வியாழன், 18 ஜூலை, 2024

நீட் தேர்வை ரத்து செய்! – சமூகநீதி காக்க நீட் தேர்வை ஒழிக்கும் வரை போராடுவோம்! என்ற ஒலி முழக்கங்களுடன் தமிழ்நாட்டின் அய்ந்து முனைத் தாக்குதல்களாக இளைஞர்களின் எழுச்சிகரமான இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம்!

 Published July 14, 2024

விடுதலை நாளேடு

நீட் தேர்வு குறித்து முதல் தகவல் வெளியானதிலிருந்து திராவிடர் கழகம், அதன் தலைவர் அதை ஒழிப்பதற்காக பல்வேறு போராட்டங்களை அறிவித்து நடத்திவருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் ஒலித்த இந்த சமூகநீதிக்குரல் இன்று இந்திய துணைக்கண்டமெங்கும் எதிரொலித்திருக்கிறது. நீட் தேர்வை சவப்பெட்டியில் வைத்து அதன் பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் வரை ஓயாத எங்கள் அறவழிப்பட்ட பிரச்சாரம் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் ஆணைப்படி திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் தமிழ்நாட்டின் அய்ந்து முனைகளிலிருந்து அய்ந்து போர்ப்படை போர்க்குரல் எழுப்பி சேலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தப் பயணமானது 11.07.2024 வியாழன் அன்று காலையில் தொடங்கிற்று, 15.07.2024 திங்கள் சேலத்தை அடைகின்றனர்.

தமிழ்நாட்டின் 5 முனைகளிலிருந்து 5 குழுக்கள் புறப்பட்டு மொத்தம் 229 இடங்களில் பரப்புரையில் ஈடுபட்டவாறே (11.07.2024) கல்வி வள்ளல் பச்சைத் தமிழர் காமராசர் பிறந்தநாளான 15.07.2024 அன்று மாலை சேலத்தில் சங்கமிக்கிறது. கழகக் கொடிகளுடன் செல்லும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயண நிறைவு விழாவில், சேலம் கோட்டை மைதானத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை ஆற்றுகிறார். நாடாளுமன்ற உறுப்பினர், மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகின்றனர்.

முதல் குழு கன்னியாகுமரியில் தொடங்கி வெண்ணந்தூர் வரை 41 இடங்களில் பிரச்சாரம் செய்தபடியே சேலம் சென்றடைய இருக்கின்றது. இந்தக்குழுவில் 9 இருசக்கர வாகனத்தில் 18 தோழர்கள் பயணம் செய்துகொண்டிருக்கின்றனர். வாகனப் பரப்புரைக் குழுத் தலைவர் இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) சொற்பொழிவாளர் மு.இளமாறன் (சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர்) வாகனப் பரப்புரை ஒருங்கிணைப்பாளர் சு.இனியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)
இரண்டாம் குழு இராநாதபுரம் முதல் சேலம் வரையிலுமாக 9 இருசக்கர வாகனத்தில் 1 மகளிர் உள்பட 18 பேர் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். இராமநாதபுரத்தில் தொடங்கி அயோத்தியா பட்டினம் வரை 61 இடங்களில் பரப்புரை செய்தபடியே சேலம் சென்றடைகிறது. வாகனப் பரப்புரைப் பயணக் குழுத்தலைவர் நாத்திக. பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர், கழக சொற்பொழிவாளர் தே.நர்மதா, வாகனப்பரப்புரை ஒருங்கிணைப்பாளர் அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்)

மூன்றாம் குழு புதுச்சேரி முதல் சேலம் வரை 12 இருசக்கர வாகனங்களில் 20 தோழர்கள் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர். இதில் புதுச்சேரியில் தொடங்கி, பாப்பிரெட்டிபட்டி வரை 49 இடங்களில் பரப்புரை செய்துவிட்டு சேலம் சென்றடைகின்றனர். இதில் 12 வாகனங்களில் 20 தோழர்கள் பயணம் செய்துகொண்டிருக்கின்றனர். வாகனப் பரப்புரை பயணக்குழுத் தலைவர் தா. தம்பிபிரபாகரன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்) ஒருங்கிணைப்பாளர் கோ.வேலு (மாநில இளைஞரணி துணைச் செயலாளர், திராவிடர்கழகம்) சொற்பொழிவாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதினி (துணைப்பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

நான்காம் குழு தாராபுரம் முதல் சேலம் வரையிலுமாக 4 இருசக்கர வாகனத்தில் 7 தோழர்கள் பயணம் செய்து வருகின்றனர். இதில் தாராபுரத்தில் தொடங்கி குள்ளக்கவுண்டனூர் வரை 38 இடங்களில் பிரச்சாரம் செய்தவாறே சேலம் சென்றடைகின்றனர். வாகனப் பரப்புரைப் பயணக் குழுத்தலைவர் த.சிவபாரதி (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) ஒருங்கிணைப்பாளர் மு.வீரமணி (மேட்டுப்பாளையம் மாவட்ட இளைஞரணித் தலைவர், திராவிடர் கழகம்) சொற்பொழிவாளர் தருமபுரி த.யாழ்திலீபன்
அய்ந்தாம் குழு சென்னை பெரியார் திடலில் தொடங்கி தொப்பூர் வரை 40 இடங்களில் பரப்புரை செய்தவாறே சேலம் சென்றடைய இருக்கின்றனர். இதில் 23 இருசக்கர வாகனத்தில் 6 மகளிர் உள்பட 37 பேர் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். வாகனப் பரப்புரைப் பயணக் குழுத்தலைவர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணித் துணைச் செயலாளர், திராவிடர் கழகம்) ஒருங்கிணைப்பாளர் மா.செல்லத்துரை (மாநில இளைஞரணித் துணைச் செயலாளர், திராவிடர் கழகம்) சொற்பொழிவாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
ஒவ்வொரு இடத்திலும் தோழமைக் கட்சியினர் பங்கேற்று சிறப்பிக்கின்றனர். சமூகநீதியை சாகடிக்கும் கண்ணிவெடி எனும் தலைப்பிலான நான்கு பக்க துண்டறிக்கை கூடியிருக்கும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. நீட் தேர்வு ஒரு கண்ணிவெடி எனும் தலைப்பிலான 10 ரூபாய் மதிப்பிலான புத்தகம் பொதுமக்களிடையே விற்பனை செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக