கி.வீரமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கி.வீரமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

கலைஞர் சிலை திறப்பு  விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

எதிர்நீச்சலிலேயே வளர்ந்த கலைஞரின் சிலையை - எதிர்நீச்சல்காரர் வங்காளத்து முதலமைச்சர் மம்தா பானர்ஜியை அழைத்து திறக்கச் செய்தது பொருத்தமானது

கலைஞர் அளித்துவிட்டுச்சென்ற


அய்ம்பெரும் முழக்கங்களை செயல்படுத்த  உறுதி ஏற்போம்!


கலைஞர் சிலை திறப்பு  விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை




சென்னை, ஆக.9   கலைஞர் மறைந்தாலும், அவர் விட்டுச் சென்ற அய்ம்பெரும் முழக்கங்களை செயல்படுத்துவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

7.8.2019 அன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற மானமிகு சுயமரியாதைக்காரர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழாவிற்குத் தலைமையேற்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்  உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

பல்திறன் கொள்கலன் ஆற்றல் நிறைந்தவர் கலைஞர்


மிகுந்த உணர்ச்சிபூர்வமான ஒரு நிகழ்ச்சியாக அமைந்துள்ள முத்தமிழ் அறிஞர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகின்றவரும், பல்திறன் கொள் கலன் ஆற்றல் நிறைந்த நம்முடைய தலைவர், மானமிகு கலைஞருக்கான விழா இது. ஈரோட்டுக் குருகுலத்தில் பயின்று, காஞ்சி கருவூலத்தையே தனதாக்கிக் கொண்டு, மிகப்பெரிய அளவிற்கு, தனக்கு மட்டுமல்ல, இந்தத் தரணிக்கே இந்த இயக்கம் சொந்தம் - திராவிடர் இயக்கம் சொந்தம் என்று காட்டக்கூடிய அளவிற்கு, முத்திரை பொறித்துச் சென்ற தலைவர் கலைஞர். அவர்களுக்குப் பிறகும்கூட, வெற்றிடம் என்பது கிடையாது - எல்லோரும் பெற்றிடமாகத்தான் திராவிட முன்னேற்றக் கழகமும் சரி, தமிழ்நாடும் இருக்கும் என்பதற்கு அடையாளமாக இன் றைக்கு அவர் விட்ட பணிகள் மட்டுமல்ல, அவர் நினைக் காத பணிகளையெல்லாம்கூட செய்து கொண்டி ருக்கக்கூடிய நம்முடைய ஒப்பற்ற தலைவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வீரர் அன்பிற்குரிய சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே,

எதிர்நீச்சல் வீராங்கனை மம்தா பானர்ஜி


இந்த நிகழ்ச்சியில் கலைஞர் அவர்களுடைய உருவச் சிலையை, அவருடைய மூத்த பிள்ளை என்று கையெ ழுத்து ஏடாகத் தொடங்கி, தனி ஆளாக மிகப்பெரிய அளவிற்கு உழைத்து, 75 ஆண்டுகாலம் ஒரு பெரிய வரலாற்றை- நாளேட்டு வரலாற்றை உருவாக்கிய அந்த ஏட்டின் அலுவலகத்தில், எத்தனையோ கசப்பான அனு பவங்கள் அங்கே நடந்ததுண்டு; அதையெல்லாம் மாற்றி, இன்றைக்கு அங்கே ஒரு வசந்தம் பூத்தது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, கலைஞர் அவர்களுடைய சிலை - அவர்கள் நாள்தோறும் உடன்பிறப்புக்கு எழுது கின்ற மடலை எப்படி உட்கார்ந்துகொண்டு எழுது வார்களோ - அதேபோன்று அந்த மடலை எழுதக்கூடிய வகையில் சிலை உருவாக்கப்பட்டிருப்பது பாராட்டுக் குரியது - சரியானவரை அடையாளம் காண எப்பொழுதும் தவற மாட்டார் நம்முடைய தளபதி அவர்கள் என்பதற்கு அடையாளமாக, மேற்கு வங்கத்தினுடைய வீராங்கனை யாக இருக்கக்கூடிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களை அழைத்து, கலைஞர் அவர்களுடைய சிலையை திறந்து வைக்கக்கூடிய வரலாறு படைத்த விழா இது. எதிர்நீச்சலை கலைஞர் எப்படி போட்டாரோ - அதேபோல, கலைஞர் அவர்களுடைய சிலையைத் திறப்பதற்கும் ஒரு எதிர்நீச்சல் வீராங்கனைதான் தேவை - சரியானவராக இருக்க முடியும் என்ற அளவில், நம்மு டைய அன்பான அழைப்பை ஏற்று வந்திருக்கக்கூடிய வீராங்கனை - இரும்பு மனிதர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு எடுத்துக்காட்டான முதலமைச்சராக இருக்கக் கூடிய மேற்கு வங்கத்தினுடைய முதலமைச்சர் அருமை சகோதரியார் மாண்புமிகு மம்தா பானர்ஜி அவர்களே,

புதுச்சேரியினுடைய மாண்புமிகு முதலமைச்சர், அவரும் ஒரு எதிர்நீச்சல் வீரர்தான். தினமும் எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறார். எனவேதான், அது மிகவும் பொருத்தமானது - அப்படிப்பட்ட அருமை நண்பர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களே,

கலைஞர் அவர்களோடு இணைந்து அவரை தன்னு டைய தமிழாசான் என்பதை எப்பொழுதும் நன்றியுணர் வோடு  மறக்காமல் எங்கும் பதிவு செய்யக்கூடிய நம்முடைய கவிப்பேரரசு அவர்களே,

இந்நிகழ்ச்சியில் அனைவரையும் வரவேற்ற முரசொலி ஆசிரியர் அன்பிற்கும் பாராட்டுதலுக்கும் உரிய செல்வம் அவர்களே,

இணைப்புரை வழங்கிக்கொண்டிருக்கக்கூடிய அருமை நண்பர் செயல்வீரர் அன்பழகன் அவர்களே,

எதிரிலும், மேடையிலும் அமர்ந்திருக்கக்கூடிய அத் துணை திராவிடர் இயக்க, திராவிட முன்னேற்றக் கழக, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த தலைவர்களே, பெரு மக்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

It is most fitting that we must welcome the Iron Lady of West Bengal.


Madam,


You’ve come to the land of Dravidam;


You’ve come to the land of Periyar;


you've come to the land of Social Justice;


You’ve come to the land of Self-Respect;


You are most welcome, our hearty greetings.


It is most fitting and proper that you have unveiled our Leader’s statue at his office. which has revolutionized the minds of the Tamils. Not only Tamils here, Tamils throughout the world.


Kalaignar’s Pen was more mightier than anyother sword.


He has done that. So it is most fitting and proper.


You are always swimming against the current.


Mr. Naryanasamy another Cheif Minister is always swimming against the current.


Periyar swimmed against the current,


Anna swimmed against the current, and Kalaignar swimmed against the current and our Stalin our Thalapathi is swimming against the current, always they are known for that. So it is most fitting, you have come here.


We are not ‘Jalras!' We are not simply saying Yes-man. We are always  here to support the necessary things and opposed the evil and you will have to come here, even often and often.


State Rights are  systematically being curbed and taken away.


So it is responsibility of my dear Brother Stalin who will ask the entire India to come to Tamil Nadu to defend that because the constitution is being  scraped.


The constitution is not only done, it is undone. Undone that is going on. So, it is high time that you’ve come here as the fighter. Not only in Bengal, here also,  because the forces, the fundamentalists- forces, they want to take away the Periyar,   so all so  Vidhyasagar, they want to take it away  and vandalised Vidhyasagar statue there. Now, nobody could touch Periyar here. Because, Periyar completely has given a long history of our heritage.


கலைஞர் அவர்களும் எதிர்நீச்சலிலேதான் வெற்றி பெற்றார்


அன்புள்ள நண்பர்களே, எதிர்நீச்சல் அடித்த எல்லோரையும் ஒன்று சேர்த்திருக்கக்கூடிய கூட்டம். காரணம், நம்முடைய கலைஞர் அவர்களும் எதிர் நீச்சலிலேதான் வெற்றி பெற்றார். முழு கலைஞரை எப்பொழுது நீங்கள் பார்க்க முடியும் என்று சொன்னால், இளைய தலைமுறைக்கு, அவரோடு நெருங்கிப் பழக முடியாத தலைமுறைக்கு நாங்கள் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம்.

முதலமைச்சரான கலைஞரைப் பார்ப்பதைவிட,

எழுத்தாளர் கலைஞரைப் பார்ப்பதைவிட,

பேச்சாளர் கலைஞரைப் பார்ப்பதைவிட,

திரைப்பட வசன கர்த்தா கலைஞரைப் பார்ப்பதைவிட,

கலைஞரை, முழுக் கலைஞராகப் பார்க்கவேண்டும் என்று சொன்னால், எதிர்ப்பிலேதான் எங்கள் கலைஞர் முழுக் கலைஞராக எப்பொழுதும் திகழ்வார். காரணம், அதுதான் ஈரோடு குருகுலத்தில் அவர் படித்த கற்ற பாடம்.

கலைஞர் பேனாவை, வாள்முனையைவிட வேக மாகச் சுழற்றியவர்

சுருக்கமாக ஒன்றை சொல்கிறேன்.

நெருக்கடி காலத்தில், முரசொலி பட்டபாடு,

நெருக்கடி காலத்திலே இந்த இயக்கம் பட்டபாடு,

"ஈரோடு போனவன் எப்பொழுதும் நீரோடு  போகமாட்டேன்''


நெருக்கடி காலத்திலே தணிக்கை என்ற பெயராலே, கழுத்தை நெரித்து, கருத்துகளெல்லாம் கொல்லப்பட்ட நேரத்திலே, கலைஞர் பேனாவை, வாள்முனையைவிட வேகமாகச் சுழற்றினார்; எதிர்நீச்சலிலே வெற்றி பெற்றார்...

அப்பொழுது அவரிடத்தில் ஒரு செய்தியாளர் கேட்டார், ஏன் உங்களுடைய ஆட்சியை கலைத்தார்கள் தெரியுமா, மத்திய அரசாங்கத்தார்?

செய்தியாளர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞரைப் பார்த்து,

ஆட்சியை இழந்திருக்கிறோம் என்பதைப்பற்றி கவலைப்படாத கலைஞரைப் பார்த்து,

மக்களையே நம்பிக்கொண்டிருக்கும் கலைஞரைப் பார்த்து செய்தியாளர் சொன்னார்,

நீங்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்கவில்லை; தேசிய நீரோட்டத்தில் கலக்கவில்லை என்பதற்காகத்தான், உங்கள் ஆட்சியைக் கவிழ்த்தார்கள், டில்லி உங்கள் ஆட்சியைக் கவிழ்த்தது'' என்று சொன்னார்.

ஒரே வரியில் பதில் சொன்னார் கலைஞர், அவர்தான் கலைஞர்.

"ஈரோடு போனவன் எப்பொழுதும் நீரோடு போக மாட்டேன்'' என்று சொன்னார்.

நிமிர்ந்து நின்று நம்முடைய லட்சியப் பாதையில் வெல்வோம்!


எதிர்நீச்சல் அடித்தே பழக்கப்பட்டவர்கள் நாங்கள்; எனவேதான், ஆற்றோடு போகமாட்டோம்; எதிர்நீச்சல் அடித்தால்  swimming against the current  என்பது இருக்கிறதே, அதுதான் சாதனை; That is the achievement ஆகவேதான், நான் ஈரோடு போனேன்; என்னுடைய தலைவனே எதிர்நீச்சல் அடித்து வழிகாட்டிய தலை வன்தான். ஆகவேதான், நாங்கள் எப்பொழுதுமே அடி பணியமாட்டோம்; நிமிர்ந்து நிற்போம். நிமிர்ந்து நின்று நம்முடைய லட்சியப் பாதையில் வெல்வோம் என்று சொன்னார்.

அந்தக் கலைஞருடைய நினைவு நாள் என்று சொன்னாலும், இது வரலாற்று நினைவு நாள் - அதில் அற்புதமான சாதனையை செய்த நம்முடைய தளபதி அவர்களுக்கு, தமிழ்கூறும் நல்லுலகம் என்றைக்கும் நன்றி சொல்லவேண்டும்.

வென்றார் என்று சொல்லுங்கள்;


வெல்வார் என்று  சொல்லாதீர்கள்


அவர் வெல்வார் என்று சொன்னார் கவிப்பேரரசு; ஒரு சிறிய திருத்தம்; தமிழை எழுதும்போது, அவர் திருத் தத்திற்குரிய அளவிற்கு எழுத மாட்டார்; அவரைத் திருத் துகிறேனே என்று எனக்குக் கொஞ்சம் வருத்தம் இருக்கிறது; இருந்தாலும், ஆசிரியர் நான், ஒப்புக்கொள்வார் என நான் நினைக்கிறேன். வென்றார் என்று சொல்லுங்கள்; வெல்வார் என்று  சொல்லாதீர்கள்.

