மாநிலக் கல்வித் திட்டத்தை ஒழித்து விட்டு நாடெங்கும் சி.பி.எஸ்.இ. திட்டத்தை அமல்படுத்தும் சதி
சென்னை ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து தமிழர் தலைவர் ஆசிரியர் போர் முழக்கம்!
சென்னை, ஜூலை 12, 'நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் - வெற்றி கிட்டும் வரை, தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இன்று (12.7.2017) காலை 11 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆற்றிய உரை வருமாறு:
மிகுந்த எழுச்சியோடும், கடந்த சில நாள்களுக்கு முன்பு இங்கு கூடியிருக்கக் கூடிய ஒத்தக் கருத்துள்ள அரசியல் கட்சி அமைப்புகளும், கல்வி அமைப்புகளும், மருத்துவ அமைப்புகளும் எல்லாம் இணைந்து எடுத்த முடிவுக்கேற்ப - இன்றைக்கு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கை மத்திய அரசு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தி இவ்வார்ப்பாட்டம்!
இது பிச்சையோ, சலுகையோ அல்ல - கெஞ்சிக் கேட்டுப் பெறுவதும் அல்ல. மாறாக, நமக்கு உள்ள, நம்முடைய மாநிலத்திற்கு அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமை. அந்த உரிமை பறிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் நடைபெறக்கூடிய இந்த சிறப்பான ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் நடைபெறக்கூடிய இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, எனக்கு முன் உரையாற்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உரையாற்றிய அமைப்புச் செயலாளர் அருமைச் சகோதரர் மானமிகு ஆர்.எஸ்.பாரதி எம்.பி. அவர்களே,
தளபதி மு.க.ஸ்டாலின் வராமைக்குக் காரணம்
இந்நேரத்தில் ஒன்றைக் குறிப்பிடவேண்டும். இன்று காலையில், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாக இருக்கக் கூடிய அன்புச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், என்னிடம் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார்கள்.
கண் அறுவை சிகிச்சை செய்து சில நாள்கள் ஆகியிருக்கின்றன. இந்நிலையில், ஏராளமான கூட்டம் இருக்கின்ற இடத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் அண்ணன் அவர்களே, நீங்கள் அறிவித்தபடி அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள மனம் இருந்தாலும்; இதுபோன்ற சங்கடம் இருக்கிறது - நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார்.
உங்கள் நலம்தான் முக்கியம்; உங்கள் நலத்தில்தான் தமிழ்நாட்டினுடைய நலன் இருக்கிறது. ஆகவே, அருள்கூர்ந்து நீங்கள் வரவேண்டும் என்று நினைத்தாலும், வரவேண்டாம் என்று நாங்களே சொல்லுவோம். ஆகவே, உங்களுக்குப் பதிலாக பாரதி அவர்கள் வருகிறார்கள், பரவாயில்லை.
அதேபோல, உங்கள் பணியை மிகச் சிறப்பாக இங்கே இருந்து செய்வதற்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செயல்வீரர் சேகர்பாபு அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பது நன்றிக்குரிய ஒன்று என்று அவரிடத்தில் நான் சொன்னேன்.
ஆகவே, தளபதி அவர்கள் உளப்பூர்வமாக இப்பிரச்சினை குறித்து தமிழகம் முழுவதும் நடைபெறுகிற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்று அறிக்கை கொடுத்தார்.
எல்லா இடங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகம், மற்ற அமைப்புகள், ஒத்த கருத்துள்ளவர்கள் எல்லோரும், எங்களுக்குள் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இந்தப் பிரச்சினையைப் பொறுத்தவரையில், இதில் மட்டுமல்ல, இதுபோன்ற பல பிரச்சினைகளில் - செம்மொழி தமிழை - மீண்டும் அதற்குரிய பாதுகாப்போடு அமைக்கவேண்டும் என்பது போன்ற அன்றாடம் தோன்றிக் கொண்டிருக்கிற அவலங்கள், ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பதில் ஒன்றாக இருப்போம் என்ற உணர்வோடு எல்லோரும் இங்கே வந்திருக்கிறார்கள்.
அதுபோலவே, நம்முடைய அன்பான அழைப்பினை ஏற்று இங்கே வருகை தந்து, சிறப்பாக உரையாற்றியுள்ள தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவர் அன்புச் சகோதரர் பொன்விழா காணும் தீரர் திருநாவுக்கரசர் அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பாக அருமையான கருத்துகளை சுருக்கமாக எடுத்து வைத்து அமர்ந்திருக்கக்கூடிய நம்முடைய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன் அவர்களே,
எனது அருமைச் சகோதரரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அருமைத் தோழர் முத்தரசன் அவர்களே,
இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் செல்வசிங் அவர்களே,
மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களே,
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே,
பேராயர் எஸ்றா.சற்குணம் அவர்களே, பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொறுப்பாளர் பேராசிரியர் பிரின்சு கஜேந்திர பாபு அவர்களே,
எஸ்.பி.டி.அய்.யைச் சார்ந்த அப்துல் அமீது அவர்களே,
மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பாக ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கக்கூடிய திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
அனைத்து இயக்கங்களைச் சார்ந்த, தோழமைக் கட்சிகளைச் சார்ந்த அருமைத் தோழர்களே, தாய்மார்களே, செய்தியாளர்களே, ஊடகவியலாளர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
ஒரே ஒரு செய்தி - பல பிரச்சினைகளை இங்கே சொன்னதுபோல, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் போராட்டங்கள் தமிழ்நாட்டில் வெடித்துக்கொண்டே இருக்கின்றன.
போராடவேண்டும் என்று நினைப்பவர்களுக்குக்கூட ஓய்வு கிடையாது என்று நினைக்கவேண்டிய அளவிற்கு, மோடி அரசு ஒவ்வொரு நாளும், குறிப்பாக தமிழர்களை, திராவிடர்களை, திராவிட இயக்கத்தை, தமிழ்நாட்டினுடைய நலனை கெடுக்கக்கூடிய பல்வேறு செய்திகளை அவ்வப்பொழுது அறிவித்து, மீண்டும் மீண்டும் நம்மை வம்புக்கு இழுக்கக்கூடிய செய்திகளை நடத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
கீழடியில் கீழறுப்பு
கீழடியில் ஒரு ஆய்வா? உடனே அந்த அதிகாரியை மாற்றுகிறார்கள்.
அதுபோல, நீண்ட காலம் பாடுபட்டு, நம்முடைய தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத்தந்தவர் நம்முடைய ஒப்பற்ற தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களாவார்கள்.
அந்த செம்மொழி நிறுவனம் என்பது, இன்றைக்கு மிகப்பெரிய அளவில் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. சட்டமன்றத்தில் இதுபற்றி கேள்வி கேட்டபொழுது அங்கே சொல்லியிருக்கிறார், நம்முடைய முதல்வராக காட்சியளித்துக் கொண்டிருக்கின்ற ஒருவர்.
அவர் சொல்கிறார், நான்தான் அதற்குத் தலைவர், எனக்கே அது தெரியாது என்று. தலைவருக்கே தெரியாமல், நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
எண்ணூர் துறைமுகம் கல்வி வள்ளல் காமராசர் பெயரில் இருக்கிறதே, அதனை விற்கவேண்டும் என்பதற்கு முயற்சி செய்கிறார்களே, லாபத்தில் நடக்கக்கூடிய அந்தத் துறைமுகத்தை எதற்காக விற்கவேண்டும் என்று, நம்முடைய எம்.எல்.ஏ.,க்கள் இங்கே நிற்கக்கூடிய சகோதரர்கள் கேட்கிறார்கள். அதற்கு அவர் சொல்கிறார், இதுவரையில் எந்தத் தகவலும் எனக்கு வரவில்லை என்று சொல்கிறார்.
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று - மத்திய அரசின் நடவடிக்கைகள் - தமிழக அரசுக்கே தெரியவில்லை என்றால், இதைவிட வெட்கக்கேடு வேறு கிடையவே கிடையாது.
எப்படிப்பட்ட சூழ்நிலையில், நம்முடைய இளைஞர்கள், வெறும் நீட் தேர்வுக்காக மட்டுமல்ல, ஒவ்வொன்றுக்காகவும், இந்த ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு தொடர்ந்து போராடியாக வேண்டும்.
