வியாழன், 4 ஜூலை, 2024

நாகை காயிதே மில்லத் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நன்னிலத்தில் ஜாதி ஒழிப்பு மாநாடு - 9.4.1995

 9.4.1995 நாகை காயிதே மில்லத் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நன்னிலத்தில் ஜாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. நன்னிலம் சுந்தரராசு_வேதாம்பாள் நினைவுக் கொடிக் கம்பத்தில் கழகக் கொடியை ஏற்றிவைத்து மாநாட்டை துவக்கி வைத்தேன். பேருந்து நிலையம் அருகில் கழகத்தின் சார்பில் ஜாதி ஒழிப்பு போராட்ட வீரர்களின் நினைவாக மிகச் சிறப்பாக அமைக்கப்பட்ட மணிக்கூண்டைத் திறந்து வைத்தேன்.

அ.சுந்தரராசன் நினைவுக் கல்வெட்டு அருகில் அமைக்கப்பட்ட அவரது துணைவியார் சு.வேதாம்பாள் நினைவுக் கல்வெட்டையும் திறந்துவைத்தேன்.
பெரியார் பெருந்தொண்டர் நினைவரங்கத்தில் இருந்து மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடத்தப்பட்டது. வீதி நாடகம், பெரியார் பெருந்தொண்டர்களின் இயக்கப் பணிகளைப் பாராட்டி அவர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து சிறப்பித்தேன். ஜாதி ஒழிப்பு வீரர்களுக்குப் பாராட்டுப் பத்திரத்தை வழங்கி அவர்களை சிறப்பித்தோம். மேடையில் கழகத் தோழர்களின் குழந்தைகளுக்கு அஞ்சாநெஞ்சன், அன்புநெஞ்சன், மணியம்மை என பெயர் சூட்டினேன். தீர்மான அரங்கம் நடத்தப்பட்டு ஜாதி முறையை ஒழிக்கப் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அடிமைச் சின்னமாம் தாலி அகற்றல் நிகழ்வில் பங்கேற்ற பெண்களைப் பாராட்டி அவர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து சிறப்பித்தோம். மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் விதவைகளுக்குப் பூச்சூட்டும் நிகழ்வும் நடைபெற்றது.

மாநாட்டில் திருவாரூர் வீரய்யன்_ராஜம்மாள் ஆகியோரின் மகள் கமலத்திற்கும், திருவாரூர் தங்கராசு_ராஜாத்தி ஆகியோரின் மகன் கரிகாலனுக்கும், லால்குடி தியாகராசன்_ நாகம்மாள் ஆகியோரின் மகள் ரேணுகாவுக்கும், நெய்க்குப்பை கோபால்_ஜெயம் ஆகியோரின் மகன் இளங்கோவனுக்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியைக் கூறச் செய்து இரண்டு சுயமரியாதைத் திருமணங்களையும நடத்தி வைத்தேன்.
சோழங்கநல்லூர் அந்தோணிசாமி நினைவரங்கத்தில் நடைபெற்ற இம்மாநாட்டை ஒட்டி நகரம் முழுவதும் சிறப்பான மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டும், பதாகைகள் வைக்கப்பட்டும் கழகப் பொறுப்பாளர்களால் மிகச் சிறப்பாக மாநாடு நடத்தப்பட்டது பாராட்டுக்குரியதாகும்.

-கி.வீரமணி

அய்யாவின் அடிச்சுவட்டில் (258)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக