வியாழன், 17 ஜூலை, 2025

பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டித் தர முடிவு மகளிரணி – மகளிர் பாசறை கலந்துரையாடலில் தீர்மானம்- சென்னை பெரியார் திடலில்


Viduthalai

சென்னை, ஜூன் 21- சென்னை பெரியார் திடலில் 14.6.2025 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் வட சென்னை, தென் சென்னை, ஆவடி, தாம்பரம், திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர் மாவட்டங்களில் மகளிரணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

மகளிர் அணியைச் சேர்ந்த திராவிஎழில் கடவுள் மறுப்பு கூறினார். மகளிர் பாசறை வளர்ச்சிப் பணிகள் குறித்தும், பெரியார் உலகத்திற்கு இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் தோழர்கள் பங்களிப்பு பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது. மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிர் பாசறை செயலாளர் பா மணியம்மை ஆகியோர் தங்கள் ஆலோசனைகளை வழங்கினர். மாதந்தோறும் மகளிர் தோழர்கள் சந்திக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், மகளிருக்கான சீருடை, பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுவதற்கான முறைகள் பற்றியும், பெரியார் பிஞ்சு  இதழ் சிறுவர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய முறைகள் பற்றியும் மாநில மகளிரணி துணைச் செயலாளர் இறைவி, பொறியாளர் ச.இன்பக்கனி, மாநில மகளிளிரணி துணைச் செயலாளர் பெரியார் செல்வி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தாம்பரம் மகளிர் அணி தலைவர் நாகவல்லி, தாம்பரம் மகளிர் பாசறை செயலாளர் உத்ரா, திருவொற்றியூர் மகளிர் பாசறை செயலாளர் யுவராணி, உமா செல்வராஜ் ஆகியோர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். பெரியார் உலகம் பற்றி கழகத் துணைத் தலைவர் கவிஞர்  அவர்களால் எழுதப்பட்ட அன்றைய விடுதலையில் வெளிவந்த கட்டுரை வாசிக்கப்பட்டது. மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை கூடுவது எனவும், ஒவ்வொரு மாவட்டமும் பெரியார் உலகத்திற்கு குறைந்தது 15 ஆயிரம் பணம் திரட்டி தமிழர் தலைவர் அவர்களைச் சந்தித்து வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் பூவை செல்வி, சுமதி, முகப்பேர் செல்வி, அருணா, அஞ்சனா, சுசித்ரா, இந்திரா,ஞான தேவி,கனிமொழி, விஜயலட்சுமி பெரியார் பிஞ்சு  செம்மொழி ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோழர்களுக்கு சி. வெற்றிசெல்வி தேநீர் வழங்கினார். இறுதியாக இளவரசி நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.


புதன், 16 ஜூலை, 2025

தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் சென்னையில் நடந்த மாபெரும் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம்

 


தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடி ஆய்வைத் தடுத்து நிறுத்தும் ஒன்றிய பிஜேபி – ஆர்.எஸ்.எஸ்.சின் போக்கைக் கண்டித்து

சென்னை, ஜூன் 18- தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடி ஆய்வைத் தடுத்து நிறுத்தும் ஒன்றிய பிஜேபி -ஆர்.எஸ்.எஸ்.சின் போக்கைக் கண்டித்தும், ‘கீழடி அகழாய்வு அறிக்கையை அங்கீகரிக்க முடியாது’ என்று ஒன்றிய பா.ஜ.க. அரசின் கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளதைக் கண்டித்தும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இன்று (18.6.2025) காலை சென்னையில் மாபெரும் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடந்தது.

பா.ஜ.க.வின் மனநிலை

“தமிழ்நாட்டில் நடக்கும் கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள், அறிவியல்பூர்வமாக, தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அங்கீகாரம் வழங்கு வதற்கு முன், அதிக நடைமுறைகள் உள்ளன. அதற்கு இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன. அவ்வாறு, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும் அங்கீகாரம் வழங்கப்படும்” என்று 10.6.2025 அன்று செய்தியாளர்கள் மத்தியில் தமிழ்நாட்டின் இந்நாள், மேனாள் பா.ஜ.க. தலைவர்களை அருகில் வைத்துக்கொண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசின் கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார். இதுதான் பா.ஜ.க.வின் உண்மையான மனநிலை!

அறிவியல் சான்றுகள்

கீழடி அகழாய்வின் முதல் இரு கட்டங்கள் முடிந்து, அவற்றின் ஆய்வு முடிவுகளை அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் முன்வைத்து, அறிக்கையை ஆய்வா ளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அனுப்பி வைத்து இரண்டாண்டுகளுக்குப் பிறகும், அதை ஏற்க மன மில்லாமல், எப்படியாவது, எதைச் சொல்லியாவது கீழடி அகழாய்வைப் புறந்தள்ளிவிட வேண்டும் என்னும் ஒற்றை நோக்கம் தானே தொடர்ந்து ஒன்றிய பா.ஜ.க. அரசிடமிருந்து வெளிப்படுகிறது.

முதுமக்கள் தமிழர்கள்

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அமைச்சரும், நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு அவர்கள் “5,350 ஆண்டுகள் பழைமையானவர்கள். தொழில்நுட்பம் கொண்டவர்கள். மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் தமிழர்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக் கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக் கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்?” என்று சரியாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

என்ன ஆதாரம் இல்லை கீழடி அகழாய்வில்? கண்டெடுக்கப்பட்ட கரிமப் பொருள்களிலிருந்து, அதன் காலத்தைக் கணக்கிடுவதற்காக அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா ஆய்வகம் உள்பட பல ஆய்வகங்களுக்கும் அனுப்பப்பட்டு, அவற்றின் முடிவுகள் வந்திருக்கின்றன. வேறு என்ன ஆதாரம் வேண்டுமென்கிறார்கள்?

பொருந்தாத சாக்குப்போக்கு

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. முன்கூட்டியே திட்டமிட்ட முடிவுதான். அம்முடிவுக்கேற்ப, ஏதோ ஒரு பொருந்தாத சாக்குப்போக்கு, இது நியாயமானதல்ல!

கீழடியை ஏற்றால், திராவிட நாகரிகம் வேதகால நாகரிம் என்று இவர்கள் சொல்லி வருகின்ற கூற்றின் பொய் முகம் கிழிந்து திராவிட நாகரிகமே காலத்திற்கும் முந்தையது என்ற உண்மையை ஒப்புக்கொள்ள நேருமே என்ற காரணத்தால் தங்களது கருத்தினை மறைமுகமாக நிலைநிறுத்தவே மேலும் அறிவியல் சான்றுகள் தேவைப்படுகின்றன எனகிறார் ஒன்றிய அமைச்சர்.

மறுப்பதை ஏற்க முடியாது

பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்காக, கீழடி அகழாய்வை, தமிழ்நாட்டின் தொன்மையை நிறுவும் பல்வேறு அகழாய்வுகளைப் பலி கொடுக்க முடியாது. ஆதாரப்பூர்வமான வரலாற்றுச் செய்திகளை மறைத்து, இந்திய வரலாற்றினைப் பொய்யான தகவல்கள், அனுமானங்கள், இதிகாசங்களின் அடிப்படையில் மாற்றி எழுத முயற்சிக்கும் ஒன்றிய அரசு, கீழடி அகழாய்வு முடிவை அங்கீகரிக்க மறுப்பதையும் ஏற்க முடியாது.

சான்றுகள்

இது ஒரு பண்பாட்டு அழிப்பு என்பதால் தமிழ்நாட்டின் வரலாற்று, பண்பாட்டுச் சிறப்புகளை சிறுமைப்படுத்த முயற்சிப்பதையும், காலத்தால் மூத்த தமிழி எழுத்து வடிவத்திற்குக் கிடைத்துள்ள சான்றுகளை மறுப்பதையும் கண்டித்து இன்று (18.6.2025) காலை 10.30 மணியளவில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கலைஞர் பொன்விழா நுழைவு வாயில் அருகில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மாபெரும் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைவர்கள் கண்டன உரை

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வரவேற்பு ரையாற்றினார்.

