சனி, 26 ஜனவரி, 2019

திராவிட மாணவர் கழகமும் பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தும் அறிவியல் பரப்புரைக் கூட்டங்கள்

01-02-2019
சொற்பொழிவாளர் ஊர்
அதிரடி அன்பழகன்                               துறையூர்
இரா.பெரியார் செல்வன்                      காரைக்குடி
அண்ணா.சரவணன்                             புதுக்கோட்டை
சே.மெ.மதிவதனி                                திருச்சி

02-02-2019
இரா.பெரியார் செல்வன்                    மேட்டுப்பாளையம்
மாங்காடு மணியரசன்                       பழனி
யாழ் திலீபன்                                      கோவை
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்       கோபி
பா.மணியம்மை                                 தாராபுரம்

03-02-2019
அதிரடி அன்பழகன்                            மதுரை
இரா.பெரியார் செல்வன்                    தூத்துக்குடி
இராம.அன்பழகன்                             தேனி
மாங்காடு மணியரசன்                      கன்னியாகுமரி
சே.மெ.மதிவதனி                              தென்காசி

08-02-2019
கவிஞர் கலி.பூங்குன்றன்               தாம்பரம்
துரை.சந்திரசேகரன்                       தென்சென்னை
அதிரடி அன்பழகன்                         காஞ்சிபுரம்
இரா.பெரியார் செல்வன்                வடசென்னை
இராம.அன்பழகன்                         அரக்கோணம்

09-02-2019
துரை.சந்திரசேகரன்                      தருமபுரி
அதிரடி அன்பழகன்                        புதுச்சேரி
இரா.பெரியார் செல்வன்               திருப்பத்தூர்
இராம.அன்பழகன்                         நாமக்கல்
பூவை புலிகேசி                              குடியாத்தம்
சே.மெ.மதிவதனி                           எடப்பாடி

15-02-2019
இரா.பெரியார் செல்வன்               கள்ளக்குறிச்சி
அண்ணா.சரவணன்                      சிதம்பரம்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்  செய்யாறு
பா.மணியம்மை                            திண்டிவனம்

16-02-2019
இராம.அன்பழகன்                         பட்டுக்கோட்டை
பூவை புலிகேசி                             திருத்துறைப்பூண்டி
யாழ் திலீபன்                                திருவாரூர்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தஞ்சாவூர்
பா.மணியம்மை                          குடந்தை
பொறுப்பாளர்கள் கவனத்திற்கு:
மாவட்ட பகுத்தறிவாளர் கழக, திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் இது குறித்துத் திட்டமிட்டு, சொற்பொழிவாளர்களைத் தொடர்பு கொண்டு தேதிகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் இதனை ஒருங்கி ணைத்து உதவலாம்.
நிகழ்ச்சி குறித்த துண்டறிக்கையை ’விடுதலை’ செய்திப்பிரிவுக்கும், திராவிடர் கழகத் தலைமை நிலையத் துக்கும் அனுப்பிடல் வேண்டும்.
கூட்டத்திற்கான ஒலிபெருக்கி அனுமதியை காவல் துறையிடம் பெற்று, நன்கு விளம்பரம் செய்து மாணவர் களும், பொதுமக்களும் பயன்படக் கூடிய இடத்தில் கூட்டத்தை நடத்திட வேண்டும்.
- விடுதலை நாளேடு,26.1.19

வியாழன், 24 ஜனவரி, 2019

சென்னையில் கனிமொழி எம்.பி. உரை!

வாழ்நாளெல்லாம் நமக்காக உழைத்த தந்தை பெரியாருக்கு நாம் செய்யும் கைமாறாக மதச் சார்பற்ற அடையாளத்தைக் காத்திட அணிதிரள்வோம்!
சென்னை, ஜன. 21- “மதச்சார்பற்ற அடையாளத்தைக் காப்பாற்ற, ஜனநாயகத்தைக் காப்பாற்ற பெரியார் வழியில் திரள வேண்டும்“ என கனிமொழி எம்.பி. குறிப்பிட்டார்.

தந்தை பெரியாரின் 45 ஆம் ஆண்டு நினைவு தினப் பொதுக்கூட்டம் டிசம்பர் 24 - ஆம் தேதி சைதாப்பேட்டையில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நடந்தது. இதில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பிரசாரக்குழு செயலாளர் அருள்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தி.மு.க. மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவை தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி சிறப்புரையாற்றினார்.

கனிமொழி எம்.பி. ஆற்றிய உரை வருமாறு:-

இன்று பெரியாரின் நினைவு நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்ற வார்த்தையில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

ஏனெனில் இன்றும் கொண்டாடப்பட வேண்டிய கருத்தியலுக்கு சொந்தக் காரர் தந்தை பெரியார். இந்த சமூகத்தைக் காப்பதற்கு இந்த சமூகம் என்று சொல் லும்போது ஒட்டுமொத்த மனித சமூகத்தையும், இறை நம்பிக்கை உடையவர்கள் மொழியில் சொல்வதானால் ரட்சிக்கக் கூடியவர் பெரியார்.

எதிரிக்கும் சேர்த்துப் போராடியவர் பெரியார்!


அவர் யாரையும் தன் எதிரியாக கருதியதில்லை . தான் யாருக்கு எதிராக கருத்து களை வைக்கிறாரோ, யாரை எதிர்த்துப் போராடுகிறாரோ அவர் களைக் கூட வெறுக்காத ஒரு தலைவர் பெரியார். நான் எதிரிக்கும் சேர்த்துதான் போராடுகிறேன் என்பதை உணர்ந்து கொண்ட தலைவர் பெரியார். திராவிட இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் இந்துக்களுக்கு எதிரான இயக்கம் என்று மறுபடியும் மறுபடியும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கை என்ற விஷயத்துக்கு நாம் பிறகு வருவோம்.

பிறப்பால் யாரையும் கொச்சைப்படுத்தாதீர்!


எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் பிறப்பால் உன்னைக் கொச்சைப் படுத்தக்கூடாது. உன் பிறப்பால் உன்னை சிறுமைப்படுத்தி யாரிடமும் நிற்க வைக்கக் கூடாது. ஜாதியின் பெயரால் ஒடுக்கப் பட்டவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள் இந்துக்கள் இல்லையா? அவர்கள் கோயிலுக்குப் போக வேண்டும் என்று போராடினார் பெரியார். பெரியாருக்கு கோயிலுக்குப் போக வேண்டும் என்று தேவையில்லை. கலைஞருக்கு கோயிலுக்குப் போக வேண்டும் என்று தேவையில்லை.

ஆசிரியருக்கு கோயிலுக்குப் போக வேண்டும் என்று தேவையில்லை. அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு கோயிலுக்குப் போக வேண்டும் என்று தேவையில்லை. தாங்கள் நம்பாவிட்டாலும் நம்பக் கூடியவர்களின் உரிமைக்காக நின்று போராடிய இயக்கம் திராவிட இயக்கம். கோயிலுக்குப் போகிறவர்களை யாரும் பிறப்பின் அடிப்படையில் தடுக்கக் கூடாது என்று போராடியவர் பெரியார்.

ஆனால் இன்று இருக்கக் கூடிய அரசியல் நிலை என்ன என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தியாவிலே நீங்கள் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கே ஒருவரின் பெயரைக் கேட்டால் அதில் அவரது ஜாதியின் பெயரும் இருக்கும்.

தமிழ்நாட்டில்தான் ஜாதியைக் கண்டுபிடிக்க முடியாது!


ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒருவரது பெய¬ர் வைத்து ஜாதியைக் கண்டுபிடிக்க முடியாது. ஊர் என்ன, தெரு என்ன என்று பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகுதான் அவர்களது ஜாதி யைப் பற்றி அறிய முடியும். ஏனென்றால் தமிழன் ஜாதியை வெளியே சொல்லிக் கொள்வதை அவமானமாக நினைக்கச் செய்தவர் தந்தை பெரியார்.

ஆர்.எஸ்.எஸ். விதைக்க முயலும் ஜாதி அடையாளம்!


ஆனால் இன்று ஜாதிப் பெய¬ர் போட்டுக் கொள்வது, ஜாதி இயக்கங்களை சார்ந்திருப்பது, ஜாதியை வெளிப் படையாக சொல்லிக் கொள்வது என்ற நிலைமையை இம்மண்ணிலே விதைக்க ஆர்.எஸ்.எஸ், போன்ற இயக்கங்கள் துணிந்துவிட்டன.

அதேநேரம், ஜாதி என்பது நிதர்சனம், ஜாதியை அழிக்க முடியாது, அதைப் புரிந்துகொண்டு பேச வேண்டும் என்ற அறிவுரைகள் அரசியல்வாதிகளுக்கு சொல்லப்படுகிறது.

ஆனால் நான் ஒன்றே ஒன்றை இந்த மேடையில் இருந்து சொல்லிக் கொள்கிறேன். ஜாதி நிதர்சனம் என்பது எங்களுக்கும் தெரியும், ஜாதி இருக்கிறது என்பது எங்களுக்கும் தெரியும் ஆனால் அதை உடைப்பதற்கும், ஒழிப்பதற்கும் தான் அரசியலுக்கு வந்தோம். இதுதான் திராவிட இயக்கம்.

வியக்க வைக்கிறது டி.என்.ஏ. டெஸ்ட்!


அறிவியல் வளர்ச்சியில் என்னை வியக்க வைத்தது டி.என்.ஏ. டெஸ்ட்தான். இந்த சோதனையால் உங்கள் ஜீனாலஜி என்ன, நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள், உங்கள் ரத்தத்தில் என்னென்ன இனங்களுடைய கலப்பு இருக்கிறது என்பதை எல்லாம் கண்டறிந்து சொல் கிறார்கள். இங்கே சில குழுக்களைச் சேர்ந்தவர்கள் பேசுகிறார்கள், தான் யாராக இருக்க விரும்புகிறேன், தான் யாரையெல்லாம் வெறுக்கிறேன் என்றெல்லாம் சொல்கிறவர்கள் டி.என்.ஏ. டெஸ்ட் முடிவுகள் வந்த பிறகு அதிர்ச்சிக்கு உள்ளாகி உறைந்து போகிறார்கள்.

எனக்கு ஒரு ஆசை.. ஜாதி, ஜாதி, ஜாதி என்று பேசிக் கொண்டிருக்கிறார்களே ஜாதி சங்க தலைவர்கள். அவர்களுக் கெல்லாம் ஒரு டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்துப் பார்க்க வேண்டும். உண்மையில் உங்களுக்குள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜீன் எவ்வளவு இருக்கிறது, மற்ற வெளி நாட்டு இனங்களைச் சேர்ந்த ஜீன் எவ்வளவு இருக்கிறது என்று அப்போதுதான் தெரியும்.

ஜாதி என்பதெல்லாம் ஜோக்! அதை உடைத்தெறி!


ஏனென்றால் மனித இனம் என்பது எத்தனையோ காலங்களை, எத்தனையோ விஷயங்களைக் கடந்து வந்திருக்கிறது. இந்த வரலாற்றையெல்லாம் பின்னோக்கிப் பார்த்தால் ஜாதி என்பது ஜோக். ஆனால் இன்னும் பல பேர் அதை பிடித்துக் கொண்டிருக்கிறோம். இதைத்தான் தந்தை பெரியார் உடைக்க நினைத்தார்.

மற்றவர் வலியை உணர வேண்டும்!


தந்தை பெரியார் கண்ட கனவு தன்னுடைய வலியை மட்டும் உணராமல் இன்னொருவரின் வலியையும் தன்னுடைய வலியாக உணர வேண்டிய சமுதாயம் உருவாக வேண்டும் என்று சொன்னார். பிறருக்கு நேரும் துன்பத்தை தனக்கு நேர்வது போல வலியை உணர வேண்டும் என்று பெரியார் சொன்னார். இதைத்தான் உலகத்தில் மனித நேயம் என்கிறார்கள்.

தலைவர் கலைஞர் சொன்னார், மனித உரிமையே சுயமரியாதை!


மனித உரிமைகள் பற்றி தலைவர் கலைஞரிடம் ஒருமுறை செய்தியாளர்கள் கேட்டபோது, ‘நீங்கள் இன்று பேசிக் கொண்டிருக்கும் மனித உரிமையைத் தான் திராவிட இயக்கமும், பெரியாரும் சுயமரியாதை’ என்று சொன்னார்கள் என்று குறிப்பிட்டார்.

யாரும் யாரையும் மோசமாக நடத்தக் கூடாது!


