புதன், 29 மே, 2019

திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டம்திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், செயலாளர் மு.சித்தார்த்தன் மற்றும்  பங்கேற்ற கழக வழக்குரைஞர்கள் (சென்னை-பெரியார் திடல், 22.5.2019)

- விடுதலை நாளேடு, 22.5.19

அருந்ததி மக்கள்மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்சென்னை, மே 27 இராம நாதபுரம் மாவட்டம் பாப்பா குடியில் அருந்ததியர் மக்கள் மீது கொலை வெறித் தாக்கு தல் நடத்திய சமூக விரோதி களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப் பாட்டம் சென்னை வள் ளுவர் கோட்டம் அருகே இன்று (27.5.2019) காலை தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பல் வேறு அமைப்புகளின் சார் பில் பலரும் கலந்து கொண் டனர்.
திராவிடர் கழகம்  சார்பில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
- விடுதலை நாளேடு, 27. 5 .2019

திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

வல்லம், மே 27 திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைகழகத்திலுள்ள வள்ளுவர் அரங்கில் 18.05.2019 சனிக்கிழமை மாலை 05.15 மணியளவில் துவங்கி நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார்

தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் ராஜவேல் "கடவுள் மறுப்பு" கூறினார். திராவிடர் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் அனைவரையும் வரவேற்றார்.

கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், பொதுச் செயலாளர்கள் வீ.அன்புராஜ், முனைவர் துரை. சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், கழக மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன் ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்து கருத்துரையாற் றினார்கள்.

மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் தே.காமராஜ், அ.சுரேஷ், ப.வெற்றிச் செல்வன், வெ.ஆசைத்தம்பி, க.கண்ணன், பெரியார் சமுகப் பாதுகாப்பு அணியின் மாநில பொறுப்பாளர் சுரேஷ், தஞ்சை மண்டல இளைஞரணிச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், திருச்சி மண்டல இளைஞரணிச் செயலாளர் வீ.அன்புராஜா, திண்டுக்கல் மண்டல இளைஞ ரணிச் செயலாளர் குணா.அறிவழகன், கோவை மண்டல இளைஞரணிச் செயலாளர் ச.மணிகண்டன், சேலம் மண்டல இளைஞரணிச் செயலாளர் கூ.செல்வம், கடலூர் மண்டல இளைஞரணிச் செயலாளர் ந.பஞ்சமூர்த்தி, வட சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், புதுக்கோட்டை மண்டல இளைஞரணி செயலாளர் வீரைய்யா, புதுச்சேரி மண்டல இளைஞரணிச் செயலாளர் ச.முகேஷ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி தலைவர் சோ.நீலகண்டன் கூட்டத்தில் வடிக்கப்பட்ட தீர்மானங்களை வாசித்தார்.

பங்கேற்றோர்


தஞ்சை மண்டல திராவிடர் கழக தலைவர் ஜெயராமன், செயலாளர் அய்யனார், தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், செயலாளர் வழக்குரைஞர் அருணகிரி, தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன், ஆவடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கலைவேந்தன், காரைக்கால் மாவட்ட இளைஞரணி தலைவர் நாத்திக.பொன்முடி, வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் தயாளன், தருமபுரி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அர்ச்சுணன், கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி தலைவர் இல. ஆறுமுகம், ஒசூர் மாவட்ட இளை ஞரணி தலைவர் செ.டார்வின் பேரறிவு, திண்டிவனம் மாவட்ட இளைஞரணி தலைவர் கே.பாபு, கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் அ.கரிகாலன்,  கடலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் ந.உதயசங்கர், செயலாளர் வேலு, விருத்தாசலம் மாவட்ட இளைஞரணி தலைவர் செ.சிலம்பரசன், நாமக்கல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சு.சேகர், கோவை மாவட்ட இளைஞரணி தலைவர் ச.திராவிடமணி, அமைப்பாளர் விவேக், நீலமலை மாவட்ட இளைஞரணி தலைவர் யா.சத்தியநாதன், செயலாளர் சி.இராவணன், தாராபுரம் கழக மாவட்ட இளைஞரணி தலைவர் நா.மாயவன், செயலாளர் மா.இராமசாமி, திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் ம.ரமேஷ்,கரூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் கா.ஜெகநாதன், பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் பெ.சின்ன துரை, அரியலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் க.கார்த்திகேயன், திருவாரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ, செயலாளர் சி.ராஜமணிகண்டன், பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா.வீரத்தமிழன், அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவர் ப.மகாராஜா, செயலாளர் இரா.யோகராஜ், தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் ம.சுருளிராஜ், மதுரை மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.கண்ணன், மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் பா.முத்துக்கருப்பன், செயலாளர் இரா.பிரபாகரன், விருதுநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் ச.சுந்தரமூர்த்தி, தென்காசி மாவட்ட இளைஞரணி தலைவர் சு.கோபால் உள்ளிட்ட மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக இளைஞரணி பொறுப்பாளர்கள் 250 பேர்,திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் 40 க்கும் மேற்பட்டோர் என 300 பேர் நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். கூட்ட முடிவில் குடந்தை மாவட்ட இளைஞரணி தலைவர் க.சிவக்குமார் நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு 27. 5 .2019

திங்கள், 20 மே, 2019

திராவிடர் கழக இளைஞரணியின் மாநிலக் கலந்துரையாடல் கூட்டம்

அழைக்கிறார் தமிழர் தலைவர்

உயிர் வெல்லமல்ல-வெல்லுவோம், வாரீர்!''
தஞ்சை, மே 19 2019 மே 18 அன்று தான் தஞ்சை வல்லத் தில் பகுத்தறிவாளர் கழகப் பயிற்சிப் பட்டறையும் (ஒர்க் ஷாப்), திராவிடர் கழக இளைஞரணியின் மாநிலக் கலந்துரையாடல் கூட்டமும் ஒரே நேரத்தில் நடைபெற்றன.

இரு நிகழ்வுகளும் கண்களில் ஒத்திக்கொள்ளத் தக்க வைகளாக அமைந்திருந்தன. இந்தக் காலகட்டத்தில் கழகம் பொலிவுடனும், தெளிவுடனும், திட்டவட்டத்துடனும், காலத்துக்கேற்ற வியூகத்துடனும் வீறுநடை போடுகின்றது என்பதற்கான அடையாளமாக இவை அமைந்திருந்தன.