மிஸ்டுகால் கட்சி காலூன்ற முடியாது
இந்த ஒற்றுமையைக் கட்டுகின்ற மோடிக்கு எங்களுடைய நன்றி. அதுதான் மிக முக்கியம். அடிக்கடி நீங்கள் சீண்டிக்கொண்டே இருங்கள்; அடிக்கடி நீங்கள் பதம் பார்த்துக் கொண்டே இருங்கள். உங்கள் காலில் விழுவதற்கு இருக்கிற கூட்டமல்ல - உங்கள் கால்களை இந்தத் தமிழ்நாட்டில் ஒருபோதும் - மிஸ்டு காலைத் தவிர ஊன்ற முடியாது - ஊன்ற விடமாட்டோம் என்று சொல்வதற்குத்தான் ஒற்றுமையாக இந்த அணி திரண்டு இருக்கிறது.
ஏன் நீட் தேர்வுக்கு ஒருமனதாக தமிழகத்தில் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரசு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்பட அனைவரும் மிகச் சிறப்பான வகையில் சட்டமன்றத்தில் வாக்களித்தார்கள். ஒருமனதாக நிறைவேற்றி அய்ந்தரை மாதங்களாகின்றன.
தமிழ்நாடு சட்டமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றிய மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புகின்ற வேலை அவர்களுடைய வேலை. தடுக்கக் கூடிய உரிமை மத்திய அரசுக்கு இல்லை, அரசமைப்புச் சட்டப்படி.
இங்கே வழக்குரைஞர்கள் நிறைய பேர் இருக்கிறோம். தயவு செய்து யாராவது சொல்லட்டும். நாங்கள் கேட்பது, ஆரம்பத்தில் நான் சொன்னதுபோல, பிச்சையோ, சலுகையோ அல்லது ஏதோ ஒரு வகையில் நீங்கள் எங்களுக்குக் கருணை காட்டுங்கள் என்பதல்ல - எங்கள் பிள்ளைகளுக்காக கருணை காட்டுங்கள் என்பதற்காக அல்ல. எங்களுக்குள்ள உரிமையை நிலைநாட்டுவதற்காக நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம்.
இந்திய அரசமைப்புச் சட்டப்படி பதவி பிரமாணம் எடுத்திருக்கிறார்கள். அந்த அரசியல் சட்டத்தையே மோசடி ஆக்கியிருக்கிறார்கள் - குற்றம் சுமத்துகிறோம் இந்த அரங்கத்தில். இது அறிவார்ந்த அரங்கம் - மக்கள் அரங்கம்.
பொதுப் போட்டி என்பது என்ன?
மோசடி 1:
பொதுப் பட்டியல் என்று சொன்னால், கல்வி மத்திய அரசும் சட்டம் செய்யலாம்; மாநில அரசும் சட்டம் செய்யலாம் என்று சொன்னாலும்கூட, பொதுப்பட்டியல் என்று நாம் தமிழில் மொழி பெயர்க்கிறோமே தவிர, ஆங்கிலத்தில் ‘கன்கரண்ட் லிஸ்ட்' 'ஒப்புமை' கொடுத்தால்தான் சட்டம் இயற்ற முடியும்.
மாநில அரசை கலந்தாலோசித்தார்களா? மாநில அரசு மசோதா இயற்றி அனுப்பியதே, அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவேண்டாமா? குடியரசுத் தலைவருக்கே அனுப்பாமல் இவர்களே வைத்துக்கொண்டு, மத்திய கல்வி அமைச்சராக இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஒருவரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கக்கூடிய இன்னொருவரும் சொல்கிறார்கள்,
தமிழ்நாடு அரசு தங்கள் காலடியில் இருக்கிறது; தமிழ்நாடு அரசு பேசா அரசு; கேளாக் காது. ஆகவே, நாங்கள் என்ன சொன்னாலும் ஆடுவார்கள் என்பதை அவர்கள் மனதில் வைத்துக்கொண்டு சொல்கிறார்கள்-
‘‘நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க முடியாது''என்று.
