும் சேர்க்கப்பட வேண்டும். பெற்றோர்கள் விரும்புவதாலேயே அவர்கள் விரும்பும் ஜாதியிலோ, மதத்திலோ இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது.

* பெரியவர்கள் என்பவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். எனவே, அவர்களை மத வணக்கக் கூடங்களுக்கு அழைத்துச் செல்லுவது தவறு. பள்ளிகளில் கட்டாயமாக மதங்களை அவர் களிடத்தில் ஏன் புகுத்த வேண்டும்?

* குழந்தை மணம் எப்படித் தவறானதோ அது போன்றதே குழந்தைகள் மதமும்கூட!

* இதைத் தடுக்கப் புது சட்டம் தேவையே! பதினெட்டு வயதில் எடுக்கவேண்டிய முடிவுகளை பச்சிளம் வயதில் அவர்கள் மீது திணிக்காதீர்கள்!

* இது மனித உரிமைக்கும் எதிரானது!

* இந்த மாநாட்டின் வாயிலாக ஒன்றைப் பிரகடனப் படுத்துவது.

* குழந்தைகள் மதமற்றவர்கள்; ஜாதியற்றவர்கள் என்று இம்மாநாடு பிரகடனப்படுத்திக் கொள்கிறது.

* சட்டங்கள் பல இருந்தும் செயல்பாட்டில் முடக்கங்களே  அதிகம்.

- குழந்தைத் திருமணங்கள்

- குழந்தைகளைப் பிச்சை எடுக்க வைத்தல்

- குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை

- குழந்தைகள் கடத்தல்

* இவற்றின் மீது உடனடியான தீர்ப்புகள் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதனால் இக்குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு. குறிப்பாகப் பெண் குழந்தைகள் பிரச்சினைகள் பற்றி சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்களில் எடுத்துரைக்க பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தைக் குறட்டைத் தூக்கத்திலிருந்து எழுப்பி நிறைவேற்றப்படவேண்டும்.

* பாடப் புத்தகச் சுமையை குழந்தைகள் முதுகில், ஏற்றி சிறிய வயதிலேயே முதுகுகளை ஒடிக்கக் கூடாது.

* படிப்பென்றால் பயம் - அச்சுறுத்தல் என்ற நிலையை பிஞ்சு உள்ளத்தில் விதைக்கக் கூடாது.

* படிக்கும் அறிவில் ஒருவன் கெட்டிக்காரன், இன்னொருவன் முட்டாள் என்ற பேதத்தை ஊட்டக் கூடாது.

* கூழாங்கற்களையும் வைரமாக மாற்றுவதற்குத் தானே பள்ளிக்கூடம்.

* இரண்டு வயது, மூன்று வயதுகளிலேயே பள்ளிகளுக்கு பிள்ளைகளை துரத்தாதீர்கள்.

* கண்டிப்பாக பெற்றோர்களோ, ஆசிரியர்களோ, ஏன் யாருமே பிள்ளைகளை அடிக்கக் கூடாது.

* விளையாட்டு, ஆடல்பாடல், கலையம்சத்தோடு பிள்ளைகளை கல்வியின் பால் ஈர்க்க வேண்டும்.

* குழந்தைகளுக்கான நூல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

* இவையே இந்தத் திண்டுக்கல் மாநாட்டுப் பிரகடனங்கள்.


திண்டுக்கல் படைத்த பெரியார் பிஞ்சுகள் மாநாடு எனும் புரட்சிக் காவியம்!

திண்டுக்கல் - இயக்க வரலாற்றில் மட்டுமல்ல. சமுதாய வரலாற்றில் ஒரு புத்தம் புதிய பொன்னேடு பூத்த பூமியாயிற்று, 29.9.2018 என்பது என்றும் நினைவு கூரத்தக்க கொள்கைப் பிரகடன நாள்!

தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று (2018) சென்னை பெரியார் திடலில் 90 வயதைக் கடந்த தொண்டறச் செம்மல்களுக்குப் பாராட்டு, விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது.