தமிழர் தலைவர் மகிழ்ச்சியில் திளைத்த நாள்களுள் இதுவும் ஒன்றே! காரணம், ‘‘தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் நம்மை நம்பி விட்டுச் சென்ற கழகத்தைக் கருத்துடனும், கம்பீரத்துடனும், வலிமை மிக்கதாக உருவாக்கியிருக்கிறோம்'' என்று  பெருமை கொள்ளத்தக்க வகையில் இருந்தமையால் ஏற்பட்ட மகிழ்ச்சிதான் அது. ஏப்ரல் 27 ஆம் தேதி திராவிடர் கழக மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டல, மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் கூட்டத்தின் எழுச்சியும், மே 15 ஆம் தேதி மாநில மகளிரணி - மகளிர் பாசறையினரின் மகத்தான சந்திப்பும், கலந்துரையாடலும், மே 6 முதல் 10 வரை வல்லத்தில் நடைபெற்ற பெரியார் பிஞ்சுகள் பழகு முகாமும், தஞ்சை, மதுரை, ஈரோடு, திண்டிவனம் ஆகிய இடங்களில் நடைபெற்ற மாணவரணியினரின் கலந்துரையாடல்களும், சென்னையில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையும் (11, 12.5.2019) என்று அலை அலையாகக் கழக அமைப்புப் பணிகள் கழக வரலாற்றில் மிக அடர்த்தியாக நடைபெற்றமை நினைக்க நினைக்க மலைக்கும் - மணக்கும் நிகழ்ச்சிகளின் நிரல்களாகும்!

நேற்று (18.5.2019) நடைபெற்ற இளைஞரணி கலந்துரை யாடலில் தமிழ்நாடு தழுவிய அளவில் பொறுப்பாளர்கள் என்ற முறையில் 250 பேர் பங்கேற்றனர்.

இதைப்பற்றிக் கருத்துச் சொன்ன கழகத் தலைவர், கழகத்தில் தலைமுறை இடைவெளியில்லாமல் அனைத் துப் பருவத்தினரும் நிறைந்து காணப்படுவதைச் சுட்டிக் காட்டினார்.

கழகத்தில் 90 வயதுடைய இளைஞர்களும் இருக்கின் றனர், 25 வயதுடைய முதிர்ச்சியோடு நடந்துகொள்ளும் காளையர்களும் உள்ளனர்.

எந்தவித கைமாறும் எதிர்பார்க்காமல், நன்றி பாராட் டாமல், இழிமொழிகளைக் கண்டு எரிச்சல் அடையாமல், அவற்றை ஏற்று, சிறைச்சாலை என்றாலும், இன்முகத்தோடு செல்லும் இலட்சிய வீரர்களின் பாசறையாக அறிவு ஆசான் தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட ஒரே இயக்கம் திராவிடர் கழகம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார் கழகத் தலைவர்.

நமது படைக்கலன் என்றால், அணுகுண்டல்ல, அரிவாள், துப்பாக்கிகளும் அல்ல, அல்ல!

நமது ஏடுகளும், இதழ்களும், நூல்களும்தான் அவை!

‘‘ஒரு நாள், ஒரு பொழுதேனும் ‘விடுதலை'யைப் படிக்காமல் இருப்பேனா'' என்ற உணர்வு பெறவேண்டும்.

இளைஞரணி தோழர்கள் டார்பிடோக்களாக செயல்பட வேண்டும். பெரிய பெரிய கப்பல்களை மூழ்கச் செய்யும் சப்மரின்களாக வேண்டும். ‘விடுதலை' அறிக்கைகளை, தலையங்கங்களை, கட்டுரைகளைப் படிக்கவேண்டும். தந்தை பெரியார் நூல்களை வாசிக்கவேண்டும் - ஏன் சுவாசிக்கவும் வேண்டும்.

எதிரிகளே கூட பெரியார் இறந்ததாக நினைக்கவில்லை - கொள்கையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்றுதான் நினைக்கிறார்கள். பெரியார் தென்றலாகவும் வீசுவார், அதேநேரத்தில் புயலாகவும் சுழன்றடிப்பார்.

இளைஞர்களே, உங்களுக்கு வழிகாட்ட இயக்கம் என்றென்றைக்கும் இருக்கிறது, அஞ்சாதீர்கள்!

நமக்குக் கிடைத்த தத்துவ ஆசான் போல் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. நாம் இருக்கும் இயக்கம் போல வேறு இயக்கம் கிடையாது நாட்டில்.

நமது கொள்கைக்கு ஈடான - இணையானது வேறு எங்குமில்லை. நாம் இதற்காகப் பெருமைப்படலாம்.

கிராமப் பிரச்சாரங்கள், தெருமுனைக் கூட்டங்கள் எங்கெங்கும் நடக்கட்டும்! நடக்கட்டும்!!

பெரியார் சமுகக் காப்பணி என்னும் தொண்டற அணி யின் பயிற்சி முகாம்கள் திட்டமிட்டபடி நடக்கவேண்டும்.

திராவிடர் கழகம் பிறந்த அதே சேலத்தில் வரும் ஆகஸ்டு 27 ஆம் தேதி திராவிடர் கழக பவள விழா மாநாடு - பல்வேறு அம்சங்களின் அணிகலனாக நடைபெற உள்ளது. பெரியார் சமுகக் காப்பணியில் ஆயிரம் பேர்கள் அரிமா சேனையென அணிவகுக்க வேண்டும்.

சீருடை அணிந்த இளைஞரணி வீறுநடை போட்டு - கொள்கை முழக்கமிட்டுக் கம்பீரமாக நடந்துவர வேண்டும். அவற்றை எல்லாம் கண்டு நாட்டு மக்கள் திகைக்கவேண்டும்.

புத்துயிர்ப் பெற்று புறப்பட்டது காண் புதிய புறநானூற்றுப் பெரும்படை என்று எவரும் நினைக்கும் வண்ணம் இன எதிரிகள், பிற்போக்குச் சக்திகள் நடுங்கும் வண்ணம் கட்டுப்பாட்டின் இலக்கணமாக அமையவேண்டும் என்று தமிழர் தலைவர் சொன்னபொழுது, அரங்கமே குலுங்கும் வண்ணம் பலத்த கரவொலி! கரவொலி!!

இளைஞர்களே, சொந்தக்காலில் நிற்கத் துணிவு கொள்ளுங்கள்! கழகம் உங்களுக்கு வழிகாட்டும்!

இங்கு வரும்போது எப்படி வந்தீர்கள் என்பது முக்கியமல்ல; திரும்பிச் செல்லும்போது முறுக்கேறிய தோள்களோடு, நரம்புகளோடு புது ரத்தம் பாய்ச்சிய புது மிடுக்கோடு வீடு செல்லுவீர்!

சேலம் மாநாடு நமது வலிமையைக் காட்டட்டும்! நமது பொலிவை உணர்த்தட்டும்!

முகநூலில் என்னைப்பற்றி வந்ததைக் காட்டினார்கள். ஜட்ஜாகியிருப்பார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஜட்ஜானால் ரிட்டயர்டு ஆகி, ஓய்வு பெற்று மூலையில் முடங்கி இருப்பேன்!

தந்தை பெரியாரை அடையாளம் கண்டு பத்தாம் வயதில் அவர் கரம் பற்றியதால் ஓய்வு என்றால், என்னவென்று தெரியாமல் உழைப்பதில் மகிழ்ச்சியின் எல்லையில் திளைக்கிறேன்.

வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டால் 365 நாள்களிலும் ஒவ்வொரு வீட்டிலும் என்னை அழைத்து விருந்து படைக்க எண்ணற்ற இயக்கத் தோழர்கள் இருக்கிறார்கள் - இதைவிட எனக்கு என்ன பேறு வேண்டும்? என்று தமிழர் தலைவர் கூறியபோது, ஓர் உருக்கமான நெகிழ்ச்சியான உணர்வு!

உயிர் வெல்லமல்ல இளைஞர்களே!

அய்யா இலட்சியத்தை ஈடேற்றுவோம்! என்ற தமிழர் தலைவரின் முத்து முத்தான சொற்களின் ஓவியம் நம் நெஞ்சச் சுவர்களில் உயிரோட்டமாக வரையப்பட்டு விட்டது.

புதியதோர் உலகு செய்வோம் - கெட்ட ஆரியத்தை வேரோடு சாய்ப்போம்!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!

இளைஞர்களின் குரல்!


கலந்துரையாடல் கூட்டத்தில் உரையாற்றிய இளைஞரணி பொறுப்பாளர்களின் குரல்!

*தமிழ்நாட்டில் வடநாட்டவர்களின் படை யெடுப்பு அதிகரித்து வருகிறது. அதற்கொரு முடிவு கட்டப்படவேண்டும்.

*தமிழர் தலைவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி களுக்குக் காவல்துறையை எதிர்பார்க்கக் கூடாது. நாமே பாதுகாப்பை அளிப்போம் - நம்மால் முடியும்!

*கிராமங்கள்தோறும் நமது அனைத்து அணி களும் கட்டமைக்கப்படவேண்டும்.

*கல்லூரிகள், விடுதிகளில் கழக அணி அமைக் கப்படவேண்டும்.

*அமைப்புக் கூட்டங்கள் குறிப்பிடப்பட்ட இடைவெளியில் நடத்தப்படவேண்டும்.

*பெரியார் சமுகக் காப்பு அணியில் ஆயிரம் பேர் இடம்பெறவேண்டும் - அதற்கான பயிற்சியை அளிக்கவேண்டும்.

*கல்வி, வேலை வாய்ப்புகளில் கழகம் வழிகாட்ட வேண்டும்.

*நம் குடும்பங்களை முதலில் கொள்கை மயமாக்கவேண்டும்.

- கழக இளைஞரணி தோழர்கள் தெரிவித்த  கருத்துக்களின் திரட்டு!

தந்தை பெரியாரின் அழைப்பு


(16.4.1944 அன்று காலை 11 மணிக்கு ஈரோடு பெரியார் மாளிகையில் திராவிட மாணவர் பிரச்சாரத் திட்டம் வகுக்கும் மாநாட்டில் பங்கேற்க மாணவர்களுக்குத் தந்தை பெரியார் அழைப்பு)

அன்புள்ள மாணவர்களே!,

பிற்காலம் உங்களுடையது. நீங்கள் படிப்பதும் படித்ததும் உங்கள் வயிற்றுப்பிழைப்புக்கோ, வாழ் வுக்கோ வகை செய்து கொள்ளுவதற்கு மாத்திரமல்ல. நாட்டைப் பாருங்கள். நாட்டில் உங்கள் இன நிலைமையைப் பாருங்கள். திராவிடர் (தமிழர்) சூத்திரர்களாக இருந்து வருவதும், திராவிட நாடு மிலேச்ச நாடாக கருதப்பட்டு வருவதும், மனித உரிமை இல்லாதிருப்பதும் நீங்கள் அறியாததா? இதற்கு இதுவரை "தெய்வீக சக்தி பெற்ற" பெரியார்களும் உங்கள் சமீப முன்னோர்களும் என்ன செய்தார்கள்? இன்றுள்ள பிரபுக்கள், புலவர்கள், பெரும் பதவி யாளர்கள் தான் ஆகட்டும் இவர்கள் என்ன செய் தார்கள்? குறைந்த அளவு இந்த இழி நிலைக்கு நம்மை ஆக்கியவர்களையாவது அவர்களது ஆயுதங் களையாவது, வேலை திட்ட நடப்பு முறையையாவது விலக்கினார்களா, வெறுக்கவாவது செய்தார்களா? வெறுக்காதவர்களால் விலக்க முடியுமா? இப்படிப்பட்ட இவர்கள் சந்ததியில் வந்த நமக்கு மான உணர்ச்சி வர இடமில்லை என்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். அப்படி நமக்கு மான உணர்ச்சி ஏற்பட்டாலும் அது இயற்கைக்கு விரோதம் தான்.

ஆனாலும் நாம் செயற்கரிய காரியம் செய்ய முற்பட்டவர்கள்; இயற்கையை மாற்ற முடியும் என்பவர்கள்; இதற்கு இந்தக் காலமே வசதி என்று கண்டவர்கள்; இப்போது நாம் செய்யாவிட்டால் இனி செய்வதற்கு ஆட்களும் சந்தர்ப்பமும் கிடையாது என்றும் கருதுகிறவர்கள். ஏனெனில் இன்று நம் மக்கள் நிலை அப்படிப் போய்க் கொண்டிருக்கிறது. ஆதலா லேயே இந்த நிலையை மாற்ற நாமே அருகர்கள். வெற்றி பெறினும், தோல்வி உறினும் நாமே உழைத்துப் பார்க்க வேண்டியவர்களாய் விட்டோம். விழியுங்கள், எழுந்திருங்கள், ஆழ்ந்து சிந்தியுங்கள், உங்கள் தனிப்பட்ட வாழ்வைக் காரித் துப்புங்கள். உங்கள் இனத்தை மனிதத் தன்மையதாக்குங்கள். நம் நாட்டை மேன்மையும் வீரமும் பொருந்திய நாடாக்குங்கள். நாடு நகரம் பட்டிதொட்டி எல்லாம் தன்மானக் குரலெழுப்புங்கள்.

கோழைகளையும், தன்னல வீணர்களையும் எள்ளுருவாக்குங்கள், பெண் மக்களை ஆண்மை யுள்ளவர்களாக ஆக்குங்கள். கீழ் மக்களை, தீண்டப் படாதவர்கள் என்பவர்களை மேன் மக்களாக்குங்கள். இவை உங்களால் முடியும்; கண்டிப்பாக முடியும்; அதுவும் இப்போதே முடியும்; இப்போதுதான் முடியும்.

இவை முடிவதற்கு முன் சுலபத்தில் குடும்பத்தினராக ஆகாதீர்கள், ஆகாதீர்கள். எனவே வாருங்கள்; போர் முனைக்கு வந்து வரிந்து கட்டி நில்லுங்கள்.

- ஈ.வெ.ரா.,

('குடிஅரசு', 15.4.1944)

- தஞ்சையிலிருந்து மின்சாரம்

உயர் ஜாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இடஒதுக்கீடு அளிக்க தமிழ்நாடு அரச முனைப்பு காட்டுவதா?