நிச்சயமாக, 40-க்கும் 40- என்று சொன்னார்கள் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள். 39 இல் 38; அதில் வென்றாரா? இல்லையா? 13 பெரிதா? 9 பெரிதா? வென்றாரா இல்லையா? நாளைக்கும் வென்றார்! வென் றார்!! வென்றார்!!! என்று சொல்லக்கூடிய அளவிற்கு வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய அளவிற்கு வரும்.

எனவே, நண்பர்களே! இன்றைய காலகட்டம், மாகாணங்களுடைய உரிமைகளையெல்லாம் பறித்து, மாநிலங்களே இருக்கக்கூடாது, ஒற்றை ஆட்சி - ஒரே ஆட்சி - ஒரே ரேஷன் கார்டு - ஒரே கலாச்சாரம், அது சமஸ்கிருத கலாச்சாரம்; ஒரே மதம், அது இந்துத்துவா - ஒரே கட்சி இருக்கவேண்டும் என்றெல்லாம் சொல் கிறீர்களே, இப்படி ஒன்று, ஒன்று, ஒன்று என்றாக்கிக் கொண்டிருக்கிறீர்களே, அவர்களைப் பார்த்துக் கேட் கின்றோம், கலைஞர் அவர்களுடைய நினைவு நாளிலே, கலைஞர் அவர்கள் போட்டுத் தந்த மேடையிலே, கலைஞரோடு தோளோடு தோள் நின்று போராட்டங்களில் சிறைச்சாலைக்குச் சென்றவர்கள் என்ற முறையில், எங்களைப் போன்றவர்கள் கேட்கிறோம்,

ஒரே ஜாதி என்று சொல்வதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?


ஒரே மதம் - இந்து மதம்; ஒரே மொழி - சமஸ்கிருதம், இந்தி; ஒரே ரேசன் கார்டு; ஒரே அமைப்பு என்றெல்லாம் ஒன்று, ஒன்று, ஒன்று என்றாக்கிக் கொண்டிருக்கிறீர்களே, உங்களைப் பார்த்துக் கேட்கிறோம், ஒரே ஜாதி என்று சொல்வதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? ஒரே ஜாதி என்று சத்தம் போடுவதற்குத் தயாராக இருக்கிறீர்களா?

மாட்டீர்கள்! காரணம், நீங்கள் மனுவின் மைந்தர்கள்; மனுதர்ம ஆட்சியை, நீங்கள் மீண்டும், மீண்டும் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

எனவேதான், தந்தை பெரியாருடைய வழியில், சமத்துவபுரம் கண்டார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

மாநில சுயாட்சி என்பதை இன்றைக்கு வற்புறுத்த வேண்டிய கட்டம். எனவேதான், இரண்டு முதலமைச் சர்கள் போதாது; இதற்கு ஒப்புக்கொள்கிற அத்துணை முதலமைச்சர்களும், இன்றைக்கு வேறு முகாமில் இருக்கின்றவர்கள்கூட, பட்ட பிறகு வருவார்கள்; தமிழ் நாடுதான் கைகுலுக்கி நிற்கும். வங்காளத்தைப் பொருத்த வரையில், இந்தி எதிர்ப்பிலும் நம்மோடு அவர்கள் பயணிக்கக்கூடியவர்கள். மொழிப் பிரச்சினையில் அவர்களுக்கும், நமக்கும் வேறுபாடு கிடையாது.

வங்கத்தின் சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், ஒருமுறை சொன்னார்,

‘‘I am a Dravidian from Bengal''

என்று. அது பதிவாகி இருக்கிறது.

அய்ம்பெரும் முழக்கங்கள்


எனவேதான், உங்களைப் பார்க்கும்பொழுது, நான் யாரையோ பார்க்கவில்லை; உரிமைக்குப் போராடுகின்ற உங்களைப் பார்க்கின்றோம். நாங்கள் அதற்கு ஆயத்தக் களம் அமைத்திருக்கின்றோம். நீங்கள் இங்கே வந்தது வெறும் சிலை திறப்பு விழாவிற்காக மட்டுமல்ல; இந்த நாட்டினுடைய உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்; பறிக்கப்படக் கூடாது. மாநிலங்களுடைய உரிமைகள் காப்பாற்றப்படுவது என்பது மிகவும் முக்கியம்.

