திங்கள், 30 அக்டோபர், 2017

கடலூர் திராவிடர் கழக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட சிறப்பான  தீர்மானங்கள்



மத்திய மதவாத ஆட்சியை முறியடிக்க ஒன்றுபடுக!

கடலூர் திராவிடர் கழக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட சிறப்பான  தீர்மானங்கள்

கடலூர், அக்.21- மதச்சார்பின்மைக்கும், சமூக நீதிக்கும் எதிரான மத்திய இந்துமதவாத பி.ஜே.பி. ஆட்சியை முறியடிக்க அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்பது உள்பட 20 முக்கிய தீர்மானங்கள் இன்று (21.10.2017) கடலூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

கடலூர் நகர அரங்கத்தில் (டவுன் ஹால்) திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக் கரசு அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண்  1:  

இரங்கல் தீர்மானம்

பகுத்தறிவாளர்கள் படுகொலைக்குக் கண்டனம்

பகுத்தறிவு - முற்போக்குச் சிந்தனையாளர்களான மகா ராட்டிரத்தைச் சேர்ந்த தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கருநாடகத்தைச் சேர்ந்த கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோர் படுகொலைக்கு இப்பொதுக்குழு தனது வன் மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

மத்தியில் இந்துத்துவா கொள்கை கொண்ட பிஜேபி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, பகுத்தறிவு - முற்போக்காளர்களுக்குக் கடும் அச்சுறுத்தலும், உயிருக்கு ஆபத்தும் தொடர்ந்து நிகழ்ந்து வருவது - மதவாத சக்தி களின் வன்முறைத் தாண்டவத்தை வெளிப்படுத்துகிறது.



ஆண்டுகள் பல ஓடினாலும் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டு, உரிய தண்டனை வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் இந்துத்துவா வெறியர்களுக்கு உற்சாகத்தை யும், ஊக்கத்தையும் துணிச்சலையும் கொடுத்து வருகிறது.

மேலும் காலதாமதம் செய்யாமல் குற்றவாளிகள் தண் டிக்கப்பட உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மகாராட் டிர, கருநாடக மாநில அரசுகளை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.


கல்வி வள்ளலும், வல்லம் பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக இணைவேந்தருமான வீகெயென் கண்ணப்பன் (மறைவு 12.2.2017)

திராவிட இயக்க வழிவந்தவரும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.செழியன் (வயது 95 - மறைவு 6.6.2017)

முதுபெரும் பொதுவுடைமைவாதி - மூத்த எழுத்தாளர் ஞானையா -  (மறைவு - 8.7.2017)

அறிவியல் அறிஞர் கூரியர் இதழின் மேனாள் ஆசிரியர் மணவை முஸ்தபா (வயது 82 - மறைவு 6.2.2017)

கவிக்கொண்டல் அப்துல் ரகுமான் (வயது 80 - மறைவு 2.6.2017)

இயக்குநர் செய்யாறு ரவி (வயது 55 - மறைவு 11.3.2017)

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியர் இரா.முத்துக்குமாரசாமி (வயது 81 - மறைவு 15.8.2017)

குடியரசுக் கட்சி மேனாள் தேசிய செயலாளர் டாக்டர் சேப்பன் (வயது 80 - மறைவு 31.8.2017)

காஞ்சி சி.வி.எம்.பொன்மொழி (மறைவு 31.8.2017)

மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கா.சுப்புராயலு

தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் சதாசிவம் (வயது 66 - மறைவு 21.3.2017)

தமிழ்ப் போராளி வீர.சந்தானம் (வயது 71 - மறைவு 13.7.2017)

சிதம்பரம் நடராசன் கோயிலில் தீட்சதர்களை எதிர்த்து மொழிப்போர் நடத்திய ஓதுவார் ஆறுமுகச £மி (வயது 94 - மறைவு 8.4.2017)

மேனாள் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் கிருபாநிதி (மறைவு 19.10.2017)

பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழக நிதி அலுவலர் (Finance Officer) 
ப.முத்துக்கிருஷ்ணன் (வயது 77 - மறைவு 4.6.2017)

ஆகிய பெருமக்களின் மறைவிற்கு இப்பொதுக் குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
நீதிக்கட்சி வழிவந்த பேராசிரியர் - பெரியார் அஞ்சல்வழிக் கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் முனைவர் பு.இராசதுரை (வயது 86 - மறைவு 5.10.2017)

வேலூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர் - முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் செய்யாறு பா.அருணாசலம் (வயது 91 - மறைவு 28.8.2017)

தலைமைச் செயற்குழு உறுப்பினர் - விவசாய தொழிலாளர் அணி மேனாள் செயலாளர் குடவாசல் கணபதி (வயது 86 - மறைவு 24.6.2017)

நெல்லை மண்டல திராவிடர் கழக செயலாளர் பேராசிரியர் கனகராஜ் (மறைவு 11.7.2017)
கழகப் பொதுக்குழு உறுப்பினர் நீடாமங்கலம் ஆ.சுப்பிர மணியம், ‘விடுதலை’ மேனாள் செய்தியா ளர் ஆர்.இராதா (வயது 67 - மறைவு 4.6.2017)

சென்னை மாவட்ட மேனாள் செயலாளர் மயிலை எம்.கே.காளத்தி (வயது 89 - மறைவு 2.7.2017)

சேலம் சுயமரியாதை வீரர் மா.அர்த்தநாரி (வயது 86 - மறைவு 28.9.2017)

புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் இராமதிராசன் (வயது 74 - மறைவு 3.5.2017)

கரூர் மாவட்டம் விசுவநாதபுரி - சட்ட எரிப்புப் போராட்ட வீரர் ப.நல்லதம்பி (வயது 86 - நாள்: 27.2.2017)

கடலூர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கனகராஜ் (வயது 90 - மறைவு 10.3.2017)

சென்னை பெரியார் நூலக வாசகர் வட்ட பொருளாளர் கு.மனோகரன் (வயது 72 - மறைவு 16.3.2017)

கரூர் மாவட்டம் சணல்பிரட்டி - பொதுக்குழு உறுப்பினர் அ.பாரதமணி (வயது 54 - மறைவு 20.3.2017)

ஆலத்தம்பாடி பெரியார் பெருந்தொண்டர் ப.ஆத்மநாதன் (வயது 85)

கோடியக்கரை சட்ட எரிப்புப் போராட்ட வீரர் வி.சுப்பிர மணியன் (வயது 96 - மறைவு 24.3.2017)

தென்காசி - மேலமெய்ஞ்ஞானபுரம் டேவிட் ஜெயராஜ் (மறைவு - 22.4.2017 - உடற்கொடை)

சிதம்பரம் வட்டம் பூந்தோட்டம் - பெரியார் பெருந் தொண்டர் நா.வீரமணி (வயது 80 - மறைவு 7.5.2017)

ஓசூர் மா.மூவேந்தன் (மறைவு - 3.3.2017)

நெய்வேலி இந்திரா நகர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் பேரின்பம் (வயது 91 - மறைவு 7.5.2017)

நெல்லை மாவட்டம் மேலமெஞ்ஞானபுரம் கழகத் தோழர் எஸ்தர் (மறைவு 3.10.2017 - உடற்கொடை)

ரிஷிவந்தியம் ஒன்றிய கழகத் தலைவர் பொன்.சீனிவாசன் (மறைவு 11.10.2017)

செய்யாறு வடமணப்பாக்கம் நல்லாசிரியர் பி.கே.விஜய ராகவன் (மறைவு - 10.10.2017)

முசிறி வட்டம் ஏவூர் சட்ட எரிப்புப் போராட்ட வீரர் வி.சுந்தரம் (வயது 82 - மறைவு 3.4.2017)

திருவெறும்பூர் நகர திராவிடர் கழகத் தலைவர் வி.செயராமன் (மறைவு - 12.4.2017)- உடற்கொடை.

திருச்சி மாவட்டம் தாதகவுண்டம்பட்டி ஒன்றியக் கழக மகளிரணி தலைவர் சின்னக்கண்ணு (மறைவு - 22.5.2017)

கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் வாழ்விணையர் அஞ்சம் மாள்  (வயது 85 - மறைவு 13.7.2017)

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சுந்தரபெருமாள் கோயில் அ.மா.கணபதி (வயது 94 - மறைவு 24.6.2017)

குமரி மாவட்டம் வில்லுக்குறி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஈ.சுப்பிரமணியம் (வயது 102 - மறைவு 12.7.2017)

நாச்சியார்கோயில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் இரா.தனுஷ்கோடி (வயது 90 - மறைவு 28.8.2017)

திருச்சி - சங்கிலியாண்டபுரம் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் பி.ஏகாம்பரம் (வயது 93 - மறைவு 30.8,.2017 - உடற்கொடை)

போடிநாயக்கனூர் கழகத் தோழர் சுகுமாறன் (வயது 72 - மறைவு 28.9.2017 - உடற்கொடை)

சுந்தரபெருமாள்கோயில் கழக மேனாள் செயலாளர் சி.அர்ச்சுனன் (மறைவு 1.10.2017)

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் நத்தம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கலியாணசுந்தரம் (வயது 91 - மறைவு 9.5.2017)

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் அய்யனார் (வயது 45 - மறைவு 19.5.2017)

பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் சி.சந்திரசேகரன் (மறைவு - 20.5.2017)

தஞ்சாவூர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் வையாபுரி (வயது 80- மறைவு 24.5.2017)

திண்டுக்கல் நகர திராவிடர் கழகத் தலைவர் மா.எழில்சந்தர் (வயது 64 - மறைவு 6.6.2017)

கரூர் அண்ணா நகர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கு.மாரியப்பன் (வயது 90 - மறைவு 20.6.2017)

ஆவடி கழகத் தோழர் மொழியன்பன் (வயது 61 - மறைவு 26.6.2017)

தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் தேசப்பந்து (வயது 63 - மறைவு 16.10.2017)

கீழ்வேளூர் எரவாஞ்சேரி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் எம்.மாரியப்பன் (வயது 93 - மறைவு 8.9.2017)

திருச்சி மாவட்டக் கழக மேனாள் தலைவர் மு.சேகர் அவர் களின் வாழ்விணையர் ஜானகி (வயது 52 - மறைவு 9.10.2017)

உரத்தநாடு ஒன்றியம் கண்ணந்தங்குடி மேலையூர் சிவ.பாலசுப்ரமணியன், திருமங்கலக்கோட்டை தியாக ராஜன், இராயபுரம் அரங்கநாதன், இராயபுரம் பியூலா ஆகிய திராவிடர் கழகத் தோழர்களின் மறைவிற்கு இப்பொதுக்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் அளப் பரிய இயக்கப் பணிக்கும், தியாகத்திற்கும் இப்பொதுக்குழு தனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.


தீர்மானம் எண் 2:  

2017 நவம்பர் 26 அன்று சென்னையில் மாநாடு

ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவைக் கொளுத்தும் போராட்டத்தை நடத்தி (26.11.1957) மூன்றாண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்ற தியாகத் தழும்பேறிய ஒப்பாரும் மிக்காரும் இல்லாத திரா விடர் கழகக் கருஞ்சட்டைத் தோழர்களுக்கு, இப்போராட் டத்தின் 60ஆம் ஆண்டு நிறைவையொட்டி தனது மரி யாதைகலந்த வீரவணக்கத்தை, பாராட்டை இப்பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது.

அதன் தொடர்ச்சியாக ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டமாக - கோயில் கருவறைக்குள் தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற போராட்டத்தைத் தந்தை பெரியார் அறிவித்தார்கள். (1969)
தந்தை பெரியார் அவர்களின் அறிவிப்பினை ஏற்று தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த நிலையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக சட்டம் இயற்றப்பட்டது.

தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலகட்டங்களில் சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் எஸ்.மக ராஜன், என்.கிருஷ்ணசாமி ரெட்டியார், ஏ.கே.ராஜன் ஆகி யோர் தலைமையில் வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக ஆகம தடைகள் ஏதும் இல்லை; அர்ச்சகர்களுக்குரிய பயிற்சி அளிக்கப்பட்டு அதனடிப்படையில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கலாம் என்று நீதிபதிகள் பரிந்துரைகளை அரசுக்கு வழங்கினர்.

ஆனாலும் உயர்ஜாதி ஆதிக்கவாதிகள், பார்ப்பனர்கள், ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றனர். தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்றும், பரம்பரை அர்ச்சகர் முறை கூடாது என்றும், உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்குக் கழகத்தின் சார்பில்  உரிய காலத்தில் அவ்வப்போது கடிதம் எழுதப்பட்டு, ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சி பெற்றுத் தயாராக இருக்கிற 206 பயிற்சியாளர்களையும் அர்ச்சகர்களாக நியமிக்க ஆவன செய்ய வேண்டும் என்று அக்கடிதத்தில் கேட்டுக்கொள் ளப்பட்டுள்ளது. ஆனால், அரசு அதனைச் செயல்படுத்த முன்வராதது கெட்ட வாய்ப்பேயாகும்.

இதற்கிடையே கேரள மாநில மார்க்ஸிட்டு கம்யூனிஸ்டு அரசு, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்கள் 36 பேர்களை கோயில் அர்ச்சகர்களாக நியமனம் செய்து சாத னைச் சரித்திரத்தில் முத்திரை பதித்துள்ளது பாராட்டுக்குரிய தாகும்.

இந்த அடிப்படையிலாவது தமிழ்நாடு அரசு செயல்பட முன்வர வேண்டும் என்று இப்பொதுக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

இதனை வலியுறுத்தும் வகையில், ஜாதி ஒழிப்புக்காக 1957இல் அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தும் போராட் டத்தில் திராவிடர் கழகம் ஈடுபட்ட நவம்பர் 26ஆம் நாளன்று (26.11.2017) சென்னை பெரியார் திடலில் அனைத் துக் கட்சியினரும்,  சமூக இயலாளர்களும் இதில் ஒத்தக் கருத்துள்ள, சமயத்தைச் சார்ந்த பெருமக்களும் பங்கேற்கும் ஒரு மாபெரும் மாநாட்டினை திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் இந்த வகையில் மாநாடுகளை நடத்தவும் தீர்மானிக்கப்படுகிறது.

மாநாட்டில் சிறை நிரப்பும் போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்று தீர்மானிக்கப்படுகிறது. கழகத் தோழர்கள் போராட்ட வீரர்களின் பட்டியலை விரைந்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தீர்மானம் எண் 3:  

2018 ஜனவரியில் திருச்சிராப்பள்ளியில்  உலக நாத்திகர் மாநாடு

பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் பங்கேற்கும் உலக நாத்திகர் மாநாட்டினை  2018 ஜனவரி 5, 6, 7 ஆகிய மூன்று நாட்களில் திருச்சிராப்பள்ளியில் பல்வேறு சிறப்பு அம் சங்களுடன் நேர்த்தியாக விஜயவாடா நாத்திக மய்யத்துடன் இணைந்து திராவிடர் கழகத்தின் சார்பில் வெற்றிகரமாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 4:  

‘விடுதலை’க்கு 15,000 சந்தாக்கள் சேர்த்தல்

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாளான வரும் டிசம்பர் 2ஆம் தேதியன்று 15,000 ‘விடுதலை’ சந்தாக் களைச் சேர்த்து - ஈரோட்டில் நடைபெறவிருக்கும் மாநாட்டில் அளிப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது. கழகத் தோழர்கள் இந்த மிக முக்கிய பணியில் தீவிரமாக ஈடுபட்டு இலக்கினை ஈட்டித் தருமாறு இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது. 

கழகப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அனை வரும் ‘விடுதலை’ சந்தாதாரராக இருக்க வேண்டியது கட்டாயம் என்பதைக் கட்டளைத் தீர்மானமாக இப்பொதுக்குழு நிறை வேற்றுகிறது.

தீர்மானம் எண் 5:  

மத்திய அரசின் இந்தி - சமஸ்கிருதத் திணிப்பு முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்

தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கை என்பது சட்டப்படியான நிலையாகும். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது 1967ஆம் ஆண்டில் தமிழ்நாடு  சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.

இந்த நிலையை மாற்றிக் கொல்லைப்புறமாக இந்தி யைத் தமிழ்நாட்டில் புகுத்தும் பல்வேறு திட்டங்களை மத்தியில் உள்ள பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அரங்கேற்றி வருகிறது.
‘நீட்’ தேர்வில் வெற்றி பெற வேண்டுமானால் சி.பி. எஸ்.இ. கல்வித் திட்டத்தில் படித்தால்தான் உண்டு என்ற மனப்பான்மையை உருவாக்கி வருகிறது மத்திய அரசு. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இந்தியைப் படித்தாக வேண்டும் என்ற நிலை இருப்பதன் மூலம் மறை முகமாகத் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க விரும்பும் மத்திய பிஜேபி அரசின் நோக்கம் நிறைவேறி வருகிறது.

அண்மைக்காலமாக மாநிலக் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் இயங்கிவரும் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. திட் டத்துக்கு வேகமாக மாறி வருவது  - தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கைக்கு வேட்டு வைப்பதாகும். தமிழ்நாடு அரசு இதில் உரிய கவனம் செலுத்தி சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்துக்கு அவசர அவசரமாக மாறும் போக்கினைத் தடுத்த நிறுத்த வேண்டும் என்று இப்பொதுக்குழு வலி யுறுத்துகிறது.  

இந்தப் போக்கு தமிழ்நாட்டின் சமச்சீர்க் கல்வித் திட்டத்தை ஒழித்து இந்தியையும் சமஸ்கிருதத்தையும் படிக்க வேண்டிய கட்டாய நிலையை உருவாக்கும் என் பதை இப்பொதுக்குழு எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டு கிறது.

மத்திய அரசு கொண்டுவரும் நவோதயா பள்ளியும், புதிதாக அறிமுகப்படுத்துவதாகச் சொல்லிக் கொண்டி ருக்கும் புதிய தேசியக் கல்விக் கொள்கையும், தேசிய மொழி என்ற பெயரால் இந்தியைப் புகுத்தும் சூழ்ச்சி என்பதைப் புரிந்துகொண்டு மத்திய அரசின் இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பு முயற்சிக்கு எந்த வகை யிலும் தமிழ்நாடு அரசு துணைபோகக் கூடாது என்றும், தமிழ்நாட்டு மக்களும் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் விழிப்புணர்வுடன்  மத்திய பிஜேபி அரசின் மொழியின் பெயரால் திணிக்கும் கலாச்சாரப் படை யெடுப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்  இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டி யலுக்கு மீண்டும் கொண்டுவருவதுதான் இதற்கு ஒரே தீர்வு என்பதால் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நாடாளு மன்ற உறுப்பினர்கள் இணைந்து இதற்கான முயற்சி களை எடுக்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 6:  

‘நீட்’ தேர்வை நிரந்தரமாக நீக்குக!

மருத்துவம், பல் மருத்துவக் கல்வி ஆகியவற்றிற்கு அகில இந்திய அளவில் ‘நீட்’ எனும் நுழைவுத் தேர்வு முறை சமூகநீதிக்கு எதிரானது என்றும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மற்றும் சிறுபான்மையினருக்கும், கிராமப்புறத்தின ருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் திராவிடர் கழகமும், முக்கிய அரசியல் கட்சிகளும், சமூகநீதியமைப்புகளும் எச்சரித்தபடியே 2017-2018ஆம் ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வின் முடிவுகள் அமைந்து விட்டன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தொழிற்கல்வியில் நுழைவுத் தேர்வு என்பது சட்டப்படி 2007ஆம் ஆண்டி லேயே முற்றிலும் ஒழிக்கப்பட்ட நிலையில், அதனை உயர்நீதிமன்றமும்,  உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்ட தற்குப் பிறகும், ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப் பேர வையில் ஒருமனதாக இரு மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டும், அவற்றை எல்லாம் கிஞ்சிற்றும் பொருட்படுத்தாமல், மத்திய பிஜேபி அரசு ‘நீட்’டைத் திணித்ததற்கு இப் பொதுக்குழு தனது வன்மையான கண்டனத்தைத் தெரி வித்துக் கொள்கிறது. அரசியல் சட்டப்படி இப்படி ஒரு ‘நீட்’ தேர்வு திணிப்பு அரசியல் சட்டவிரோதமேயாகும்.

மேலும், நிறீஷீதீணீறீ ணிஸீtக்ஷீணீஸீநீமீ ஜிமீst என்ற பெயரால் வெளிநாடுகளில் வாழ் இந்தியருக்கும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்க வழி செய்யப் பட்டிருப்பது அதிர்ச்சியைத் தரக் கூடியதோடு, சட்ட விரோதமும் ஆகும்.

இந்த முடிவு அமைச்சரவையில் எடுக்கப்பட்டதா, நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதா என்பதற்கான விளக்கத்தையும் மத்திய அரசு அளிப்பது அவசியமாகும்.

இவர்களுக்கு எப்படித் தேர்வு நடத்தப்பட்டது? வெளி நாட்டுக்காரர்களுக்கு அளிக்கப்பட்ட இடங்கள் என்ன? அவர்கள் யார் யார் என்ற விவரத்தையும் ஒளிவுமறைவின்றி தெரிவிக்குமாறு மத்திய அரசையும், மருத்துவக் கவுன்சிலையும் இப்பொதுக்குழு வலியுறுத்து கிறது.

மாநில மக்கள், மாநில சட்டமன்றம் ஆகியவற்றிற்கு மதிப்பளிக்கும் வகையில் வரும் கல்வியாண்டு முதல் தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் ‘நீட்’டை அறவே நீக்க வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வற் புறுத்துகிறது.

நடந்து முடிந்த ‘நீட்’ தேர்வில் பல குளறுபடிகளும், மோசடிகளும் நடநதுள்ளன என்ற செய்திகள் பரவலாக வெளிவந்துள்ளதால் அதன் உண்மைகளைக் கண்டறிய உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

இந்த நிலையில் சமூகநீதிக்கு எதிரான ‘நீட்’ தேர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் சட்டப் போரை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 7: 

தேசிய புதிய கல்வித் திட்டம் தேவையில்லை

அகில இந்திய அளவில் “புதிய தேசியக் கல்வி” என்னும் ஒரு திட்டத்தைக் கொண்டு வருவதாக மத்திய பிஜேபி அரசு அறிவித்து அதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு இனங்கள், மொழிகள், பண்பாடுகள், தட்ப வெப்ப நிலை நிறைந்த இந்தியத் துணைக் கண்டத்தில் ஒரே மாதிரியான கல்வி என்பது பொருத்தப்பாடு உடைய தல்ல. பிஜேபியின் இந்துத்துவா கொள்கை என்பது ஒரே இந்தியா, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பதைக் கொள்கையாகக் கொண்டிருப்ப தால் அதனைக் கல்வியின் மூலம் திணிக்கும் உள் நோக்கம் கொண்டு இருப்பதாலும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, குலக்கல்வி முதலியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு இருப்பதாலும் மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் அக்கல்வித் திட்டத்தை இப்பொதுக்குழு முற்றிலுமாக நிராகரிக்கிறது. 
மீறிக் கொண்டு வந்தால் மிகப் பெரிய போராட்டம் தவிர்க்க இயலாதது என்பதையும் மத்திய அரசுக்கு இப் பொதுக்குழு எச்சரிக்கிறது.

தீர்மானம் எண் 8:  

தமிழ்நாடு பலவகைகளிலும் வஞ்சிக்கப்படுவதற்குக் கண்டனம்


தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. சார்பில் கச்சா எண்ணெய் எடுப்பதற்கு எதி ரான போராட்டம் கடந்த 150 நாள்களாக நடைபெற்று வரு கிறது. அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதை எதிர்த்து 180 நாள்களாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்டா பகுதிகளில் மீதேன் எரிவாயு எடுக்கும் நடவடிக்கையை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டு வருகிறார்கள்.

ஒரு ஜனநாயக நாட்டில் பொதுமக்கள் தங்கள் குறை களை வெளிப்படுத்த இத்தனை நாள்கள் போராடியும் மத்திய, மாநில அரசுகள் அதனைக் கிஞ்சிற்றும் பொருட் படுத்தாமல் இருப்பது ஜனநாயகக் கோட்பாட்டுக்கு முற்றிலும் எதிரானதே. இந்த நிலைக்கு இப்பொதுக்குழு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் தலை யிட்டு பொதுமக்களின் அச்சத்தைப் போக்கிடும் வகையில் நியாயமான கோரிக்கைக்கு இணக்கமான முடிவினைப் பெற்றுத் தருமாறு இப்பொதுக்குழு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துகிறது.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் சீர்காழி யில் ரூ.14,482 கோடி மதிப்பில் 4,000 மெகாவாட் மின் சாரம் தயாரிக்கும் அனல்மின் நிலையம் அமைக்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டு, துவக்க ஆய்வுக்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டு, பூர்வாங்கப் பணிகள் தொடங்கப் பட்ட நிலையில், திடீரென்று இத்திட்டம் ஒரிசாவுக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (இதனை எதிர்த்து 18.9.2017 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது).

அதுபோலவே கோயம்புத்தூர் பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான அச்சகத்தை மூடுவிழா செய்து, அதன் மூலப் பொருட்களை யெல்லாம் பிஜேபி ஆளும் உத்தரப் பிரதேச லக்னோவுக்குக் கொண்டு செல்ல மத்திய பிஜேபி அரசு முடிவு எடுத்துள்ளது.  (இதனை எதிர்த்து திராவிடர் கழகம் 10.10.2017 அன்று கண்டன ஆர்ப் பாட்டத்தை நடத்தியது). அதுபோலவே ஆரிய கலாச் சாரத்திற்கு முந்தைய திராவிடர் இனத்தின் பழம்பெரும் வரலாற்றை மூடிமறைக்கும் கெட்ட நோக்கத்தோடு கீழடி தொல்பொருள் ஆய்வுப் பணி திடீரென்று மண்மூடி முடிக்கப்பட்டு விட்டது.
மத்திய அரசின் இத்தகு போக்குகள் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் அரசியல் நோக்கம் கொண்ட கெட்ட நடத்தையாக இப்பொதுக்குழு கருதுகிறது.

இவற்றைக் கைவிட்டு தமிழ்நாட்டின் உரிமைக்கு, வளர்ச்சிக்குக் கேடு செய்யாமல் இருக்க வேண்டும் என்று மத்திய பிஜேபி ஆட்சியை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

இல்லையெனின் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு என்ற பெயரில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கருத்தினை ஒன்றுதிரட்டிப் போராட்ட வழிகளை மேற்கொள்வது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவதில் மத்திய அரசு இரட்டை அளவுகோலை மேற்கொண்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அத்தனை ஒப்பந்தத் தொழிலாளர்களையும் நிரந்தரப் படுத்த வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. நீதிமன்றம் தொழிலாளர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கினாலும் அதனை எதிர்த்து அரசு செலவில் உச்சநீதிமன்றம் வரை செல்லும் திரு வெறும்பூர் ‘பெல்’ நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு இப்பொதுக்குழு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

தமிழ்நாடு போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சி னையில், அவர்களின் கணக்கில் உள்ள நிதியைப் பெறு வதற்கே போராடும் அவல நிலை ஏற்பட்டுள்ளதானது விரும்பத்தக்கதல்ல. அதே போலவே கரும்பு விவ சாயிகள், கூட்டுறவு சங்கங்களிலிருந்து தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக அவதிப் படுவது, அலைக்கழிக்கப்படுவது, காலம் கடத்துவது உடனடியாகத் தவிர்க்கப்பட ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 9:  

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடுக!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித் துத் தீர்ப்பு வழங்கிய பிறகும், அவ்வாறு உத்தரவிட உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றத்திலேயே மத்திய அரசு தெரிவித்திருப்பது இதுவரை கேட்டிராத அரசமைப்புச் சட்டத்தையே கேலிக்குரியதாக்கியதாகும்.

கருநாடக மாநிலத்தில் நடக்கவிருக்கும் சட்டப் பேர வைத் தேர்தலை மனதிற் கொண்டு, இந்த அளவுக்குச் சட்ட மீறலை மத்திய அரசே மேற்கொண்டுள்ளதானது விபரீதமானதாகும்.

உச்சநீதிமன்றம் இதன்மீது உரிய நடவடிக்கை எடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக நியமிக்க ஆவன செய்ய வேண்டும் என்று இப் பொதுக் குழு கேட்டுக்கொள்கிறது.

இந்தியாவின் தலைநகரமான டில்லியில் தமிழ்நாட் டைச் சேர்ந்த விவசாயிகள் திரு.அய்யாக்கண்ணு அவர் களின் தலைமையில் காவிரி நீர் உட்பட விவசாயிகளின் பல்வேறு உரிமைகளுக்காகப் பல்வேறு வடிவங்களில் 100 நாள்களுக்கும் அதிகமாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தும், ஜனநாயக நெறிமுறை களைப் புறந் தள்ளி, குறைந்தபட்சம் சந்திப்புக்குக் கூட பிரதமர் வாய்ப்புத் தராமைக்கு இப்பொதுக்குழு தனது கண்ட னத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் எண் 10:  

தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பும் 
மீன்பிடி உரிமைக்கு உத்தரவாதமும் தேவை

இலங்கைத் தீவிலும்,  இந்தியாவிலும் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, படகு களுடன் சிறைப் பிடிக்கப்படுவது என்பவை தொடர்ந்த வண்ணமே உள்ளன.

இந்த நிலை தடுத்து நிறுத்தப்பட்டு தமிழக மீனவர் களின் பாதுகாப்பு, கச்சத் தீவு உட்பட்ட பகுதிகளிலும் மீன்பிடி உரிமைக்கான உத்தரவாதத்தினை சட்டரீதி யாகப் பெற்றுத் தருமாறு மத்திய அரசினை இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது. தமிழ்நாடு அரசு இதற்கான அடிப்படை முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

இலங்கையில் சிறையில் இருக்கும் தமிழக மீன வர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்; பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள், வலைகள் உள்ளிட்ட உடைமைகள் திரும்பப் பெற ஆவன செய்ய வேண்டும் என்று மத்திய மாநில அரசு களை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. ஏற்பட் டுள்ள பொருள் நட்டத்திற்கும் இழப்பீடு பெற்றுத் தரவேண்டும் என்றும் இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

தீர்மானம் எண் 11:  

தனியார்த் துறைகளில் தேவை இடஒதுக்கீடு

உலகமயம், தாராள மயம், தனியார் மயம் (லிறிநி) என்ற பொருளாதாரக் கொள்கைகளும், செயல்பாடுகளும் விரிந்துபோகும் இந்தக் காலகட்டத்தில் அரச மைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள சமூகநீதியின் அடிப்படையில் தனியார்த் துறை சார்ந்தும் இடஒதுக்கீடு தேவை என்பது. முன்னிலும் அதிகமான அளவில் அவசியமாகிவிட்டது.

அரசுத் துறைகள், பொதுத் துறைகளில் உள்ள தாழ்த் தப்பட்டோருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் சட்டப் படியாகக் கிடைத்திருக்க வேண்டிய இடஒதுக்கீடு விகி தாச்சாரம் எட்டப்படவில்லை என்பது வேதனைக் குரியது.

இந்த நிலையில், நிதி ஆயோக்கின் துணைத் தலைவரான ராஜிவ் குமார் என்பவர் தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு கூடாது என்பது. பிஜேபி ஆட்சி எத்தகையவர்களை எல்லாம் மிகப் பொறுப்பான பதவிகளில் அமர்த்தியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவில் உள்ள பெரு முத லாளிகள் வெளிநாடுகளில் தொழில்களைத் துவங்கும் போது அந்நாட்டு மண்ணுக்குரிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவரும் நிலையில், உள்நாட்டில் மட்டும் தனியார் துறைகளில் இடஒதுக்கீடு அளிக்காததும், பொறுப்பான பதவிகளில் உள்ளவர்கள் அதனை ஆத ரிப்பதும், வெகு மக்களின் உரிமைகளுக்கும், உணர்வு களுக்கும் எதிரானது என்பதை இப்பொதுக்குழு சுட்டிக் காட்டி, தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு அமல் படுத்தப்பட சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 12: 

சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு - 
உடன் சட்டத் திருத்தம் தேவை!

மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கக்கூடிய பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் உள்ள 543 இடங் களில் கிடைத்துள்ள இடங்கள் வெறும் 62தான். விழுக் காட்டில் பதினொன்றே!

அதேபோல இந்தியா ‘முழுதும் உள்ள 4030 சட்ட மன்ற உறுப்பினர்களில் பெண்கள் பெற்றுள்ள இடங்கள் வெறும் 311 மட்டுமே. விழுக்காட்டில் எட்டு மட்டுமே!

இது மக்கள் பிரதிநிதித்துவம் என்ற முறையில் சமூகநீதிக்கு மிகவும் எதிரானதே! இந்த நிலையில் தேவேகவுடா பிரதமராக இருந்தபோது பெண்களுக்கு 33.3 விழுக்காட்டுக்கான மசோதா (108ஆம் திருத்தம்) 1996 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இதற்கு மேலும் காலந்தாழ்த்துவது எந்த வகையிலும் நியாயமற்றது - அநீதியானது என்பதால் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தொடரில் பெண்களுக்கு உள்ஒதுக்கீட்டு டன் கூடிய (தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோ ருக்கும் தனித்தனி ஒதுக்கீடு) சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருமாறு மத்திய அரசையும், அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 13:

மியான்மரில் ரோகிங்கியாக்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

மியான்மரில் மிக நீண்டகாலமாக வாழும் மக்கள் ரோகிங்கியாக்கள். முசுலீம் மதத்தைச் சேர்ந்தவர்கள். அரசாங்கத்திற்கு சட்டப்படியான சில கோரிக்கைகளை முன் வைத்துப் போராடி வந்தார்கள்.

