வடசென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வடசென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 செப்டம்பர், 2026

தெலங்கான நாத்திக சங்கத்தினரின் இசைப் பாடலுடன் பெரவள்ளூரில் பெரியார் 148 ஆம் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம்!



திராவிடர் கழகம்

சென்னை, செப்.20 வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், பெரம்பூர் – அகரம் – பெரவள்ளூர் சதுக்கத்தில் கடந்த 17.9.2026 அன்று மாலை 6 மணிக்கு, “உலகத் தலைவர் தந்தை பெரியாரின் 148 ஆம் பிறந்தநாள் விழா நடைபெற்றது. பெரியார் பெருந்தொண்டரும், வடசென்னை மாவட்ட கழக மகளிரணி மேனாள் தலைவருமான கு.தங்கமணி குணசீலன் நினைவாக அம்மேடை அமைக்கப்பட்டி ருந்தது.

நிகழ்வில், வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் அனைவரையும் வரவேற்றும், ஏன் பெரியார் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உரையாற்றிய, மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டி யன், நிகழ்ச்சியை நெறிப்படுத்தியும் சிறப்பித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தொடங்கி வைத்தும், மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், திராவிடர் மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, வழக்குரைஞரணி மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் துரை. அருண், துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, பொருளாளர் வீ.குமரேசன், துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் முன்னிலை வகித்தும் உரையாற்றினர்.

துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், மாநில மகளிரணி துணைச் செயலாளர் க.இறைவி, மாநில மகளிரணி துணைச் செயலாளர் வீ.கே.ஆர்.பெரியார் செல்வி, தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், சி.வெற்றிச்செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம், முனைவர் அதிரடி க.அன்பழகன், முனைவர் த.கு.திவாகரன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், சு.மோகன்ராஜ், தென்சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் கரு.அண்ணாமலை, ஆவடி மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் க.ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

தந்தை பெரியார்பற்றிய கொள்கைப் பாடல்கள்!

முன்னதாக, தெலங்கான நாத்திக சங்கத்தின் நிறுவனர் ஜி.டி.சாரய்யாவின் தலைமையில் பாலாஜி, ராமகிருஷ்ணன், சிறீதர், ஸ்பார்ட்டகஸ், ராஜ்குமார், ஆனந்த் மற்றும் போஸ் பாபு ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, தெலுங்கில், தாளத்துடன் மூன்று பாடல்களைப் பாடினர். ஒன்று, பெரியார் கொள்கை எப்படிப்பட்டது என்றும், மற்றொன்று, பார்ப்பன ஆதிக்கம் எப்படிப்பட்டது என்றும், மூன்றாவது, பெரியார் அதை எப்படியெல்லாம் தகர்த்தார் என்றும் அப்பாடல்கள் அமைந்திருந்தது. கலந்து கொண்ட அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடனும், உணர்ச்சி யுடனும் பாடல்களைப் பாடினர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு பாடிய ஸ்பார்ட்டகஸ், ஆங்கிலத்தில் மூன்று பாடல்களின் கருத்தை சுருக்கமாக விவரித்தார். மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் அதைத் தமிழில் பெயர்த்துக்கூறினார்.

இயக்க நூல்கள் அறிமுகம்!

தொடர்ந்து, ‘‘பெரியார் கேட்கும் கேள்விகள்” 10 புத்தகங்கள் ரூ.200/- க்கும், ”உலகத்தலைவர் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு” 12 தொகுதிகள் ரூ.3,000/- க்கும், ”விடுதலை மலர்” ரூ.300–க்கும் அறி முகம் செய்யப்பட்டன. தோழர்கள் வரிசையாக வந்து கழகத் தலைவரிடம் புத்தகங்களை பெற்றுச் சென்றனர்.

‘‘பெரியார் உலக”த்திற்கு
நன்கொடை!