செப்டம்பர் 29ஆம் தேதி பெரியார் பிஞ்சுகள் மாநாடு திண்டுக்கல்லில், முதுபெரும் தொண்டர்கள் தங்கள் அனுபவத்தால் வாழ்க்கையின் பாதைகளைக் காட்டினர் என்றால் இந்தப் பெரியார் பிஞ்சுகளோ - எங்களைச் சுதந்திரமாக வளர விடுங்கள், எங்கள் மீது ஜாதி, மத முத்திரைகளைத் திணிக்காதீர்கள். 18 வயது நிறைந்த பிறகு தானே வாக்கு! அதன் பொருள் என்ன? சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் பக்குவம் அப் பொழுதுதான் ஏற்படுகிறது என்பதுதானே இதன் பொருள்.

அப்படி இருக்கும் பொழுது பிறக்கும் பொழுதே - எங்கள் மீது ஜாதி, முத்திரைகளைத் திணிப்பு என்பது அப்பட்டமான அத்துமீறல்தானே என்று கூறும் நிலை!

ஜாதியை, மதத்தை, கடவுளை ஏற்றுக் கொள்வதோ அல்லது அவற்றைப் புறக்கணிப்பதோ ஒருவரின் உரிமையாகும். அதில் தலையிட அல்லது திணிக்க யாருக்கும் உரிமை கிடையாது - இரண்டு வயது மூன்று வயதுக்குள்ளேயே பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்பி வைத்து கல்வியின்மீது பிள்ளைகளுக்கு அச்சம் ஏற்படும்படிச் செய்வதோ கூடாது, பிள்ளை களைப் பெற்றோர்களோ, ஆசிரியர்களோ அடிக்கக் கூடாது, புத்தக மூட்டையைச் சுமக்கச் செய்து பிஞ்சு வயதி லேயே அவர்களின் முதுகுகளை ஒடிக்கக் கூடாது, குழந்தைத் திருமணம் தடுக்கப்பட வேண்டும், குழந்தை களைப் பயன்படுத்தி பிச்சை எடுப்பது தடுக்கப்பட வேண்டும், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுக்கப்பட வேண்டும் என்பது உள்பட முக்கிய அறி விப்புகள் இம்மாநாட்டில் பிரகடனமாக வெளியிடப் பட்டன.

திராவிடர் கழகத் தலைவர் அந்தப் பிரகடனத்தில் இடம் பெற்ற அம்சங்களை இடை இடையே விளக்கிக் கருத்துரை வழங்கினார்.

இது ஏதோ தமிழ்நாட்டில் ஓர் ஊரில் கூட்டப்பெற்ற மாநாட்டில் - பிரகடனமாக வெளியிடப்பட்ட ஒன்றாகக் கருதக் கூடாது. உலகம் முழுமைக்குமே தேவையான சிந்தனைக் கூர்மையான அறிவியல் ரீதியான மனித உரிமைப் பிரகடனமாகும்.

இந்தப் பிரகடனம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டு அய்.நா.வுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மாநாட்டில் அறிவித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

பிரகடனத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு அம்சத்தைப் படித்து ஆசிரியர் விளக்கிக் கொண்டிருந்தபோது ஆயிரக்கணக்கில் கூடியிருந்த பிஞ்சுகள், அவர்களின் பெற்றோர்கள், பாட்டன் - பாட்டிமார்கள், பொது மக்கள் பெருத்த ஆரவாரம் செய்து கையொலி எழுப்பினர்.

பிரகடனத்தைத் தமிழர் தலைவர் வெளியிட்டு உரையை நிறைவு செய்தபோது - மக்கள் கடல் எழுந்து நின்று ஆரவாரித்து நீண்ட நேரம் கையொலி எழுப்பி வரவேற்றது - மறக்கவே முடியாத மணம் கமழ்ந்த பசுமையான ஒரு பெரும் நிகழ்ச்சியாகும்.

வரலாற்றுக்குத் திராவிடர் கழகம் அளித்த மிகப் பெரிய மானுட உரிமைப் பெருங் கொடையும் - விருது மாகும்.

காலை 9 மணிக்குப் பிஞ்சுகளின் பதிவு தொடங்கியது. ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர் பிள்ளைகள்.

தொடர்ந்து அறிவியல் கண்காட்சியை, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் முன்னிலையில் பலத்த கரவொலிக்கிடையே திறந்து வைத்தார்.

பெரியார் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த இருபால் மாணவர்கள் தன் முயற்சியால் உருவாக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அந்த அறிவியல் கண்காட்சி கண்டோர் மத்தியில் புது சிந்தனையை, ஊக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.

ஒவ்வொரு ஏற்பாட்டையும் பார்வையாளர்களிடத் தில் இருபால் மாணவர்களும் எளிமையாக விளக்கிய நேர்த்தி பாராட்டத்தகுந்ததாகும். கழகக் குடும்பத்தினர் மட்டுமல்ல, பொதுமக்களும், மாணவ - மாணவிகளும் அறிவியல் கண்காட்சியைப் பார்வையிட்டு புதிய அறிவு வெளிச்சம் பெற்றனர்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலா ளர்கள் வீ.அன்புராஜ், தஞ்சை ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மோகனா வீரமணி, மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வீரபாண்டி யன், மாவட்ட செயலாளர் கிருட்டிணமூர்த்தி, மண்டல தலைவர் நாகராசன், மண்டல செயலாளர் கருஞ்சட்டை நடராசன், பொதுக்குழு உறுப்பினர் இரா.நாராயணன், மாநில மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, பாசறை செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, மாநில அமைப்பா ளர் தகடூர் தமிழ்ச்செல்வி, புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, அமைப்புச் செயலாளர் கள் மதுரை வே.செல்வம், தருமபுரி ஊமை செயராமன் உள்ளிட்டோர் கழகத் தலைவருடன் இருந்து அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்ற ஒவ்வொரு காட்சியையும் கண்டு களித்து விளக்கங்களும் பெற்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாகக் கல்வி நிறுவ னங்களில் இத்தகு அறிவியல் கண்காட்சி அமைக்கப் பட்டால் இருபால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ப தில் அய்யமில்லை.

சாமியார்கள் ஜாக்கிரதை!

மாநாடு நடைபெற்ற திண்டுக்கல் நாயுடு மகாஜன சங்கத் திருமண மண்டபத்தின் வெளிப்புறத்தில் கால்க ளைப் பதிக்கும் தருவாயில் இரு சாமியார்கள் 'அதிர்ச் சியை' ஏற்படுத்தினர்.

அந்த இரு சாமியார்கள் முன் ஒரு பெண் தலைவிரி கோலமாய் 'சாமி' ஆடினார். பார்வையாளர்கள் அங்குக் கூடி அங்கு என்னதான் நடக்கிறது என்று மிகுந்த ஆர்வமாகக் கண்குத்திப் பார்த்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது கை ஒலிபெருக்கியை ஏந்தி திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேனிலைப் பள்ளி யைச் சேர்ந்த மூன்று மாணவிகள் பேய், பூதம், பிசாசு என்பதெல்லாம் சுத்தப் புரூடா - மோசடி, மக்களின் அறிவைக் கெடுத்து பொருளை அபகரிக்கும் சுரண்டல் - ஏற்பாடு என்று அறிவியல் ரீதியாக விளக்கம் அளித்தது சிறப்பானதாகும்.

குழந்தைகளின் பல்சுவை நிகழ்ச்சிகள்

மாநாட்டு அரங்கில் பெரியார் பிஞ்சுகளின் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. நடனம், பாடல்கள், கவிதை வாசிப்பு, உரை வீச்சு என்று அமர்க்களப்பட்டன.

