அய்யாவின் அடிச்சுவட்டில் …: இயக்க வரலாறான தன் வரலாறு(257)
கி.வீரமணி
ராமேசுவரம் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் கழகக் கொடியை ஏற்றிவைக்கும் ஆசிரியர் உடன் பொறுப்பாளர்கள்.
25.2.1995 அன்று ராமாநாதபுரம் மாவட்ட கழகத்தின் சார்பில் ராமேசுவரத்தில் ஜாதி ஒழிப்பு மாநாடு பெரிய கடை வீதி காந்தி சிலை அருகில் சுயமரியாதைச் சுடரொளி இரா.சண்முகநாதன் நினைவுக் கொடி கம்பத்தில் கழகக் கொடியை ஏற்றிவைத்து துவங்கி வைத்தேன். கழகத் தோழர்களும், பொறுப்பாளர்களும் மோட்டார் சைக்கிள், ஆட்டோ ரிக்ஷாக்கள், ஜீப், வேன்கள் புடைசூழ அழைத்துச் சென்றனர். சாலையின் இருபுறமும் பொதுமக்கள் வணக்கம் செலுத்தி வரவேற்றனர். பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு, வீதி நாடகம், மந்திரமா? தந்திரமா?, சொற்பொழிவு என மாநாட்டினை மாவட்ட பொறுப்பாளர்கள் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். இரண்டு மணி நேரம் ஆற்றிய உரையை மக்கள் இறுதிவரை இருந்து கேட்டுச் சென்றனர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
26.2.1995 அன்று பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் திருப்பத்தூரில் திராவிடர் கழகத்தின் சார்பாக ஜாதி ஒழிப்பு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருப்பத்தூர் பெரியகடை வீதியில் சுயமரியாதைச் சுடரொளி சிவகங்கை இரா.சண்முகநாதனார் நினைவுத் திடலில் நடைபெற்ற மாநாட்டிற்கு மாவட்ட கழகத் தலைவர் ச.இன்பலாதன் தலைமை வகித்தார். முன்னதாக சுயமரியாதைச் சுடரொளி திருப்பத்தூர் நா.பள்ளிகொண்டான் அவர்களின் நினைவுக் கொடிக் கம்பத்தில் தோழர்களின் வாழ்த்து முழக்கங்களுடன் கழகக் கொடியை ஏற்றி வைத்தேன். தொடர்ந்து ஜாதி ஒழிப்பு வீரர்களுக்குப் பாராட்டும், பெரியார் பெருந்தொண்டர்களுக்குச் சிறப்பும் செய்யப்பட்டது. பட்டிமன்றம், மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், வீதிநாடகம், தீர்மான அரங்கம் என மாநாடு கழகத் தோழர்களால் சிறப்பாக வழிநடத்தப்பட்டது. மாநாட்டை ஒட்டி திருப்பத்தூர் நகரமே கழகக் கொடி தோரணங்களால் விழாக்கோலம் பூண்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக