செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

அரசியல் கட்சிகளில் ‘செல்வப் பெருந்தொகை'யாக இருந்தால்தான் தலைவராக வர முடியும்!


செல்வப்பெருந்தகை பெருந்தொகையாளர் அல்ல; பெருந்தகையாளர்

காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவரின் பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் புகழுரை!

சென்னை, ஆக.18  அரசியல் கட்சிகளில் செல்வப் பெருந் தொகையாக இருந்தால்தான் தலைவராக வர முடியும். ஆனால், இவர் பெருந்தொகையாளர் அல்ல; பெருந்தகை யாளர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் .

செல்வப்பெருந்தகைக்குப் பாராட்டு விழா

15.8.2021 அன்று மாலை 7 மணியளவில் சென்னை ஆர்.ஏ.புரம் முத்தமிழ் பேரவை கலையரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சட்டமன்றத் தலைவர் கு.செல்வப்பெருந்தகையின் செயல்போற்றி பாராட்டு விழாவில்,   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாராட்டுரையாற்றினார்.

அவரது பாராட்டுரை வருமாறு:

துடிப்பு மிகுந்த இளைஞர் இளமுருகுமுத்து

ஜனநாயகத்தைக் காப்பாற்றக் கூடிய ஒரு சிறந்த இயக்கமாக - பாரம்பரிய இயக்கமாக இருக்கக்கூடிய காங்கிரஸ் பேரியக்கத்தின் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக அருமைச் சகோதரர் ஆற்றல்மிகு கு.செல்வப்பெருந்தகை அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள், செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் - அந்த நிலையில், அவருக்குப் பாராட்டு விழாவினை  அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினுடைய நண்பர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து, அதிலும் குறிப்பாக துடிப்பு மிகுந்த தோழர் இளமுருகுமுத்து அவர்கள் இதுபோன்ற விழாக்களை செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடையக் கூடியவர்.  ஆற்றல் உள்ளவர். அதேபோன்று புதுக் கோட்டை பாசமும் உள்ளவர். இங்கே பார்த்தாலே, புதுக் கோட்டையைச் சார்ந்தவர்கள் நிறைய பேர் இருப்பார்கள்.

ஏனென்றால், புதுக்கோட்டை மட்டுமல்ல, புதிதாக நாம் இப்போது கோட்டையைப் பிடித்திருக்கிறோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இந்த அருமையான விழாவினை ஏற்பாடு செய்திருக்கிறார்.

இவ்விழாவிற்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சி உள்ளபடியே மிகப்பெருமிதத்திற்கு உரிய ஒரு நிகழ்ச்சியாகும். எனக்கு முன்பாக உரையாற்றிய நண்பர்கள் அத்தனை பேரும், நம்முடைய காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக் கின்ற அன்புச் சகோதரர் ஆற்றல்மிகு செல்வப்பெருந்தகை அவர்கள் எப்படிப்பட்டவர் என்பதை இங்கே மிக அழகாகச் சொன்னார்கள்.

இக்காலகட்டம் நெருக்கடியான காலகட்டம்;  நீங்கள் எல்லோரும் முகக்கவசத்தை சரியாக அணிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், கரோனா தொற்றின் இரண்டாவது அலை மிரட்டிக் கொண்டிருக்கிறது என்பதையும் தாண்டி, இப்பொழுது மூன்றாவது அலை வந்துகொண்டிருக்கின்றது.

என்னதான் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்து, ஒத்துழைப்புகளைக் கொடுத்தாலும்கூட, நாம், நம்முடைய ஒத்துழைப்பைக் கொடுத்தால்தான், கரோனா தொற்றை விரட்ட முடியும்.

கரோனாவைவிட மிகக் கொடுமையானது

மதவெறி - ஜாதி வெறி - பண வெறி - பதவி வெறி!

கரோனவை விட மிகக் கொடுமையான மதவெறி இருக்கிறது நம்முடைய நாட்டில்.

கரோனாவைவிட அதிகமான ஜாதி வெறி இருக்கிறது நம்முடைய நாட்டில்.

கரோனாவைவிட அதிகமான பணவெறி இருக்கிறது நம்முடைய நாட்டில்.

இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகிற அளவிற்கு பதவிவெறியும் நம்முடைய நாட்டில் இருக்கிறது.

எனவே, இவற்றையெல்லாம் நாம் சமாளிக்க வேண்டுமானால், நாம் வாழவேண்டும். தலைவர்கள் எல்லாம் நீண்ட காலம் பணியாற்றவேண்டும். இங்கே இருப்பவர்கள் மட்டுமல்ல, இங்கே வர வாய்ப்பில்லாத வர்களும்கூட சிறப்பாக நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டுமானால், அதற்கு சிறந்த பணி, நம்முடைய ஒத்துழைப்புதான்.

இந்தக் கூட்டத்தில்கூட, ஒரு சங்கடமான செய்தி - தனி நபர் இடைவெளி இல்லை. மிகவும் சங்கடமான சூழல்தான் - நமக்கு சமூக இடைவெளி தேவையில்லை - தனிநபர் இடைவெளிதான் தேவை.

அப்படிப்பட்ட சூழல்நிலையில், நிறைய பேர் இந்த விழாவிற்கு வந்திருக்கிறீர்கள். பெரிய அரங்கத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தியிருந்தால், செல்வப்பெருந்தகை அவர்களுக்கு இருக்கின்ற செல்வாக்கிற்கு, நம்மைப் போன்ற தலைவர்கள் வந்திருக்கும் இந்நிகழ்ச்சி ஒரு பெரிய மாநாடு போன்று நடந்திருக்கும். இது கரோனா காலகட்டம் என்பதால், அதுபோன்று நடத்துவதற்கு வாய்ப்பில்லாமல் போயிற்று.

செல்வப்பெருந்தகையின் பேட்டி!

இருந்தாலும், மிக்க மகிழ்ச்சி. நான் அண்மையில் செல்வப்பெருந்தகை அவர்களின் பேட்டி ஒன்றை படித்தேன், ஒரு பத்திரிகையில்.

அவரைப் பற்றி எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். அவருடைய கொள்கை உணர்வு எப்படிப்பட்டது  என்று - தந்தை பெரியார், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், முத் தமிழறிஞர் கலைஞர், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள் வரையில், எல்லோரிடத்திலும் மிகுந்த பற்றும், கொள்கைப் பற்றும் உடையவர்  அவர். கட்சி களுக்கு அப்பாற்பட்டவர். எப்படி நம்முடைய திருநாவுக் கரசு அவர்கள், எல்லாக் கட்சி நண்பர்களுக்கும் அவர் உரியவர். அவ்வளவு அன்பாகப் பழகக்கூடியவர். அதே போன்று, செல்வப்பெருந்தகை அவர்களும், ஒரு கட்சியில் இருந்தாலும், அதில் அவர் உறுதியாக இருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில், எல்லோருடைய அன்பை யும் பெற்றவர். அந்த அளவிற்குப் பண்பானவர். எனவே தான், அவர் அழைத்தால், யாருமே மறுக்க மாட்டார்கள்.

அவருடைய பேட்டியைப் படிக்கும்பொழுது, எனக்குத் தெரியாத செய்திகள் இரண்டை தெரிந்துகொண்டேன்.

ஒன்று, அவர் இராமானுஜ பக்தர் என்று தெரிந்து கொண்டேன். இராமானுஜரின் மேல் அவருக்கு என்ன பக்தி என்றால், ஜாதி ஒழிப்புக்காரர் என்பதால்தான், அவர்மீது பக்தி. எல்லா இடங்களிலும், அவரைப்பற்றி பேசுவாராம்.

இரண்டாவது செய்தி என்னவென்றால், வேகமாகக் கார் ஓட்டுவாராம். இவரைப் போன்றுதான், இவருடைய மகளும் காரை மிக வேகமாக ஓட்டுவாராம்.

மிக வேகமாக காரை ஓட்டக்கூடியவருக்கு, எப்படி இயக்கத்தைக் கொண்டு போவது என்று சொல்லவே வேண்டாம். இனி மிக வேகமாகப் போவார் - அதுதான் மிக முக்கியம்.

வேகமும் வேண்டும் - விவேகமும் வேண்டும்

வேகமும் வேண்டும் - விவேகமும் வேண்டும். இப் பொழுது இவர் வகித்துக் கொண்டிருக்கின்ற பொறுப்புப் பற்றி எல்லோருக்கும் தெரியும்.

இந்தக் காலகட்டத்தில், இன்றைக்கு ஒரு பெரிய நிகழ்ச்சி. இங்கே மல்லை சத்யாவும், அம்பேத்கர்பிரியன் அவர்களும் சொன்னார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்து, இன்றைக்கு 101 ஆவது நாளாகும். ஓர் இருண்ட காலம் முடிந்து, சூரிய வெளிச்சத்தோடு, நம்முடைய அமைச்சர் பெருமக்கள் எல்லாம் இந்த மேடையில் இருக்கிறார்கள். இன்று தி.மு.க. ஆட்சி அமைந்து 101 ஆவது நாள்.

காலங்காலமாக மறுக்கப்பட்டு வந்த உரிமை - நிலைநாட்டப்பட்டு இருக்கிறது!

இதில் என்ன சிறப்பு என்று சொன்னால், இங்கே நண்பர் கள் சொன்னார்கள் - நேற்றுதான், காலங்காலமாக மறுக்கப் பட்டு வந்த உரிமை இருக்கிறதே - அந்த உரிமை நிலைநாட் டப்பட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிமை என்று சொல்லி, பணி ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது.

எல்லாக் கடவுள்களும் பத்திரமாக இருக்கிறார்கள்; யாரும் வெளியே போகவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலை இன்றைக்கு வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால், ஒரு செய்தியை இங்கே சொல்லவேண்டும்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற சட்டம், கலைஞர் அவர்களால் 1970 ஆம் ஆண்டு கொண்டு வரப் பட்டது. ஏறத்தாழ ஓர் அரை நூற்றாண்டு காலப் போராட்டம். நீதிமன்றங்களில் போராட்டம், வீதிமன்றங்களிலும் போராட்டம்.

அத்தனை கட்சிகளும் ஆதரித்த பிறகும்கூட, சனா தனம் விடவில்லை; வைதீகம் விடவில்லை; பார்ப்பனியம் விடவில்லை.

என்ன நோக்கம்? என்ன குறிக்கோள்? என்ன காரணம்?

அப்படி இருக்கக்கூடிய அந்த சூழ்நிலையில், இன் றைக்கு அந்த சட்ட வரைவை கொண்டு வந்தார் பாருங்கள், இங்கே அனுபவமுள்ள அமைச்சர் இருக்கிறார், இது அறிவார்ந்த அரங்கமாகும் - ஒரு மசோதாவை தயாரித்து வரும்பொழுது, அந்த மசோதாவை சட்டபேரவையில் முன்மொழியும்போது, அதற்கு முன்பு ஒரு குறிப்பை எழுதுவார்கள் சட்டத் துறையில், Objects and reasons of the bill என்று. அந்த மசோதாவைக் கொண்டு வருவதற்கு என்ன நோக்கம்? என்ன குறிக்கோள்? என்ன காரணத் தினால் அந்த மசோதாவை கொண்டு வருகிறோம் என்று சொல்வார்கள்.

கிட்டத்தட்ட நிறைய பேருக்குத் தெரியாத செய்தி. செய்தியாளர்களுக்குக்கூட மறந்துபோன ஒரு செய்தி.

கலைஞர் அவர்கள் நம்மைவிட்டு மறைந்தார் என்று சொல்ல முடியாது - நம் நெஞ்சங்களில் நிறைந்தார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கக்கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்  1970 இல், Objects and reasons of the bill  என்று குறிப்பிடும்போது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகக் கூடியதற்காக முதன்முதலாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த மசோதாவிற்கு என்ன காரணம் சொன்னார் தெரியுமா? தந்தை பெரியார் அவர்கள் சொல்லி, அவர்களாலே முயற்சி எடுக்கப்பட்டு அந்த மசோதா வந்தது. ஆக, அய்யாதான் காரணம் என்று எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும்.

இளையபெருமாள் கமிட்டி

ஆனால், சட்டபூர்வமான ஒரு செய்தியைக் கொடுத்தார் கலைஞர் அவர்கள்.