இதனை சொல்வதற்கு நீங்கள் யார்? அரசியல் சட்டப்படி எங்களுடைய சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்புங்கள் - குடியரசுத் தலைவர் சொல்லட்டும் இதில் சட்ட சிக்கல் இருக்கிறது என்று. நாங்கள் அதற்குப் பதிலளிக்கிறோம், விளக்கமளிக்கிறோம். அதனையல்லவா மத்திய அரசு செய்திருக்கவேண்டும். குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமலேயே நீங்கள் நீட் தேர்வை தமிழ்நாட்டில் நடத்தியிருக்கிறீர்கள்.
குழி பறிக்குன் குதிரைஒரு பழமொழி உண்டு, ‘‘குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல், குழியையும் பறித்ததுபோல'' என்று. அதுபோல, என்ன நடந்தது - நீட் தேர்வை நடத்துகின்ற நேரத்தில், அதில் ஆயிரத்தெட்டு குளறுபடிகள்.
மொழியாக்கம் செய்வோம் என்று சொன்னீர்களே - இது இன்னொரு மோசடி. மொழியாக்கம் செய்தார்களா கேள்விகளை?
இந்தியா முழுவதும் தகுதி திறமையை அளக்க ஒரே சீரமைப்பு என்று சொன்னீர்களே, எல்லோருக்கும் ஒரே கேள்வியா? அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., தேர்வுகளில் ஒரே வினாத்தாள் கொடுக்கப்படுகிறதே, அதுபோல் நீட் தேர்வுக்குக் கொடுக்கப்பட்டதா? இந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லியாகவேண்டும்.
இல்லை. குஜராத்திற்கு சுலபமான கேள்வித்தாள் - தென்மாநிலங்களான தமிழ்நாட்டிற்கு, கேரளாவிற்கு எல்லாம் கடினமான கேள்வித்தாள்கள். இது எவ்வளவு பெரிய மோசடி.!
நீட் தேர்வு முடிவில் 25 இடத்தில், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் ஒருவர்கூட வர முடியவில்லை. சரி, தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்தவர்களாவது 25 இடத்தில், ஒரு இடத்தையாவது பெற முடிந்ததா? அதற்கு என்ன அர்த்தம்? நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
அருமையாக சொன்னார், நம்முடைய சகோதரர் திருமா அவர்கள். அப்படி அப்படியே வைத்து, 5 சதவிகிதமாக இருக்கிற சி.பி.எஸ்.இ.,-யை, சமஸ்கிருதம் சொல்லிக் கொடுப்பதை, இந்தி சொல்லிக் கொடுப்பதை - மத்திய அரசினுடைய ஆதிக்கத்தில் இருப்பதை அந்தத் திட்டத்திலேயே வைத்துவிட்டு, தமிழ்நாட்டு திட்டத்திற்கு விடை கொடுத்து புறந்தள்ளி விடுவார்கள். எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
மோசடி 2:
நம்முடைய பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் மிக அழகாகச் சொன்னார்கள். ரிசல்ட் போட்டிருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டுப்படி நாங்கள் பின்பற்றுவோம் என்று சொல்லிவிட்டு,
பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம்,
தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு 22.5 சதவிகிதம் என்று சொன்னால், 49.5 சதவிகிதம்.
மற்றவைகளையெல்லாம் இங்கே சுட்டிக்காட்டினார்கள். நான் விளக்கவேண்டிய அவசியமில்லை. இந்த அரங்கம் அதனைப் புரிந்துகொண்டிருக்கிறது.
Open Competition திறந்தபோட்டி - தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், முன்னேறிய ஜாதியினர் யாராக இருந்தாலும் அனைவரும் போட்டி போடலாம். அதில் அவர்களுடைய தகுதிக்கேற்ப, மதிப்பெண்களுக்கு ஏற்ப இடத்தைப் பிரித்துக் கொள்ளலாம் என்று இருக்கும் அந்த இடத்தை - Others என்ற ஒரு வார்த்தையைப் போட்டு, 50.5 அந்த இடத்தை நாங்களே கபளீகரம் செய்வோம் என்று, 10 சதவிகிதம் உள்ள பார்ப்பனர்களும், மேல்ஜாதிக்காரர்களும் செய்திருக்கிறார்கள் என்றால், இந்தியா முழுவதும் இந்த மோசடியை மோடி அரசாங்கம், மோடி வித்தையாக அரங்கேற்றி இருக்கிறது. இது பெரியார் கண்ணாடிக்கு மட்டும்தான் தெரியும். உடனடியாக இதனை எடுத்துச்சொன்னதின் விளைவாகத்தான் நண்பர்களே, இப்போது திணறியிருக்கிறார்கள்.
இது அரசியல் சட்டத்திற்கு விரோதம்; நீதிமன்ற ஆணைகளுக்கு விரோதம் - உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு விரோதம். இதனை அத்தணையும் எடுத்துச் சுட்டிக்காட்ட வேண்டியது நம்முடைய அனைத்துக் கட்சிகளுடைய கடமையாகும்.
திண்ணைப் பிரச்சாரம் செய்க
இங்கே நண்பர்கள் அனைவரும் சொன்னார்கள், நான் அதனை தொகுத்து உங்கள் நினைவிற்காக சொல்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் இதைத் திண்ணைப் பிரச்சாரம், தெருப் பிரச்சாரம், போராட்டம் இவை அத்தனையும் செய்தாகவேண்டும்.
அதில் ஒரே ஒரு செய்தியை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். தமிழ்நாட்டில்தான், அதுவும் திராவிட இயக்க ஆட்சியினால்தான், அதிலும் கலைஞர் அவர்கள் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த காரணத்தினால்தான், தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற நிலை இல்லை.
கழகமே இல்லாத ஆட்சியா?
கழகமே இல்லாத ஆட்சியை நாங்கள் கொண்டு வரப்போகிறோம் என்று காலே இல்லாதவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கழகமே இல்லாத ஆட்சியை உங்களால் கொண்டு வர முடியுமா? அப்படி வந்தால் என்னாகும்? கலகங்களே உள்ள தமிழ்நாட்டைத்தான் உங்களால் உருவாக்க முடியும்.
இந்தக் கூட்டம் இருக்கின்ற வரையில், இங்கே அணி திரண்டு வந்திருக்கிறோமே, கைகோர்த்து கொண்டிருக்கிறோமே - இவர்களுடைய உடலில் கடைசி ஒரு சொட்டு ரத்தம் இருக்கின்ற வரையில் உங்களால் அதனை சாதிக்க முடியாது. இது பெரியார் பிறந்த பூமி. அம்பேத்கர் அவர்கள் உணர்வுகள் பரந்த பூமி. அண்ணா ஆண்ட பூமி. பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காமராசர் ஆண்ட பூமி. இந்த பூமி சாதாரண பூமியல்ல - கலைஞர் அவர்கள் ஆண்ட பூமி - அடுத்து தளபதி ஸ்டாலின் அவர்கள் ஆள இருக்கிற பூமி. நீங்கள் நினைப்பதைப்போல இங்கே நடக்காது.
இங்கே அடிமை அரசியல் முடிந்துவிட்டதா? என்று கேட்டார் சுப.வீ. அவர்கள். முடியவில்லை என்று அழகாகச் சொன்னார்கள்.
நீட் தேர்வை ஒழிக்கின்ற வரையில் நாங்கள் போராடுவோம். நுழைவுத் தேர்வை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார். அதனை எதிர்த்து 21 ஆண்டுகள் தொடர்ந்து போராடினோம் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும். ஒழிந்தது. ஜெயலலிதா அம்மையார் அவர்கள் எங்களுடைய கருத்தை ஏற்று, ஆனால், அவருக்கே உரிய ஒரு முறையில், நிபுணர்கள் குழுவை அமைக்காமல், சட்டமன்றத்திலேயே நிறைவேற்றினார்கள் - 2005 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், உடனே நீதிமன்றத்தில் தோற்றது.
நாங்கள் அப்போதே சொன்னோம், ஒரு நிபுணர் குழுவை அமையுங்கள் - அதற்குப் பிறகு அதனை சட்டமாக்குங்கள். சரியாக இருக்கும், நீதிமன்றமும் அதனை செல்லாது என்று சொல்லாது என்றோம்; அதனை அவர்கள் செய்யவில்லை.
அடுத்ததாக கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்தார், அதனை செய்தார், அதன் காரணமாகத்தான் இத்தனை ஆண்டுகளாக நம்முடைய பிள்ளைகள், கிராமத்துப் பிள்ளைகள் மருத்துவர்களாக வந்தார்கள், மிகப்பெரிய அளவில்.
ஆகவே, நண்பர்களே! இப்பொழுது நாம் செய்யவேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கின்றன. எனவே, நீட் தேர்வுக்காக மட்டுமல்ல இந்த ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு என்பது.
உண்ணும் உரிமைக்குக் கூட ஆபத்தா?
சமூகநீதிக்கு ஆபத்து ஏற்படும்பொழுது, மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்படும்பொழுது, ஏன் மாநில உரிமைகளுக்கு ஆபத்து ஏற்படும்பொழுது, நம்முடைய மொழிக்கு ஆபத்து ஏற்படும்பொழுது, நம்முடைய கலாச்சாரத்திற்கு ஆபத்து ஏற்படும்பொழுது, உண்ணும் உரிமைக்கு ஆபத்து ஏற்படும் பொழுது இன்றைக்கு உச்சநீதிமன்றம் தடை போட்டிருக்கிறது என்பது வேறு; நீதிமன்றங்களைவிட, நாங்கள் நம்புவது வீதிமன்றங்களைத்தான், மக்கள் மன்றங்களைத்தான்.
பத்திரிகைகளில் என்ன எழுதினார்கள் தெரியுமா? மாட்டுக்கு வந்தது - அடுத்ததாக கோழிக்கு வரப் போகிறது என்று.
அடுத்தது என்ன சொல்வார்கள்? வெங்காயத்தை சாப்பிடக்கூடாது என்று. ஏனென்றால், வைஷ்ணவர்கள் என்ன சொல்வார்கள் என்றால், வெங்காயத்தை வெட்டினால் ஒரு பக்கம் சங்கு; இன்னொரு பக்கம் சக்கரம் இருக்கிறது என்று சொல்லி அவர்கள் வெங்காயத்தை சாப்பிடமாட்டார்கள்.
பனிப்பாறையின் ஒரு முனை!
உங்கள் காலில் விழ ஒரு ஆட்சி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு, அதுதான் தமிழகத்தின் நிலை என்று நினைக்காதீர்கள். இந்த ஆட்சியை அசைப்போம் - இல்லையானால், வேறு ஆட்சியை, திராவிட இயக்க ஆட்சியை நாங்கள் தேவையான நேரத்தில், இந்த மக்கள் அமைப்பார்கள், அமைப்பார்கள். அதுதான் ஒரே வழி! மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்கமாட்டோம். நீட் தேர்வு என்பது இருக்கிறதே, அது ஒரே ஒரு பனிப்பாறையின் முனை. அவ்வளவுதான் வராது. அதற்கு அடியிலே எத்தனையோ செய்திகள் - மாநில உரிமைகள் இருக்கின்றன.
எனவே, நண்பர்களே, நீங்கள் அத்துணைப் பேரும், மேடையில் இருக்கின்ற கட்சிகள் பெருகுமே தவிர, சுருங்காது. ஏனென்றால், பல பேரை நம்மோடு சேர்த்துக் கொண்டே இருக்கிறார் மோடி அவர்கள். ஆகவே, அவருக்கு நன்றி!
ஒலிமுழக்கங்கள்
எனவேதான், தொடர்ந்து நாம் போராட்டக் களத்தில் வெல்வோம்! வெற்றி பெறும் வரை போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இங்கே வந்திருக்கின்ற அத்துணைப் பேருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
போராடுவோம் போராடுவோம்!
நீட்டை ஒழிக்கின்ற வரையில் போராடுவோம்!
மாநில உரிமைகளைப் பாதுகாக்கப் போராடுவோம்!
சமூகநீதியைப் பாதுகாக்கப் போராடுவோம்!
மக்கள் அரசை உருவாக்கவோம்!
உண்மையான சுயமரியாதை அரசை உருவாக்குவோம்!
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
-விடுதலை,12.7.17