வீழ்ந்திடும் த்பாசிச குடியுரிமைத் திருத்த மசோதா
தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழர் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு
சென்னை, டிச.23 மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை எதிர்த்து இன்று சென்னையில் நடத்தியது வெறும் பேரணியல்ல, மக்கள் கடலின் மாபெரும் அணிவகுப்பு!
மத்திய பா.ஜ.க. பாசிச அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து இன்று (23.12.2019) காலை சென்னையில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது.
அண்மையில் நாடாளுமன்றத்தில் எந்தவிதமான ஆழ்ந்த பரிசீலனை, பார்லிமெண்டரி செலக்ட் கமிட்டி போன்றவைகளின் பரிசீலனைக்கூட இல்லாமல், தடா லடியாக தங்களுக்குள்ள பெரும்பான்மை என்ற ஒரே பலத்தினைப் பயன்படுத்தி, அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்த கதையாக குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.
வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வலுப் பெற்றன. டில்லி, உத்தரபிரதேசம், கருநாடகா ஆகிய மாநிலங்களில் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உயிரிழப்பு களும் நிகழ்ந்தன.
தமிழகத்திலும் குடியுரிமை சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. எதிர்க்கட்சிகள் குடியுரிமை சட் டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த பேரணிக்கு அனுமதி கேட்டு தி.மு.க. சார்பில் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக் கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் பேரணிக்கு அனுமதி அளிக்கவில்லை.
இருப்பினும் தடையை மீறி திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் என்று தி.மு.க. சார்பில் தெரிவிக் கப்பட்டது. இதற்கிடையே பேரணிக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வாராகி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் தி.மு.க. பேர ணிக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. அதே நேரத்தில் அமைதியான முறையில் பேரணியை நடத்த வேண்டும் என்றும் வன்முறை ஏற்பட்டால் தலைவர்களே பொறுப்பு என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.
இதனை தொடர்ந்து தி.மு.க. பேரணி இன்று (23.12.2019) காலை திட்டமிட்டபடி நடைபெற்றது.
தாளமுத்து நடராசன்
மாளிகையிலிருந்து...
எழும்பூரில் உள்ள தாளமுத்துநடராசன் மாளிகை அருகில் இருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரையில் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக இன்று காலை 8 மணியில் இருந்தே தி.மு.க. தொண் டர்கள் தாளமுத்து நடராசன் மாளிகை அருகே குவியத் தொடங்கினார்கள்.
தோழமைக் கட்சிகளான திராவிடர் கழகம், ம.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க் சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், மனித நேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.அய்., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
பேரணியில் பங்கேற்க 98 அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபடி ஏராள அமைப்புகளை சேர்ந்த வர்களும், மாணவர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேரணியில் பங்கேற்பதற்காக 10.15 மணி அளவில் வந்தார். பின்னர் கூட்டணி கட்சி தலைவர்களை கைகுலுக்கி அவர் வரவேற்றார். இதையடுத்து முக.ஸ்டாலின் தலைமையில் உடனடியாக பேரணி தொடங்கியது.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, பீட்டர் அல்போன்ஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன்.
மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் செயலாளர் ராமகிருஷ்ணன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., எஸ்.டி.பி.அய். கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், அய்.ஜே.கே. கட்சி பொதுச்செயலாளர் சத்தியசீலன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஆகிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், எம்.பி.கள் கனிமொழி, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், கதிர்ஆனந்த், தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி, மற்றும் மு.க.தமிழரசு, நடிகர் அருள்நிதி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, பூங்கோதை, மாவட்ட செயலாளர்கள் சேகர்பாபு, ஜெ.அன்பழகன், மாதவரம் சுதர்சனம், தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பேரணியில் நடந்து சென்றனர்.
இம்மாபெரும் கண்டனப் பேரணியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் சென்னை மண்டலம், வடசென்னை, தென்சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள், செயலாளர்கள், கழகத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.
நாஞ்சில் சம்பத் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் பேரணியில் கலந்து கொண்டனர்.
பேரணியின் முன் வரிசையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 13 கட்சிகளின் தலைவர்களும் அணிவகுத்துச் சென்றனர்.
பேரணியில் பங்கேற்பவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. ஆகியோர் அவ்வப்போது அறிவிப்புகளை வழங்கிக் கொண்டே இருந்தனர்.
குடியுரிமை சட்ட நகலையோ, கொடும்பாவிகளையோ யாரும் எரிக்கக்கூடாது என்று கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டது.
தாளமுத்து நடராசன் மாளிகையில் இருந்து புறப் பட்ட பேரணி லேங்ஸ் கார்டன் ரோடு, புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியத்தை சென்றடைந்தது.
அங்கு தலைவர்கள் பேசுவதற்காக தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஏறிய தலைவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும் ஒலிமுழக்கங்களை எழுப்பினார்கள்.
அதசியம் - ஆனால், உண்மை!
கண்டனப் பேரணியில் அய்யப்பப் பக்தர்களும், காவி உடையுடன் பங்கேற்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து முழக்கமிட்டு வந்தனர்.
'படை பெருத்தது - பார் சிறுத்தது' குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து மக்கள் கடலின் எழுச்சிப் பேரணி (சென்னை, 23.12.2019)
- விடுதலை நாளேடு, 23.12.19