ஞாயிறு, 3 டிசம்பர், 2023

"விடுதலையின் பெருங்கனவு" பாடல் தொகுப்பு

  

தமிழர் தலைவர் பிறந்த நாளையொட்டி கழக இளைஞரணியால் உருவாக்கப்பட்ட "விடுதலையின் பெருங்கனவு" பாடல் தொகுப்பு : கனிமொழி எம்.பி. வெளியிட்டார்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்தநாள் மகிழ்வாக கழக  இளைஞரணியால்  உருவாக்கப்பட்ட பாடல் தொகுப்பு "விடுதலையின் பெருங்கனவு" முதல் பாடலை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் சி.அய்.டி. காலனியில் உள்ள தனது இல்லத்தில் வெளியிட்டார் (27.11.2023). பாடல் வரிகள் எழுதி யவர் மு. சண்முகப்பிரியன் (மாநில இளை ஞரணி துணைச் செயலாளர்) தென் சென்னை  இளைஞரணி செயலாளர் ந. மணி துரை, வடசென்னை இளைஞரணி தலைவர் நா. பார்த்திபன், தாம்பரம்  மாவட்ட இளை ஞரணி தலைவர் இர. சிவசாமி, மு. பவானி. த.மரகதமணி ஆகியோர் உடனிருந்தனர்.

சனி, 2 டிசம்பர், 2023

ஜாதி மறுப்பு இணையேற்பு வரவேற்பு விழா(பேரமனூர் நீ. தமிழன்பன்-எ.மோனிஷா)


9
செங்கல்பட்டு, டிச. 2- செங்கல்பட்டு மாவட் டம் பேரமனூர்  திராவிடர் கழக செயலாளர் கி.நீலகண்டன்-நீ.பவானி இணையரின் மகன் நீ. தமிழன்பன்,- திருவள்ளூர் மாவட்ட நீ.எல்லப்பன்,- எ.ஜக்கம்மாள் இணைய ரின் மகள் எ.மோனிஷா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு வரவேற்பு விழா 26.11.2023 ஞாயிறு மாலை 6.30 மணி சிங்கபெருமாள் கோயில் ஜிஎஸ்டி சாலை ஆதி லட்சுமி திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட கழக தலைவர் செங்கை சுந்தரம் தலைமையில், பேரமனூர் தலைவர் சு.விஜயராகவன் வரவேற்புரை ஆற்றினார், தென் சென்னை மாவட்ட தலைவர்  இரா.வில்வ நாதன், தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாவட்ட மேனாள் இளை ஞர் அணி தலைவர் ம.கருணாநிதி, செங்கல் பட்டு மாவட்ட ப.க தலைவர் அ.சிவகுமார், செங்கல்பட்டு மாவட்ட பக செயலாளர் சி.தீன தயாளன், மறைமலைநகர் தலைவர் திருக்குறள் வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

தலைமைக் கழக அமைப்பாளர் காஞ்சி பா.கதிரவன் சுயமரி யாதை திருமணம் ஏன் செய்ய வேண்டும். பார்ப் பனர்களை தவிர்க்க வேண் டும் என்பதை விளக்கி சிறப்புரையாற்றினார். திமுக 15ஆவது வார்டு செயலாளர் த.வினோத் குமார், பொதுக்குழு உறுப்பினர் அ‌.பா. கரு ணாகரன், பக மாவட்ட அமைப்பாளர் மு.பிச்சை முத்து, மறைமலைநகர செயலாளர் ப.முருகன், மறைமலைநகர் அமைப் பாளர் செ.முடியரசன், செ.மு.அறிவு தென் சென்னை பா.குமாரி, வி. ஜாய்ஸ் மேரி, க.தாம ரைசெல்வி மதுராந்தகம் நகர செயலாளர் ஏ. செல் வம், இள. தனசேகரன், பெரியார் கொள்கை புத்தக பரப்புரையாளர் கூடுவாஞ்சேரி மா.இராசு, த. ஆனந்தன் மற்றும் இரு வீட்டு குடும்பத்தினர் நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மணமகன் நீ. தமிழன்பன் நன்றியுரை கூறினார். 

மணவிழாவிற்கு வருகை தந்திருந்த அனை வருக்கும் மரக் கன்றுகள் வழங்கி சிறப்பிக்கப்பட் டது.

சூளைமேடு சவுராட்டிரா நகர் கோ.பாலகிருஷ்ணன் (வயது 100) 3ஆம் ஆண்டு (2.12.2023) நினைவாக நன்கொடை

நன்கொடை

10

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியவர்களின் பற்றாளரும், இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான சூளைமேடு சவுராட்டிரா நகர், 9ஆவது தெரு கோ.பாலகிருஷ்ணன் (வயது 100) 3ஆம் ஆண்டு (2.12.2023) நினைவாக அவரின் மகன்கள் பா.துரை ராஜ், ஆடிட்டர் பா.இராஜேந்திரன் (ஓய்வு) ரூ.500, நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கியுள்ளனர். நினைவு கூரும் குடும்பத்தினர் மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன் - பேத்திகள்.

ஞாயிறு, 26 நவம்பர், 2023

நுங்கம்பாக்கம் நடராஜன் நினைவாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு (உணவு அளிக்க) ரூ.5000/- வழங்கினார்.


8

அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகத்தின் மேனாள் தலைவரும், நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக மேனாள் துணைத் தலைவருமான மா.நடராஜன் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (26.11.2023) அவரது துணைவியார் ந.பத்மாவதி அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம்  திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு (உணவு அளிக்க) ரூ.5000/-  வழங்கினார். உடன் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி.  (25.11.2023, பெரியார் திடல்) 

வெள்ளி, 24 நவம்பர், 2023

பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி படத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்து நினைவுரை


பார்வதி மறைந்தாலும் பல பார்வதிகளை உருவாக்கியே மறைந்துள்ளார்
க.பார்வதி பெயரில் ஓர் அமைப்பு ஏற்படுத்தப்படும்  
4

 சென்னை, நவ.24 - 
திராவிடர் கழக மகளிரணியின் தொடக்க காலத்திலிருந்து பொறுப்பாளராக பணியாற்றி கழக மகளிரணியின் மேனாள் மாநில செயலாளராக தொண்டாற்றியவரும், கழகக் காப்பாளருமாகிய க.பார்வதி (வயது 77)  கடந்த 8.11.2023 அன்றிரவு சென்னை தாழம்பூரிலுள்ள அவர் மகன் இல்லத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மறைவுற்றார். 

கழகத் தலைமையின் நம்பிக்கையைப் பெற்று பல்வேறு பொறுப்புகளை ஏற்று தொண்டாற்றியவர். கழகத்தில் மகளிர் தோழர்களை அரவணைத்து களப்பணிகளில் தீவிரமாக இறங்கிப் பணியாற்ற பெரிதும் ஊக்கமளித்ததுடன் தானும் அயராது பணியாற்றிய தொண்டறச் செம்மலாகத் திகழ்ந்தவர். அவர் மறைவைத் தொடர்ந்து அவரது விழிகள் சென்னை எழும்பூர் கண்மருத்துவமனை கண் வங்கிக்கு கொடையாக வழங்கப்பட்டது. சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அவரது உடல் கொடையாக அளிக்கப்பட்டது. முன்னதாக.  அவரது உடல் சென்னை பெரியார் திடலில் 9.11.2023 அன்று காலை வைக்கப்பட்டது.  அவரது உடலுக்கு கழகக்கொடி போர்த்தி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மோகனா அம்மையார், கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மரியாதை செலுத்தினர். கழகப்பொறுப்பாளர்கள், மகளிர் தோழர்கள் பெரியார் திடலில் திரண்டு அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

படத்திறப்பு

11
சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில் நேற்று (23.11.2023) மாலை  பெரியார் நூலக வாசகர் வட்டம், திராவிடர் கழகம் சார்பில் பெரியார் பெருந்தொண்டர் கழக மகளிரணியின் மேனாள் மாநில செயலாளர் கழகக் காப்பாளர் க.பார்வதி படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழர் தலைவர் நினைவுரை

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெரியார் பெருந்தொண்டர் கழக மகளிரணியின் மேனாள் மாநில செயலாளர் கழகக் காப்பாளர் க.பார்வதி அம்மையாரின் படத்தைத் திறந்து வைத்து நினைவுரை ஆற்றினார்.

தமிழர் தலைவர் உரையில் குறிப்பிட்டதாவது, பொதுவாக நம்முடைய நிகழ்ச்சிகளுக்கு வாருங்கள் என்பதுதான் வழக்கம். ஆனால், மறைவுற்ற பார்வதி அம்மையாரின்  உடல்நிலை கருதி கடைசி காலங்களில் அவரை வரவேண் டாம் என்று சொல்லும் நிலை இருந்தது. அப்படி அவர் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளையின் உறுப்பினர் என்ற முறையில் கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது ஏன் வருகிறீர்கள், ஓய்வாக இருங்கள் என்று கூறுவோம். புரட்சிக்கவிஞர் சொன்னதைப்போல் ‘கண்ணாடி பாத்திரத்தை கல்தரையில் வைத்தாற்போல்’ என்பது மாதிரி அவர் உடல்நிலை இருந்ததால் அப்படி கூறினோம். 

இயக்கத்தில் தொண்டராக, தோழராக, குடும்பப்பாசத் தோடு, குருதிக் குடும்பத்தைவிட கொள்கைக்குடும்பத்தோடு பாசத்தோடு இருப்பவர்.  இந்த இயக்கம் ஆடம்பரமில்லாத ஓர் இயக்கம். திண்ணையில் படுத்திருப்போம். குடும்ப விளக்கு-கூட்டுக் குடும்பம்- கொள்கைக்குடும்பமாக  உள்ளது இந்த இயக்கம்.

அன்னை மணியம்மையார் காலத்திலேயே கழகத்தில் மகளிரணியை உருவாக்கத்திட்டமிட்டிருந்த நிலையில், 1980 களில் மகளிரணியைத் தோற்றுவித்தபோது முதல் ஆளாக வந்தவர் அம்மையார் பார்வதி ஆவார்.

மாநாடுகளில் குடும்பம் குடும்பமாக சமமாக அமர்ந்து உண்பது பெரிய புரட்சி என்றால், அதைவிட பெண்களுக்கு தனி இடம் உண்டு என்று விளம்பரம் செய்யாத இயக்கம் இந்த இயக்கம். நாமெல்லாம் பிறக்காத காலத்திலேயே தந்தைபெரியரால் சுயமரியாதை இயக்கத்திலிருந்து இந்த புரட்சி தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த இயக்கம் கொள்கை நெறியுடன், சமத்துவத்தை பேசுகின்ற தீவிர கொள்கை கொண்டது.

இயக்கத்தில் சிறு மாசு கூட ஏற்படாத இயக்கம். கட்டுப்பாட்டுக்கும், அடிமைத்தனத்துக்கு வேறுபாடு உண்டு. கட்டுப்பாடு என்பது போக்குவரத்தில் சிக்னலை மதித்து கட்டுப்படுவது போன்றது. அந்தக் கட்டுப்பாட்டை மீறினால் ஆபத்து. இந்த இயக்கம் பகுத்தறிவு, மனித நேய இயக்கம், குறைசொல்ல முடியாத இயக்கம். 

உலகப்பார்வை என்றெல்லாம் பேசும் எவரும் நம் கிட்டேயே வரமுடியாது. வாழ்வதற்கான வழிகாட்டிக் கொள்கை நம் கொள்கை.

பிரச்சார எந்திரம் என்றால், அதில் மகளிரணி தனித் தன்மையானது. எண்ணிக்கை பெரிதல்ல, விஞ்ஞானிகள், டாக்டர்கள் குறைவாக இருப்பார்கள். ஆகவே எண்ணிக்கை பெரிதல்ல. மகளிரணி சார்பில் என்னுடைய பிறந்த நாள் மலர் வேலை என்று அப்பணியை கடைசி வரை செய்துள்ளார். 

விதவைக்கு பூச்சூட்டும் விழா என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் விழாவில் முதன்மையாராக இருந்தார். தாலி அகற்றும் நிகழ்விலும் அவர் செயல்பாடு தீவிரமானது. அனைவரையும் ஒன்றிணைத்து செயல்படுவார்.

பார்வதி அம்மையாரின் சமுதாயப்பணியைப் பாராட்டி நக்கீரன் சார்பில் சின்னக்குத்தூசி பெயரில் விருது அளிக்கப்பட்டபோது, அவ்விருதுக்கான பரிசுத் தொகையை ரூ 1லட்சத்தை அப்படியே இயக்கத்துக்கு அளிப்பதற்கு முன்வந்தார். அவர் ஒன்றும் மிகவும் வசதியான குடும்பத்தவர் இல்லை, என்றாலும் இயக்கத்துக்கு கொடுக்கவேண்டும் என்கிற அந்த எண்ணம் அவரிடம் இருந்தது. இயக்கத்தில் தொண்டாற்றிய பெருமக்களைப்போல் அவர் பெயரிலும் ஓர் அமைப்பு உருவாக்கப்படும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நினைவுரையில் குறிப்பிட்டார். 

கொள்கை வீரராக வாழ்ந்து மறைந்த அம்மையார் க.பார்வதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்விற்கு வருகை தந்த அனைவரையும் திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி  வரவேற்று உரையாற் றினார் . அவரது உரையில்:  பள்ளிக்காலம் தொட்டு அம்மை யார் பார்வதி அவர்களுக்கும் அவருக்கும் இடையே இருந்த தொடர்புகளை நினைவுப்படுத்தி, களப்பணியாற்ற தான்வந்த நேரத்தில் எவ்வாறெல்லாம் தன்னை வழிகாட்டி, இயக்க மகளிர் அனைவரையும் ஒருங்கிணைக்க கூடிய விதத்தை பயிற்றுவித்தார் என்பதை எடுத்துக் கூறினார்.

அம்மையார் க.பார்வதி அவர்கள் பற்றிய அறிமுகவுரையை பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர், மாநில வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர்  வழக்குரைஞர் வீரமர்த்தினி  வழங்கினார். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு அம்மையார்   சிறை சென்ற நிகழ்வுகளையும், தான் மட்டும் போராட்டக் களங்களுக்கு வராமல் மற்ற மகளிர் தோழர்களையும் அவர் பக்குவப்படுத்தி அழைத்து வந்த விதத்தினைக் கூறினார். திராவிடர் கழக பேச்சாளர்களாக இன்று இருக்கக்கூடிய பெண்களை எவ்வாறு தனது சொந்த பிள்ளைகள் போல் அரவணைத்து ஊர் ஊராக கொள்கை பிரச்சாரத்திற்கு அழைத்துச் சென்றார் என்பதை விவரித்தார். குறிப்பாக தன்னையும் தனது மகள்களையும் எவ்வாறு அழைத்துச் சென்று பாதுகாத்தார் என்பதை எடுத்துக் கூறினார். கொள்கை உறுதியோடு இறுதி நாட்கள் வரை பணியாற்றிய அம்மையார் அவர்கள், கொள்கை வேறு குடும்பம் வேறு என்று ஒருபோதும் நினைத்ததில்லை என்றார்.

அய்யா கருத்து இப்படித்தானே ; ஆசிரியர் அப்படித்தானே நம்மை வழிநடத்தினார்!

அனைவரும் கண்கலங்கும் வகையில் மிக உருக்கமான நினைவேந்தல் உரையை  டெய்சி மணியம்மை அவர்கள் வழங்கினார். தனது 12 வயதில் தந்தை பெரியாருடைய கொள்கைகளைப் பரப்புவதற்கு என் மகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அம்மையார் பார்வதி அவர்களிடம் தனது தந்தை தன்னை ஒப்படைத்தது தொடங்கி, பின் நாட்களில் மாநில மகளிர் பாசறை செயலாளர் ஆகின்ற வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் அம்மையார் பார்வதி அவர்கள் தன்னை எப்படி நெறிப்படுத்தினார் என்பதை பல்வேறு சம்பவங்களின் வாயிலாக எடுத்துக் கூறினார். அவரின் அணுகுமுறையால் சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை கழகக் குடும்ப உறுப்பினர்களை சொந்த குடும்பம் போல் பாவிக்கக் கூடிய வகையில் தன்னை பக்குவப்படுத்திய விதத்தை விவரித்தார். 

பேருந்துகளில் செல்லும்போது தாயுள்ளத்தோடு அம்மையார் பார்வதி அவர்கள் காட்டிய அக்கறையைத் , தங்கள் மீது காட்டிய அன்பினை உருக்கமாக பதிவு செய்தார். எது நடந்தாலும், எந்த சூழலிலும் கொள்கையை விட்டு தராதவராக எப்படி வாழ்ந்து மறைந்தார் என்பதையும், அவரைப் போலவே மற்ற மகளிரையும் உருவாக்க நினைத்து அப்படி ஒருவராக தன்னை உயர்த்தி காட்டினார் என்பதை உணர்வுபூர்வமாக எடுத்துக் கூறினார். 12 வயதில் திடலுக்கு அழைத்துவரப்பட்ட டெய்சி மணியம்மை பின் நாட்களில் மாநில மகளிர் பாசறை உருவானபோது அதன் மாநில செயலாளராக ஆசிரியரால் அறிவிக்கப்பட்ட நிலையில் அதுதான் அம்மையார் பார்வதி அவர்களுக்கு தான் செலுத்தும் நன்றியாக அமைந்தது என்றார். எந்த செயலாக இருந்தாலும், எந்த சூழலாக இருந்தாலும் மனம் துஞ்சாது அய்யா கருத்து இப்படித்தானே ; ஆசிரியர் அப்படித்தானே நம்மை வழிநடத்தினார் என்ற வார்த்தையை அவர் கூற தவறியது இல்லை என்றார். அவரை நினைக்கும் போதெல்லாம் "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல தம்மை இகழ்வார் பொறுத்தல் தலை" என்ற குறள் தான் எப்போதும் நினைவுக்கு வரும் என்று கூறி நிறைவு செய்தார்.

பல தாய்களின் மடிகளை எங்களுக்கு கொடுத்த இயக்கம்!

இந்த இயக்கம் எப்படிப்பட்டது என்பதை தனது உரையின் ஒவ்வொரு வார்த்தையிலும் திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி அவர்கள் நினைவேந்தல் உரையாக வழங்கினார். அவரது உரையில்:  அமைதியாக வாழ்ந்து கொள்கை பிடிப்போடு மறைந்த அம்மையார் பார்வதி அவர்களுடைய மறைவு நமக்கெல்லாம் வெறுமையாகவும் அழுத்தமாகவும் இருக்கிறது என்றார். எப் படியெல்லாம் தங்களைப் போன்ற பெண்களை கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்கள் என்பதை தனி புத்தகமாகவே எழுத முடியும் என்றார். திராவிடர் இயக்கத்திற்கென்று நிறையத் தனித்தன்மைகள் இருக்கிறது. குறிப்பாக தன்னைப்போல் யாரும் வந்து விடக்கூடாது என்று போட்டியாக அரசியலில் நினைக்கும் சமூகத்தில் திராவிடர் கழகத்தின் உண்மையான பற்றாளர்கள் நம்மை போல் இன்னும் இரண்டு பேர் உருவாக வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த உணர்வை அம்மையார் பார்வதி அவர்களிடம் காண முடிந்தது என்றார். 

ஒவ்வொரு குழந்தைகளையும் ஆசிரியர் இடத்திலும் கழக முன்னோடிகள் இடத்திலும் தங்களது பெற்றோர்கள் ஒப் படைத்தார்கள். அப்படி, தன்னை அம்மா பார்வதி அவர் களிடத்தில் ஒப்படைத்த போதும் சரி, ஆசிரியரிடம் ஒப் படைத்த போதும் அவர்கள் எல்லாம் எப்படி அரவணைத்து அழைத்துச் சென்றார்கள் என்பதை பல்வேறு நிகழ்ச்சிகளோடு ஒப்பிட்டு கூறினார். இயக்கக் குடும்பங்கள் தான் இயக்கத்தின் வலிமையாக இருந்தது. அந்த இயக்கத்தின் வலிமையாக பல தாய்களின் மடிகளை எங்களுக்கு கொடுத்தது இந்த இயக்கம் தான் என்று உணர்வுபூர்வமாக பதிவு செய்தார். எல்லா சங்கடங்களையும் தாங்கிக்கொண்ட அம்மா பார்வதி அவர்கள் தனக்கு பின்னால் வரக்கூடியவர்களுக்கும் பொது வாழ்க் கைக்கு வந்த பிறகு தன்மானம் பார்க்கக் கூடாது என்ற அறிவுரையை கூறுவார் என்றார். 

மகளிர் அணியை வலுப்படுத்த ஊர் ஊராக அவர்கள் சென்ற விதத்தையும், ஒவ்வொரு கழக குடும்பப் பெண் களையும் கூட்டத்திற்கு அழைத்து வந்த பாங்கையும் விவரித்தார். இரண்டு முக்கிய நிகழ்வுகள் கழகத்தில் நடந்தது ஒன்று விதவைகளுக்கு பூச்சூட்டும் நிகழ்வு ; மற்றொன்று தாலி அகற்றும் நிகழ்வு. இந்த இரு பெரும் நிகழ்வுகளும் அனைவரும் எதிர்பார்க்காத வண்ணம் நடைபெற்றது. அதனை முன் நின்று நடத்தியவர் அம்மா பார்வதி அவர்கள் என்றார். இயக்கம், குடும்பம் இரண்டையும் அம்மா பார்வதி அவர்களின் இணையர் கணேசன் அவர்கள் வேறாக பார்த்தது கிடையாது. அவர் மறைந்த பிறகு நான்கு பிள்ளைகளோடு ஏன் இயக்கத்திற்கு வர வேண்டும் என்று அவர் விலகி இருக்கலாம். ஆனால், அப்படி செய்யாமல் குடும்பத்தையும் செவ்வனே பார்த்துக்கொண்டு களப்பணியில் சிறப்பாக செயல்பட்டவர் அவர் என்றார். உடல் நலம் பாதிக்கப்பட்டு முதல் முறையாக  அம்மா பார்வதி அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிகழ்வினை கூறி, அதற்குப் பிறகு 30 ஆண்டுகள் செயல்பட்டு வந்திருக்கிறார் என்றால் எவ்வளவு பெரிய உறுதியோடு இருந்திருப்பார் என்றார். அம்மையார் பார்வதி அவர்களுக்கு இருந்த உள்ள உறுதி குறிப்பாக பகுத்தறிவா ளர்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்றார்.

தனித்தன்மை மிக்க திராவிடர் கழக மகளிர் அணி!

பெரியார் கொள்கை வழியில், ஆசிரியரின் தலைமையில் தடம் மாறாது பயணித்த அம்மையாரின் சிறப்பினை மட்டுமின்றி ஒவ்வொரு கழகத் தோழரும் எப்படி இருக்க வேண்டும் என்ற அறிவுரையாக கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் அவர்களின் நினைவேந்தல் உரை அமைந்தது. அவரது உரையில்: இது ஒரு உருக்கமான நிகழ்ச்சி என்றும், புதுவண்ணையில் முதல் முறையாக அம்மையார் பார்வதி அவர்கள் மேடையில் உரையாற்றிய காட்சி தனக்கு கண் முன்னால் வருகிறது என்றார். குடும்பத்திற்கும் இயக்கப் பணிக்கும் அவர் வருவதற்கு ஆணிவேராக அமைந்தது அவரது வாழ்விணையர் கணேசன் என்றார். 

அம்மையார் பார்வதி அவர்களின் கொள்கை உறுதிக்கு ஒரு சான்று இரண்டு மகன்களையும் கழகக் குடும்ப பெண்களுக்கு தான் திருமணம் என்ற ஏற்பாட்டினை செய்து வைத்தார். காரணம் கழகம் தான் அவரது குடும்பம் என்றார். குடும்பச் சுமையையும், ஏற்றுக்கொண்டு இயக்கப் பணியையும் செய்வதென்பது சாதாரண காரியம் அல்ல.  அவர் அப்படி செய்த அந்த செயல்களை அனைவரும் இன்றைக்கு தெரிந்துக் கொள்ள வேண்டும். இயக்கத்தையும் குடும்பத்தையும் சரியாக வழி நடத்துவதில் அம்மையார் பார்வதி அவர்கள் அனைவருக்கும் முன்னோடி, வழிகாட்டி என்றார். திராவிடர் கழக மகளிர் அணி சிறப்பாக செயல்படுவதற்கு அடித்தளமிட்டவர்கள் அம்மையார் பார்வதி, திருமகள் இறையன், ஏ.பி.ஜே மனோரஞ்சிதம், தங்கமணி போன்றவர்கள். 

ஒவ்வொருவரும் நம்முடைய கொள்கையை நினைத்து தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். எந்தவித ஆசாபாசங்களு மின்றி, எதையும் எதிர்பார்க்காமல், அனைத்தையும் துறந்து துறவிக்கு மேலானவர்களாக கருஞ்சட்டை தொண்டர்கள் வாழ்ந்தார்கள். கழக மகளிர் அணியைப் பார்த்து இனமான பேராசிரியர் அன்பழகன் அவர்கள் "தனித்தன்மை மிக்க திராவிடர் கழக மகளிர் அணி தோழர்களே" என்று குறிப்பிட்டதை நினைவுப்படுத்தினார். எவ்வளவு ஆழமான வார்த்தைகள்! அவை நமது மகளிர் அணியின் செறிவான, நுட்பமான, தனித்தன்மை வாய்ந்த செயல்பாடுகளால் தான் அவரால் அப்படி கூற முடிந்தது என்றார். 

ஆண்களே சமாளிப்பதற்கு, கடினமான சூழல்தான் இந்த கருஞ்சட்டையைப் போட்டுக் கொண்டு பயணிப்பது. அதே கருஞ்சட்டையை அணிந்துப் பெண்கள் வந்தார்கள் என்றால் அது சாதாரணமானதல்ல. திருச்சியில் இருந்து இந்தி எதிர்ப்பு கருஞ்சட்டை படை வந்தபோது வந்த நூறு ஆண்களோடு ஒரே ஒரு பெண்தான் இருந்தார். அவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். இந்த வரலாறு வேறு இயக்கத்திற்கு இருக்குமா? என்றார்.:பெரியார் காலத்திலும், ஆசிரியர் காலத்திலும் ஏதாவது ஒரு கறை படிந்து சொல்லை இந்த இயக்கத்தைப் பார்த்து யாரேனும் சொல்ல முடியுமா? என்று அனைவரின் கர ஒலிக்கு மத்தியில் பதிவு செய்தார். 

நம் கொள்கையில் ஓட்டை விழுந்தால் கூட பரவாயில்லை. ஆனால் நாணயத்தில், ஒழுக்கத்தில் தவறு இருக்கக்கூடாது!