பிரபல மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி அவர் கள் பிஞ்சுகள் மத்தியிலே ஊடுருவி அளவளாவினார். அவர் எழுப்பிய வினாக்களுக்கு சற்றும் தாமதம் செய்யாமல் வில்லிலிருந்து விடுபட்ட அம்பு போல பிஞ்சுகள் பதிலளித்தது பார்வையாளர்களை மட்டு மல்ல, டாக்டர் ஷாலினியும் தம் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினார். மழை மந்திரத்தால் வருமா? மரங்களால் வருமா? என்பது உட்பட பல்வேறு பொது அறிவுத் தகவல்கள் இந்தக் கலந்துரையாடலில் இடம் பெற்றன.

தொடர்ந்து பெரியார் கல்வி நிறுவனங்களின் சார் பில் வில்லுப்பாட்டு, ஓரங்க நாடகம், நடன நிகழ்ச்சிகள் தொய்வின்றி நடந்தன. ஒவ்வொருவரும் அடுத்து என்ன நிகழ்ச்சி என்பதை ஆர்வமுடன் எதிர்பார்த்தனர்.

ஏனெனில் நிகழ்ச்சிகளை நடத்துவது பிஞ்சுகள் அல்லவா - அந்த பிஞ்சுகளின் ஆட்டமும், அவர்களுக் குள்ளிருந்த திறமைகளும் வெளிப்படும் பொழுது அவர்களின் பெற்றோர்கள் அனுபவித்த சுகமான உணர்வு மட்டுமல்ல - கூடியிருந்தோர் அனைவருக்கும் ஆனந்தக் குளியல்தான்.

பிஞ்சுகளின் பளார் பளார் பதில்கள் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து பத்துப் பேர்க ளுக்கும் அதிகமான பெரியார் பிஞ்சுகளை மேடைக்கு அழைத்து - தந்தை பெரியார் அவர்களின் உருவப் படத்தைக் காட்டி; தந்தை பெரியார் யாருக்காகப் பாடுபட்டார், அவரின் முக்கிய கொள்கைகள் என்ன என்ற வினாக்களை ஒவ்வொருவரிடமும் தோழர் வி.சி.வில்வம் தொடுத்தபோது, பிஞ்சுகள் பளார், பளார் என்று பதில் சொல்லி, பகுத்தறிவு கருஞ்சட்டைக் குடும்பங்களில் வளரும் பிள்ளைகள் எப்படியெல்லாம் பெருமைக்குரிய வகையில் பிரமாதமாக வளர்ந்து வருகின்றனர் என்பதற்கான வண்ண ஒளியாக அமைந் திருந்தனர்.

பெரியார் 1000 - சிறப்பு வினாடி வினா

சுயமரியாதை, இனவுணர்வு, பகுத்தறிவு, சமூக நீதி என்று நான்கு அணிகள் (ஒவ்வொரு அணியிலும் மூவர்) பங்கேற்ற பெரியார் 1000 சிறப்பு வினாடி வினா நடைபெற்றது.

தந்தை பெரியாரையும், அவர்தம் கொள்கைக் கோட்பாடுகளையும் முன்னிறுத்தி வினாக்களைத் தொடுத்தார் மாநில மாணவர் கழக செயலாளர் தோழர் பிரின்சு என்னாரெசு பெரியார். வெற்றி பெற்றவர்களுக்கு பலத்த கர ஒலிக்கிடையே  இனமுரசு சத்தியராஜ் பரிசு களை அளித்தார்.

ஆசிரியரிடம் கேள்விகள்

சமுதாயத்தை நோக்கியும், இன எதிரிகளின் திசையிலும் அன்றாடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கும்

ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களிடம் பெரியார் பிஞ்சுகள் கேள்வி கேட்டதும், அதற்கு ஆசிரியர் பதில் சொல்லுவதும் முற்றிலும் வித்தியாசமானவைதானே!

நீங்கள் சின்ன வயதில் சாமி கும்பிட்டீர்களா? என்ற கேள்வி உட்பட அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தன. அத்தனைக் கேள்விகளுக்கும் அமைதியாகவும், எளிமையாகவும் விளக்கிப் பதில் அளித்தார் ஆசிரியர்.

அறிவியல் கண்காட்சி அரங்கில்....

29.9.2018 அன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற பெரியார் பிஞ்சுகள் மாநாட்டில் தனி முத்திரை பொறிப்பது அறிவியல் கண்காட்சியாகும். காட்சிகளும், விளக்கங்களும் அறிவுக்கு விருந்து அளிக்கக் கூடியவையாகும்.

அத்தோடு மானுடத்துக்கு பாடுபட்ட கீழ்க்கண்ட தலைவர்களின் படங்களும் அணி செய்தன.

கவுதம புத்தர், மகாத்மா ஜோதி பூலே, சாகுமகராஜ், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், நீதிக்கட்சித் தலைவர்கள் டாக்டர் சி.நடேசனார், வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், பனகல் அரசர் (இராமராய நிங்கர்), எஸ். முத்தையா (முதலியார்), மீனாம்பாள், இரட்டை மலை சீனிவாசன், அலர்மேலு மங்கையர்த்தம்மாள், நாகம்மையார், மணியம்மையார், பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமி, ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன், சிவகங்கை இராமச் சந்திரனார், அறிஞர் அண்ணா, காரல் மார்க்ஸ், பிரடரிக் ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங், பிடல் காஸ்ட்ரோ, சேகுவாரா, நெல்சன் மண்டேலா ஆகியோரின் படங்களும் இடம் பெற்றன.

மு.கலைவாணன் குழுவினரின் புதுமை பொம்மலாட்டம்

உணவு இடவெளிக்குப் பிறகு கலை அறப்பேரவை மு.கலைவாணன் (முத்துக்கூத்தன் மகன்) அறிவுக் கொழுந்து அஞ்சலை எனும் தலைப்பில் நிகழ்த்திய முற்றிலும் புதுமையான பொம்மலாட்ட நிகழ்ச்சி பார்வை யாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மூடநம்பிக்கைகள் தோலுரிப்பு, பெண்ணடிமைத் தகர்ப்பு, சிறுவர்களிடம் எந்த வகையில் கைப்பேசிகள் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது உட்பட இக்காலக்கட்டத்தில் சூழ்ந்துள்ள பிரச்சினைகளை மய்யப் புள்ளியாக்கி பகுத்தறிவுக் கருத்துகளை சன்னமாக பிஞ்சுகள் மத்தியில் உலவிடும் ஒரு கலையம்சமாக இந்த பொம்மலாட்டம் அமைந்திருந்தது. அனைவரும் கைத் தட்டி ரசித்துப் பார்த்தனர்.

பெரியார் பிஞ்சுகளின் பேரணி

29.9.2018 சனி மாலை 5 மணிக்கு மாநாடு நடைபெற்ற நாயுடு மகாஜன சங்க திருமண மண்டபத்தின் வாயிலிருந்து பெரியார் பிஞ்சுகள் பேரணி தொடங்கியது. பெரியார் பிஞ்சுகளின் இருவர் இருவராக - ஒவ்வொருவர் கையிலும் சிறிய அளவிலான திராவிடர் கழகக் கொடியுடன் உற் சாகமாக நின்றனர்.

மழை கொஞ்சம் தன் வேலையைக் காட்டியதால் மண்டபத்துக்குள் பிள்ளைகளை அனுப்பினர். மழை மிரட்டல் ஓய்ந்தபின் மறுபடியும் கட்டுப்பாடாக - நேர்த்தியாகப் பெரியார் பிஞ்சுகள் மின் மினிப் பூச்சிகளாக அணிவகுத்து நின்றனர்.

ஃ பிரகடனம், பிரகடனம் பெரியார் பிஞ்சுகள் பிரகடனம்

ஃ மானமும் அறிவும் மனிதர்க்கழகு

ஃ வளர்ப்போம், வளர்ப்போம் அறிவியல் வளர்ப்போம்!

ஃ திணிக்காதே, திணிக்காதே, பிள்ளைகள் மீது மதத்தைத் திணிக்காதே, ஜாதியைத் திணிக்காதே!

ஃ ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து, பக்தி என்பது தனிச் சொத்து

ஃ விதி விதி என்பது வீண் பேச்சு

ஃ படைப்போம் படைப்போம் மதமற்ற உலகம் படைப்போம் (முழக்கங்களைத் தனியே காண்க!)

போன்ற முழக்கங்களை - பிஞ்சுகள், சின்னஞ்சிறு சிட்டுகள் முழங்கிச் சென்ற அந்த காணரும் காட்சியைக் கண்டு திண்டுக்கல் மக்கள் தேன் உண்ட வண்டு போல சொக்கி மகிழ்ந்தனர்.

மாலை 5 மணிக்குப் புறப்பட்ட பிஞ்சுகள் பேரணி பேருந்து நிலையம் தந்தை பெரியார் சிலை வழியாக மணிக் கூண்டு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த திறந்த வெளி மாநாடு அரங்கை வந்தடைந்தது.

வழி நெடுகப் பொதுமக்கள் வாழ்த்தினர். மாணவர்கள் மகிழ்ச்சியால் கையசைத்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியார் சிலை மேல் தளத்தில் நின்றபடியே பிஞ்சுகளிடம் கையசைத்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

பிஞ்சுகளும், பெரியார் தாத்தா வாழ்க, ஆசிரியர் தாத்தா வாழ்க என்று ஒலி முழக்கங்களை எழுப்பினர்.

பேரணி மாநாட்டு மேடைக்கு வந்தடைவதற்கு முன்ன தாகவே புரபசர் ஈட்டி கணேசன் 'மந்திரமா தந்திரமா?' எனும் தந்திர நிகழ்ச்சிகளைச் செய்து காட்டி அதில் உள்ள தந்திரங்களை அவிழ்த்துக் கொட்டி ஆச்சரியத்தை ஏற் படுத்தினார்.

கழுத்தை வெட்டுவது, உடைந்த முட்டையை முழுசாக வரவழைப்பது, கையசைப்பில் திருநீறு, குங்குமம் வர வழைப்பது என்ற சாயி பாபாவின் சூழ்ச்சிகளின் முகமூடி யைக் கிழித்து உடைத்துச் செய்து காட்டியதெல்லாம் மக்களுக்கு வெகு வியப்பாகவே இருந்தன.

தொடர்ந்து பெரியார் பிஞ்சுகளின் நடனங்கள், ஓரங்க நாடகம்,v பெரியார் பொன்மொழிகள் கூறல், தமிழ் மற்றும் ஆங்கில உரைகள் நிகழ்ச்சிகள் அற்புதமாகத் தூள் கிளப்பின.

திராவிடர் கலையான பறையிசை நமது பண்பாட்டின் மீட்டுருவாக்கமாக நடந்தது. மொழு மொழு கம்பத்தில் இளைஞர்கள் தலைகீழாக ஏறியும், ஒற்றைக் கையூன்றி, உடல் முழுவதையும் வெளியே கொண்டு வந்தது அசாதாரணமானவை!

அடேயப்பா நம் இளைஞர்களிடம்தான் எத்தணை திறமை!

அறிவியல் படைப்போம் என்ற தலைப்பில் இரு பெரியார் பிஞ்சுகள் (பெண்) குறைந்த நேரத்தில் சிறந்த கருத்துகளை எடுத்துரைத்தனர்.

கருத்துரையாற்றிய காஞ்சிபுரம் அபிநயா என்ற பெரியார் பழகும் முகாமில் பயிற்சி பெற்ற பிஞ்சு, இந்தியா வின் தலைசிறந்த 45 மாணவர்களுள் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டு, வரும் ஜனவரியில் அமெரிக்கச் சுற்றுப் பயணத்தில் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நூல்கள் வெளியீடு

பேரன் பேத்திகளுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் தாத்தா எழுதிய கடிதங்கள் (5 தொகுதிகள்), கவிஞர் கலி.பூங்குன்றன் எழுதிய தங்கத்தாத்தா வாழ்க்கையிலே எனும் இருவகை நூல்களை இனமுரசு சத்தியராஜ் வெளியிட - முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் வழக்குரைஞர் கொ.சுப்பிரமணியம், திண்டுக்கல் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் கிருட்டிணமூர்த்தி, மண்டலத் தலைவர் நாகராசன், பொதுக்குழு உறுப்பினர் இரா.நாராயணன், மாநிலம் தழுவிய அளவில் வருகை தந்த தோழர்கள் பெண்கள் ஒவ்வொருவராக மேடைக்கு வருகை தந்து நூல்களை நீண்ட நேரம் பெற்றுக் கொண்டே இருந்தனர்.

