புதன், 24 பிப்ரவரி, 2021

எம்.பி.பாலு அவர்களின் மகன் பா.செந்தில்நாதன் - இரா.பவானி வாழ்க்கைஒப்பந்த விழா


தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.பி.பாலு அவர்களின் மகன் பா.செந்தில்நாதன் - இரா.பவானி வாழ்க்கை
ஒப்பந்த விழாவை நடத்தி வைக்கும் ஆசிரியர்

25.5.1995 தென்சென்னை மாவட்டக் கழகத் தலைவர் எம்.பி.பாலு அவர்களின் மகன் பா.செந்தில்நாதன் _ இரா.பவானி வாழ்க்கை ஒப்பந்த விழாவினை தலைமையேற்று சைதாப்பேட்டை வர்த்தகர் சங்க திருமண மண்டபத்தில் நடத்தி வைத்தேன். மணமக்களை வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியினை கூறச் செய்து விழாவினை சிறப்பாக நடத்தி வைத்தேன். அந்தப் பகுதி முழுவதும் வரவேற்புப் பதாகைகள் வைக்கப்படும். வரவேற்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுருந்தன. கழகத் தோழர்கள், முக்கிய பொறுப்பாளர்கள் என பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், ஜனவரி 16- 31. 2021

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

சென்னை இந்திரா நகர் தண்ணீர் தொட்டி அருகில் ஜாதி ஒழிப்பு மாநாடு

3.4.1995 அன்று தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை இந்திரா நகர் தண்ணீர் தொட்டி அருகில் ஜாதி ஒழிப்பு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக இந்திரா நகர் ரெங்கநாதபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தந்தை பெரியார் இலவச நூலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையில், மக்களுக்குச் சிறப்பாகப் பயன்படும் இலவச நூலகத்தையும், இளைஞர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வியல் பிரச்சினைகளைத் தீர்க்கும் மய்யத்தையும் திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

ஒரு நல்ல படிப்பகத்தைத் திறப்பதன் மூலம் இளைஞர்களிடையே ஒழுக்கமும் அறிவும் வளர இந்த நூலகம் பெரும் பங்காற்றும், இந்த நூலகத்திற்கு வருகின்ற இளைஞர்கள் போகும்போது துணிச்சல் மிகுந்தவர்களாகவும், தன்னம்பிக்கை உணர்வு உள்ளவர்களாகவும் செல்வார்கள் என பல கருத்துகளை எடுத்துரைத்தேன். மாநாட்டை யொட்டி வீதி நாடகமும், கருத்தரங்கமும் நடத்தப்பட்டன. ஜாதி ஒழிப்பு வீரர்களுக்குப் பாராட்டுப் பத்திரமும் வழங்கிச் சிறப்பித்தேன். மாநாட்டில் பெருமளவில் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ் 16 -31 .12 .20

பெரியார் பெருந்தொண்டர் செ.குப்புசாமி இல்ல மணவிழா

23.1.1995 அன்று சென்னை அண்ணா நகர் சோபா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற பெரியார் பெருந்தொண்டர் செ.குப்புசாமி இல்ல மணவிழாவில் கலந்துகொண்டு, தலைமை ஏற்று நடத்தி வைத்தேன். செ.குப்புசாமி _ துளசியம்மாளின் மகன் கவுதமனுக்கும், பி.கே.பலராமன் _ ரேணுகா ஆகியோரின் மகள் கவியரசிக்கும் சுயமரியாதைத் திருமண முறைப்படி வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியை கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன். மணமக்களுக்கு வாழ்த்து கூறுகையில், “சுயமரியாதைத் திருமணம் என்பது வாழ்வியல் திருமணம்; மனிதநேயத் திருமணம். பெரியார் பெருந்தொண்டர் செ.குப்புசாமி அவர்கள் சிறந்த கொள்கை வீரர். எந்த நிலையிலும் தந்தை பெரியாரின் கொள்கையை வழிகாட்டியாகக் கொண்டு லட்சிய உணர்வுடன் வாழ்ந்து வருபவர் என்று கூறி, அவருடைய அய்ம்பதாவது திருமண நாளையொட்டி, அவரையும் அவருடைய இணையரையும் மாலை மாற்றிக்கொள்ளச் செய்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி
- உண்மை இதழ், 16-30.11.20

சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவராகப் பணியாற்றிய வழக்குரைஞர் சுந்தரம் மறைவு (நீதிபதி சத்தியேந்திரன் மகன்)

6.1.1995 அன்று ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியேந்திரன் அவர்கள் மகனும் _ பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ச.இராசசேகரன் அவர்களின் தம்பியும் _ கழகத் தோழருமான வழக்கறிஞர் சுந்தரம் மரணம் அடைந்தார் என்கிற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன். சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவராகப் பணியாற்றியவர். ‘மிசாவின் கீழ் கைது செய்யப்பட்டு எங்களுடன் ஓராண்டு சிறையில் இருந்தவர். மிகவும் இளம் வயதில் (43) அவருடைய மறைவு  கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என இரங்கல் செய்தி வெளியிட்டோம்.


வழக்கறிஞர் சுந்தரம்

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ் 16 -30.11. 20


திங்கள், 22 பிப்ரவரி, 2021

செ.ர.பார்த்தசாரதி - கோ. குமாரி வாழ்க்கை ஒப்பந்த விழா5.6.1994 சைதாபேட்டை சொர்ணாம்பிகை திருமணம் கூடத்தில் நுங்கம்பாக்கம் சி.ரங்கநாதன் _ செகதாம்பாள் ஆகியோரின் மகனும், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி துணைச் செயலாளருமான செ.ர.பார்த்தசாரதிக்கும், சைதாபேட்டை த.கோவிந்தராசு முத்துலட்சுமி ஆயோரின் மகள் கோ.குமாரிக்கும் என் தலைமையில் வாழ்க்கை ஒப்பந்த விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி
- உண்மை இதழ், 16-31.9.20

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நூல்கள் வெளியீடு....


