சனி, 19 அக்டோபர், 2019

'கடவுளை மற மனிதனை நினை' என்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா (செப்.17)
- விடுதலை நாளேடு 25 9 19


‘‘சாமி கும்பிடுறேன்'' என்று வேண்டுமானால் சொல்லித் தொலை; ‘‘கும்பிடுறேன் சாமி'' என்று எவனைப் பார்த்தும் சொல்லாதே என்கிற சுயமரியாதை உணர்வை ஊட்டிய இயக்கம்தான் திராவிட இயக்கம்

தந்தை பெரியாரின் 141 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில்


பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை
சென்னை, அக்.18  ‘‘சாமி கும்பிடுறேன்'' என்று வேண்டுமானால் சொல்லித் தொலை. ‘‘கும்பிடுறேன் சாமி'' என்று எவனைப் பார்த்தும் சொல்லாதே என்கிற சுயமரியாதை உணர்வை ஊட்டிய இயக்கம்தான் திராவிட இயக்கம் என்றார் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் .

தந்தை பெரியாரின் 141 ஆம் ஆண்டு


பிறந்த நாள் பொதுக்கூட்டம்


17.9.2019 அன்று சென்னை தியாகராயர் நகரில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 141 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில்  திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்  அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

மானமிகு தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.இராசா அவர்களே,

திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தம்பி அன்புராஜ் அவர்களே,

திராவிடர் கழகத்தின் பிரச்சார செயலாளர் அருள்மொழி அவர்களே,

கூட்டத்திற்குத் தலைமை ஏற்றிருக்கின்ற அருமை நண்பர் வில்வநாதன் அவர்களே,

மேடையில் அமர்ந்திருக்கின்ற அய்யா ரத்தினசபாபதி அவர்களே,

கூடியிருக்கின்ற அருமைப் பெரியோர்களே, நண்பர்களே, ஊடகவியலாளர்களே, அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எந்த இடத்தில் நின்று தன் கடைசி உரையை தந்தை பெரியார் அவர்கள் ஆற்றினாரோ, அதே சென்னை தியாகராயர் பகுதியில் நடைபெறுகின்ற இன்றைய பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிற ஒரு நல்ல வாய்ப்பினை தந்திருக்கிற ஆசிரியர் அவர்களுக்கு என் நன்றியினை முதலில் பதிவு செய்துகொள்கிறேன்.

‘டைம்ஸ் ஆஃப் இந்தியா'


இந்தக் கூட்டத்திற்கு வந்துகொண்டிருக்கின்றபொழுது, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகையில் இருந்து நாளை காலை வெளியிடுவதற்காக இரண்டு, மூன்று கேள்விகளை முன்வைத்தார்கள்.

அதில் முதல் கேள்வி என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு மணிநேரத்திற்கு முன்பு அமித்ஷா அவர்கள் டில்லியில் பேசியது குறித்து.

ஒரே நாடு, ஒரே கட்சியாம்!


டில்லியில் ஒரு மணிநேரத்திற்கு முன்பு பேசியிருக்கிறார்; இந்தியாவில் பல கட்சி அரசியல் என்பதை மக்கள் வெறுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஒரே நாடு, ஒரே மொழி,

ஒரே நாடு, ஒரே மதம்

ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டிலிருந்து

ஒரே நாடு, ஒரே கட்சி என்கிற இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார்கள்.

‘‘பல கட்சி அரசியலை இந்திய மக்கள் வெறுக்கத் தொடங்கிவிட்டார்கள். பல கட்சி அரசியல் இந்தியாவில் வெற்றி பெறவில்லை என்கிற கருத்து இன்றைக்கு எங்களுக்குப் புரிகிறது'' என்று அமித்ஷா சொன்னதைப்பற்றி ஒரு கேள்வி.

இரண்டாவதாக, இன்றைக்குத்தான் பிரதமர் மோடி அவர்களுக்கும் பிறந்த நாள்.

பெரியார் 141 என்பதுதான் டிரெண்டிங்


‘டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகையிலிருந்து கேட்டார்கள், ஆனால், பெரிய வியப்பாக இருக்கிறது எங்களுக்கு. டுவிட்டர் என்று சொல்லுகிற சமூக வலைதளத்தில், மோடியைக் காட்டிலும், இன்றைக்குப் பெரியார் 141 என்பதுதான் டிரெண்டிங்காக இருக்கிறது.

அவர்கள் இந்தியா முழுவதும் அந்த வாழ்த்துகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பெரியாருக்கான வாழ்த்துகள் கூடியிருப்பதற்கு என்ன காரணம்?'' என்றார்கள். ‘‘மோடிக்கான வாழ்த்துகள் இந்தியா முழுவதும் இருந்து வருகிறது. பெரியாருக்கான வாழ்த்துகள் உலகம் முழுவதும் இருந்தும் வருகிறது. எனவே, அது கூடுதலாகத்தான் இருக்கும்'' என்று சொன்னேன்.

‘‘சாமி கும்பிடுறேன்'' என்று சொல்கிறவர்களைப்பற்றியல்ல;  ‘‘கும்பிடறேன் சாமி'' என்று சொல்கிறவர்களைப்பற்றித்தான்


மூன்றாவது கேள்விதான் முக்கியமான கேள்வி.

பெரியாரின் கொள்கைகள் இன்றைக்கும் பொருத்தமானவையாக, தேவையானவையாக இருக்கின்றனவா என்று கேட்டார்கள்.

இரண்டு வரிகளில் நான் சொன்னேன்,

பெரியாரின் கொள்கைகள் முன் எப்போதையும்விட, இப்பொழுதுதான் கூடுதல் தேவையாக இருக்கின்றன.

சுருக்கமாக சொல்வதென்றால்,

இன்றைக்கு அத்திவரதரிலிருந்து பக்தர்களின் எண்ணிக்கை கூடிவிட்டதே என்று நீங்கள் கவலைப்படவேண்டாம்.