பெரியார் பெருந்தொண்டர் முத்துக்கிருஷ்ணன், ‘‘பெரியார் உலகம்” நன்கொடை ரூ.30,000/-, விடுதலை சந்தா ரூ.2,000/-, ‘‘சாமி கைவல்யம் முதியோர் இல்லம்” நன்கொடையாக ரூ.2,000/-, அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2,000/- என மொத்தம் ரூ.36,000/- காசோலையாக, ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன் உடனிருக்க, கழகத் தலைவரிடம் வழங்கினார். அண்மையில் மணவிழா கண்ட வடசென்னை மாவட்ட அமைப்பாளர் ஓட்டேரி சி.பாஸ்கர் மகள் இளையமதி – சதீஷ் இணை யர்கள் ”பெரியார் உலகம்” நிதியாக ரூ.15,000/- வழங்கினர்.  பெரம்பூர் – செம்பியம் திராவிடர் கழகம் சார்பில், மாவட்டக் காப்பாளர் கி.இராமலிங்கம், கழகத் தலைவருக்குப் பயனாடை அணிவித்து, பெரியார் உலக நிதிக்கு ரூ.1000 வழங்கினார். கழகத்தின் இளைஞரணி சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து, மரியாதை செய்யப்பட்டது. சுயமரியாதைத் திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி கழகத்தலைவருக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்தார்.

மேலும், “பெரியார் எனும் வியப்பு” எனும் நூலை நூலாசிரியர் மோகன் மேடையில் அமர்ந்திருந்த வர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார்.

வடசென்னை மாவட்டக் காப்பாளர் கி.இராமலிங்கம் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

முன்னதாக, கூட்ட செலவில் துண்டு விழுந்துள்ளது என்று, தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தோழர்கள் பொதுமக்களிடம் துண்டேந்தி வருவார்கள் என்று அறிவிப்பு செய்திருந்தார். அதன்படி தோழர்கள் பசும்பொன்னும், த.மரகதமணியும் துண்டேந்திச் சென்றனர். குறைந்த நேரத்தில் மக்கள், ரூ.3,200/- ரூபாயை கூட்ட செலவுக்காக வழங்கியிருந்தனர். அத்தொகை மேடையில் அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மரகதமணியுடன் பா.பார்த்திபன், ந.கார்த்திக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தோழர்கள் பெரியார் மாணாக்கன், பூவை செல்வி, ஆவடி முருகேசன், பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்றுநர் காமராஜ், இளைஞரணித் தோழர்கள் பூவரசன், யுகேஷ், ஊடவிலயாளர் த.பரிதின், ஆவடி ஆ.வெ.நடராஜன், இ.தமிழ்மணி, பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன், செம்பியம் கழக செயலாளர் டி.ஜி.அரசு, மாவட்ட துணைச் செயலாளர் வ.தமிழ்ச்செல்வன், திராவிட மாணவர் கழகச் செயலாளர் அ.புகழேந்தி, மகளிரணிச் செயலாளர் த.இளவரசி, மாவட்ட தொழிலாளர் கழகத் தோழர் க.சுமதி, அயன்புரம் துரைராஜ், செந்துறை இராசேந்திரன், சி.வாசு, பெரியார் பெருந்தொண்டர்கள் கோ.தங்கமணி, தங்க. தனலட்சுமி, அரும்பாக்கம் சா.தாமோதரன், கோவை சகா உள்ளிட்டோரும், பொதுமக்கள் ஏராளமானோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கலந்துகொண்ட அனைவருக்கும் தந்தை பெரியார் 148 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

கடைசி வரையிலும் மக்கள் கலையாமல் இருந்து கருத்துகளை உள்வாங்கிக்கொண்டனர். மொத்தத்தில் இந்நிகழ்வு திராவிடர் இயக்கத்தின் மாலை நேரக் கல்லூரியாக இருந்து மக்களுக்கு பெரியாரின் அவசியம் பற்றி மறுபடியும் கற்றுத் தந்ததாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு, 20.09.2026

தென் சென்னை திராவிடர் கழக ஊடகம்

யூடியூப் காணொலி




ஞாயிறு, 1 மார்ச், 2026

திருவொற்றியூர், வடசென்னை, தென்சென்னை மாற்றிமைக்கப்பட்ட பகுதிகள், பொறுப்பாளர்கள் விவரம்

‘மேற்கு சென்னை’ புதிய மாவட்டமாகச் செயல்படும்!

திருவொற்றியூர், வடசென்னை, தென்சென்னை மாற்றிமைக்கப்பட்ட பகுதிகள், பொறுப்பாளர்கள் விவரம்

சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் தலைவர் அறிவிப்பு

திருவொற்றியூர் மாவட்டம்

மாவட்டத் தலைவர் – வெ.மு.மோகன்

மாவட்டச் செயலாளர் – ந.இராசேந்திரன்

மாவட்டத் துணைத் தலைவர் – எம்.ஆர்.எப்.சேகர்

மாவட்டத் துணைச் செயலாளர்கள் – செல்வம், வாசு

1.புது வண்ணை

2.பழைய வண்ணை

3.கொடுங்கையூர்

4.இராயபுரம்

5.திருவொற்றியூர்

6.காசிமேடு

7.மணலி

8.மாத்தூர்

9.எலந்தஞ்சேரி

10.மாதவரம்

11.எண்ணூர்

12.கத்திவாக்கம்

வடசென்னை மாவட்டம்

மாவட்டக் காப்பாளர் – கி.இராமலிங்கம்

மாவட்டத் தலைவர் – தளபதி பாண்டியன்

மாவட்டச் செயலாளர் – புரசை சு.அன்புச்செல்வன்

மாவட்டத் துணைத் தலைவர்கள் – நா.பார்த்திபன், பாலமுருகன்

மாவட்டத் துணைச் செயலாளர் – வ.தமிழ்ச்செல்வன்

மாவட்ட இளைஞரணித் தலைவர் – ஓட்டேரி ந.கார்த்திக்

மாவட்ட இளைஞரணிச் செயலாளர் – பா.பார்த்திபன்

  1. புளியந்தோப்பு
  2. வியாசர்பாடி
  3. பெரம்பூர்
  4. மகாகவி பாரதியார் நகர்
  5. கவிஞர் கண்ணதாசன் நகர்
  6. பெரியார் நகர்
  7. கொளத்தூர்
  8. அண்ணா நகர் – திருமங்கலம்
  9. அயனாவரம்
  10. கீழ்ப்பாக்கம்
  11. புரசைவாக்கம்
  12. வேப்பேரி
  13. பாரிமுனை
  14. எருக்கஞ்சேரி
  15. பட்டாளம்
  16. ஓட்டேரி
  17. வில்லிவாக்கம்,
  18. அமைந்தகரை
  19. மண்ணடி
  20. சூளை

தென்சென்னை மாவட்டம்

மாவட்டக் காப்பாளர் – சைதை மு.ந.மதியழகன்

மாவட்டத் தலைவர் – இரா.வில்வநாதன்

மாவட்டச் செயலாளர் – செ.ர.பார்த்தசாரதி

மாவட்டத் துணைத் தலைவர்கள்
– டி.ஆர்.சேதுராமன், மு.சண்முகப்பிரியன்

  1. எழும்பூர்
  2. சேத்துப்பட்டு
  3. நுங்கம்பாக்கம்
  4. சூளைமேடு
  5. சைதாப்பேட்டை
  6. புதுப்பேட்டை
  7. சிந்தாதிரிப்பேட்டை
  8. ஆயிரம் விளக்கு
  9. தேனாம்பேட்டை
  10. ராயப்பேட்டை
  11. நந்தனம்
  12. ஆழ்வார்பேட்டை
  13. சேப்பாக்கம்
  14. திருவல்லிக்கேணி
  15. நொச்சி நகர்
  16. பட்டினப்பாக்கம்
  17. மயிலாப்பூர்
  18. மந்தைவெளி
  19. ராஜா அண்ணாமலைபுரம்
  20. கோட்டூர்புரம்
  21. அடையாறு
  22. திருவான்மியூர்

மேற்கு சென்னை மாவட்டம்

புதிய பொறுப்பாளர்கள்

மாவட்டத் தலைவர் – கரு.அண்ணாமலை

மாவட்டச் செயலாளர் – ராமபுரம் க.சுப்பிரமணி

  1. அரும்பாக்கம்
  2. எம்.எம்.டி.ஏ. காலனி
  3. கோயம்பேடு
  4. வடபழனி
  5. சாலிகிராமம்
  6. சின்மயா நகர்
  7. விருகம்பாக்கம்
  8. வளசரவாக்கம்
  9. ராமாபுரம்
  10. கே.கே.நகர்
  11. அசோக்நகர்
  12. ஆழ்வார் திருநகர்
  13. ஜாபர்கான்பேட்டை
  14. ஈக்காட்டுதாங்கல்
  15. கிண்டி
  16. கத்திபாரா – ஆலந்தூர்
  17. கோடம்பாக்கம்
  18. தியாகராயர் நகர்

- விடுதலை நாளேடு, 01.03.2026

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் திராவிடர் கழக சென்னை மாவட்டகளின் கலந்துரையாடல் கூட்டம் 28.02.2026 மாலை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்றது.