* கிளை வாரியாக இளைஞரணி அமைப்பு

* பெரியார் சமுகக் காப்பணி பயிற்சி

* பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள்

இளைஞரணி மாநிலக் கலந்துரையாடல் கூட்டத்தின் தீர்மானங்கள்

தஞ்சாவூர், மே 19 திராவிடர் கழக இளைஞரணி அமைப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவது என்றும், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினருக்கு இடஒதுக்கீட்டில் தமிழ்நாடு அரசு முனைப்புக் காட்டுவது கண்டனத்துக்குரியது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

18.05.2019 அன்று தஞ்சாவூர் வல்லத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் : 1

27.04.2019 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில, மண்டல, மாவட்ட தலைவர், செயலாளர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்று செயல்படுத் துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் : 2

கிளைவாரியாக இளைஞரணி

அமைப்பை உருவாக்குதல்

திராவிடர் கழக இளைஞரணி மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் தங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி கிளைக்கழகம், ஒன்றியக்கழகம், நகராட்சி மற்றும் மாநகராட்சி வட்டக்கழக அமைப்புகளை உரு வாக்குவது. இவ்வமைப்புகளுக்கு புதிய உறுப்பினர்களை மேலும் சேர்த்து மாநிலமெங் கும் கழக இளைஞரணி அமைப்பை வலுப் படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் : 3

பெரியார் சமுககாப்பு அணி பயிற்சி

பெரியார் சமுக காப்பு அணி பயிற்சி முகாம் களை பரவலாக முக்கிய பகுதிகளிலும் நடத் திடுவது. எந்த நேரத்திலும் எதற்கும் தயாராக வுள்ள , உடல்வலிவும், உள்ள உறுதியும் கொண்ட மாவட்டத்திற்கு 15 இளைஞர்களை தேர்வு செய்து, பெரியார் சமுக காப்பு அணி பயிற்சி முகாமில் பயிற்சி பெறச் செய்வது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சுற்றுப் பயணத்தில் பெரியார் சமுக காப்பு அணியில் பயிற்சி பெற்ற இளைஞர்களை பங்கேற்க செய்வது மற்றும் பேரிடர் காலங்களில் முன்னின்று மக்களுக்கு உதவும் பணியாற்றுவது என தீர்மானிக்கப்படுகிறது.

இளைஞரணி தோழர்களுக்கு தற்காப்பு கலைகளான சிலம்பம், கராத்தே பயிற்சிகளை இணைத்து நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் : 4

பெரியாரியல் பயிற்சி பட்டறை

மண்டலத்திற்கு ஒரு இடத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் பெரியாரியல் பயிற்சி பட்டறையை தொடர்ச்சியாக நடத்துவது, பெரு வாரியான இளைஞர்களை பங்கேற்கச் செய்வது, கொள்கைத்தெளிவு, இளம் பேச்சாளர்கள் களப் பணியாளர்களை மெருமளவில் உருவாக்குவது என் தீர் மானிக்கப்படுகிறது.

தீர்மானம் : 5

தெருமுனைக் கூட்டங்கள், கருத்தரங்கங்கள்

கழக இளைஞரணி சார்பில் அவ்வப்போது எழும் பிரச்சினைகளை ஒட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கைகளை விளக் கியும் மற்றும் பகுத்தறிவு பிரச்சார தெருமுனைக் கூட்டங்களை நடத்திடுவதையும் தொடர் பணி யாக மேற்கொள்வது எனவும், அவ்வப்போது எழும் பிரச்சினைகளை ஒட்டிய கருத்தரங்கங் களை முக்கிய நகரங்களில் நடத்தி விழிப் புணர்வை ஏற்படுத்துவது எனவும் தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் : 6

ஏழு தமிழர் விடுதலை

மேனாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தீர்ப்பின் படி, 27 ஆண்டுகளாக சிறை யில் வாடும் ஏழு தமிழர்களை விடுதலை செய்யலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு இருந்தும், தமிழ்நாடு அரசின் அமைச்சரவை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியும், ராஜீவ் காந்தியோடு உயிரிழந்த குடும்பத்தினரால் விடுதலையை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குகள் உச்சநீதி மன்றத்தால் தள்ளுபடியான பிறகும் மேலும் காலம் தாழ்த்தாமல் ஏழு தமிழர்களையும் உட னடியாக விடுதலை செய்யுமாறு மேதகு தமிழ் நாடு ஆளுநரை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட் டுக் கொள்கிறது.

தீர்மானம் : 7

உயர் ஜாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபடுவதா?

மோடி அரசு சமுக நீதி கொள்கைக்கு விரோதமாக, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக பொருளாதார அடிப் படையில் உயர் ஜாதியில் உள்ள வசதியற்றவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு என்ற பெயரில் நாடாளுமன்ற தேர் தல் வரும் சூழலில் அவசர அவசரமாக அரசியல் சட்டத் திருத்தத்தை உருவாக்கி, அதை உடனடியாக அர சாங்க பதிவேட்டில் கெசட் செய்யப்பட்டு அவசரமாக மாநில அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

சமுக நீதிக்கு எதிரான, இந்திய அரசமைப்பு சட்டத் திற்கு எதிரான 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன் றத்திலும் திராவிடர் கழகம், தி.மு.க. பிற்படுத்தப்பட்ட அமைப்புகளின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டு விசா ரணைக்கு ஏற்கப்பட்டுள் ளது. இந்நிலையில், பொரு ளாதாரத்தில் நலிந்த பிரிவின ருக்கு 10% இடஒதுக்கீடு வழி காட்டும் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது கடும் கண்டனத்திற்குரியது. சமுக நீதிக்கு விரோதமானது. தமிழ்நாடு சமுக நீதிமண், பெரியார் மண், சமுக நீதிக்கே இந்தியாவிற்கு வழிகாட்டக் கூடியது தமிழ்நாடுதான். எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த சுற்றறிக் கையை திரும்ப பெற வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது. இல்லை யேல் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் அறிவிக்கும் எந்த விதமான போராட்டத்திற்கும் கழக இளைஞரணி சர்வபரித் தியாகம் செய்ய தயாராக உள்ளது என்பதை இக்கூட் டத்தின் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது.

தீர்மானம் : 8

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புகளில்

வட மாநிலத்தவர்களின் ஆதிக்கம்

தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களிலும், தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்புகளிலும், தனியார் துறை வேலை வாய்ப் புகளிலும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களின் ஆதிக்கம் அதிகமாகி வருவதை கண்கூடாகக் காணமுடிகிறது. தமிழர்களின் வாழ்வியல், பொருளாதாரம், அரசியல், சமூக வளர்ச்சி என அனைத்திலும் பொறுப்புணர்வோடு இதை அணுகவேண்டிய தமிழ்நாடு அரசு மெத்தனப் போக்கோடு கண்டுகொள்ளாமல் நடந்து கொள் வது கண்டனத்திற்குரியது. இந்த நிலை தொடர் வதை தடுத்திட தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் எடுக்கும் அனைத்து முயற் சிக்கும் கழக இளைஞரணி களத்தில் நின்று போராடி தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர் காலத்தை பாதுகாப்பது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் : 9

வேளாண் நிலங்களையும் - நீரையும் நாசப்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடுக!