‘‘சாமி கும்பிடுறேன்'' என்று சொல்கிறவர்கள் அன்றைக்கும் இருக்கிறார்கள்; இன்றைக்கும் இருக்கிறார்கள். அவர்களோடு நாங்கள் பேசுகிறோம். அதிலிருந்து மாற்றங்களைக் கொண்டுவர விரும்புகிறோம்.

எங்களுடைய கவலையெல்லாம் ‘‘சாமி கும்பிடுறேன்'' என்று சொல்கிறவர்களைப்பற்றியல்ல - ‘‘கும்பிடறேன் சாமி'' என்று சொல்கிறவர்களைப்பற்றித்தான்.

சாமி கும்பிடுகிறவன் வேண்டுமானாலும், கும்பிட்டுவிட்டுப் போகட்டும்; ஆனால், ‘‘கும்பிடுகிறேன் சாமி'' என்று இன்றைக்கு யாராவது, எவரையாவது பார்த்து சொல்கிறார்களா?

ஒரு கட்டத்தில் பூணூலைப் பார்த்தாலே, ‘‘சாமி'' என்று சொன்னவர்கள் எல்லாம், இன்றைக்கு அவர்களைப் பார்த்தால், ஒரு எள்ளல் சிரிப்போடு பார்க்கிறார்களே, இந்த மாற்றம், இந்த மண்ணில் வந்து சேர்ந்ததற்கு எங்கள் அய்யா, பெரியார் அவர்களும், திராவிடர் கழகமும்தான் காரணம். அதனால்தான் அவர்கள் அவ்வளவு கோபப்படுகிறார்கள்.

சிலைகளே அச்சுறுத்துகிறபொழுது,


கூட்ட மேடைகள் அச்சுறுத்தாதா?


இன்றைக்குக் கவிஞர் பேசுகிறபொழுது சொன்னார்கள், இந்த மேடையில், இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு எத்தனைவிதமான தடைகள் இருந்தன என்று.

இருக்கத்தான் செய்யும்; சிலைகளே அச்சுறுத்துகிறபொழுது, கூட்ட மேடைகள் அச்சுறுத்தாதா?

உலகத்திலேயே ஒருவர் இறந்து போய், 46 ஆண்டுகளுக்குப் பிறகும், எதிரிகளை சிலையாக நின்றும் அச்சுறுத்துகிறார் என்றால், சிலைகளைக் கண்டுகூட, உலகத்தில் அய்யா பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் இரண்டு பேரின் சிலைகளைக்  கண்டு அச்சப்படுகிறார்கள்.

அதற்கு என்ன காரணம் என்றால், பெரியார் வெறும் அறிவாசான் மட்டுமில்லை; அடிப்படையில் அவர் ஒரு போராளி.

பெரியாரிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய செய்தி!


பெரியாரிடத்தில் இருந்து இன்றைக்கு நாம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒரு பெரிய செய்தி எது என்று நான் கருதுகிறேன் என்றால், அவருடைய அறிவார்ந்த செய்திகளை மட்டுமல்ல, அவருடைய போர்க்குணத்தையும் சேர்த்து நாம் ஒவ்வொருவரும் உள்வாங்கிக் கொள்ளவேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.

ஆசிரியர் அவர்களும், மதிப்பிற்குரிய ஆ.இராசா அவர்களும், அருள்மொழியும் வந்திருக்கிறார்கள்; அவர்கள் பேசவேண்டும் என்கிற காரணத்தினால், என்னுடைய நேரத்தை நான் சுருக்கமாக வைத்துக்கொண்டு, இரண்டு, மூன்று செய்திகளை சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன்.

அய்யாவினுடைய போர்க்குணம் எப்படிப்பட்டது என்பதற்காகச் சொல்கிறேன்.

இன்று காலையில், ‘கலைஞர் தொலைக்காட்சியில்' நான் பேசியதை உங்களில் பலர் கேட்டிருக்கலாம்.

ஆனாலும், இங்கே இருக்கிற இந்த வலையொளிகள், தொலைக்காட்சிகள் மூலமாக மக்கள் எல்லோருக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக அந்தச் செய்தியை மறுபடியும் நான் சொல்கிறேன்.

‘‘நீதி கெட்டது யாரால்?''


நான் அறிவேன், இந்தக் கூட்டத்தில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் மலையப்பன் வழக்கு  என்றால் என்னவென்று தெரியும்?

‘‘நீதி கெட்டது யாரால்?'' என்ற ஒரு சிறு நூலாகவே அது வந்திருக்கிறது.

நீதி கெட்டது யாரால்? என்ற புத்தகத்தை படிக்காத இளைஞர்கள் நம்மிடத்தில் இருக்க முடியாது; இருந்தால், இருக்கக்கூடாது. படித்துவிடவேண்டும்; அதனுடைய சுருக்கத்தை மிக சுருக்கமாக நான் சொல்கிறேன்.

மலையப்பன் என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்தவர். இன்றைக்குக் காலையில் நான் சொல்லி முடித்ததற்குப் பிறகு, கூடுதலாகச் சில செய்திகள் - அந்தச் செய்தியைக் கேட்டவர்களிடமிருந்து எனக்குக் கிடைத்தது.

நரிக்குறவர்கள் ஒரு அரசாங்கத்தினுடைய தண்ணீர்த் தொட்டியிலிருந்து தண்ணீர்ப் பிடிப்பதற்கான அனுமதியை வழங்கி மலையப்பன் அவர்கள் உத்தரவிட்டார்.

மலையப்பன் அவர்கள்மீது உள்ள வழக்கு அதுதான். வழக்குரைஞர்கள் மேடையில் இருக்கிறார்கள். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இரண்டு பேரும் பார்ப்பனர்கள்.

அந்த வழக்கில் ஆஜரான அரசாங்க வழக்குரைஞரும் வெங்கடாச்சாரி என்கிற ஒரு பார்ப்பனர்.

1956 நவம்பர் மாதம்


திருச்சியில் பொதுக்கூட்டம்


அந்த வழக்கில் என்ன தீர்ப்பளித்தார்கள் என்றால், அந்த ஆணை செல்லும், செல்லாது என்று சொல்லவில்லை. இப்படிப்பட்ட ஒருவரை ஆட்சியராக அரசாங்கம் எப்படி வைத்துக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் கேட்டார்கள்.

கொதிப்படைந்துபோன அய்யா தந்தை பெரியார் அவர்கள், 1956 நவம்பர் மாதம் திருச்சியில் பொதுக்கூட்டம் போட்டு, மலையப்பனை எப்படி ஆட்சியராக வைத்துக்கொள்ளலாம் என்று நீதிபதிகள் எப்படி கேட்க முடியும்? என்று அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அதை மட்டும் அவர் பேசவில்லை, அவர் சொன்னார், அந்த நீதிபதிகள் உள்நோக்கத்தோடு, இவர் பார்ப்பனரல்லாதவர் என்கிற காரணத்திற்காகவே இப்படி தீர்ப்பை எழுதியிருக்கிறார்கள் என்று சொன்னார்.

‘‘நான் கடவுளையே எதிர்க்கிறேன்;


பிறகு நீதிபதிகளை எதிர்ப்பதற்கு என்ன?''


அப்போதுதான் அய்யாவிடம் கேட்டார்கள்,

‘‘நீங்கள் நீதிபதிகளையே எதிர்க்கிறீர்களா?'' என்று.

அய்யா சொன்னார், ‘‘நான் கடவுளையே எதிர்க்கிறேன்; பிறகு நீதிபதிகளை எதிர்ப்பதற்கு என்ன?'' என்று கேட்டார்.

‘‘கடவுளையே எதிர்க்கிறோம்; பிறகு என்ன நீதிபதி வெங்காயம்.நீதிபதியாக இருந்தாலும், தவறு, தவறுதான்'' என்று அவர் சொன்னதற்குப் பிறகு, அதற்காக அவர்மீது வழக்குத் தொடுக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம்.

அந்த வழக்கில், நீதிபதி இராஜமன்னார் அவர்களும், எஸ்.எஸ்.வி.அய்யர் ஆகிய இரண்டு நீதிபதிகள் விசாரித்தார்கள்.

1957 ஏப்ரல் மாதம், 9 ஆம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் நீங்கள் குற்றவாளி என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? அல்லது வாதாட விரும்புகிறீர்களா? என்று கேட்டபொழுது,

நீதிமன்ற நாடகங்களில்


எனக்கு நம்பிக்கையில்லை


அய்யா சொன்னார், ‘‘இந்த நீதிமன்ற நாடகங்களில் எனக்கு நம்பிக்கையில்லை; நான் வாதாட விரும்பவில்லை. நீங்கள் அனுமதித்தால், எனக்குக் கால அவகாசம் கொடுத்தால், நான் ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறேன்'' என்றார்.

15 நாள் அவகாசத்தில், அய்யா கொடுத்த ஸ்டேட்மெண்ட் இருக்கிறதே, குறித்து வைத்துக் கொள்ளுங்கள், நம்முடைய இதழ்களில், நூலகங்களில் இருக்கிறது - 1957 ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி, அவர் நீதிமன்றத்தில் கொடுத்த அந்த வாக்குமூலத்திற்கு இணையாக, உறுதியான, போர்க்குணம் மிக்க இன்னொரு அறிக்கையை, வாக்குமூலத்தை நாம் பார்க்க முடியாது.

அவர் சொன்னார், உள்நோக்கத்தோடு அந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டது என்றுதான் நான் பேசினேன். இப்பொழுதும் நான் அப்படித்தான் நம்புகிறேன்.

பார்ப்பன நீதிபதிகள் இரண்டு பேரும்


நஞ்சை நெஞ்சில் வைத்திருக்கிறவர்கள்


இன்னொரு செய்தியை சொல்கிறார், ‘‘மலையப்பன்  என்கிற மாவட்ட ஆட்சியரை நான் பார்த்ததுகூட கிடையாது. இங்கே இருக்கிற நீதிபதிகளைப்பற்றி எனக்குத் தெரியாது. அவருடைய வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளையும் நான் பார்த்ததில்லை. ஆனால், ஒன்று தெரியும். ஆட்சியர் மலையப்பன் மிக நேர்மையானவர், நாணயமானவர் என்று சொல்கிறார்கள். அவருடைய வழக்கில் தீர்ப்பளித்த பார்ப்பன நீதிபதிகள் இரண்டு பேரும் நஞ்சை நெஞ்சில் வைத்திருக்கிறவர்கள் என்று சொல்கிறார்கள். அந்தத் தீர்ப்பைப் பார்த்தால், அப்படித்தான் இருக்கிறது.''

ஒரு தீர்ப்பை நீதிபதிகள் எதிராக வழங்கக்கூடாதா என்று கேட்டால், இங்கேதான் பெரியாருடைய அற்புதமான வாதத் திறன் ஒரு தர்க்கம் - ஒரு லாஜிக் இருக்கிறது.

அவர் சொல்கிறார், ‘‘அந்தத் தீர்ப்பில், மலையப்பன் அவர்களுடைய ஆணை செல்லும், செல்லாது என்று சொல்லியிருந்தால், நான் பேசியிருக்கமாட்டேன்.

அந்த ஆணை செல்லும், செல்லாது என்பதுதானே - அதனைத் தாண்டி,  இவரை எப்படி இன்னமும் நீங்கள் ஆட்சியராக வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டால், அவரை வேலையை விட்டு விலக்கவேண்டும் என்பதுதான் அந்தத் தீர்ப்பின் நோக்கமாக இருக்கிறது என்றால், அது உள்நோக்கம் உடையதா? இல்லையா?