இங்கே இருக்கின்ற சிலருக்கு அது தெரியும். நம்முடைய இளையபெருமாள் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யின் தலைவராக இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினராக வும் இருந்தார். தென்னார்க்காடு மாவட்டத்தைச் சார்ந்தவர். நான் அந்த மாவட்டத்துக்காரன் என்ற முறையில், மிகவும் பழக்கமானவர் அவர்.

இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்த காலகட்டத்தில், இந்தியா முழுவதும் தீண்டாமை ஒழிப்புக் கமிட்டி என்று, அகில இந்திய கமிட்டி ஒன்றைப் போட்டார்கள். அந்தக் கமிட்டியினுடைய தலைவராக இளையபெருமாள் இருந்தார். அவர் ஒரு அறிக்கை கொடுத்தார்.

இளையபெருமாள் கமிட்டி அறிக்கை என்று பெயர். அந்த அறிக்கையின் முதல் பரிந்துரை என்னவென்றால், தீண்டாமை ஒழியவேண்டும்; ஜாதிகள் அழிக்கப்பட வேண்டும் என்று சொன்னால், அதற்கு மிக முக்கியமாக செய்யவேண்டியது - அனைத்து ஜாதியினரும் ஆதிதிரா விடர்கள் உள்பட - தீண்டாமை என்று ஒதுக்கப்படு கின்றவர்கள் அனைத்துக் கோவில்களிலும் அர்ச்சகர்கள் ஆகவேண்டும் - இதை செயல்படுத்த வேண்டும் என்று சொன்னார்கள்.

திராவிட இயக்க ஆட்சிக்கு, கலைஞர் ஆட்சிக்கு உண்டு!

இதை வேறு யாரும் செய்யவில்லை. ஆனால், செய்து முடித்த பெருமை - திராவிட இயக்க ஆட்சிக்கு, கலைஞர் ஆட்சிக்கு உண்டு என்பதற்கு அடையாளமாகத்தான், அந்த மசோதாவை ஏன் கொண்டு வருகிறோம்? இந்த சட்டத்தை ஏன் கொண்டு வருகிறோம்? என்று சொன்னால், இளையபெருமாள் கமிட்டியின் பரிந்துரையை செயல் படுத்துகின்ற வகையில், இதனைச் செய்கிறோம் என்று,  அந்தச் சட்டத்திலேயே குறிப்பிட்டு, இளையபெருமாள் பெயரைத்தான் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டு இருக் கிறார்.

எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால், இந்த இயக்கத்தில் ஜாதி கிடையாது- இந்த இடத்திலே வேற்றுமை கிடையாது. நாம் அனைவரும் உறவினர் - நாம் அனைவரும் ஒருவர் என்பதுதான் மிக முக்கியம்.

சரித்திரத்தில் பெரிய அமைதிப் புரட்சி - அறிவுப் புரட்சி - ரத்தம் சிந்தாத சமூகப் புரட்சி!

அந்த வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்பதற் காகத்தான், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்று சொல்லி, இன்றைக்குப் பெரிய சட்டப் போராட்டம் - இன்னும் நடந்துகொண்டிருக்கின்றது - முடியவில்லை - நீதிமன்றங்களில் வழக்குகள் இருக்கின்றன. அதையும் தாண்டி, எதனை எப்படி செய்வது என்ற ஆற்றல்மிக்க நம்முடைய தளபதி ஸ்டாலின் அவர்கள், நேற்று மிக அருமையான அளவிற்கு, அனைவருக்கும் பணி ஆணை வழங்கியிருக்கிறார் என்பது, அது சரித்திரத்தில் பெரிய அமைதிப் புரட்சி - அறிவுப் புரட்சி - ரத்தம் சிந்தாத சமூகப் புரட்சியாகும்.

இந்த சமூகப் புரட்சி, எவ்வளவு சுருக்கமாக, இன்னும் வேகமாக நடக்கவேண்டுமானால், நம்முடைய இன்றைய விழா நாயகர் -வீழா நாயகர் - எப்பொழுதும் விழமாட்டார் - விழாவிற்கு மட்டும் இவர் நாயகர் அல்ல - அவருடைய அரசியல் வாழ்வில், விழாது இருக்கக்கூடிய அளவிற்கு, தெம்பும், திறனும், ஆற்றலும், தெளிவும் உள்ளவர் நம்முடைய செல்வப்பெருந்தகை அவர்கள்.

ஆகவேதான், அவரைப் போன்றவர்கள் இங்கே இருக்கிறபொழுது, இன்றைய காலகட்டத்தில் ஆங்காங்கே ஒரு நல்ல ராணுவ தளபதிகள் தேவை - எப்படி ஒரு நாட்டைக் காப்பதைப்போல - அதைவிட மிக முக்கியம் சமூகப் புரட்சியை ஏற்படுத்தவேண்டும்.

கல்வி வள்ளல் காமராஜர் அவர்கள், எப்படிப்பட்ட சமூகப் புரட்சியை உருவாக்கினார்கள். அதனால்தான், தந்தை பெரியார் அவர்கள், தன்னுடைய தோள்மீது தூக்கி நிறுத்தினார்.

காமராஜர் கேட்டார், ‘‘என்னுடைய சமுதாயத்தில் இருக் கின்ற மக்களை நீ பிரித்துவிட்டாய்; ஒருவனை தாழ்த் தப்பட்டவன், ஒருவனை தொடக்கூடாதவன்; பார்க்கக் கூடாதவன் என்று ஆக்கி வைத்திருக்கிறீர்கள்.

அவனை டாக்டராக்கினேன், அவன் ஊசி போட்டு எந்த நோயாளி செத்துப் போனான்.

அவனை பொறியாளராக்கினேன், அவன் பாலம் கட்டினான்; எந்தப் பாலமும் இடிந்து போயிருக்கிறதா?'' என்று கேட்டார்.

அந்தத் துணிச்சல் இந்த இயக்கத்தில் இருக்கிறது என்றால், செல்வப்பெருந்தகை போன்று இருக்கக்கூடிய வர்கள்தான் அதுபோன்று துணிச்சலோடு சொல்லக் கூடியவர்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஒரு பெரிய சிறப்பு என்னவென்றால், செல்வப்பெருந்தகை என்று சொன்னால், அது வெறும் பணம் என்று பொருள் கொள்ளக்கூடாது; அவர் ஒன்றும், அதானியோ, அம்பானியோ கிடையாது. ஆனால், செல்வம் என்பது எதைக் குறிக்கிறது என்றால், அறிவுச் செல்வம், கொள்கைச் செல்வம் என்பதைத்தான்.

செல்வப்பெருந்தகை: பெருந்தொகையாளர் அல்ல; பெருந்தகையாளர்

அதுமட்டுமல்ல, பல கட்சிகளில், அரசியல் கட்சிகளில் செல்வப் பெருந்தொகையாக இருந்தால்தான் தலைவராக வர முடியும். ஆனால், இவர் பெருந்தொகையாளர் அல்ல; பெருந்தகையாளர் என்பதுதான் மிக முக்கியம்.

அந்தக் கடமை உணர்வு உள்ள காரணத்தால், தொண்டு, கொள்கை, உழைப்பு, அதிலே உறுதி, அவர் இருக்கின்ற கட்சிக்கு நல்ல தலைமை - ராகுல் காந்தி அவர்களின் உரைகள் தெம்பூட்டக்கூடிய உரைகளாகும்.

மதவெறியை நாட்டில் பரப்பக்கூடியவர்களுக்கு இட மில்லை என்று வெளிப்படையாகப் பேசக்கூடியவர். இதுபோன்று காங்கிரஸ் வரலாற்றில், வெளிப்படையாகப் பேசிய ஒரே தலைவர் ராகுல் காந்தி அவர்களைத் தவிர, வேறு யாரும் கிடையாது.

அந்த வகையில், அருமையான தேர்வு. எனவே, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நல்ல உடல்நலத்தோடு இந்தப் பணியை செய்யவேண்டும்.

திராவிட இயக்கம் இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு ஒரு வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது.

பழைய காலத்தில் என்ன நிலை - கலைஞர்கூட ஒருமுறை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

நந்தன் சரித்திம்!

நந்தன் சரித்திரம் உங்கள் அனைவருக்கும் தெரியும். ஒருமுறை சிதம்பரத்திற்குச் சென்று நடராஜனைத் தரிசிப்பதற்காகப் படாதபாடு பட்டார் நந்தனார்.