பெரியாரியம் என்பது வாழ்க்கை நெறிமுறை ; பெரியார் என்பது வளர்ச்சிக்கான தடம் என்பதை அனைவரும் மற்றவர்களுக்கு காட்டும்படி வாழ்க்கையை வாழ வேண்டும். அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர் அம்மையார் பார்வதி என்றார். சட்டை எரிப்புப் போராட்டம், இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று அனைத்துப் போராட்டங்களிலும், கழக மகளிர் , கழக கருஞ்சட்டைத் தோழர்கள் எப்படி பங்கெடுத்தார்கள் என்பதை வரலாற்று குறிப்புகளோடு விவரித்தார். இறுதியாக 1964 இல் மன்னார்குடியில் நடைபெற்ற கலந்துரையாடலில் தந்தை பெரியார் கூறிய செய்தியை அனைவரும் தங்கள் வீட்டில் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். அதிலும் குறிப்பாக "நம் கொள்கையில் ஓட்டை விழுந்தால் கூட பரவாயில்லை. ஆனால் நாணயத்தில், ஒழுக்கத்தில் தவறு இருக்கக்கூடாது" என்ற செய்தியைக் கூறி, இதுதான் ஒரு கழகத்தின் முக்கிய பலம் என்றார்.  பெரியார் சொன்னதை நினைவுப்படுத்தி, இயக்கம் வளர்ந்து கொண்டே இருக்கிறது . நமக்கு கிடைத்த தலைவர்கள் போல் வேறு எந்த இயக்கத்திற்கும் கிடைத்ததில்லை. மறைந்த பிறகும் தனது உடலை கொடையாக கொடுத்தவர் அம்மையார் பார்வதி அவர்கள்; மறைந்தும் வாழ்கிறார். மறைகின்ற வரை எந்தக் கொள்கை உணர்ச்சியோடு அவர் வாழ்ந்தாரோ அதே கொள்கையை அவருக்கு பின்னால் அவரது குடும்ப உறுப்பினர்கள் எடுத்து செல்வதுதான் அவருக்கு காட்டக்கூடிய நன்றியாக அமையும் என்றார்.

அம்மையார் பார்வதி வாழ்கிறார்; வாழ்ந்து கொண்டு இருக்கிறார்!

இறுதியில் நிகழ்வேந்தல் உரையும், கழகத் தோழர்களுக்கு வழிகாட்டுதல் உரையும் தமிழர் தலைவர் ஆசிரியர் வழங்கினார்.  அம்மையார் பார்வதி வாழ்கிறார்; வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஒரு பார்வதி மறைந்தாலும் பல பார்வதிகளை உருவாக்கி இருக்கிறார். அவரது இழப்பு சாதாரணமான இழப்பு அல்ல. அனைவரும் ஆறுதல் பெற வேண்டும் என்பதற்காக நிகழ்வு நடைபெறுகிறது. சில பேர் களத்திற்கு வராவிட்டாலும் அவர்கள் இருப்பதே நமக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அமையும். அப்படி அமைந்தவர் அம்மையார் பார்வதி என்றும், கடைசியாக தான் பார்த்தது அவரை இந்த அரங்கில் தான் என்று அம்மையார் பார்வதி அவர்களின் சிறப்புகளை எடுத்துக் கூறி, ஒவ்வொரு கழக மகளிரும் எப்படி இருக்க வேண்டும் ; ஒவ்வொரு கருஞ்சட்டைத் தோழரும் எந்த அளவு உறுதியோடு நடைபோட வேண்டும் என்பதை பல்வேறு செய்திகளோடு, வரலாற்று குறிப்புகளோடு ஆசிரியர் பதிவு செய்தார். நம் மகளிர் அணி தனித்தன்மையானது. 

என்றென்றைக்கும் எடுத்துக்காட்டாக அம்மையார் பார்வதி இருப்பார்கள். திடலில் அவரது பெயரில் ஏதேனும் ஒரு இடம் அமையும் என்று ஆசிரியர் தனது நினைவேந்தல் உரையில் குறிப்பிட்டார். தந்தை பெரியாருக்கு பிறகு கழகத்தை வழிநடத்தி, ஒவ்வொரு குடும்பங்களின் தலைவராக ஆசிரியர் எந்த அளவிற்கு நம்மை பக்குவப்படுத்துகிறார் என்ற வியப்பிலும் நன்றி பெருக்கோடும் அனைவரும் அமர்ந்திருந்தனர். 

நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் அம்மையார் பார்வதி அவர்களின் மூத்த மகன் மணிமாறன் நன்றி கூறினார். தனது தந்தையை மணந்த பிறகு அதுவரையில் பக்தியோடு இருந்த தனது தாயார் பார்வதி அவர்கள் எப்படி பகுத்தறிவுவாதியாக மாறினார் என்பதை எடுத்துக் கூறி, பெரியார் பணியே எம் பணி என்று வாழ்ந்தவர் தனது தாயார் என்றும், அவர் தொண்டு செய்வதற்கு அய்யா ஆசிரியர் அவர்கள் வாய்ப்பு கொடுத்ததற்கும் நன்றி கூறினார்.

பங்கேற்றவர்கள்

கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மோகனா வீரமணி, பிரச்சாரச்செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி,துணைப்பொதுச்செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, பெரியார் நூலக வாசர் வட்டத் தலைவர் கழக வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, டெய்சி மணியம்மை, சி.வெற்றி செல்வி, தஞ்சை கலைச்செல்வி, பெரியார்செல்வி, மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், குடியாத்தம் தேன்மொழி, தங்க.தனலட்சுமி, மகளிரணி இறைவி, உத்ரா, பண்பொளி, மாட்சி, பூவை செல்வி, வி.வளர்மதி, உமா செல்வராஜ், மு.பவானி, த.மரகதமணி,மோகனப்ரியா, முகப்பேர் செல்வி, சுமதி, வெண்ணிலா உள்ளிட்ட மகளிர் தோழர்கள் ஏராளமானவர்கள் நெகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.

தலைமைக்கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால்,வழக்குரைஞர் சி.அமர்சிங், புலவர் பா.வீரமணி,  பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன், பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், மாவட்டத் தலைவர்கள் தாம்பரம் ப.முத்தையன், தென்சென்னை இரா.வில்வநாதன், ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், வடசென்னை மாவட்ட செயலாளர் சு.அன்புசெல்வன், கோ.வீ.ராகவன், பெரியார்மாணாக்கன், உடுமலை வடிவேல், முகப்பேர் முரளி, செல்வராசு, கொடுங்கையூர் கோ.தங்கமணி, செங்கை சுந்தரம், சி.காமராஜ் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள்,  பெரியார் நூலக வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

மறைந்த பார்வதி அவர்களின் மகன்கள் க.மணிமாறன்-இந்திராதேவி, க.செல்வமணி-அறிவுச்சுடர், மகள் க.மேகலா, கவுதமன், மருமகன் சின்னதுரை மற்றும் பேரப்பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

12

பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி,அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவர்களின் பெயர்த்தி ம.அனிச்சம், பல் மருத்துவர், சிறு கவிதை ஒன்று  வாசித்தார்

பார்வதி அம்மையாரின் பேத்தி 
எழுதிய கவிதை
பார்வதி அம்மையாரே
உம் கவிதையை நீரே இயற்றினீரே
8.3.1946இல்
இவ்வுலகில் முதன் முறையாக உம் பாதம் பதித்தீரே
உமக்கென நான்கு செல்வங்களுடன்
ஒரு சமுதாயம் உருவாக்கினீரே
திராவிடர் கழக தமிழர் சங்கத்தில்
உம் பெயர் பதித்தீரே
8.11.2023இல்
உம் கல்லறையில் பெரியார் பெருந்தொண்டர்
வீரத் தமிழச்சி என்ற பெயரை நீரே பொறித்தீரே
வாழ்க நீ பாட்டி - பேரப் பிள்ளைகள்
பின் தொடர்வோம்!
பெரியார் பெருந்தொண்டர்
க. பார்வதி அவர்களின் பெயர்த்தி
ம.அனிச்சம், பல் மருத்துவர்
நேற்று (23.11.2023) நடைபெற்ற சுயமரியாதைச் சுடரொளி க.பார்வதி நினைவேந்தல் நிகழ்ச்சியில்..
ம.அனிச்சம், பல் மருத்துவர் தனது பிறந்த நாள் (22.11.2023) மகிழ்வாக 'விடுதலை' சந்தா ரூ.3000த்தை  கழகத் துணைத் தலைவரிடம் வழங்கினார்.

புதன், 22 நவம்பர், 2023

ஒப்பற்ற கொள்கை மாவீரர் தோழர் என்.சங்கரய்யா மறைவு கழகத் தலைவர் இறுதி மரியாதை




1
தோழர் சங்கரய்யாவின் உடலுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் சி.பி.எம். மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. இராமகிருஷ்ணன் மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள். (16.11.2023)

சென்னை, நவ.16 ஒப்பற்ற கொள்கை மாவீரர் தோழர் என்.சங்கரய்யா உடலுக்குத் தமிழர் தலைவர் மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசு அளித்த முதல் ‘தகைசால் தமிழர்’ என்ற சிறப்பு விருதினைப் பெற்றவரும், எளிமையும், தியாகமும், கொள்கை உறுதியும்   பல தனிச் சிறப்பு அம்சங்களெனக் கொண்டவருமான 102 வயது வாழ்ந்த தோழர் என்.சங்கரய்யா அவர்கள் நேற்று (15.11.2023) மறைவுற்றார்.

அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக சென்னை தியாகராயர் நகர் வைத்தியராமன் சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இன்று (16.11.2023) காலை 9.30 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் 

கி.வீரமணி அவர்கள், மறைவுற்ற தோழர் என்.சங்கரய்யா உடலுக்கு மலர்மாலை வைத்து, மரியாதை செலுத்தி வீர வணக்கம் செலுத்தினார்.

இந்நிகழ்வின்போது திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொரு ளாளர் வீ.குமரேசன், தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால், மாநில ப.க. தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்த சாரதி, துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், அமைப்பாளர் மு.ந.மதிய ழகன், பி.டி.சி.இராசேந்திரன், வடசென்னை மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், அமைப்பாளர் சி.பாசுகர், மாவட்ட இளைஞரணி தலைவர் நா.பார்த்திபன், சைதை தென்றல், க.கலைமணி, பெரம்பூர் கழகத் தலைவர் பா.கோபால கிருஷ்ணன், பெரியார் யுவராஜ், நரேஷ் மற்றும் தோழர்கள் வந்திருந்து இறுதி மரியாதை செலுத்தினர். 

"போராட்ட வீரர் தியாகச் செம்மல் செஞ்சட்டை சங்கரய்யாவுக்கு வீர வணக்கம்" என்று கழகத் தோழர்கள் முழக்கத்துடன் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தோழர் சங்கரய்யா உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, சி.பி.எம். கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் மாநிலக் கட்சிப் பொறுப் பாளர்களுடன் தற்போதைய சமூக அரசியல், பொருளாதார பிரச்சினைகள் குறித்தும் அவர்களின் உரையாடலில் முக்கிய இடம் பெற்றன. தந்தை பெரியாரின் சமூகப் புரட்சி சிந்தனைகள், மக்கள் மத்தியில் அவர் பிரச்சாரத்தால், போராட்டங்களால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் சி.பி.எம். தேசிய பொதுச் செயலாளர் பெருமையுடன் குறிப்பிட்டார். 

23

மறைந்த தோழர் சங்கரய்யாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பல்வேறு கட்சிகளின் முன்னணியினர் கலந்துரையாடினர். மேனாள் எம்.பி. டி.கே. ரங்கராஜன், சி.பி.எம். மகளிரணி பொறுப்பாளர் உ. வாசுகி, சிபிஎம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளர் சம்பத், 'செம்மலர்' ஆசிரியர் எஸ்.ஏ. பெருமாள், சி.பி.எம்.  தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, சி. மகேந்திரன் (சி.பி.அய்.), திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் ஆகியோர் உள்ளனர்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தோழர் என்.சங்கரய்யா உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியவுடன், அங்கிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மேனாள் செயலாளர் பிரகாஷ் கரத், தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், மேனாள் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தொழிற்சங்கத் தலைவர் சவுந்தரராஜன், செம்மலர் ஆசிரியர்  எஸ்.ஏ.பெருமாள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் சம்பத், 'தீக்கதிர்' ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், பத்திரிக்கை யாளர் மயிலை பாலு ஆகியோரிடம் கழகத் தலைவர் ஆறுதல் தெரிவித்தார்.

முன்னதாக மறைவு  செய்தி அறிந்ததும் நேற்று (15.11.2023) தோழர் என். சங்கரய்யா அவர்களின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, தி.மு.க. துணை பொதுச் செய லாளர் ஆ. இராசா,  மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மாநில செயலாளர் இரா. முத்தரசன், இந்திய யூனியன் முசுலிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் பல்வேறு கட்சி, இயக்கங்கள் சார்பில் தோழர் என்.சங்கரய்யா உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

சனி, 18 நவம்பர், 2023

சங்கரய்யா அவர்கள் காண விரும்பிய ஜாதியற்ற, வர்க்க பேதமற்ற ஒரு புரட்சிகரமான புதியதோர் சமுதாயம் அமைப்போம்!


உலகெலாம் பொதுவுடைமை திக்கெட்டும் பரப்புவதற்காக வாழ்ந்தாரே, அதனைத் தொடருவதுதான் சங்கரய்யாவிற்கு நாம் காட்டுகின்ற மரியாதை!

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா மறைவிற்கு இரங்கல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவேந்தல் - இரங்கலுரை

2

சென்னை, நவ.17  சங்கரய்யா அவர்கள் காண விரும் பிய ஜாதியற்ற, வர்க்கபேதமற்ற ஒரு புரட்சிகர மான புதியதோர் சமுதாயம் அமைப்போம்! கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்! உலகெலாம் பொதுவுடைமை திக்கெட்டும் பரப்புவோம் என்ற எண்ணத்தைப் பரப்புவதற்காக வாழ்ந்தாரே, அதனைத் தொடருவோம்! தொடருவதுதான் சங்கரய்யாவிற்கு நாம் காட்டுகின்ற மரியாதை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (16.11.2023) முற்பகல் மறைந்த மூத்த கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர் சங்கரய்யாவின் இறுதி நிகழ்வின்போது நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இரங்கலுரையாற்றினார்.

அவரது இரங்கலுரை  வருமாறு:

தொண்டறத்தினுடைய எடுத்துக்காட்டாக, தூய தொண்டறம் என்பதற்கு இலக்கணமாக 102 ஆண்டுகள் வாழ்ந்து - பிறந்த பொழுது அவர் அனைவரையும் போன்றே குழந்தையாக, பின்பு ஒரு சாதாரண மனித ராக எளிமையோடு இருந்தார்.