ஆனால், பெரும்பான்மை மக்களான பவுத்த மதத் தைச் சேர்ந்த பர்மியர்கள், அந்நாட்டு இராணுவ ஆட்சியின் துணையோடு அந்தச் சிறுபான்மை மக்களை வேட்டையாடி வருகின்றனர். உயிருக்கும் உடைமைக்கும் அஞ்சி அகதிகளாக பல நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். வங்க தேசத்தில் 4 லட்சம் பேர் தஞ்சம் புகுந்துள்ளனர். அய்.நா.முகாமில் பல லட்சம் பேர் அடைக்கலம் தேடி வந்துள்ளனர். எல்லைக் கதவுகள் மூடப்பட்டும், இந்தியாவிற்குள் உயிர் பிழைக்க ஓடோடி வருபவர்களை இந்தியா சற்றும் மனிதாபிமானமின்றி பிஜேபிக்கு இயல்பாகவே உள்ள முசுலிம்கள் மீதான வெறுப்பை முன்னிறுத்தி அவர் களை இந்தியாவில் ஏற்க முடியாது என்று சொல்லுவதும், அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று பேசுவதும் அய்.நா.வின் மனித உரிமைச் சாசனத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் எதிரானது.

எதேச்சதிகார ஆட்சியை எதிர்த்துப் போராடி அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி தலைமையிலான ஆட்சி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இராணுவத்தையும் அதிகாரத்தையும் பயன் படுத் துவது ஏற்புடையதல்ல. ஈழத்தமிழர் பிரச்சினையில் அய்.நா. கோட்டைவிட்டதுபோல், இதில் நடந்து கொள் ளாமல், ரோகிங்கியாக்களின் வாழ்வுரிமையைக் காப் பாற்றி, அவர்களுடைய அனைத்து உரிமைகளையும் பெற்றுத்தர அவசர அவசரமாக முயற்சிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

தீர்மானம் எண் 14:  

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் கோயிலில் பார்ப்பனர் அல்லாதார் அவமதிக்கப்படுவதை எதிர்த்துப் போராட்டம்!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் மேற்குபுறம் உள்ள மணவாள மாமுனிகள் கோயிலில் பார்ப்பனர் அல்லாதார் கோயிலுக்குள் பாசுரம் பாடிவந்த நிலைக்கு மாறாக, தற்போது அவர்களை கோயிலுக்கு வெளியில் இருந்து பாடுமாறும் (பக்தர்கள் செருப்பை விட்டுச் செல்லும் இடத்தில்) அதுபோலவே பிரசாதங்கள் வழங்கும்போது பார்ப்பனர்களைக் கோயிலுக்குள் உட்காரவைத்து அளிப்பதும், பார்ப்பனர் அல்லாதாரை வெளியில் நிற்க வைத்து வழங்குவதும் நடைபெற்று வருகிறது.



இந்த இழிநிலையை, பாரபட்சப் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பல்வேறு அதிகாரிகளிடம் முறை யிட்டும், மனுக்கள் அளித்தும் உரிய நீதி வழங்கப்படாத நிலையில், அதனை எதிர்த்து முதற்கட்டமாக ஆர்ப் பாட்டமும், அதனையடுத்துத் தொடர் போராட்டமும் நடத்துவது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண் 15:  

முற்றிலும் தோல்வியடைந்த மத்திய பிஜேபி அரசு

கடந்த மூன்று ஆண்டுகாலமாக மத்தியில் அமைந் துள்ள பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எல்லாவகைகளிலும் முற்றிலும் தோல்வி அடைந்த அரசேதான் என்பதில் எட்டுணையும் அய்யமில்லை.

சமூகநீதிக்கு எதிரான சிந்தனையும், நடவடிக்கை களும், பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய வீழ்ச்சி, மதச்சார்பின்மைக்கு விரோதமாக மதவாதச் சிந்தனை கள், நடவடிக்கைகள், கார்ப்பரேட்டுகள், சாமியார்களைச் சார்ந்து நின்று அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையான போக்குகள், மாநில உரிமைகள் பறிப்பு, பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் உண்ணும் உரிமைத் தடுப்பு - சிறுபான்மை மக்கள், தாழ்த்தப்பட்டோர் மீது கொடுமை கள், வன்முறைகள், ஜாதி மதக் கலவரங்களைத் தூண்டு தல், மத்தியில் அதிகாரப் பீடத்தில் பிஜேபி இருப்பதால் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்களின் இனவெறி, மதவெறிப் பேச்சுகள், சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் போக்குகள், ஊழல்கள், பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி இவற்றின் மூலம் பொருளாதார வீழ்ச்சி, வேலையில்லாத் திண்டாட்டப் பெருக்கம், நாடு முழு வதும் விவசாயிகள் தற்கொலை - இத்தகு போக்குகள் மத்திய பிஜேபி ஆட்சியின் கடும் தோல்வியைப் பறைசாற்றப் போதுமானவையாகும்.

சமூகநீதிக்கும், மதச்சார்பின்மைக்கும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் எதிராகச் செயல்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை ஜனநாயக நெறிமுறையில் அகற்றிட கட்சி களை மறந்து, அனைத்து ஜனநாயக சக்திகளும், இடது சாரிகளும் ஒருங்கிணைந்து நின்று பாடுபட, போராட முன்வர வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 16:

தமிழ்நாட்டு அரசியல், ஆட்சி நிருவாகத்தின் அவலநிலை

2016 டிசம்பரில் தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க.வுக்குள் நடந்த பிளவுகள் - குழு மோதல்கள் தமிழ்நாட்டின் ஆட்சி நிருவாகத்தையும் அறவே குலைத்துவிட்டன; நாட்டு நலன், வளர்ச்சித் திட்டங்கள் நிலைகுலைந்தன. ‘டெங்கு’ போன்ற உயிர்கொல்லும் நோயினைக் கூடக் கட்டுப்படுத்த முடியாத பரிதாப நிலையில் ஆட்சி நிர்வாகம் நோய்வாய்ப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் காலூன்ற வக்கில்லாத பிஜேபி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் யுக்தியாக அ.தி.முக. கட்சி - ஆட்சி இரண்டையும் பின்னணியில் இருந்து ஆட்டுவிக்கும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

‘நீட்’ தேர்வு, காவிரி நதி நீர் போன்ற தமிழர்களின் சமூகநீதி, நாட்டுரிமை தொடர்பான பிரச்சினைகளிலும், மத்திய அரசின் கோலுக்கு ஆடும் பரிதாப நிலைக்கு அ.தி.மு.க. கட்சியும் ஆட்சியும் ஆளாக்கப்பட்டுவிட்டன.