எனவே, கலைஞர் அவர்களுடைய நினைவு நாள் என்ற இந்த வரலாற்று குறிப்பு நாளில், அய்ந்து பெரும் முழக்கங்களை கலைஞர் அவர்கள் நமக்குத் தந்திருக்கிறார்கள்.

அவை முழக்கங்கள் அல்ல நண்பர்களே, ஆயுதங்கள். அந்த ஆயுதங்களை வைத்துத்தான் இந்தியாவைக் காப்பாற்ற முடியும்; தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தி யாவைக் காப்பாற்ற முடியும்.

எனவேதான், கலைஞருடைய நினைவைப் போற்றுகின்ற வகையில், இந்த அய்ந்து உறுதிமொழிகளை நான் இங்கே சொல்லுகிறேன். நீங்கள் தொடர்ந்து சொல்லவேண்டும். டில்லி வரையில் அது கேட்கவேண்டும். அதுதான் மிக முக்கியம்; அதுதான் கலைஞருக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய மரியாதை.

அந்த அய்ம்பெரும் முழக்கங்கள், வெறும் முழக்கங்கள் அல்ல. அவைகள்தான் வருங்கால போர்த் திட்டங்கள். அதனை நன்றாகத் தெளிந்து பார்க்கவேண்டும்.

1) அண்ணா வழியில் அயராது உழைப்போம்!

2)  ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்!

3)  இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!

4) வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்!

5) மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி!

(தமிழர் தலைவர் முழக்கங்களைச் சொல்ல சொல்ல, அனைவரும் திரும்பச் சொன்னார்கள்).

போர்க் களத்திற்கு ஆயத்தமாகுக!


இதுதான் நம்முடைய அடுத்த பணி. அதனுடைய தொடக்கம்தான் இது. வெறும் சிலை திறப்பு அல்ல.

வாழ்க கலைஞர்! வாழ்க பெரியார்!! வருக மாநில உரிமைகள்!

இந்தப் போர்க் களத்திற்கு ஆயத்தமாகுக!

உயிர் வெல்லமல்ல!

என்றைக்கு வேண்டுமானாலும், பெரியார் சொன் னதைப்போல, மனிதன் நோயால் சாகக்கூடாது; விபத்தால் சாகக்கூடாது. கொள்கைக்காக சாகவேண்டும். அதற்குத் தயாராகுங்கள்! தயாராகுங்கள் இளைஞர்களே!

அதுதான் கலைஞருடைய சிலையைப் பார்க்கும் பொழுது நீங்கள் பெறவேண்டிய உணர்வு என்று கூறி என்னுரையை முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 9.8.19

புதன், 27 பிப்ரவரி, 2019

திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவரும்  கவிஞர் அவர்களே!


நமது கழக துணைத் தலைவர் கவிஞர் அவர்கள்

தஞ்சை கழக மாநில மாநாட்டிற்கு மட்டுமல்ல;


எனக்குப் பிறகு திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவரும் அவரே!


தமிழர் தலைவர் ஆசிரியர் மாநாட்டில் பிரகடனம்




தஞ்சை, பிப்.23 இந்த மாநாட்டுத் தலைவராக இருக்கக்கூடிய நம்முடைய கழக துணைத் தலைவர் அருமை சகோதரர் கவிஞர் அவர்கள், இந்த மாநாட்டிற்கு மட்டுமல்ல, திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராகவும் அவர்தான் இருப்பார் என்பதை பிரகடனப்படுத்தினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

தஞ்சையில் இன்று (23.2.2019) தொடங்கப்பட்ட திராவிடர் கழக மாநில மாநாட்டின் நோக்கம்பற்றி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

வெற்றிகரமான ஏவுகணையாக...


