வெள்ளி, 27 ஜனவரி, 2023

இளைஞரணி மாநில, மண்டல மற்றும் மாவட்ட புதிய பொறுப்பாளர்கள்

வியாழன், 26 ஜனவரி, 2023

திராவிட தொழிலாளர் கழக ஆலோசனைக் கூட்டம்


தமிழர் தலைவர் தலைமையில் திராவிட தொழிலாளர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் 30.1.2023 அன்று சென்னை பெரியார் திடலில் சிறப்பாக நடத்துவது பற்றிய ஆலோசனைக் கூட்டம் மாநில செயலாளர் மு.சேகர் தலைமையில், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், திராவிட தொழிலாளர் கழகம் மற்றும் பெரியார் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சங்க பொறுப்பாளர்களான தாம்பரம் ப.முத்தையன், குணசேகரன், மதுரை சிவகுருநாதன், வெ.மு.மோகன், தி.செ.கணேசன், செ.ர.பார்த்தசாரதி, அம்பத்தூர் இராமலிங்கம், க.சுமதி, மா.இராசு மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்தனர் (சென்னை பெரியார் திடல், 23.1.2023).

திங்கள், 23 ஜனவரி, 2023

திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல்

ஞாயிறு, 22 ஜனவரி, 2023

திராவிட மாணவர் கழக மண்டல மாவட்ட புதிய பொறுப்பாளர்கள்

சனி, 21 ஜனவரி, 2023

சைதை மேற்கு பகுதி மு.தெய்வசிகாமணி விடுதலை வளர்ச்சி நிதி வழங்கினார்

நன்கொடை

தென்சென்னை கழகத் தோழர், சைதை மேற்கு பகுதி மு.தெய்வசிகாமணி மற்றும் அவர் மகள் வெற்றிச் செல்வி ஆகியோர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் ‘பெரியார் விருது' பெற்றதன் மகிழ்வாக அவருக்குப் பயனாடை அணிவித்தும், விடுதலை நாளிதழ் வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கியும் மகிழ்ந்தனர்.

வியாழன், 19 ஜனவரி, 2023

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சைதை.எம்.பி.பாலு அவர்களின் தொண்டினைப் பாராட்டி திராவிடர் கழகத்தின் சார்பில், தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து நினைவு பரிசை வழங்கினார் (''பெரியார் விருது'' வழங்கப்பட்டது)

சென்னை பெரியார் திடலில், திராவிடர் திருநாள் பொங்கல் விழாவில் ''பெரியார் விருது'' வழங்கப்பட்டது

91 வயதை நெருங்கக் கூடிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சைதை.எம்.பி.பாலு அவர்களின் தொண்டினைப் பாராட்டி திராவிடர் கழகத்தின் சார்பில், தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து, நினைவுப் பரிசினை வழங்கினார்; ஜாதிய கட்டமைப்புகளுக்கு எதிராக பாடல் வரிகளை எழுதி, இசைக்கும் தெருக்குரல் அறிவு அவர்களைப் பாராட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கினார். தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் 2023 ஆம் ஆண்டுக்கான 'பெரியார் விருது', எழுத்தாளர் வீ.மா.ச.சுபகுணராஜன், குழலிசைக் கலைஞரும், திரைப்பட பின்னணி பாடகருமான அருண்மொழி (எ)நெப்போலியன் ஆகிய இருவருக்கும் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து தந்தை பெரியார் சிலை மற்றும் இயக்க நூல்களை வழங்கி, பாராட்டுகளைத் தெரிவித்தார் (சென்னை பெரியார் திடல், 17.1.2023).


திங்கள், 16 ஜனவரி, 2023

சைதை எம்.பி. பாலு பேசுகிறேன்!

1948 ஆம் ஆண்டு ஆலந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியாரின் பேச்சை முதல் முதலாக கேட்டேன். அன்று முதல் நான் பெரியாரின் தொண்டனாக மாறினேன்.

1949 ஆம் ஆண்டு அய்யா அன்னை மணியம்மையார் திருமணம் செய்த மறுநாள் சைதை - சடையப்ப (முதலி) தெருவில் அப்பாவு சகோதரர் வீட்டில் பிரியாணி விருந்து நடைபெற்றது, நானும் அந்த விருந்தில் கலந்து கொண்டேன்.

அன்று இரவு மாந்தோப்பு பள்ளி (தற்போது சென்னை ஆண்கள் உயர்நிலைப்பள்ளி) சைதாப்பேட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் தந்தை பெரியார் சொற்பொழிவு.