அகில இந்தியாவும் இங்கே வந்திருக்கிறது;  கோடானு கோடி மக்கள் மரியாதை செலுத்துகிறார்கள்!

அவர்கள் இன்றைக்கு இறுதி மரியாதையைப் பெறுகின்ற நேரத்தில், அகில இந்தியாவும் இங்கே வந்திருக்கிறது.  கோடானு கோடி மக்கள் மரியாதை செலுத்துகிறார்கள்.  

அவருக்கு வீர வணக்கம் செலுத்துகின்ற இந்நிகழ்ச் சிக்குத் தலைமையேற்று இருக்கின்ற அருமைச் சகோதரர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்களே,

இவ்வியக்கத்தில் அவரோடு போராட்டக் களத்தில் நின்றவரும், அகில இந்திய பொதுச்செயலாளருமான காம்ரேட் சீதாராம் யெச்சூரி அவர்களே,

அகில இந்திய அளவிலிருந்து இங்கு வந்திருக்க க்கூடிய தமிழர்களே,

தமிழ்நாட்டினுடைய அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பெருமக்களே,

நம் கொள்கையில் நிறைந்த சங்கரய்யாவாகத்தான் அவரை இன்றைக்கு 

நாம் வழியனுப்புகின்றோம்!

மறைந்தசங்கரய்யாஎன்று நாம் அழைக்கவேண் டிய அவசியமில்லை. நம் கொள்கையில் நிறைந்த சங்கரய்யாவாகத்தான்அவரைஇன்றைக்குநாம் வழியனுப்புகின்றோம். கொள்கையில் நிறைந்த சங் கரய்யாவாக மட்டுமே அவரை நாம் வழியனுப்ப வில்லை. போராளிகளுடைய ரத்தத்தில் உறைந்த சங்கரய்யாவாக, லட்சியங்களில் உறைந்த சங்கரய்யா வாகத்தான்,  கொள்கைகளில் நிறைந்த சங்கரய்யாவாக, அவரை இன்றைக்கு நாம் வழியனுப்புகின்றோம்.

அவருடைய பொதுவாழ்க்கை, பெரியாருடைய கொள்கையிலிருந்து முகிழ்ந்தது. அவருடைய குடும்பம், 'குடிஅரசு' ஏட்டை வளர்த்து படித்தது. அந்தப் பச்சை அட்டை குடிஅரசுதான் தமிழ்நாட்டில் ஓர் அமைதிப் புரட்சியை, அறிவுப் புரட்சியை, ஆயுதம் ஏந்தாதப் புரட்சியை, ரத்தம் சிந்தாதப் புரட்சியை பெரியார் காலத்தில் உருவாக்கியபொழுது, அவருடைய குடும்பத்தில் மாணவராக இருந்த தோழர் சங்கரய்யா அவர்கள் அதன்பால் ஈர்க்கப்பட்டார்.

கொள்கையில் சமரசமற்ற ஒரு மாமனிதர்

அன்றைக்கு எந்தக் கொள்கையை அவர்கள் ஏற்று கடைப்பிடித்தார்களோ, அதன்படி ஜாதி இல்லை, மதம் இல்லை, கட்சி இல்லை - மனிதத் தன்மை உண்டு - அனைவருக்கும் அனைத்தும்' என்ற சமூகநீதி என்பது இருக்கிறதே - அதுதான் வெற்றி பெறவேண்டும் என்பதற்காகத்தான் அவருடைய இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில், கொள்கையில் சமரசமற்ற ஒரு மாமனிதராக இன்றைக்கும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். என்றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பார். எப்பொழுதும் நமக்குப் பாடமாக இருப்பார் - வெறும் படமாக இருக்கமாட்டார். பாடமாக இருக்கக்கூடிய அளவில், அவருடைய தொண்டறம் என்பது தலைசிறந்த ஒப்பற்ற தொண்டறமாக இருக்கும்.

பொது வாழ்க்கையில் தன்னலமறுப்பு!

பொதுவாழ்க்கையில் சிக்கனம்!

பொதுவாழ்க்கையில் எளிமை!

கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாதவர்

அவரது பொதுவாழ்க்கை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவேண்டிய ஒரு பாடம் - கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாதவர்.

அப்படி சமரசம் இல்லாத ஒரு மாமனிதரை, மக்கள் என்றைக்கும் தங்கள் நெஞ்சிலே ஏந்துவார்கள்.

''உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன்''

என்ற குறளின்படி உலகத்தார் உள்ளத்தெல்லாம் இன்றைக்கு வாழ்கிறார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அந்தப் பெருமை அவருக்கு என்றைக்கும் உண்டு.

சங்கரய்யா அவர்கள் 102 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். அதுவே நமக்குப் பெருமை, ஓர் ஆறுதல்.

இந்த நேரத்தில், எத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்தாலும், அவருடைய இழப்பு என்பது ஏற்க முடியாத ஒன்று என்று சொன்னாலும்கூட, ஒன்றை நினைத்து நாம் ஆறுதல் கொள்ளவேண்டும்.

சங்கரய்யா அவர்கள் 

ஒரு திறந்த பாடப் புத்தகம்!

இறுதி வரையில் அவர் ஒரு போராளியாக களமாடிய போராளி. 102 ஆண்டுகள், 108 ஆண்டுகள்கூட எத்தனையோ பேர் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், சமுதாயத்திற்கு, மக்களுக்கு, உலகத்திற்கு அவர்களால் என்ன லாபம் என்று கருதுகின்ற நேரத்தில், சங்கரய்யா அவர்கள் ஒரு திறந்த புத்தகம் - பாடப் புத்தகம்.

இனிமை - எளிமை - கொள்கை - உறுதி - சமரசமற்ற பொதுவாழ்க்கைக்கு அடையாளமாக அவர்கள் திகழ்ந்த காரணத்தினால்தான், இத்தனை லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்கள் அவருக்கு வீர வணக்கம் செலுத்துவதற்காக வந்திருக்கிறார்கள்.

நம்முடைய சகோதரர்கள் இங்கே சொன்னதைப்போல, சங்கரய்யா அவர்களுக்கு மிகப்பெரிய பெருமை என்னவென்றால், அரசு மரியாதையோடு அவருடைய இறுதி நிகழ்வு நடைபெற்றது.

பல நேரங்களில், அரசாங்கத்தை எதிர்த்துத்தான் போராடுகிறோம். அது எந்த அரசாங்கமாக இருந்தாலும், அவர் கொள்கைக்காகப் போராடக் கூடிய போராளியாக களத்தில் நின்றவர்.

எல்லோரும் தமிழ்நாடு அரசாங்கத்தைப் பாராட்டினார்கள், வாழ்த்தினார்கள்!

14

அப்படிப்பட்ட நேரத்தில், இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கும் அரசாங்கம் - நம்முடைய முதலமைச்சர்  'சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் அமைந்தவுடன், இங்கே நண்பர்கள் குறிப்பிட்டதைப்போல, 'தகைசால் தமிழர்' விருது என்ற ஒரு விருதை உருவாக்கி, முதல் விருது கொடுத்தது அவருக்குத்தான் என்ற பெருமை இருக்கிறதே - அதில் ஒருவர்கூட எந்தக் குறையும் சொல்லாமல், எல்லோரும் அரசாங்கத்தைப் பாராட்டினார்கள், வாழ்த்தினார்கள். 

இடைவெளி கிடையாது எங்களுக்கு - ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்ற இடைவெளி இல்லை.

வயதானவர் - இளைஞர் என்ற இடைவெளி இல்லை.

அதேபோல, கொள்கையில் இடைவெளி இல்லை. எல்லாவற்றிற்கும் நாங்கள் சமரசமாக இருப்போம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அவருடைய இல்லத்திற்கு முதலமைச்சர் அவர்கள் சென்றார்கள். இதுதான் பண்பாடு.

அவர் விட்ட பணி முடிப்போம்!

அவர் எந்தக் கொள்கைக்காக வாழ்ந்தாரோ, அந்தக் கொள்கையைப் பின்பற்றுவோம் - அவர் விட்ட பணி முடிப்போம்!

அவர் காண விரும்பிய ஜாதியற்ற, பேதமற்ற, வர்க்கமற்ற ஒரு புரட்சிகரமான புதியதோர் சமுதாயம் அமைப்போம்! கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!

உண்மையான வீர வணக்கம்!

உலகெலாம் பொதுவுடைமை திக்கெட்டும் பரப்புவோம் என்ற எண்ணத்தைப் பரப்புவதற்காக வாழ்ந்தாரே, அதனைத் தொடருவோம்! தொடருவதுதான் சங்கரய்யாவிற்கு நாம் காட்டுகின்ற மரியாதை!

உண்மையான வீர வணக்கம்!

வீர வணக்கம்! வீர வணக்கம்!! வீர வணக்கம்!!!

நன்றி!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இரங்கலுரையாற்றினார்.

வியாழன், 9 நவம்பர், 2023

திராவிடர் கழக மகளிரணியின் மேனாள் மாநிலச் செயலாளர் க. பார்வதி அவர்களுக்கு கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் இறுதி மரியாதை


உடல் அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது

1213

'சுயமரியாதை சுடரொளி' க. பார்வதி அம்மையாரின் உடலுக்கு கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் கழகக் கொடிப் போர்த்தி இறுதி மரியாதை செலுத்தினார். அம்மையாரின் குடும்பத்தாருக்கு தமிழர் தலைவர் ஆறுதலை தெரிவித்தார்.

சென்னை,நவ.9- திராவிடர் கழக மகளிரணியின் தொடக்க காலத்திலிருந்து பொறுப்பாளராக பணியாற்றி கழக மகளிரணியின் மேனாள் மாநில செயலாளராக தொண் டாற்றியவரும், கழகக் காப்பாளருமாகிய க.பார்வதி (வயது 77)  நேற்று (8.11.2023) இரவு சென்னை தாழம்பூரிலுள்ள அவர் மகன் இல்லத்தில் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு மறைவுற்றார். 

கழகத் தலைமையின் நம்பிக்கையைப் பெற்று பல்வேறு பொறுப்புகளை ஏற்று தொண்டாற்றியவர். கழகத்தில் மகளிர் தோழர்களை அரவணைத்து களப்பணிகளில் தீவிரமாக இறங்கிப் பணியாற்ற பெரிதும் ஊக்கமளித்ததுடன் தானும் அயராது பணியாற்றிய தொண்டறச் செம்மலாகத் திகழ்ந்தவர்.

விழிக்கொடை

சென்னை எழும்பூர் கண்மருத்துவமனை கண் வங்கிக்கு அவரது விழிகள் கொடையாக வழங்கப்பட்டன.

அவரது உடல் சென்னை பெரியார் திடலில் இன்று (9.11.2023) காலை வைக்கப்பட்டது.  அவரது உடலுக்கு கழகக்கொடி போர்த்தி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மோகனா அம்மையார், கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மரியாதை செலுத்தினர். 

கழகப்பொறுப்பாளர்கள், மகளிர் தோழர்கள் பெரியார் திடலில் திரண்டு அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

9
 கழக குடும்பத்தினர் கொள்கை வீராங்கனைக்கு இறுதி மரியாதை

இறுதி ஊர்வலம்10

மறைந்த க. பார்வதியம்மையாரின் உடல் அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது இறுதி ஊர்வலத்தில் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர் 

பகல் 12.45 மணிக்கு பார்வதி அம்மையார் உடல் மருத்துவ அவசர ஊர்தியில் ஏற்றப்பட்டன.

பெரியார் திடலிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு, பெரியார் ஈவெ.ரா.நெடுஞ்சாலையில் அன்னை மணியம்மையார் சிலைக்கு முன்பாக தமிழர் தலைவர் தலைமையில் மகளிரணி தோழர்கள் வீரவணக்கம் முழக்கமிட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

பார்வதி அம்மையாரது வேண்டுகோள்படி மாலைக்குப்பதிலாக உண்டியல் அமைக்கப்பட்டு, தோழர்கள் பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கினர்.

உடற்கொடை

சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அவர்து உடல் கொடையாக அளிக்கப்பட்டது.

மகன்கள் க.மணிமாறன்-இந்திராதேவி, க.செல்வமணி-அறிவுச்சுடர், மகள் க.மேகலா, கவுதமன், மருமகன் சின்னதுரை மற்றும் பேரப்பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆறுதலைத் தெரிவித்தார்.

திமுக மகளிரணி விஜயா தாயன்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கழகத் துணைப்பொதுச்செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, தலைமைக்கழக அமைப்பாளர் தே.செ.கோபால்,  இளைஞரணி மாநில துணை செயலாளர் சோ.சுரேஷ், மருத்துவர் மீனாம்பாள், சி.வெற்றிசெல்வி, டெய்சி மணியம்மை, பெரியார் செல்வி, பண்பொளி கண்ணப்பன், இறைவி, மாட்சி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன், பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், க.ஜெயகிருஷ்ணன், பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், மு.கலைவாணன், நீதிபதி பரஞ்சோதி, பேராசிரியர் டாக்டர் சாந்தா, நெய்வேலி ஞானசேகரன், பேராசிரியர் நம்.சீனுவாசன், கழகப்பொறுப்பாளர்கள் ஆர்.டி.வீரபத்திரன், தாம்பரம் ப.முத்தையன், வெ.மு.மோகன், தளபதி பாண்டியன், வெ.கார்வேந்தன், செ.ர.பார்த்தசாரதி,கோ.நாத்திகன், க.இளவரசன், தே.ஒளிவண்ணன் மற்றும் கழகப்பொறுப்பாளர்கள், மகளிர் தோழர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் பெண்ணுரிமை சிந்தனைகளையும் பகுத்தறிவு கொள்கைகளையும்  மகளிரணியின் மூலம் கொண்டு சென்ற சிறந்த கொள்கைப் போராளி !

