நேர்காணல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நேர்காணல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 மார்ச், 2025

துண்டறிக்கைக் கொடுத்தவர் துணைவர் ஆனார்!-வி.சி.வில்வம் - செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அவர்களிடம் நேர்காணல்

 

இயக்க மகளிர் சந்திப்பு (53) துண்டறிக்கைக் கொடுத்தவர் துணைவர் ஆனார்!-வி.சி.வில்வம்

விடுதலை நாளேடு
கட்டுரை

துண்டறிக்கைக் கொடுத்தவர் துணைவர் ஆனாரா? அது என்ன கதை?

அப்போது காயிதே மில்லத் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்துக் கொண்டிருந்தேன். மறைமலை இலக்குவனார் அவர்களின் வாழ்விணையர் தான், எனக்குப் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தார். ஒருநாள் கல்லூரி முடித்து வெளியே வரும்போது, ஒருவர் துண்டறிக்கைக் கொடுத்துக் கொண்டிருந்தார். வாங்கிப் படித்தால், அதில் பெரியார் கருத்துகள் இருந்தது. உடனே அது தொடர்பாய் அந்தத் தோழரிடம் பேசினேன். பெரியார் கருத்துகளை நேரடியாக அதுவரை அறிந்ததில்லை. எனினும் எனது தந்தையார் எம்.எஸ்.ஆறுமுகம் வள்ளலார் கொள்கையில் தீவிரமாக இயங்கியவர். மேடைகளிலும் அதுதொடர்பாய் பேசக் கூடியவர்.

எனவே எங்கள் வீட்டிலும் மூடநம்பிக்கைக் கருத்துகளோ, சிலை வழிபாட்டு முறைகளோ இருந்ததில்லை. ஆதலால் பெரியார் கருத்துகளைப் படித்ததும் சீக்கிரம் பிடித்துப் போனது. எனக்குத் துண்டறிக்கை வழங்கிய அந்தத் தோழரின் இயற்பெயர் மனோகரன், சைதை தென்றல் என்று இயக்கத்தில் அழைப்பார்கள். அவர் அஞ்சல் அலுவலகத்தில் பணியாற்றியவர். தோழராக அறிமுகமாகி, நட்பாகி, காதலாகி, இணையராக இணைந்துவிட்டோம்.
வள்ளலார் வழி முற்போக்குப் பாதை என்றாலும், அது மென்மையான முறை. அப்படியிருக்க புரட்சிகர பெரியார்

இயக்கத் தோழரைத் தங்கள் தந்தையார் ஏற்றுக் கொண்டாரா?

சைதை தென்றல் அவர்கள் நேரடியாகவே என் அப்பாவிடம் வந்து பெண் கேட்டார். தொடக்கத்தில் அப்பா மறுத்துவிட, சைதை எம்.பி.பாலு மூலம் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. 1982 ஆம் ஆண்டு பேராசிரியர் க.அன்பழகன், ஆசிரியர் கி.வீரமணி இருவரும் எங்களின் ஜாதி மறுப்பு, தாலி மறுப்புச் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். 1978 ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பெரியார் திடலில் நடைபெற்றது. அப்போதில் இருந்தே சைதை தென்றல் மும்மரமாக இயங்கியவர்.

அரசுப் பணியில் இருந்ததால் மனோகரன் என்கிற இயற்பெயர், சைதை தென்றலாக மாறியது. அந்தக் காலத்தில் சைதாப்பேட்டை பகுதித் தலைவராகவும் செயல்பட்டவர். போராட்டங்களில் ஈடுபடுவது, தீவிரமாகத் தம்மை வெளிக்காட்டிக் கொள்வது போன்ற காரணங்களால் இணையருக்குப் பணி உயர்வு என்பது இறுதிவரை கிடைக்கவில்லை.

அந்தளவு தீவிரத்தன்மை கொண்டவரா
உங்கள் இணையர்?

தீவிரம் என்பது அவரின் மிகுந்த ஈடுபாட்டைக் குறிக்கிறது.

ம.வீ.கனிமொழி, ம.வீ.அருள்மொழி ஆகிய எங்கள் பிள்ளைகளிடமும், என்னிடமும் கொள்கைகள் குறித்து நிறைய பேசுவார். பெரியார் மற்றும் ஆசிரியரின் வாழ்வியல்கள் குறித்து எடுத்துக் கூறி, அதை எப்படி முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் எனவும் எடுத்துரைப்பார். கனிமொழி அமெரிக்காவில் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி செய்கிறார், அருள்மொழி அரசு வழக்குரைஞராகத் தமிழ்நாட்டில் இருக்கிறார். பெரியாரின் கொள்கை நெறி அவர்களுக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கின்றன. இருவருக்குமே ஆசிரியர் அய்யா தான் சுயமரியாதைத் திருமணம் செய்து வைத்தார்கள்.

ஆசிரியர் அவர்கள் சிறை செல்லும் போராட்டம் அறிவித்தால், இணையரும் பெயர் கொடுப்பார். அரசு ஊழியராக இருப்பதால் நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம் என ஆசிரியர் மறுப்பார். 1982 ஆம் ஆண்டு சைதாப்பேட்டையில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு இடம் வேண்டும் என்கிறபோது, எனது தந்தையார் தான் ஒரு பள்ளிக்கூட மைதானத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார். அந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக அப்பா இருந்தார். இதற்கு உதவியாக எம்.பி.பாலு உள்ளிட்ட சைதாப்பேட்டை கழகத் தோழர்களுடன் எனது இணையரும் இருந்தார். அந்த மாநாட்டில் நான் முதன்முதலில் பேசினேன். அப்போது நடந்த ஊர்வலத்திலும் கலந்து கொண்டேன். அப்பா வள்ளலார் கொள்கையில் இருந்தாலும், பெரியார் கொள்கையின் மீதும் உணர்வுடன் இருந்தவர்.

தங்கள் அம்மா குறித்து எதுவும் கூறவில்லையே?

அது மிகப்பெரிய துயரம். எங்கள் அம்மா பெயர் ரமணிபாய். எனக்கு 2 வயது இருக்கும் போதே அம்மா மறைந்துவிட்டார். இப்போது எனக்கு 65 வயதாகிறது. அம்மாவை நான் ஒளிப்படத்தில் கூட பார்த்ததில்லை. அது பெரும் குறை என்றாலும், எனது அப்பாதான், எனக்கு அம்மாவாக இருந்து பார்த்துக் கொண்டார்.‌ என்னுடன் பிறந்தவர்கள் 4 பேர்.

2 அண்ணன், 2 அக்கா, கடைசியாக நான். எங்கள் அப்பா தான் சமையல் செய்வது, பள்ளிக்கு அனுப்புவது உள்ளிட்ட அனைத்துப் பராமரிப்புப் பணிகளைச் செய்வார். உடன்பிறந்தோர் அனைவருமே நல்ல பணியில் இருக்கிறோம். நான் எம்.எட்., படிக்கிற காலத்தில் தந்தையும் என்னை விட்டு மறைந்துவிட்டார்.

அந்தக் காலத்தில் இருந்தே பெரியார் திடல் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். எனது கல்வி, வேலைத் திட்டம் குறித்து ஆசிரியர் அடிக்கடி கேட்பார். தொடர்ந்து முன்னேறுவதற்கான ஊக்கத்தை எப்போதும் அவர் கொடுப்பார். எனது இந்த வளர்ச்சிக்கு ஆசிரியரின் பங்கும் மிக முக்கியமானது. என்னைக் குறித்து அக்கறையோடு விசாரிக்கும் ஒவ்வொரு தருணத்திலும், ஆசிரியரை எனது தந்தையாகவே உணர்வேன்.

உங்களின் கல்வி நிலை என்ன?

நான் எம்.ஏ., எம்.எட்., முடித்து 10 ஆண்டுகள் பொருளாதார ஆசிரியராகப் பணி புரிந்தேன். பிறகு பி.எல்., முடித்து வழக்குரைஞர் ஆனேன். தொடர்ந்து இளஞ்சிறார்களுக்கான மனோதத்துவம் பயின்றேன். வழக்குரைஞர் தொழிலில் 26 ஆண்டுகள் அனுபவம். இதில் 24 ஆண்டுகளாக இலவச சட்ட உதவி மய்யத்திலும் பணி செய்கிறேன்.
1998 காலகட்டத்தில் வழக்குரைஞர் பணிக்கு மகளிர் மிகக் குறைவாகவே வருவார்கள். இன்றைக்கு ஆண்களுக்குச் சரிநிகராக வந்துவிட்டார்கள். நான் கிரிமினல் வழக்குகளை எடுத்து நடத்துவேன். கொலை வழக்கு, குண்டுவெடிப்பு வழக்கு போன்றவற்றை எல்லாம் எடுத்து நடத்தியுள்ளேன். பொதுவாகக் கிரிமினல் வழக்குகளை மகளிர் எடுத்து நடத்துவதில்லை.