பார்ப்பன துவேஷி என்னும் பெயரில் அழைக்கப்படுகிற ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன்


எனவேதான், நான் எதிர்த்தேன். என்னை பார்ப்பன துவேஷி என்கிறார்கள்.

ஆம், பார்ப்பன துவேஷி என்னும் பெயரில் அழைக்கப்படுகிற ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன் நான்.''

அந்த விளக்கத்தைப் பாருங்கள்; பார்ப்பனீயத்தை எதிர்ப்பது என்பது, ஜாதிய அமைப்பை எதிர்ப்பது. ஒரு குறிப்பிட்ட ஜாதியை எதிர்ப்பதல்ல; ஒட்டுமொத்தமாக இந்த ஜாதிய அமைப்பையே எதிர்ப்பது.

‘‘பார்ப்பன துவேஷி என்று அழைக்கப்படுகிற, ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன் நான்; இப்பொழுதும் சொல்லுகிறேன், பார்ப்பனர்கள் நீதிபதியாக இருக்கும் நாடு, கடும்புலி வாழும் காடு.''

எங்கே சொன்னார்?

நீதிமன்றத்திலே சொன்னார்.

அதற்குப் பிறகு கடைசியாகவும் அவர் சொன்னார், நாக்கில் பிழை என்று சொன்னால், வேம்பு இனிக்காது; தேன் கசக்காது.

அதுதான் பார்ப்பனத் தன்மை. அதற்குள் ஆயிரம் பொருள் இருக்கிறது. எதற்காக அவர் சொன்னார்?

பிறவியிலே குற்றம் இல்லை என்றால் தவிர, பார்ப்பனர்களிடம் நேர்மை வராது என்பதை அவர் எடுத்துச் சொன்னார்.

இதுதான் என்னுடைய கருத்து. ‘‘நீங்கள் என்ன தண்டனை தருவதாக இருந்தாலும், நீதிபதிகளின் சித்தம் என் பாக்கியம்'' என்று அது முடிகிறது.

எதற்காக இதனைக் குறிப்பிடுகிறேன் என்றால், அய்யாவின் போர்க் குணத்தையும், அய்யாவை எதிர்க்கிறவர்களுடைய குணத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இன்றைய நிலையோடு நான் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.

எங்கள் அய்யா சிங்கம் எங்கே?


‘‘வாய் தவறி வந்துவிட்டது'' என்று சொல்லுகின்ற கோழைகள் எங்கே?


நீதிமன்றத்தைப்பற்றி பேசிவிட்டு, நீதிமன்றத்தில் போய், ‘‘ஆம், நான் அப்படித்தான் பேசினேன்; என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்கிறேன் என்று சொன்ன எங்கள் அய்யா சிங்கம் எங்கே?

அய்க்கோர்ட்டாவது என்று பேசிவிட்டு, மக்களிடம் மார்தட்டிவிட்டு, நீதிமன்றத்திற்குப் போய், ‘‘வாய் தவறி வந்துவிட்டது'' என்று சொல்லுகின்ற கோழைகள் எங்கே? இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது எங்கள் அய்யாவைப்பற்றி பேசுவதற்கு.

நீங்கள் சொல்லியிருக்கவேண்டும் அல்லவா - அய்க்கோர்ட்டாவது என்று நான் சொன்னேன் - அது உண்மைதான் - இப்போதும் சொல்கிறேன் என்று நீதிமன்றத்திலே நீ சொல்லியிருக்கவேண்டும் அல்லவா! என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்கிறேன் என்று சொல்லியிருந்தால்,  பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக இருக்கின்றவருக்கு இவ்வளவு துணிச்சல் இருக்கிறதே என்று கருதலாம்; ஆனால், நீதிமன்றத்திற்குச் சென்று வாய் தவறி சொல்லிவிட்டேன் என்று பேசிவிட்டு வருகிறவர்களுக்கெல்லாம் அய்யாவைப்பற்றி பேசுவதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது என்று நான் சொல்ல விரும்புகிறேன்.

கான்பூரில் அய்யாவின் உரை!


இன்னும் ஒரே ஒரு செய்தியை நான் சொல்ல விரும்புகிறேன்.

கான்பூருக்குச் சென்று வடமாநில மக்களிடையே அய்யா பேசிய அந்தப் பேச்சு.

நீதிமன்றத்திற்குச் சென்று நீதிபதிகளுக்கு எதிராகப் பேசியதைப்போல, வடநாட்டிற்குச் சென்று வடநாட்டு மக்களுடைய பழக்க வழக்கங்கள், பிற்போக்குத்தனங்களைப்பற்றி அவர்களிடையே பேசினார்.

பிற்படுத்தப்பட்ட இந்து வகுப்பார் சங்க மாநாடு


1944 டிசம்பர் மாதத்தின் கடைசி மூன்று நாள்களில், கான்பூரில் நடைபெற்ற மாநாடு. எந்த அமைப்பின் சார்பில் அந்த மாநாடு நடைபெறுகிறது.

பிற்படுத்தப்பட்ட இந்து வகுப்பார் சங்க மாநாடு.

இந்து வகுப்பார் என்றுதான் அவர்கள் போட்டிருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட இந்து வகுப்பார் நடத்துகின்ற மாநாடு அது.

அந்த மாநாட்டில் பேசுகிறபொழுது அய்யா சொல்லுகிறார்,

இந்து மதத்தை முதலில் விட்டொழியுங்கள்.

எதற்காக இப்போது திரும்பத் திரும்ப நம்மிடையே கேட்கப்படுகின்ற ஒரு கேள்விக்கான விடையை - நான் அதைத்தான் சொன்னேன் -  நீங்கள் கேள்வியை எதையாவது புதிதாகக் கேட்டால்தான், நாங்கள் புதிதாக விடை சொல்ல முடியும்.

1944 இல் எங்கள் அய்யா விடை சொல்லிவிட்ட கேள்விக்கு, நீங்கள் மறுபடியும் மறுபடியும் கேட்டுத் தொலைக்கிறீர்களே!

நீங்கள் இசுலாம் மதத்தை எதிர்ப்பதில்லை, கிறித்துவ மதத்தை எதிர்ப்பதில்லை. இந்து மதத்தை மட்டும் எதிர்க்கிறீர்களே ஏன் என்று இப்பொழுதும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இசுலாம் மதமும், கிறித்துவ மதமும், எல்லா மதமும் கடவுளை ஏற்கிறது; மூடநம்பிக்கை உடையது. நாங்கள் கடவுள் இல்லை என்று சொன்னால், அல்லாவை தவிர என்று அதற்குப் பொருள் இல்லை.

கடவுள் நம்பிக்கையும் மூடநம்பிக்கையும் எல்லா மதங்களுக்கும் உரியது. ஆனாலும், இந்து மதத்தை, நாங்கள் குறிப்பாக எதிர்க்கத்தான் செய்கிறோம். அதற்கு என்ன காரணம்?

இந்து மதத்தின் சிருஷ்டிதான்


இந்த ஜாதிய ஏற்றத்தாழ்வு


1944 ஆம் ஆண்டு கான்பூரில் பேசுகிறபொழுது, அய்யா சொன்ன விடையை நான் சொல்லுகிறேன்.

வேறு எந்த மதத்திலும் இல்லை; இந்து மதத்தின் சிருஷ்டிதான் இந்த ஜாதிய ஏற்றத்தாழ்வு.

ஜாதியினுடைய சிருஷ்டி என்பது அய்யாவினுடைய வார்த்தை.

ஜாதியை சிருஷ்டி செய்தது இந்து மதம்; இந்து மதத்தின் கடவுள்களும், புராணங்களும்தான் ஜாதியை, மக்களுக்குள்ள ஏற்றத் தாழ்வை நிலைக்க வைக்கிறார்கள். எனவே, நான் இந்து மதத்தை எதிர்க்கிறேன் என்றால், அடிப்படையில் ஜாதியை, ஏற்றத்தாழ்வை எதிர்க்கிறேன் என்று பொருள்.

நீங்கள் இந்து மதத்தையும், ஜாதியையும் பிரித்துக் காட்டுங்கள். இந்து மதத்திலும் இன்றைக்கும் பலர் திரும்பத் திரும்ப ஒன்றை விளங்கிக் கொள்ளாமல் கேட்கிறார்கள், இந்து நாடார், கிறித்துவ நாடார் என்று கிறித்துவ மதத்திலும் நாடார் இருக்கிறார்களே என்று. கிறித்துவ மதத்தில் நாடார் இல்லை நண்பர்களே, இந்து மதத்தினுடைய ஏற்றுமதி அது.

இங்கே இருந்துபோன பிறகும், இந்த ஜாதியை விட்டுத் தொலைக்க முடியாத அந்த மனநிலையின் மிச்சம் அது.

நான் கிறித்துவர்கள் மாநாட்டில் பேசுகின்றபொழுதே சொன்னேன், எந்த நிமிடம் வரையில் உங்களுக்கு ஜாதி உணர்வு இருக்கிறதோ, அந்த நிமிடம் வரையில் நீங்கள் கிறித்துவர்கள் இல்லை என்று பொருள். யாராவது தங்களுடைய ஜாதியை நினைத்துப் பார்த்தால், நீங்கள் இன்னமும் கிறித்துவர்களாக மாறவில்லை; வெறுமனே தேவாலயத்திற்குச் சென்று சில சடங்குகளைச் செய்துவிட்டால், கிறித்துவராக மாறிவிடலாம் என்று பொருளாகி விடாது.

பவுத்த மதத்திலே நீங்கள் கலந்துவிட்ட பிறகு, உங்களுக்கு எந்த ஜாதியும் கிடையாது!


அம்பேத்கர் மிகத் தெளிவாக, 1956 இல், மதம் மாறுகிறபொழுது சொன்னார், நேற்றைக்கு வரைக்கும் நீங்கள் எந்த ஜாதியாக வேண்டுமானாலும் இருக்கலாம்; எந்த மதமாக வேண்டுமானாலும் இருக்கலாம். இன்றைக்கு பவுத்த மதத்திற்கு வருகிறபொழுது ஒன்றை முடிவு செய்துகொண்டு வாருங்கள்.

ஆறுகளில், கங்கை உண்டு, காவிரி உண்டு, பல்வேறு ஆறுகள் உண்டு. கடலிலே கலந்துவிட்டதற்குப் பிறகு, இது கங்கை, இது காவிரி என்று எப்படி பிரிக்க முடியாதோ, அப்படி பவுத்த மதத்திலே நீங்கள் கலந்துவிட்ட பிறகு, உங்களுக்கு எந்த ஜாதியும் கிடையாது என்பதை முடிவு செய்துகொண்டு உள்ளே வாருங்கள் என்று அம்பேத்கர் சொன்னார்.

ஆனால், இன்றைக்கு கிறித்துவ மதத்திற்குள்ளும், இசுலாமிய மதத்திற்குள்ளும் போனவர்கள் இன்னமும் சிலர் ஜாதியோடுதான் இருக்கிறார்கள், நாம் அறிவோம்.

ஜாதி உணர்வோடு இருக்கிறவர்கள் யாரும் கிறித்துவர்கள் இல்லை; ஜாதி உணர்வோடு இருக்கிறவர்கள் யாரும் இசுலாமியர்கள் இல்லை. அவன் இந்துவாக இருக்கிறான் என்று பொருள். இதை நான் பல கூட்டங்களில், பாதிரியார்கள் அமர்ந்திருந்த கூட்டத்திலேயே சொன்னேன்.