கடைசி நேரத்தில் சென்று, தில்லை நடராஜனை தரிசிப்பதற்காக சென்றார் என்று கதை எழுதியிருப்பார்கள்.

கடைசி நேரத்தில், நந்தியே விலகியது என்று சொன்ன வுடன், இவர் வெளியே நின்றுகொண்டுதான் பார்த்தார். நந்தி விலகியது - நடராஜர் தரிசனம் அவருக்குக் கிடைத்தது என்று எழுதியிருப்பார்கள்.

நடராஜர் தரிசனம் வெளியே இருந்தபொழுதுதான் நந்தனுக்கே கிடைத்தது.

காலங்காலமாக நம்முடைய சமுதாயத்தை, வெளியே இருக்கக்கூடிய நந்தன்களாக இருக்கக்கூடிய ஒரு சமு தாயத்தை உள்ளே வா, நீயே மணியை ஆட்டு - நீயே பூசை செய் - அதனால் நடராஜர் எங்கும் ஒடிவிடமாட்டார் என்று சொல்லி, மாற்றிய பெருமை - பெரியாருக்கு - கலை ஞருக்கு - திராவிட இயக்கத்திற்கு - அதற்கு உறுதுணையாக இங்கே விழா நாயகராக இருக்கக்கூடிய நம்முடைய செல்வப்பெருந்தகை போன்றவர்களையே சாரும்.

விடியல் ஏற்பட்டு இருக்கிற காலம்

எனவே, இது ஒரு சமூகப் புரட்சி - விடியல் ஏற்பட்டு இருக்கிற காலம். ஒரு நல்ல திருப்பம் ஏற்பட்டிருக்கின்ற காலம்.

இந்தக் காலகட்டத்தில், இன்னும் நிறைய புரட்சிகரமான சட்டங்களை நிறைவேற்ற ஆளுங்கட்சியாக இருக்கக் கூடிய நம்முடைய ஆற்றல்மிகு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்களின் தலைமையில், இது நடக்கவிருக்கின்ற காலத்திலே, அதற்கு உறுதுணையாக இருக்கக்கூடிய - மிகப்பெரிய இயக்கமாக இருக்கக்கூடிய இயக்கம் காங்கிரஸ் இயக்கம். இப்படிப்பட்டவர்கள் உறுதுணையாக இருக் கின்றபொழுதுதான், நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும், நல்ல துணிவு இருக்கும். அவர்கள் வேகமாகச் செல்வதற்கு வாய்ப்பாக இருக்கும். வேகத் தடைகளைப்பற்றி கவலைப் படாமல், பக்குவமாக அதனை எதிர்கொள்ளவதற்கு இவர்கள் துணையாக இருப்பார்கள் என்று சொல்லி,

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைச் சொல்லி, நல்ல உடல்நலத்தோடு நீண்ட காலம் அரசியல் பணிகளைச் செய்து, எல்லோருக்கும் எடுத்துக்காட்டாகத் திகழுங்கள் என்று சொல்லி என்னுரையை முடிக்கின்றேன்.

வாயப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி,

செல்வப்பெருந்தகை வாழ்க!

சிறப்பாக வாழ்க!

அவரின் பொதுவாழ்க்கை மென்மேலும் சிறக்கவேண் டும் என்று கூறி, வாழ்த்தி விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாராட்டுரையாற்றினார்.

சனி, 7 ஆகஸ்ட், 2021

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நினைவு நாள்; நினைவிடத்தில் தமிழர் தலைவர் மரியாதை

 