யாரும் யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது, மோசமாக நடத்தக் கூடாது, ஒதுக்கி வைக்கக் கூடாது, பெண், ஆண் என்ற வித்தியாசம் பார்க்கக் கூடாது. இதுதான் நம் கனவு சமூகம். ஒருவர் இன்னொருவரால் மோசமாக நடத்தப்படும் போது நாம் தட்டிக் கேட்கிறோம். இது எப்படி ஒரு மதத்துக்கு எதிரானதாக இருக்கும்? அது எந்த மதமாக இருக்கட்டும். எந்த மதத்துக்கும் நாம் எதிராக இல்லை. மனிதர்களை ஒடுக்கும்போது, மனிதர்களை அடக்கும் போது, மனிதர்களை மனிதர்களாக நடத்தாதபோது நாம் கேள்வி கேட்கிறோம். இதுதான் திராவிட இயக்கம், இதுதான் பெரியார்.

இதை விட்டுக் கொடுத்துவிட்டு, மனித நேயத்தை விட்டுக் கொடுத்து விட்டு எல்லாரையும் உள்ளடக்கிய சமுதாயம் உருவாக முடியாது. அதை நாம் மனித சமுதாயம் என்று கூற முடியாது. மனிதமே இல்லாத ஒரு மனித சமுதாயத்தை உருவாக்கும் ஒரு சூழலை நோக்கி இந்த சமூகம் நகர்ந்துகொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை.

திணிக்க நினைப்பதை ஏற்க முடியாது!


“’நீங்கள் என்ன உணவு உண்ணுகிறீர்கள், என்ன கருத்துகளைச் சொல்கிறீர்கள், உங்கள் வழிபாட்டு முறை என்ன? நீ இந்துவாக இருக்கலாம். ஆனால் நான் வழிபடக் கூடிய வழிபாட்டு முறையைக் கொண்டுவந்து உன் மேல் திணிப்பேன். என்னுடைய மொழியைக் கொண்டுவந்து உன் மேல் திணிப்பேன். ஆனால் நீ என்னை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. ஜாதி இருக்கிறது, அதை நீ கொண்டாட வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை நான் அரசியலாக்கி உன்னைப் பிரித்துப்பார்ப்பேன். இங்கே உரையாடலே இருக்கக் கூடாது” இதுதான் இன்றைய நிலைமை.

நாம் பெரியாரின் நினைவு நாளை போற்றிக் கொண்டிருக்கிறோம். கொஞ்ச நேரத்துக்கு முன் நான் இங்கே வந்த போது என் கையில் பெரியார் சிலையை ஆசிரியர் தந்தபோது, யாரோ “நமசிவாய நமசிவாய” என்று அருகே பிரசங்கத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இது தான் இந்தியா. இதுதான் ஆரோக்கியமான சமூகம். நாங்கள் யாருடைய உரிமையையும் பறிக்கவில்லை. உங்கள் கருத்தை சொல்லக் கூடிய உரிமை உங்களுக்கு இருப்பது போலவே, என் கருத்தை சொல்லக் கூடிய உரிமையும் எனக்கு இருக்க வேண்டும். இந்த உரையாடல் தொடர வேண்டும்.

அப்படிப்பட்ட சமூகத்தை, நாட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பு, எங்களுடைய உழைப்பு, அதை நோக்கித்தான் எங்களுடைய பயணம். இதை யாரும் தடுக்க முடியாது. அது ஆளுங்கட்சியாக இருந் தாலும், ஆர்.எஸ்.எஸ். ஆக இருந்தாலும் சரி, யாரும் தடுக்க முடியாது. அவர்களுக்கு பல முகங்கள் இருக்கின்றன.

பெண் கோவிலுக்குள் போகக் கூடாதா?


ஆண் கோயிலுக்குள் போக வேண்டும், பெண் போகக் கூடாது என்று ஏன் சொல்ல வேண்டும்? ஒரு காலத்தில் இருந்த தடைகளையெல்லாம் கடந்து தான் பல மதங்கள் உண்டாகியிருக்கின்றன. ஆனால் இந்த நூற்றாண்டில் இப் போது கோயிலுக்குள் பெண்கள் போகக் கூடாது என்று ஆட்சியிலே இருக்கக் கூடிய ஒரு கட்சி போராட்டம் நடத்துகிறது என்றால், இதைவிட வெட்கக்கேடு வேறு என்ன இருக்க முடியும்?

பெண்களுடைய ஓட்டு வேண்டுமா? பெண்களுடைய ஓட்டு வேண்டும்னு கெஞ்சிக் கூத்தாடி வாங்கிக் கொண்டு போகிறீர்களே? அப்புறம் பெண்கள் கோயிலுக்குள் செல்லக் கூடாது என்று சொல்லும் தகுதி உங்களுக்கு எப்படி வந்தது?

பெண்களுக்கு கோயிலுக்குள் செல்லும் தகுதி இல்லையென்று சொல்பவர் கள் பெண்களிடம் ஏன் வந்து ஓட்டு கேட்கிறீர்கள்?

பெண்களுக்கான இட ஒதுக்கீடு: பி.ஜே.பி.யின் பதில் என்ன?


‘2014 ஆம் ஆண்டு பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையிலே, பெண்களுக்கான 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொண்டுவரப் படும்‘ என்று சொன்னார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து இன்று வரையிலே, பெண்கள் இட ஒதுக்கீடுபற்றி, நாடாளு மன்றத்தில் ‘லிஸ்ட் ஆஃப் பிசினஸ்’ என்ற பட்டியலில் கூட கொண்டுவர் தைரியம் இல்லாத இயக்கம்தான் பி.ஜே.பி. பணமதிப்பிழப்போ, ஜி.எஸ்.டி. யோ பல மாநிலங்களில் சாதாரண தொழில்களை எந்த அளவுக்குக் கடுமையாக பாதித்திருக்கிறது. பணமதிப்பிழப்பில் இருந்து மக்களால் இன்னும் மீண்டு வரமுடியவில்லை. எத்தனை தொழிலாளர்கள் வேலை இழந்து கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்லியே பதவிக்கு வந்த மோடி அவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கினார்கள்? பொருளாதாரத்தில் சீரழிவை நோக்கி நாம் பின்னடைந்து கொண்டிருக்கிறோம்.

மக்களை பிளவுபடுத்தும் பி.ஜே.பி. ஆட்சி!


இப்படி மக்களை பிளவுபடுத்தி, எந்த அளவுக்கு அவர்களை மூட நம்பிக்கை களுக்கு அழுத்தி மூழ்கடிக்க முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக் கிறது இந்த ஆட்சி. தனக்கு இருக்கக் கூடிய பண பலம், ஆட்சி பலம் இது அத்தனையும் பயன்படுத்தி மக்களுடைய கருத்துகளை முடக்கக் கூடிய, இளைஞர்களின் சிந்தனைகளை முடக்கக் கூடிய, அரசியல் கட்சிகளை எல்லாம் அழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கக் கூடிய, மாநில உரிமை களை ஒழித்துவிட்டு, மாநில அடையாளங்களை எல்லாம் அழித்து விட்டு தான் மட்டும் இந்தியாவிலே ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக் கிறார்கள். நம்மிடம் இருந்து எடுக்கவும் தயாராக இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் அடையாளத்தை, உரிமையை காப்பாற்ற வேண்டும் என்றால் இந்த நாட்டில் அரசிய லில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் பெரியாரின் நினைவுநாளிலே தந்தை பெரியாரின் வழியிலே அணி திரள்வோம்.

நாட்டை ஒற்றைத் தலைமையின் கீழ் ஒ«ர் சிந்தனைக்குள் கொண்டுவரத் துடிக்கும் சக்திகளை விரட்டியடிப்போம். மனிதனை மனிதாக நடத்தக்கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம். அதுவே வாழ்நாளெல்லாம் நமக்காக உழைத்த பெரியாருக்கு நாம் செய்யும் கைமாறு!

இவ்வாறு கனிமொழி எம்.பி. உரையாற்றினார்.

-  விடுதலை நாளேடு, 21.1.19

புதன், 23 ஜனவரி, 2019

தியாகராயர் நகர் பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்புதமிழ்ப் புத்தாண்டையொட்டி 15.1.2019 முற்பகல் 9.30 மணி அளவில் தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு தென் சென்னை திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, அமைப்பாளர் மு.ந.மதியழகன் மற்றும் துணைத்தலைவர் டி.ஆர்.சேதுராமன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணைச்செயலாளர்கள் கோ.வீ.ராகவன்மற்றும் சா.தாமோதரன், கோ.மஞ்சநாதன், க.தமிழ்ச் செல்வன், இளைஞரணி செயலாளர் ந.மணித்துரை மற்றும் சதிஸ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியையொட்டி சிலையும் பீடமும் வண்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

-  விடுதலை நாளேடு, 23.1.19

ஞாயிறு, 20 ஜனவரி, 2019

நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான டி.சுந்தரராவ் (நாயுடு) அவர்களின் பிறந்த நாள் 


நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான டி.சுந்தரராவ் (நாயுடு)பி.ஏ,பி.எல். அவர்களின் 130 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு 18.1.2019 அன்று காலை 9.30 மணி அளவில் அவரின் குடும்பத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


 -  விடுதலை நாளேடு, 20.1.19
(எனது செய்தி)


 


வியாழன், 10 ஜனவரி, 2019

தங்களுக்கு எதிரானவர்களைப் படுகொலை செய்ய எட்டு வகையான இந்து அமைப்புகளுக்குப் பயிற்சி

ஆங்கில நூல் ஆதாரத்தை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்சென்னை, ஜன.10 தங்களுக்கு எதிரானவர்களைப் படுகொலை செய்ய எட்டு வகையான இந்து அமைப்பு களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது என்று ஆங்கில நூல் ஆதாரத்தை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
பகுத்தறிவுப் பகலவனின் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம்

24.12.2018 அன்று சென்னை சைதாப்பேட்டை தேரடியில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டத்தில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு: அய்யா அவர்கள் தெளிவாகச் சொல்கிறார்கள்.
மனித ஜீவனுக்கு, எல்லாவற்றையும்விட முக்கியமான உணர்ச்சியாக, மான - அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையைத்தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில், மனிதன்'', மானிடன்'' என்ற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள் ஆதலின், மனிதன் என்பவன் மானமுடையோன். எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமையுடையது மானம்தான். அத்தன்மையாகிய சுயமரியாதையைத்தான் மனிதன் சுயமரியாதையாகக் கொண்டிருக்கிறான். இது, ஒவ்வொரு மனித ஜீவனுக்கும் உரிமையுடையது.''
இதில், ஆரியர், திராவிடர் - அல்லது அந்த நாட்டுக் காரன், இந்த நாட்டுக்காரன் என்பதல்ல.
இப்பொழுது வடநாட்டில், ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிராக மிகப்பெரிய அணியை, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் திரட்டி பேரணி நடத்துகிறார்கள். அந்தப் பேரணிக்கு சுய அபிமான்'' என்ற வார்த்தையை சொல்கிறார்கள். சுய அபிமான்' என்றால், சுயமரியாதை என்று அர்த்தம்.
ஆகவேதான், இந்த இயக்கத்திற்கு, தந்தை பெரியா ருக்கு நாம் எல்லோரும் கடமைப்பட்டு இருக்கிறோம்.
ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரிகள் இருக்கிறார்கள்; ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் படித்திருக்கிறார்கள்.
நாம் ஊர்வலங்களில் முழக்கங்களை எழுப்பும் பொழுது,
கான்ஸ்டபிள் எல்லாம் நம்மாள்
அய்.ஜி. எல்லாம் அவாள்'' என்று எழுப்பினோம்.
இன்றைக்கு அய்.ஜி.யாக நம்மாள்கள் வந்திருக்கிறார் களே - அப்படி வந்தவுடன், அவர்களைவிட அதிக விசுவாசமாக எதிரிகளுக்கு இருக்கிறார்கள். அது நம் இனத்தினுடைய கூறுபாடாகும். அதற்காக நாங்கள் அவர்களை வெறுக்கவில்லை.
எங்களை யார் தள்ளுகிறார்களோ, அவர்களுக்கும் சேர்த்துத்தான் நாங்கள் பாடுபடுகிறோம்.
எங்களுக்கெல்லாம் பெரியார் அவர்கள் எப்படி பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறார் தெரியுமா? காவல்துறையினர் தடியடி நடத்தினால்கூட, பரவாயில்லை, நம்மாள் அடிக்கிறான்; இதுவரையில் பார்ப்பான் நம்மை அடித்துக் கொண்டிருந்தான். இன்றைக்கு நம்மாள் கைகளில் அந்தத் தடி இருக்கிறதே'' என்று நினைக்கின்ற அளவிற்கு, அந்த இன உணர்வு என்பதை - சுயமரியாதை உணர்வு என்பதை எடுத்துக்காட்டினார்.
இப்பொழுது இருக்கிற போராட்டம் - மிகவும் சுருக்கமாக சொல்கிறேன் - பெரியாருடைய பெரும் பணி என்பது எப்படி இருக்கிறது என்பதை.
இதை நாங்கள் சொல்லவில்லை - திராவிடர் கழகம் சொல்லவில்லை அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற நூலில் எடுத்துச் சொல்லியிருக்கின்ற ஒரு பகுதி.
ஆரியர்கள் மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்!

”ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத் தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?
நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங் குகள் இவற்றையெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.
வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்.
ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் கம்மி. வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான். ஆரியர்கள் பெண்களை விட்டுவிட்டு வந்தார்கள்.
ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.''
பெரியாருடைய இயக்கம் எதற்காக? இந்த இயக்கம் ஏன் போராடுகிறது?

இதுதான் இன்றைக்குப் பிரச்சினை. பெரியாருடைய இயக்கம் எதற்காக? இந்த இயக்கம் ஏன் போராடுகிறது? ஏன் இன்னமும் ஆணவக் கொலைகள் என்ற பெயராலே, பாசத்தைக் கொட்டி வளர்த்த தன்னுடைய பிள்ளையை, ஜாதியைக் காரணம் காட்டி கொல்கிறார்கள்? ஜாதி என்பது என்ன? நடைமுறையில் உண்டா? இங்கே அழகாக சொன்னார்களே, கனிமொழி அவர்கள் சொன்னார்கள், அய்யா நல்லகண்ணு அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
ஜாதி என்பது ஒரு மாயை. ஜாதி என்பது ஒரு பொரு ளாக இருந்தால், அதனை உடைத்திருக்கலாம். ஜாதி என்பது என்ன? தயவு செய்து நினைத்துப் பாருங்கள். நடைமுறையில் ஜாதி இருக்கிறதா?
குருதிக் கொடை அளிக்கிறீர்களே, செட்டியாருடைய ரத்தத்தை செட்டியாருக்குப் பொருத்துகிறீர்களா? அல்லது உடல் உறுப்புக் கொடை  அளிக்கிறார்களே, முதலியார் இருதயம், முதலியாருக்குத்தான் பொருத்துகிறார்களா? என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள்.
ஒரு அய்யங்கார் விபத்தில் அடிபட்டு, மருத்துவம னையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு உடனடியாக ரத்தம் ஏற்றவேண்டிய நிலை.
இரண்டு, மூன்று நாள்களாகியும் அவருக்கு ரத்தம் ஏற்றவில்லை. உடனே அந்த அய்யங்கார் மருத்துவரைப் பார்த்து, ஏங்க இன்னும் எனக்கு ரத்தம் ஏற்றவில்லை'' என்று கேட்கிறார்.
உங்களுடைய ரத்தம் ஏ1 பாசிட்டிவ் வகையைச் சார்ந்தது. நாங்களும் விளம்பரம் கொடுத்திருந்தோம். ஒருவர் மட்டுமே மனிதநேயத்தோடு வந்தார் அந்த விளம்பரத்தைப் பார்த்து'' என்றார் மருத்துவர்.
அப்படியானால், ஏன் எனக்கு இன்னும் ரத்தம் ஏற்ற வில்லை என்று அந்த அய்யங்கார் கேட்க,
இல்லீங்க, வந்த இளைஞர் தாழ்த்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்தவர். அவரைத் தொட்டாலே தீட்டு என்று நீங்கள் சொல்பவர்கள்; உங்களுடைய அனுமதி இல்லாமல், அவருடைய ரத்தத்தை நாங்கள் உங்களுக்கு ஏற்ற முடியுமா?'' என்கிறார் மருத்துவர்.
இல்லை, நான் ஜாதிக்காக செத்துப் போகிறேன், அவ ருடைய ரத்தத்தை என்னுடைய உடம்பில் ஏற்றக்கூடாது; எனக்கு ஜாதிதான் முக்கியம் என்று சொல்வாரா?
நம்மைவிட அவர்கள் கெட்டிக்காரர்கள்.
அந்த அய்யங்கார் என்ன செய்வார்?  மருத்துவரு டைய கைகளைப் பிடித்துக்கொண்டு,  அய்யய்யோ, அதையெல்லாம் இப்பொழுது யார் பார்க்கிறார்கள்? நான் பெரியார் கட்சியில் சேர்ந்து எவ்வளவு நாளாச்சு'' என்பார்.
அப்பொழுது ரத்தத்தைப் பார்க்கிறார்களா? உருவத் தைப் பார்க்கிறார்களா? பெரியார் செய்த பணி என்ன என்று இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தெரியவேண்டும். இதோ என்னுடைய கைகளில் இருப்பது அசல் மனுதர்மம் நூல். இந்த மனுதர்மத்தை கைகளில் எடுத்துக்கொண்டு வந்தார்கள் ஆரியர்கள் என்று சொன்னாரே, அக்னி ஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்.
அம்பேத்கர் தலைமையில் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, மறுபடியும் மனுதர்மத்தை அரசியல் சட்டமாக்கவேண்டும் என்பது தான் இன்றைய பா.ஜ.க. ஆட்சியின் நிலை!
ஏன்?
அந்தப் பிரம்மா ஆனவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறு மைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித் தனியாகப் பகுத்தார். அதற்கும் கீழே பஞ்சமர்கள் அய்ந்தா வது ஜாதி. எல்லாப் பெண்களும் சேர்ந்து அதற்கும் கீழே!
இந்து மதம் என்று வெள்ளைக்காரன் பெயர் கொடுத்தான்

இதைத்தான் அம்பேத்கர் அவர்கள் மிக அழகாக சொன்னார்,  Graded inequality. 
இந்து மதம் என்ற ஒரு மதமே கிடையாது என்று சங்கராச்சாரியார் உள்பட சொன்னார்.  வெள்ளைக்காரன் கொடுத்த பெயர் அது.
அந்த மதத்தினுடைய மிக முக்கியமான அடிப்படை என்ன? வர்ணாசிரமம்தானே, ஜாதிதானே. அந்த ஜாதியை ஒழிப்பதற்கு, அதை அடிப்படையாகக் கொண்டி ருக்கின்ற பெண்ணடிமை, பிறவி பேதத்தை நீக்குவது. இதுதான் சுயமரியாதை இயக்கத்தினுடைய அடிப்படை கொள்கையாகும். பெரியாருடைய வாழ்நாள் தொண்டு. அந்தப் பிறவி பேதம் என்பது இருக்கிறதே, பிறப்பால் ஒருவன் உயர்ந்தவன்; பிறப்பால் ஒருவன் தாழ்ந்தவன் என்று உலகத்தில் வேறு எங்கேயாவது உண்டா?
நீக்ரோவைக்கூட - கருப்பாக இருக்கிறான் என்று வெள்ளைக்காரர்கள் சொல்லலாம். ஆனால், நீக்ரோவைத் தொட்டால், எந்த வெள்ளைக்காரர்களும் குளிப்பதில்லை. கருப்பர்களுக்குப் படிப்பைக் கொடுக்கக்கூடாது என்று அவர்கள் சொல்லவில்லையே!
எனவேதான் நண்பர்களே, நீங்கள் நன்றாக நினைத் துப் பார்க்கவேண்டும். இந்த இயக்கத்தின் பெருமை - இந்த இயக்கத்தின் தேவை - திராவிட இயக்கத்தின் கொள்கை - இவையெல்லாம் ஆட்சிக்கு வந்த பிறகு தானே, இவ்வளவு பெரிய மாறுதல்கள் வந்தன.
உங்களுக்கெல்லாம் தெரியும், தந்தை பெரியார் அவர்களுக்கு வைக்கம் போராட்ட வீரர்'' என்று பெயர். கேரளாவில் இன்னமும் அங்கே முடியவில்லை. இதுவே தமிழ்நாடாக இருந்தால், அந்த நிலைமை இருக்குமா?
பெரியார் இயக்கம் இங்கே பலமாக இருக்கிறது!