பெரியார் பிஞ்சுகள் பிரகடனம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க பெரியார் பிஞ்சுகளின் பிரகட னத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டு விரிவுரை - விளக்கம் தந்தார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற்றினார். தொண்ணூறு வயதைக் கடந்த தொண்டறச் செம்மல்களுக்குப் பாராட்டு, விருது அளித்த விழாவும் (சென்னை, 17.9.2018), இந்த திண்டுக்கல்லில் நிகழும் பெரியார் பிஞ்சுகள் மாநாடும் வரலாறு என வாழ்த்துக்கூறி, கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களை உச்சிமோந்து பாராட்டும். இது அவரின் தனித் தன்மையான (Original Thinking) சிந்த னையில் உதித்த உயர் எண்ணமாகும் என்று கூறினார். சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை பற்றி தெரிவித்த  துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் 53.2 விழுக்காடு சிறுமிகள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் வன்முறையை வெளியில் கூறாத நிலையை ஆதாரத்துடன் எடுத்துக்கூறி, வெறும் 3.4 விழுக்காடு அளவுக்குத்தான் வழக்குப் பதிவு செய்யப்படுகின்றன என்றும், பெரும்பாலும் இந்தக் கொடுமை 94.6 விழுக்காடு நெருங்கிய உறவினர் களாலுமே நிகழ்கிறது என்றும், தண்டனை என்பது வெறும் 29.6 விழுக்காடு தான் என்றும், இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது என்றும், குழந்தைகள் நலனுக்கு இந்திய அரசால் ரூ.100க்கு 6 பைசா மட்டுமே செலவிடப்படுகிறது என்றும் எடுத்துக் கூறி, குழந்தைகள் துன்புறுத்தப்பட்டாலோ, சிறு வயதிலே பிச்சை எடுக்கவிட்டாலோ Child Line 1098 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் என்ற தகவலையும் தெரிவித்தார்.

இனமுரசு சத்தியராஜ்

பெரியார் திரைப்படத்தின் மூலம் பிஞ்சுகள், மாண வர்கள், இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் அறிமுகமான இனமுரசு சத்தியராஜ் அவர்களின் உரை அற்புதமாக அமைந்திருந்தது.

அமெரிக்காவிலிருந்து வந்த தன் உறவினர் வீட்டுக் குழந்தை கேட்ட கேள்விகளை விளக்கினார்.

கோயிலைக் காட்டி இது என்ன என்று கேட்டதற்கு குழந்தையின் பாட்டி, அது ஒரு கட்டடம், அதற்குள் சாமி சிலை இருக்கிறது. அதனைக் கும்பிட்டு, நாம் விரும்பு வதைக் கேட்டால் கொடுக்கும் என்று சொன்னபொழுது What A Funny என்று அக்குழந்தை சிரித்ததையும் எடுத்துச் சொன்ன இனமுரசு, தனக்கு ஒரு பொம்மை வாங்கித் தரும்படி என்னிடம் கேட்டபொழுது அவ்வாறு வாங்கிக் கொடுத்தேன் - அந்தப் பொம்மையைத் தன் பாட்டியிடம் காட்டி, இந்தப் பொம்மை நான் கேட்டதைக் கொடுக்குமா? என்று கேட்டதையும் எடுத்துச் சொன்ன பொழுது ஒரே சிரிப்பும் கைதட்டலும் வெகுநேரம்!

நான் கடைசியாக கதாநாயகனாக நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தேன். குணசித்திர வேடத்திற்குச் சென்று விடலாம் என்று நான் முடிவு செய்ததால் நல்ல அளவு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது - சம்பாத்தியமும் சிறப்பாகவே உள்ளது.