மனிதநேயத்துடன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டு கொள்கை வீராங்கனை மரியாதைக்குரிய மானமிகு பார்வதி அம்மா பெரியார் மருந்தியல் கல்லூரி சார்பில் வீரவணக்கம்!

------++++++--------+++++------++++--------

 

திராவிடர் கழக மகளிரணி மேனாள் மாநில செயலாளர் மானமிகு க.பார்வதிக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!

15

திராவிடர் கழக மகளிரணியின் மேனாள் மாநிலச் செயலாளர் சகோதரி மானமிகு க.பார்வதி (வயது 77) அவர்கள் நேற்று இரவு  (8.11.2023) அவரது மகன் இல்லத்தில் மறைவுற்றார் என் பதை அறிவிக்கப் பெரிதும் வருந்துகிறோம்.

50 ஆண்டுகளுக்கு மேலாகக் கழக வீராங்கனையாக, கழகம் நடத்திய அத்தனைப் போராட் டங்களிலும் தவறாமல் பங்கேற் றவர் - சிறை ஏகியவர்!

தமிழ்நாடு முழுவதும் சக மகளிரணி பொறுப் பாளர்களுடன் சுற்றிச் சுற்றி வந்து கழக மகளிரணியை மாவட்டம் தோறும் அமைத்ததில் அவரின் பங்கு மகத்தானது!

அவரது வாழ்விணையர் கணேசன் (மறைவு) அவர்களுடன் இணைந்தும் ஓய்வில்லாமல் கழகப் பணியே தன் உயிர் மூச்சாகக் கொண்டு உழைத்த ஒப்பற்ற ஒரு சகோதரியை கழகம் இழந்து தவிக்கிறது!

தன் பிள்ளைகளுக்கெல்லாம் ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்திக் காட்டிய கொள்கை வீராங்கனை!

தனது மரணத்திற்குப் பின் விழிக்கொடை வழங்கப்பட்ட நிலையில் சென்னை பெரியார் திடலில் தன் உடலைக் கொண்டு சென்று, அங்கு சில மணி நேரம் வைத்து,   மருத்துவமனையில் தனது உடலையும்  கொடையாக ஒப்படைக்க  வேண்டும் என்றும், உடலுக்கு மாலை ஏதும் அணிவிக்காமல் உண்டியல் வைத்து, மாலைக் குப் பதில் பணம் போட்டு, அந்தத் தொகையைப் பெரியார் உலகத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் மரணத்திலும் தனது கொள்கை முத்திரையைப் பொறித்தவர்.

அவர் இழப்பு அவர்தம் குருதிக் குடும்பத் தினருக்கு மட்டுமல்ல; கழகக் கொள்கைக் குடும்பத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அவரின் அளப்பரிய கழகத் தொண்டுக்குக் கழகத்தின் சார்பில் வீர வணக்கம் செலுத் துகிறோம். அவர் மறைவால் துயருறும் குடும்பத் தினருக்கும்,  கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர், 
திராவிடர் கழகம்
சென்னை
9.11.2023  

திங்கள், 30 அக்டோபர், 2023

நூற்றாண்டு கடந்த எஸ்.என்.டி.பி. கொண்டாடிய வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா


*தொகுப்பு: வீ. குமரேசன்

13

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாக்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. மாநில அரசுகள், சமூக அமைப்புகள், மனித உரிமைக்கான நிறுவனங்கள் மற்றும் தனிநபர் எனப் பலராலும் வைக்கம் போராட்டத்தின் சிறப்புகள், அது மனித குலத்துக்கு அந்தப் போராட்டம் பெற்றுத் தந்த உரிமைகள், அடிப்படை உரிமையில் அடுத்த கட்ட நகர்விற்கு வழி நடத்திடும் போக்கு என பன்முகப்பட்டதை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லுகின்ற வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சியும்  தனிச் சிறப்பு வாய்ந்ததாக நடத்தப்படுகிறது. அந்த வகையில் அந்நாளில் வைக்கம் போராட்டத்திற்கு பல்வேறு வகையில் ஆக்கம் கூட்டிய அமைப்புகள் அதன் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் பங்கேற்று ஒருங்கிணைத்த வகையில் முக்கியமானது - சிறீ நாராயணகுரு தர்மபரிபாலனம்  (Sree Narayanaguru Dharma Paripalanam - SNDP)  ஆகும். அன்றைய மலையாளப் பகுதியில் சிறீநாராயண குரு அவர்களால் நிறுவப்பட்ட  எஸ்.என்.டி.பி. (SNDP) என சுருக்கமாக அழைக்கப்படும்,  அமைப்பின் சென்னை ஒன்றியத்தின் முன்னெடுப்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா வெகு சிறப்பாக நடந்தேறியது.

நூறாண்டு கடந்த எஸ்.என்.டி.பி. அமைப்பு கொண்டாடிய வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா சென்னையில் நேற்று (29.10.2023) மாலையில் நடைபெற்றது. சென்னை - சேத்துப்பட்டுப் பகுதியில் அமைந்துள்ள மலையாளி சங்க அரங்கில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நடைபெற்றது. பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார் பங்கேற்று வழி நடத்தி உரிமை பெற்றுத் தந்த வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவிற்கு பெரியாரின் கொள்கை வழித் தோன்றலும், பெரியார் உருவாக்கிய அமைப்பின் இன்றைய தலைவருமான தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள குலத் தொழில் திட்டத்தினை எதிர்த்து பிரச்சாரத்தினை மேற்கொண்டு 25.10.2023 முதல் தொடர் பயணத்தில் இருந்த தமிழர் தலைவர் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் பங்கேற்றிட இடையில் ஒரு நாள் பயணமாக சென்னைக்கு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தமிழர் தலைவர் சிறப்பு விருந்தினர்

தமிழர் தலைவர் தமது உரையில் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளை இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில்  எடுத்து வைத்தார். 'அன்றைய மலையாள' பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபட்ட சமூகப் புரட்சியாளர் சிறீ நாராயணகுரு, எஸ்.என்.டி.பி. அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த டாக்டர் பத்மநாபன் ('பல்ப்' என அன்போடு குறிப்பிடப்படுவார்) அன்றைய மன்னராட்சி சமஸ்தானத்தில் ஒரு பெரிய கல்விப் புரட்சியினை ஏற்படுத்தினார். இன்று கல்வியறிவில் முதன்மை மாநிலமாக கேரளா திகழு வதற்கு அந்நாளில் அத்தகைய பெரு மக்கள் பாடுபட்டதுதான் அடிப்படைக்  காரணம்.

* கல்வி மறுக்கப்பட்டு, லண்டன் மாநகர் சென்று அங்கு மருந்தியல் கல்வி பயின்று திரும்பிய டாக்டர் 'பல்ப்' அவர்கள் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பணிபுரிந்திட விண்ணப்பித்திருந்தார். சமஸ்தானத்தில் திவானாக இருந்த ராகவய்யா (பார்ப்பனர்) 'பல்ப்' அவர்களிடம் 'உங்களுக்கெல் லாம் சமஸ்தானத்தில் ஏன் பணிபுரிய விருப்பம்!" எனக் கூறி இரண்டு தென்னங்கன்றுகளை எடுத்துச் சென்று அதை வளர்த்து குலத் தொழிலை (மரத்திலிருந்து 'கள்' இறக்குவது) செய்து கொள்ளக் கூறினார். அதை ஏற்க மறுத்து மைசூர் சமஸ்தானத்திற்குச் சென்று தனது கல்விக்கேற்ற பணியைத் தொடர்ந்தார்.

14

கேரளாவில் அந்நாளில் நிகழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழையும் உரிமையை பெற்றுத் தருவதற்கு அடிப்படையாக அமைந்ததுதான் வைக்கம் போராட்டம். கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடந்து செல்வதற்கு உரிமை பெற்றுத் தந்தது வைக்கம் போராட்டம்.

வைக்கம் போராட்டத்தினைத் தொடங்கிய போரா ளிகள் - டி.கே. மாதவன், குரூர் நீலகண்ட நம்பூதிரி, கே.பி. கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் மற்றும் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். போராட்டம் தொடர்ந்து நடைபெறாமல் தோல்வி அடைந்து விடுமோ என்ற நிலையில் சிறையில் இருந்தவாறே அந்தத் தலைவர்கள் தந்தை  பெரியாருக்கு கடிதம் எழுதினார்கள். வைக்கத்திற்கு வந்து போராட்டத்தினை தொடர்ந்து நடத்திட வேண்டினர்.

உடல் நிலை சரியில்லாத நிலையிலும் உடனே கிளம்பி வைக்கம் வந்து போரட்டத்தினை ஒருங்கிணைக்கிறார். வைக்கத்தைச் சுற்றியுள்ள ஊர்களுக்கெல்லாம் பேராட்டத்தின் நோக்கத்தினை விளக்கி பிரச்சாரம் செய்கிறார். அதனை 'மக்கள் போராட்ட'மாக மாற்றியவர் தந்தை பெரியார்.

வைக்கம் போராட்டம் பற்றி அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் தந்தை பெரியாரும், சகோதரன் அய்யப்பனும் தொடர்ந்து போராட்ட நோக்கம் பற்றிய பிரச்சாரத்தினை மேற்கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மனித சமத்துவத்திற்கு சகோதரன் அய்யப்பன் நடத்திய 'மிஸ்ர போஜனம்' (சமமாக அமர்ந்து உணவருந்தல்) கேரள சமூக சீர்திருத்தத்தில் மிக முக்கியமானது.

இரண்டு முறை தந்தை பெரியார் கைது செய்யப்படுகிறார். தொடர்ந்து போராட்டத்தில் பெரியார் கலந்து கொள்ளக் கூடாது என சென்னை ராஜதானியில்  இருந்த பழைய வழக்கைத் தூசி தட்டி எடுத்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் படுகிறார்.

பெரியார்  வைக்கம் போராட்டத்தில் சிறைக்கு சென்ற பின் அவரது துணைவியார் அன்னை நாகம்மையார் வைக்கம் சென்று பெண்களை எல்லாம் திரட்டி போராட்டத்தினை தொடர்ந்து நடத்துகிறார். வைக்கம் போராட்டத் தில் பெண்கள் கணிசமாக பங்கேற்றிட உறு துணையாக இருந்தவர் அன்னை நாகம்மையார் ஆவார்.

போராட்டம் தொடங்கும் முன்னர், பிற மதத்தினர் இந்து கோயில்  தொடர்பான போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமா? என காந்தியார் மறுத்த வேளையிலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

போராட்டப் போராளிகள் தந்தை பெரியாரை போராட்டத்தினை தொடர்ந்து நடத்திட வேண்டிய வேளையில், பிற மாநிலத் திற்குள் போராட்டம் நடத்திடச் செல்ல வேண் டுமா?' என பெரியாருக்கு காந்தியார் தெரிவித்த வேளையில் வைக்கம் சென்று அங்கு நிலவிய, விலங்குகளைவிட இழிவாக நடத்தப்பட்ட மக்களின் நிலைமை குறித்து காந்தியாருக்கு கடிதம் எழுதினார் தந்தை பெரியார்.

போராட்டம் வெற்றி பெறும் வேளையில், சமஸ்தான ராணியாரிடம் பேச்சு வார்த்தை நடத்திட காந்தியார் அழைக்கப் படுகிறார். கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடந்திடும் உரிமையுடன் போராட்டம் முடிவடைந்து விட்டால் அனுமதிக் கலாம். அதையும் தாண்டி கோயிலுக்குள் நுழைவதற்கு போராட்டக் காரர்கள் முயற்சிப்பார்கள் என ராணியார் அச்சம் தெரிவித்த வேளையில், காந்தியார், தந்தை பெரியாரிடம் உறுதி கேட்டார். பெரியார், கோயில் நுழைவுதான் அடுத்த இலக்கு என்றாலும், அது இப்போதைக்கு இருக்காது" எனக் கூறியதால், வைக்கம் போராட்டம் வெற்றியடைந்தது.

வைக்கம் போராட்டம்தான், தனக்கு மகத் பொதுக் குளப் போராட்டத்தினைத் தொடங்கு வதற்கு உந்து சக்தியாக விளங்கியது என அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தான் நடத்திய 'பகிஷ்கரித்' மராத்தி ஏட்டில் குறிப்பிட்டுள்ளார்.

வைக்கம் போராட்டம் ஏற்படுத்திய வரலாற்று உணர் வுகள், பின்னாளில் நாடு தழுவிய அளவில் பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடு, நலத் திட்டங்கள் வழங்கிட பரிந்துரைத்த மண்டல் குழு அறிக்கைமீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தபொழுது, கேரளா - பாலக்காடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த விஜயராகவன் அவர்கள் மண்டல் பரிந்துரையினை ஆதரித்து உரையாற்றியது நினைவு கூரத்தக்கது. 

* We Salute you all who Salute the Heros of Vaikom Struggle' (வைக்கம் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களை யெல்லாம் போற்றிடும் உங்கள் (விழா ஏற்பட்டாளர்கள் மற்றும் பங்கேற்றோர்) அனைவரையும் போற்றுகிறோம்?

தனது அரைமணி நேர பேச்சிலும், வைக்கம் போராட்ட வரலாற்றுச் செய்திகள் பலவற்றை தமிழர் தலைவர் விளக்கிக் கூறினார். 

நூற்றாண்டு விழா மாட்சிகள்:

*சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வாழும் மலையாளிகள் பெரியளவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவைக் குடும்ப விழாவாகக் கருதிப் பங்கேற்றனர்.