 

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாரதிதாசன் ஆய்விருக்கை சார்பில் 17.2.2021 அன்று விழா நடந்தது. விழாவில் இயக்குநர் கோ.விசயராகவன் இரு நூல்களை வெளியிட்டார். முதல் நூலை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், இன்னொரு நூலை புரட்சிக்கவிஞரின் பேரன் கோ.செல்வம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

திராவிடர் கழக பொன்விழா மாநாடு

29.9.1994 சமூகநீதிக் காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் திராவிடர் கழகம் நடத்தும் சமூகநீதி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும், வேறு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் டில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவரை விமான நிலையத்தில் பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்றோம். அவர் என்னை கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருக்குச் சால்வை அணிவித்து சிறப்புச் செய்தேன். விமான நிலையத்தில் ஜனதா தள தலைவர் ஜி.ஏ. வடிவேலு, இரா. செழியன், தி.மு.க. பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி, முரசொலிமாறன், முகமது சகி, ஆலடி அருணா ஆகியோரும் அவருக்குச் சால்வை அணிவித்து வரவேற்றனர். வி.பி.சிங்கும் நானும் ஒரே காரில் விருந்தினர் மாளிகைக்குச் சென்றோம். வழிநெடுக வி.பி.சிங் அவர்களை வரவேற்று எழுதிய சுவரெழுத்துகளையும், பதாகைகளையும் பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைந்தார். சிறிது நேரம் கழகத் தோழர்களோடு உரையாடிவிட்டுச் சென்றார்.

30.9.1994 திராவிடர் கழகப் பொன்விழா மாநாடு இரண்டு நாள்கள் திட்டமிடப்பட்டு மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. சென்னை பெரியார் திடலில் காலை 9:00 மணியளவில் புலவர் கோ. இமயவரம்பன் நினைவரங்கத்தில் கலை நிகழ்ச்சிகளோடு மாநாடு துவங்கியது. தந்தை பெரியார் சிலைக்கு கழக மத்திய நிருவாகக் குழு தலைவர் சிதம்பரம் கு. கிருட்டினசாமி மாலை அணிவித்தார். கழக மகளிரணி செயலாளர் க. பார்வதி திராவிடர் கழகக் கொடியை ஏற்றிவைத்தார். தோழர்கள் தந்தை பெரியார் வாழ்க! அன்னை மணியம்மையார் வாழ்க! பொன் விழா காணும் திராவிடர் கழகம் வாழ்க! என்ற ஒலி முழக்கங்கள் விண்ணதிர ஒலிக்கச் செய்தனர். கழகப் பொருளாளர் கா.மா. குப்புசாமி அவர்கள் வரவேற்புரையாற்றினார். கழகத் தோழர்களின் உரை வீச்சுடன் கருத்தரங்கம், பட்டிமன்றம், உரையரங்கம், கலைநிகழ்ச்சிகள் சிறப்புற நடத்தப்பட்டன. துணைப் பொதுச் செயலாளர் கோ. சாமிதுரை தலைமையில் தீர்மான அரங்கம் நடத்தப்பட்டு 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திராவிடர் கழகப் பொன்விழா மாநாட்டில் கலந்து கொண்டவர்களுடன் கைகளை உயர்த்தி  மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஆசிரியர்

மாலை கழகப் பொன்விழா மாநாட்டில் தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து இந்திய சமூகநீதி மய்யத்தின் தலைவர் சந்திரஜித் யாதவ் உரையாற்றுகையில்,  “சமுதாயத்தில் உள்ள எல்லா சுரண்டல்களையும் எதிர்த்துப் போராடக் கூடிய இயக்கம் பெரியார் இயக்கம். இன்றைக்கு எத்தனையோ அமைப்புகள் 60-ஆம் ஆண்டு, 70-ஆம் ஆண்டு என்று விழா கொண்டாடுகின்றனர். அதனால் அந்த அமைப்புகள் எல்லாம் சாதிக்காததைச் செய்து முடித்து, பொன் விழாவைக் கொண்டாடுகிற திராவிடர் கழகம் ஏராளமான நன்மைகளை மக்களுக்கு அளித்துள்ளது. இந்தப் பொன்விழா மாநாட்டில் ஒன்றைத் தெரிவித்து கொள்கிறேன் உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில் முலாயம் சிங் யாதவ் அவர்களின் ஒத்துழைப்புடன் தந்தை பெரியார் சிலையை விரைவில் நிறுவும் முயற்சியில் நான் ஈடுபடுவேன். தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரசிம்மராவ் ஆகியோர் 69 சதவிகிதத்தை ஏற்றுக் கொண்டனர் என்றால் உங்கள் தலைவர் வீரமணி அவர்களின் முயற்சியால்தான் என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.

தந்தை பெரியார் சமுக காப்பணி வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்கும் ஆசிரியர்

மதவெறிகொண்ட வகுப்புவாத சக்திகள், இந்தியாவைப் பிளவுபடுத்தும் சக்திகள்- - அவற்றை முறியடிக்கும் வரை நமக்கு ஓய்வே இல்லை. தந்தை பெரியார் அவர்கள் கண்ட ஒரு புரட்சிகர மாறுதல்களை நாம் உண்டாக்கும் வரை நம் பணி முடியாது தொடர வேண்டும்“ என கழகத்தின் சாதனைகளைப் பாராட்டி, பல கருத்துகளை எடுத்துரைத்தார்.

திராவிடர் கழகப் பொன்விழா மாநாட்டில்  கலந்து கொண்ட சந்திரஜித் யாதவ் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கும் ஆசிரியர்

மாநாட்டு நிகழ்வில் பங்கேற்ற செனல் இடமருகு - டில்லி, முருகு சீனிவாசன்- - சிங்கப்பூர், கே.ஆர். இராமசாமி-- - மலேசியா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். முதல்நாள் நிகழ்வில் நான் உரையாற்றுகையில்,

“திராவிடர் கழகம் வன்முறையை விரும்பாத இயக்கம், ரகசியம் என்பது இல்லாத இயக்கம், பயங்கரவாதம் என்றோ, தீவிரவாதம் என்றோ இளைஞர்களைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிற இயக்கம் அல்ல இந்த இயக்கம். நாம் 21 ஆம் நூற்றாண்டை நோக்கிப் போகப் போகிறோம்; போய்க் கொண்டிருக்கிறோம். 21 ஆம் நூற்றாண்டு வேறு யாருடைய நூற்றாண்டும் கிடையாது; தந்தை பெரியாருடைய நூற்றாண்டு; திராவிடர் கழகத்தினுடைய நூற்றாண்டு! சமூகநீதியின் நூற்றாண்டுக்கு நடைப்பயணத்தைத் துவக்கிவிட்டோம்; நடப்போம், கடப்போம்; நம்முடைய பணிகளை முடிப்போம், முடிப்போம்!” என்று உணர்ச்சி பொங்க பல கருத்துகளை விளக்கிப் பேசினேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 16-31.10.20

 அடுத்து தமிழனாகப் பிறக்கவே விரும்புகிறேன் - வி.பி.சிங்

மாங்கொல்லையில் பகுஜன் சமாஜ் கட்சி ஏற்பாடு செய்திருந்த தந்தை பெரியார் பிறந்த நாள் விழா