திராவிடர் கழகத் தோழர்களை
உங்கள் பார்வையில் எப்படி மதிப்பிடுவீர்கள்?

மிக உயர்வாக மதிப்பிடுவேன். கொள்கை என்பது நமது தோழர்களால் உறுதிப்படுத்தப்படுகிறது. கும்பகோணம் மாநாட்டிற்காக நாங்கள் போகும்போது விபத்தில் சிக்கிக் கொண்டோம். நள்ளிரவு நேரத்தில் துரை.சக்ரவர்த்தி அய்யா எடுத்த முயற்சியால் மீண்டு வந்தோம். அதேபோல ஈரோடு நிகழ்ச்சி முடித்து இரவு 12 மணி வரை பேருந்து இல்லை. பேராசிரியர் காளிமுத்து, சண்முகம் இருவரும் கடைசி வரை இருந்து உதவி செய்தார்கள். பேச்சு, எழுத்து எதுவாக இருந்தாலும் கவிஞர் கலி.பூங்குன்றன் அய்யா ஆலோசனைகள் கூறுவார்கள். அதேபோல மறைந்த பெரியார் சாக்ரடீசு ‘உண்மை’ இதழில் சட்டத்துறை தொடர்பான கேள்வி – பதில் எழுதச் சொன்னார்.

புலவர் இராமநாதன் அவர்கள் சொல்லிக் கொடுத்த பாரதிதாசன் கவிதைகள் என்றும் நினைவில் நிற்கும். எனது அப்பா இறந்தபோது இடுகாடு செல்லாத நான், எம்.பி.பாலு அவர்கள் இறந்தபோது இடுகாட்டில் சென்று இரங்கல் கூட்டத்தில் பேசி வந்தேன். “கொள்கை என்பது நமது தோழர்களால் உறுதிப் படுத்தப்படுகிறது” என்பதை வலுவாக நான் நம்புகிறேன்.

தங்களின் இயக்கப் பணிகள் குறித்துக் கூறுங்கள்?

எனக்குச் சொந்த ஊரே சென்னை, சைதாப்பேட்டை என்பதால் பெரியார் திடல் வருகை என்பது எளிதானது. எனினும் திருமணத்திற்குப் பிறகே இணையருடன் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குச் செல்ல ஆரம்பித்தேன். தென் சென்னை மாவட்ட மகளிரணி பொறுப்பாளர், வழக்குரைஞரணி மாநில இணைச் செயலாளர், வழக்குரைஞரணி மாநிலச் செயலாளர், வழக்குரைஞரணி மாநில அமைப்பாளர் எனப் பல்வேறு பொறுப்புகளை ஆசிரியர் வழங்கி, என்னை இயங்கச் செய்தார்.

அத்துடன் பெரியார் திடலில் வாரந்தோறும் திங்கட்கிழமையில் நடைபெறும் “புதுமை இலக்கியத் தென்றல்” அமைப்பில் செயலாளராக நியமிக்கப்பட்டேன். அதனைத் தொடர்ந்து 20 ஆண்டுகள் தலைவர் பொறுப்பிலும் இருந்தேன். கரோனா காலத்திலும் வாரந்தோறும் இணைய வழியாகக் கூட்டங்களை நடத்தினோம். தற்சமயம் வியாழன் தோறும் நடைபெறும் “பெரியார் நூலக வாசகர் வட்டத்தின்” தலைவராக இரண்டு ஆண்டுகளாக இருந்து வருகிறேன். ஆசிரியர் அவர்களால் செயலவைத் தலைவர் எனும் பொறுப்பிற்கும் நியமிக்கப்பட்டுள்ளேன்.

இயக்கப் போராட்டங்களில் பங்கேற்று
சிறை சென்ற அனுபவம் உண்டா?

1986ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையின் நகலை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீயிட்டுக் கொளுத்தினர். அதில் நானும் கலந்து கொண்டு, சென்னை மத்தியச் சிறையில் 15 நாட்கள் காவலில் இருந்தேன்.

சிறையில் க.பார்வதி, செ.ஹேமலதா தேவி, ஏ.ஜோதி, தையல்நாயகி, பட்டம்மாள், அறிவுக்கொடி, செ.மீரா (ஜெகதீசன்), எம்.சந்திரா, க.கங்கேஸ்வரி, உண்ணாமலை, க.மீனாட்சி, செல்வி இந்திராணி, சொர்ணா (ரங்கநாதன்) உள்ளிட்டோர் ஒன்றாக இருந்தோம். இதில் பெங்களூர் தோழர் சொர்ணா (ரங்கநாதன்) சிறையில் இருந்தவாறே எனக்கு எம்.எட்., படிப்புச் சொல்லிக் கொடுத்தார்.

அதேபோல தாலி அகற்றும் நிகழ்வு 2015 ஆம் ஆண்டு பெரியார் திடலில் நடைபெற்றது. அதை நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. உடனே கழகச் சட்டத்துறை மூலம் நீதிமன்றத்தை அணுகிய போது, நீதியரசர் அரிபரந்தாமன் அவர்கள் நிகழ்ச்சி நடத்த ஒப்புதல் தந்தார். தீர்ப்பைப் பெற்று மகிழ்வாய் வந்த வேளையில், ஆசிரியர் அவர்கள், “இப்போது நாம் அனுமதி வாங்கினாலும் நாளை காலை அவர்கள் மேல்முறையீட்டிற்குச் செல்வார்கள்”, எனக் கூறினார்கள். எனவே 10 மணிக்கு முன்பாகவே நாம் நிகழ்ச்சியை நடத்திவிட வேண்டும் என அறிவித்து, அவ்வாறே தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிகளில் அது குறிப்பிடத்தகுந்தது. இது பெரியார் மண்தான் என நிரூபித்த தருணங்களில் அதுவும் ஒன்று எனத் தம் இயக்க வரலாற்றை நம்முடன் பகிர்ந்து கொண்டார் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அவர்கள்!

திங்கள், 22 ஜூலை, 2024

“தி.க.காரன் வீடுடா… அடிடா… என்று அடித்து நொறுக்கினார்கள்!” கொள்கைத் தடம் மாறாமல் வாழும் பெரியார் பெருந்தொண்டர் தோழர் சிட்டிபாபு!

 

விடுதலை நாளேடு

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு திராவிடர் இயக்கம் பார்ப்பனரல்லாத மக்களிடையே, ’இது சூத்திர, பஞ்சம மக்களை, பெண்களை படிக்கச் சொல்கிற இயக்கம்! அப்படிப் படித்தால், வேலை வாய்ப்புகளைப் பெறலாம். அப்படிப் பெற்றால் ஆடு, மாடு மேய்ப்பது உள்ளிட்ட எல்லா துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறலாம். முக்கியமாக சுயமரியாதை பெறலாம்’ என்ற எண்ணத்தை விதைத்தது! அத்தோடு மட்டுமல்ல, அந்த விதையை முளைக்க வைக்க, அந்த விதையை வளர வைக்க பல்வேறு முன்னெடுப்புகளையும் செய்து கொடுத்தது. அதனால் பலரும் படிக்க முன்வந்தனர்! முன்னுக்கும் வந்தனர்!

அப்படிப் படிக்கும் உந்துதலைப் பெறுவதற்காகவே திராவிடர் கழகத்தில் சேர்ந்தவர்தான் தடம் மாறாத பெரியார் தொண்டராக இன்றைக்கும் சென்னை ஓட்டேரியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தோழர் கி. சிட்டிபாபு! அவருக்கு இப்போது வயது 80. அவர் இன்னமும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்.

மூப்பின் காரணமாக மறதி ஏற்பட்டுவிட்டதைத் தவிர வேறெந்த குறையும் அவருக்கு இல்லை. இந்த இழப்பையும் ஈடுசெய்ய அவரது மகன் பாஸ்கர், அவர் இருந்து கூட்டங்கள் நடத்தியதற்கான மினிட்ஸ் புத்தகம் மூலம் சில தரவுகளை சேகரித்து வைத்துக்கொண்டு, அதன் மூலம் அவரது நினைவுகளை மீட்டுவிடலாமா? என்றொரு முயற்சி செய்தார். 23.5.2024 அன்று பிற்பகலில் அந்த முயற்சிக்கு உறுதுணையாக பெரியார் வலைக்காட்சியும் இணைந்து முடிந்தவரை சிலவற்றை வெளியே கொண்டுவர முயன்றுள்ளோம். அந்த நேர்காணல்தான் இது.

