சைதாப்பேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சைதாப்பேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 ஏப்ரல், 2026

சைதாப்பேட்டை,விருகம்பாக்கம் தொகுதிகளில் கழகத் தலைவர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பரப்புரை!


என்னுடைய ‘கால்வலி’யை விட தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் ‘தலைவலி’க்குத்தான் முக்கியத்துவம்! ஒரு பக்கம் தேர்தல் போராட்டத்தை நடத்தினாலும் உரிமைப் போராட்டத்தையும் நடத்தத் தவற மாட்டோம்! சைதாப்பேட்டை, 

சைதை, ஏப். 19- சைதாப்பேட்டையில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள், “பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, காலில் அடிபட்டு வலியோடு மேடையேறி வந்திருக்கிறார்” என்று, வருத்தப்பட்டு பேசினார். அதற்கு, கழகத் தலைவர் பேசும் போது, “என்னுடைய ‘கால் வலி’யை விட, தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் ‘தலைவலி’ தான் முக்கியம். தொகுதி மறு வரையறை பிரச்சினை நடந்திருக்க கூடிய சூழலில் தேர்தல் போராட்டத்தில் மட்டுமல்ல உரிமைப் போராட்டத்தையும் நடத்தத் தவற மாட்டோம்” என்று, சுயநலம் பொதுநலம் என்பதற்கான எளிமையான விளக்கத்தை வாழ்வியலாகவே உணர்த்தி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டார்.

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் பொதுக்கூட்டம் 15.04.2026, புதன்கிழமை அன்று, மாலை 5 மணிக்கு பூந்தமல்லி நெடுஞ்சாலை ஈக்காட்டுத்தாங்கலில், கங்கை அம்மன் கோயில் அருகில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், தி.மு.க. மாமன்ற உறுப்பினர் இரா.துரைராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஞானசேகரன், ஆடிட்டர் இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். முன்னதாக திராவிடர் கொள்கை இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

என்னுடைய வலி பெரிதல்ல

வேட்பாளரும், அமைச்சருமான மா.சுபிரமணியம், கழகத் தலைவருடன் இணைந்து மேடைக்கு வருகை தந்தார். அமைச்சர் கழகத் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். இந்தியா கூட்டணியின் பொறுப்பாளர்கள், தோழர்கள் கழகத் தலைவருக்கு பயனாடை அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும் மரியாதை செய்து மகிழ்ந்தனர். அதைத்தொடர்ந்து, அமைச்சர் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து சுருக்கமாக உரையாற்றினார். அதில், “இந்த 93 வயதிலும், காலில் அடிபட்டு கடும் வலி ஏற்பட்டுள்ள நிலையிலும், பெருமதிப்பிற்குரிய அய்யா ஆசிரியர் அவர்கள், பரப்புரை செய்வதற்காக மேடை ஏறி வந்ததைக் கண்டு, தான் மிகவும் சங்கடம் அடைந்ததாக குறிப்பிட்டு அமர்ந்தார்.  நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார். அவர் தமது உரையின் தொடக்கத்தில், “அமைச்சர் அவர்கள், எனக்கு காலில் அடிபட்டு வலியோடு வந்திருக்கிறேன் என்றும், அதைக் கண்டு தான் சங்கடப்பட்டதாகவும் சொன்னார். தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் தலைவலியை விட, என்னுடைய வலி பெரிதல்ல” என்று அமைச்சருக் கும், மக்களுக்கும் பதில் அளித்துவிட்டு தனது பரப்பு ரையை தொடர்ந்தார்.

இப்போது வீசுவது ஸ்டாலின் அலை

அவர் தமது உரையில், “கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் தாய்மார்களும், பெரியோர்களும் வருகை தந்திருக்கிறீர்கள். இந்த எழுச்சியை காணும் போது, மே 4 ஆம் தேதிக்குப் பிறகு, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் மறுபடியும் முதலமைச்சர் ஆவார் என்பது உறுதியாகத் தெரிகிறது” என்று பலத்த கைதட்டல்களுக்கும், ஆரவாரங்களுக்கும் இடையில் குறிப்பிட்டார். மேலும் அவர்,  “சைதாப்பேட்டை கலைஞர்  நின்ற தொகுதி” என்ற ஒரு வரலாற்று குறிப்பை மக்களுக்கு நினைவு படுத்தினார். மக்கள் தன்னிச்சையாக மகிழ்ந்து கைகளைத் தட்டினர். மக்களின் உற்சாகத்தைக் கண்டு கழகத் தலைவர், “இப்போது வீசுவது ஸ்டாலின் அலை” என்றார். மேலும் அவர், தொகுதி வரையறை பற்றி நினைவூட்டி,  “ஒரு பக்கம் தேர்தல் போராட்டம் நடைபெற்றாலும், உரிமைப் போராட்டத்தையும் நடத்தத் தவற மாட்டோம்” என்று உரக்கச் சொன்னார். அதே உணர்ச்சியை தாங்களும் பெற்றதை, கைதட்டல்கள் மூலம் மக்கள் வெளிப்படுத்தினர். மேலும் அவர், “இந்த தொகுதி வரையறை என்பது எல்லோருக்கும் சமமாக நடக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்டவர்கள் சொல்வது, இனிப்பு பூசிய விஷ உருண்டை போன்றது” என்று உவமித்து, பளிச்சென்று விளங்க வைத்தார். அடுத்து, பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு, “அதில் மக்கள் நலத்திற்காக எந்தவொரு திட்டமும் இல்லை” என்பதை அம்பலப்படுத்தினார். பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தை, விவசாயிகளின் நெல் உற்பத்திக்கு தமிழ்நாடு அரசு அளித்து வரும் ஊக்கத்தொகை குறித்த அவர்களின் நிலைப்பாட்டையும், வெளிப்படையாக பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம், ‘வரப்புயர நீர் உயர’ என்று அவ்வையார் பாடலைப் பாடி, விவசாயிகளை ஏமாற்ற முயல்வதையும் சுட்டிக்காட்டி பேசினார். அடுத்து, அப்படிப்பட்ட பா.ஜ.க.வுடன், அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்து தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்வதையும் சுட்டிக்காட்டி, “இதிலிருந்து தமிழ்நாடு மீளவும், கடந்த  5 ஆண்டுகளில் நடைமுறையில் இருக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடரவும், மா.சுப்பிரமணியம் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

விருகம்பாக்கம்

தி.மு.க.வின் ‘காட்பாதர்’ ஆசிரியர்

அதைத் தொடர்ந்து, அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு, விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளர் பிரபாகர ராஜா அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க புறப்பட்டார். சென்னை மேற்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், இரவு 8 மணிக்கு மேல், கலைஞர் கருணாநிதி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதியில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் கரு.அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற, இக்கூட்டத்தில் சுப்பிரமணியன், ஜெயசீலன், தி.மு.க.கண்ணன் MC, கதிரேசன், திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். முன்னதாக கிராமப் பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் க.அன்பழகன் தொடக்க உரையாற்றினார். வேட்பாளர் பிரபாகர ராஜா வருகை தந்து வாகனத்தின் மீதிருந்து, “தி.மு.க.வின் ‘காட் பாதர்’ ஆசிரியர் அய்யா, எனக்கு வாக்கு கேட்டு வந்திருப்பதை நான் என்றென்றும் மறவேன்” என்று பேசி தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார்.

ஆசிரியர் பிரச்சாரம் – எனக்கு கிடைத்த பேறு!

“பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கள், மேடைக்கு வரும்போது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. செங்குத்தான படிகள். ஆசிரியர் அய்யா அவர்களின் முட்டியில் அடிபட்டு, கால் கன்னிப் போயிருக்கிறது. அவருடைய வயது 93. இந்த வயதிலும் முட்டியில் ஏற்பட்ட வலியுடன் மேடைக்கு வந்திருக்கிறார். சிலர் சொல்கின்றனர். ‘நான் வலியை தாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன்’ என்று, நான் யாரைச் சொல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். ஆசிரியர் அய்யாவுக்கு ஏற்பட்டிருக்கும் வலியை விட, இந்த திராவிடர் இனத்திற்கு வேறு எந்த வலியும் வந்து விடக்கூடாது என்று, தன்னுடைய 93 வயதிலும் உழைக்கின்ற ஆசிரியர் அய்யா அவர்கள், சைதாப்பேட்டை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்பது என்பது, எனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு ஆகும்”
– சைதாப்பேட்டை பொதுக்கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம். 15.04.2026

எந்த தேர்தலிலும் இல்லாத மகிழ்ச்சி…

அவர் தமது உரையில், 1952 க்கு முன்னால் ஒரு தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தல் உட்பட, இந்த 17 ஆம் சட்டப்பேரவை தேர்தலுடன் 18 தேர்தல்களை நான் பார்த்திருக்கிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். வேறு எந்த தேர்தலிலும் இல்லாத மகிழ்ச்சி, மக்களிடம் குறிப்பாக மகளிரிடம் இருக்கிறது” என்று குறிப்பிட்டு விட்டு, “இதே மகளிரைத்தான் 100 ஆண்டுகளுக்கு முன்பு, ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதற்கு?’ என்றனர் சிலர். இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறி இருக்கின்றது. இந்த மாற்றம் எப்படி வந்தது? அந்த மாற்றத்தை தந்த இயக்கம் தான், திராவிடர் இயக்கம்! அதன் தொடர்ச்சியாகத் தான், விருகம்பாக்கம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பிரபாகர ராஜாவுக்கு நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்!” என்று திமுகவின் நீண்ட… நெடி…ய கொள்கை வரலாற்றுப் பின்னணியை சுருக்கமான நேரத்தில் விவரித்தார். தொடர்ந்து, திராவிட மாடல் அரசின் சாதனைகளை பட்டியலிடத் தொடங்கினார். அடுத்து, செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு 2,533 கோடி ரூபாயும், தமிழ் உட்பட 5 செம்மொழிகளுக்கும் சேர்ந்து 145 கோடி ரூபாய்தான் ஒதுக்கி இருக்கிறார்கள்” என்ற ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையை அம்பலத்தில் ஏற்றி வைத்தார். தொடர்ந்து, பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு விளக்கினார். அதில், “ஒரு மதத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கின்றது” என்பதைச் சுட்டிக்காட்டி, “பன் மதங்கள், பல கலாச்சாரங்கள் இருக்கின்ற ஒரு நாட்டில் கலவரத்தை தூண்டும் முயற்சி இது” என்றும் கண்டித்தார். மேலும் அவர், வேட்பாளரின் தந்தை வணிகர் சங்க பொறுப்பாளர் விக்கிரம ராஜா அவர்களை நினைவூட்டி, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் உள்ள இல்லத்தரசிகள் திட்டத்தைப் பற்றி பேசினார். அதாவது, இந்தத் திட்டமும் இல்லத்தரசிகளுக்கு மட்டும் பயன்படும் திட்டமாகவே பார்க்கப்படுவதையும், அதனுடைய இன்னொரு பக்கமாக வியாபாரிகளின் கண்ணோட்டத்தில் மிகச்சிறந்த திட்டமாகவும், உள்ளூர் பொருளாதாரம் மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சி அடையும் என்பதை, வணிகர் சங்கத் தலைவர் விக்ரம ராஜா குறிப்பிட்டதை மக்களுடன் பகிர்ந்து, திராவிட மாடல் அரசின் திட்டங்களின் ஆக்கத்தையும், தாக்கத்தையும் எடுத்துரைத்தார். தொடர்ந்து, பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. பற்றிய விமர்சனங்களை முன்வைத்து, “திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடர்வதற்காக, விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கூறி, தனது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்வில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் பொறுப்பாளர்கள் தோழர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கழகத் தலைவரின உரையை கண்டும், கேட்டும் பயன் பெற்றனர்.

- விடுதலையின் நாளேடு, 19.04.2026

புதன், 12 நவம்பர், 2025

தமிழ்நாடு முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 




வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு எஸ்.அய். ஆர். அய் எதிர்த்து
தமிழ்நாடு முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை சைதாப்பேட்டையில் கழகத் துணைத் தலைவர் பங்கேற்பு

சென்னை, நவ.11 ஒன்றிய பா.ஜ.க. அரசின் கைபாவையாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு எஸ்.அய்.ஆர்.–அய் எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்  இன்று (11.11.2025) தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கழகத் துணைத் தலைவர்

சென்னை சைதாப்பேட்டை (கலைஞர் பொன் விழா வளைவு) பனகல் மாளிகை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டி யன், மருத்துவர் கனிமொழி சோமு, திண்டுக்கல் அய். லியோனி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, விவசாய தொழிலாளர் கட்சி தலைவர் பொன் குமார், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் உள்ளிட்ட தோழமைக் கட்சி தலைவர்கள் உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், மாவட்டச் செயலாளர் பார்த்தசாரதி, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் வழக்குரைஞர்
சோ. சுரேஷ், நெய்வேலி ஞானசேகரன், கரு அண்ணாமலை, டைலர் கண்ணன் மற்றும் தோழர்கள் கலந்து
கொண்டனர்.

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழகப் பொறுப்பாளர்களும், தோழர்க ளும் பெருமளவில் பங்கேற்றனர்.


புதன், 29 அக்டோபர், 2025

சைதை வாசுதேவன், எத்திராஜன், ரங்கநாதன் ஆகியோரின் தாயார் நினைவில் வாழும் பிரேமா அவர்களின் கண் மற்றும் உடற் கொடையை முன்னிட்டு நன்கொடை

திராவிடர் கழகம்
சைதை வாசுதேவன், எத்திராஜன், ரங்கநாதன் ஆகியோரின் தாயார் நினைவில் வாழும் பிரேமா அவர்களின் கண் மற்றும் உடற் கொடையை முன்னிட்டு ரூ.5,000/- , வாசுதேவன்  அவர்களின் இதயமாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று நலமுடன் உள்ளதை முன்னிட்டு ரூ.5,000/-, எத்திராஜனின் மகள் ஜான்சிராணி தனியார்  பணிக்குத் தேர்வு பெற்றமைக்குரூ.5,000/- என இயக்க நிதியாக (மொத்தம் ரூ.15,000/-) தமிழர் தலைவரிடம்  குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நேரில் சந்தித்து வழங்கினார்கள். உடன்: இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் வி.சொக்கலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர்
நா. எழிலன். (சென்னை, 25.10.2025)

-விடுதலை நாளேடு,28.10.2025

புதன், 16 ஜூலை, 2025

தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் சென்னையில் நடந்த மாபெரும் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம்

 


தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடி ஆய்வைத் தடுத்து நிறுத்தும் ஒன்றிய பிஜேபி – ஆர்.எஸ்.எஸ்.சின் போக்கைக் கண்டித்து

சென்னை, ஜூன் 18- தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடி ஆய்வைத் தடுத்து நிறுத்தும் ஒன்றிய பிஜேபி -ஆர்.எஸ்.எஸ்.சின் போக்கைக் கண்டித்தும், ‘கீழடி அகழாய்வு அறிக்கையை அங்கீகரிக்க முடியாது’ என்று ஒன்றிய பா.ஜ.க. அரசின் கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளதைக் கண்டித்தும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இன்று (18.6.2025) காலை சென்னையில் மாபெரும் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடந்தது.