சபரிமலை அய்யப்பன், ஒழுங்காக தமிழ்நாட்டிற்கு வந்தார் என்றால், அவர் எல்லா பெண்களையும் அனு மதித்துவிடுவார். ஏனென் றால், பெரியார் இயக்கம் இங்கே பலமாக இருக்கிறது. திராவிடர் இயக்கம் என்ன செய்தது? என்று சில அறிவாளிகள்' கேட்கிறார்கள். திராவிடத்தால் வீழ்ந் தோம்' என்று சொல்கிறார்கள் சில பைத்தியக்காரர்கள். திராவிடத்தால் ஒருவரும் வீழ்ந்தது கிடையாது; எழுந்ததாகத்தான் வரலாறு. எங்கேயாவது ஒருவன் வீழ்ந்திருப்பானால்,  டாஸ்மாக்கினால்தான் வீழ்ந்திருப் பானே தவிர, திராவிடத்தினால் ஒருபோதும் வீழ்ந்திருக்க மாட்டான்.
இன்னமும் பெரியார் கொள்கை தேவையா? இன்றைக்கு என்னங்க, பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்று இருக்கிறது என்று சிலர் புரியாமல் கேட்கிறார்கள்.
நீதிக்கட்சியின் அரசு ஆணை!

இதோ என்னுடைய கைகளில் இருப்பது அரசு ஆணை.
சென்னை அரசாங்கத்தினுடைய உள்ளூர் அரசாங்க இலாகா. அரசாங்க உத்தரவு - நீதிக்கட்சி - திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு கால வரலாற்றில் செய்திருப்பது.
2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி 25 செப்டம்பர் 1924
ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உபயோகப் படுத்தப்படும் சாலைகள், கிணறுகள் பற்றியது - இரட்டைமலை சீனிவாசன்
இந்த சட்டமன்றம் கீழ்க்கண்டவைகளை நிறைவேற்றி, அரசாங்கத்தின் கொள்கைகளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
”எந்தப் பொதுச்சாலையிலோ, தெருவிலோ அல்லது எந்தக் கிராமத்திலோ அல்லது எந்த நகரத்தில் இருந்தாலும் - அதில் எந்த இனத்தைச் சார்ந்த மனிதனாக இருந்தாலும், நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதை மிகத் தெளிவாகச் சொல்வதோடு, எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும், அல்லது கிணறு, குளம் முதலியவைகளாக இருந்தாலும், அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடங்களாக இருந்தாலும், இவைகளிலெல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என் னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு.''
இது புரியாமல் சிலர் கேட்கிறார்களே, நம்மாள் மூக்கைச் சொறிந்து விடுகிறானே - இதிலேயே கூலிப் பட்டாளத்தைப் பிடிக்கிறானே - தாழ்த்தப்பட்டவர் களுக்கு நீதிக்கட்சி என்ன செய்தது என்று வரலாறு தெரியாமல் கேட்கிறார்களே!
இந்த நிலை கேரளாவில் இல்லை. திருவிதாங்கூரில் இல்லை. அதனால்தான், பெரியார் அவர்கள் இங்கே இருந்து சென்று, அங்கே போராடினார். அவர் சிறைச் சாலைக்குச் சென்றதும், நாகம்மையாரும், பெரியா ருடைய தங்கை கண்ணம்மாள் அவர்களும் சென்று போராடினார்கள். அதற்குப் பிறகுதான் வைக்கம் வீரர்.''
இந்தியாவிலேயே முதன்முதலாக பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்த இயக்கம்!

எனவே, போராட்டம் இல்லாமல், இந்தப் புரட்சியை செய்தது நீதிக்கட்சி - திராவிடர் இயக்கம்.
திராவிடர் இயக்கம் என்ன செய்துவிட்டது என்று கேட்கிறார்களே, இந்தியாவிலேயே முதன்முதலாக பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்த இயக்கம், திராவிடர் இயக்கம்.
வாக்குரிமைதானே ஜனநாயகம் - அதுதானே அடிப்படை. தாழ்த்தப்பட்டவர்களுக்காக பள்ளிக் கூடங்களைத் திறந்தது இந்த இயக்கம் அல்லவா!
ஆகவே, நீங்கள் நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும். இதையெல்லாம் மிகப்பெரிய அளவில் மறைத்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, இதை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இன்றைக்குத் தமிழகத்தினுடைய உரிமைகள் எவ்வளவு பறிபோயிருக்கின்றன. ஏன் ஆர்.எஸ்.எசை நாங்கள் எதிர்க்கிறோம்?
வண்ணங்கள் முக்கியமல்ல - எண்ணங்களால் ஒன்றுபட்டு இருக்கிறோம்!