கேள்வி: உங்கள் பெயர், பிறந்த ஊர்,
பூர்வீகம் இதைப்பற்றி சொல்லுங்கள்…
பதில்: பெயர் சிட்டிபாபு, திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் எனது பிறந்த ஊர். 1944 இல் பிறந்தேன். அப்பா கிருஷ்ணன், அம்மா சீத்தம்மா.
கேள்வி: சென்னைக்கு எதற்கு, எப்போது வந்தீர்கள்?
பதில்: (பாஸ்கர் உதவியுடன் பதில் சொன்னார்) நானும் எனது உடன் பிறந்த சகோதரர் வெங்கடேசன் இருவரும் தி.மு.க.வில் இருந்தோம். அங்கே இருந்தால் வேலைகளால் சரியாக படிக்க முடியாது. ஆகவே திராவிடர் கழகத்திற்கு போய்விடு’ என்று எனது அண்ணன் வெங்கடேசன் தான் சொன்னார். அவர்தான் எனக்கு பெரியார் கொள்கைகளைச் சொல்லிக் கொடுத்தார். எங்கம்மா எங்களை சாமி கும்பிட அழைத்துச் செல்வார். அதைக்கண்டு எங்கள் அண்ணன் வெங்கடேசன் திட்டுவார். இதனால் வீட்டில் எப்போதுமே தகராறுதான். அதையும் மீறி எங்களை உருவாக்கியவர் எனது சகோதரர் வெங்கடேசன்தான். அவரை ’வெங்கிட்டு’ என்றுதான் அழைப்பார்கள். புள்ளையார் பொம்மை உடைக்கிறது அப்படி, இப்படின்னு அவர்தான் தீவிரமாக இருப்பார்.(பாஸ்கர் நினைவூட்டியபடியே இருந்ததால் தொடர்ச்சியாகப் பேசினார்) சின்ன வயதில் என்னை மாடு மேய்க்க விட்டார்கள். ஆகவே படிப்பதற்காக எனது 10 வயதில் சென்னைக்கு வந்தேன். அயனாவரத்தில் இருக்கும் சிட்டிபாபு பள்ளியில் சேர்ந்தேன். 10 ஆம் வகுப்பு வரையிலும் படித்தேன். அதன் பிறகு வண்ணையில் உள்ள தியாகராயர் கல்லூரிக்கு அருகிலிருக்கும் அய்.டி.அய்.யில் மெக்கானிக்கல் படிப்பில் சேர்ந்தேன். அந்த சான்றிதழை வைத்து பி.அண்ட்.சி. மில்லில் பிட்டர் பணியில் சேர்ந்தேன். அன்றைய நிலைமையில் பி.அண்ட்.சி. மில்லில் 10,000 பேர் வேலை செய்தனர். தொடக்கத்தில் எனக்கு 50 ரூபாய் ஊதியம் கொடுத்தார்கள். பணி நிரந்தரம் ஆனவுடன் 150 ரூபாய் கொடுத்தார்கள்.

கேள்வி: பி.அண்ட்.சி. மில்லில் நடந்த முக்கியமான நிகழ்வு ஏதாவது நினைவிலிருக்கிறதா?
பதில்: (பாஸ்கர் சங்கராச்சாரியாரை நினைவுபடுத்திய பிறகு பேசினார்) நான் பி.அண்ட்.சி. மில் தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக இருந்தேன். அப்போது அங்கே கூட்டம் நடத்தியிருக்கிறேன். அதைவிட 1981 இல் சென்னையில் வில்லிவாக்கத்திலுள்ள கோயில் குடமுழுக்கு நடத்துவதற்கு வந்த சங்கராச்சாரியாரை, வரக்கூடாது என்று கருப்புக்கொடி காட்டி முற்றுகையிட்டனர். நானும் அதில் ஈடுபட்டேன். 40 பேரை கைது செய்தார்கள். நானும் 15 நாள் சிறையில் இருந்தேன்.

கேள்வி: உங்கள் இயக்கப்பணி குறித்து சொல்லுங்கள்
பதில்: (பாஸ்கர் கூட்டம் நடத்திய இடங்கள், பேச்சாளர்கள் என ஒவ்வொன்றையும் நினைவு படுத்தி, அது குறித்து சொல்லுங்கள் என்று ஊக்கப்படுத்திய பிறகு, நினைவுக்கு வந்த சிலவற்றை பகிர்ந்தார்) புரசைவாக்கம் வெள்ளாளர் தெரு, பட்டாளம் மகாலட்சுமி தியேட்டர், அஞ்சு லைட் ஆகிய இடங்களில் கூட்டம் நடத்தியிருக்கிறேன். இறையனார், செல்வேந்திரன், பூங்குன்றன் (கவிஞர் கலி.பூங்குன்றன்), அருள்மொழி ஆகியோர் வந்து பேசியிருக்கிறார்கள். அப்போ தெல்லாம் அருள்மொழிக்கு வழிச்செலவுக்கு 50 ரூபாய் கொடுப்போம். (அதையெண்ணி இப்போது வாய்விட்டுச் சிரிக்கிறார்) வடசென்னை மாவட்ட பொருளாளர் தாந்தோணி என்னை அதட்டி, கூட கொஞ்சம் வாங்கிக் கொடுப்பார். புலவர் கண்மணியை அழைத்து கூட்டம் நடத்தியிருக்கிறேன்.
புரசைவாக்கம் மீனாட்சி கல்யாண மண்டபத்தில் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மாநாடு வடசென்னை சார்பில் நடைபெற்றது. அதில் நானும் பங்கேற்றேன். அதன்பிறகு கருநாடகத்தில் தமிழ் நடிகர்கள் தாக்கப்பட்டபோது, செல்லப்ப முதலி தெருவில் ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோரை அழைத்து கூட்டம் நடத்தினேன். அப்போது வடசென்னையில் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் இருந்தனர்.
(சிங்காரவேலு, குணசீலன், வில்லிவாக்கம் தியாகராஜன், பி.அண்ட்.சி. மில் சாமிக்கண்ணு, தம்பரசு, அயனாவரம் செல்வதாசன், பக்தவச்சலம், பெரம்பூர் பாலகிருஷ்ணன், எமரோஸ், தட்சிணாமூர்த்தி, கி.ராமலிங்கம், பூவை நா.இளங் கோவன், பெரம்பூர் தியாகராசன், கருங்குழி கண்ணன், பி.அண்ட்.சி. மில் தீனன், கணபதி, எத்திராஜ் போன்றோரின் பெயர்களைச் சொன்னார். 50 க்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள் என்று சொன்னவர் அதில் பகுதி பேரைக்கூட சொல்ல முடியவில்லை. அதுவும் மகன் பாஸ்கர் துணையுடன் தான் அதுவும் சொல்ல முடிந்தது. தாந்தோணி, குணசீலன் ஆகியோர் பற்றிய நினைவு வந்தவுடன் அம்மாடி… என்று ஆச்சரியப்பட்டார். அவர்களின் தீவிரமான இயக்கப்பணி பற்றி சற்றே கனிவுடன் நினைவு கூர்ந்தார்)

கேள்வி: ஆசிரியர் பற்றி உங்கள் நினைவில் உள்ளதை சொல்லுங்கள்
(அவர் முற்றும் மறந்துபோய் தனது மகனைப் பார்க்க, பாஸ்கர் மம்சாபுரம் நிகழ்வை சொல்கிறார். பிறகு ஆங்… என்றபடி பேசுகிறார்)
பதில்: “ஆசிரியர் மம்சாபுரத்தில் தாக்கப்பட்ட போது, வெள்ளாளத் தெரு, செல்லப்ப தெரு ஆகிய இடங்களில் கே.ஏ.மதியழகன், பொன்முடி, பூங்குன்றன் (கவிஞர் கலி.பூங்குன்றன்) ஆகியோரை அழைத்து கண்டனக் கூட்டம் நடத்தினேன்.
1989இல் ஜனதா தளத்தில் உள்ள கலிவரதனை வைத்து, மண்டல் குழு பரிந்துரைகளை அமல்படுத்திய போது, திருச்சி செல்வேந்திரனை வைத்து கூட்டம் போட்டிருக்கிறேன். நமது இயக்கத்திற்கு 1984 எழுச்சியான காலகட்டம். நம்ம கூட்டங்களுக்கு நன்றாக கூட்டம் சேரும். மூடநம்பிக்கை எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினோம். டவுடன் பெரம்பூர் பேரக்ஸ் சாலையிலிருந்து ஓட்டேரி பிரிக்ளின் சாலை வழியாக சுந்தரம் பிள்ளைத் தெருவில் ஊர்வலம் முடிவடைந்தது. ஆசிரியரை குதிரை வண்டியில் வைத்து அழைத்து வந்தார்கள். வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் தாந்தோணி, வெங்கடேசன், பக்தவச்சலம் போன்றவர்கள் முன்னிருந்து இந்நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
(இதில் இவரது பங்களிப்பும், பங்கேற்பும் இருக்கிறது. ஆனாலும் மறதி காரணமாக நானும் கலந்துகொண்டேன் என்றே சொல்கிறார். அதற்கு மேல் அவருக்கு வேறு நினைவுகள் வரவில்லை)