அன்று முதல் நான் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று முழுமையாக வாழ்க்கையில் கடைபிடித்து வருகின்றேன். திராவிடர் கழகத்தில் கட்டுப்பாடு மிக்க தொண்டனாக இருந்து வருகின்றேன். தந்தை பெரியாரின் சொற்பொழிவை கேட்பதற்கு முன் நான் தீவிர பக்தனாக இருந்தேன். திருப்புகழ் தேவார சபையில் சேர்ந்து பாடி வந்தேன். என்னோடு இணைந்து திருப்புகழ் தேவார சபையில் இருந்த அனைவரும் திராவிடர் கழகத்தில் இணைந்தனர்.

1950 இல் திருச்சியில் கம்யூனல் ஜி.ஓ மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு ஆர்வமுடன் ஏற்பாடு செய்தேன். ஆனால் எனக்கு டைபாய்டு காய்ச்சல் வந்துவிட்டது. ஒன்றரை மாதம் படுத்த படுக்கையாக இருக்க வேண்டியதாகி விட்டது.

1952 ஆம் ஆண்டு சேலம் மாநாடு 1953 ஆம் ஆண்டு ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் எதிர்த்து மறியல் செய்த போது கலந்து கொண்டு கைதாகி சிறை சென்றேன்.
நான் சிறை சென்றது, இரண்டு நாள் கழிந்த பிறகு தான் என் வீட்டிற்கு தெரிந்தது.

1957 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் எடைக்கு எடை வெள்ளி ரூபாய் தந்தை பெரியார் அவர்களுக்கு அளிக்கப்பட்டது, அதில் கலந்து கொண்டேன்.

தந்தை பெரியார் அவர்களின் சொற்பொழிவு கேட்பதற்காக சைதையில் பலமுறை பொதுக்கூட்டம் நடத்தியுள்ளோம். அப்பொழுது எஸ்.பி.தட்சிணாமூர்த்தி நானும் இணைந்து செயல்படுவோம்.

அய்யா மறைவுற்றார், பிறகு அன்னை மணியம்மையார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொழுதும் தொடர்ந்து கட்டுப்பாடு மிக்க தொண்டனாகவே செயல்பட்டு வந்துள்ளேன். மிசா சட்டம் வந்தது 15 நாள் தலைமறைவு வாழ்க்கை வாழ நேரிட்டது.

நெருக்கடி நிலை காலத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டது; பின்னர் அனுமதி கிடைத்தது. பெரியார் திடலில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் அன்னை மணியம்மையார் வடசென்னை வி.எம். நாராயணன் கலி.பூங்குன்றன் ஆகியோர் பேசினோம்.

1978 ஆம் ஆண்டு முதல் சென்னை மாவட்ட பொருளாளர்.

1979 ஆம் ஆண்டு என் மகள் செந்தாமரை - பழனி திருமணம் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

1981 ஆம் ஆண்டு முதல் சென்னை மாவட்ட செயலாளர்.

1982 ஆம் ஆண்டு மண்டல் கமிஷன் மாநாடு சைதையில் நடைபெற்றது. தியாகராயர் நகரில் இருந்து எனது தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது.

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ் கலந்து கொண்டார். மாநாட்டில் நாடகம் சிறப்பாக நடந்தது. ஆசிரியர் கலந்து கொண்டார். மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது.

1983 ஆம் ஆண்டு சென்னை மாவட்ட திராவிடர் கழக தலைவராக நியமிக்கப்பட்டேன். தொடர்ந்து 23 ஆண்டுகள் பணியாற்றி வந்தேன்.

1983 ஆம் ஆண்டு சைதையில் ஆசிரியர் எடைக்கு எடை ரூபாய் நாணயம் வழங்கப்பட்டது.

15.12.2001 ஆம் ஆண்டு பெரியார் மய்யம் இடிக்கப்பட்டதை கண்டித்து சைதை தேரடியில் சிறப்பு வாய்ந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. வி.பி. சிங் கலந்து கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தை வெகு சிறப்பாக நடத்தினோம். 15.12.2001 அன்று காலை திராவிடர் கழக மத்திய குழு கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கும் வந்தனர். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுடைய பேச்சு திராவிடர் கழகத்தவர் பேச்சு போல் இருந்தது. அகில இந்திய தலைவர்களை அழைத்து அரசியல் கட்சிகள் கூட சைதையில் பொதுக்கூட்டம் நடத்தியது இல்லை என்றும், கூட்ட ஏற்பாடு சிறப்பாக இருந்தது என்றும் கழகத் தோழர்கள் அத்தனை பேரும் என்னை சந்தித்துப் பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியான நாளாகும்.

1988 ஆம் ஆண்டு டில்லியில் ஒடுக்கப்பட்டோர் மாநாடு நடைபெற்றது. அதில் எனது குடும்பம் மனைவி, மகள், மாப்பிள்ளை, பேத்தி, பேரன் ஆகியோர் சென்று கலந்து கொண்டோம்.

உ.பி லக்னோவில் 1995இல் செல்வி மாயாவதி, கன்சிராம் தலைமையில் பெரியார் மேளா நடைபெற்றது.

சென்னையில் இருந்து சிறப்பு இரயில் விடப்பட்டது. 1500 பேர் சென்றனர். கழக பொதுச்செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் கழக குடும்பத்துடன் நானும், துணைவியாரும் சென்று வந்தோம்.

பெரியார் மய்யம் திறப்பு விழாவிற்கு நானும் எனது துணைவியாரும் கலந்து கொண்டோம்.

புதுக்கோட்டையில் ஆசிரியருக்கு எடைக்கு எடை வெள்ளி வழங்கிய விழா, தஞ்சையில் ஆசிரியரின் எடைக்கு எடை தங்கம் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொண்டேன். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு 15 முறை சிறை சென்றுள்ளேன்.

69 சதவிகிதம் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய ஜீவன் ரெட்டி கொடும்பாவி எரித்த வழக்கில் 15 நாள் வேலூர் சிறையில் இருந்துள்ளேன்.

மண்டல் கமிஷன் ஆதரவு கூட்டத்தில் பேசிய பேச்சுக்கு என் மீது 4 பிரிவுகளில் கொலை முயற்சி உள்பட வழக்கு பதிவு செய்து அந்த வழக்கு நான்கரை ஆண்டுகள் நடந்தது. பிறகு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை தியாகராயர் நகரில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா குழுவில் முக்கிய பொறுப்பாளராக செயல்பட்டேன்.

கழகத்தில் எந்த பிளவு ஏற்பட்டாலும் சஞ்சலத்துக்கு ஆளாகாமல் பணியாற்றி வருகிறேன். கழகம் -  தலைமை, கொள்கை இவை என் மூச்சு அடங்கினால் தான் என்னை விட்டுப் பிரியும். இவ்வாறு பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி. பாலு தம்மை பற்றி கூறினார்.நேர்காணல்: கலி.பூங்குன்றன்
                            நாள் 10.12.2010
விடுதலை ஞாயிறு மலர், சனி
25.12.2010


புதன், 11 ஜனவரி, 2023

வி.ஜி.பி. சந்தோஷம் விடுதலை சந்தா

 விடுதலை சந்தா

உலகம் முழுவதும் திருவள்ளுவர் சிலை அமைக்கும் தொண்டினை சிறப்பாக செய்து வரும் தொழிலதிபர் வி.ஜி.பி. சந்தோஷம் தமிழர் தலைவரின் 60 ஆண்டு கால விடுதலை  ஆசிரியர் பணியைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.  விடுதலை சந்தா தொகையாக ரூ.10,000அய் (பத்தாயிரம் மட்டும்) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்.


தமிழர் தலைவருக்கு டாக்டர் மீனா முத்தையா குமாரராணி செட்டிநாடு அவர்கள் வாழ்த்து ("விடுதலை" நன்கொடை)

 

ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்

தமிழ்நாடு அரசியலின் தவிர்க்க முடியாத ஆளுமையாக, பெரியாரின் தளபதியாக, நூறு ஆண்டு கால திராவிட ஆட்சியின் நிகழ்கால சாட்சியாக, அண்ணா முதல் இன்று வரை நாட்டை ஆளும் முதலமைச்சர்களுக்கும்  ஆலோசனை தந்தவராக - தந்து கொண்டு  இருப்பவராக விளங்குபவர் பெருமதிப்பிற்குரிய அய்யா கி. வீரமணி அவர்கள்.

பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட "விடுதலை" நாளேடு - ஒரு கால கட்டத்தில் நடத்த முடியாமல் போக, நடத்தாமல் விட்டு விடலாம் என்று பெரியார் நினைத்தபோது வழக்குரைஞர் படிப்பு படித்த அய்யா கி. வீரமணி அவர்கள் நான் நடத்துகிறேன் என்று வந்தார்.

வழக்குரைஞர் தொழிலோடு, நாளேட்டையும் நான் பார்த்துக் கொள்கிறேன் எனும் போது, பெரியாரோ அது முடியாது, முழு நாளும் நாளேட்டுப் பணியில் மட்டுமே செயல்பட வேண்டும் என்று சொல்ல, அதிகமான வருமானத்தைத் தரும் வழக்குரைஞர் தொழிலை விட்டுவிட்டு கடந்த 60 ஆண்டு காலமாக முழு ஈடுபாட்டோடு "விடுதலை" நாளேட்டின் ஆசிரியராக பொறுப்பேற்ற நாளில் இருந்து இன்றுவரை அப்பணியை தொடர்ந்து செய்து கொண்டு வருவது ஒரு வரலாற்று சாதனையாகும். E-Paper  என்ற முறையில் ஆன்லைனில் நாளேடுகள் வந்தபோது, வெளி வந்த முதல் நாளேடு "விடுதலை" என்பது போற்றுதலுக்குரியது.

ஒவ்வொரு நாளும் புதுப்புது செய்திகளை வெளியிட்டு புதுப்பொலிவுடன் திகழ்கிறது. இவருடைய ஈடுபாட்டையும் செயல்திறனையும் கண்ட தந்தை பெரியார் அவர்கள் சொன்ன வாக்கு -  "விடுதலை நாளேட்டினை நடத்தும் ஏகபோக உரிமையை ஆசிரியர் கி.வீரமணிக்கு நான் வழங்குகிறேன்" - என்பது தான் இன்றும் நினைவு கூரத்தக்கது. 

ஓர் அரசியல்வாதி, திராவிடர் கழகத் தலைவர், வழக்குரைஞர் என்ற எல்லாவற்றையும் விட அய்யாவுக்கு மனநிறைவைத் தந்து கொண்டு இருப்பது "விடுதலை நாளேட்டின் ஆசிரியர்" என்ற பணி என்றால் அது மிகையாகாது. 

"அய்யாவின் பணி மேன்மேலும் சிறக்க, எனது அன்பளிப்பாக ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை இத்துடன் இணைத்துள்ளேன்."

'வாழ்த்துகள்'.

- மீனா முத்தையா - குமாரராணி செட்டிநாடு  

செவ்வாய், 10 ஜனவரி, 2023

சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம்


களப்பணியில் கழகப் பொறுப்பாளர்கள் தீவிரம்

தென்சென்னை 

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 7.1.2023 அன்று மாலை 4.30 மணி அளவில், மயிலாப்பூர் 'சக்தி திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் இரா .வில்வநாதன் அவர்கள் தலைமையிலும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மாநில அமைப்பு செயலாளர் வி. பன்னீர்செல்வம் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி சிறப்பித்தார்.

மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடர் பரப்புரை பயணம் குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் மயிலாப்பூர் பரப்புரை பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்தும்  ஆலோசனைகளையும் கருத்துகளையும் கூறி வழிகாட்டுரை வழங்கினார்.

மாவட்ட துணை செயலாளர்கள் கோ.வீ.ராகவன் மற்றும் சா. தாமோதரன், மண்டல இளைஞர் அணி அமைப்பாளர் மு. சண்முகப்பிரியன், மாவட்ட இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன், இளைஞர் அணி அமைப்பாளர் இரா.பிரபா கரன், கோடம்பாக்கம் பகுதி பொறுப்பாளர் ச.மாரியப்பன், சூளைமேடு பகுதி பொறுப்பாளர் ந.இராமச்சந்திரன், மயிலாப்பூர் பகுதி பொறுப்பாளர் பெரியார் யுவராஜ், திருவல்லிக்கேணி பகுதி பொறுப்பாளர் எஸ். அப்துல்லா, நொச்சி நகர் ச.துணைவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகளை கூறினர்.

பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்: 1

சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் மேற்கொண்டு வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மயிலாப்பூரில் சிறப்பான வரவேற்பு அளிப்பதன முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம்: 2

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை ஆற்றும் தொடர் பரப்புரையை கூட்டத்தை மயிலாப்பூரில் 13.02.2023 அன்று மிகுந்த எழுச்சியோடு நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்: 3

தொடர் பரப்புரை பயணக் கூட்டத்தை விளக்கி 12.02.2023 அன்று திராவிட மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை அவர்களை கொண்டு தெருமுனை கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

இளைஞர் அணி தலைவர் ச. மகேந்திரன் நன்றி கூறினார்.


ஞாயிறு, 1 ஜனவரி, 2023

கற்போம் பெரியாரியம்'' பயிற்சிப் பட்டறை சென்னையில் நடைபெற்றது

தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ 50 ஆம் ஆண்டு மலர், ஆசிரியரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் வெளியீடு

30.12.2022 சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ 50 ஆம் ஆண்டு மலர், ஆசிரியரின் 90 ஆம் ஆண்டு  பிறந்த நாள் மலரினை சென்னை ரஷ்ய தூதரகத்தின் துணைத் தூதர் செர்ஷி அஸராவ் அவர்கள் வெளியிட, வி.அய்.டி. வேந்தர் முனைவர் ஜி.விசுவநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

மூத்த பத்திரிகையாளரும், 'ப்ரண்ட் லைன்' இதழின் மேனாள் ஆசிரியருமான இரா. விஜயசங்கர், கொடைக்கானலில் அமைந்துள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் து. ஜானகி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.