தமிழ்நாட்டில் விழுப்புரம் பகுதியிலும், புதுச்சேரி பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முனைந்துள்ளது

அமெரிக்க, அய்ரோப்பிய நாட்டு மக்கள் தங்கள் நாடுகளில் இத்திட்டத்தை கொண்டுவர முனைந்தபோது, கடும் எதிர்ப்பையும் போராட்டத்தையும் நடத்தி யிருப்பது கவனிக்கத்தக்கது. இத்திட்டத் தால் நதிகளின் நீரும் - மண்ணின் வளமும் - மக்களின் உயிரும் மிகப்பெரும் பாதிப் புக்குள்ளாகும் என்று வெளிநாடுகளே எதிர்க்கும் இத்திட்டத்தை கடும் எதிர்ப் பிக்குப் பிறகும் மீண்டும் தமிழ் நாடு, புதுச் சேரியில் கொண்டுவர முயலும் மத்திய அரசு, மக்கள் நலனுக்கும் - நாட்டின் வளத் திற்கும் எதிரான அரசு என்று சுட்டிக்காட்டு வதோடு, இத்திட்டத்தை அடியோடு ஒழித்துக்கட்ட இளைஞரணி களமிறங்கி போராடும் என் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தமிழ்நாட்டில் 55 இடங்களில் ஹைட் ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ள நிலையில் புதுச்சேரி, முதலமைச்சரைப் போல் தமிழக முதலமைச்சரும் இத்திட்டத் திற்கு தனது அரசின் கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தஞ்சாவூர் வல்லத்தில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந் துரையாடல் கூட்டத்தில் மேற்கண்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


-  விடுதலை நாளேடு, 19.5.19

ஆக. 27 இல் சேலத்தில் திராவிடர் கழக பவள விழா மாநாடு மகளிருக்கென்று போதிய நேரம் அளிக்கப்படும்!

மகளிர் பணிகள் வீறுகொண்டு எழட்டும் - எதிர்ப்புகள் நொறுங்கட்டும்!


கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநில  கலந்துரையாடலில் தமிழர் தலைவரின் வழிகாட்டும் உரை


தொகுப்பு: மின்சாரம்
சென்னை, மே 16  எதிர்ப்புகள் எழ எழத்தான் நம் பணிகள் வீறுகொண்டு எழும். மகளிர் பங்கு சிறப்பாகத் தொடரட்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சென்னையில் நேற்று (15.5.2019) முற்பகல் பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறைக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப் பிட்டதாவது:

தமிழர் தலைவர் உரையின் வீச்சுகள்


தமிழ்நாடு தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களி லிருந்தும் வருகை தந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

***


ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இத்தகு கூட்டங்கள் நடத்தப்படவேண்டும்.

***


நீங்கள் பேசவேண்டும்; நாங்கள் கேட்கவேண்டும்


இத்தகு கூட்டங்களில் மகளிராகிய நீங்கள் பேச வேண்டும் - நாங்கள் கேட்கவேண்டும்; பெண்கள் பேச்சை ஆண்கள் கேட்க ஆரம்பித்தால், குடும்பமும், நாடும் சிறந்தோங்கும்.

***


மகளிரணி, மகளிர் பாசறை அணிகளைப் பலப் படுத்தவேண்டும்.

பொறுப்பாளர்கள் மாதம் ஒருமுறை வீடுகளுக்குச் சென்று சந்திக்கவேண்டும்.

5 பேர் இருந்தால் ஒரு கிளை என்று ஆரம்பித்துவிடலாம்.

***


ஏச்சுகளைக் கண்டு அஞ்சாதீர்!


முகநூலில் திட்டி எழுதினால், அதனை அலட்சியப் படுத்துங்கள். நம் நாட்டுப் பொது வாழ்வில் இவை எல்லாம் இயல்புதான். அன்னை மணியம்மையார் சந்திக்காத வசவுகளா? இழிவுகளா? நமது தலைவர் அம்மாவை நினைவுக்குக் கொண்டு வாருங்கள் - சரியாகிவிடும்!

***


கழகத்திற்குப் பெண் பேச்சாளர்கள் தேவை. பெண் களுக்குப் பேச்சுப் பயிற்சி - கொள்கை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்.

***


திராவிடர் கழகம், பொதுவுடைமைக் கட்சி, ஆர்.எஸ்.எஸ்., இம்மூன்றும் 1925 ஆம் ஆண்டில் ஒரே காலகட்டத்தில் தோற்றுவிக்கப்பட்டவை.

***


திராவிடர் கழகமும் - ஆர்.எஸ்.எசும் நேரிடையாக எதிர் எதிர் சித்தாந்தங்களைக் கொண்டவை.

***


அவர்கள் ஜாதி பாதுகாக்கப்படவேண்டும் என்பவர்கள் - நாமோ ஜாதி மறுப்பாளர்கள், ஒழிப்பாளர்கள்.

***


அவர்களின் கொள்கை பெண்ணடிமை - நமது கொள்கையோ பெண்ணுரிமை.

ஆர்.எஸ்.எஸில் பெண்களைச் சேர்ப்பதில்லை. அதுதோன்றி 11 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஆர்.எஸ்.எஸில் பெண்கள் அமைப்புத் தோன்றியது.

***


குழந்தை ஒரு பிரச்சினையா?


குழந்தை இல்லாவிட்டால், அது ஒன்றும் குறையில்லை. பெற்ற குழந்தைக்கும், வளர்ப்புக் குழந்தைக்கும் என்ன வேறுபாடு? நம் மனதைப் பொறுத்ததுதான்.

நாயைக் கொஞ்சுகிறான், தனக்குப் பிறக்காத குழந் தையைக் கொஞ்சக்கூடாதா? என்று கேட்டவர் பெரியார்.

***


பெரியார் செய்த புரட்சி


1908 ஆம் ஆண்டிலேயே தனது வீட்டில் சிறு வயதிலேயே கணவனை இழந்த பெண்ணுக்கு மறுமணம் செய்து வைத்துப் புரட்சியைச் செய்தவர் பெரியார்.

***


தம் வீட்டுப் பெண்களைப் பொது வாழ்க்கைக்குக் கொண்டு வந்தவரும் அவரே!

***


பெண்ணுரிமை என்று வரும்போது திருவள்ளு வரைக்கூட விட்டு வைக்காதவர் பெரியார்.

***


பெண்களுக்கு நகைகள் எதற்கு? வீண் அலங்காரம் எதற்கு? மக்கள் தொகையில் சரி பகுதியாக உள்ள பெண்களை ஒதுக்கலாமா? அது சமுதாய வளர்ச்சிக்குக் கேடல்லவா? பெண் அடிமை என்பது மனித சமுக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெறவேண்டிய மனித சமுகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது (- தந்தை பெரியார், குடிஅரசு', 16.6.1935).

***


அது என்ன ஹவுஸ் ஒய்ஃப்? ஹவுசுக்கு எதற்கு ஒய்ஃப்?

***


மகளிருக்கான மருத்துவ உதவிப் பணிகள் தொடங்கப்படும், அது முக்கியமே!

***


பொறுப்புகளை மாற்றுவது எல்லோருக்குமே பயிற்சி தேவை என்பதற்காகத்தான். மற்றபடி பணிகளை சிறப்பாகவே செய்துள்ளனர்.

***


ஆகஸ்டு 27 இல் சேலத்தில் கழகத்தின் பவள விழா மாநாடு


சேலத்தில் திராவிடர் கழகத்தின் பவள விழா வரும் ஆகஸ்டு 27 அன்று நடக்கவுள்ளது. இரு நாள்கள் நடைபெறக் கூடிய அம்மாநாட்டில் மகளிருக்கென்று போதிய நேரம் ஒதுக்கப்படும்.

***


எதிர்ப்புகள் நமக்கு உரமூட்டும்


அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி கருத்தரங்குகள் மாவட்டந்தோறும் நடைபெறவேண்டும். ***

எதிர்ப்புகள் வரட்டும், அதுவே நம் எழுச்சிக்கு உரமூட்டும். அடிக்க அடிக்கவே பந்து எழும்பும்!

***


வீட்டுக்கு வீடு பெரியார் பிஞ்சு வாங்கப்படவேண்டும்; நம் பிள்ளைகளுக்குத் தலைசிறந்த கருத்துப் பயிற்சி இது.

***


மாவட்டங்களில் நான் சுற்றுப்பயணம் வரும்போது மகளிர்க்கு நேரம் ஒதுக்கப்படும்.

***


ஒரு முக்கிய காலகட்டத்தில் நம் இயக்கப் பணிகள் வீறுகொண்டு நடைபெற வேண்டும், நடைபெறட்டும்! கழகத் தலைவரின் உரையில் தெறித்த வழிகாட்டும் முத்துகள் இவை!

பாரத புண்ணிய பூமியின்' இலட்சணம் இதுதான்!


பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு' என்று பாதாம்பால் சாப்பிட்டு சாரீரத்தைத் தூக்கிப் பாடுவதில் ஒன்றும் குறைவில்லை.


உலகில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் தாண்டவமாடும் நாடுகளின் வரிசையில் இந்தப் பாரத புண்ணிய பூமி'க்கான மகத்தான இடம் என்ன தெரியுமா? முதலிடம்! முதலிடம்!! முதலிடம்!!!


அமெரிக்க ஆய்வு நிறுவனம் 20.6.2018 அன்று வெளியிட்ட புள்ளி விவரம் என்ன கூறுகிறது?


நாள்தோறும் போர்ப் பீரங்கிகள் வெடித்துச் சிதறும் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நாடுகளில்கூட பெண்கள் இந்தளவு சீரழிக்கப்படவில்லை.


கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 2,78,886 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவானதில் தண் டனை பெற்றவர்கள் 30 விழுக்காட்டுக்கும் குறைவே!


சட்டமன்றத்தில் அமர்ந்து கைப்பேசியில் ஆபாசப் படங்கள் பார்த்ததிலும் அறநெறி பேசும் பா.ஜ.க.வுக்குத்தான் முதலிடம். அந்தக் கூத்து  கருநாடக மாநில சட்டப்பேரவையில் நடந்தது. 3 பேர் மாட்டிக் கொண்டனர். இவர்களாவது சட்டமன்ற உறுப்பினர்கள். அமைச்சர்களே ஆபாசப் படம் பார்த்த கதை தெரியுமா? குஜராத் பா.ஜ.க. அமைச்சர்கள் இருவர்தான் அந்தக் கேடு கெட்டவர்கள்.


***


543 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய நாடாளு மன்றத்தில் பெண் உறுப்பினர்கள் வெறும் 62 பேர்களே! (11 விழுக்காடு).


பின்தங்கிய நாடுகள் என்று கருதப்படுகின்ற ருவாண்டா, பொலிவியா, செஷல்ஸ், நமீபியா, பாகிஸ் தான், ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில்கூட பெண்களின் விழுக்காடு அதிகமே!


உலக அளவில் எடுத்துக்கொண்டால், நாடாளு மன்றத்தில் பெண் உறுப்பினர்கள் 22.4%, அய்ரோப்பாவில் 25.2%


ஆப்பிரிக்காவில் 22.6%


ஆசியாவில் 19%


அரேபிய நாடுகளில் 18%


இந்தியாவிலோ வெறும் 11%


இந்திய சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத் திலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 விழுக்காடு அளிக்கப்பட வேண்டும் என்ற சட்ட முன்வடிவு 1996 முதல் நிலுவையில் உள்ளது என்பது வெட்கக்கேடே!


இதில் 'பாரத மாதா' என்ற பட்டப் பெயர் கிரீடம் வேறு!


நேற்று (15.5.2019) சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநிலக் கலந்துரையாடல் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.


-  விடுதலை நாளேடு, 16.5.19

மாநில மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்!

திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறைக்குப் புதிய பொறுப்பாளர்கள்


மாநில அளவில் சுற்றுப்பயணம்  செய்து மாவட்ட அளவில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம், பிரச்சாரம், குடும்பக் கலந்துரையாடல் நடத்திட முடிவு


ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு தாயின் ஜாதியை எடுத்துக்கொள்ளலாம் என்ற நீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு
சென்னை, மே 15 திராவிடர் கழக மாநில மகளிரணி மற்றும் மகளிர் பாசறைக்குப் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் செயல்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் தீர்மானிக்கப்பட்டன.

திராவிடர் கழக மகளிரணி மகளிர் பாசறையின் மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் இன்று (15.5.2019) புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1:

இரங்கல் தீர்மானம்


திராவிடர் கழகத்தின் பொருளாளராக, மகளிரணி, மகளிர் பாசறைகளுக்கு வழிகாட்டியாக இருந்து அரும்பணியாற்றிய திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களின் மறைவிற்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 2:

மகளிர் பணிகள்


பெண்கள் மற்றும் மாணவிகள் தொடர்பான முக்கிய பிரச்சினைகளை மய்யப்படுத்தி, துண்டறிக்கைகள் வெளியிடுவது, பிரச்சாரம் செய்வது, தேவைப்படும் சமயத்தில் போராட்டங்களில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 3:

மகளிரணி - மகளிர் பாசறைக்குப் புதிய பொறுப்பாளர்கள்


திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை செயல்பாடுகளை ஊக்குவித்து மாநிலம் தழுவிய அளவில் பலம் வாய்ந்த அணிகளாகக் கட்டமைப்பது என்றும், அதற்கு முழுமையான அளவில் நேரம் ஒதுக்கிப் பணியாற்றிட மாநிலப் பொறுப்புகளுக்குக் கீழ்க்கண்டவர்களை நியமிப்பது என்றும் தீர்மானிக்கப் படுகிறது.