‘திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் உமா, ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் இரா.அதியமான், தமிழ்நாடு விவசாயிகள் -தொழிலாளர்கள் கட்சி பொதுச் செயலாளர் எஸ்.ஜெகதீசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் துணைத் தலைவர் எம்.அப்துல் ரகுமான், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் குனங்குடி ஹனீபா,  ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி மாநிலச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்புக்குழு தலைவர் கே.வி.தங்கபாலு, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

நிறைவாக தமிழர் தலைவர் ஆர்ப்பாட்ட தலைமை  – கண்டன உரையாற்றினார்.

பங்கேற்றோர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர்கள் பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, கழக ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், ஊமை.ஜெயராமன், வி.பன்னீர்செல்வம், மாநில கழக மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகன் மாநில கழக இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் செந்தூரபாண்டியன், திராவிட தொழிலாளர் பேரவைத் தலைவர் சிவகுருநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், ஆவடி மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன், கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர் புழல் ஆனந்தன், செயலாளர் பாஸ்கர், திருவொற்றியூர் மாவட்ட தலைவர் வெ.மு.மோகன், செயலாளர் ந.இராசேந்திரன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு, செயலாளர் விஜய் உத்தமன்ராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சிப் பொறுப்பாளர் வேணு கோபால் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் நன்றி கூறினார்.

விடுதலை நாளேடு, 18.06.25

கீழடி தொல்லியல் அகழாய்வு அறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக வெளியிடவேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம்

 

சென்னையில் நடைபெற்ற மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரால் முன்மொழியப்பட்ட இரண்டு தீர்மானங்கள்!


தமிழ்நாட்டின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்தும்
கீழடி தொல்லியல் அகழாய்வு அறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக வெளியிடவேண்டும்!
தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணியிடை மாற்றத்தை உடனே ரத்து செய்க!

சென்னை, ஜூன் 18– தமிழ்நாட்டின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்தும் அறிவியல்பூர்வமான கீழடி தொல்லியல் அகழாய்வு அறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு  உடனடியாக வெளியிடவேண்டும் என்றும், தொல்லியல் துறை அதிகாரி திரு. அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணியிடை மாற்றத்தை உடனே ரத்து செய்யவேண்டும்  என்றும் இரண்டு தீர்மானங்களை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் முன்மொழிந்தார்.

இன்று (18.6.2025) சென்னை சைதாப்பேட்டை கலைஞர்  பொன்விழா வளைவு (பனகல் மாளிகை) அருகே, தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி ஆய்வின் முடிவை மறைக்க முயல்வதா? ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து நடைபெற்ற மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் முன்மொழியப்பட்டன. அதன் விவரம் வருமாறு:

இங்கே சிறப்பாக குழுமியுள்ள அருமைத் தலைவர்களே, தோழர்களே!  உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலமாக இங்கே இரண்டு தீர்மானங்களை மக்கள் மன்றத்தின் சார்பாக நாங்கள் அனைவரும் முன்மொழிகிறோம்.

தீர்மானம் 1:

கீழடி தொல்லியல் அகழாய்வு அறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு  உடனடியாக வெளியிடவேண்டும்!

‘‘தமிழர் வரலாற்றை திராவிடர் வரலாற்றை உறுதிப்படுத்தும் கீழடி ஆய்வின் முதல் இரண்டு கட்ட அறிக்கைகளை வெளியிட மறுக்கும் ஒன்றிய பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

உலகளாவிய ஆய்வு நிறுவனமும், இந்தியாவினுடைய முதன்மை ஆய்வு நிறுவனமும் ஒப்புக்கொண்டு, அதன் காலத்தை, அறிவியல் பூர்வமாகக் குறிப்பிட்டுள்ள பின்னும், அதை ஏற்க முடியாது; போதிய ஆதாரம் இல்லை என்று கூறுவது, ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. அரசினுடைய உள்நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.

தமிழ்நாடு

தமிழ்நாட்டின் தொன்மை வரலாற்றை ஏற்க முடியாது என்ற அடாவடி செயலை– தமிழர்கள் என்றும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

அறிவியல்பூர்வமான கீழடியில், தொல்லியல் அக ழாய்வு அறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு  உடனடியாக  வெளியிடவேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.’’

தீர்மானம் 2:

தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணியிடை மாற்றத்தை உடனே ரத்து செய்ய

‘‘தமிழ்நாட்டின் தொன்மையை, தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றை நிறுவிய, கீழடி தொல்லியல் அகழாய்வை மேற்கொண்ட, தொல்லியல் துறை அதிகாரி திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து அலைக்கழித்து வருகிறது. முன்பு, அசாமிற்குத் தூக்கியடித்தது. பிறகு, மற்றொரு இடத்திற்கு மாற்ற முனைந்தது.

தற்போது டில்லியில் பணியாற்றி வந்த நிலையில், இப்போது நொய்டாவிற்கு அவரை மாற்றியிருக்கிறார்கள்.

கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிட மறுக்கும், ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடிக் கொண்டிருக்கும் சூழலில், எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதுபோல, அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணியிட மாற்றத்திற்கு ஆணையைப் பிறப்பித்திருப்பது, அவருக்குத் தண்டனை கொடுத்ததைப்போல இருக்கிறது என்று சொல்வதற்கு யாருக்கும் தயக்கம் இருக்க முடியாது.

எனவேதான், ஒன்றிய அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கிற்கு இந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தின்மூலம் வன்மை யானக் கண்டனங்களைத் தெரிவிப்பதோடு, அவருடைய பணியிடை மாற்றத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் கோருகிறது.’’

ஆகிய இரண்டு தீர்மானங்களும் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு இந்த ஆர்ப்பாட்டத்தின்மூலமாக நிறைவேற்றப்படுகின்றன.

எழுச்சித் தமிழரின் வேண்டுகோளும் –
தமிழர் தலைவரின் வழிமொழிதலும்!

இங்கே எழுச்சித் தமிழர் சொன்ன கருத்து மிகவும் முக்கியமானது.

கீழடி அகழாய்வைத் தொடருவதற்கு நிதி தரமாட்டோம்; ஆய்வை நிறுத்தவேண்டும் என்று சொல்லக்கூடிய ஓர் அடாவடி ஆளுநர் இங்கே இருக்கிறார். ஒன்றியத்தில், ஓர் அடாவடி அமைச்சரை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

‘‘தமிழ்நாட்டிலேயே, இனி ஏராளமான தொல்லியல் ஆய்வு செய்யப்பட வேண்டிய நிலையில், தொல்லியல் பொருள்களின் காலத்தைக் கணிக்கும் கரிம ஆய்வு மய்யத்தைத் (Carbon Dating Laboratory) தமிழ்நாட்டிலேயே அமைக்க தமிழ்நாடு அரசு ஆவண செய்ய வேண்டும்’’ என்று
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும் போது வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  வரவேற்று, ‘‘முதலமைச்சர் அவர்கள் அந்த ஆய்வு மய்யத்தை மக்கள் ஆதரவோடு அமைக்க அறிவிக்க வேண்டும். 40 முதல் 45 கோடி ரூபாய் வரை அதற்குச் செலவாகும் என்று எழுச்சித் தமிழர் அவர்கள் சொன்னார்கள்.

தமிழ்நாட்டின் உணர்ச்சியுள்ள மக்கள் சார்பாக சொல்கி றோம், வீதிமன்றத்தின் சார்பாக சொல்கிறோம், நாளைக்கு ஓர் அறிக்கையை, முதலமைச்சர் என்ற முறையில் வேண்டாம்; இந்தக் கூட்டணியினுடைய தலைவர் என்ற முறையில் வெளியிடட்டும்.

மக்கள் பெரு மகிழ்வோடு நிதி வழங்குவார்கள். அவர்கள் வழங்கும் நிதி, மக்களின் ஆதரவையும் வெளிப்படுத்துவதாக அமையும். அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்.’’

இதுவும் மாநில சுயாட்சியில் மிக முக்கியமான ஓர் அம்சமாகும்.

எனவே, சகோதரர் எழுச்சித் தமிழர் சொன்னதை நான் வழிமொழிகிறேன்; இந்தக் கூட்டமும் வழிமொழியும் என்று நம்புகிறேன்.

அனுமதி முத்திரைக் குத்தவேண்டுமே என்று சொன்னார் நம்முடைய எழுச்சித் தமிழர்.  அந்த முத்திரை இல்லாவிட்டாலும், நாம் போய்க்கொண்டே இருப்போம். மக்கள் கருத்தை முன்னால் திரட்டினால், சட்டம் நொண்டியடித்துக் கொண்டு தானே வரும் என்பதுதான் நடைமுறைப் பழமொழி.

மக்கள் அங்கீகாரத்தைக் காட்டுவோம்!

இதற்கு இரண்டு உதாரணங்களைச் சொல்லலாம்.

ஒன்று, சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று நீதிமன்றம் சொன்னது. அதனால், அந்தத் திருமணங்களை நிறுத்திவிட்டார்களா? அதற்குப் பிறகு 10 ஆயிரம் சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றன. பிறகு அண்ணா ஆட்சி, திராவிட ஆட்சி வந்தது, சட்டம் பின்னாலே நொண்டிக் கொண்டு வந்தது.

எனவே, சட்டம் பின்னால் வரும்; ஆனால், சமுதாயம் முன்னால் போகும்.

அதேபோன்று, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்; இன்றைக்குத் தமிழைப்பற்றி பேகிறார்களே பலர், யாரும் செய்யாத பணியை செய்த ஒரே தலைவர் தந்தை பெரியார்தான்.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை 1935 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் அறிவித்தார். அப்படி அறிவித்ததோடு நிற்கவில்லை; தன்னுடைய ‘குடிஅரசு’ ஏட்டில் அதனை முழுமையாகச் செயல்படுத்தினார். பிறகு ‘விடுதலை’யில் பயன்படுத்தினார்.

1935 ஆம் ஆண்டு தொடங்கியது, 50 ஆண்டுகள் கழித்து, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் என்றே வந்தது.

ஆகவேதான், இன்றைக்கு அவர்கள் ஒப்புக்கொள்கி றார்களா, இல்லையா? அங்கீகரிக்கிறார்களா, இல்லையா? என்பதைப்பற்றி கவலைப்படாமல், மக்கள் அங்கீகாரத்தை முதலில் நாம் காட்டுவோம்.

இந்தத் தீர்மானங்களை அத்துணை பேரும் வழிமொழிந்தீர்கள் என்பதற்கு ஆதாரமாக, எழுந்து நின்று கையொலி எழுப்பி, இதற்குப் பெருமைச் சேர்க்கவேண்டும்.

ஆர்ப்பாட்டத்திற்கு வந்த தோழர்களுக்கு நன்றி!

–  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்கள் மத்தியில் நிதி திரட்டுவதை ஆதரிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவர் கே.வி.தங்கபாலு கட்சியின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் அளிப்பதாக அறிவித்தார்.