திருவொற்றியூர், வடசென்னை, தென்சென்னை மாற்றிமைக்கப்பட்ட பகுதிகள், பொறுப்பாளர்கள் மாற்றியமைக்கப்பட்டனர்.

'மேற்கு சென்னை’ என்று புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டது.


திங்கள், 21 அக்டோபர், 2024

ஆசிரியர் கி.வீரமணி மீதான கொலை முயற்சி (27.04.1985), (11.4.1985)

 

வடசென்னை பாலு முதலித் தெருவில் 27.04.1985 அன்று நடைபெற்ற சர்.பிட்டி.தியாகராயர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிவிட்டு நான் வேனில் திரும்பும்போது இரவு 11.35 மணியளவில் ஜி.ஏ.ரோடு, ரெய்னி மருத்துவமனை அருகில் உள்ள கனரா வங்கியை ஒட்டியுள்ள சந்திலிந்து சுமார் 5 நபர்கள், நான் உட்காந்திருந்த வேனின் இடது பக்கத்தில் சுவரை நோக்கி இரும்பாலும் கல்லாலும் தாக்கினர். வேனின் வெளிப்புறத்தில் இருந்த கம்பி வலைகள் அறுந்து, உட்பக்கம் இருந்த கண்ணாடியும் தூள் தூளாக நொறுங்கியும் சிதறியது. “வீரமணியைக் கொல்லுங்கள்! கொலை செய்யுங்கடா?’’ என்று கத்திக் கூச்சல் போட்டுக் கொண்டு திடீரெனத் தாக்கினார்கள். வேன் டிரைவர் பாலு வேனை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்று-விட்டார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, வடசென்னை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் சே.ஏழுமலை, சென்னை மாவட்ட திராவிடர் கழக தொழிலாளர் அணி அமைப்பாளர் அ.குணசீலன்,  வழக்கறிஞர் வீரசேகரன், மு.தாந்தோணி முதலியோர் அப்போது என்னுடன் பயணம் செய்துகொண்டு இருந்தனர்.

             

ராயபுரம் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் த.வீரசேகரன் இரவு 11:30 மணிக்கு எழுத்து மூலமாக இதுபற்றி புகார் கொடுத்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

கடந்த 11.4.1985 அன்று வடசென்னையில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் கிட்டத்தட்ட இதேபோன்று இதே பகுதியில் என்னைத் தாக்க சோடாபுட்டி வீசியதும், இதே காவல் நிலையத்தால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அ.இ.அ.தி.மு.க அரசின் அலட்சியத்தால், அடுத்தடுத்த கொலை முயற்சிகள்!

இதனைக் கேள்வியுற்று தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள், புதுவை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு காலை சென்னை திரும்பிய கலைஞர் நேராக எங்கள் வீட்டிற்கு வந்து நலம் விசாரித்துச் சென்றார்கள். காலிகளால் சேதம் அடைந்த வேனை பார்வையிட்டுச் சென்றார். பின்னர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், “இந்தக் கொலை முயற்சிக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்தார். தங்கள் சமுதாய நலனுக்கும் பிழைப்புக்கும் ஏமாற்று மோசடி-களுக்கும் பகையாக இருந்து தமிழ் இனத்துக்காக ஓய்வறியாது பணியாற்றும் வீரமணியையும் அவரைப் போன்ற மற்றவர்களையும் குறிபார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்தப் பயங்கர வன்முறை செயலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நான் கண்டிப்பதோடு, காவல்துறை கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டுமென கேட்டுக்-கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.


சனி, 5 அக்டோபர், 2024

இயக்க மகளிர் சந்திப்பு (33) பெரியார் உருவாக்கிய பெண்கள் உலகம்!-வி.சி.வில்வம் (வடசென்னை அமுதவள்ளி)



Published October 5, 2024

திராவிடர் கழகத்தில் மகளிரின் பங்கு மிக, மிக முக்கியமானது. அதனைப் பதிவு செய்யும் பொருட்டு, கடந்த 8 மாதங்களாக இயக்க மகளிரை சந்தித்து வருகிறோம்! அந்த வகையில் இது 33 ஆவது நேர்காணல் ஆகும்! இந்த வாரம் செய்யாறு அருகிலுள்ள மரக்கோணத்தில் பிறந்து, இயக்கத்தில் தொண்டாற்றி, தம் ஒரே மகள் மரகதமணி அவர்களையும் பெரியார் திடலில் பணியாற்றச் செய்து, மிகுந்த தன்னம்பிக்கையுடன் வாழும் அம்மா அமுதவள்ளி அவர்களைச் சந்தித்தோம்!

உங்களைக் குறித்து முதலில்
அறிமுகம் செய்து கொள்ளுங்கள்?

நான் பிறந்தது 1945ஆம் ஆண்டு. தற்போது 79 வயதாகிறது. பெற்றோர்கள் பெயர் அன்னலட்சுமி – துரைசாமி. உடன் பிறந்தோர் ஆறு பேர். ஜாதிக் கட்டுமானம் நிறைந்த ஊரில் பிறந்தேன். எல்லா இடங்களிலும் தாகத்திற்குத் தண்ணீர் குடித்துவிட முடியாது.‌ ஒரு சிலர் தண்ணீர் தருவார்கள். பாத்திரத்தின் வழியாக ஊற்ற, அதைக் கைகளில் ஏந்திக் குடிக்க வேண்டும். இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல; ஜாதியப் படிநிலைகளில் இருந்த பலரும் பாதிக்கப்பட்டார்கள். இதுகுறித்தெல்லாம் அம்மாவிடம் கேள்வி எழுப்பியுள்ளேன். ஆனால், பதிலே கிடைத்ததில்லை.

எங்கள் வீட்டில் பெரிய அளவிற்குப் பக்தி இருந்ததில்லை. ஆனால், சில மதப் விழாக்களைக் கொண்டாடுவார்கள். அன்று விதவிதமான உணவுகள் இருக்கும்.‌ மற்ற நாட்களில் அந்த வாய்ப்புகள் கிடைக்காது. எங்கள் வீட்டில் மாடுகள் இருந்ததால், பொங்கல் விழாவும் சிறப்பாக நடைபெறும்.

இயக்க அறிமுகம் எப்போது கிடைத்தது?

திருமணத்திற்குப் பிறகுதான் அறிமுகம் கிடைத்தது. எனது இணையர் பெயர் ஏ.தணிகாசலம். திருமணத்திற்குப் பிறகு இரண்டே செய்திகள்தான் சொன்னார். “நான் பெரியார் கொள்கையைப் பின்பற்றுபவன். இரண்டாவது நமது வருமானத்திற்கு ஏற்றவாறு நாம் வாழ்ந்து கொள்ள வேண்டும்”. இதுதான் அந்தச் செய்திகள். வெளிப்படையாக அவர் பேசியது எனக்குப் பிடித்திருந்தது.
அதேநேரம் கொள்கைத் தொடர்பாய் பக்கத்தில் இருப்பவர்கள் ஏதாவது நினைப்பார்களோ என எண்ணி, அதுதொடர்பாய் நான் சிந்திக்கவில்லை. நாளடைவில்தான் பெரியாரை உள்வாங்க ஆரம்பித்தேன். தாலியை அகற்றிக் கொள்ளும் அளவிற்குத் தெளிவும், துணிவும் பெற்றேன். அதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். கணவரை மாற்றிவிடுவாய் என்று பார்த்தால், நீயே தீவிரமாக மாறி விட்டாயே என்று சொல்வார்கள். குடும்ப விழாக்களுக்கு வரும்போது, ஒரு மஞ்சள் கயிறாவது அணிந்து வாயேன் என்கிற அளவிற்கு இறங்கிப் பேசினார்கள்.

உங்கள் இணையர் குறித்துச் சொல்லுங்களேன்?

தான் ஏற்ற கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தவர். இயக்கத்தின் மீதும், ஆசிரியர் மீதும் பெரு நம்பிக்கைக் கொண்டவர். திருமணமான புதிதில், “நான் பெரியாரிஸ்ட், எனினும் உங்கள் கருத்து உங்களுக்கு!”, எனப் பேசியது எனக்கு மதிப்பளிப்பதாக இருந்தது. அதேபோல ஒருமையில் பேசுவதோ, வாடி போடி என்பதோ எதுவுமே நிகழ்ந்ததில்லை! என் சுயமரியாதைக்கு இதுவரை பாதிப்பு ஏற்பட்டதில்லை என்பதே எனக்கு நிறைவுதானே! அப்படி இருக்கும் போது கடவுள் எதற்கு? தாலி எதற்கு?
எனது இணையர் வீட்டில் 12 பிள்ளைகள். இவர்தான் மூத்தவர். அனைத்துக் குடும்ப நிகழ்வுகளுக்கும் நான்தான் முதலில் நிற்க வேண்டும். எனினும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதையும் நாங்கள் செய்ததில்லை. இதனால் எதிர் கேள்விகள் நிறைய வரும். ஆனால் நாங்கள் கவலைப்பட மாட்டோம். அதேநேரம் மற்ற அனைத்து வேலைகளையும் ஈடுபாட்டுடன் செய்து முடிப்பேன். இணையரின் 92 வயதுவரை நாங்கள் அன்போடும், புரிதலோடும் வாழ்ந்தோம்!

இயக்கப் போராட்டங்களில் நீங்கள் கலந்து கொண்ட அனுபவங்கள் என்ன?

1977இல் சென்னையில் திருமணம் நடைபெற்றது. ‌அப்போது முதலே தெருமுனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என அனைத்திலும் கலந்து கொள்வேன். நிகழ்ச்சிகளில் புத்தகங்களும் விற்பனை செய்வேன். வீடுகள், கடைகளுக்கு எனது இணையர் ‘விடுதலை’ நாளிதழ் போடுவார். அவரால் முடியாத சூழலில் நான் எல்லா இடங்களிலும் போட்டு வருவேன்.
போராட்டங்கள் பலவற்றில் பங்கேற்று கைதாகி இருக்கிறேன். குறிப்பாகச் சங்கராச்சாரியார் “விதவைப் பெண்களைக் களர் நிலம்” என இழிவு செய்ததைக் கண்டித்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன்.

மேலும் 2000ஆம் ஆண்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமைக்காக, நுங்கம்பாக்கம் இந்து அறநிலையத்துறை அலுவலக முற்றுகைப் போராட்டம், 2001ஆம் ஆண்டு சங்கரமடத்தின் சார்பில், ஏனாத்தூரில் நடத்தப்பட்ட விடுதியில் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிரான மறியல் போராட்டம், மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, தூய்மைப் பணியாளர்களை அவர்களது விதிப்‌ பயன் என எழுதிய ‘காம்யோக்’ எனும் புத்தகத்தை எரிக்கும் போராட்டம், காஞ்சி சங்கராச்சாரியார் மீதான பாலியல் புகார்களை விசாரித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனும் திராவிடர் கழக மகளிரணி நடத்திய போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளேன்.
தமிழ்நாட்டு அய்.ஏ.எஸ். அதிகாரிகளை இழிவாகப் பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியைக் கண்டித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னால் நடைபெற்ற மறியல் போராட்டம், சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி நடந்த இரயில் மறியல் போராட்டம்,
அய்.நா. சபையில் இராஜபக்சேவை குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, வள்ளுவர் கோட்டத்தில் இருந்து இலங்கை துணைத் தூதரகம் நோக்கி நடைபெற்ற ஊர்வலம், மனுதர்மத்தை எரித்த போராட்டங்கள் எனப் பலவற்றிலும் பங்கேற்றுள்ளேன். அதேபோல எண்ணற்ற மாநாடுகளுக்கும் சென்று வந்துள்ளேன்.

