அய்யாவின் அடிச்சுவட்டில் …: இயக்க வரலாறான தன் வரலாறு(257)
கி.வீரமணி
19.2.1995 அன்று திருச்சியில் மாணவர் எழுச்சி மாநாடு புத்தூர், பெரியார் மாளிகை, சிவகங்கை சண்முகநாதனார் நினைவுப் பந்தலில் இசை நிகழ்ச்சியுடன் துவங்கியது. மாநில திராவிடர் கழக மாணவரணி செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார் வரவேற்புரையாற்றினார். கருத்தரங்கம், மந்திரமா? தந்திரமா? பேரணி, வழக்காடு மன்றம், வீர விளையாட்டுகள், தீர்மான அரங்கு என மாநாட்டிற்கு சிறப்பாக மாணவரணியினர் ஏற்பாடு செய்திருந்தனர். மேடையில் 1946ஆம் ஆண்டு குடந்தையில் திராவிடர் மாணவர் கழகத்தைத் தோற்றுவித்து திறம்பட நடத்திய முன்னோடிகளான சிவகாசி எஸ்.தவமணிராசன், நீதிபதி சத்தியேந்திரன், பூண்டி கோபால்சாமி, சேலம் மாவட்ட தலைவர் பொத்தனூர் க.சண்முகம், திருச்சி து.மா.பெரியசாமி, லால்குடி முத்துச்செழியன் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி, சால்வை போர்த்திப் பாராட்டினேன். அவர்களின் செயல்பாட்டை நினைவுகூர்ந்தேன். தொடர்ந்து உரையாற்றுகையில், திராவிடர் மாணவர் கழகத் தோற்றம், நோக்கம், செயல்பாடுகளை விளக்கி, இந்த மாநாடு மாணவர் கழக வரலாற்றில் ஒரு முக்கிய வரலாற்றுத் திருப்பம் என பெருமைப்பட வேண்டிய வாழ்க்கை நெறிகளை நான் கூற, பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்த மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களும் திரும்பக் கூறி மெய்சிலிர்க்க வைத்தனர்.
பாராட்டும் கேடயமும் பெற்ற பெரியார் பெருந்தொண்டர்களுடன் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
19.2.1995 அன்று திருவெறும்பூர் அடுத்த வேங்கூரில் பெரியார் பெருந்தொண்டர் ஞா.ஆரோக்கியராசு இல்ல மணவிழா. தஞ்சாவூர் இ.ஞானப்பிரகாசம்_இருதயமேரி ஆகியோரின் மகன் சகாயராசுக்கும் உரத்தநாடு சமரசப்பாண்டியன்_ நாகலட்சுமி ஆகியோரின் மகன் அஞ்சுகமணிக்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழி கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன். மணவீட்டார் சார்பாகவும், பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் சால்வைகளை அணிவித்து சிறப்பித்தனர்.
ஜாதி ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட பெரியார் பெருந்தொண்டர் ஆர்.பி.சாரங்கன் 75ஆம் பிறந்தநாளையொட்டி அவருக்கு கேடயம் வழங்கி மகிழும் ஆசிரியர்
20.2.1995 அன்று மன்னையில் ஜாதி ஒழிப்பு மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. ஜாதி ஒழிப்பிற்காக சட்டத்தை எரித்துச் சிறைசென்ற மாவீரர்களுக்கும், வீர மரணமடைந்தோருக்கும் புகழாரம் சூட்டினேன். கழக இளைஞரணித் தலைவர் இராயபுரம் இரா.கோபால் தலைமையில் மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் கலை நிகழ்ச்சியோடு நடத்தப்பட்டது. தஞ்சை பெரியார் பெருந்தொண்டர் ஆர்.பி.சாரங்கன் அவர்களின் 75ஆம் பிறந்த நாளையொட்டி அவருக்குச் சால்வை அணிவித்து, வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அவருடைய இயக்கப் பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினேன். அவ்வுரையில், “தந்தை பெரியாருடைய இயக்கம் போல இந்திய வரலாற்றிலேயே, ஏன், உலக வரலாற்றிலேயே இன்னொரு இணையான இயக்கத்தை எளிதில் காணமுடியாது. இதை நான் சொல்லவில்லை. லண்டன் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், அங்கே இருக்கக்கூடிய நம்முடைய தமிழர்கள் சில சந்தேகங்கள் என்னிடம் கேட்டார்கள். அப்பொழுது உணர்ச்சி வயப்பட்டு ஒருவர் சொன்னார், “உலகம் முழுவதும் இருக்கின்ற இதுபோன்ற பகுத்தறிவு இயக்கங்களுக்குத் தலைமையிடம் லண்டன். ஆனால், தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கியது போன்ற ஓர் இயக்கத்தை நாங்கள் வாழ்நாளிலேயே கண்டதில்லை’’ என்று தெளிவாகச் சொன்னார் எனப் பல கருத்துகளை மாநாட்டு உரையில் கூறினேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக