வி.பி.சிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வி.பி.சிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2026

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 96 ஆம் ஆண்டு பிறந்த நாள்: சிலைக்குக் கழகத் துணைத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஜூன் 25 இந்தியாவின் மேனாள் பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 96 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (25.6.2026) காலை 10.30 மணியளவில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்தி ருக்கும் அவரது சிலைக்குத் திராவிடர் கழகத்தின் சார்பில், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் மலர்மாலை அணிவித்தும், சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மயிலை டி.ஆர்.சேதுராமன், அய்ஸ் அவுஸ் அன்பு, சி.வெற்றிச்செல்வி, க.பெரியார் செல்வி, த.மரகதமணி, செ.பெ.தொண்டறம், உத்திராமணி, சகானா, மித்திரா, குமாரி, பவித்திரா, சி.காமராஜ், பார்த்திபன், விஜய், மகேஷ், பெரியார் மாணாக்கன், யாழ்திலீபன், பிரசாந்த், இராமநாதன், முரளி, அருண் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

தி.மு.க.

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் சிலைக்கு தி.மு.க. சார்பில், மேனாள் அமைச்சர் மா.சுப்பிரமணியம், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மாவட்டச் செயலாளர் சிற்றரசு ஆகியோர் மாலை அணிவித்தனர். இந்நிகழ்வில் பெருந்திரளான தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்றனர்.

- விடுதலை நாளேடு, 25.06.26

புதன், 16 ஜூலை, 2025

சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த நாள் – தமிழர் தலைவர் ஆசிரியர் மலர்தூவி மரியாதை (சென்னை, 25.6.2025)

 

சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த நாள் – தமிழர் தலைவர் ஆசிரியர் மலர்தூவி மரியாதை (சென்னை, 25.6.2025)


சமூகநீதியில் பெற்றதைவிட, பெறவேண்டியது அதிகம் – அதை நோக்கி நாம் செல்லவேண்டும் என்பதுதான் வி.பி.சிங் பிறந்த நாளில், நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய சூளுரை! செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்



சென்னை, ஜூன் 25–   சமூகநீதியில் பெற்றதைவிட, பெற வேண்டியது அதிகம். அதை நோக்கி நாம் செல்லவேண்டும் என்பதுதான், வி.பி.சிங் அவர்களுடைய பிறந்த நாளில், நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய சூளுரையாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மறைந்த சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுடைய பிறந்த நாளான இன்று (25.6.2025) சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

இந்திய வரலாற்றில் ஒரு ஒப்புவமையற்ற பிரதமர் வந்தார் என்று சொன்னால், அது சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள்தான்.

காரணம் என்னவென்று சொன்னால், முழுக்க முழுக்க அவர், அந்தப் பதவிக்கு மிகத் தகுதியானவர்.

பிளாட்டோ ஒருமுறை தன்னுடைய ஆய்வு நூலான 'ரிபப்ளிக்'கில், பதவிக்கு யார் தகுதியானவர்? என்கிற ஒரு கேள்வியைக் கேட்டு, அதற்கு ஒரு பதிலும் சொன்னார்.

இது நீண்ட காலமாக வரலாற்றில் பதிவாகி இருக்கின்ற செய்தியாகும்.

''யார் பதவியை விரும்பாதவர்களோ, அவருக்குத்தான் அந்த முழுத் தகுதி இருக்கிறது'' என்று சொன்னார்.

அதுதான்,வி.பி.சிங் அவருடைய வரலாற்றில், எந்த அரசியல்வாதியிடமும் கண்டுபிடிக்க முடியாத ஒன்று.

பிரதமர் பதவியை இரண்டாவது முறை
ஏற்க மறுத்தவர்!

இரண்டாவது முறை, அய்க்கிய முற்போக்கு ஜனநாயக முன்னணி, அமைத்த கூட்டணியில், இந்தியாவில் உள்ள அத்துணைத் தலைவர்களும், வி.பி.சிங் அவர்களைத் தேடி, நாடிச் சென்று, ''நீங்கள்தான் பிரதமராக வரவேண்டும்'' என்று அவரை வற்புறுத்தினார்கள்.

ஆனால், அவர் அந்தப் பதவியை ஏற்க மறுத்துவிட்டார்.

மீண்டும் மீண்டும், வற்புறுத்துவதற்காக இவரை சந்திக்க முயல்கிறார்கள் என்று இவருக்குத் தெரிந்தவுடன், பிரதமராக ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்வரை, இவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியாத அளவிற்கு, ஓரிடத்திலே தன்னை மறைத்துக் கொண்டார். பிறகுதான் வெளியில் வந்தார்.