நாகர்கோவிலுக்கு அருகில், தோப்பூருக்குப் பக்கத்தில் உள்ள இராமானுச்சாரிபுரம் என்ற ஒரு சிறிய கிராமத்திற்குப் போனேன். அங்கே என்னுடைய அப்பாவின் நண்பர் அந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதினால், நான் நாகர்கோவில் கூட்டத்திற்குப் போகின்றபொழுது, அந்த ஊருக்குப் போனேன். அந்தப் பெரியவர் இருக்கிறாரா என்று பார்ப்பதற்காக அந்த ஊருக்குப் போனேன். அந்த ஊரில் இறங்கியவுடன், அவருடைய பெயரைச் சொல்லி, அவர் பெரியவர்; இருப்பதற்கு வாய்ப்பில்லை. என்னுடைய அப்பாவின் வயதையொத்தவர். இருக்கிறாரா? அல்லது அவர் இருந்த வீடு எது என்று கேட்டேன்.

‘‘அவர் பிள்ளைமாரா? நாடாரா?


அந்த மக்கள் என்னைப் பார்த்து ஒரு கேள்வியைத் திரும்பக் கேட்டார்கள். அந்தச் சிறிய கிராமம் முழுவதும் கிறித்துவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

என்னைப் பார்த்துக் கேட்டார்கள், ‘‘அவர் பிள்ளைமாரா? நாடாரா?'' என்று.

ஏன் கேட்கிறீர்கள்? என்றேன்.

இந்தச் சாலைக்கு இந்தப் பக்கம் இருக்கிறவர்கள் எல்லாம் பிள்ளைமார்; அந்தப் பக்கம் இருக்கிறவர்கள் எல்லாம் நாடார்.

அவ்வளவு சிறிய கிராமத்தில் இரண்டு தேவாலயங்கள். ஒரு தேவாலயம் பிள்ளைமாருக்கு உரியது. அதில் நாடாரை அனுமதிக்கமாட்டார்கள். இன்னொரு தேவாலாயம் நாடாருக்கு உரியது; பிள்ளைமார்கள் போகமாட்டார்கள். இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டினை கவனியுங்கள்.

எந்தப் பக்கம் கிறித்துவர்கள் இருக்கிறார்கள்


எனவே, நீங்கள் அதைச் சொன்னால்தான் பதில் சொல்ல முடியும்; இந்தப் பக்கம் பிள்ளைமார்கள் இருக்கிறார்கள்; அந்தப் பக்கம் நாடார்கள் இருக்கிறார்கள் என்று அவர்கள் சொன்னபொழுது,

நான் அடுத்து உடனடியாகக் கேட்டேன், எந்தப் பக்கம் கிறித்துவர்கள் இருக்கிறார்கள் என்று.

எல்லோரும் கிறித்துவர்கள்தான் என்றார்கள்.

இல்லை, இல்லை. நீங்கள் பிள்ளைமார்களாகவும், நாடாராகவும் இருக்கின்றவரையில், இந்துக்களாகத்தான் இருக்கிறீர்கள் என்று பொருள்.

இதை அய்யா சொன்னார், சொல்லுகிறபொழுதே குறிப்பிடுகிறார். இத்தனை பேர் இங்கே நீங்கள் சேர்ந்திருக்கிறீர்கள். உணர்வு உள்ளவர்கள். வடநாட்டிற்கு வருவதற்கு எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. ஆனால், எந்த நம்பிக்கையில் நான் வந்தேன்? 1944 டிசம்பர் மாதத்தில் பேசுகிறார்.

இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்த அம்பேத்கர் அவர்கள் என்னோடு நீண்ட நேரம் உரையாடினார்.

ஜாக் கோரக் மண்டல் என்கிற பஞ்சாப் லாகூரைச் சேர்ந்த அமைப்பின் தலைவரும், அவருடைய செயலாளர் அரிபவன் என்பவர்களும் என்னிடத்தில் சொன்னார்கள், அந்த மூன்று பேரும் சொன்னதின் அடிப்படையில்தான். என்ன சொன்னார்கள்?  வடநாட்டிலும் சமூகநீதிக்கு ஆதரவானவர்கள், ஜாதி எதிர்ப்பு உணர்வாளர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் நான் வந்தேன்.

மொழி பேதத்தினாலும், பழக்க வழக்கங்களினாலும், நெடுந்தொலைவு பிரிந்திருப்பதாலும், நமக்குள் ஒத்தக் கருத்துடையவர்கள் ஒன்று சேர முடியாமல் இருக்கிறோம். எனவே, நாம் ஒன்று சேர்ந்து இந்தியாவில் போராடவேண்டிய கட்டமும் இருக்கிறது என்பதை நான் உணர்கிறேன் என்று 1944 ஆம் ஆண்டில் பேசுகிறார்.

கடைசியாக சொல்கிறார்,

நீங்கள் உங்களுடைய அமைப்பின் பெயரிலேயே பிற்படுத்தப்பட்ட இந்து வகுப்பார் என்று போட்டிருக்கிறீர்கள்; இந்துவாக இருக்கின்றவரைக்கும் உங்களுக்கு சமூகநீதி வந்து சேராது. அப்படியானால், எங்கே போவது?

எந்த மதத்திற்குள் போனால், தீண்டாமை உங்களை அண்டாதோ, அந்த மதத்திற்கு நீங்கள் போகலாம்


மதமற்றவனாக இருக்க முடியுமானால், இருங்கள். எதாவது ஒரு மதம் வேண்டும் என்று நீங்கள் கருதுவீர்களானால், எந்த மதம் உங்கள் ஜாதி இழிவைத் துடைக்கிறதோ, எந்த மதத்திற்குள் போனால், தீண்டாமை உங்களை அண்டாதோ, அந்த மதத்திற்கு நீங்கள் போகலாம். அது எந்த மதமாக இருந்தாலும்.