மகளிரணி மாநில செயலாளர்:


தகடூர் தமிழ்ச்செல்வி


மகளிரணி மாநில அமைப்பாளர்:


பேராசிரியர் கண்மணி, தேவக்கோட்டை


மாநில மகளிர் பாசறை மாநில செயலாளர்:


வழக்குரைஞர் மணியம்மை


மாநில மகளிர் பாசறை மாநில அமைப்பாளர்:


சட்டக்கல்லூரி மாணவி மதிவதனி


சென்னை மண்டல மகளிரணி தலைவர்:


தங்க.தனலட்சுமி


சென்னை மண்டல மகளிரணி  செயலாளர்:


ஓவியா
தீர்மானம் எண் 4:

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவை வெகுசிறப்பாக நடத்த முழு ஒத்துழைப்புத் தருதல்


அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவை கழக மகளிரணி, மகளிர் பாசறையினர் முன்னின்று சிறப்பாக நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 5:

குடும்பங்களுக்கிடையே கொள்கை உறவைப் பலப்படுத்துக!


மாவட்டம் தோறும் சென்று மகளிரைச் சந்தித்து கலந்துரையாடி பொறுப்பாளர்களைப் புதிதாக நிய மித்து, மகளிர் அணி மற்றும் பாசறையின் பணிகளை மேம்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. குடும்பக் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி, குடும்பங்களுக் கிடையே கொள்கை உறவைப் பலப்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 6:

ஜாதி மறுப்புத் திருமணத்தில் பிறந்த குழந்தைக்கு தாயின் ஜாதியைப் பயன்படுத்தலாம் என்ற வரவேற்கத்தக்க தீர்ப்பு


தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டியைச் சேர்ந்த அற்புதராஜ் - இளவரசி ஆகியோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அசோக் குமார், கங்குலி மற்றும் நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய அமர்வு - ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகள் தந்தையின் ஜாதியைச் சேர்ந்தவர்களாகத்தான் கருதப்படுவர் என்று தீர்ப்பு வழங்கியது (2008, டிசம்பர்).

இந்தத் தீர்ப்பை மாற்றவேண்டும் என்று திராவிடர் கழக மகளிர் அணி மாநாடுகளில் தொடர்ந்து தீர்மானங் களை நிறைவேற்றி வலியுறுத்தி வந்துள்ளோம்.

அதற்கு வெற்றி கிடைக்கும் வகையில், மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த பட்வாய்க் என்ற எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவி தொடர்ந்த மேல்முறையீட்டில் - மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை  நீதிபதிகள் சுனில் சுக்ரே, புஷ்பா கனேடிவாலா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ள தீர்ப்பு (21.4.2019) வரவேற்கத்தகுந்த சிறப்பான ஒன்றாகும்.

இந்தியாவில் ஆணாதிக்க சமுக அமைப்பு உள்ளது. இப்போது மாறி வருகிறது. நமது அரசமைப்புச் சட்டம் கூட சமத்துவம், நீதி மற்றும் சகோதரத்துவம் அடிப்படையில்தான் உள்ளது. ஆண் மற்றும் பெண்ணை நாம் சமமாகவே பாவிக்கிறோம். எனவே, ஜாதி கலப்பு தம்பதியினருக்குப் பிறந்த குழந்தைகள் தனது தாயாரின் ஜாதியையும்  பயன்படுத்தலாம்" என்று தீர்ப்பு வழங்கி இருப்பது தந்தை பெரியார் கொள்கைக்கு, திராவிடர் கழகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று இக் கூட்டம் கருதி மகிழ்கிறது.

தீர்மானம் 7:

சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு தேவை


சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு  33 சதவிகித இட ஒதுக்கீடுபற்றி திருத்தம் ஒன்றை மாநிலங்களவை உறுப்பினர் தோழர் டி.கே.ரெங்கராஜன் (சி.பி.எம்.) கொண்டு வந்தபோது (7.2.2018) அத்திருத்தத்துக்கு எதிராக பி.ஜே.பி.யுடன் சேர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்களும் வாக்களித்ததை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

1996 முதல் நிலுவையில் இருந்துவரும் இந்த சட்ட முன்வடிவை விரைவில் நிறைவேற்றுமாறு இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

- விடுதலை நாளேடு, 15.5.19

'தொய்வின்றி - தொடர்புகளோடு பணியாற்றுவோம்!'

மகளிரணி, மகளிர் பாசறைக் கூட்டத்தில் மகளிர் தெரிவித்த கருத்துகள் - ஆலோசனைகள்

1) மாநிலப் பொறுப்பாளர்கள் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.

2) குடும்பக் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்திட வேண்டும்.

3) ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மகளிர் இல் லத்திலும் கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும். (வருடத்தில் 10 கூட்டங்கள் நடக்க வாய்ப்பு உண்டே!)

4) மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் மூலமாகக் கல்லூரிகள், பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாட வேண்டும்.

5) கதை சொல்லிகள் உருவாக்கப்பட்டு குழந்தைகளிடம் பகுத்தறிவுக் கருத்துகளை ஊட்ட வேண்டும். அப்படி சொல்லிக் கொடுத்தால் நம் பிள்ளைகள் பள்ளிகளில் அந்தக் கருத்துக்களை தங்களோடு படிக்கும் பிள்ளைகளிடம் கூறுவர். 6) மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

7) திருமணம் சுயமரியாதை முறையில் நடை பெற்றால் கூட மரணத்தின்போது மூடநம்பிக்கை களைத் திணித்து விட சிலர் குறியாக இருப்பார்கள், அதை தடுக்கப்பட வேண்டும்.

(திருவாரூர் மாவட்ட மகளிரணி தலைவர் மகேஸ்வரி கூறியதாவது எங்கள் பகுதியில் பாடைகளை மகளிரே தூக்கிச் செல்லுகிறோம். மூடநம்பிக்கைக்குச் சிறிது கூட இடம் தருவதில்லை என்றார். பலத்த கரஒலி!)

8) வீட்டில் பெரியார் கருத்துகளையும், கழக செயல்பாடுகளையும் பற்றிப்பேச வேண்டும். வீட்டில் பேசினால்தான் பிள்ளைகளுக்கு நம் கருத்துப் போய்ச்சேரும். இந்தப் பணியை நாம் செய்யாவிடில் இந்தத் தலைமுறையோடு நம் குடும்பங்களிலிருந்து கொள்கை வெளியேறி விடும்.

9) மகளிரிடம் கொள்கை சென்றடையாவிட்டால் குடும்பங்களிலோ, மக்களிடமோ கொள்கை போய்ச் சேராது.

10) கலை நிகழ்ச்சிகள், தெரு நாடகப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

11) பெண்களுக்கென்று தனியாக பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட வேண்டும்.

12) கழகக்குடும்பத்தின் பிள்ளைகளை பெரியார் பிஞ்சு பழகு முகாமுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

13) முகநூலில் கருத்துகளைத் தெரிவிக்க கழக மகளிரணியினர் முன்வரவேண்டும். கேவலமாக நம்மைத் தாக்கிப் பதிவு செய்வார்கள்; அவர்களின் நோக்கம் நம்மை முக நூலிலிருந்து வெளியேற்றுவதே - அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. அவர்கள் போலவே ஆபாசமாக பதிவு செய்யாமல், நமது கருத்து களைப் பதிவு செய்ய வேண்டும். படிப் பவர்கள் உண்மையை உணர்ந்து கொள்வார்கள்.

14) சிறிய சிறிய துண்டறிக்கைகளை வெளியிட வேண்டும் - வீட்டுக்கு வீடு கழக மகளிரணியினர் நேரில் சென்று கொடுக்க வேண்டும்.

15) நம் பிள்ளைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

16) கிராமப்புறப் பிரச்சாரம் தேவை. பெண்கள் பிரச்சாரம் செய்தால் கிராமத்து பெண்கள் வெளியில் வந்து காது கொடுத்துக் கேட்பார்கள். மகளிர் பாசறைப் பெண்களுக்கு பறையிசை கற்று கொடுத்து, கிராமப் பிரச்சாரத்தில் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

17) நமது அமைப்புகளுக்குள் தொடர்பு துண்டிக்கப்பட்டால் தொடர்பு பணியில் தொய்வு ஏற்பட்டுவிடும். கைப்பேசி காலத்தில் தொடர்புகள் எளிதே!

18) சுயமரியாதைத் திருமண நிலையக் கிளைகளை மாவட்டந்தோறும் ஏற்படுத்துவதால் பலதரப்பட்ட பொது மக்களின் தொடர்புகள் நமக்குக் கிடைக்கும்; அதன் வழி நம் இயக்கமும், கொள்கையும் பெரும் அளவில் பொது மக்களிடம் போய்ச்சேரும்.

19) பெண்களுக்கான உடல்நலம் பேணும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

20) மகளிர் தொடர்பான சமுகப் பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு களத்துக்கு வந்து போராட வேண்டும்.

இவ்வாறு சிறப்பான கருத்துகளையும், திட்டங் களையும் ஆர்வத்துடன் எடுத்து வைத்தனர்.

கருத்துரைகள் - ஆலோசனைகள் வழங்கிய கழக மகளிர்

திராவிடர் கழக மாநில மகளிரணி, மகளிர் பாசறை ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் கூட்டம், சென்னை பெரியார் திடலில் நேற்று (15.5.2019) முற்பகல் 11 மணிக்குக் கூடியது. குமரி முதல் திருத்தணி வரை உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்து மகளிர் அணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் 150க்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்தனர்.

மகளிர் அணி, மகளிர் பாசறையை தமிழ்நாடு தழுவிய அளவில் வலுவாக உருவாக்குவதற்கான ஆலோசனைகள், இவ்வமைப்பினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்து வைத்தனர்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். பெரியார் பிஞ்சு செ.சி.காவியன் கடவுள் மறுப்பு கூறினார். திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்கவுரை ஆற்றினார். இக்கூட்டத்தின் நோக்கத்தையும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, தஞ்சை கலைச்செல்வி, கோ.செந்தமிழ்ச்செல்வி, தகடூர் தமிழ்ச்செல்வி, சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, கும்முடிப்பூண்டி செல்வி, திருச்சி அம்புஜம், குடியாத்தம் தேன்மொழி, கூடுவாஞ்சேரி நூர்ஜகான், வாலாஜாபாத் ரேவதி, திருச்சி சங்கீதா,  வடலூர் ரமா பிரபா, திருப்பத்தூர் கவிதா, ஈரோடு இராசேசுவரி, ஆவடி வனிதா, கும்முடிப்பூண்டி இராணி, பண்ருட்டி முனியம்மாள், லால்குடி குழந்தைதெரசா, திருச்சி சாந்தி, புதுச்சேரி விலாசினி, கோவை செல்வி, தேவக்கோட்டை பேராசிரியர் கண்மணி, ஒசூர் செல்வி, திருச்சி ரெஜினா பால்ராஜ், இசபெல்லா, மத்தூர் இந்திராகாந்தி, எண்ணூர் தென்னரசி, வேலூர் லதா, தஞ்சை வள்ளியம்மை, கோவை யாழினி, திருவாரூர் மாவட்டம் மகேஸ்வரி, வேலூர் ஓவியா ஆகியோர் உரைக்குப் பிறகு மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் மணியம்மை நன்றி கூற பிற்பகல் 2.40 மணியளவில் கலந்துரையாடல் சிறப்பாக நிறைவுற்றது.

தனித் தன்மையான கருத்துக்கள்

* கல்லூரி படிப்பு முடிந்தவுடனேயே பெண்களுக்கு திருமணம் செய்யக்கூடாது, குறைந்தது ஒரு ஆண்டு கழித்தோ அல்லது சொந்தமாக சம்பாதிக்கும் நிலை உறுதியான பிறகே திருமணம் நடக்க வேண்டும்.

* கோயில் திருவிழாக்களை ஆர்.எஸ்.எஸ்.காரர்களே முன்னின்று நடத்துவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். பக்தியின் மூலம் தங்கள் அமைப்பை பொதுமக்களிடம் கொண்டு செல்லுகிறார்கள். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

*  பசு கோமாதா பிரச்சாரம், விளக்கு பூஜை என்ற பெயரால் பெண்களை ஒன்று திரட்டுதல் போன்ற வேலைகளில் இந்துத்துவா காவிக் காரர்கள் தீவிரமாக இறங்குகிறார்கள். இதனை அம்பலப்படுத்த வேண்டும்.

*  கழகக் குடும்பங்கள் அந்தந்தப் பகுதிகளில் ஒருங்கிணைந்து வாட்ஸ் அப் குரூப்களை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். அதனை விரிவாக்கிக் கொண்டே போகலாம்.

*  வீட்டுப் பணிகளில் வாழ்விணையர்கள் பணிகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த மனநிலை ஏற்பட்டால் வெளி உலகிலும் பாலியல் சமத்துவம் ஏற்படும் - அந்த நிலை ஏற்பட்டால் பாலியல் தொடர்பான வன்மங்களும் குறையும் என்பது போன்ற தனித் தன்மையான கருத்துக்களையும் மகளிர் எடுத்து வைத்தனர்.

திராவிடர் கழக மாநில மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடலில் பங்கேற்றோர் (சென்னை பெரியார் திடல், 15.5.2019)

திராவிடர் கழக மகளிரணி மகளிர் பாசறையின் மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நேற்று (15.5.2019) புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது.

- விடுதலை நாளேடு, 16.5.19