கேள்வி: உங்கள் சகோதரர் உங்களை அழைத்துச் சென்ற முதல் கூட்டம் நினைவில் இருக்கிறதா?
பதில்: (அவர் பாஸ்கரைப் பார்க்கிறார். பாஸ்கர் ஆண்டை நினைவூட்ட) ”ம்… 1967 இல் அண்ணா பேசிய கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.”
அதைப்பற்றியும் வேறு எந்த நினைவும் அவருக்கு இல்லை.

கேள்வி: உங்களுக்கு எப்போது திருமணம் நடந்தது?
பதில்: (இந்த ஆண்டையும் பாஸ்கர்தான் நினைவூட்டினார்) 1969 இல் வைதீகத் திருமணமாக நடந்தது. அவ்வளவுதான்.

கேள்வி: உங்கள் இயக்கப் பயணத்தில்
ஏதாவது எதிர்ப்பு இருந்ததா?
பதில்: (அவர் மறுபடியும் பாஸ்கரைப் பார்க்க, அவர் நினைவூட்ட) ”அய்யோ… (அச்சத்துடன் பேசுகிறார்) ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, என்னை கல்லால் அடித்தார்கள். தி.க.காரன் வீடுடா… அடிடா… என்று சொல்லியே வீட்டுக்கதவை எல்லாம் அடித்து நொறுக்கிவிட்டார்கள். பிறகு ஆசிரியரிடம் சென்று நடந்ததைச் சொன்னோம். அவர் அவசரப்பட வேண்டாம், பொறுமையாக இருங்கள் என்று சொன்னார்.

கேள்வி: பெரியாரை நேரில் சந்தித்திருக்கிறீர்களா?
பதில்: ம்… (சிட்டிபாபு தடுமாறினார். பாஸ்கர் ஒரு பெயரை நினைவூட்ட) அய்யோ… (வியப்புடன் பேசுகிறார்) நடேசன் அந்தக் காலத்திலேயே பக்கா தி.க.காரர். அவர்தான் என்னை, எங்கள் அண்ணன் வெங்கடேசன், புலிகேசி என்பவர் பையன் மூவரையும் தி.க.வில் சேர்த்துவிட்டார். நடேசன் இப்போது இறந்துவிட்டார். சி.வி.எம்.அண்ணாமலை (காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் அவர்களின் தாத்தா) புலவர் நடேசனின் நண்பர். அந்த சி.வி.எம்.அண்ணாமலை நடேசனிடம் அண்ணாவை அழைத்து கூட்டம் போடலாம் என்று சொன்னார். கூட்டம் நடந்தது. ஆனாலும், 1978 இல் தான் ஓட்டேரி பிரிக்கிளின் சாலை 5 ஆவது சந்தில் திராவிடர் கழக கிளைக்கழகம் அமைப்பு ரீதியாக உருவானது.
பெரியாரை சந்தித்த போது, அவருக்கு மாலை போட்டேன். ‘வணக்கம் அய்யா’ என்று சொன்னேன். அய்யாவும் எனக்கு ‘வணக்கம்’ சொன்னார். தி.மு.க. வட்டச் செயலாளர் கோபால் சாமி தான் என்னை பெரியாரிடம் அழைத்துச் சென்றார். அப்போது, “பெரியார் நிறைய கேள்வி கேட்பாரு. அவரு ‘கடவுள் இருக்காரா?’ என்று கேட்டால் ‘இல்லை’ என்று சொல்லவேண்டும்” என்று சொல்லிக்கொடுத்து என்னை அழைத்துச் சென்றார். ஆனால், பெரியார் கேட்டவுடன், விவரம் இல்லாமல் ‘இருக்கிறது’ என்று சொல்லிவிட்டேன். கோபால்சாமி என்னைப் பார்த்து டேய்.. டேய்.. என்று பதறினார். நான் புதியவன் என்று புரிந்துகொண்ட பெரியார், ‘கடவுள் இல்லை’ என்று சொன்னார். அந்த கோபால்சாமியும் இப்போது இறந்துவிட்டார்.

இப்படியாக துண்டு துண்டாகத்தான் அவரால் பேச முடிந்தது. ஆனால், அவர் நினைவில் ’தாந்தோணி’ என்ற பெயர் மட்டும் அழுத்தமாக பதிந்துள்ளது. மற்ற பெயர்க ளெல்லாம் ஏதாவது குறிப்பு சொன்னால் மட்டுமே ஏதோ கொஞ்சமாகப் பேசுகிறார்.
அதற்குப் பிறகு சொன்னதையே சொல்லிக்கொண்டு இருந்தார். எப்படியாவது அப்பாவிடம் உள்ள தகவல்களை சேகரித்து விடவேண்டும் என்றிருந்த பாஸ்கருக்கு, முக்கிய மான வரலாற்றுக் குறிப்புகளை எல்லாம் இப்படி மறக்கும்படி ஆகிவிட்டதே என்று மிகவும் வேதனைப்பட்டார். அதைக் கண்டு நமக்கும் இதயம் கனத்தது. அப்படித் திரும்பத் திரும்ப சொன்னதில்கூட, தான் ஒரு ‘பெரியார் தொண்டன்’ என்பது மட்டும் தவறாமல் அவரது பேச்சில் இழையோடிக் கொணடேயிருந்தது. பிறகு அவருக்கு மறந்துவிட்டதைக் கூட, இதெல்லாம் ஆசிரியருக்குத் தெரியும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார்.

முன்னதாக பாஸ்கரின் மகள்களான இலக்கியா, இளையமதி இருவரையும் மிகுந்த உற்சாகத்துடன் நமக்கு அறிமுகம் செய்தார். இன்றைக்கும் அப்பழுக்கில்லாத பெரியார் தொண்டராகவே ஆனந்தமாக அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கருப்புச் சட்டையை போட்டுக் கொண்டதாலேயே அவருடைய அகத்தில் பொலிந்த அந்த கொள்கைக் கம்பீரம், புறத்திலும் தெளிவாகத் தெரிந்தது.
திராவிடர் கழகத்தில் சேர்ந்தால் படிக்கலாம், வேலைக்குப் போகலாம் என்று 70 ஆண்டுகளுக்கு முன் எண்ணி வந்த சிட்டிபாபு அப்படியே படித்து, சென்னை ஓட்டேரியில் சொந்தமாக வீடு கட்டி, பிள்ளைகளை படிக்க வைத்ததோடு அல்லாமல் இயக்க உணர்வையும் ஊட்டியே வளர்த்திருக்கிறார். பாஸ்கரும் அதையே தொடர்கிறார். அந்த மன நிறைவு அவரது முகத்தில் ‘பளிச்’ சென்று தெரிந்தது. அதே நிறைந்த மனதோடும், உற்சாகத்தோடும் வாசலுக்கே வந்து நம்மை வழியனுப்பி வைத்தார்.

– உடுமலை வடிவேல்
படங்கள்: சதீஷ்

வியாழன், 25 ஜனவரி, 2024

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ’தொழ’ வைத்துவிட்டார்! மனம் திறக்கும் ஆவடி மாவட்டக் காப்பாளர் பா.தென்னரசு!


வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ’தொழ’ வைத்துவிட்டார்! மனம் திறக்கும் ஆவடி மாவட்டக் காப்பாளர் பா.தென்னரசு!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ’தொழ’ வைத்துவிட்டார்! மனம் திறக்கும் ஆவடி மாவட்டக் காப்பாளர் பா.தென்னரசு!

 ‘தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்றார் புரட்சிக்கவிஞர்!

8

நேர்காணல்: உடுமலை வடிவேல்

பெரியார், சுயமரியாதையை உயிர்ப்பிக்கின்ற வற்றாத நதி! அதன் இலக்கு, சுயமரியாதைக் கடல்! இது எல்லா மக்களுக்குமானது! அந்த சுயமரியாதை நதியில், ஜாதி, மத, பாலியல் பேதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாகவே கலந்துவிடுவார்கள்! இது நேரடியாக மழைநீர், மண்ணுக்கு வருவதைப் போன்றது. தேக்கங்களில் உபரி நீரைத் திறந்துவிடுவார்கள் அல்லவா? அதுவும் அந்த சுயமரியாதை நதிக்குத்தான் வந்துசேரும். இது பரம்பரையாக சுயமரியாதைக்காரர்களாக இருப்பவர்களின் வாரிசுகள்! அவர்களை கைப்பிடித்து அழைத்துவந்து, சுயமரியாதை நதியை அறிமுகம் செய்வித்து, கலக்கவிடுவார்கள்! இன்னும் சிலர், நதியின் ஓட்டத்தை தடுக்க முயன்று, முடியாமல் தாமும் நதியுடன் சேர்ந்து சுகமடைவர்! இவர்கள் எதிர் சித்தாந்தக்காரர்கள்! சரியான புரிதலில்லாத வைதீகக் குடும்பங்களில் பிறந்த ஓரிருவர் இயல்பாகவே சுயமரியாதை உணர்வு பெற்று, எங்கெங்கோ ஓடிவிட்டு பின்னர் தானாக அந்த சுயமரியாதை நதியைத் தேடி வந்து, ’செம்புலப் பெயல் நீர்போல’ தாமாகக் கலந்துவிடுவர்! இவர்கள் சுயமரியாதைச் சுயம்புகள்! அப்படிப்பட்ட ஆயிரமாயிரம் சுயமரியாதைச் சுயம்புகளில் பா.தெட்சிணாமூர்த்தி எனும் பா.தென்னரசும் ஒருவர். அவரை 2023 சனவரி 2 ஆம் நாள் பட்டாபிராமில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து உரையாடினோம்.

அய்யா வணக்கம்.

வணக்கங்கய்யா.. 

கேள்வி: முதலில் உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

பதில்: அம்மா  பவுனம்மாள், பிறந்தது பட்டாளம் தேவராஜ் முதலி தெருவில். அப்பா பாலகிருஷ்ணன், அவர் பிறந்தது ஆம்பூர், அப்பா காங்கிரஸ்காரர். கூடப் பிறந்தவங்க மொத்தம் ஏழு பேரு. நான் அஞ்சாவது பிள்ளை. 1947 இல் ’உமராபாத்’தில் பிறந்தேன். இது அன்றைய வேலூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூரிலிருந்து 8 கி.மீ இருந்தது. அப்பாவுக்கு எழுதப் படிக்க தெரியாது. காமராசர் சொன்னார் என்று, எங்கப்பா 1965 இலேயே 5 ஆம் வகுப்பு வரையிலுமான தொடக்கப் பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டிக்கொடுத்திருக்கிறார். அதனாலேயே, இப்போதும் அந்தப் பகுதியில் ‘பள்ளிக்கூடத்தான் பேரன்’ என்றே எனக்கொரு பெயருண்டு. ஆனால், எனக்கு எட்டாம் வகுப்பு வரையில் படிக்கத்தான் வாய்ப்பு இருந்தது.

கேள்வி: ஓ... நீங்க எந்த வயதில் இயக்கத்திற்கு வந்தீர்கள்? 

பதில்: இயக்கத்திற்கு வருவதற்கு முன்பேயே இயக்க உணர்வு வந்துவிட்டதுங்கய்யா... எனக்கு 14 வயதிருக்கும்போதே தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க. ஏன்னா? எங்கப்பா முஸ்லிம்களுக்கு நல்ல மரியாதை கொடுத்து, கைகட்டி நின்று எஜமான்னு சொல்லுவாரு. நான் அதை எதிர்த்துப் பேசுவேன். ’அவரும் மனிதர், நீங்களும் மனிதர், அவரை ஏன் எஜமான் என்கிறீர்கள்?’ என்பேன். இதற்காகவும் ”கோவிந்தா”ன்னு சொல்லச் சொல்லியும் கட்டிவைத்து அடிப்பாரு. ’முடியாது, ’கோவிந்தன்’ இருந்தால்தானே சொல்வதற்கு’ என்று, அந்த வயதிலேயே பதில் சொல்லியிருக்கேன். உமராபாத் என்ற இடத்திலிருக்கும் கைலாசகிரி மலைக்கு பறையர்களுக்கு ஒரு வழி? வசதி உள்ளவங்க போறதுக்கு ஒருவழி? ”ஏண்டா, ஆண்டவனைக் கும்பிடுவதற்கு இரண்டு வழியா?” என்று தகராறு செய்தேன். வேலூர் கலெக்டர் வந்தாரு! எனக்கு பதிலாக எங்க அப்பாவை கைது பண்ணிட்டாங்க. 

கேள்வி: ஓ, சரி, தந்தை பெரியாரை எப்போது சந்தித்தீர்கள்?

பதில்: 1956 அல்லது 1957 இல் என்று நினைக்கிறேன். ஆம்பூரிலிருந்து 10 கிலோ மீட்டரில் உள்ள பாலூர் என்ற கிராமத்தில் ஒரு கூட்டத்தில் பெரியார் பேசினார். அப்போது அங்கிருந்த பார்ப்பன வழக்குரைஞர் குப்புசாமி என்ற பார்ப்பான் வைத்ததுதான் சட்டம். அவர் சுகர்மில் இயக்குநர் வேற? அறங்காவலர் குழுத் தலைவரும் அவர்தான். ஒரு மணியகாரருக்கு இருக்கிற அதிகாரம் அந்த பாப்பானுக்கு இருந்தன. பள்ளிக்கூட சான்றிதழா? அவன்தான் கையெழுத்துப் போடணும். ஜாதி சான்றிதழா? அவன்தான் கையெழுத்து போடணும். அவன் பில் பாஸ் பண்ணாதான், விவசாயிக்கு கரும்புக்கு கட்டிங் கிடைக்கும். இதற்காக ஆறு மாசம் வரைகூட விவசாயிகள் காத்துக்கிடப்பார்கள். பள்ளிக்கூட வாத்தியாருக்கு இரண்டு இலவச வீடுகள் இருக்கும். பாப்பான்தான் வாத்தியாரு. அப்புறம்? வீடும் அவனுக்குத்தான். வெள்ளைக்காரன் காலத்திலேயே இவங்க இந்த இடத்தை புடிச்சிட்டாங்க. இப்படி பலப்பல கொடுமைகள். அவர்களால் ஊரே பாதிக்கப்பட்டிருந்தது. கவுண்டர்கள், கம்மாநாயுடு, நாலு வகை செட்டியாருங்க எல்லாரும் சேர்ந்து, அந்த பார்ப்பானைக் கண்டித்துத்தான் பாலூரில் கூட்டம் போடுகிறார்கள். அந்தக் கூட்டத்தில்தான் பெரியார் பேசுகிறார். 

அந்தக் காலனியில் தினமணி, கல்கண்டு படிக்கிற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ’பெருமாள்’ என்றொருவர் இருந்தார். கையில் தடியுடனும், அதன் நுனியில் பொரி மூட்டையைக் கட்டிக்கொண்டு தோளில் போட்டுக் கொண்டு வருவார். அவர்தான் எனக்கு பெரியார், காமராசர், தமிழ்வாணன் ஆகியோரைப் பற்றி படிச்சுப் படிச்சு சொல்வார். அந்தப் பெருமாள்தான், என்னை பெரியார் பேசுகிற அந்தக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அபோதுதான் பெரியாரை நான் நேரில் பார்த்தேன். அன்றைக்கு அய்யா பேசினது சரியாக நினைவு இல்லை. ஆனால், ’நான் இங்கே அறிவாளின்னு வரல! புத்திக் கூர்மை உள்ளவன்னு வரல! நான் சொன்னா நீங்க எல்லாத்தையும் கேட்டுக்கணும்னு நான் சொல்லல! என் மனசுக்கு பட்டதை நான் சொல்லப் போறேன். அதை ஏத்துக்கறதும், ஏத்துக்காததும் உங்க விருப்பத்தை பொறுத்தது’ அப்பிடின்னு பேசுனதுதான் நினைவில் இருக்கு. 