* மேடையில் நிகழ்ச்சிகள்தொடங்குவதற்கு முன்னதாக வைக்கம் போராட்டம்பற்றிய குறிப்புகள், பங்கேற்ற தலை வர்கள் பற்றிய குறிப்புகள் பற்றிய காணொளி நிகழ்த்தப்பட்டது. தந்தை பெரியார் பற்றி குறிப்புகளில், குறிப்பிட்டுச் சொல்லப் பட்டது - 'வைக்கம் போராட்டம்' "மக்கள் போராட்டமாக மாறிட காரணமானவர்" என்பது தனிச் சிறப்பாக இருந்தது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவிஞர் கனிமொழி அவர்கள் தனது சிறப்புரையில் வைக்கம் போராட்ட வரலாற்றுச் செய்திகளுடன் அதில் மகளிர் பங்கேற்பு, இன்றைய நிலைமை - மகளிர் உரிமை பற்றிய குறிப்புகள் பலவற்றை எடுத்துரைத்தார்.

தந்தை பெரியார்  குடும்ப வழித் தோன்றலும், காங்கிரசுப் பேரியக்கத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் தமது உரையில் - 'பெரியார் அவர்களை நான்  தாடித் தாத்தா என்று, எனது சிறுவயதில் அழைத்தாலும், அந்த மாபெரும் தலைவரை 'குடும்ப உறவுக்குள் அடக்க முடியாது. பெரும் புரட்சியாளர் அவர். வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரது பங்கு நாடு தழுவிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தியது.

*கேரளா - பாலக்காடு மக்களவைத் தொகுதி உறுப் பினரும், கேரள காங்கிரஸ் கமிட்டியின் செயலாளருமான வி.கே. சிறீகண்டன், தமது உரையில், 'கேரள மக்கள் வைக்கம் நூற்றாண்டு விழாவினை கொண்டாட கடமை உள்ளவர்கள், உரிமை உள்ளவர்கள் - இன்றைய கேரள சமுதாய மக்களின் உயர்வுக்கு வித்திட்டது வைக்கம் போராட்டம். தமிழும் மலையாளமும் ஒரு தாய் பெற்ற பிள்ளைகள், மக்களும் அப்படியே சேர்ந்து சமுதாயப் பணி ஆற்றுவோம்!" எனக் கூறினார்.

*விழாவிற்கு தலைமை ஏற்ற பேராசிரியர் அ. கருணானந் தன் அவர்கள் எந்தவொரு போராட்டமும் முடிவு என்பதாக  இருக்காது; தொடக்கமாக இருக்கலாம். தொடர்ந்து, பெற வேண்டிய உரிமைகளுக்காக நடத்தப்படும் - வைக்கம் போராட்டமும் அப்படியே என்று கூறினார்.

எஸ்.என்.டி.பி. சென்னை யூனியன் சார்பாக டி.கே. உன்னிகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார்.

முக்கிய பங்கேற்பாளர்கள்

மேலும் விழாவில் எம்.பி. புருஷோத்தமன் (நிகழ்வின் புரவலர்), சிவகிரி எஸ்.என்.டி.பி. மடத்திலி ருந்து சுவாமி சைதன்யானந்தா, 'மலையாள மனோரமா' சென்னை பிரதிநிதி ஜெரின் ஜாய், அருட்தந்தை மாத்யூ பள்ளிகுணேல், பி.என்.ரவி, பைஜு கோபாலன், வழக்குரைஞர் கே. லிஜன், எஸ்.என்.டி.பி. சென்னை யூனியன் தலைவர் பி. ராஜு, சிவதாசன் பிள்ளை, எஸ்.என்.டி.பி. அமைப்பின் கோவை மாவட்டப் பொறுப்பாளர் சுரேஷ், கன்னியாகுமரி மாவட்டம் மணிகண்டன், நீலகிரி மாவட்ட பீதாம்பரன் மாஸ்டர் எனப் பலரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

பங்கேற்ற கழகப் பொறுப்பாளர்கள்

15

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, தலைமைக் கழக அமைப்பாளர் தெ.செ. கோபால், மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைச் செயலாளர் கோ.வி. இராகவன், மாரியப்பன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப. முத்தையன், தாம்பரம் - சு. மோகனராசு, தனசேகரன், பல்லாவரம் நரேசு, சோழிங்க நல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி. வீரபத்திரன், பி.சி. ஜெயராமன் (ப.க.) ஒளிப்படக் கலைஞர் ப.சிவக்குமார், சக்திவேல், வட சென்னை மாவட்ட காப்பாளர் கி. இராமலிங்கம், அமைப்பாளர் சி. பாசுகர், கோ. தங்கமணி, தங்க. தனலட்சுமி, அயன்புரம் துரைராஜ், ஆவடி மாவட்ட துணைத் தலைவர் பூவை தமிழ்ச்செல்வன், பழ. சேரலாதன், பெரியார் மாணாக்கன், செ.பெ. தொண்டறம் (மாணவர் கழகம்) மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

மொத்தத்தில் எஸ்.என்.டி.பி. சார்பாக நடத்தப்பட்ட வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, உரிமை சார்ந்த மலரும் நினைவுகளை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொன்ன விழா 'தமிழர்  - மலையாளிகளின்' இணக்கமான விழாவாக இனிதே நடந்தேறியது.

நூற்றாண்டுச் சிறப்புடன் கொண்டாடப்படும் வைக்கம் போராட்ட விழா நூறு விழாக்களையும் தாண்டி பல்வேறு மக்களால் மனித உரிமைப் போராட்ட விழாவாக நடத்தப்படும். நூறாண்டையும் தாண்டி வைக்கம் போராட்ட விழா நடந்து கொண்டே இருக்கும். தனிச் சிறப்புப் போராட்டமாக பல்வேறு வடிவங்களில் வெளிக் கிளம்பும்.

------------------++++++++++++----+++------------



எஸ்.என்.டி.பி. சென்னை யூனியன் சார்பில் சென்னையில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவரின் வரலாற்றுப் பேருரை


 வைக்கம் போராட்டம் ஓர் அறிவுப் புரட்சி! அமைதிப் புரட்சி! ரத்தம் சிந்தாத மாபெரும் புரட்சி! 

தெருவில் நடக்கக்கூடிய உரிமையையும் தாண்டி, கோவிலின் கருவறைக்குள் அர்ச்சகராகவும் போகக்கூடிய அளவிற்கு சமூகத்தில் மாற்றம் வந்திருக்கின்றது என்றால், வைக்கம் போராட்டம் அதற்கு அடித்தளம்!

அண்ணல் அம்பேத்கரின் ‘மகத்' போராட்டத்திற்கு முன்னோடிப் போராட்டம்!

1

சென்னை, அக்.30 வைக்கம் போராட்டம் ஓர் அறிவுப் புரட்சி! அமைதிப் புரட்சி! ரத்தம் சிந்தாத மாபெரும் புரட்சி! தெருவில் நடக்கக்கூடிய உரிமையையும் தாண்டி, கோவிலின் கருவறைக்குள் அர்ச்சகராகவும் போகக் கூடிய அளவிற்கு சமூகத்தில் மாற்றம் வந்திருக்கின்றது என்றால், வைக்கம் போராட்டம் அதற்கு அடித்தளம்! அண்ணல் அம்பேத்கரின் ‘மகத்’ போராட்டத்திற்கு முன்னோடிப் போராட்டம்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

எஸ்.என்.டி.பி. சென்னை யூனியன் சார்பில்

சென்னையில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா

நேற்று (29.10.2023) மாலை சென்னை - சேத்துப்பட்டில் மலையாளி சங்க அரங்கில் எஸ்.என்.டி.பி. சென்னை யூனியன் சார்பில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேருரையாற்றினார்.

அவரது பேருரை வருமாறு:

மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும், நெகிழ்ச்சி யோடும் நடைபெறக்கூடிய வைக்கம் போராட்ட நூற் றாண்டு விழாவினை - நாடு முழுவதும், உலகம் முழுவதும் இன்றைக்குக் கொண்டாடிக் கொண்டிருக் கின்ற சூழ்நிலையில், மற்ற எல்லா இடங்களிலும்  தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதைவிட, தமிழ்நாடு தலைநகரான சென்னையில், குருதேவர் அவர்களின் அமைப்பாக இருக்கக்கூடிய எஸ்.என்.பி.டி. யோகம் சார்பில் நடைபெறுவது என்பது இருக்கிறதே, இதைவிட பெருமை நடத்தியவர்களுக்கு வேறு இல்லை.

இவ்விழாவில் கலந்துகொள்வதில் 

எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறேன்

எத்தனை நிகழ்ச்சிகளில் எங்களைப் போன்றவர்கள் கலந்துகொண்டாலும், இவ்விழாவில் கலந்துகொள்வதில் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைகிறோம்.

பெரும்பாலும் இங்கே இருக்கிறவர்களுக்காக நான் மலையாளத்தில் பேச முடியவில்லையானாலும், தமிழ் மொழியை அவர்கள் புரிந்தவர்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், மிக அருமையாக வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவினை ஏற்பாடு செய்துள்ள எஸ்.என்.பி.டி. யோகம் பொறுப்பாளர்களுக்கு முதற்கண் என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பாக மட்டுமல்ல, மனித உரிமைகளுக்கு யார் யாரெல்லாம் போராடுகிறார்களோ, அத்தகைய மனித உரிமை அமைப்புகளின் சார்பாக, இந்த எஸ்.என்.டி.பி. அமைப் பிற்கு எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

குறிப்பாக இந்நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றிருக்கக் கூடிய பேராசிரியர் அ.கருணானந்தன் அவர்களே,

சிறப்பாக வரவேற்புரையாற்றியுள்ள அருமைச் சகோதரர் டி.கே.எஸ்.உண்ணிகிருஷ்ணன் அவர்களே,

சென்னை தலைநகருக்கு இந்தியாவையே அழைத்து வந்த நம்முடைய பகுத்தறிவு கவிஞர் கனிமொழி!

இந்த நிகழ்ச்சியில் என்னோடு கலந்துகொண்டுள்ள இப்பொழுது இந்தியாவே திரும்பிப் பார்க்கக் கூடிய அளவிற்கு, ‘‘மகளிர் மாநாடு'' என்ற ஒன்றை சிறப்பாக மகளிர் உரிமைக்கான மாநாடு ஒன்றினை சென்னை தலைநகரில் நடத்தியதோடு, ‘இந்தியா'வையே அழைத்து வந்த நம்முடைய பகுத்தறிவு கவிஞர் கனிமொழி அவர்களே, 

நம் குடும்ப உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களே,

உரிமைப் போர் நம்மை இணைத்திருக்கிறது!

நாம் எல்லோருமே ஒரு குடும்பம்தான். மண்ணோ, மொழியோ நம்மைப் பிரிப்பதில்லை. உரிமை நம்மை இணைத்திருக்கிறது. உரிமைப் போர் நம்மை இணைத் திருக்கிறது.

அதிலும் குறிப்பாக என்னைப் போன்றவர்கள் - பெரியார் தொண்டர்கள் இங்கே வந்து உரையாற்று வதைவிட, நன்றி சொல்வதற்காகத்தான் நான் வந்திருக்கின்றேன்.

ஏனென்றால், கேரளத்து சகோதரர்கள், அந்த மண்ணிற்குத் தந்தை பெரியார் சென்றபொழுது, எப்படி நடந்துகொண்டார்கள் என்று நான் பிறகு சொல்கிறேன்.

இங்கே இருக்கின்றவர்கள் வருவதைவிட, பாலக்காட் டினுடைய நாடாளுமன்ற உறுப்பினர் அருமைச்சகோதரர் சிறீகண்டன் எம்.பி., அவர்கள் இங்கே வந்திருக்கிறார், தமிழ்நாட்டின் சார்பாக அவரை நாம் வரவேற்கிறோம்.

ஏனென்றால், பாலக்காடு பல வகையில் போராட்டக் களமாக இருந்த நேரத்தில், பெரியார் அங்கும் போராடியிருக்கிறார். வைக்கத்தில் மட்டும் அவர் போராட வில்லை; பாலக்காட்டிலும் போராடியிருக்கிறார், இது பழைய வரலாறு.

அப்படிப்பட்ட அருமைச் சகோதரர் சிறீகண்டன் அவர்களே,

 40 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களோடு தொடர்பில் இருக்கக்கூடியவர்!

அதேபோல, இந்த  அமைப்பில் தொடர்ந்து ஒடுக்கப் பட்ட சமுதாய மக்களுக்காகவும், எஸ்.என்.டி.பி. யோகம் மட்டுமல்ல, எல்லோருக்கும் கைகொடுக்கக் கூடிய அளவில், தமிழ்நாட்டிற்கு வந்து ஒரு பெரிய தொழில திபராக இருந்தாலும், எவ்வளவு உயர்ந்தாலும் சமூக சிந்தனையில் கொஞ்சம்கூட மாறாமல், 40 ஆண்டு களுக்கும் மேலாக எங்களோடு தொடர்பில் இருக்கக் கூடியவரான எம்.பி.புருஷோத்தமன் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடிய சான்றோர் பெருமக்களே, பெரியோர்களே, நண்பர்களே, ஊடக வியலாளர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே மரப் பெஞ்சு போட்டு என்னை உயர்த்தி இருக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள்; இந்தக் கொள்கையே உயர்ந்திருக்கின்றது என்று அர்த்தம்.

வைக்கம் போராட்ட வெற்றிகளால் 

நாம் உயர்ந்திருக்கின்றோம்!

வைக்கம் போராட்ட வெற்றிகளால்தான் நாம் இன்று உயர்ந்திருக்கின்றோம். இதுவரையில் நாம் தாழ்த்தப்பட்டு இருந்தோம். இப்போதுதான் உயர்த்தப்பட்டு வருகிறோம் என்று சொல்வதற்கு அடையாளமாகத்தான் இவ்வளவு சகோதரிகள் இங்கே வந்திருக்கிறீர்கள்.

குறிப்பாக சொல்லவேண்டுமானால், உங்களு டைய ஏற்பாடு எங்களை வியக்க வைத்தது. முதலில் அந்த அறிமுகம் மிகவும் சிறப்பானது.

ஒரே ஒரு சிறிய திருத்தம்!