அண்ணாவின் பெயரையும், ‘திராவிட’ என்ற இனச் சுட்டுக் கலாச்சார சிந்தனைகளையும் காவு கொடுத்துப் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளத் துடிக்கும் போக்குக் கண்டிக்கத்தக்கது.

தனது ஆட்சி பெரும்பான்மைப் பலம் உள்ளதுதான் என்பதை குறுக்கு வழியில் முயலாமல் சந்தேகத்துக்கு இடமின்றி சட்டப் பேரவையில் நிரூபித்து, ஆட்சி நிருவாகத்தை நடத்திக் காட்ட வேண்டிய கடமை அ.இ.அ.தி.மு.க.வுக்கு உண்டு என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

நீதிமன்றம் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயலுவது வாக்களித்த மக்களை மோசடி செய்வதாகும். பதவியின் காலத்தை நீட்டித்துக் கொள்வதற்கான தந்திர உபாயமுமேயாகும்.
எந்த வகையிலும் பிஜேபி காலூன்ற இடம் கொடுப்பது கட்சியின் பெயரில் உள்ள அண்ணாவுக்கும், ‘திராவிட’த்துக்கும் செய்யக்கூடிய துரோகம் என்பதையும் இப்பொதுக்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் எண் 17: 

பாடத் திட்டத்திலிருந்து  ஜோதிடத்தை விலக்குக!

போலி விஞ்ஞானமான (Pseduo Science) ஜோதிடத்தைப் பல்கலைக் கழகங்களில் இடம்பெறச் செய்வது - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் (51-ஏ-எச்) அடிப்படைக் கொள்கைக்கு விரோதமானதாகையால் அதனைப் பல்கலைக் கழகப் பாடத் திட்டத்திலிருந்து விலக்கவேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

குறிப்பாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சேலம் பெரியார் பல்கலைக் கழகத்திலும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் ஜோதிடப் பாடத் திட்டம் இடம்பெற்று இருப்பதை விலக்காவிட்டால், திராவிடர் கழகம் அதனை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபடும் என்று இப்பொதுக்குழு எச்சரிக்கிறது! 

தீர்மானம் எண் 18: 

சினிமா கவர்ச்சியை முதலீடாகக் கொண்டு அரசியலில் நுழைபவர்களிடம் 
எச்சரிக்கை தேவை!

தமிழ்நாட்டின் பொது வாழ்வில் - நாட்டு நலனில் எந்த அளவும் பங்கேற்காமலும்,  இதற்கு முன் மக்கள் நலனைச் சார்ந்த எந்த நடவடிக்கையிலும் போராட்டத்திலும் ஈடுபடாமலும், ஒரு சிறு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடாமலும் வெறும் சினிமா கவர்ச்சியை மட்டுமே முதலீடாகக் கொண்டு அரசியலில் நுழைந்து ஆட்சி அதிகாரத்தை எளிதில் கைப்பற்ற எத்தனிக்கும் எவருக்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என்று தமிழ்நாட்டுப் பெருமக்களை இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
மக்களின் சுக, துக்கங்களில் பங்கேற்று, அவர்களுக்கான பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்கிப் பாடுபடும் எவரும் அரசியலில் ஈடுபடுவது குறித்து நமக்குக் கருத்து வேறுபாடு ஏதுமில்லை என்பதையும் இப்பொதுக்குழு தெளிவுபடுத்துகிறது.

தீர்மானம் எண்: 19

குழந்தைகள் - சிறுவர்களிடம் கைப்பேசியில் விளையாடும் பழக்கத்தைத் தவிர்த்திடக் கோரல்
விஞ்ஞான கருவிகள் வளர்ச்சிக்குத் தேவை என்றாலும், குழந்தைகளிடம் கைப்பேசிகளில் விளையாடும் பழக்கத்தைத் தவிர்க்கச் செய்யவேண்டும் என்று பெற்றோர்களை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
மூளை வளர்ச்சிப் பாதிப்பதோடு விபரீதமான அம்சங்கள் பக்கம் அவர்கள் ஈர்க்கப்படும் அபாயம் இருப்பதை உணர்ந்து பெற்றோர்களும், குடும்ப உறுப்பினர்களும் இதில் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாட்டின் எதிர்காலத்தைக் கருதி, இதனை இப்பொதுக்குழு தீர்மானமாக முன்மொழிந்து வழிமொழிகிறது.

தீர்மானம் எண் 20: 

முத்தமிழ் அறிஞர் கலைஞர் 
முழு உடல்நலம் பெற வாழ்த்துகள்!

தி.மு.க. தலைவர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் படிப்படியாக உடல்நலன் மேம்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியதாகும்.

அவர்கள் முழு உடல்நலன் பெற்று, மீண்டும் தன் தொண்டினைத் தொடரவேண்டும் என்பதே தமிழ்ப் பெருமக்களின் மிகப்பெரிய வேட்கையாகும்.

விரைவில் அவர்கள் முழு நலன்பெற இப்பொதுக்குழு அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

-விடுதலை நாளேடு, 21.10.17