திருச்சியில் நேற்று (டிச.23) நடைபெற்ற கருஞ்சட்டைப் பேரணியில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் - பல கருத்துள்ளவர்கள் - அந்தப் பேரணியில், கருப்புக் கொடி, சிவப்புக் கொடி, திராவிடர் கழகக் கொடி, நீலக்கொடி. வண்ணங்கள் முக்கியமல்ல - எண்ணங்களால் ஒன்று பட்டு இருக்கிறோம்.
ஜாதி பிரித்தது
மதம் பிரித்தது
கடவுள் பிரித்தது
பெரியார் இணைத்தார் - பெரியார் இணைக்கிறார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அந்த உணர்வு வந்தது.
கருப்புச் சட்டையைப்பற்றி மிக அழகாகப் பாராட்டி னார் நம்முடைய காம்ரேட் நல்லகண்ணு அவர்கள்.
இன்றைக்கு எல்லாக் கட்சியினரும் கருப்புச் சட்டையை தைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். யாராவது போராட்டம் நடத்தவேண்டும் என்றால், கருப்புச் சட்டை அணிந்துதான் போராடுகிறார்கள். அதற்கு முன்பு எங்களுக்கு மட்டும்தான் கருப்புச் சட்டை சொந்தமாக இருந்தது. கருப்புச் சட்டையைப் பார்த்தாலே ஒரு மாதிரியாக பார்த்த காலம் உண்டு. இன்றைக்கு எங்களுக்கே எந்தக் கருப்பு என்று தெரியவில்லை. ஒன்றே ஒன்று, அய்யப்பன் கோவிலுக்குப் போடுகிறவர்களின் கருப்புச்சட்டைதான் தனியாகத் தெரிகிறதே தவிர - அது தற்காலிகக் கருப்பு - சீசன் கருப்பு அது.
மற்ற கருப்பெல்லாம், இன்றைக்குப் போராட்ட அடையாளம். நீதி கேட்டு போராடுகிறவர்கள், நியாயம் கேட்டு போராடுகிறவர்கள் கருப்புச்சட்டை அணிந்துதான் போராடுகிறார்கள்.
நீதி கேட்டு, நீதிமன்றத்திற்குச் சென்றால், அங்கே வழக்காடும்  வழக்குரைஞரும் கருப்புச் சட்டை அணிந்தி ருக்கிறார்;  அந்த வழக்கினை விசாரித்து நீதி சொல்லும் நீதிபதியும் கருப்புச் சட்டை அணிந்திருக்கிறார்.
ஆகவே, தந்தை பெரியாருடைய தொலைநோக்கு எப்படிப்பட்டது என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்த கொள்ளவேண்டும் நண்பர்களே!
இப்பொழுது நடைபெறுகின்ற போராட்டம் - இனப்பேராட்டம்!

ஆகவேதான், இப்பொழுது நடைபெறுகின்ற போராட்டம் - இனப்பேராட்டம். இரண்டு கட்சிகளிடையே நடைபெறும் போராட்டமல்ல - அந்தக் கூட்டணிக்கும் - இந்தக் கூட்டணிக்கும் நடைபெறும் போராட்டமல்ல.
அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய அரசியல் சட்டம்,
We the People of India, having solemnly resolved to constitute India into a Sovereign Socialist Secular Democratic Republic and to secure to all its citizens Justice, social, economic and political; Liberty of thought, expression, belief, faith and worship; Equality of status and of opportunity; and to promote among ...
சமூகநீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி அதேபோன்று, சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் இவை அத்தனைக்கும் விரோதமானது மனுதர்மம்.
இவை அத்தனைக்கும் விரோதமானது பகவத் கீதை. அந்தக் கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்கிறார்களே!
திருக்குறளைப்பற்றி பேசினாரே, எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
திராவிடம்- ஆரியம் என்றால் வேறொன்றுமில்லை.
ஆரியம் என்பது பிளவுபடுத்துவது, பேதப்படுத்துவது, எட்டி நில் என்று சொல்வது, பெண்களுக்கு உரிமை மறுப்பது.
திராவிடம் என்பது, ரத்தப் பரிசோதனையை வைத்து நாங்கள் திராவிடம் என்று சொல்லவில்லை.
திராவிடம் என்பது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.
எங்களுக்குத் திருக்குறள், மிகப்பெரிய அளவிற்கு.
திருக்குறளே மனுதர்மத்தைப் பார்த்து எழுதப்பட்டது என்று எழுதுகிறார்கள்!

இந்த ஆட்சியில் பார்ப்பனர்கள் எந்த அளவிற்குத் துணிந்துவிட்டார்கள் என்றால், திருக்குறளே மனுதர்மத் தைப் பார்த்து எழுதப்பட்டது என்று எழுதுகிறார்கள். இதனை மறுக்க வேண்டாமா? இந்த இயக்கம் இல்லாவிட்டால், இதைக் கேட்பதற்கு நாதியுண்டா?
தமிழர்களே உங்களுக்காகப் பாடுபடுகிறவர்கள் நாங்கள்!

எனவே, தமிழர்களே உங்களுக்காகப் பாடுபடுகிற வர்கள் நாங்கள். ஒரு நாட்டின் காவல் படையைப் போல - ஒரு நாட்டின் ராணுவப் படையைப் போல - ஒரு நாட்டின் தீயணைப்புப் படை போல!
நாங்கள் பதவிக்குப் போகமாட்டோம்; அதேநேரத்தில், பதவியில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என்று அலட்சியமாக இருக்கமாட்டோம்.
ஒரு பழமொழி சொல்வார்கள் பொறுப்பில்லாமல், இராவணன் ஆண்டால் என்ன? இராமன் ஆண்டால் என்ன?'' என்று நம் நாட்டில் அலட்சியமாக சொன்னார்கள். அந்தக் கதை நடக்காது இன்றைக்கு - இராமன் ஆண்டால் ஒழிப்போம்; வருணாசிரம தர்மம்தான் இராமன் - சம்பூகனின் தலையை வெட்டியவன்தான் இராமன் - நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தன்னுடைய மனைவியை காட்டுக்கு அனுப்பியவன்தான் இராமன் - இன்றைக்கு அப்படி செய்தால், நீதிமன்றத்திற்கு வரவேண்டும் இராமன்.
இதனை இராணுவப் பள்ளிக்கூடத்தில், இராணுவ இடத்தில் சொல்லிக் கொண்டு இருக்கக்கூடிய அளவில், தீவிரவாதத்தை நடத்திக்கொண்டு, அரசாங்கப் பணத் தில், கொலை செய்வதற்காக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எங்களைப் பார்த்து தீவிரவாதிகள் என்கிறார்கள்; தமிழ்த் தீவிரவாதிகள் - தமிழ் வெறியர்கள் என்கிற வார்த்தையை சொல்கிறார்கள்.
இதோ என் கைகளில் இருப்பது Shadow Armies: Fringe Organizations and Foot Soldiers of Hindutva, Dhirendra K. Jha என்பவர் எழுதியிருக்கிறார். அவர் ஒரு பார்ப்பனர்தான்.
அந்த நூலில் அவர்,
Four of these organisations – the Bajrang Dal, the Bhonsala Military School, the Hindu Aikya Vedi and the Rashtriya Sikh Sangat – are affiliated to the Rashtriya Swayamsevak Sangh (RSS). Others – the Sanatan Sanstha, the Hindu Yuva Vahini, the Sri Ram Sene and Abhinav Bharat
இந்த அமைப்புகளில் உள்ளவர்களுக்கு துப்பாக்கி சுடுவதற்குப் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். இந்த அமைப்புகளிலே உள்ள சனாதன் சன்ஸ்தா அமைப்புதான் தபோல்கரை கொலை செய்தது, கோவிந்த்  பன்சாராவை கொலை செய்தது, கவுரி லங்கேசை கொலை செய்தது. இந்திய ராணுவப் படையில் இருந்த துப்பாக்கி மருந்துகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பயன்படுத்தி யிருக்கிறது.
இதில் பல அமைப்புகள் இருக்கிறது - அதிலே கொலை அமைப்புகள் இருப்பது மட்டுமல்ல,   ஙிலீஷீஸீணீறீணீ விவீறீவீணீக்ஷீஹ் ஷிநீலீஷீஷீறீ என்று இருக்கக்கூடிய அமைப்பில், ராணுவத்தில் அமைக்கப்பட்ட இந்தப் பள்ளிக்கூடத்தில், இத்தாலிக்குச் சென்று முசோலினியினுடைய பாசிசத்தைக் கற்றுக்கொண்டு வந்த இந்து மகாசபை தலைவர் மூஞ்ஜே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்குச் சொல்லிக் கொடுத்து, ஆர்.எஸ்.எஸ். அதைப் பயன்படுத்தி, நடைபெற்றதுதான் மாலேகான் குண்டுவெடிப்பு. இதுபோன்ற ஏராளமான செய்திகள் இருக்கின்றன. தனியே ஒரு கூட்டத்தில் இதைப்பற்றி விளக்கிச் சொல்கிறேன்.
அமைதிப் பூங்காவாக தமிழகம் இருக்கவேண்டும்!