எனது இணையரின் உடல் மோசமான கடைசி அய்ந்தாறு ஆண்டுகள் நான் எதிலும் கலந்துக் கொண்டதில்லை. எனினும் எங்கள் மகள் மரகதமணி இயக்கத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் கலந்து கொள்கிறார். அது எனக்குப் பெரும் மகிழ்ச்சி!
போராட்டங்களில் நீங்கள் பங்கேற்ற பட்டியல் வியப்பாக இருக்கிறது. பெரியார் குறித்து, குறிப்பாக ஏதாவது சொல்லுங்களேன்?
அவரின் கொள்கைகள் அனைத்துமே சிறப்புதான்! அதேநேரம் எனது சிறு வயதில் பெண்கள் நிலை மிக மோசமாக இருந்தது. நான் பார்த்த பெண்களுக்குக் கல்வி கற்க வழியில்லை; வேலை செய்ய வாய்ப்பில்லை; சிறு வயதிலேயே திருமணம் எனச் சொல்லொணா கொடுமைகள். ஆனால், கல்வியில் இன்று பெண்கள்தான் முதலிடம்! பெண்கள் இல்லாத துறையே கிடையாது. பெண்களைத் தவிர்த்துவிட்டு, இந்தச் சமூகமே இயங்காது என்கிற அளவிற்கு உயர்ந்துவிட்டது. இவை அனைத்திற்கும் பெரியார்தான் காரணம்.

அவர் இல்லாவிட்டால் இந்தளவு ஜாதியும் ஒழிந்திருக்காது; பெண் விடுதலையும் கிடைத்திருக்காது! இதை நான் முழு மனதுடன், ஒரு பெண்ணாக இருந்து பெரியாருக்கு நன்றி கூறுகிறேன். எங்கள் வீட்டில் எனக்கு இருந்த சூழல், சமூகத்தில் நான் வாழ்ந்த வாழ்க்கை, எல்லாவற்றையும் கடந்து இவ்வளவு தைரியமாக நான் இருப்பதற்கு இந்தக் கொள்கைகள்தான் காரணம்! எனது இணையரை 92 வயது வரை பாதுகாத்தேன் என்றால் அதற்குப் பெரியாருடைய வழிகாட்டுதல்கள், ஆசிரியரின் துணை, இந்த இயக்கத்தின் மனோபலம் ஆகியவைகளே காரணம்!

ஆசிரியர் அவர்களை அறிமுகம் உண்டா?

என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? மிக, மிக நன்றாகத் தெரியும். பலமுறை ஆசிரியரைப் பார்த்து நெகிழ்ச்சி அடைந்துள்ளேன். 1990 சமயத்தில் அறுவைச் சிகிச்சைக்காக ஆசிரியர் வெளிநாடு சென்று திரும்பியது முதல், இப்போது வரை அவர் உடல்நிலையைப் பற்றி கவலைப்படுவேன்.
கூட்டங்களில் பார்த்தால், “வணக்கம் கூறி நலமாக இருக்கிறீர்களா?”, என்று கேட்பேன். ஆசிரியரும் நலம் விசாரிப்பார். அந்த மகிழ்ச்சி எல்லையற்றது! எங்கள் வியாசர்பாடி பகுதியில் கல்வெட்டுத் திறப்பு, கொடியேற்றம், கூட்டங்கள் என ஆசிரியரை வைத்து நிறைய நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளோம்.

ஒரு குடும்பத்தில் மகளிரைக் கொள்கை ரீதியாக உருவாக்க வேண்டும் என எனது இணையர் உறுதியாக இருந்தார். அந்த வகையில் எனக்கும், மகளுக்கும் பெரியார், ஆசிரியர், இயக்கம் குறித்துத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். எங்கள் வீட்டில் பிரேம் போட்டு ஆசிரியரின் படம் ஒன்று இருக்கும். அதில் “தமிழர் தளபதி கி.வீரமணி” என இருக்கும்.‌
பெரியார் திடலில் 2000ஆம் ஆண்டில் புத்தாயிரம் நிகழ்வில் பங்கேற்று, ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு, நாங்கள் செய்த முதல் வேலை, எங்கள் வீட்டு வாசலில் ஒரு கரும்பலகை வைத்தது தான்! இன்றுவரை அதில் பெரியார் கருத்துகள் எழுதி வருகிறோம்!

உங்கள் மகள் என்ன செய்கிறார்?

எங்களுக்கு ஒரே பிள்ளைதான்! எனது மாமியார் பெயரில் இருந்து மரகதம், மணியம்மையார் பெயரில் இருந்து மணி, இவை இரண்டையும் எடுத்து “மரகதமணி” எனப் பெயர் சூட்டினோம். என்னைப் போலவே மகளும் கொள்கையில் உறுதியானவர். வடசென்னை மாவட்டத் தலைவராக இருந்த பலராமன் அய்யா, எங்களை அழைத்துத் துணி எடுத்துக் கொடுப்பார். இணையரைப் பத்திரமாகப் பார்த்துக் கொள் என்று கூறுவார்.