- விடுதலை நாளேடு, 18.06.25

சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த நாள் – தமிழர் தலைவர் ஆசிரியர் மலர்தூவி மரியாதை (சென்னை, 25.6.2025)

 

சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த நாள் – தமிழர் தலைவர் ஆசிரியர் மலர்தூவி மரியாதை (சென்னை, 25.6.2025)


சமூகநீதியில் பெற்றதைவிட, பெறவேண்டியது அதிகம் – அதை நோக்கி நாம் செல்லவேண்டும் என்பதுதான் வி.பி.சிங் பிறந்த நாளில், நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய சூளுரை! செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்



சென்னை, ஜூன் 25–   சமூகநீதியில் பெற்றதைவிட, பெற வேண்டியது அதிகம். அதை நோக்கி நாம் செல்லவேண்டும் என்பதுதான், வி.பி.சிங் அவர்களுடைய பிறந்த நாளில், நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய சூளுரையாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மறைந்த சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுடைய பிறந்த நாளான இன்று (25.6.2025) சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

இந்திய வரலாற்றில் ஒரு ஒப்புவமையற்ற பிரதமர் வந்தார் என்று சொன்னால், அது சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள்தான்.

காரணம் என்னவென்று சொன்னால், முழுக்க முழுக்க அவர், அந்தப் பதவிக்கு மிகத் தகுதியானவர்.

பிளாட்டோ ஒருமுறை தன்னுடைய ஆய்வு நூலான 'ரிபப்ளிக்'கில், பதவிக்கு யார் தகுதியானவர்? என்கிற ஒரு கேள்வியைக் கேட்டு, அதற்கு ஒரு பதிலும் சொன்னார்.

இது நீண்ட காலமாக வரலாற்றில் பதிவாகி இருக்கின்ற செய்தியாகும்.

''யார் பதவியை விரும்பாதவர்களோ, அவருக்குத்தான் அந்த முழுத் தகுதி இருக்கிறது'' என்று சொன்னார்.

அதுதான்,வி.பி.சிங் அவருடைய வரலாற்றில், எந்த அரசியல்வாதியிடமும் கண்டுபிடிக்க முடியாத ஒன்று.

பிரதமர் பதவியை இரண்டாவது முறை
ஏற்க மறுத்தவர்!

இரண்டாவது முறை, அய்க்கிய முற்போக்கு ஜனநாயக முன்னணி, அமைத்த கூட்டணியில், இந்தியாவில் உள்ள அத்துணைத் தலைவர்களும், வி.பி.சிங் அவர்களைத் தேடி, நாடிச் சென்று, ''நீங்கள்தான் பிரதமராக வரவேண்டும்'' என்று அவரை வற்புறுத்தினார்கள்.

ஆனால், அவர் அந்தப் பதவியை ஏற்க மறுத்துவிட்டார்.

மீண்டும் மீண்டும், வற்புறுத்துவதற்காக இவரை சந்திக்க முயல்கிறார்கள் என்று இவருக்குத் தெரிந்தவுடன், பிரதமராக ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்வரை, இவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியாத அளவிற்கு, ஓரிடத்திலே தன்னை மறைத்துக் கொண்டார். பிறகுதான் வெளியில் வந்தார்.

மற்ற மாநிலங்களைவிட,
தமிழ்நாட்டில் அதிகமாக மதிக்கப்படுகிறார்

அந்த அளவிற்குப் பதவியை விரும்பாத, மக்கள் மன்றத்தின் தேவையை மட்டுமே கருதியவர். அதனால்தான், அவர் இன்றைக்கும், மற்ற மாநிலங்களைவிட, தமிழ்நாட்டில் அதிகமாக மதிக்கப்படுகிறார்.

சமூகநீதி மண்ணான, இந்தப் பெரியார் மண், திராவிட மண், அவரை சிறப்பாகக் கவுரவிக்க வேண்டும் என்ற நிலையில், கலைஞர் அவர்கள் காலத்திலிருந்து, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கங்கள் அவரிடத்தில் தனி ஈடுபாடு கொண்டிருந்ததோடு, மிகப்பெரிய அளவில், நாம் வைத்த வேண்டுகோளை ஏற்று, இன்றைக்குத் 'திராவிட மாடல்' ஆட்சியை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்ற நமது முதலமைச்சர் அவர்கள், மாநிலக் கல்லூரி வளாகத்தில் இதோ இந்த அருமையான சிலையைத் திறந்தார்கள்.

இந்தியாவில் சிலை திறந்தது தமிழ்நாட்டில்தான்!

வி.பி.சிங் அவர்களுக்கு முதன்முறையாக இந்தியாவில் சிலை திறந்தது தமிழ்நாட்டில்தான் என்ற பெருமையும், அந்தச் சிலைக்கும் கீழே நாம் நின்றோம் கொண்டிருக்கின்றோம் என்ற சிறப்பும் தனித்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

இன்றைய, அவருடைய பணி, அவருடைய தொண்டை தொடர வேண்டிய அவசியம் உள்ளது. ஏனென்றால், அவர், 27 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொடுத்தாலும், அது ஒரு தொடக்கமே தவிர, அது ஒரு முடிவல்ல.

ஆகவேதான், அதனைத் தொடரவேண்டும் என்கின்ற எண்ணம், அவரை, அன்றைக்கு எதிர்த்தவர்கள், இன்றைக்கு அவருடைய கருத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

எனவேதான், சமூகநீதித் துறையில், மிக முக்கியமாக, நீதித் துறையில் சமூகநீதி. தனியார்த் துறையில், சமூகநீதி, இட ஒதுக்கீடு அவசியம்.

அதேபோல, 50 சதவீதத்திற்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்று அரசமைப்புச் சட்டத்தில் எந்த தடையும் கிடையாது. செயற்கையாக நீதிமன்றங்களால் அது உருவாக்கப்பட்டதை வலியுறுத்தி வருகின்ற காரணத்தினால், அதுவும் விரைவில் வெற்றி பெறவேண்டும்.

சமூகநீதியில் பெற்றதைவிட,
பெறவேண்டியது அதிகம்!

எனவே, சமூகநீதியில் பெற்றதைவிட, பெறவேண்டியது அதிகம். அதை நோக்கி நாம் செல்லவேண்டும் என்பதுதான், வி.பி.சிங் அவர்களுடைய பிறந்த நாளில், நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய சூளுரையாகும்.

இந்துக்களை ஒன்று சேர்ப்பது இருக்கட்டும்! முதலில் கூட்டணி ஒன்று சேர்ந்ததா?

செய்தியாளர்: மதுரையில் நடைபெற்ற முருகன் பக்தர்கள் மாநாட்டில், பெரியார், அண்ணா ஆகியோரைக் கொச்சைப் படுத்தும் வகையில் செய்திகளை ஒளிபரப்பியிருக் கூறுகிறார்களே, அதுகுறித்து உங்கள் கருத்து?

தமிழர் தலைவர்: ''ஹிந்துக்களை ஒன்று சேர்க்கிறோம்'' என்று சொன்னார்கள். அது பிறகு இருக்கட்டும்; அவர்களுடைய கூட்டணியே முதலில் ஒன்று சேர்ந்ததா, இல்லையா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இவ்வாறு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.



- விடுதலை நாளேடு, 25.06.25

செவ்வாய், 8 ஜூலை, 2025

கு.பா. தமிழினி – சு. ஆகாஷ் மகோதர் வாழ்க்கை இணையேற்பு விழா

கு.பா. தமிழினி – சு. ஆகாஷ் மகோதர் வாழ்க்கை இணையேற்பு விழா

தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி – கோ. குமாரி இணையரின் மகள் கு.பா. தமிழினி, எம்.எஸ்.ஜெ. சுந்தர் – எம்.எஸ்.ஜி. உஷா சுந்தர் இணையரின் மகன் சு. ஆகாஷ் மகோதர் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவிற்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் தலைமை வகித்து இணையேற்பு நிகழ்வை நடத்தி வைத்தார். உடன்: கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்ெமாழி, கழகப் பொருளாளர் வீ. குமரேசன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் குடும்பத்தினர். (சென்னை, 6.7.2025)

- விடுதலை நாளேடு, 06.07.2025