சமூக நீதிக்காவலர்  கான்ஷிராம்

உடன் ஆசிரியர்

17.09.1994 அன்று மயிலை மாங்கொல்லையில் பகுஜன் சமாஜ் கட்சி ஏற்பாடு செய்திருந்த தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டேன். அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட சமூகநீதிக் காவலர் கான்ஷிராம் அவர்கள் பேசுகையில், இனி இந்தியாவை ஆளப்போகிறவர்கள் பெரியார் -அம்பேத்கர் வழி நடப்பவர்கள் தாம். பார்ப்பனியத்தால் வஞ்சிக்கப்பட்ட மக்கள் பெரியார் வலியுறுத்திய சுயமரியாதைக்காகப் போராடக் கிளம்பி இருக்கிறார்கள். இந்த சுயமரியாதைத் தத்துவத்தை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டிய உரிய நேரம் வந்துவிட்டது. அதில் தமிழ்நாடு தனித்து விளங்குகிறது. நாங்கள் தமிழ்நாட்டுக்கு கருத்தைச் சொல்ல வரவில்லை; கருத்துகளைப் பெற்றுச் செல்லவே வருகிறோம். பெரியார் கொள்கைகளைப் பரப்புவதற்காகப் பாடுபட்டு வருபவரும் மிகச்சிறந்த தலைவருமான திரு.கி.வீரமணி அவர்களின் சிறந்த வழிகாட்டுதலால் தமிழகம் சிறந்து விளங்குகிறது’’ என கழகத்தின் சமூகப் பணியைப் பாராட்டி உரையாற்றினார்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி, 

- உண்மை இதழ், 16-31.10.20

.சி.சிகாமணி - ச.மோகனா வாழ்க்கை ஒப்பந்த விழா

சி.சிகாமணி - ச.மோகனாவுக்கு வாழ்க்கை ஒப்பந்தத்தை நடத்தி வைத்து வாழ்த்து தெரிவிக்கும் ஆசிரியர்

 23.08.1994 சென்னை எழும்பூர் மோத்தி மகாலில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி துணைத் தலைவர் சி.சிகாமணி மணவிழாவை தலைமையேற்று நடத்தி  வைத்தேன். மணமக்கள் சி.சிகாமணி - ச.மோகனாவுக்கு வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழியினை கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்து உரையாற்றுகையில்,

நாளும் கிழமையும் பார்க்காமல் நடைபெறுவதே தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதைத் திருமண முறையாகும். லண்டன்  தொலைக்காட்சி பி,.பி.சி.யில் இருந்து என்னைப் பேட்டி காண்பதற்காகப் பெரியார் திடலுக்கு வந்தார்கள். அவர்களிடம் கழகத்தின் சமூகப்பணியைப் பற்றியும், சுயமரியாதைத் திருமணங்களைப் பற்றியும் விளக்கிக் கூறினேன். அங்கு நடைபெற்ற ஜாதி மறுப்புத் திருமணத்தையும் அவர்கள் படம் எடுத்தார்கள். இன்றைக்கு டில்லியில் இருந்து லண்டன் பி.பி.சி.நிருபர் ஆன்ட்ரூ ஒயிட் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில்  சென்னை பெரியார் திடலுக்கு வந்திருந்த போது அங்கு நடைபெற்ற சுயமரியாதைத் திருமணத்தைப் பார்த்து, நானும் அதுபோல சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். லண்டனில் இருக்கும் பி.பி.சி. நிருபர் இதுபோன்ற திருமணத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். பெரியாரின் சுயமரியாதைத் திருமணம் இந்த அளவுக்கு உலக மக்களையும் கவர்ந்துள்ளது என வாழ்த்துரையில் குறிப்பிட்டோம்.

28.08.1994 சென்னை சைதாப்பேட்டை வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயல் வீரர் தே. தமிழ்ச்செல்வன் - விஜயாவுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவை தலைமையேற்று நடத்தி வைத்தேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி,

- உண்மை இதழ், 16-31.10.20

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

தந்தை பெரியார் - சிலை திறப்பு விழா- பட்டாளம்

3.3.1994 பட்டாளம் திராவிடர் கழகத்தின் சார்பில் பட்டாளம் மார்க்கெட் ‘கலைஞர் கருணாநிதி பூங்கா’ அருகில் தந்தை பெரியார் - சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்தேன்.

சென்னை பட்டாளத்தில் தந்தை பெரியார் சிலையை திறந்து வைத்து உரையாற்றும் ஆசிரியர்
மற்றும் விழாக்குழுவினர்

விழாவுக்கு பட்டாளம் திராவிடர் கழகத் தலைவர் - சிவ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கழக செயலாளர் மெய்.சேகர், இளைஞரணி செயலாளர் ரெ.பன்னீர் செல்வம் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

விழாவில் - சென்னை - மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் எம்.ஏ.கிரிதரன் குடுகுடுப்பை வேடமணிந்து, கடவுளர் கதைகளைத் தோலுரித்துக் காட்டினார். ஈரோடு தியாகராசன் ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சியை பல்வேறு முறைகளிலும் செய்துகாட்டி மக்களை ஆச்சரியப்பட வைத்தார்.

பட்டாளம் திராவிடர் கழக செயலாளர் மெய்.சேகர் - தேவி ஆகியோரின் ஆண்குழந்தைக்கு அறிவுச்செல்வன் - என்று பெயர் சூட்டி மகிழ்ந்தேன்.

விழா சிறப்பாக நடைபெறுவதை ஒட்டி கழகக்கொடி தோரணங்களால் அப்பகுதி முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

10.3.1994 பெரம்பூர் நியூ ஹால் திருமண மண்டபத்தில் அயன்புரம் திராவிடர் கழகச் செயலாளர் சீ.மணிவண்ணன் - கவிதா ஆகியோரின் வாழ்க்கை ஒப்பந்த உறுமொழியை கூறச் செய்து மணவிழாவை தலைமையேற்று நடத்தி வைத்தேன். விழாவில் கணவனை இழந்த கைம் பெண்ணான மணமகளின் தாயார் அம்சம்மாள் தாலியை எடுத்துக் கொடுத்தார். திருமண மண்டபமே நிரம்பி வழியும் அளவுக்கு ஏராளமான கழகத்தினரும், கழகப் பொறுப்பாளர்களும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். மணமக்கள் பெரியார் திடலுக்கு வந்திருந்து தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்; அய்யா, அம்மா நினைவிடங்களில் மலர்வளையம் வைத்தும் மரியாதைச் செலுத்தினர்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 16-31.7.20

21.2.1994 இந்தித் திணிப்பை எதிர்த்தும் - கடுமையான விலை வாசி உயர்வைக் கண்டித்தும் திராவிடர் கழகத்தின் சார்பில் மத்திய அரசு அலுவலக முன் தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

21.2.1994 இந்தித் திணிப்பை எதிர்த்தும் - கடுமையான விலை வாசி உயர்வைக் கண்டித்தும் திராவிடர் கழகத்தின் சார்பில் மத்திய அரசு அலுவலக முன் தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் எனது தலைமையில் பெரியார் திடலிலிருந்து கண்டன ஊர்வலம் புறப்பட்டது.

இருவர் இருவராக அணி வகுத்து, இந்தி எதிர்ப்பு - விலைவாசி உயர்வுக் கண்டன முழக்கங்கள் அடங்கிய தட்டிகளையும், கழகக் கொடியையும் கரங்களில் ஏந்திக்கொண்டு, விண்ணதிர முழக்கங்களை, முழங்கிக் கொண்டு புறப்பட்டனர்.

“திணிக்காதே திணிக்காதே இந்தியைத் திணிக்காதே! இந்தித் திணிப்பா - ஆரியப் பண்பாட்டுப் படை எடுப்பா? கட்டுப்படுத்து, கட்டுப்படுத்து விலைவாசியைக் கட்டுப்படுத்து’’ என்பது போன்ற முழக்கங்களை முழங்கிக் கொண்டு மகளிரணியினரும், தோழர்களும் அணிவகுத்துச் சென்றனர். ஊர்வலம் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு தோழர்கள் கைது செய்யப்பட்டனர். நான் 35 ஆவது முறையாகக் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டேன். “தொலைக் காட்சியில் இந்தித் திணிப்பு, முக்கிய அரசு அலுவலகங்களிலே இந்தியில் கையெழுத்து போடவேண்டும் என ஆணையை எதிர்த்து அனைத்துக் கட்சியையும் திரட்டி போராட்டம் நடத்துவோம்’’ என பத்திரிகைக்குத் தெரிவித்தேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 16-31.7.20


பூரி சங்கராச்சாரி கொடும்பாவி எரிப்பு


மகளிரணிக்கிடையே உரையாற்றும் ஆசிரியர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்

17.2.1994 பெண்கள் வேதம் ஓத உரிமை கிடையாது என்று கல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண்ணை, வேதத்தைக் கூறவிடாமல் பூரி சங்கராச்சாரி மேடையிலிருந்து திருப்பி அனுப்பினார். இதற்கு கல்கத்தாவில் பெண்கள் உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன.

வருணாஸ்ரம - வெறிபிடித்த இந்த பூரி சங்கராச்சாரியின் கொடும்பாவியை தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எரித்தார்கள். கழக மகளிரணியினர் சார்பில் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் - கழகத் தோழர்களும் ஏராளமாகக் கலந்து கொண்டனர். காலை சென்னை பெரியார் திடலில் கழக மகளிரணியினரும், தோழர்களும் ஏராளமாகத் திரண்டனர். அவர்களிடையே உரையாற்றி வழியனுப்பிவைத்தேன்.

மாநில மகளிரணி செயலாளர் க.பார்வதி, தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணி வித்தார்.

அதன்பிறகு பூரி சங்கராச்சாரி எதிர்ப்பு முழக்கங்களுடன் ஊர்வலம் பெரியார் திடலில் இருந்து பூரி சங்கராச்சாரி கொடும்பாவியோடு புறப்பட்டது.

ஊர்வலத்தில் - கலந்து கொண்ட மகளிரணியினர் - ஊர்வலத்தினர் பெரியார் திடலை விட்டு வெளியேவந்தபோது - போலீசார் ‘தினத் தந்தி’ அலுவலகத்துக்கு எதிரே ஊர்வலத்தினரைத்தடுத்து நிறுத்தினர். உடனே பூரி -சங்கராச்சாரியின் கொடும்பாவியை  கழகத் தோழர்கள் - எரித்தனர். “பார்ப்பன திமிர்கொண்ட பூரி சங்கராச்சாரி - ஒழிக’’ என்ற முழக்கங்கள் எழுந்தன; போலீசார் தண்ணீரை ஊற்றி - நெருப்பை அணைத்தனர்;  கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டனர்.

இதற்கிடையே வேப்பேரி காவல் நிலையத்தில் - கடும் பதட்டம் நிலவுவதாகத் தகவல் வந்தது. ஏற்கெனவே மூர்க்கத்தனமாக அடித்து - தனியே ஜீப்பில் ஏற்றிச் சென்ற கழகத் தோழரை காவல் நிலையத்துக்குள் வைத்து போலீசார் மூர்க்கத்தனமாகத்தாக்கினர்; அங்கே காவலில் வைக்கப்பட்டிருந்த கழகத் தோழர்கள்- இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து கொந்தளித்த பிறகுதான் போலீசார் தாக்குதல் நின்றது.

போலீசாரின் இந்த அத்து மீறல் பற்றி காவல் துறை உயர் அதிகாரியிடம் கழக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நிலைய செயலாளர்கள் - கலி. பூங்குன்றன், ஆனூர் ஜெகதீசன் ஆகியோர் வேப்பேரி காவல் நிலையம் சென்று. கழகத் தோழர்களை அமைதிப்படுத்தினர். மகளிரணியினர் உள்பட 250 தோழர்கள் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தனர்.

கழகத் தோழர்களை கண் மூடித்தனமாக தாக்கியதற்காகவும், கேவலமான முறையில்- திட்டியதற்காகவும் காவல்துறை அதிகாரிகள் மீது சென்னை வேப்பேரியில் காவல் நிலையத்தில், திராவிர் கழகத் தலைமை நிலைய செயலாளர் கலி.பூங்குன்றன் புகாரை எழுத்து மூலம் கொடுத்தார்.

“அடிப்படை மனித உரிமைக்கே சவால் விடும் பூரி சங்கராச்சாரி கொடும்பாவியை எரிக்க ஏன் காவல் துறை அனுமதி மறுக்க வேண்டும்? அப்படி மறுப்பது அரசியல் சட்டத்துக்கே எதிரானது’’ என நான் எடுத்துக் கூறினேன்.

-அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 16-31.7.20

திருவொற்றியூரில் தந்தை பெரியார் சிலையை திறப்பு


திருவொற்றியூரில் தந்தை பெரியார் சிலையை திறந்து வைக்கும் ஆசிரியர் மற்றும் விழா அமைப்பாளர்கள்

19.02.1994 சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவும், மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும், தீ மிதி நிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருவொற்றியூர் நகர திராவிடர் கழக தலைவர் பெ.செல்வராசு தலைமை வகித்தார். நகர திராவிடர் கழகப் பொருளாளர் க.இராசேந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.

க.பலராமன்

வட சென்னை மாவட்ட தலைவர் க.பலராமன், மாவட்ட செயலாளர் அ.குணசீலன், தென்சென்னை மாவட்ட தலைவர் எம்.பி.பாலு ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

அ.குணசீலன்

மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியில், முதுகில் அலகு குத்தி அம்பாசிடர் காரை இழுத்து வந்த தி.ச. மாவட்டம் செய்யாறை அடுத்த வடமணப்பாக்கம் திராவிடர் கழக இளைஞரணியை சேர்ந்த தோழர்கள் மு.சேகர், க.ஜெயபாலன், பொ.வெங்கடேசன் ஆகியோர்விழாவில் சிறப்பிக்க பெற்றனர்.

எம்.பி.பாலு

கழகத்தினரின் ஆரவாரத்துடன் தந்தை பெரியார் சிலையை திறந்து வைத்தேன்.

இந்தித் திணிப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஆசிரியரை வரவேற்கும் கழகத்தினர்

திருவொற்றியூர் பகுதி முழுவதுமே கழகக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பொதுக்கூட்ட மேடை மிகப்பெரிய அளவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒலி - ஒளி ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

-உண்மை இதழ், 16-31.7.20

திங்கள், 15 பிப்ரவரி, 2021

"எல்லோருக்கும் உரியார்; அவர்தான் பெரியார்"


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சு. அறிவுக்கரசு-இரஞ்சிதம் அறக்கட்டளைப் பொழிவும், நூல் வெளியீடும்!

சென்னை, பிப். 14- உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தில் Òஎல்லோருக்கும் உரியார்; அவர்தான் பெரியார்” எனும் தலைப்பில், சு. அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளைப் பொழி வும், நூல் வெளியீட்டு விழாவும் நடை பெற்றது.

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத் தில் பிப்ரவரி மாதம் முழுவதும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெரு விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், பன்னிரண்டாம் நாளான 12.2.2021 காலை 11 மணியளவில் “சு.அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்ட ளைச் சொற்பொழிவு நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர் கள் தலைமை ஏற்றுச் சிறப்பித்தார். அதைத் தொடர்ந்து, திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவரும், அறக்கட்டளையின் நிறுவனருமான சு. அறிவுக்கரசு அவர்கள், சிறப்பாகச் செயல்படும் இயக்குநரையும், நிகழ்ச் சியை ஒருங்கிணைத்துக் கொண்டி ருக்கும் இவ்வறக்கட்டளையின் பொறுப் பாளரும், உதவிப்பேராசிரி யருமான முனைவர் நா. சுலோசனா ஆகியோ ருக்கு நன்றி தெரிவித்துப் பேசினார்.

அவர் தனது உரையில், தன்னிலும் கொள்கையில் சிறந்திருந்த காலம் சென்ற தனது இணையர் இரஞ்சிதம் அவர்கள், ஜாதி மறுப்பில் எவ்வளவு உறுதியாக இருந்தார் என்பதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து, தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகத் திலுள்ள பெரியார் சிந்தனை உய ராய்வு மய்யத்தின் உதவிப் பேராசிரியர் த.ஜெயகுமார், “எல்லோருக்கும் உரி யார்; அவர்தான் பெரியார்” எனும் தலைப்பிலான ஆய்வின் சுருக்கத்தைப் பொழிவாக வழங்கினார். அதில் பார்ப்பனர் நலம் உட்பட சமூகம், அரசியல், இலக்கியம், பெண்விடுதலை, மூடநம்பிக்கை ஒழிப்பு, மொழிச்சீர் திருத்தம், கடவுள் மறுப்பு போன்ற பல்வேறு தலைப்புகளைப் பட்டிய லிட்டு, ஆன்மிகத்தில் நம்பிக்கைக் குரியவர்களாக இருந்தாலும் அவர் களும் பெரியாரை ஏற்றுக் கொண்டா டுவதைச் சுட்டிக்காட்டி, பெரியார் ஒருவர்தான் அனைவருக்கும் உரியார் என்று அனைவரின் ஒப்புதலோடு எண்பித்தார்.

முன்னதாகத் தலைமையேற்றுப் பேசிய இயக்குநர் கோ.விசயராகவன் பெரியாரின் அருமையை ஆய்வு மாணவர்களுக்கு சிறப்பாக எடுத்து ரைத்தார். நிகழ்வில் முனைவர் த. ஜெயக்குமார் எழுதிய எல்லோருக்கும் உரியார்; அவர்தான் பெரியார்! புத்த கத்தை இயக்குநர் வெளியிட, அறக் கட்டளையின் நிறுவனர் சு. அறிவுக் கரசு பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பட்டாபிராம் இந்து கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரி யர் முனைவர் தெய்வ அகண்ட பரமன் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். மற்றொருவர் முனைவர் பட்ட ஆய்வாளர் சுப்ப ராயன், பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த இராணிப்பேட்டை ஜெய ராமன், ஆவடி மாவட்ட அமைப்பா ளர் உடுமலை வடிவேல், உலகத் தமி ழாராய்ச்சி உதவிப்பேராசிரியர் முனைவர் மணி.கோ. பன்னீர்செல்வம், பெரியார் வலைக்காட்சி அருள் மற் றும் ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வு பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவிருந்தது.ஆனால் இயக் குநர் முனைவர் கோ.விசயராகவன் பெரியார் பெயரில் நடைபெறும் இந் நிகழ்வில் தான் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறி, காலை 11 மணியளவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 8 பிப்ரவரி, 2021

நன்கொடை


டாக்டர் .தமிழ்மணிவழக்குரைஞர் .வீரசேகரன் ஆகியோரின் தாயாரும் சுயமரியாதை சுடரொளிதர்மராஜனின்வாழ்விணையரும் மேனாள் கழகப் பொதுக்குழு உறுப்பினருமான மணியம்மாள் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (5.2.2021) சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ. 10,000 வழங்கப்பட்டது.  நன்றி!

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

பெருந்தொண்டர் மானமிகு மயிலை திரு.சாமிநாதன் மறைவு


பெருந்தொண்டர் மானமிகு மயிலை திரு.சாமிநாதன் அவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தும் ஆசிரியர்

31.10.1993 தந்தை பெரியார் பெருந்தொண்டரான மானமிகு மயிலை திரு.சாமிநாதன் அவர்கள் தமது 90ஆவது வயதில், மயிலை காரணீஸ்வரர் கோயில் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்பதை அறிந்து வருந்தினேன்.

அவரது இல்லம் சென்று, அவர் உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினேன். தென்சென்னை மாவட்ட கழக செயலாளர் எம்.கே.காளத்தி, மாவட்டப் பொருளாளர் டி.ஆர்.சேதுராமன் மற்றும் பல கருஞ்சட்டை தோழர்களும் உடன் வந்து மரியாதை செலுத்தினர்.