நான் ஒரு மூடநம்பிக்கைவாதியாக இருந்து எனக்கு நேரம் எப்படி இருக்கிறது - சொந்தத்தில் படம் தயாரிக் கலாமா என்று ஒரு ஜோதிடனிடம் சென்றிருந்தால் என்ன நடந்து இருக்கும்?

ஒரு குறிப்பிட்ட காலம் வரை பொறுத்திருந்து - அந்தத் தேதிக்குப் பிறகு சொந்தத்தில் நீங்கள் படம் எடுத்தால் அமோகமாக இருக்கும் என்று சொல்லுவான். நானும் அவன் சொன்னதை நம்பி, இதுவரை நூறு படங்களில் நடித்து ஈட்டிய பணம் எல்லாம் செலவாகி நான் போண் டியாகத்தான் ஆயிருப்பேன். தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு கருத்துதான் என்னைக் காப்பாற்றியது என்று நடைமுறைக்கு ஒத்த கருத்தினை எடுத்துக்கூறி இனமுரசு அங்குக் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் இதயத்தில் இடம் பெற்றார் - அவர்களுக்கு நல்லதோர் வாழ்வியல் வழிகாட்டும் வெளிச்சத்தையும் கொடுத்தார் என்றே சொல்ல வேண்டும் (முழு உரை பின்னர்).

தமிழர் தலைவர் கருத்துரை

மிகச் சிறப்பாக நமது இனமுரசு சத்யராஜ் இங்கே உரையாற்றியுள்ளார். அவர் வரைந்த அந்த ஓவியத்தை நான் கலைக்க விரும்பவில்லை.

இந்திய அரசமைப்புச் சட்டம் 51ஏ(எச்) என்ன கூறு கிறது? - ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று எதைக் குறிப்பிடுகிறது?

விஞ்ஞான மனப்பான்மையை ஊட்ட வேண்டும், ஏன், எதற்கு என்று வினா எழுப்பி உண்மையை அறிவது, சீர்திருத்த சிந்தனை இவற்றை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்ட சரத்தின் நோக்கம் இம்மியும் மாறாமல் நூற்றுக்கு நூறு அந்த அடிப்படைக் கடமையை இந்தியாவிலேயே அன் றாடம் செய்து வருவது திராவிடர் கழகமே என்று கூறிய தமிழர் தலைவர் இங்கு நமது இனமுரசு சத்தியராஜ் பேசிய பேச்சும் அந்த அடிப்படை சமுதாயக் கடமையைத்தான் என்று கூறினார் (முழு உரை பின்னர்).

தந்தை பெரியாரின் தொலைநோக்கு...

அறிவியல் கண்காட்சி அரங்கில் தந்தை பெரியார் அவர்களின் தொலைநோக்கு அறிவியல் சிந்தனையைப் பட்டியலிட்டுள்ளது சிறப்பானதாகும்.

*    பெட்ரோலுக்குப் பதில் மின்சாரம்

* ரேடியோ தொப்பிக்குள் வரும் - கம்பியில்லா சாதனை!

* தந்தியில் எழுத்துக்களுடன் உருவமும் இடம் பெறும் - முகத்துக்கு முகம் பேசலாம்.

* சாலைப் போக்குவரத்து அருகி, ஆகாயமார்க்கம் விரிவாகும்

* ஓரிடத்தில் வகுப்பு  அறையில் மாணவர்களை வைத்துப் பாடம் நடத்துவதற்குப் பதிலாக, ஓரிடத்தில் ஓர் ஆசிரியர் இருந்து பல இடங்களிலும் கற்பித்தல் (இன்றைய வீடியோ கான்பரன்ஸ்)

* சோதனைக் குழாய்க் குழந்தை (1938ஆம் ஆண்டிலேயே சொன்னவர் பெரியார்).

இது போன்ற தொலைநோக்குப் பார்வையில் தந்தை பெரியார் கூறியதைத் தொகுத்து அளிக்கப்பட்டு இருந்தது.

-  விடுதலை நாளேடு, 30.9.18