வியாழன், 4 ஜூலை, 2024

நீட்’ தேர்வை எதிர்த்து தி.மு.க. மாணவர் அணி எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்

 


விடுதலை நாளேடு

சென்னை, ஜூலை 4- நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டசபையில் கடந்த 28ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

‘நீட்’தேர்வுக்கு எதிர்ப்புதெரி வித்தும், ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கேட்டும் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி யும் தி.மு.க. மாணவர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று (3.7.2024) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ‘நீட்’ தேர்வு தேவை இல்லை, ‘நீட்’ விலக்கு சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி முதலமைச்சர் முன்மொழிந்து ஒருமனதாக நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (3.7.2024) நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி , மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன், தி.மு.க. மருத்துவரணி செயலாளர் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன், தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், பொறியியல் அணி செயலாளர் எஸ்.கே.டி.கருணாநிதி. பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட திமுக மாணவரணி, இளைஞரணியினர், திராவிடர் கழக துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் திராவிட மாணவர் கழக, இளைஞரணி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

நீட்டை தமிழ்நாடுதான் முதலில் எதிர்த்தது. இன்று நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்துள்ள நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகன பரப்புரை பயணத்துக்கு அனைவரும் ஆதரவை அளிக்க வேண்டும் என்று திராவிடர் கழக துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் கண்டன உரையில் குறிப்பிட்டார்.

நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் முறைகேடுகளில் ஈடு பட்டோர் மீது ஒன்றிய அரசு கடும் நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், CUET, NET உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி தி.மு.க.வினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் ஏராளமானார் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:

நாடாளுமன்றத்திலே ‘நீட்’ ஒழிக்க வேண்டும் என்கிற விவாதத்திற்கு முதலில் அவைத் தலைவர் ஒப்புக்கொண்டார். ஆனால், பதில் சொல்வதற்கு எதுவும் இல்லை என்கிற காரணத்தால் பிரதமர் நரேந்திர மோடி, திருடன் கையும் களவுமாக மாட்டிக்கொண்டான் என்று சொல்வார்கள் அல்லவா, அதுபோலே, இந்த நீட் தேர்வு ஊழலிலே கையும் களவுமாக மாட்டிக்கொண்ட காரணத்தினால், இன்று (3.7.2024) முடிய வேண்டிய நாடாளுமன்றக் கூட்டத்தை நேற்றே முடித்துள்ளார்கள் என்று சொன்னால், இது திமுகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

இந்த ‘நீட்’ தேர்வை அறிமுகப்படுத்தியதில் இருந்து நாங்கள் எதிர்த்து வருகிறோம். ‘நீட்’ தேர்வை எதிர்த்தபோது, தி. மு.க.காரர்களுக்கு இதே வேலை என்றெல்லாம் சொன்னார்கள். நாங்கள் வம்புக்காக இதை செய்யவில்லை. வளர்ச்சியை அழிக்க நினைக்கத்தான் ‘நீட்’தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.

எந்த இனம், எந்த சமுதாயம் நம்மை அடிமைப்படுத்த வேண்டுமென்று நினைத்ததோ, அவர்கள் மகிழ்ச்சியோடு நீட்டை வரவேற்றார்கள்.

நான் மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தபோது 21 தமிழ்நட்டில் நீட்டை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பிவைத்தார். ஆனால், ஆளுநர் அதற்கு கையொப்பம் இடவில்லை. அதை எதிர்த்து மாநிலங்களவையில் பேசினேன்.

நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் அமைச்சர் ஆய்வுக்கு கர்னூலுக்கு சென்றார். வருவாய்த்துறை அலுவலகத்தில் பணி செய்த 42 பேரில் அத்தனை பேரும் பார்ப்பனர்கள். அதன்பிறகுதான் கம்யுனல் ஜி.ஓ. வந்தது.

திராவிட இயக்கம் இல்லை என்றால், கம்யுனல் ஜி.ஓ. இல்லை என்றால், இத்தனை ‘டாக்டர்கள்’ வந்திருப்பார்களா? அதனை அழிப்பதுதான் நீட் தேர்வின் நோக்கம். ஒரு குறிப்பிட்ட கூட்டம்தான் அதை படிக்க முடியும். ‘நீட்’ எழுதாமல் டாக்டர் ஆனவர்கள் எல்லாம் முட்டாளா?. ஒரு நல்ல காலம் தற்போது திரும்பிக்கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தை யாராக இருந்தாலும் ஆதரிக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டார்கள்.

இங்கே ராகுல் வந்தார். பெரியாருடைய புத்தகத்தை, தந்தைபெரியார் கருத்துகள் அடங்கிய புத்தகத்தை ராகுல் காந்தியிடம் தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடுத்தி ருக்கிறார்கள்.

நானும், ஆசிரியரும் கோவைக்கு ஒரே ரயிலில் சென்றோம். அப்போது ஆசிரியரிடம் பேசிக்கொண்டு சென்றேன். அப்போது, ராகுல் இந்த புத்தகத்தை படித்துவிட்ட பிறகு, அவர் பெரியாரிஸ்டாக மாறிவிட்டார் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த கருத்துகள் ஆழமானவை. நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசுகிறாரா, ஆசிரியர் பேசுகிறாரா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு நாடாளுமன்றத்தில் ராகுல் பேசியுள்ளார். உள்ளபடியே திராவிட இயக்கத்துக்குக் கிடைத்த மாபெரும் பெயர். தந்தைபெரியாருக்கு கிடைத்த பெயர் என்பதை ஒவ்வொருவரு மானமுள்ள தமிழனும் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்தான் மக்களவையில் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறியபோது, நரேந்திர மோடி பயந்துகொண்டு ஓடிவிட்டார். காரணம் பதில் சொல்ல முடியவில்லை.
செங்கல்லை வைத்து ஓர் ஆட்சியை கவிழ்த்தவர் உதயநிதி ஸ்டாலின், இப்போது அவர் ‘நீட்’ தேர்வு பிரச்சினையையும். கையில் எடுத்துள்ளார். நிச்சயமாக அதில் அவர் வெற்றி காண்பார்.

-இவ்வாறு அவர் பேசினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், “நீட் எனும் சமூக அநீதிக்கு எதிரான திராவிட முன்னேற்றக் கழகத்தின் போரில் இன்று ஒலிக்கும் முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள்” என்று பதிவிட்டுள்ளார்.

1 கருத்து:

  1. அவனுக அவ்வளவு சுலபமா நீட்டை ரத்து செய்ய மாட்டானுக. இன்னும் ஒரு இந்திப் போராட்டம் தேவை.

    பதிலளிநீக்கு