மறைந்த பெரியவர் சாமிநாதன் சுயமரியாதை வீரர். தான் மறைந்தால் கருப்புச் சட்டை போட்டு, எவ்வித சடங்கும் செய்யாமல் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறியதை, என்னிடம் அவரது துணைவியார், பிள்ளைகள், பேரன்கள் கூறி அழுதனர். அனைவருக்கும் நான் ஆறுதல் கூறினேன். மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களுக்கு நெருங்கிய நண்பர்.

அவரது கடையில் ‘விடுதலை’ இதழ் விற்பனை செய்வதில் தீவிர ஆர்வம் காட்டுபவர் சுயமரியாதை திருமணங்களை தனது இல்லத்தில் நடத்தி வைத்தவர். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், நம்மிடம் மிகுந்த பாசம் கொண்டவர்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், ஜூன் 16 - ஜூலை 15.2020

மதுரையில் இளைஞர் அணி மாநாடும், சமூக நீதி மாநாடும்

20.8.1993 மதுரையில் இளைஞர் அணி மாநாடும், 21.8.1993இல் சமூக நீதி மாநாடும் சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் இளைஞர் அணி மாநாட்டிற்கு தோழர் கொளத்தூர் மணி தலைமையேற்று உரையாற்றினார். “ஜாதி மறுப்புத் திருமணங்கள் அதிகம் நடைபெற வேண்டும்; வடமொழிக் கலப்பற்ற தமிழில் பயன்படுத்தப்பட வேண்டும்; தொலைக்காட்சி, வானொலி, பார்ப்பன ஏடுகளில் வரும் கண்டனத்திற்குரிய செய்திகளுக்கு உடனுக்குடன் தோழர்கள் கடிதங்கள் அதிக அளவில் எழுத வேண்டும்’’ போன்ற கருத்துகளை வலியுறுத்திப் பேசியிருந்தார்.

மாநாட்டில் சிறப்புரையாற்றுகையில், “திராவிடர்களை இழிவுபடுத்தும் இந்து மதத்திற்கு நாங்கள் எதிர்ப்பாளர்கள் தான்.  இந்து மதம் தமிழர்களின் மதமல்ல; திராவிடர்களின் மதமல்ல; இந்து மதம் என்பது பார்ப்பனர்களுடைய மதம். இந்து என்பதே தமிழ்ச் சொல் அல்ல; உனக்கு தைரியமிருந்தால் வா! இதோ ஆதாரத்தை வைத்திருக்கிறேன்; சென்னை உயர்நீதிமன்றத்திலே ஜஸ்டீஸ் ராஜமன்னார் அளித்த தீர்ப்பு இருக்கிறது; அதில் ‘இந்து’ என்ற சொல் இந்தியாவிலே எந்த மொழியிலும் இருக்கிற சொல் அல்ல என்று எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. அதற்கு ஒரு குறிப்பிட்ட கொள்கை கிடையாது என்று ஜஸ்டீஸ் ராஜமன்னார் மிக ஆழமாக எழுதி இருக்கிறார். எனவே நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை; தமிழர்களை சம்பந்தப்படுத்துவது அல்ல; ஆகவேதான், அதைக் கடுமையாக எதிர்க்கிறோம்.

நான் தெளிவாகவே உங்கள் முன்னால் வைக்க விரும்புகிறேன்; அய்யா காலத்தில் அவர்கள் தொடுத்த போரை - நாம் முடித்தாக வேண்டும்; இனிமேலும் நம்முடைய சமுதாயத்தில் சூத்திரப் பட்டம் நமக்கு இருக்கக் கூடாது; எந்தக் கூட்டம் காலம் காலமாக நம்மை அழுத்தி - நம்மை “பார்ப்பானுடைய வேசி மக்களாக’’ ஆக்க நினைக்கிறதோ, அந்தக் கூட்டத்தின் ஆதிக்கத்துக்கு - அதன் கல்லறையின் கடைசிக் கல்லை நாம் கட்டியாக வேண்டும்.’’ போன்றகருத்துகளை எடுத்துக் கூறினேன்.

21.8.1993 இரண்டாம் நாள் சமூக நீதி மாநாட்டில் முதல் நிகழ்வாக புரபசர் சுப.பெரியார் பித்தன் அவர்களின் மந்திரமா தந்திரமா நிகழ்வு வயிற்றைக் கத்தியால் கிழித்து குடலை உறுவி எடுக்கும் காட்சிகள் மெய்சிலிர்க்கச் செய்து காட்டி “மந்திரமல்ல தந்திரமே’’ என்று விளக்கினார். மதுரை வழக்கறிஞர் மகேந்திரன் வரவேற்புரையாற்ற, கு.வெ.கி. ஆசான் அவர்கள் தலைமையில் “ஆரிய திராவிடப் போராட்டம்’’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. பேராசிரியர் நம் சீனிவாசன், வழக்கறிஞர் வை.பாண்டிவளவன், விடுதலை இராசேந்திரன், முனைவர் பு.இராசதுரை ஆகியோர் சமூக நீதி குறித்தும், பார்ப்பன ஆதிக்கம் குறித்தும் உரையாற்றினர்.

மதுரை மாநாட்டில் இளைஞரணி பேரணியை பார்வையிடும் ஆசிரியர் மற்றும் சிறப்பு விருந்தினர்

மாலை 3 மணிக்கு மதுரையே மணக்கும் அளவிற்கு மாபெரும் சமூக நீதி பேரணி ‘தினமணி’ திரையரங்கம் அருகிலிருந்து புறப்பட்டு மாநாட்டு மேடையைச் சென்று அடைந்தது. தந்தை பெரியாரின் படத்தைத் திறந்து வைத்து புலவர் கோ.இமயவரம்பன் உரையாற்றுகையில், தந்தை பெரியாருக்கும், அன்னை மணியம்மையாருக்கும் “குற்றேவல்” செய்வதற்காக என்னை ஒப்படைத்துக் கொண்டேன். தொடர்ந்து ஆசிரியர் அவர்களின் அரிய பணிக்கு உறுதுணையாக இருந்து வருகிறேன் என்று உணர்வு பொங்கக் குறிப்பிட்டார்.!

அதன்பின் மாநாட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அடுத்து துரைச் சக்கரவர்த்தி தலைமையில் “கழகச் செயற்பாடுகள் பணிகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

கருத்தரங்கை தொடர்ந்து மாநாட்டு மேடையில் மூன்று மணவிழாக்களை நான் நடத்தி வைத்தேன்.