பா.ஜ.க.வின் மனநிலை

“தமிழ்நாட்டில் நடக்கும் கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள், அறிவியல்பூர்வமாக, தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அங்கீகாரம் வழங்கு வதற்கு முன், அதிக நடைமுறைகள் உள்ளன. அதற்கு இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன. அவ்வாறு, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும் அங்கீகாரம் வழங்கப்படும்” என்று 10.6.2025 அன்று செய்தியாளர்கள் மத்தியில் தமிழ்நாட்டின் இந்நாள், மேனாள் பா.ஜ.க. தலைவர்களை அருகில் வைத்துக்கொண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசின் கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார். இதுதான் பா.ஜ.க.வின் உண்மையான மனநிலை!

அறிவியல் சான்றுகள்

கீழடி அகழாய்வின் முதல் இரு கட்டங்கள் முடிந்து, அவற்றின் ஆய்வு முடிவுகளை அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் முன்வைத்து, அறிக்கையை ஆய்வா ளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அனுப்பி வைத்து இரண்டாண்டுகளுக்குப் பிறகும், அதை ஏற்க மன மில்லாமல், எப்படியாவது, எதைச் சொல்லியாவது கீழடி அகழாய்வைப் புறந்தள்ளிவிட வேண்டும் என்னும் ஒற்றை நோக்கம் தானே தொடர்ந்து ஒன்றிய பா.ஜ.க. அரசிடமிருந்து வெளிப்படுகிறது.

முதுமக்கள் தமிழர்கள்

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அமைச்சரும், நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு அவர்கள் “5,350 ஆண்டுகள் பழைமையானவர்கள். தொழில்நுட்பம் கொண்டவர்கள். மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் தமிழர்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக் கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக் கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்?” என்று சரியாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

என்ன ஆதாரம் இல்லை கீழடி அகழாய்வில்? கண்டெடுக்கப்பட்ட கரிமப் பொருள்களிலிருந்து, அதன் காலத்தைக் கணக்கிடுவதற்காக அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா ஆய்வகம் உள்பட பல ஆய்வகங்களுக்கும் அனுப்பப்பட்டு, அவற்றின் முடிவுகள் வந்திருக்கின்றன. வேறு என்ன ஆதாரம் வேண்டுமென்கிறார்கள்?

பொருந்தாத சாக்குப்போக்கு

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. முன்கூட்டியே திட்டமிட்ட முடிவுதான். அம்முடிவுக்கேற்ப, ஏதோ ஒரு பொருந்தாத சாக்குப்போக்கு, இது நியாயமானதல்ல!

கீழடியை ஏற்றால், திராவிட நாகரிகம் வேதகால நாகரிம் என்று இவர்கள் சொல்லி வருகின்ற கூற்றின் பொய் முகம் கிழிந்து திராவிட நாகரிகமே காலத்திற்கும் முந்தையது என்ற உண்மையை ஒப்புக்கொள்ள நேருமே என்ற காரணத்தால் தங்களது கருத்தினை மறைமுகமாக நிலைநிறுத்தவே மேலும் அறிவியல் சான்றுகள் தேவைப்படுகின்றன எனகிறார் ஒன்றிய அமைச்சர்.

மறுப்பதை ஏற்க முடியாது

பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்காக, கீழடி அகழாய்வை, தமிழ்நாட்டின் தொன்மையை நிறுவும் பல்வேறு அகழாய்வுகளைப் பலி கொடுக்க முடியாது. ஆதாரப்பூர்வமான வரலாற்றுச் செய்திகளை மறைத்து, இந்திய வரலாற்றினைப் பொய்யான தகவல்கள், அனுமானங்கள், இதிகாசங்களின் அடிப்படையில் மாற்றி எழுத முயற்சிக்கும் ஒன்றிய அரசு, கீழடி அகழாய்வு முடிவை அங்கீகரிக்க மறுப்பதையும் ஏற்க முடியாது.

சான்றுகள்

இது ஒரு பண்பாட்டு அழிப்பு என்பதால் தமிழ்நாட்டின் வரலாற்று, பண்பாட்டுச் சிறப்புகளை சிறுமைப்படுத்த முயற்சிப்பதையும், காலத்தால் மூத்த தமிழி எழுத்து வடிவத்திற்குக் கிடைத்துள்ள சான்றுகளை மறுப்பதையும் கண்டித்து இன்று (18.6.2025) காலை 10.30 மணியளவில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கலைஞர் பொன்விழா நுழைவு வாயில் அருகில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மாபெரும் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைவர்கள் கண்டன உரை

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வரவேற்பு ரையாற்றினார்.

‘திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் உமா, ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் இரா.அதியமான், தமிழ்நாடு விவசாயிகள் -தொழிலாளர்கள் கட்சி பொதுச் செயலாளர் எஸ்.ஜெகதீசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் துணைத் தலைவர் எம்.அப்துல் ரகுமான், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் குனங்குடி ஹனீபா,  ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி மாநிலச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்புக்குழு தலைவர் கே.வி.தங்கபாலு, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

நிறைவாக தமிழர் தலைவர் ஆர்ப்பாட்ட தலைமை  – கண்டன உரையாற்றினார்.

பங்கேற்றோர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர்கள் பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, கழக ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், ஊமை.ஜெயராமன், வி.பன்னீர்செல்வம், மாநில கழக மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகன் மாநில கழக இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் செந்தூரபாண்டியன், திராவிட தொழிலாளர் பேரவைத் தலைவர் சிவகுருநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், ஆவடி மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன், கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர் புழல் ஆனந்தன், செயலாளர் பாஸ்கர், திருவொற்றியூர் மாவட்ட தலைவர் வெ.மு.மோகன், செயலாளர் ந.இராசேந்திரன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு, செயலாளர் விஜய் உத்தமன்ராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சிப் பொறுப்பாளர் வேணு கோபால் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் நன்றி கூறினார்.

விடுதலை நாளேடு, 18.06.25

கீழடி தொல்லியல் அகழாய்வு அறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக வெளியிடவேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம்

 

சென்னையில் நடைபெற்ற மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரால் முன்மொழியப்பட்ட இரண்டு தீர்மானங்கள்!


தமிழ்நாட்டின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்தும்
கீழடி தொல்லியல் அகழாய்வு அறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக வெளியிடவேண்டும்!
தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணியிடை மாற்றத்தை உடனே ரத்து செய்க!

சென்னை, ஜூன் 18– தமிழ்நாட்டின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்தும் அறிவியல்பூர்வமான கீழடி தொல்லியல் அகழாய்வு அறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு  உடனடியாக வெளியிடவேண்டும் என்றும், தொல்லியல் துறை அதிகாரி திரு. அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணியிடை மாற்றத்தை உடனே ரத்து செய்யவேண்டும்  என்றும் இரண்டு தீர்மானங்களை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் முன்மொழிந்தார்.

இன்று (18.6.2025) சென்னை சைதாப்பேட்டை கலைஞர்  பொன்விழா வளைவு (பனகல் மாளிகை) அருகே, தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி ஆய்வின் முடிவை மறைக்க முயல்வதா? ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து நடைபெற்ற மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் முன்மொழியப்பட்டன. அதன் விவரம் வருமாறு:

இங்கே சிறப்பாக குழுமியுள்ள அருமைத் தலைவர்களே, தோழர்களே!  உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலமாக இங்கே இரண்டு தீர்மானங்களை மக்கள் மன்றத்தின் சார்பாக நாங்கள் அனைவரும் முன்மொழிகிறோம்.

தீர்மானம் 1:

கீழடி தொல்லியல் அகழாய்வு அறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு  உடனடியாக வெளியிடவேண்டும்!

‘‘தமிழர் வரலாற்றை திராவிடர் வரலாற்றை உறுதிப்படுத்தும் கீழடி ஆய்வின் முதல் இரண்டு கட்ட அறிக்கைகளை வெளியிட மறுக்கும் ஒன்றிய பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

உலகளாவிய ஆய்வு நிறுவனமும், இந்தியாவினுடைய முதன்மை ஆய்வு நிறுவனமும் ஒப்புக்கொண்டு, அதன் காலத்தை, அறிவியல் பூர்வமாகக் குறிப்பிட்டுள்ள பின்னும், அதை ஏற்க முடியாது; போதிய ஆதாரம் இல்லை என்று கூறுவது, ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. அரசினுடைய உள்நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.

தமிழ்நாடு

தமிழ்நாட்டின் தொன்மை வரலாற்றை ஏற்க முடியாது என்ற அடாவடி செயலை– தமிழர்கள் என்றும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

அறிவியல்பூர்வமான கீழடியில், தொல்லியல் அக ழாய்வு அறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு  உடனடியாக  வெளியிடவேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.’’

தீர்மானம் 2:

தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணியிடை மாற்றத்தை உடனே ரத்து செய்ய

‘‘தமிழ்நாட்டின் தொன்மையை, தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றை நிறுவிய, கீழடி தொல்லியல் அகழாய்வை மேற்கொண்ட, தொல்லியல் துறை அதிகாரி திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து அலைக்கழித்து வருகிறது. முன்பு, அசாமிற்குத் தூக்கியடித்தது. பிறகு, மற்றொரு இடத்திற்கு மாற்ற முனைந்தது.

தற்போது டில்லியில் பணியாற்றி வந்த நிலையில், இப்போது நொய்டாவிற்கு அவரை மாற்றியிருக்கிறார்கள்.

கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிட மறுக்கும், ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடிக் கொண்டிருக்கும் சூழலில், எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதுபோல, அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணியிட மாற்றத்திற்கு ஆணையைப் பிறப்பித்திருப்பது, அவருக்குத் தண்டனை கொடுத்ததைப்போல இருக்கிறது என்று சொல்வதற்கு யாருக்கும் தயக்கம் இருக்க முடியாது.

எனவேதான், ஒன்றிய அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கிற்கு இந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தின்மூலம் வன்மை யானக் கண்டனங்களைத் தெரிவிப்பதோடு, அவருடைய பணியிடை மாற்றத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் கோருகிறது.’’

ஆகிய இரண்டு தீர்மானங்களும் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு இந்த ஆர்ப்பாட்டத்தின்மூலமாக நிறைவேற்றப்படுகின்றன.

எழுச்சித் தமிழரின் வேண்டுகோளும் –
தமிழர் தலைவரின் வழிமொழிதலும்!

இங்கே எழுச்சித் தமிழர் சொன்ன கருத்து மிகவும் முக்கியமானது.

கீழடி அகழாய்வைத் தொடருவதற்கு நிதி தரமாட்டோம்; ஆய்வை நிறுத்தவேண்டும் என்று சொல்லக்கூடிய ஓர் அடாவடி ஆளுநர் இங்கே இருக்கிறார். ஒன்றியத்தில், ஓர் அடாவடி அமைச்சரை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

‘‘தமிழ்நாட்டிலேயே, இனி ஏராளமான தொல்லியல் ஆய்வு செய்யப்பட வேண்டிய நிலையில், தொல்லியல் பொருள்களின் காலத்தைக் கணிக்கும் கரிம ஆய்வு மய்யத்தைத் (Carbon Dating Laboratory) தமிழ்நாட்டிலேயே அமைக்க தமிழ்நாடு அரசு ஆவண செய்ய வேண்டும்’’ என்று
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும் போது வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  வரவேற்று, ‘‘முதலமைச்சர் அவர்கள் அந்த ஆய்வு மய்யத்தை மக்கள் ஆதரவோடு அமைக்க அறிவிக்க வேண்டும். 40 முதல் 45 கோடி ரூபாய் வரை அதற்குச் செலவாகும் என்று எழுச்சித் தமிழர் அவர்கள் சொன்னார்கள்.

தமிழ்நாட்டின் உணர்ச்சியுள்ள மக்கள் சார்பாக சொல்கி றோம், வீதிமன்றத்தின் சார்பாக சொல்கிறோம், நாளைக்கு ஓர் அறிக்கையை, முதலமைச்சர் என்ற முறையில் வேண்டாம்; இந்தக் கூட்டணியினுடைய தலைவர் என்ற முறையில் வெளியிடட்டும்.

மக்கள் பெரு மகிழ்வோடு நிதி வழங்குவார்கள். அவர்கள் வழங்கும் நிதி, மக்களின் ஆதரவையும் வெளிப்படுத்துவதாக அமையும். அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்.’’

இதுவும் மாநில சுயாட்சியில் மிக முக்கியமான ஓர் அம்சமாகும்.

எனவே, சகோதரர் எழுச்சித் தமிழர் சொன்னதை நான் வழிமொழிகிறேன்; இந்தக் கூட்டமும் வழிமொழியும் என்று நம்புகிறேன்.

அனுமதி முத்திரைக் குத்தவேண்டுமே என்று சொன்னார் நம்முடைய எழுச்சித் தமிழர்.  அந்த முத்திரை இல்லாவிட்டாலும், நாம் போய்க்கொண்டே இருப்போம். மக்கள் கருத்தை முன்னால் திரட்டினால், சட்டம் நொண்டியடித்துக் கொண்டு தானே வரும் என்பதுதான் நடைமுறைப் பழமொழி.

மக்கள் அங்கீகாரத்தைக் காட்டுவோம்!

இதற்கு இரண்டு உதாரணங்களைச் சொல்லலாம்.

ஒன்று, சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று நீதிமன்றம் சொன்னது. அதனால், அந்தத் திருமணங்களை நிறுத்திவிட்டார்களா? அதற்குப் பிறகு 10 ஆயிரம் சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றன. பிறகு அண்ணா ஆட்சி, திராவிட ஆட்சி வந்தது, சட்டம் பின்னாலே நொண்டிக் கொண்டு வந்தது.

எனவே, சட்டம் பின்னால் வரும்; ஆனால், சமுதாயம் முன்னால் போகும்.

அதேபோன்று, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்; இன்றைக்குத் தமிழைப்பற்றி பேகிறார்களே பலர், யாரும் செய்யாத பணியை செய்த ஒரே தலைவர் தந்தை பெரியார்தான்.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை 1935 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் அறிவித்தார். அப்படி அறிவித்ததோடு நிற்கவில்லை; தன்னுடைய ‘குடிஅரசு’ ஏட்டில் அதனை முழுமையாகச் செயல்படுத்தினார். பிறகு ‘விடுதலை’யில் பயன்படுத்தினார்.

1935 ஆம் ஆண்டு தொடங்கியது, 50 ஆண்டுகள் கழித்து, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் என்றே வந்தது.

ஆகவேதான், இன்றைக்கு அவர்கள் ஒப்புக்கொள்கி றார்களா, இல்லையா? அங்கீகரிக்கிறார்களா, இல்லையா? என்பதைப்பற்றி கவலைப்படாமல், மக்கள் அங்கீகாரத்தை முதலில் நாம் காட்டுவோம்.

இந்தத் தீர்மானங்களை அத்துணை பேரும் வழிமொழிந்தீர்கள் என்பதற்கு ஆதாரமாக, எழுந்து நின்று கையொலி எழுப்பி, இதற்குப் பெருமைச் சேர்க்கவேண்டும்.

ஆர்ப்பாட்டத்திற்கு வந்த தோழர்களுக்கு நன்றி!

–  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்கள் மத்தியில் நிதி திரட்டுவதை ஆதரிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவர் கே.வி.தங்கபாலு கட்சியின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் அளிப்பதாக அறிவித்தார்.


- விடுதலை நாளேடு, 18.06.25

திங்கள், 19 மே, 2025

இரா.எத்திராஜன் ஆசிரியர் அவர்களிடம் வாழ்த்து

 


விடுதலை நாளேடு
வாழ்த்து

சிங்கப்பூரில் நடைபெற்ற பன்னாட்டு டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரா.எத்திராஜன் – குழுப் போட்டியில் 3ஆம் இடத்தை பெற்றதையொட்டி ஆசிரியர் அவர்களை 12.5.2025 அன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். மத்தியப் பிரதேசத்தில், தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் தமிழ் நாட்டின் சார்பில் குழு போட்டியில் சுற்று 16க்கும், தனிநபர் போட்டியில் சுற்று 64க்கும் தகுதி பெற்றார் எத்திராஜன்.

திங்கள், 28 அக்டோபர், 2024

டில்லி பெரியார் மய்யம் இடிப்புக்கு சைதையில் வி.பி.சிங் கலந்துகொண்ட கண்டனக் கூட்டம்! கி.வீரமணி

 

அய்யாவின் அடிச்சுவட்டில்…இயக்க வரலாறான தன் வரலாறு (306)

2022 அய்யாவின் அடிச்சுவட்டில் டிசம்பர் 16-31 2022

டில்லி பெரியார் மய்யம் இடிப்புக்கு சைதையில் வி.பி.சிங் கலந்துகொண்ட கண்டனக் கூட்டம்!
கி.வீரமணி

டில்லியில் பெரியார் மய்யம் இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் நடந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள், 15.12.2001 அன்று சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அங்கு எனது தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அன்று மாலை சைதாப்பேட்டையில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் வி.பி.சிங் அவர்கள் ஆற்றிய உரை உணர்வுபூர்வமானது, வரலாற்றுச் சிறப்புமிக்கது. பெரியார் மீதும், நமது இயக்கத்தின்மீது அவர் கொண்டிருந்த அளவற்ற பற்றையும், பிணைப்பையும் அது வெளிப்படுத்தியதோடு, அநீதிக்கு எதிரான அவரது ஆவேசத்தையும் அது வெளிப்படுத்துவதாய் அமைந்தது. அவ்வுரை வருமாறு:
பெரியார் மய்யம் எதற்காகக் கட்டப்பட்டிருக்கிறதென்றால், கல்விக்காகக் கட்டப்பட்டிருக்கின்றது. பெரியார் மய்யம் எதற்காகக் கட்டப்பட்டிருக்கிறது என்று சொன்னால், அங்கு மருத்துவ வசதிக்காகக் கட்டப்பட்டிருக்கின்றது. இப்படி ஏழை, எளிய மக்களுக்காக தொண்டுள்ளத்தோடு, நல்ல காரியங்களுக்-காகக் கட்டப்பட்டிருப்பது, டில்லி பெரியார் மய்யம்.

ஆனால் டில்லி ‘பெருநகர வளர்ச்சிக்குழுமம் எப்படிக் கட்டடம் கட்டியிருக்-கின்றார்கள் என்பதை நீங்கள் தெரிந்து-கொள்ள வேண்டும். அங்கே ஒரு கிளப் கட்டியிருக்கின்றார்கள். பலர் அங்கு வந்து குடிப்பதற்கும் நாட்டியத்தைப் பார்த்து ரசிப்பதற்கும், கூத்தடிப்பதற்கும் இப்படி ஒரு கட்டடத்தை அங்கு சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டியிருக்கின்றார்கள். இரவு முழுக்க இசை நிகழ்ச்சி நடனம் நடத்திக் கூத்தடிக்கின்றார்கள். அதனால் யாருமே தூங்கக்கூட முடிவதில்லை.
இப்படிப்பட்ட நிலையிலே டில்லி பெருநகர வளர்ச்சிக் குழுமம் தொடர்ந்து நடைபெற்றால் – நான் டில்லி பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு ஒரு எச்சரிக்கை விடுக்க விரும்புகின்றேன். உங்களுடைய கட்டடத்தை நாங்களே ஆயுதங்களைக் கைகளில் ஏந்தி தகர்த்தெறிவோம் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

நீதி என்றால் அது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.
வீரமணி அவர்களே! நான் ஒன்றை உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். அந்தக் கட்டடம் இடிக்கப்
பட்ட சமயத்திலே நான் லக்னோவில் இருந்தேன். நான் மட்டும் அன்றைக்கு டில்லியில் இருந்திருந்தால் டில்லி பெரியார் மய்ய கட்டடத்தை இடிக்கும் அந்த புல்டோசர் முன்னால் நின்றிருப்பேன் (பலத்த கைதட்டல்)
நான் டில்லியில் இல்லாதபொழுது மய்ய அரசாங்கம் இடிக்கின்ற வேலையை செய்கின்றது.
நான் லக்னோவில் இருந்தபொழுது டில்லி பெரியார் மய்யத்தை இடித்தார்கள். அதேபோன்று நான் மும்பையில் இருந்த பொழுது அங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் வீடுகளை இடித்தார்கள். இந்த மாதிரி காரியத்தைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