கேள்வி: உங்களுக்கு திராவிடர் கழகத்தில் சேரக்கூடிய வாய்ப்பு எப்போது வந்தது?

பதில்: 1962 இல் தொழில் செய்வதற்காக சென்னைக்கு வந்துட்டேன். அரசு உத்தியோகம் இல்லாததால் எனக்கு பொண்ணு குடுக்க மாட்டேன்னுட்டாங்க. வியாபாரத்தை அவர்கள் தொழிலாகவே கருதவில்லை. வேற வேலை பார்க்க வேண்டுமென்று எனக்கும் தோன்றவில்லை. ஆனால், வியாபாரத்தில்தான் கட்டுக் கட்டாக பணம் வந்தது. அப்போதுதான் எனக்கு அரசியல் தொடர்பு ஏற்பட்டது. சத்தியவாணிமுத்து 1967 தேர்தலில் நின்றார்கள். அவங்களுக்கு நானும் வேலை செய்தேன். காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு ரொம்பத் தொல்லை கொடுக்கும். அப்போது சலூன் கடை, லாண்டரி கடைகள்தான் திமுகவுக்கு கிளைக் கழகம். அங்கேதான் பேச்சு! சந்திப்பு!

கேள்வி: ஓ...நீங்க முதலில் தி.மு.க.வில் இருந்தீர்களா?

பதில்: ஆமாங்கய்யா, 1968லேயே தி.மு.க. தொழிலாளர் கழகத்தில் உறுப்பினராக இருந்தேன். 1970 இல் தான், பட்டாளம் மணிக்கூண்டுக்குப் பக்கத்தில் திராவிடர் தொழிலாளர் கழகத்தை ஆசிரியர் துவக்கி வச்சாங்க. அந்த ஆண்டுதான் பகுத்தறிவாளர் கழகமும் தொடங்கப்பட்டது. அதற்குப்பிறகுதான் ஆசிரியர் தொடர்பு எனக்குக் கிடைத்தது. ஆசிரியர் என்னை தொழிற்சங்கத் தேர்தலில் நிற்கச் சொன்னார். நான், அழகிரி, வேலு, கருங்குழி கண்ணன், வெங்கடேசன், சண்முகம், குப்புராசு மச்சான் ஓட்டேரியில் இருக்கிற யமரோஸ் ஏழு பேருமே ’திராவிடர் கழக தொழிலாளர் அணி’யில் தேர்தலில் நின்று, வெற்றி பெற்றவர்கள். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ஆசிரியரிடம், ’தொழிற்சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கிடைக்கிற சலுகை காரணமாக கேளிக்கை, பொழுதுபோக்குன்னு ஊர் சுத்திட்டு இருப்பாங்க. அதனால கழகத்துக்கு பயன்பட மாட்டாங்க’ என்று சொன்னேன். ஆசிரியரும் அதை ஆமோதித்தார். 

அந்த சமயத்தில்தான் சங்கராச்சாரியார் பின்னி மில்லுக்கு வந்தாரு. நான், ’ஓடிப்போன சங்கராச்சாரிக்கு இங்கென்ன வேலை? பண்டு, பலகாரத்தோட சோறு போட வருகிறாரா?’ என்று தட்டியில் எழுதி வச்சிட்டேன். அப்போது கேண்டீனில் உணவு அஞ்சு ரூபாயிலிருந்து, அறுபது ரூபாய்க்கு விலை ஏத்தியிருந்தாங்க. அதைக் கண்டித்துத்தான் ஆர்பாட்டம், பேச்சுவார்த்தை நடந்துகிட்டு இருக்கு. என்னைக் கைது பண்ணிட்டாங்க. அதுக்கப்புறமும் பூஜை பண்றதுக்கு சங்கராச்சாரியாரை கூட்டிட்டு உள்ளே வராங்க. எங்க பக்கம் நாலு பேர் சேர்ந்து பம்பை அடிச்சாங்க. சத்தம் பெருசா இருந்துச்சு. சங்கராச்சாரி போயிட்டாரு. பூஜையும் நடக்கவில்லை. 

கேள்வி: திராவிடர் கழகத்திற்கு எப்போது வந்தீர்கள்?

பதில்: திராவிடர் தொழிலாளர் கழகம், திராவிடர் கழகம் என்று பொறுப்புகளுக்கு மாறி, மாறி வந்துட்டேன். தொழிற்சங்கத்தில் இருந்து மங்களபுரம் திராவிடர் கழகத் தலைவர். பிறகு, வட சென்னைக்கு செயலாளர். மறுபடியும் மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர். மறுபடியும் மங்களபுரம் கிளைக்கழகப் பொறுப்பு. அப்போது, பெரம்பூர் பாசறை பாலனின் அண்ணன் நெடுஞ்செழியனுக்குப்பிறகு, ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு, ’தொழிலாளர் கழகத்தினுடைய தலைவரா இரு’ன்னு சொன்னாரு. அப்போதுதான் குணசீலன் ஓய்வுபெற்று வெளியே வந்தார். உடனே அவரைத் தலைவராகப் போட்டுட்டு, என்னைச் செயலாளராகப் போட்டாங்க. நாங்கள் பல்வேறு இடங்களுக்கு சைக்கிளிலேயே போவோம்; கூட்டம் போடுவோம். என்னை உடகார வைத்துக்கொண்டு குணசீலன் சைக்கிளை மிதிப்பாரு. சென்னையிலிருந்தும் ஆவடிக்கு வருவோம். செய்த பணிகளைப் பற்றி ஆசிரியரிடம் சொல்லுவோம். மாதவரத்தில் ’ஒருநாள் குடும்பவிழா!’ நடத்தினோம். அதில் கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் போன்றவற்றை நடத்தினோம். ஆசிரியர் முழுமையாக உடனிருந்தார்.  

கேள்வி: உங்கள் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்க.

பதில்: 1975 இல் திருமணம் நடந்தது. இணையர் பெயர் உமாராணி. கொள்கையில் என்னைவிடவும் அவர் வேகமாக இருந்தார். ஜீவா, மீனா, சித்ரா ஆகியோர் மகள்கள். எல்லாரும் நன்றாக படித்திருக்கிறார்கள்; நன்றாக இருக்கிறார்கள். இணையர் உமாராணி, ’பெரியார் சமூகக் காப்பு அணித் தலைவர்’ உள்ளிட்ட, மகளிர் அணியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் சென்று வந்திருக்கிறார்.

கேள்வி: பெரியார், மணியம்மையார் ஆகியோருடனான நேரடியான அனுபவம் பற்றி சொல்லுங்கள். 

பதில்: பெரியாரிடம் நேரடியான அனுபவம் குறைவு. மணியம்மையார் கிட்ட சொல்ல முடியும். அதில் எப்போதும் நினைவிலிருப்பது அப்பல்லாம், காஞ்சிபுரம், திருத்தணி போன்ற வெளியூரிலிருந்து வருகிறவர்களுக்கு திடலில் வைத்து சோறு போடணும். அப்போதிருந்த எம்.ஆர்.ராதா மன்றம் பள்ளமாக இருக்கும். அதில் ஓரமாக உட்கார வைத்துதான் சோறு போடுவோம். அப்பொழுது கவிஞர் வீட்டில் இருந்து கரண்டி, கிண்ணம் வாங்கிட்டு வந்து, வந்தவங்களுக்கு சோறு போட்டு அனுப்புவோம். சமைக்கிறதுக்கு எப்படியோ மணியம்மையார் ஆளுங்களை வைத்து செஞ்சிடுவாங்க. பரிமாறுவது, இலையெடுப்பது எல்லாமே நாங்கதான். ரொம்ப தூரம் போற தோழர்கள், பட்டினியா போகக் கூடாது அப்படிங்கறது மணியம்மையாரோட கருத்து. 

(தொடரும்....)

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ’தொழ’ வைத்துவிட்டார்! மனம் திறக்கும் ஆவடி மாவட்டக் காப்பாளர் பா.தென்னரசு!

நேர்காணல்: உடுமலை வடிவேல்

8

கேள்வி: தலைமை எண்ணுவதைக்கூட நீங்கள் செயல்படுத்தியதை நான் கண்டுள்ளேன். அதைப்பற்றி சொல்ல முடியுமா? 