இந்திய வரலாற்றின் மிக முக்கியமான ஒரு காலகட்டமான இந்த காலகட்டத்தில், அறிவு ஆசான் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கம், இன்றைக்கு தமிழ்நாட்டிலே பிறந்தாலும், அந்த சமூக விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட சுயமரியாதை மாமருந்து என்பது உலகம் முழுவதும் எங்கெங் கெல்லாம் நோய்கள் இருக்கின்றனவோ, எங்கெங்கெல்லாம் பிறவி நோய்கள் இருக்கின்றனவோ,  எங்கெங்கெல்லாம் மனித குல பேதம் இருக்கின்றனவோ,  எங்கெங்கெல்லாம் மனிதகுல சமத்துவத்திற்கு கேள்வி எழும்பியிருக்கின்றதோ, எங்கெங் கெல்லாம் பெண்ணடிமை நிலைக்கப்பட வேண்டும் என்று மதங்கள் ஆனாலும்,  அமைப்புகளானாலும் போராடுகின்ற நேரத்தில், அதனை எதிர்த்து, அதைத் தாக்குவதற்குரிய வெற்றிகரமான ஏவுகணையாக, இங்கே கருவியாக அமைத்துக் கொண்டிருக்கக்கூடிய இயக்கம் - இந்தத் தஞ்சை தரணியில், இரண்டு நாள் மாநாட்டினை தொடங்கியிருக்கின்ற நேரத்தில், குடும்பம் குடும்பமாய் வந்திருக்கின்ற, வந்துகொண்டிருக்கக்கூடிய அருமைக் கருஞ்சட்டைத் தோழர்களே, இயக்கப் பகுத்தறிவாளர்களே, நம்முடைய அன்பான கொள்கைக் குடும்பத்தினரே, ஆதரவாளர்களே, சான்றோர்களே, மாநாட்டின் தலைவர் மகத்தான செயல்வீரர், இந்த இயக்கத்தினுடைய தொடர்ச்சிக்கு அவர்தான் அடுத்த தலைவர் என்று நாங்கள் பிரகடனப்படுத்துவதைப்போல, இன்றைக்கு இந்த மாநாட்டிற்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

இந்த மாநாட்டினைத் திறந்து வைத்திருக்கக்கூடிய செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களே,

கழகக் கொடியேற்றி வைத்த கழகப் பொருளாளர் மானமிகு வீ.குமரேசன் அவர்களே,

இந்நிகழ்வில் பங்கேற்கக்கூடிய பெரியோர்களே, தந்தை பெரியார் படத்தினைத் திறந்து வைத்த திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர், அன்பிற்குரிய லட்சிய கொள்கையாளர், நெறியாளர் அன்பிற்குரிய தோழர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே,

மேடையில் இருக்கக்கூடிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள்  இராசகிரி கோ.தங்கராசு அவர்களே, பொத்தனூர் க.சண்முகம் அவர்களே மற்றும் இயக்கத் தோழர்களே, பொறுப்பாளர்களே, நண்பர்களே, ஊடகவியலாளர் களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களையெல்லாம் வாட்டிக் கொண்டிருக்கிறது; வதைத்துக் கொண்டிருக்கிறது!


என்னுடைய உரைக்கு முன்  ஒரு செய்தியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த மாநில மாநாட்டிற்கும், இன் றைக்குத் தஞ்சையில் நடைபெறக்கூடிய மாநில மாநாட்டிற்கும் இடையில், எத்தனையோ சோகமான, சொல்லொணாத ஈடுசெய்ய முடியாத இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அந்த இழப்புகளில், நாம் யாரை அழைத்தால், இந்த மாநாட்டிற்கு வந்து பெருமைப்பட தன்னுடைய முழக்கத்தினால், நம்மையெல்லாம் உற்சாகப்படுத்துவாரோ, அந்தத் தலைவர், வழிகாட்டக் கூடிய தலைவர், ஆட்சியை அமைக்கும்பொழுதெல்லாம் அண்ணா அவர்கள் வழியில், தந்தை பெரியாருக்கு அளிக்கப்பட்ட காணிக்கை என்று அழைக்கப்பட்ட அந்த வழியில், மிகத் தெளிவாக, ஆட்சியையே அய்யாவிற்குக் காணிக்கை என்றாலும், அய்யா எங்களுடைய ஆட்சியில் போராடக் கூடாது என்று சொல்லி, மிகப்பெரிய அளவிற்கு, தந்தை பெரியார் விரும்பிய ஜாதி ஒழிப்பினுடைய ஒரு கட்டத்தினை அண்ணா நிறைவேற்றினார். சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும்; சூத்திரனுக்குத் திருமண உரிமை இல்லை என்பதை அகற்றுவோம் என்பதை அண்ணா செய்தார். அதனுடைய  இன்னொரு பாகத்தை, சூத்திர இழிவு, பஞ்சம இழிவு போகவேண்டும் என்று அதனுடைய தொடர்ச்சியை செய்தவர்; மானமிகு சுயமரியாதைக்காரராக, என்றைக்கும் நம்முடைய நெஞ்சங்களில் நிலைத்திருக்கக் கூடியவரும், முதல்வராக பதவியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி இதே கொள்கையை முழங்கிய, மானமிகு சுயமரியாதைக்காரர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், இன்றைக்கு நம் நெஞ்சில் நிறைந்தவராக இருக்கிறார். அவர் இந்த மேடையில் இல்லையே என்கிற கலக்கம் எங்களையெல்லாம் வாட்டிக் கொண்டிருக்கிறது; வதைத்துக் கொண்டிருக்கிறது.