மற்ற மாநிலங்களைவிட,
தமிழ்நாட்டில் அதிகமாக மதிக்கப்படுகிறார்

அந்த அளவிற்குப் பதவியை விரும்பாத, மக்கள் மன்றத்தின் தேவையை மட்டுமே கருதியவர். அதனால்தான், அவர் இன்றைக்கும், மற்ற மாநிலங்களைவிட, தமிழ்நாட்டில் அதிகமாக மதிக்கப்படுகிறார்.

சமூகநீதி மண்ணான, இந்தப் பெரியார் மண், திராவிட மண், அவரை சிறப்பாகக் கவுரவிக்க வேண்டும் என்ற நிலையில், கலைஞர் அவர்கள் காலத்திலிருந்து, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கங்கள் அவரிடத்தில் தனி ஈடுபாடு கொண்டிருந்ததோடு, மிகப்பெரிய அளவில், நாம் வைத்த வேண்டுகோளை ஏற்று, இன்றைக்குத் 'திராவிட மாடல்' ஆட்சியை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்ற நமது முதலமைச்சர் அவர்கள், மாநிலக் கல்லூரி வளாகத்தில் இதோ இந்த அருமையான சிலையைத் திறந்தார்கள்.

இந்தியாவில் சிலை திறந்தது தமிழ்நாட்டில்தான்!

வி.பி.சிங் அவர்களுக்கு முதன்முறையாக இந்தியாவில் சிலை திறந்தது தமிழ்நாட்டில்தான் என்ற பெருமையும், அந்தச் சிலைக்கும் கீழே நாம் நின்றோம் கொண்டிருக்கின்றோம் என்ற சிறப்பும் தனித்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

இன்றைய, அவருடைய பணி, அவருடைய தொண்டை தொடர வேண்டிய அவசியம் உள்ளது. ஏனென்றால், அவர், 27 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொடுத்தாலும், அது ஒரு தொடக்கமே தவிர, அது ஒரு முடிவல்ல.

ஆகவேதான், அதனைத் தொடரவேண்டும் என்கின்ற எண்ணம், அவரை, அன்றைக்கு எதிர்த்தவர்கள், இன்றைக்கு அவருடைய கருத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

எனவேதான், சமூகநீதித் துறையில், மிக முக்கியமாக, நீதித் துறையில் சமூகநீதி. தனியார்த் துறையில், சமூகநீதி, இட ஒதுக்கீடு அவசியம்.

அதேபோல, 50 சதவீதத்திற்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்று அரசமைப்புச் சட்டத்தில் எந்த தடையும் கிடையாது. செயற்கையாக நீதிமன்றங்களால் அது உருவாக்கப்பட்டதை வலியுறுத்தி வருகின்ற காரணத்தினால், அதுவும் விரைவில் வெற்றி பெறவேண்டும்.

சமூகநீதியில் பெற்றதைவிட,
பெறவேண்டியது அதிகம்!

எனவே, சமூகநீதியில் பெற்றதைவிட, பெறவேண்டியது அதிகம். அதை நோக்கி நாம் செல்லவேண்டும் என்பதுதான், வி.பி.சிங் அவர்களுடைய பிறந்த நாளில், நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய சூளுரையாகும்.

இந்துக்களை ஒன்று சேர்ப்பது இருக்கட்டும்! முதலில் கூட்டணி ஒன்று சேர்ந்ததா?

செய்தியாளர்: மதுரையில் நடைபெற்ற முருகன் பக்தர்கள் மாநாட்டில், பெரியார், அண்ணா ஆகியோரைக் கொச்சைப் படுத்தும் வகையில் செய்திகளை ஒளிபரப்பியிருக் கூறுகிறார்களே, அதுகுறித்து உங்கள் கருத்து?

தமிழர் தலைவர்: ''ஹிந்துக்களை ஒன்று சேர்க்கிறோம்'' என்று சொன்னார்கள். அது பிறகு இருக்கட்டும்; அவர்களுடைய கூட்டணியே முதலில் ஒன்று சேர்ந்ததா, இல்லையா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இவ்வாறு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.



- விடுதலை நாளேடு, 25.06.25

செவ்வாய், 25 ஜூன், 2024

சமூகநீதிக் கொள்கைக்காகப் பிரதமர் பதவியைத் தூக்கி எறிந்த பெருமகன்! அவர் காண விரும்பிய எஞ்சிய உரிமைகளை மீட்டெடுக்கவும் உறுதியேற்போம்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை



Published June 25, 2024

சமூகநீதிக்காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களது 94 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (25.6.2024)!
பெரியார் பூமியான திராவிட மண்ணில் அவரது முழு உருவச் சிலை – அரிய வரலாற்றுச் சாதனை!

சமூகநீதிக்காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் 94 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (25.6.2024). பெரியார் பூமியான திராவிட மண்ணில் அவரது முழு உருவச் சிலை – அரிய வரலாற்றுச் சாதனை! கொள்கைக்காகப் பிரதமர் பதவியைத் தூக்கி எறிந்த பெருமகன்! அவர் காண விரும்பிய எஞ்சிய உரிமைகளை மீட்டெடுக்கவும் உறுதியேற்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இன்று (25.6.2024) சமூகநீதிக்காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களது 94 ஆம் ஆண்டு பிறந்த நாள்!
27 விழுக்காடு ஒதுக்கீட்டுக்கு
ஆணை பிறப்பித்த பெருமை!
இந்திய நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 70 விழுக்காட்டுக்கு மேலே உள்ள மக்களான பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு, இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்ட பிறகும்கூட, சுமார் 40 ஆண்டுகளான பின்பும்கூட – ஒன்றிய அரசின் பதவிகள் – பணிகளில், கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தரப்படாமல் இருந்த நிலையைப் போக்கிட – இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் – மண்டல் அவர்கள் தலைமையில் நியமிக்கப்பட்டு, பரிந்துரைகளை ஒன்றிய அரசு பெற்றும்கூட, சுமார் 10 ஆண்டுகாலம் கிடப்பில் போடப்பட்ட பிறகு, தமிழ்நாடு – பெரியார் மண்ணிலிருந்து கிளம்பிய ஆவேசம், வடபுலத் தலைவர்களோடு இணைந்து எடுத்த தொடர் முயற்சிகளால் (இந்தியா முழுவதும் 46 மாநாடுகள், 16 போராட்டங்கள் புதுடில்லி உள்பட) மண்டல் பரிந்துரை கிளர்ச்சி நாடு தழுவிய நிலையில், ஒன்றிய அரசின் மவுனத்தைக் கலைத்து, தனது ஆட்சிக்காலத்தில் மண்டல் பரிந்துரைகளில் வேலைவாய்ப்புக்கான 27 விழுக்காடு ஒதுக்கீட்டுக்கான ஆணையைப் பிறப்பித்த பெருமை அந்நாள் பிரதமர்
வி.பி.சிங் அவர்களையே சாரும்.

(அப்போது கல்வித் துறைக்கான இட ஒதுக்கீடு நிலுவையில் இருந்தது)
அதற்காகவே அன்று வி.பி.சிங் ஆட்சிக்குக் கொடுத்த ஆதரவினைப் பின்வாங்கி, அவரது ஆட்சியைக் கவிழ்த்தது பி.ஜே.பி. – ஆர்.எஸ்.எஸ்.
எத்தனை முறை வேண்டுமானாலும் பிரதமர் பதவியை இழக்கத் தயார் என்று மார்தட்டிய மாவீரன்தான் மாமனிதர் வி.பி.சிங்!
ஆட்சி இழப்புப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், ‘‘இதுபோன்ற நல்ல பொருள்களைப் (பிற்படுத்தப்பட்டோர் முதன் முறையாக வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தரும் 27 சதவிகித ஆணை பிறப்பித்தமை, ‘கமண்டல்’ – இராமர் கோவில் பாபர் மசூதியை இடித்த இடத்தில் கட்டும் இயக்கம் – ‘மண்டலுக்கு எதிரான கமண்டல்’ உண்டாக்கினர்) பெற நல்ல விலை கொடுப்பது தேவைதான். எத்தனை முறை வேண்டுமானாலும் நான் பிரதமர் பதவியை இழக்கத் தயார்” என்று மார்தட்டிய மாவீரன்தான் மாமனிதர் விசுவநாத் பிரதாப் சிங் அவர்கள்!
அவர் பிறந்த மண்ணான உத்தரப்பிரதேசத்தில்கூட அவருடைய சிலை எழுப்பப்படவில்லை; அவரை மிகவும் நேசித்த பெரியார் பூமியான திராவிட மண்ணில் அதன் திராவிட ஆட்சி நாயகரால் முழு உருவச் சிலை நிறுவி, திறந்து வைக்கப்பட்டது – அரிய வரலாற்றுச் சாதனை!

சமூகநீதியைக் காக்கவும், எஞ்சிய உரிமைகளை மீட்டெடுக்கவும் உறுதியேற்போமாக!
மண்டல் பரிந்துரையை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பிப்பதற்கு அவரது கட்சிக்குள்ளேயே இருந்த பிற்போக்குவாதிகளான கூட்டாளிகளும்கூட எவ்வளவோ இடையூறுகள் செய்தும், அவர் அதில் உறுதியாக நின்றார், வென்றார்!
அவரது 94ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (25.6.2024) சமூகநீதிச் சூரியக் கதிர்களின் ஒளி வீச்சுப் பரவிய நாளில், அவரது நினைவைப் போற்றி, இன்னமும் அதன் எதிரிகளிடமிருந்து சமூகநீதியைக் காக்கவும், எஞ்சிய உரிமைகளை மீட்டெடுக்கவுமான தொடர் அறப்போரில் உறுதியேற்போமாக! 

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
25.6.2024