பதில்: ஒருவேளை பலராமன், குணசீலன், செம்பியம் ஏழுமலை போன்றவர்களிடமிருந்து அது வந்திருக்கலாம். முக்கியமாக காலம் சென்ற வடசென்னை மாவட்டத் தலைவராக இருந்த ப.கவுதமனின் தந்தை, பலராமன் அய்யாவைச் சொல்லலாம். பொறுப்புக்கு வருவதற்கு முன்பே பலராமன் அய்யா தொடங்கியிருந்த வடசென்னை பெரியார் மாளிகை கட்டட வேலையில் பங்கெடுத்துக் கொண்டேன். அதைத் தடுக்க ஆர்.எஸ்.எஸ்.காரங்க தொல்லை கொடுத்திருக்காங்க. இவரு, அவர்களை சிதறடிச்சிருக்காரு. பலராமன் அய்யா கொள்கைத் தெளிவும், துணிச்சலும் மிக்கவர். அவரும் சைக்கிளில்தான் வருவாரு. தோழர்களின் குடும்பப் பிரச்சனைகளுக்கு நல்ல,நல்ல ஆலோசனைகள் சொல்வாரு! சம்பாதிக்கிற காசை வீட்டில் கொடுக்கணும், சிக்கனமாக செல்வு செய்யணும், அப்பொழுதுதான் வாழ்க்கையில் முன்னுக்கு வரமுடியும், அப்படி வந்தாதான் இந்தக் கொள்கைக்காரங்க கெட்டுப்போகலேன்னு மக்களுக்குப் புரியும் அப்பிடிம்பாரு; தலைமையின் எண்ணப்படியே நடந்துக்குவாரு; ஏதாவது முக்கியமான செய்தி இருந்தாக்கூட, பெரியார் திடலில் உள்ள தலைவர் அறைக்குள்ளேகூட போகாமல் ஓரமா காத்துகிட்டு இருப்பாரு; ஆசிரியர் வெளியில் வந்து இவரைப் பார்த்து, ’என்னய்யா இங்க நிற்கறீங்க. உள்ளே வரவேண்டியதுதானே? என்று கடிந்து கேட்பாரு. இவரு, ‘உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். நானும் உங்க நேரத்தை எடுத்துக்கணுமா?’ என்று சொல்லிவிட்டு, செய்தியைச் சொல்லிவிட்டு வந்துவிடுவார்! 

வடசென்னையில் ஈஸ்வரன் தெருவில்தான் அடிக்கடி கூட்டம் போடுவோம். அங்கிருக்கும் ஒரு பூங்காவில், ஆர்.எஸ்.எஸ். காரர்கள் சாகா நடத்துவாங்க. நம்மிடம், கணேசன், ராஜேந்திரன், கருத்தோவியன், ஏழுகிணறு கதிரவன், பெத்தநாயக்கம்பேட்டை ராஜேந்திரன், அவரு மகன் பிரபு, இந்தப் பக்கம் பட்டாளத்தில் ரவிச்சந்திரன், பட்டாளம் பன்னீர், தேவராஜ், சேகர் ஆகியோர் இருந்தார்கள். அதனால, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிராக நம்ம பிரச்சாரமும் ஜோரா இருந்தது. சிலம்பம் பயிற்சியை நாமளும் செஞ்சுகிட்டு இருந்தோம். பலராமன் இயக்கக் குடும்பத்து பெண்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பாரு. அவருதான் இயக்கம் என்றால் என்ன? குடும்பம் என்றால் என்ன? என்பதை வாழ்ந்துகாட்டி எங்களுக்கு புரியவைத்தவர். 

கேள்வி: அதோடு முடிஞ்சு போச்சா பிரச்சினை? 

பதில்: 11.04.1985இல், ஆசிரியர், தோழர் க.பார்வதிக்கு, வடசென்னை ராயபுரத்தில் கூட்டம் நடத்துவதற்கு தேதி கொடுத்திருந்தாரு. மகளிர் நிதி திரட்டி அந்த நிகழ்ச்சியை நடத்துவாங்க. நம்ம ஒத்துழைப்பும் இருக்கும். அங்கு நமக்கும், இந்துமுன்னணிக்கும் பிரச்சினை ஏற்பட்டது. பாண்டியன் என்ற பெயர் மட்டும் நினைவில் இருக்கிறது. பத்து பேரோடு ஒரு முட்டுசந்தில் ஆசிரியர் வேன் வரும்போது மடக்கிட்டானுங்க. கூட்டம் முடிஞ்சு நம்ம தோழர்கள் பெரும்பாலும் போயிட்டாங்க. ஆனாலும் சமாளிச்சோம். அவங்களும் கம்பு வச்சிருந்தாங்க, நாமும் ஏழெட்டு பேருடன் கம்புகளோடதான் இருந்தோம். தாக்குதல் நடத்துனாங்க. நாமும் திருப்பித் தாக்கினோம். அதுக்குள்ள காவலர்கள் வந்து, ஆசிரியர் வண்டியை பத்திரமாக அனுப்பிவச்சாங்க. பிறகு வழக்கு நடந்தது.  

கேள்வி: நெடிய இயக்க வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்கள் பற்றிச் சொல்லுங்கள்!

பதில்: மு.நீ.சிவராசன் அலுவலக அறையில் இருந்தேன். உள்ளிக்கோட்டை வை. கலை யரசன் அலுவலகப் பணியாக வெளியில் போயிருந்தார். வேகமாக நாலஞ்சு பேரு வந்தாங்க; ஆங்கிலப் பயிற்சி வகுப்புல சேரணும் அப்பிடின்னாங்க; நானும் சரியென்று படிவம் எடுத்து கொடுத்திட்டேன். நிரப்பி, அதற்குரிய காசும் கொடுத்தாங்க. கலையரசன் வந்தவுடன் அவரிடம் ஒப்படைத்தேன். விண்ணப்பங்களை பார்த்துவிட்டு, ”என்னங்கய்யா இப்படி பண்ணிட்டீங்க?” என்றார் அதிர்ச்சியுடன். நான், "என்னப்பா?” என்றேன். “பார்ப்பனர்களைச் சேர்த்திருக்கீங்களே” அப்பிடின்னாரு. “என்னடா இது? படிக்கிறேன்னு வந்தாங்க. கொடுத்திட்டேன்” அப்பிடின்னேன். அடுத்தநாள் மு.நீ.சிவராசன் வந்தாரு, “ஆசிரியர் என்ன சொல்லுவாருன்னு தெரியலயே”ன்னு ஆசிரியரிடம் நடந்ததை சொல்லியிருக்கிறாரு. அவரோ அமைதியாக, "எத்தனை மாணவர்கள்?” என்று கேட்டிருக்காரு; இவரு, "40ங்க” என்று சொல்லியிருக்காரு; "எத்தனை பேர் பார்ப்பனர்?”னு அவரு கேட்க, இவரு, "3 பேருங்க” என்றிருக்கிறார். ஆசிரியரோ, “விழுக்காட்டு அளவில் 3 பேரு இருக்கலாம், போய்யா” அப்பிடின்னுட்டார். அந்த சம்பவத்தை மறக்கவே முடியாது. 

100 கூட்டம் நடத்துவதாக திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கிற காலம். அப்போதெல்லாம் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு கூட்டம் நடத்துவோம். ஆசிரியர், ”உன்னால் முடியும்! நீ நடத்துய்யா” என்று என்னை ஊக்கப்படுத்தினார். எங்கெங்கு மக்கள் கூடுவார்கள் என்பதையும் ஆசிரியரே சொன்னார். வட சென்னை, தென்சென்னை, சாலிக்கிராமம் வரையிலும் போய் கூட்டம் போட்டோம். அடுத்து ஜமாலியால பேசும்போது சலசலப்பு வந்துச்சு. முதல்நாள் புரசைவாக்கத்தில் நடத்திட்டோம். ஆவடியில் மேடை போட்டும், மற்ற மாவட்டங்களில் மூன்று ஆட்டோக்களில் ஒலிபெருக்கி வைத்தும் பிரச்சாரம் செஞ்சோம். வியாசர்பாடியில் அடுத்த கூட்டம். பெரம்பூர் கந்தன் ஒத்துழைப்போடு மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள, தணிகாச்சலம் ஏற்பாடு செய்திருந்தார். 