ஒரே ஒரு சிறிய திருத்தம் - உரிமையோடு சொல்ல லாம் - நாம் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதி னால், சுட்டிக்காட்டவேண்டியது என்னுடைய கடமை.

வைக்கம் போராட்டம் என்பது  ஒரு தனிச் சிறப்பு - இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடியது. அதனால்தான், எங்கள் கனிமொழி போன்றவர்கள் இந்தியாவிற்கு வழிகாட்டக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், அதனுடைய அடிப்படை என்னவென்றால், வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு தந்தை பெரியார் அவர்கள் கைதானவுடன்,  தந்தை பெரியாரின் வாழ்க்கைத் துணைவியாரான அன்னை நாகம்மையார் அவர்கள் போராட்டக் களத்தில் குதித்தார்கள்; மகளிரை அழைத்துக்கொண்டு போய் - அதைக் காட்டினீர்கள். அதில் ஒரே ஒரு சிறிய திருத்தம் - அன்னை மணியம்மையார் அவர்களுடைய படம் இடம்பெற்றி ருந்தது. அதை அடுத்த முறை சரி செய்துகொள்ள வேண்டும். இது இந்த ஊரில் மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியில் மட்டுமல்ல - பல நிகழ்ச்சிகளை நீங்கள் ஏற்பாடு செய்யும்பொழுது, இந்த வரலாறு, இன்றைய இளைய தலைமுறையினருக்குத்  தெரியவேண்டிய வரலாறாக இருக்கும். அந்தத் திருத்தத்தை செய்து கொள்ளவேண்டும்.

வைக்கம் போராட்டத்தின் 

50 ஆம் ஆண்டு விழா கேரளாவில் ஒரு வாரம் நடைபெற்றது!

அன்னை மணியம்மையாருக்கும் அங்கே சிறப்பு செய்தார்கள். வைக்கம் போராட்ட 50 ஆம் ஆண்டு விழா கொண்டாடக் கூடிய அந்தக் காலகட்டத்தில், பிரதமராக இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் இருந்தார்கள். அவரை, வைக்கத்திற்கு அழைத்து, தொடக்க விழா ஒரு வாரம் நடைபெற்றது. 1975 ஆம் ஆண்டு நடை பெற்றது.

ஏழாவது நாள், நிறைவு நாள் விழாவிற்கு அன்னை மணியம்மையார் அவர்களை அழைத் திருந்தார்கள்; நானும், அவரோடு சென்றிருந்தேன்.

அங்கே அவர் உரையாற்றுகின்றபொழுது, ஒரு சிறப்பான பகுதி என்னவென்றால், வனிதா சம்மேளனம் - மகளிருக்காக இருக்கக்கூடிய அந்த வாய்ப்பைப் பெற்றார்கள்.

அங்கே நாங்கள் வியப்படைந்த ஒரு செய்தி என்னவென்றால்,  அப்பொழுதுதான் நாங்கள் வைக்கத்திற்குச் சென்று பார்க்கின்றோம். ஒவ்வொரு பகுதிகளிலும் வரவேற்பு வளைவு வைத்திருந்தார்கள்.

‘ஈ.வெ.ராமசாமி கேட்’ என்பதுதான் 

முதல் வரவேற்பு!

‘ஈ.வெ.ராமசாமி கேட்' என்பதுதான் முதல் வரவேற்பு வளைவாக அங்கே வைத்திருந்தார்கள். அவ்வளவு நன்றி உணர்ச்சியோடு இருக்கக்கூடிய தோழர்கள் கேரளத்தில் இருக்கக்கூடிய மக்கள் என்பதற்கான  அடையாளத்தை நாங்கள் பார்த்தோம். அதற்கு நன்றி சொன்னோம்.

பழ.அதியமான் எழுதிய 

‘‘வைக்கம் போராட்டம்!''

வைக்கம் போராட்டத்தின் வரலாறு ஏராளம் இருக்கிறது. நாங்கள் தனித்தனியே பேசிப் பேசி நாங்கள் எழுதியிருக்கின்றோம் என்றாலும், தோழர் பழ.அதிய மான் அவர்கள் அகில இந்திய வானொலியில் பணி யாற்றி ஓய்வு பெற்றவர். அவர் ‘‘வைக்கம் போராட்டம்'' என்ற தலைப்பில் 15 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, தரவுகளையெல்லாம் திரட்டி, இவ்வளவு பெரிய புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார்.

இந்தப் புத்தகம் தமிழ்நாடு அரசின் முயற்சியினால், சிறப்பாக மலையாள மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு,  மலையாள மொழியில் கிடைக்கக் கூடிய அளவிற்கு வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஏனென்றால், இவ்வளவு விரிவான வரலாறு, மற்ற இடங்களில் இல்லை. ஆய்வோடு, அவர்கள் ஒவ்வொரு ஆவணத்தோடு செய்திருக்கிறார்.

அப்புத்தகத்தில் உள்ள ஒரு சிறு பகுதியை சொல் கிறேன். இது ஒரு போராட்டம் என்று சொல்லுகிறபொழுது, சாதாரண போராட்டம் அல்ல.

வைக்கம் போராட்டம்தான் 

முதல் மனித உரிமைப் போர்!

இந்திய வரலாற்றில், மிகப்பெரிய அளவிற்கு மனித உரிமைக்காகப் போராடிய போராட்டத்தில், இதுதான் முதல் முத்திரையாகக் குறிக்க வேண்டிய மனித உரிமைப் போர். இதுதான் பல பேரை கண்விழிக்கச் செய்திருக்கிறது.

தந்தை பெரியாரின் பங்கைப் பார்த்து, காந்தியார் அவர்கள் பேசும்பொழுதுகூட, ஜாதி எப்படி இருந்தி ருக்கிறது கொடுமையாக என்று சொல்லுகிறபொழுது உங்களுக்குத் தெரியும் ஒரு வரலாறு.  காந்தியார் போய் பேசுகிறபொழுது, அவரை  அந்த மாளிகைக்கு உள்ளே வைத்துப் பேசுவதற்குத் தயாராக இல்லை. நாட்டின் தேசத் தந்தையாக இருக்கின்ற, கருதப்படுகின்ற அண்ணல் காந்தியாரையே திண்ணையில்தான் அமர வைத்தார்கள். திண்ணையில் வைத்த காந்தியாரை, உள்ளே அழைத்துப் போவதற்கு வாய்ப்பைப் பெறக் கூடிய அளவிற்கு,  அந்த வருணாசிரம தர்மம், ஸநாதன தர்மம் அன்றைக்கு விடவில்லை. ஆனால், பிறகு அந்த நிலை மாறியது. அதுதான் இந்தப் போராட்டத்தினுடைய வெற்றி.

இந்தப் போராட்டத்தினை வைக்கத்தில் டி.கே.மாதவன் அவர்கள் தொடங்கிய நேரத்தில், குரு நீலகண்ட நம்பூதிரி அவர்கள், கே.பி.கேசவமேனன் அவர்கள், ஜார்ஜ் ஜோசப் அவர்கள் எல்லாம் முயற்சி எடுத்த நேரத்தில், காந்தியாருக்குக் கடிதம் எழுதுகிறார் கள். உங்கள் அனுமதி வேண்டும், ஆதரவு வேண்டும் என்று.

அந்த நேரத்தில், காந்தியார் ‘‘இந்தப் போராட்டம் சத்தியாகிரகம் போன்று நடக்குமா? அல்லது கலவரம் ஏற்பட்டு விடுமோ?'' என்று யோசித்துத் தயங்கினார்.

அப்படி தயங்கிய நேரத்தில், வைக்கம் போராட்டம் நடத்தியவர்களையெல்லாம் கைது செய்து சிறைச் சாலையில் அடைத்துவிடுகிறார்கள்.

போராட்டக்காரர்கள் தந்தை பெரியாருக்கு 

கடிதம் எழுதினார்கள்!

அப்படி அவர்கள் சிறைச்சாலையில் இருக்கும் பொழுது, தந்தை பெரியாருக்குக் கடிதம் எழுதுகிறார்கள். ‘‘இப்பொழுது, இந்த இயக்கத்தையே அடக்கிவிட நினைக்கிறார்கள்; ஆகவே, நீங்கள் இங்கே வந்து இந்தப் போராட்டத்தினைத் தொடரவேண்டும்'' என்று.

அதைத்தான் பேராசிரியர் கருணானந்தம் அவர்கள் அழகாக எடுத்துச் சொன்னார். வெள்ளைக்காரர்கள் அந்தச் சட்டத்தைப் போடவில்லை. அங்கே இருந்த ஸநாதன சாம்ராஜ்ஜியம்தான்  போட்டது என்பதை விளக்கினார்.

அந்த நேரத்தில், மிக அழகாக வேறு வழியில்லாமல் சிறைச்சாலையில் இருந்தபடியே தந்தை பெரியாருக்குக் கடிதம் எழுதுகிறார்கள்.

‘‘அய்யா, இந்த இயக்கத்தைச் சேர்ந்த முன்னணியினரை கைது செய்து சிறைச்சாலையில் அடைத்து விட்டார்கள். நீங்கள் இங்கே வந்தால்தான், நீங்கள் தலைமை தாங்கினால்தான் இந்தப் போராட்டத்தினைத் தொடர்ந்து நடத்த முடியும். இல்லையானால், இந்தப் போராட்டம் தோல்வி அடைந்துவிடும்'' என்று 1924 இல் கடிதம் எழுதினார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் என்றைக்கு வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள் என்கின்ற வர லாற்றையெல்லாம் நீங்கள் இங்கே காட்டியிருக்கிறீர்கள்.

ஈரோட்டிலிருந்து தந்தை பெரியார் அவர்கள், வைக் கத்திற்குச் சென்று போராட்டத்தைத் தொடரவிருக்கிறார். அன்றைக்குப் பெரியாருடைய தலைவர் காந்தியார். ஏனென்றால், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்ததினால், காந்தியாருடைய அனுமதியில்லாமல், அப்போராட்டத்தைத் தொடர முடியாது என்பதினால், அவருக்குக் கடிதம் எழுதி கேட்கிறார்.

அப்பொழுது காந்தியார் சொல்கிறார், ‘‘நீங்கள் ஏன் தமிழ்நாட்டிலிருந்து அங்கே போகவேண்டும்? ஏதோ கலவரத்தைத் தூண்டுவதற்காக அங்கே வந்திருக் கிறீர்கள் என்று அவர்கள் தவறாக நினைப்பார்கள். ஆகவே, நீங்கள் அங்கே போகவேண்டாம்'' என்று காந்தியார் தயங்குகிறார், தடுத்தார்.

தந்தை பெரியார் அவர்கள் 

காந்தியாருக்கு எழுதிய கடிதம்!

அந்த சூழ்நிலையில், தந்தை பெரியார் அவர்கள், காந்தியாருக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதுகிறார்.

இந்த விவரங்கள் முழுவதும் ஆதாரப்பூர்வமானது. டி.கே.ரவீந்திரன் அவர்கள் பின்னாளில் துணை வேந்தராக இருந்தவர். அவர்,  ‘‘Vaikom satyagraha and Gandhi'' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் புத்தகம் எழுதியிருக்கிறார். 

அந்தப் புத்தகத்தில் அந்தக் கடிதங்கள் எல்லாம் ஆவணப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

தன்னுடைய தலைவர் காந்தியார் அவர்களுக்கு வணக்கத்தோடு கடிதம் எழுதினார் தந்தை பெரியார்.

‘‘வைக்கத்தில் உள்ள கோவில் தெருக்களில் நடக்க உரிமையில்லை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, கீழ்ஜாதி மக்களுக்கு, ஈழவ மக்களுக்கு. அதைப் பார்த்தவுடன், அவர்கள் சத்தியாகிரகம் நடத்தியது நியாயம் என்று நினைத்தேன். சத்தியாகிரகம், சத்தியாகிரகமாகவே நடக்கும்; சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை உருவாக்க மாட்டோம்; அதற்குக் கட்டுப்படுவோம்'' என்று சொல்லிவிட்டு,

‘‘நான் இங்கே பார்க்கிறேன், இந்தத் தெருக்களில் நாய் ஓடுகிறது; பன்றி போகிறது; கழுதை போகிறது - அவையெல்லாம் சத்தியாகிரகம் செய்தா அந்த உரிமையை வாங்கின? ஆனால், நாம் இப்பொழுது சத்தியாகிரகம் செய்யவேண்டி இருக்கிறதே?'' என்று எழுதினார் தந்தை பெரியார்.

ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் கல்வி அறிவைப் பெறுவதற்கு முக்கிய காரணம்!

இன்னொரு செய்தியை உங்களுக்குச் சொல்ல வேண்டும் நம்முடைய எஸ்.என்.டி.பி. யோகம் பெரிய அளவிற்குக் கல்விப் புரட்சியை செய்த அமைப்பாகும். அந்த அமைப்பு இல்லையானால், இன்றைக்குக் கேரளத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் கல்வி அறிவைப் பெற்றிருக்க முடியாது. அதற்குக் காரணம் முழுக்க முழுக்க இந்த அமைப்புதான்.

அப்படி குருதேவ் அவர்கள் அதைத் தொடங்கிய பிறகு, அதற்குத் தளபதியாக முன்னின்று செய்த பெருமை டாக்டர் பல்பு அவர்களைச் சார்ந்தது. அதை நன்றாக நீங்கள் நினைவில் வைத்து இங்கே காட்டியி ருந்தீர்கள்.

எனக்கு ஒரு மகிழ்ச்சி என்னவென்றால், நம்முடைய பாலக்காடு நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று இருப்பதுதான்.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா 

கேரள மாநிலத்தில் கொண்டாடப்பட்டது!

இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டு முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியின் சமூகநீதிக்கான சரித்திர நாயகர்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் கேரள மாநிலம் வைக்கத்தில், வைக்கம் போராட்ட நூற்றாண்டு தொடர்பாக விழா வினைக் கொண்டாடினார்கள்.

தமிழ்நாடு அரசின் சார்பில் வருகின்ற டிசம்பரில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா!

தமிழ்நாட்டில் அவ்விழாவினை வருகிற டிசம்பர் மாதம் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்துகொண்டிருக்கிறது.

அதன்மூலமாக, ஜாதியத்தினுடைய முதுகெலும்பு, வருணாசிரம தர்மத்தினுடைய முதுகெலும்பு, ஜாதியக் கொடுமைகள் அழிக்கப்படக் கூடிய அளவிற்கு வாய்ப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன.

கே.பி.கேசவமேனன்

வைக்கம் போராட்டத்தில்  இரண்டு முறை தந்தை பெரியார் கைது செய்யப்படுகிறார். 6 மாதம் தண்டிக்கப் பட்டு, சிறைச்சாலையில் இருக்கிறார். கே.பி.கேசவமேனன் அவர்கள் ‘‘வைக்கம் சத்தியாக்கிரக நினைவலைகள்'' என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதியிருக்கிறார். அந்த வரலாற்றில், பெரியார் அவர்கள் கை, கால்களில் விலங்கு போடப்பட்டு சிறைச்சாலையில் கொடுமைப் படுத்தப்பட்டு இருக்கிறார்; தமிழ்நாட்டிலிருந்து நமக்காக இங்கே வந்து, நம்முடைய உரிமைக்காகப் போராடுகிறார் என்பதையெல்லாம் அதில் விவரித்திருக்கிறார்.

அப்படி வந்தபொழுது, ஒரு வேடிக்கையான நிகழ்வு- 

ஈழவ சமுதாயத்தினரின் உரிமைக்காக ஒருமுறை தந்தை பெரியார் போராடுகிறார்.  15 நாள் தண்டனை கொடுத்து அருவிக்குத்து சிறைச்சாலைக்கு அனுப்பப்படு கிறார். பிறகு மகளிர், அன்னை நாகம்மையார் தலைமையில் போராடுகிறார்கள்.  பெரியாரின் தங்கை கண்ணம்மாளும் செல்கிறார். சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்த தந்தை பெரியார், மீண்டும் போராடுகிறார்; இந்த முறை 6 மாதம் தண்டிக்கப்பட்டு, திருவிதாங்கூர் சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார். அப்பொழுதும் தந்தை பெரியார் அந்தப் போராட்டத்தில் தீவிரம் காட்டுகிறார்.

அதனால் வைதீகம் என்ன செய்தது என்பதை நீங்க ளெல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும். ஒரு வேடிக்கை யான நிகழ்வு பெரியாருடைய வாழ்க்கையில் நடந்தது.

‘‘சத்ரு சங்கார யாகம்!’’ 

எதிரிகளால் ‘‘சத்ரு சங்கார யாகம்'' நடத்தப்பட்டது. சத்ரு என்றால், விரோதி. சங்காரம் என்றால், அழிப்பது. அதாவது, விரோதியை அழிப்பதற்காக யாகம் செய்தார்கள்.

அந்த யாகம் நடத்தினால், யாகத்திலிருந்து ஒரு உருவம் கிளம்பும்; அந்த உருவம், நேரிடையாகச் சென்று பெரியாரை அழித்துவிடும்; அப்படி அழித்து விட்டால், வைக்கம் போராட்டத்திற்குத் தலைமை தாங்க முடியாது என்பதற்காக சத்ரு சங்கார யாகத்தை நடத்தினார்கள்.

‘பெரியார்’ திரைப்படத்தில்...

அந்த யாகம் நடத்திய இரவு, சிறைச்சாலைக்கு வெளியே வெடிச்சத்தம் கேட்டது. இந்தக் காட்சியை இனமுரசு சத்யராஜ் அவர்கள், பெரியாராக நடித்த ‘பெரியார்' திரைப்படத்தில் அந்தக் காட்சியை வைத் திருக்கிறார்கள்.

சிறைச்சாலையில் இருந்த பாராக்காரர்களுக்கும் அந்த சத்தம் கேட்டது. எதற்காக வெடி வெடித்தார்கள் என்று சிறைச்சாலையில் இருந்தவர்கள் கேட்டபொழுது, ‘‘ராஜா திருநாடு இழந்து போச்சு'' என்றார்கள். அதற்கு என்ன அர்த்தம் என்றால், ராஜா மரணமடைந்துவிட்டார் என்பதுதான்.

அதற்குப் பிறகு தந்தை பெரியாரை விடுதலை செய்தார்கள். மீண்டும் அவர் வைக்கம் போராட்டத்திற்கு வரக்கூடாது என்பதற்காகத்தான், ஈரோட்டில் அவரை கைது செய்கிறார்கள் காவல்துறையினர்.

அப்பொழுது அன்னை நாகம்மையார் அவர்கள் உருக்கமாகக் கடிதம் எழுதினார்.

அன்னை நாகம்மையார் 

எழுதிய கடிதம்!

அப்போது நாகம்மையார் எழுதிய கடிதம் 12.9.1924 ‘நவசக்தி' இதழில் வெளியானது.

“என் கணவர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இந்த மாதம் முதல் தேதி திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலையானார். இன்று காலை 10 மணிக்கு 11.9.1924 மறுபடியும் இராஜத் துரோக குற்றத்துக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். இரண்டு வருஷத் திற்குக் குறைவில்லாத காலம் தண்டனை கிடைக்கக் கூடிய பாக்கியம் தமக்குக் கிடைத்திருப்ப தாகச் சொல்லி விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டுவிட்டார். அவர் திரும்பத்திரும்பத் தேச ஊழியத்தின் பொருட்டுச் சிறைக்குப் போகும் பாக்கியம் பெற வேண்டுமென்றும், அதற்காக அவருக்கு ஆயுள் வளர வேண்டும் என்றும் கட வுளையும், மகாத்மா காந்தியையும் பிரார்த்திக் கிறேன்.

ஆகவே, எத்தனை ஆண்டு காலமானாலும் இருக்கின்றவர்கள் அந்தப் பணியைத் தொடர்ந்து செய்து, வைக்கம் போராட்டத்தை வெற்றிகரமாக் குங்கள்'' என்று அந்த அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் நண்பர்களே, வைக்கம் போராட்டம் என்பது சாதாரண போராட்டமல்ல; மனித உரிமைப் போராட்டம் மட்டும் அல்ல. 

அங்கே இருக்கக்கூடிய மக்களுக்கு தொடக்கக் காலத்தில் மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்புக் கொடுத் ததையெல்லாம் இங்கே காட்டினீர்கள்.

ஒவ்வொரு முறையும் கேரளம் போராட்டக் களமாக இருந்தது. இன்றைக்கு அதைச் சாதாரணமாகப் பார்க் கிறோம். ஆனால், அன்றைக்கு அந்த வாய்ப்புகள் என்னவென்பதை மிகத் தெளிவாகப் பார்க்கவேண்டும்.

அண்ணல் அம்பேத்கரின் 

வாழ்க்கை வரலாறு புத்தகம்! 

கடைசியாக ஒரு செய்தி - அண்ணல் அம்பேத்கர் அவர்களைப்பற்றிய வாழ்க்கை வரலாறு புத்தகம்.

அந்தப் புத்தகத்தில் வைக்கம் போராட்டத்தைப்பற்றி பதிவு செய்திருக்கிறார். அந்த வைக்கம் போராட்டம் என்பது இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய ஒரு போராட்டமாகும் என்று.

மகத்குளப் போராட்டத்திற்கு 

வைக்கம் போராட்டமே அடிப்படை!

அம்பேத்கர் அவர்கள் ஒரு பத்திரிகையை நடத்தினார் ‘‘மூக்நாயக்'' என்பது அந்தப் பத்திரிகையின் தலைப்பு.

அந்தப் பத்திரிகையில் வைக்கம் சத்தியாகிரகத்தைப் பற்றி எழுதுகிறார். இப்படி ஒரு போராட்டத்திற்குப் பிறகுதான், தாழ்த்தப்பட்ட மக்கள் குளத்தில் இறங்கி தண்ணீர் எடுப்பதற்காக நடத்தப்பட்ட மகத்குளப் போராட்டம் நடைபெற்றது என்று.

எனவே, வைக்கம் சத்தியாகிரகப் போராட்டம் என்பது கேரள மாநில மக்களுக்காக மட்டுமல்ல - அங்கே நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தைப் பார்த்தவுடன், அடுத்தபடியாக இந்த உணர்வு வர வேண்டும் என்பதற்காக சுசீந்திரத்தில் அடுத்த ஆண்டு போராட்டம் நடைபெற்றது. அதற்கடுத்து குருவாயூரப்பன் கோவிலில் தீண்டாமையை எதிர்த்துப் போராட்டம்.

இப்படி பல போராட்டங்களுக்கெல்லாம் வழிகாட்டி யாகவும் வைக்கம் போராட்டம் இருக்கிறது.

வைக்கம் போராட்ட வெற்றி - சமூகநீதியினுடைய வெற்றி! ஜாதியத்தினுடைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வெற்றி!

ஆகவே, வைக்கம் போராட்டம் வெற்றி என்பது இருக்கிறதே, சமூகநீதியினுடைய வெற்றி! ஜாதியத்தினுடைய கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கக்கூடிய வெற்றி! மனிதர்கள் சமமானவர்கள் - மனிதர்களிடையே பேதமோ, பிளவோ இருக்கவேண்டியதில்லை என்பதை வலியுறுத்தக் கூடியது வைக்கம் போராட்டம்.

ஒரே மதம் என்று சொல்கிறீர்களே, ஒரே ஜாதி என்று சொல்வதற்குத் தயாரா? ஜாதியில்லாத மதத்தைக் கொண்டுவாருங்கள் என்று கேட்க வேண்டிய தத்துவம் இருக்கிறது.

எனவேதான், நீங்கள் சரியான நேரத்தில் இந்த விழாவைக் கொண்டாடி இருக்கிறீர்கள். அதற்காக எங்களுடைய நன்றி, பாராட்டு!

சீர்திருத்தங்கள் எப்பொழுதும் தேவை?

இந்தக் கருத்துகள் நாடெங்கும் பரவவேண்டும். நூறாண்டுகளுக்கு முன்பு நடந்த போராட்டம், இப்பொழுது ஏன் சொல்லவேண்டும் என்பதினுடைய நோக்கம் - அழகாக இங்கே பேராசிரியர் கருணானந்தன் அவர்கள் ஒரு கருத்தை சொன்னார்.

‘‘சரியாகப் போய்விட்டது; எல்லாம் முடிந்துவிட்டது, இனிமேல் சமத்துவம், சமூகநீதியைப்பற்றியெல்லாம் பேசவேண்டிய அவசியம் இல்லை என்று நீங்கள் நினைக்கக் கூடாது. நோய் மீண்டும் வரும்;  எப்படி கோவிட் கிருமிகள் பல ரூபத்தில் வருகின்றதோ, அதே போன்று, மருத்துவமுறை எப்பொழுதும் தேவை! 

மருத்துவர்கள் எப்பொழுதும் தேவை! 

அதேபோல, சீர்திருத்தங்கள் எப்பொழுதும் தேவை!

அதற்காகத்தான் இங்கே உள்ள அனைவரும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது மீண்டும் குலக்கல்வித் திட்டம் வருகிறது. மீண்டும் ஜாதித் தொழிலை செய்யுங்கள்; அதற்காக உங்களுக்குக் குறைந்த வட்டியில் ஒரு லட்சம் ரூபாய் கடன் கொடுக்கிறோம் என்று நம்பக்கூடிய அள விற்கு ஏமாற்று வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மீண்டும் மீண்டும் உங்களுக்கு நன்றி!

எனவேதான், மீண்டும் அந்தக் கிருமிகள் உள்ளே நுழையவிருக்கிறது. வைக்கம் நூற்றாண்டு காலகட்டத்தில் அதற்கு இடமில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு அந்த வாய்ப்பை உருவாக்கி, அதற்காகத்தான் இந்த வரலாற்றைச் சொல்லுகிறோம். இளைய தலைமுறையினர் இந்தத் தகவல்களைத் தெரிந்துகொண்டு, மனிதர்களுக்கு அழகென்றால், சமத்துவம், சுதந்திரம், சிந்தனை என்பதைக் காட்டவேண்டும் என்று, கேரளத்து சகோதரர்களாக இருக்கக்கூடிய நீங்கள், இந்த அமைப் பைச் சார்ந்த அத்துணைப் பேரும், மிகத் தெளிவாக வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவைக் கொண் டாடி இருக்கிறீர்கள். அதற்காக மீண்டும் மீண்டும் உங்களுக்கு நன்றி!

வைக்கம் போராட்டம் சமத்துவத்தினுடைய எல்லையாக இருக்கும்!

வைக்கம் போராட்டம் நமக்கு வழிகாட்டும்!

வைக்கம் போராட்டம் சமத்துவத்தினுடைய எல்லை யாக இருக்கும்!

வைக்கம் போராட்டம் ஓர் அறிவுப் புரட்சி! அமைதிப் புரட்சி! ரத்தம் சிந்தாத புரட்சி!

மனிதகுலத்தினுடைய வராலற்றில், இப்படி ஒரு பெரிய அளவிற்குத் தெருவில் நடக்கக் கூடாது என்று இருந்தது. 

இப்பொழுது தெருவில் நடக்கக்கூடிய உரிமையையும் தாண்டி, கோவிலின் கருவறைக்குள் அர்ச்சகராகவும் போகக்கூடிய அளவிற்கு சமூகத்தில் மாற்றம் வந்திருக் கின்றது என்றால், வைக்கம் போராட்டம் அதற்கு அடித்தளம்.

இவ்விழாவினை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த உங்கள்அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன்.

வாழ்க பெரியார்!

வளர்க வைக்கம் ளபோராட்ட உணர்வு!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேருரை யாற்றினார்.