நான் காலையில் ஒரு வேளை வந்து தடுத்து விடுவேனோ என்று நினைத்து இரவிலேயே இடித்துத் தள்ளி முடித்துவிடுகின்றார்கள்.
இங்கு கட்டடம் என்பது பெரிதல்ல. பெரியார் என்பவர் சிமெண்டும், செங்
கல்லும் அல்ல; தந்தை பெரியார் என்பவர் ஒரு தத்துவம்; பெரியார் என்பவர் ஒரு கொள்கை; பெரியார் என்பவர் ஒரு தொலைநோக்கு; பெரியார் என்பவர் ஒடுக்
கப்பட்ட மக்களின் குரலாகத் திகழ்பவர்.
எங்கெல்லாம் அநீதி நிகழ்கிறதோ அங்கெல்லாம் பெரியார் இருக்கிறார். எத்தனை கோயில்களை நீங்கள் இடிக்க வேண்டும் என்று கருதுகின்றீர்க-ள்?
பயங்கரவாதத்தை எதிர்த்து நாம் போராடத்தான் போகிறோம்.
குண்டுகளை வைத்தல்ல, – கருத்துகளை வைத்துத்தான் தீர்வு காணமுடியும்.
ஆனால் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

மதத் தீவிரவாதம் இருக்கிறதே அது வன்முறையைக் காட்டிலும் மிகப் பயங்கரமானது என்பதை உங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
மதத் தீவிரவாதத்தில் ஓர் உறுதியான நிலையை நாம் எடுத்தாக வேண்டும். இங்குதான் தந்தை பெரியாரின் கருத்துகள் மிக முக்கியமானதொரு கருத்தாக இருக்கின்றது.
குண்டுகளை வைத்து நாம் எதற்கும் தீர்வு காண முடியாது. ஆனால் கருத்து
களை வைத்துத்தான் எதற்கும் நாம் தீர்வு கண்டாக வேண்டும்.
நான் சில நேரங்களிலே கடவுளைப் பார்த்து தொழ விரும்புகிறேன். ‘கடவுளே! எங்களை எல்லாம் மதத்திலிருந்து விடுவிக்கச் செய்யுங்கள் என்று தொழ விரும்புகிறேன்.

நான் குறிப்பாக வீரமணி அவர்களுக்கும், திராவிடர் கழகத் தொண்டர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்
துக் கொள்கின்றேன். ஏனென்றால், அறிவார்ந்த முறையிலே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். அதற்காக உங்களை நான் பாராட்டக் கடமைப்-பட்டிருக்கின்றேன்.
டில்லியில் பெரியார் மய்யம் இடிக்கப்பட்டது என்பது ஒரு கட்சிப்
பிரச்சினை அல்ல. இது ஒரு பொதுப்பிரச்சினை. நான் ஒன்றைச் சொல்லிக்-கொள்ள விரும்புகின்றேன். எல்லா கட்சிக்காரர்களையும் சந்திப்போம்.
எல்லா கட்சிக்காரர்களும் ஒன்று சேர்ந்து நாம் பிரதமரைச் சந்திப்போம். நானும் வருகின்றேன்.
அந்தக் குழு பிரதமரோடு பேசட்டும்! ஆரிய சமாஜத்தினுடைய கட்டடம் இடிக்கப்பட்டது. பிரதமர் அவர்கள் அந்த விசயத்தில் உடனே தலையிட்டார். உடனடியாக ஆரிய சமாஜக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. அதே போன்று பெரியார் மய்யம் இடிக்கப்பட்டது. இதில் பிரதமர் வாஜ்பேயி தலையிட வேண்டும். இடித்த டில்லி பெரியார் மய்யக் கட்டடத்தை பிரதமர் மீண்டும் அப்படியே கட்டித் தரவேண்டும்.

இந்தக் கோரிக்கையை நாம் வைக்கின்றோம். இந்தக் கோரிக்கையை வைத்தபின்னால்கூட மத்திய ஆட்சியில் உள்ள பி.ஜே.பி. அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொன்னால், நாம் வேறுவிதமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டியிருக்கும். வீரமணி அவர்கள் சட்டப் புத்தகத்தில் உள்ள சட்டநடவடிக்கையை எடுத்து என்னிடத்திலே படித்துப் பார்க்கும்படி காட்டினார்கள்.
ஒரு கட்டடத்தை இடிக்கவேண்டும் என்று சொன்னால் அந்தக் கட்டடத்தை கட்டியவர்களுக்கு, கட்டட உரிமையாளர்களுக்கு, 30 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும் என்கிற சட்டத்தை அவர்கள் காட்டினார்கள். நான் அந்தச் சட்டப்படி போக விரும்பவில்லை. நான் எந்தச் சட்டப்படி போக வேண்டும் என்று விரும்புகிறேன் என்று சொன்னால்,
மத்தியில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி. அரசாங்கத்திற்கு டில்லியில் உள்ள பெரியார் மய்யத்தை அதற்குள் கட்டி முடித்துத்தர வேண்டும் என்று ஒரு அவகாசத்தைக் கொடுப்போம்.

அதற்குள்ளாக மத்திய அரசு கட்டித்தரவேண்டும் என்று நாம் கேட்போம்.
அரசாங்கம் சமூக நீதிப்படி, ஜனநாயக நெறிப்படி, உண்மைப்படி பெரியார் மய்யத்தைக் கட்டித் தர வேண்டும் என்று சொன்னால் மிக அமைதியாக, மிகப் பொறுமையாக, சட்டரீதியாக நாம் ஒரு காரியத்தைச் செய்வோம். டில்லிக்குச் சென்று பெரியார் மய்யத்தைக் கட்டி முடிப்பதற்கு _ கரசேவை செய்வதற்கு நாமே ஆரம்பித்துவிடுவோம்.
நம்பிக்கை என்பதைப்பற்றி பேசு-கின்றீர்கள். அப்படியானால் கோடிக்-கணக்கான மக்களுக்குப் பெரியார் அவர்களும் ஓர் நம்பிக்கை தானே? ஆகையினாலே பெரியார் மய்யம் கட்டும் கரசேவையைத் தொடங்கும் பொழுது முதல் கரசேவை யார் செய்வார்கள் என்று சொன்னால், நான்தான் அந்த முதல் கரசேவையைச் செய்வேன்.

இப்படி இருந்த கட்டடத்தை (கட்டடத்தின் முன்பு இருந்த தோற்றப் புகைப்படம்) இப்படி ஆக்கிவிட்டார்கள். நாம் இப்படி இருக்கின்ற (கட்டடம் இடிந்துபோன நிலையில் உள்ளதை) இடத்தை மீண்டும் இப்படி ஆக்கிக் காட்டுவோம். இதில் நாம் உறுதியாக இருப்போம். இடிக்கப்படாத பெரியார் மய்யக் கட்டடத்தையும் இடிக்கப்பட்ட கட்டடத்தின் படத்தையும் பொது மக்களிடம் காட்டிப் பேசினார்.
பயங்கர வன்முறை என்று சொல்லக்-கூடியது பாம் நொலியில் உள்ள கட்டடத்தை மட்டுமே தரை மட்டமாக்கக் கூடியது. ஆனால் மத பயங்கரவாதம் என்பது ஒரு மனிதனின் இதயத்தையே தாக்கி அழிக்கக் கூடியதாகும்.
பயங்கரவாதம் என்ற குண்டுகளை வைத்து எதையும் நாம் முடித்துவிட முடியாது. ஆனால் கருத்துகளை வைத்துத்தான் ஒரு தீர்வு காண முடியும். இப்பொழுது மதத்தின் பெயராலே நாம் ரத்தத்தைச் சிந்திக் கொண்டிருக்கின்றோம்.

இந்த நிலையிலிருந்து நம்மைக் காப்-பாற்றக் கூடியது எது என்று சொன்னால் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்றும்.
நான் தமிழகத்து மக்களைப் பாராட்ட விரும்புகிறேன். டில்லி பெரியார் மய்யம் இடிக்கப்பட்டுவிட்டது. இவ்வளவு காரியங்கள் நடந்துவிட்டன. ஆனால் நீங்கள் ஆத்திரப்படவில்லை. நீங்கள் அமைதியாகச் சிந்தித்தீர்கள். என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்த நடவடிக்கைகளை முறையாக ஒழுங்காக எடுத்திருக்கின்றீர்கள். அரசாங்கமே இடித்த தவறை திருத்திக் கொள்ளட்டும் என்று சொல்லக்கூடிய வகையிலே நீங்கள் காரியம் செய்து கொண்டிருக்கின்றீர்கள்.
மதத் தீவிரவாதத்தைப் பற்றி உறுதியாக ஒரு நிலையைச் செய்து கொண்டிருக்கின்றீர்கள். அதற்காக தமிழக மக்களை நான்
பாராட்டுகின்றேன்.

கட்டடத்தைக் கட்டுவது என்பது ஒரு காரியம். ஆனால் அதுவே முடிந்த முடிவான காரியமல்ல. அதற்கு மேலாக கருத்து இருக்கிறது. அதற்கு மேலாக
மனிதாபிமானம் என்ற நீண்ட தொலை நோக்குப் பார்வை இருக்கிறது.
நான் இங்கே ஒரு மகிழ்ச்சியான செய்தியைச் சொல்ல விரும்புகிறேன்.
டில்லி பெரியார் மய்யக் கட்டடத்தை இடித்துவிட்டாலும்கூட, வீரமணி அவர்கள் ஓர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதே பாம்நொலி கிராமத்திலே ஏழை -_ எளிய மக்களுக்காக டில்லி பெரியார் மய்யம் எந்தப் பணியைச் செய்து கொண்டி
ருந்ததோ அந்தப் பணியை இன்றைக்கும் அங்கு தொடர்ந்து நடக்குமாறு செய்திருக்கிறார்கள். ஆகையினாலே அப்படிப்பட்ட காரியத்-தைச் செய்த வீரமணி அவர்களை நான் பாராட்டுகின்றேன். எனக்களித்த வாய்ப்புக்கு நன்றி கூறி முடித்துக் கொள்கின்றேன். இவ்வாறு வி.பி.சிங் உரையாற்றினார்.

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் தலைமையில் தூதுக்குழு 20.12.2001 மதியம் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து பெரியார் மய்யம் சட்ட விரோதமாக- நியாய விரோதமாக இடிக்கப்பட்டதை எடுத்து விளக்கி, அது உருவாக்கப்பட அரசு உதவிட வேண்டும் என்று மனு
அளிக்கப்பட்டு வேண்டுகோளும் வைக்கப்பட்டது.
மாண்புமிகு இந்தியப் பிரதமருக்கு அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கையொப்பமிட்டவர்கள்:
1. திரு.வி.பி.சிங், முன்னாள் பிரதமர்
2. திரு. கான்சிராம், செயல் தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி
3. திரு டி. ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
4. திரு சந்திரஜித் யாதவ், முன்னாள் மத்திய அமைச்சர்- சமூகநீதி மய்யத் தலைவர்
5. திரு.கே.ஆர். கணேஷ், முன்னாள் மத்திய அமைச்சர்
6. திரு.கே. எர்ரன் நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர்- நாடாளுமன்ற தெலுங்கு தேசக் கட்சி தலைவர்.
7. திரு.பி.எச். பாண்டியன், நாடாளுமன்ற அ.இ.அ.தி.மு.க. கட்சித் தலைவர்
8. திரு.எஸ்.எஸ். சந்திரன், அ.இ.அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்
9. கே. மலைச்சாமி, நாடாளுமன்ற அ.இ.அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்
10. திரு. சோமநாத் சட்டர்ஜி, நாடாளுமன்ற மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்
11. திரு. வைகோ, நாடாளுமன்ற ம.தி.மு.க. தலைவர்
12. திரு. இரா. செழியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
13. திரு. கா. ஜெகவீரபாண்டியன், தலைவர், சமூகநீதிக் கட்சி.
14. திரு. கி.வீரமணி, செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்(பெரியார் அறக்கட்டளை).

வெள்ளி, 14 ஜூன், 2024

இரா.எத்திராஜனை(சைதாப்பேட்டை)தமிழர் தலைவர் வாழ்த்தி பாராட்டு

7-20

தமிழ்நாடு அரசின் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில், 30ஆவது ஆண்டாக, 50 தடவைக்கு மேலாக குருதிக்கொடை வழங்கியுள்ள டேபிள்டென்னிஸ் பயிற்சியாளர் இரா.எத்திராஜனை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தார். (சென்னை, 8.6.2024). இன்று உலக குருதி கொடையாளர் நாள் 14.6.2024


வியாழன், 13 ஜூன், 2024

கழகத் தோழர் வாசுதேவன் அவர்களின் இல்லத் திருமண(லீலா ராம் - மஞ்சுளா இணையர்) நிகழ்ச்சி

நன்கொடை


Published June 13, 2024, விடுதலை நாளேடு

லீலாராம் – மஞ்சுளா இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பெரியார் உலகத்திற்கு ரூ.10,000/-த்தை நன்கொடையாக வழங்கினர். மணமக்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: வாசுதேவன் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர். (சென்னை – 8.6.2024)

---------++++++-------++++++++-----+++++-------

தென்சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த கழகத் தோழர் வாசுதேவன் அவர்களின் இல்லத் திருமணம்(லீலா ராம் - மஞ்சுளா இணையர்) பல்லாவரத்தில் உள்ள 'ராம் கிரிஷ் பேலஸ்' என்கின்ற திருமண அரங்கில் 19.05.2024 மாலை 6.00 மணி அளவில் நடைபெற்றது. 

திராவிடர் கழக பரப்புரை செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் திருமண நிகழ்வை நடத்தி வைத்தார்.

புவியைப் போற்றி திருமணம் நடைபெற்றது. தோழர் செந்தமிழ் சேகுவாரா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தென்சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, அமைப்பாளர் மு.ந. மதியழகன்,  துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.இரா.மாணிக்கம், ம. தமிழ்மதி, தாம்பரம் மாவட்ட கு.சோமசுந்தரம் மற்றும் பலர் பங்கேற்றனர்.




ஞாயிறு, 10 மார்ச், 2024

ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து சி.பி.அய் – எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சாதனைகளை சொல்ல முடியாத பா.ஜ.க. ஒன்றிய அரசு மக்களிடம் இருக்கும் பாமர பக்தியைப் பயன்படுத்தி வாக்குகளைப் பறிக்கத் திட்டமிடுகிறது!


விடுதலை நாளேடு 

 கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரை

சென்னை. பிப். 10- ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து சி.பி.அய் – எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.
‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு எதிராக ஆளுநர்களை வைத்து போட்டி அரசு நடத்துவ தையும், மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய மோடி அரசு’ என்கின்ற தலைப்பில் பா.ஜ.க. அரசைக் கண்டித்தும் சி.பி.அய்.எம் சார்பில் 8.2.2024 அன்று, சென்னை, சைதாப்பேட்டையில் ”கலைஞர் பொன்விழா வளைவு”க்கு அருகே, மாலை 6 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தென்சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் இரா.வேல் முருகன் தலைமையில், சி.பி.அய்.எம். சைதைப் பகுதிச் செயலாளர் தோழர் ஜி.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாநகராட்சி உறுப்பினர் தோழர் எம்.சரஸ்வதி, சி.பி.அய். மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, ம.தி.மு.க. மாநகராட்சி உறுப்பினரும், தென்சென்னை மாவட்டச் செயலாளருமான ப.சுப்பிரமணி, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர்
க. பீம்ராவ், மாநில செயற்குழு தோழர் என். குணசேகரன், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாள ருமான ச. அரவிந்த் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். இறுதியாக திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் கண்டன உரையாற்றினார்.
அவர் தனது கண்டன உரையில் கடந்த 2014 இல் ஆட் சிக்கு வந்த பா.ஜ.க. அரசு சட்டப்படியான ஆட்சியை நடத்த வில்லை என்பதை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துக் கூறினார். இப்போது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு தனது 10 ஆண்டு கால சாதனைகளாக சொல்வதற்கு எதுவுமில்லை. ஆகவே, மக்களின் பாமர பக்தியைப் பயன்படுத்தி வாக்குகளைப் பறிக்கத் திட்டமிடு கிறது. I.N.D.I.A. கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையாக இருந்து அவர்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்” என்று கூறினார். இறுதியாக சைதை பகுதிக்குழு தோழர் கே.மணிகண்டன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர்கள் ச.இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் அதிரடி க. அன்பழகன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மு.ந.மதியழ கன், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர்கள் பூவை தமிழ்ச்செல்வன், உடுமலை வடிவேல், அரும்பாக்கம் சா.தாமோதரன், மு.பவானி, திராவிடர் கழக இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், தலைமைக் கழகப் பணித் தோழர் க,கலைமணி உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தோழர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு, ஒன்றிய அரசின் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு சேர்த்தனர்.

தேனி
தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த ஆளுநர் ரவியை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பூ மணிகண்டன் தலைமையில் தேனி மாவட்ட கழக தோழர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்க எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பூ.மணிகண்டன் தலைமையில் தேனி மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

கரூர்
கரூர் மாவட்ட திராவிடர் கழக மாவட்டத் தலைவர் குமாரசாமி, திராவிடர் கழக மாநில வழக்குரைஞரணி துணைத் தலைவர் மு க ராஜசேகரன், பொதுக்குழு உறுப்பினர் சே அன்பு, காப்பாளர் வே, ராஜு, மாவட்டச் செயலாளர் காளிமுத்து, ஆகியோர் கரூரில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். கரூர் கடைவீதி தலைமை அஞ்சல் அலுவலகம் முன். சிபிஎம் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சிபிஎம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், பிஜேபி அரசு ஆளாத மாநிலங்களில், ஆளுநர்களை வைத்து, மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்து, கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமையில் டில்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் கரூர் மாவட்ட செயலா ளர் ஜோதிபாசு, திமுக மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், திமுக கரூர் மாநகர செயலாளர்கள் வழக்குரைஞர் சுப்பிரமணி எஸ்.பி கனகராஜ், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கொமதேக மாவட்ட செயலாளர் மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர மாவட்ட செயலாளர் கராத்தே இளங்கோவன், அமைப்புசாரா தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுடர்வளவன், கரூர் மாவட்ட கழகத் தலைவர் குமாரசாமி, எல் பி எஃப் கரூர் மாவட்ட செயலாளர் அண்ணா வேலு, திமுக கரூர் மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் பாபு, சிபிஅய் மாவட்ட தலைவர் நாட்ராயன், விசிக கரூர் நகர செயலாளர் முரளி என்கிற பாலசிங்கம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கந்தசாமி, சக்திவேல், சுப்பிரமணி, ராமமூர்த்தி கோச்மீன் சரவணன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

ஒசூர்
ஒசூரில் சிபிஎம் கட்சி மாநகர செயளாலர் சி.பி.ஜெயராமன் தலைமையில் பிஜேபி அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, மமக, சிபிஅய் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், திமுக மாவட்ட செயளாலர் ஒய்.பிரகாஷ், மேயர் சத்யா, சிபிஅய் மாதையன், மதிமுக ஈழம் குமரேசன், விடுதலை சிறுத்தை கட்சி மாநகர மாவட்ட செயளாலர் எம்.ராமசந்திரன், சி.பி.எம் மாவட்ட செயற்குழு ஆர்.சேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கோவை
கோவையில் 8.2.2024 அன்று டாடாபாத் பகுதியில் மாலை 5 மணி அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திராவிடர் கழகம் சார்பில் கோவை மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் பங்கேற்று கண்டன உரையாற்றினார்
ஆர்பாட்டத்தில் கழகத் தோழர்கள் அ.மு.ராஜா வெங்க டேஷ், நா.குரு, ஆவின் சுப்பையா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் பாஜக அல்லாத மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் நிதி பங்கீட்டில் பாரபட்சம் காட்டப் படுவதையும், மாநில அரசுகள் கடன் பெற சீலிங் வைக்கப்பட்டதை சுட்டிக் காட்டியும், சமீபத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெரும் மழை பேரிடரை சரி செய்ய, தமிழ்நாடு அரசு 36 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டது. ஆனால் ஒன்றிய அரசு நிதி தரவில்லை என்பதையும், தமிழ்நாடு, கேரளா, டில்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஒன்றிய அரசு ஆளுநர்கள் மூலம் இடையூறுகள் செய்து வருகிறது. மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதை சுட்டிக் காட்டியும் உரையாற்றினார்கள்.

இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் திராவிட முன் னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொ.ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கருப்புசாமி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் – ஆடிட்டர் அர்ஜுன் ராஜ், சேதுபதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் சுசி கலையரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் யூ.கே.சிவஞானம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோவை மத்திய மண்டல துணைச் செயலாளர் ஏ.பி.மணி பாரதி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்
ஒன்றிய அரசை கண்டித்தும், ஆளுநரை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நாடு தழு விய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அம்மா உணவகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில உரிமைகள் மீதான தாக்குதலை அனுமதிக்க மாட்டோம், ஆளுநரை பயன்படுத்தி மசோதாக்களுக்கு அனுமதி தர மறுப்பதா, ணிஞி, மிஜி போன்ற ஒன்றிய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டாதே போன்ற பல்வேறு முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில். திராவிடர் கழகத்தினர் உள்பட கூட்டணிக் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

-------------------------------------------------------------------------------------------------------------------------