இன்னமும் சொல்லுகிறேன், ஜீவகாருண்ய மதத்திற்கு வேண்டுமானாலும் போய் வாருங்கள்.

எதுவுமில்லை. நாங்கள் ஆரிய, பார்ப்பன எதிர்ப்பாளர்கள், மதத்தின் எதிர்ப்பாளர்கள் என்றால், நீங்கள் மதமற்றவர்கள் என்றால், உங்களை நீங்கள் இனி திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

எங்கே? வடநாட்டில் சென்று பேசுகிறார்.

சமூகநீதியின் மறுபெயர்தான் திராவிடம்


திராவிடத்திற்கு யார் யாரோ விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறானே, பெரியார் திராவிடர் என்று யாரை சொல்லுகிறார்? கான்பூரில் இருக்கும் வடநாட்டவரைகூட, ஆரிய, பார்ப்பனீயத்திற்கு எதிரானவர்கள் என்றால், அவர்களை திராவிடர் என்று சொல்லுங்கள் என்றால், அதற்கு என்ன பொருள்? திராவிடம் என்பது நிலத்தை, இனத்தை, மொழியைக் குறிக்கலாம். ஆனால், திராவிடம் என்பது ஆதிக்கத்தை எதிர்க்கிற, பார்ப்பனீயத்தை எதிர்க்கிற, சமூகநீதியின் மறுபெயர்தான் திராவிடம் என்பதை 1944 ஆம் ஆண்டே பெரியார் சொன்னார்.

அந்த ஆதிக்கத்தைக் கொண்டிருக்கிற, ஏற்றத்தாழ்வைக் கொண்டிருக்கிற, இந்து மதத்தைவிட்டு வெளியேறு என்று சொன்னதற்குக் காரணம், உங்களின் கடவுள் நம்பிக்கையல்ல - உங்களின் மூடநம்பிக்கை மட்டுமல்ல, இந்து மதம் ஜாதியின் கொள்கலனாக இருக்கிறது.

இந்து மதத்தையும், ஜாதியையும் பிரிக்க முடியாது. கர்வாப்சி என்று சொன்னார்களே, கர் என்றால் வீடு; வாப்சி என்றால், வாபஸ். மறுபடியும் தாய்வீட்டுக்குத் திரும்புவது என்று.

பாதர் கஸ்பாரின் பேட்டி


அண்மையில், பாதர் கஸ்பார் அவர்கள் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார், மிகச் சரியாக சொல்லியிருந்தார். நான் தாய் மதத்திற்குத் திரும்புவதைப்பற்றி யோசிக்கிறேன். அதிலொன்றும் சிக்கல் இல்லை. முதலில் எங்கள் தாய் மதத்தைவிட்டு, வைதீகர்களே, பார்ப்பனீயர்களே நீங்கள் வெளியேறுங்கள்; நாங்கள் உள்ளே வருகிறோம் என்றார்.

நீ உள்ளே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறாய்; நீ வெளியேறு, நாங்கள் வருகிறோம் என்று பாதர் கஸ்பாருடைய பேட்டியை நான் பார்த்தேன்.

மக்களுடைய வாழ்வை மேம்படுத்தத் தோன்றிய இயக்கம்தான் திராவிட இயக்கம்


ஆகையினால், கர்வாப்சியில் அவர்களுக்கு என்ன சிக்கல் வந்தது தெரியுமா? நீங்கள் யாரை வேண்டுமானாலும் கிறித்துவனாக ஆக்கலாம்; நீங்கள் யாரை வேண்டுமானாலும், இசுலாமியனாக ஆக்கலாம். நீங்கள் யாரை இந்துவாக ஆக்கினாலும், அவன் பார்ப்பனனா? இடைச்சாதியா? சூத்திரனா? தாழ்த்தப்பட்டவனா? என்பதை முடிவு செய்து நீங்கள் மாற்றவேண்டும். ஜாதியையும், இந்து மதத்தையும் பிரிக்க முடியாது என்பதால், நாங்கள் இந்து மதத்தை எதிர்த்தோமே தவிர, இந்துக்கள் எங்களுக்கு எதிரிகள் இல்லை. திராவிட இயக்கம் தொடங்கியதே யாரைப் படிக்க வைப்பதற்காக? பார்ப்பனரல்லாதவர்கள் என்றால் அவர்கள் யார்? பார்ப்பனரல்லாதவர்களிலே இந்துக்கள் இல்லையா? இந்துக்கள்தான் அத்தனை பேரும். இந்துக்கள் என்று தங்களை நினைத்துக் கொண்டிருக்கின்ற மக்களுடைய வாழ்வை மேம்படுத்தத் தோன்றிய இயக்கம்தான் திராவிட இயக்கம். அறியாமையை விட்டு வெளியில் வாருங்கள்.

நான் முதலில் சொன்னதைப்போல, ‘‘சாமி கும்பிடுறேன்'' என்று வேண்டுமானால் சொல்லித் தொலை. ‘‘கும்பிடுறேன் சாமி'' என்று எவனைப் பார்த்தும் சொல்லாதே என்கிற சுயமரியாதை உணர்வை ஊட்டிய இயக்கம்தான் திராவிட இயக்கம்.

எதிர்க்கருத்துடையவர்களை மதித்தவர் அய்யா!


அய்யா பெரியார் அவர்கள், எதிர்க் கருத்துகளை மதித்தவர்; மாற்றுக் கருத்து உடையவர் என்பதினால், அவர்களை ஒரு நாளும் தூக்கி எறிந்தவர் இல்லை. மிகச் சரியான ஒரு எடுத்துக்காட்டை சொல்லவேண்டுமானால், அய்யா பிறந்த இந்த நாள்தான் திரு.வி.க. அவர்கள் இறந்த நாள். அய்யா பிறந்த இந்த நாள்தான் நடிகவேள் எம்.ஆர்.இராதா இறந்த நாள்.

எம்.ஆர்.இராதா அவர்களாவது நம்மோடு கருத்தில் உடன்பாடு உடையவர். தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் மிகச்சிறந்த பக்திமான். அவர் பெரியார் வீட்டுக்கு ஈரோட்டிற்கு வந்திருந்தபொழுது, ஆற்றுக்குக் குளிக்கப் போன திரு.வி.க. அவர்கள் குளித்துவிட்டு வரும்பொழுது, கரையில் அய்யா உட்கார்ந்திருக்கிறார்.

என்ன நாயக்கர் இங்கே வந்திருக்கிறீர்களே? என்று கேட்கிறார். அவருக்கும் தெரியும் அய்யா ஆற்றில் குளிப்பதற்காக வருகிறவர் இல்லை.

அய்யா சொல்கிறார், ‘‘திருநீர் மூட்டையை நீங்கள் வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டீர்கள்; குளித்தவுடன் பூசுவீர்களே என்பதற்காக எடுத்து வந்தேன்'' என்று சொன்னார். திருநீற்றில் நம்பிக்கை இல்லாத பெரியார்தான் சொன்னார், தன் நண்பருக்கு அந்த நம்பிக்கை உண்டு என்பதற்காக அதனை எடுத்துக்கொண்டு வந்தார்.

திரு.வி.க. அவர்களின் மறைவின்போது...


அதைக் காட்டிலும் இன்னொரு செய்தியை சொல்கிறேன். 1953 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி திரு.வி.க. அவர்கள் மறைந்து போனார். அய்யா உடல்நலம் சரியில்லாமல் ஈரோட்டில் இருக்கிறார். இப்பொழுது இருப்பதைப்போல, விமானங்களில் அரை மணிநேரத்தில் வந்துவிட முடியாது. உடல்நலம் சரியில்லாத நிலையிலும், தன்னுடைய நண்பருடைய இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்னைக்கு வந்தார். இதே கண்ணம்மாபேட்டைதான் என்று நான் நினைக்கிறேன். திரு.வி.க. அவர்களுடைய உடல் அடக்கம் செய்யப்படுகின்ற இடத்தில், பெரியார் இருந்தார். அவரை சார்ந்தவர்கள் கொஞ்சம் தயங்கிக் கொண்டிருந்தார்கள்.

என்ன தயக்கம்? என்று பெரியார் கேட்டார்.

திரு.வி.க. தன்னுடைய விருப்பமாக ஒன்றை எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார். அவருடைய மாணவனான மு.வ.வும், இன்னொருவரும் சைவத் திருமுறைகளைப் பாடவேண்டும் என்று எழுதியிருக்கிறார். அய்யா இருப்பதினால், எங்களுக்குத் தயக்கமாக இருக்கிறது என்றபொழுது,

இதில் என்னங்க தயக்கம்; அவருடைய இறுதி நிகழ்வு, அவருடைய விருப்பப்படிதானே நடக்கவேண்டும் என்று சொன்ன ஜனநாயகவாதி எங்கள் அய்யா பெரியார் அவர்கள்.

கருப்புச் சட்டைகளை எவராலும்


கட்டுக்குள் அடக்கிவிட முடியாது


எதிர்க் கருத்தை மதிக்கிறோம் நாங்கள். இன்றைக்கும் நாம் எதிர்க்கருத்துடையவர்களை பகைவர்களாகக் கருதவில்லை. நம் மக்கள் அத்திவரதரை நோக்கி, ஒரு கோடி பேர் போகிறார்கள் என்றால், அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை நண்பர்களே; வருத்தப்படவும், நம் மக்களிடம் நாம் பேசவும்தான் நிறைய செய்திகள் இருக்கின்றன. பேசுவோம், தொடர்ந்து பேசுவோம். பெரியாரைப் பேசிக்கொண்டே இருப்போம். எத்தனை காவல்துறையின் தடைகள் வந்தாலும், எத்தனை மத்திய அரசின் எதிர்ப்புகள் வந்தாலும், எங்கள் கருப்புச் சட்டைகளை எவராலும் கட்டுக்குள் அடக்கிவிட முடியாது.

பேசுவோம், பேசுவோம்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார்

- விடுதலை நாளேடு 19 10 19

செவ்வாய், 1 அக்டோபர், 2019

பொறியியல் கல்வி பாடத்தில் பகவத் கீதையா?

சென்னை  அண்ணா  பல்கலைக்கழகத்தை முற்றுகையிடும் போராட்டம்

தி.மு.க.  மாணவரணி, திராவிட மாணவர் கழகத் தோழர்கள் கைதுசென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்வியில் விருப்பப்பாடம் என்கிற பெயரில் பகவத் கீதை, சமஸ்கிருதம் திணிக்கப்படுவதைக் கண்டித்து திமுக மாணவரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையில் அண்ணா பல்கலைக் கழக முற்றுகைப் போராட்டம் இன்று (1.10.2019) காலை நடைபெற்றது.
திமுக மாணவரணி, திராவிட மாணவர் கழகத் தோழர்கள் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், துணை செயலாளர்கள்
யாழ்திலீபன்,  பெரியார் சமூகக் காப்பு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் சோ.சுரேஷ் மற்றும் திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், ஊரப்பாக்கம் சீனுவாசன், தமிழ்செல்வன், வேலவன், நா.பார்த்திபன், சண்முகப்ரியன் உள்ளிட்ட மாணவர் கழகம், இளைஞரணி தோழர்கள் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் ஏராளமானவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
பிரின்சு என்னாரெசு பெரியார், சுரேசு, பிரவீண்குமார், தமிழ்ச்செல்வன், திருமால், ரூபன், குணசேகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
- விடுதலை நாளேடு, 1.10.19