சென்னைஆக. 7- முத் தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மூன்றா மாண்டு நினைவு நாளான இன்று (7.8.2021) காலை 10.30 மணிக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத் தினார்பின்னர் அருகில் அமைந்திருக்கும் அறிஞர் அண்ணா நினைவிடத்தி லும் கழகத் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திரா விடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன்பொதுச் செய லாளர் வீ.அன்புராஜ்பொருளாளர் வீ.குமரே சன்வழக்குரைஞரணி மாநிலத் தலைவர் .வீரசேகரன்மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம்வழக் குரைஞர் ஜெ.துரைசாமிவழக்குரைஞர் வீரமணிமாநில மாணவர் கழக செயலாளர் பிரின்ஸ் என் னாரெசு பெரியார்மாநில மகளிர் பாசறை செயலா ளர் வழக்குரைஞர் பா.மணி யம்மைபெரியார் சுயமரி யாதை திருமண நிலைய இயக்குநர் பசும் பொன் செந்தில்குமாரிசென்னை மண்டல இளை ஞரணி அமைப்பாளர் சோ.சுரேசுதென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வ நாதன்செயலாளர் செ,.பார்த்தசாரதிஅமைப்பா ளர்கள் கோவி.இராக வன்அரும்பாக்கம் சா.தா மோதரன்ஈக்காட் டுத்தாங்கல் மு.சேகர்மயிலை யுவராஜ்மயிலை சோ.பாலுபொறியாளர் .குமார்சண்முகப்பிரியன்சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி.வீரபத்திரன்செய லாளர் மடிப்பாக்கம் ஜெயராமன்திருவொற்றி யூர் மாவட்ட தலைவர் வெ.மு.மோகன்திரு வொற்றியூர் நகர செய லாளர் .இராசேந்திரன்.

வடசென்னை மாவட்ட செயலாளர்

தி.செ.கணேசன்துணைத் தலைவர் கி.இராமலிங் கம்துணைச் செயலாளர் சு.மும்மூர்த்திமாவட்ட .அமைப்பாளர் .வெங்கடேசன்இளை ஞரணித் தலைவர் வழக் குரைஞர் தளபதி பாண் டியன்செயலாளர் மு.இந் திரஜித்அண்ணா நகர் இளைஞரணி அமைப்பா ளர் ஆகாஷ்இலாரன்சுமுத்தமிழ் நகர் அமைப்பா ளர் வி.பிரபாகரன்பாரதி நகர் கண்மணி துரைதாம் பரம் மாவட்ட செயலா ளர் கோ.நாத்திகன்,  துணைச் செயலாளர் குஆறுமுகம்பொரு ளாளர் மா.இராசுதாம் பரம் நகர செயலாளர் சு.மோகன் ராஜ்துணை செயலாளர் மா.குணசேகரன்பொதுக் குழு உறுப்பினர் சீனிவா சன்இராமாபுரம் ஜனார்த் தனம்பெரும்பாக்கம் ஆதித்.

ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன்அமைப் பாளர் உடுமலை வடி வேல்பெரியார் மாணாக் கன்பூவை இளைஞரணி செய லாளர் வெங்கடே சன்கார்த்திக்ஆவடி தமிழ் மணி.பாஸ்கர்வி.கலை மணிஜெ.பிஆனந்த்இரா.அருள்சி.முரளி கிருஷ் ணன்ஓட்டுநர்கள் அசோக் குமார்தமிழ்ச் செல்வன்சட்டக்கல்லூரி மாணவர் வி.பிரவீன்குமார் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

சேத்துப்பட்டு திராவிடர் கழகத் தோழர் அ.பாபு (நாகூர் அனிபா) மறைவு

வருந்துகிறோம்


சென்னை, சேத்துப்பட்டு திராவிடர் கழகத் தோழர் அ.பாபு (நாகூர் அனிபா) அவர்கள் (வயது-58) 31.7.2021 காலை 7 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு மறைவெய்தினார். மாலை 5 மணி அளவில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், கோ.மஞ்சநாதன், க.தமிழ்ச்செல்வன், சேத்துப்பட்டு நடராசன், வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.  மாலை 6.00 மணி அளவில் உடல் அடக்கம் நடைபெற்றது.

தென்சென்னை மாவட்ட கழகம் சார்பில் சுவரெழுத்து பிரச்சாரம்


தென் சென்னை மாவட்டத்தில் தந்தை பெரியார்தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் பிறந்தநாளை முன்னிட்டு சுவரெழுத்து பிரச்சாரம் தொடங்கியது.  முதல் கட்டமாக பட்டினப்பாக்கம்கடற்கரை (லூப்)சாலைமயிலாப்பூர் காமராசர் சாலை மற்றும் இராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப் பிரச்சாரம்.

---------------------------------------------------------------------------------------------

வள்ளுவர் கோட்டம் (நுங்கம்பாக்கம்) எதிரில் வரையப்பட்டுள்ள சுவரெழுத்து பரப்புரை.