எனவேதான் நண்பர்களே, அமைதிப் பூங்காவாக தமிழகம் இருக்கவேண்டும். கைகோர்த்துக்கொண்டு சகோதரர்களாக இருக்கவேண்டும். இங்கே ஆணுக் கும், பெண்ணுக்கும் பேதம் கிடையாது. பாலின வக் கிரங்களுக்கு இடம் கிடையாது.
பெண்களைப் பார்க்கின்றபொழுது, பாலினப் பண்டங் களாகப் பார்க்கின்ற காட்டுமிராண்டிகளாக மக்களை இருக்க நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.
மனிதநேயம் - மனிதம் - சுயமரியாதை இவைகளைப் பாருங்கள்.
எனவே, தந்தை பெரியார் அவர்களுடைய இந்த நினைவு நாளில், மிக முக்கியமான உறுதியை எடுத்துக் கொள்வோம்.
ஜாதியற்ற, தீண்டாமையற்ற ஒரு புதியதோர் சமுதாயத்தை உருவாக்குவோம்!
நாம் 21 ஆம் நூற்றாண்டில்தான் இருக்கிறோமா?

சுடுகாட்டிற்குப் பிணத்தைத் தூக்கிக்கொண்டு போக வேண்டும் என்று நீதிமன்றத்திற்குச் சென்று அனுமதி பெற்று வருகிறார்கள். அங்கே போய் ஜாதியைக் காரணம் காட்டி தடுக்கிறார்கள். பிணத்திற்கு மரியாதை காட்டவேண்டாமா? இதற்குப் பெயர் நாகரிகமா? நாம் 21 ஆம் நூற்றாண்டில்தான் இருக்கிறோமா?
செவ்வாய்க்கிரகத்திற்கு இவர்களால் போக முடிகிறது - கோவில் கருவறைக்குள் போக முடியவில்லையே! ஜாதியினுடைய கொடுமை எவ்வளவு இருக்கிறது பாருங்கள்.
ஆகவே நண்பர்களே! இன்னமும் பெரியார் தேவைப்படுகிறார்! இன்னமும் சுயமரியாதை இயக்கம் தேவைப்படுகிறது! இன்னமும் திராவிடர் இயக்கம் தேவைப்படுகிறது! மீண்டும் திராவிடர் இயக்கம் வந்தால்தான், இந்தக் காரிருள் போக, மீண்டும் உதய சூரியன் உதித்தாகவேண்டும், உதித்தாகவேண்டும்.
ஜனநாயகத்தை மதிக்கின்ற - மதச்சார்பின்மையைக் காப்பாற்றுகின்ற ஆட்சி வரவேண்டும்!

அதுமட்டுமல்ல, மத்தியில் ஒரு ஜனநாயகத்தை மதிக்கின்ற ஆட்சி - பாசிசத்தை அனுப்புகிற ஆட்சி - 56 அங்குல மார்புள்ள பிரதமர் என்று சொல்வது பெருமையல்ல - இந்த நாட்டில் மதச்சார்பின்மையைக் காப்பாற்றுவோம் என்று சொல்லக்கூடிய, மற்றவர்களை மதிக்கக்கூடிய ஆட்சி வரவேண்டும்.
”புல்லட்டை''த் தூக்கமாட்டோம்; ”பேலட்டை''த் தூக்குவோம்!

தமிழகத்தினுடைய உரிமைகளை அழிக்கக்கூடிய - ஒரு புயல் வந்தால்கூட, ஒரு அனுதாப வார்த்தை சொல்லத் தெரியாத பிரதமர்கள் எங்களுக்குத் தேவை யில்லை என்று விரட்டியடிக்கக்கூடிய ஒரு அற்புதமான முறை - அதற்கு நாங்கள் "புல்லட்டை''த் தூக்கமாட்டோம்; பேலட்டை''த் தூக்குவோம்.
நாங்கள் துப்பாக்கி குண்டுகளாக ஆகமாட்டோம் - ஒரு விரல் புரட்சியை உருவாக்குவோம் என்று சொல்லக் கூடிய உணர்வை உருவாக்குங்கள்.
நம்முடைய வழி அறவழிப்பட்ட வழி
நம்முடைய வழி ஜனநாயக வழி
நம்முடைய வழி பகுத்தறிவு வழி
நம்முடைய வழி சுயமரியாதை வழி
சுயமரியாதையைக் காப்போம் - சொக்கத்தங்கங்களாக மாறுவோம்!
மானமும், அறிவும் உள்ள மனிதர்களாக நாம் உலவுவோம்!
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
 - விடுதலை நாளேடு, 10.1.19