கூட்டம் முடித்து இரவு 10 மணிக்கு, பெரியார் செல்வன், திருநாவுக்கரசு, லைலேண்ட் செல்வராஜ், தங்கமணி தம்பி இவங்க எல்லாம் சாப்பிட்டு முடிஞ்சு போன பிறகு, எருக்கஞ்சேரி அன்பு கிட்ட மினிட்ஸ் புத்தகம், ஃபைல் எல்லாத்தையும் கொடுத்துட்டு, பெரம்பூர் பஸ் ஸ்டாண்ட் வந்து, ரயில்வே லைன் தாண்டி வீட்டுக்குப் போக இருந்தேன். அங்கே தண்டவாளத்தில் நான்கு பேர் பட்டாக்கத்திகளுடன் படுத்துட்டு இருக்காங்க. ஒருவன் சட்டென்று பட்டாக் கத்தியை என் கழுத்தில் வச்சிட்டான்; கத்தியைப் புடிச்சு திருப்பி அவன் முகத்தை பார்க்கலாம் என்பதற்குள், விரல்களில் காயமாகி ரத்தம் கசியுது; சிரமத்துடன் திரும்பிப் பார்ப்பதற்குள் ஒருத்தன் ஓடி வந்தான்; அவன் கையிலும் பட்டாக்கத்தி; நான் பின்னால் நகர்வதற்குள் வயிற்றில் சொருகிட்டான்; கத்தி முதுகுக்குப் பின்னால் வந்திடுச்சு; கழுத்தில் கத்தி வைத்தவனை கீழே தள்ளிவிட்டேன்; வயிற்றில் சொருகிய கத்தியுடனேயே, இந்தப்பக்கம் வந்தேன். ஆட்டோவுக்கு பயன்படுத்துகிற ரெக்சினை எடுத்து ரத்தம் வருகிற இடத்தில் வைத்து அழுத்திக் கொண்டேன். வெள்ளையன் தம்பி என்னைப் பார்த்துட்டான்; பிறகு கே.எம்.சி. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அப்போது செல்போன் கிடையாது. ஊத்தங்கரை பழனிச்சாமி வீட்டில்தான் போன் இருந்தது. அதில் அழைத்து ஆசிரியருக்கு தகவல் கொடுத்தார்கள். உடனடியாக ஆசிரியர், மேலாளர் சீத்தாராமனுக்கு தகவல் கொடுத்து, பெரியார் சமூகக் காப்பு அணியைச் சேர்ந்த 10 பேரை எனக்கு பாதுகாப்புக்கு போடச்சொன்னார். உடல் நிலை சரியில்லாத செய்யாறு அருணாச்சலமும் வந்துட்டாரு. பஞ்சாட்சரம் அருகிலேயே இருந்தார். மதியத்திற்கு மேல்தான் உடம்பிலிருந்த கத்தியை வெளியில் எடுத்தாங்க. பகல் 2 மணிக்கு மேலதான் எனக்கு விழிப்பு வந்தது. நான் மயக்கத்தில் இருக்கும் போதே ஆசிரியர் ஏராளமான தோழர்களுடன் வந்து பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார். ஆசிரியர், மறுநாளும் அம்மாவுடன் வந்து, “உடம்பைப் பார்த்துக்கொள்” என்றார். கே.எம்.சி.யிலிருந்து பெரியார் திடலுக்கு வந்தேன். அங்கு 20 நாட்களுக்கு மேலே கவிஞர் வீட்டில்தான் உணவு.

கேள்வி: அதற்குப் பிறகு உங்கள் இயக்கச் செயல்பாடு எப்படி இருந்தது?

பதில்: அதற்குப் பிறகுதான், வேகமாக வேலை செஞ்சேன். தங்கசாலை மணிக் கூண்டு பக்கத்தில் மாநில மாநாடு நடத்துகிற பொறுப்பை ஆசிரியர் என்னிடம் கொடுத்தார். அதே போல தங்கசாலையிலும் மத்தியிலிருந்த தலைவர்கள் வந்தாங்க. அப்போதெல்லாம் பதாகை போட வாய்ப்பில்லை. லாங்லாத் துணி எடுத்து, ஒரு லோடு லாரியில் மரம் எடுத்துவந்து, ரீப்பராக மாற்றி, துணியில் எழுதி 15, 20 அடி பேனர் விளம்பரம் செய்தோம். 

எனது பெயரையே ஆசிரியர்தான் மாற்றினார். அதாவது, பெங்களூரிலுள்ள அலசூர் ஏரிப் பக்கத்தில் இருக்கும் கண்டோன்மெண்ட் பகுதியில், கர்நாடகா திராவிடர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த, தமிழ்ச்சங்க நிகழ்ச்சியில்தான் பா.தெட்சிணாமூர்த்தி என்ற சமஸ்கிருதப் பெயரை ஆசிரியர், பா.தென்னரசு என்ற தமிழ்ப் பெயராக மாற்றினார். 

கேள்வி: ஓ... சரி, கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும் போது, இன்றைக்கு உங்கள் உணர்வு எப்படியிருக்கிறது? 

பதில்: இயக்கத்திற்கு வந்து 50 ஆண்டுகள் ஆயிற்று! கடந்த ஜனவரியில் பெரியார் திடலில் ’சமூகநீதி பாதுகாப்புப் பயணம்’ செல்வதற்கான கலந்துரையாடல் கூட்டத்தில் ஆசிரியரைப் பார்த்தபிறகு, கிட்டத்தட்ட எனது நோய்த்தன்மை குறைந்தது போலானது. பிப்ரவரி 3 ஆம் தேதி ஈரோட்டில் தொடங்கி கடலூர் வரை நடைபெறும் சுற்றுப்பயணம் குறித்து அவர் பேசியது எனது உற்சாகத்தை அதிகப் படுத்தியிருக்கிறது. ஆசிரியர், பெரியாரையும் மிஞ்சிவிட்டார். ”மண்டைச் சுரப்பை உலகு தொழும்” என்றார் புரட்சிக்கவிஞர்! ஆசிரியர் ’தொழ’ வச்சுட்டார்! ஆசிரியர் ’பெரியார் உலகம்’ என்ற மிகப்பெரிய திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். ஆவடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பெரியார் உலகத்திற்கு ஏறக்குறைய ரூ.10 லட்சம் நிதி திரட்டிக் கொடுத்திருக்கிறோம்! சென்னையைப் பொறுத்தவரையில் ஆவடி மாவட்டத்தில்தான் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகம். கொடி மரங்கள் 67 இருக்கின்றன. 

இன்னும் இது அதிகமாகுமே தவிர குறையாது. இதற்கான அடித்தளமாக, ஆவடி பெரியார் மாளிகை 2007இல் தொடங்கப்பட்டு, சிறுகச் சிறுக சேகரித்து 2020இல் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. ஆவடி மனோகரன், ஆவடி கோ.முருகன், உடுமலை வடிவேல், வெ.கார்வேந்தன் உள்ளிட்ட ஏராளமான இயக்கத் தோழர்கள், பகுத்தறிவாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் உள்ளிட்ட அனைத்துக் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களின் பங்களிப்போடும் கட்டப்பட்டு, மேலே கம்பீரமாக கழகக்கொடி பறக்கிறது. ஆசிரியரை அழைத்து துவக்க விழா நடத்தவேண்டும் என்பது நீண்ட காலத் திட்டம். 

அதற்குள் எனக்கு உடல்நிலை சரியில் லாமல், வீட்டிற்கும் மருத்துவமனைக்குமாக அலைந்து கொண்டிருக்கிறேன். எனது இணையருக்கும் உடல் நிலை சரியில்லை. எனது இயக்க வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, மிகுந்த மன நிறைவுடன்தான் இருக்கின்றேன் என்ற தென்னரசுவுக்கு 76 வயதுதான் என்றாலும், தனது உடல்நிலையை கருதி, ஈரோடு பொதுக் குழுவுக்கு சிலநாட்களுக்கு முன்பு, ஆசிரியருக்கு தன்னுடைய இயலாமையைச் சுட்டிக்காட்டி தன்னைப் பொறுப்பிலிருந்து விடுவிக்கக் கோரி, கடிதம் மூலம் வேண்டுகோள் வைத்திருந்தார். தலைவரும் கோரிக்கையை ஏற்று, அவரை மாவட்டக் காப்பாளராக அறிவித்திருக்கிறார். கடந்த 3-6-2023 அன்று பொறுப்புகள் மாற்றப்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் ஆவடி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்திலும் தனது உடல் நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் கலந்துகொண்டு, அடுத்த தலைமுறைக்கு நான் வழிகாட்டுவேன் என்றும் உறுதியளித்திருக்கிறார் என்பதை எண்ணும்போது, மலைப்பாகத்தான் இருக்கிறது! அந்த உணர்வு பெரியாரில் தொடங்கி, அன்னை மணியம்மையார், ஆசிரியர் போன்ற தலைவர்களிடம் மட்டுமல்ல, ஒரு சாதாரண தொண்டரிடமும் இருப்பதுதான் அந்த மலைப்பை இன்னமும் அதிகப்படுத்துகிறது!