தங்கமணி – குணசீலன், பா.தட்சிணாமூர்த்தி, தியாகராஜன் – சுசீலா, சொக்கலிங்கம் – இராதா, பொன்.இரத்தினாவதி, சபாபதி – இந்திராணி, அய்யா பிச்சையன், டாக்டர் இளங்கோவன் – தமிழ்ச்செல்வி, ஜோதி – ஏழுமலை, ஜீவா, பெரியார் திடலுக்குச் சென்றால் பார்வதி, திருமகள், மனோரஞ்சிதம் ஆகியோர் ஒரே குடும்பமாகப் பழகுவார்கள்.

இறுதி காலத்தில் 10 ஆண்டுகள் எனது இணையர் பார்வை இல்லாமல் இருந்தார். அந்தச் சமயத்தில் தோழர்கள் யாருமே வந்து பார்க்கவில்லை என்கிற சிறு வருத்தம் எனக்குண்டு. மற்றபடி இந்தக் கொள்கைதான், இந்த இயக்கம்தான் எங்களை உயிர்ப்போடு வைத்திருக்கிறது”, என நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார் அமுதவள்ளி அம்மா!


சனி, 12 பிப்ரவரி, 2022

தமிழர் தலைவரிடம் வாழ்த்து பெற்ற புதிய பொறுப்பாளர்கள் (வட சென்னை)


வடசென்னை - திருவொற்றியூர் ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், செயலாளர் தி.செ.கணேசன்  ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை  சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், திருவொற்றியூர் நகர செயலாளர்

ந.ராசேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். (பெரியார் திடல், 9-2-2022)

வியாழன், 4 பிப்ரவரி, 2021

வடசென்னை மாவட்டக் கழக இளைஞரணித் தலைவர் கி.இராமலிங்கம் - -லட்சுமி ஆகியோரது மணவிழா

15.08.1993 திராவிடர் கழக தலைமை நிலையத்தில் பணியாற்றி வருகின்ற வடசென்னை மாவட்டக் கழக இளைஞரணித் தலைவர் கி.இராமலிங்கம் - -லட்சுமி ஆகியோரது மணவிழாவினை தலைமையேற்று நடத்தி வைத்தேன்.

சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடந்த மணவிழாவினை தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவரையும் வரவேற்று தலைவரை முன்மொழிந்தார்.

பெரியார் அஞ்சல் வழிக் கல்லூரி முதல்வர், பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந.இராமநாதன், வடசென்னை மாவட்டத் தலைவர் க.பலராமன், மாவட்ட செயலாளர் அ.குணசீலன், புரசை பகுதி தி.மு.க. செயலாளர் சிட்டிபாபு, தென்சென்னை மாவட்டக் கழக தலைவர் எம்.பி.பாலு, மாவட்டச் செயலாளர் எம்.கே.காளத்தி, வடசெங்கை எம்.ஜி.ஆர். மாவட்ட செயலாளர் ஆவடி இரா.மனோகரன், செம்பியம் வட்ட தி.மு.க. செயலாளர் ரெங்கநாதன், தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் எம்.கே.டி.சுப்ரமணியன், மாநில இளைஞரணி செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில மகளிரணி செயலாளர் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், ‘விடுதலை’ நிர்வாகி சி.ஆளவந்தார், தலைமை நிலையச் செயலாளர் ஆனூர் ஜெகதீசன், சென்னை மாவட்டக் கழக அமைப்பாளர் இனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன், கழக சட்டத்துறை செயலாளர் வழக்குரைஞர் செ.துரைசாமி, கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சாமிதுரை ஆகியோர் மணமகன் இராமலிங்கத்தின் சிறப்புகளையும், தொண்டுகளையும் பாராட்டி வாழ்த்தி உரையாற்றினார்கள்.

ஏராளமான கருஞ்சட்டைக் குடும்பத்தினரும், நண்பர்களும் திருமண விழாவிற்குத் திரண்டு வந்திருந்தனர்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 16.4-15.5.20