கோ.இமயவரம்பன்

தென்னாற்காடு மாவட்டம் அனந்தபுரம் கிருட்டிணன்- - உண்ணாமலை ஆகியோர் மகள் சம்பத்ராணி, கொசப்பாளையம் பெரியசுவாமி- - வள்ளியம்மை ஆகியோரது மகன் பாரதி மணவிழாவினை முதலாவதாக நடத்தி வைத்தேன். தொடர்ந்து ஜோலார்பேட்டை துரைசாமி-- ஜீவராணி ஆகியோரது மகள் தமிழ்ச்செல்வி, ஜோலார்பேட்டை தங்கவேலு- - கண்ணம்மாள் ஆகியோரது மகன் சவுந்தரபாண்டியன் மணவிழாவினை நடத்தி வைத்தேன். மூன்றாவது திருமணமாக பழனி முனியப்பன்- - முத்துலெட்சுமி ஆகியோரது மகள் செல்வி, கள்ளிக்குடி ஆறுமுகம்- - நாகம்மாள் ஆகயோர் மகன் சேகர் மணவிழாவினை தலைமையேற்று நடத்தி வைத்தேன்.

திருமணங்களுக்குப்பின் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் நிகழ்வும், நமது பண்பாட்டை மீட்டெடுக்கும் நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.

மாநாட்டில் மத்திய சமூகத்துறை அமைச்சர் சீதாராம் கேசரி பேசுகையில் முதலில் “நான் தந்தை பெரியார் பற்றாளன், சமூகநீதி கொள்கையில் அவருடைய கொள்கைகளை பின்பற்றுபவன்’’ என்று நெகிழ்வுடன் தெரிவித்தார்.

சீதாராம் கேசரி

இறுதியில், நான் மாநாட்டு நிறைவுரை ஆற்றினேன் அதில், “திராவிடர் கழகத்தை மிரட்டும் பார்ப்பன மதவெறி சக்திகளுக்கு இளைஞரணி மாநாட்டில் கடும் எச்சரிக்கை விடுத்தேன். திராவிடர் கழகத்திடம் மீறி வாலாட்டினால் அதை சந்திக்க தயார். நாங்கள் வன்முறைக்கு போகமாட்டோம். ஆனால் எங்களை தாக்க வந்தால், எதிரியை கொல்லும் வேளையில் சாவோம் என்று தந்தை பெரியார் கூறிச் சென்ற கருத்தை அப்படியே நிறைவேற்றுவோம்.’’ என்று குறிப்பிட்டேன்.

மாநாட்டில் மலேசிய திராவிடர் கழக தேசிய தலைவர் திருச்சுடர் இராமசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், மே 16 ஜூன் - 15 .2020

சென்னை ராயப்பேட்டையில் தந்தை பெரியார் சிலை திறப்பு

30.9.1993 தந்தை பெரியார் சிலை திறப்பு சென்னை  ராயப்பேட்டையில் நடந்தது. தி.மு.க, அ.தி.மு.க., பா.ம.க. தோழர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணியில் பெரியார் சமூகக் காப்பணி, தற்கொலைப் படை அணிவகுப்பு அனைவரையும் ஈர்த்தன. புதுப்பேட்டை அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, அய்ஸ்அவுஸ், வி.எம்.தெரு வழியாக விழா மேடையை அடைந்தது. தனி மேடையில் அமர்ந்து பேரணியை பார்வையிட்டேன். பின் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

தந்தை பெரியார் முழு உருவச் சிலையை அ.தி.மு.க. செயல் வீரர் மணிமாறன் அன்பளிப்பாக வழங்கினார்.

அனைத்துக் கட்சித் தலைவர்களும் பேசிய பின் நான் எனது நிறைவுரையை இரவு 10.40க்கு தொடங்கி 12.05க்கு நிறைவு செய்தேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், மே 16 - ஜூன் 15 .2020

வியாழன், 4 பிப்ரவரி, 2021

வடசென்னை மாவட்டக் கழக இளைஞரணித் தலைவர் கி.இராமலிங்கம் - -லட்சுமி ஆகியோரது மணவிழா

15.08.1993 திராவிடர் கழக தலைமை நிலையத்தில் பணியாற்றி வருகின்ற வடசென்னை மாவட்டக் கழக இளைஞரணித் தலைவர் கி.இராமலிங்கம் - -லட்சுமி ஆகியோரது மணவிழாவினை தலைமையேற்று நடத்தி வைத்தேன்.

சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடந்த மணவிழாவினை தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவரையும் வரவேற்று தலைவரை முன்மொழிந்தார்.

பெரியார் அஞ்சல் வழிக் கல்லூரி முதல்வர், பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந.இராமநாதன், வடசென்னை மாவட்டத் தலைவர் க.பலராமன், மாவட்ட செயலாளர் அ.குணசீலன், புரசை பகுதி தி.மு.க. செயலாளர் சிட்டிபாபு, தென்சென்னை மாவட்டக் கழக தலைவர் எம்.பி.பாலு, மாவட்டச் செயலாளர் எம்.கே.காளத்தி, வடசெங்கை எம்.ஜி.ஆர். மாவட்ட செயலாளர் ஆவடி இரா.மனோகரன், செம்பியம் வட்ட தி.மு.க. செயலாளர் ரெங்கநாதன், தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் எம்.கே.டி.சுப்ரமணியன், மாநில இளைஞரணி செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில மகளிரணி செயலாளர் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், ‘விடுதலை’ நிர்வாகி சி.ஆளவந்தார், தலைமை நிலையச் செயலாளர் ஆனூர் ஜெகதீசன், சென்னை மாவட்டக் கழக அமைப்பாளர் இனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன், கழக சட்டத்துறை செயலாளர் வழக்குரைஞர் செ.துரைசாமி, கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சாமிதுரை ஆகியோர் மணமகன் இராமலிங்கத்தின் சிறப்புகளையும், தொண்டுகளையும் பாராட்டி வாழ்த்தி உரையாற்றினார்கள்.

ஏராளமான கருஞ்சட்டைக் குடும்பத்தினரும், நண்பர்களும் திருமண விழாவிற்குத் திரண்டு வந்திருந்தனர்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 16.4-15.5.20

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்!

மதவெறியை மாய்ப்போம் மனித நேயம் காப்போம் என்று தமிழ்நாடு முழுவதுமான பிரச்சாரப் பெரும் பயணத்தின் நிறைவு மாநாடு

18.04.1993 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற மதவெறியை மாய்ப்போம் மனித நேயம் காப்போம் என்று தமிழ்நாடு முழுவதுமான பிரச்சாரப் பெரும் பயணத்தின் நிறைவு மாநாடு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, மதவெறி ஆபத்தானது என்பதை விளக்கி கடந்த ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி கன்னியகுமரியிலிருந்து சென்னை வரை நடைபெற்றது. நாடு முழுவதும் பிரச்சார செய்துள்ளோம். மதவெறியை மாய்ப்பதன் மூலமே மனித நேயத்தைக் காக்க முடியும் என்பதனை தெளிவாக அறிவித்திருக்கிறோம்!

எந்தப் புரட்சியானாலும், சமுதாயப் புரட்சியைப் பொறுத்த வரையிலே, அது தென்னாட்டில் - தந்தை பெரியார் பிறந்த மண்ணான தமிழ்நாட்டிலிருந்துதான் கிளம்ப வேண்டும் என்கிற அடிப்படையில்தான் இந்த ஒலி முழக்கத்தை நாம் கொடுத்தோம். அண்மையில் சமூகநீதி காவலர் வி.பி.சிங் அவர்களுடன் தமிழகத்திற்கு வந்த அன்பு சகோதரர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்கள், "டில்லி இந்தியாவின் தலைநகரம் என்று சொன்னாலும், சமூகநீதிக்கு இந்தியாவில் ஒரு தலைநகரம் உண்டு என்று சொன்னால் அது தந்தை பெரியார் பிறந்த மண்ணான தமிழ்நாடாகத்தான் இருக்க முடியும். ஆகவேதான், தமிழ்நாடு எப்படி வழிநடத்திச் செல்கிறது என்பதை எண்ணிப் பார்க்கிறோம்" என்று சொன்னார்.

ஆரியத்தின் உயிர்நாடி எதுவென்று கண்டறிந்து அந்த இடத்தில்தான் தந்தை பெரியார் கை வைத்தார்கள். அதன் காரணமாக குலதரும ஆட்டம் கண்டது. தந்தை பெரியாரின் தத்துவம் தென்னாட்டில் மட்டுமல்லாது வடநாட்டிலும் பரவ ஆரம்பித்தது என்று பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை எடுத்து விளக்கி உரையாற்றினேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 1-15.4.20

பட்டம்மாள் பாலசுந்தரம் (பாவலரின் வாழ்விணையர்) மறைவுற்றார்

4.1.1993 அன்று தமது 85 வயதிலும் போராட்டக் குணத்தோடு, கொள்கை நெறியோடும் நம்மோடு வாழ்ந்து உற்சாகமூட்டி வந்த அம்மா பட்டம்மாள் பாலசுந்தரம் (பாவலரின் வாழ்விணையர்) மறைவுற்றார் என்கிற செய்தியை தொலைபேசி வாயிலாக அறிந்து ஆறாத் துயரம் அடைந்தேன்.

அப்போது, தமிழ்நாட்டின் கடைகோடியில் நாகர்கோயிலில் தீவிரப் பிரச்சாரத் திட்டப் பயணத்தில் இருந்ததால், இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

பாவலர் பாலசுந்தரம் அவர்கள் இயக்கத்திலே ஆற்றிய அரும்பணி நாடறிந்தது. அவர் மறைவுக்குப் பிறகு எவ்வளவோ கஷ்ட நஷ்டங்கள் இருந்த நிலையிலும் கழகம்தான் மூச்சு _ கழகம் போராட்டத்தை அறிவிக்கும் என்றால் அதில் ஈடுபடும் முதல் வீராங்கனை என்கிற உணர்வோடு நம்மோடு வாழ்ந்து வந்தார்கள். அவர்களை இயக்கம் பல வகையிலும் பராமரித்துப் போற்றியும் வந்தது என்பது நமக்கு ஒருவகையில் ஆறுதல் என்றாலும் 1938 இந்தி எதிர்ப்பு போராட்டம் தொட்டு, தளரா நடைபோட்டு வந்த மூதாட்டியை, வீராங்கனையை இழப்பது என்பது சாதாரணமானதல்ல! அவர்கள் உயிரோடு இருக்கும்போதே தஞ்சை வல்லம் பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் “பட்டம்மாள் பாலசுந்தரம் பூங்காவை’’ அமைத்து அவரைப் பெருமைப்படுத்தியுள்ளோம்.

பட்டம்மாள் பாலசுந்தரம்

மூதாட்டியார் மறைந்தாலும் அவர்களின் தொண்டும் தீரமும் போராட்டக் குணமும் கட்டுப்பாடும் நம் நினைவில் என்றைக்கும் பசுமையாக இருக்கும்: வழிகாட்டியாகவும் இருக்கும் என்றும், மறைந்த அம்மாவின் அரை நூற்றாண்டுத் தூய தொண்டறப் பணிக்கு வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.

18.2.1993 அன்று தியாகராயர் நகரில் நடந்த மறைந்த “பட்டுப் பாவலர்’’ உருவப் படத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு படத்தினை திறந்துவைத்து உரை நிகழ்த்தினேன். அப்போது, “மறைந்த மூதாட்டியார் பட்டம்மாள் பாலசுந்தரம் அவர்களின் சிறந்த தொண்டினை நினைவுகூர்ந்து அவரது தொண்டுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியை தோழர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

அம்மையார் அவர்களின் தொண்டு சாதாரண எளிய தொண்டு அல்ல. 1938லே “ஓடி வந்த இந்திப் பெண்ணே நில்; நீ நாடி வந்த நாடு இதுவல்ல _ செல்’’ என்று பாடி பாவலர் பாலசுந்தரம் அவர்களை வாழ்க்கைத் துணைவராக ஏற்ற அந்தக் கால கட்டத்திலிருந்து தன்னுடைய இந்தக் காலகட்டம் வரை கட்டுப்பாட்டோடு தொண்டு ஆற்றியவர்கள்.

இந்த இயக்கத்தில் பல சரிவுகள் ஏற்பட்டன. நிறைய பேர் சபலங்களுக்கு ஆளாயினர். ஆனால், மறைந்த பட்டம்மாள் அவர்கள் தன்னுடைய இறுதி மூச்சு வரை, 89 வயதானாலும், கட்டுப்பாட்டோடு கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் சிறப்பாக முன்னின்று பங்கேற்றவர். கழகம் எந்தப் போராட்டம் அறிவித்தாலும் அதில் முன்னின்று, மகளிரணியினருக்குத் தலைமையேற்று, ஊர்வலத்தில் முதலில் கழகக் கொடியினை ஏந்தி வருபவர். அப்படிப்பட்ட அவர்களுடைய இழப்பு திராவிடர் கழகத்தாருக்குப் பெரிய இழப்பாகும்.

1938லேயே இந்தி எதிர்ப்புக்காக சிறை சென்ற பட்டம்மாள் அவர்கள் _ பாவலரது மறைவுக்குப் பின்னும்கூட தாயும் மகளும் போட்டி போட்டுக்கொண்டு போராட்டங்களில் பங்கேற்றவர்கள். அவருடைய மகளின் உடல்நிலை மோசமாகி இறந்த நேரத்திலும்கூட எல்லா போராட்டங்களிலும் பங்கேற்று வந்தார். அப்படிப்பட்ட கொள்கைக் குடும்பம்’’ என்று பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களை எடுத்துரைத்தேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 16-31.3.20