அதுபோலவே நண்பர்களே, ஏராளமான தந்தை பெரியார் அவர்களின் பாசறையில் இருந்த இயக்க மூத்த தோழர்கள், பணியாளர்கள் எண்ணற்றவர்களை நாம் இந்த இடைவெளியில் இழந்திருக்கின்றோம். அவர்களுக்கும் சரி, மானமிகு சுயமரியாதைக்காரராக, பாராட்டிப் போற்றி வந்த பழைமை ஸ்லோகம், ஈரோட்டு பூகம்பத்தால்

இடியுது பார்!

என்று கவிதை எழுதி தொடங்கிய அவர், முதலமைச்சரான பிறகும், தன்னை ஆளாக்கிய தலைவர், ஈரோட்டு ஆசான், தந்தை பெரியார் அவர்கள்  மறைந்த நேரத்தில், அவருக்கு அரசு மரியாதை கொடுக்கவேண்டும் என்று சொன்னார். அதனால், என்னுடைய ஆட்சி போனாலும் பரவாயில்லை, தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை செய்வதுதான் முக்கியம் என்றார். மரியாதை செய்த பிறகும், நான் அரசு மரியாதை கொடுத்து அவருடைய உடலடக்கத்தை செய்தேனே தவிர, அவருடைய நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றவில்லையே என்று ஆதங்கப்பட்டார். பிறகு மறுபடியும் ஆட்சிக்கு  வந்து, அந்த முள்ளை அகற்றிய மாபெரும் தலைவர்தான், புரட்சியாளர்தான் நம்முடைய பெருமைக்குரிய கலைஞர் அவர்களாவார்கள்.

தலைவணங்கி வீர வணக்கம்!




கலைஞர் அவர்களுடைய மறைவு, நம்முடைய எண்ணற்ற சுயமரியாதைச் சுடரொளிகள், கருப்பு மெழுகுவர்த்திகளின் மறைவு, அண்மையில் மதவெறியினால் ஏற்பட்ட தீவிரவாதத்திற்குப் பலியான, நம் நாட்டு எல்லையில் கடமையாற்றக் கூடிய இராணுவ வீரர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் உள்பட அவர்களின் தியாகத்திற்கு இந்த மாநாடு வீர வணக்கம் செலுத்துகிறது.

வீர வணக்கம் செலுத்துகின்ற வகையில், கலைஞருக்கு, நம்மோடு இருந்து உழைத்த கருப்பு மெழுகுவர்த்திகளுக்கு, நம்முடைய மறைந்த இராணுவ வீரர்களுக்கு அனைவரும் எழுந்து வீர வணக்கம் செலுத்துகிறது, தலை வணங்குகிறது.

(அனைவரும் எழுந்து நின்று வீர வணக்கம் செலுத்தினர்)

இந்த மாநாட்டிற்குக் கழகத் தோழர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறார்கள். குடும்பம் குடும்பமாய் சங்கமமாகி இருக்கிறார்கள். மாநாட்டில் மிக முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன.

விதை நெல்லைக் கொண்டு சமையல் செய்வதைப்போல...


எல்லாவற்றையும்விட, ஜனநாயகம் இந்த நாட்டில் தொடரவேண்டுமா? அல்லது பாசிசம் நிலைக்கவேண்டுமா?  இந்த நாட்டில் மக்களாட்சி தேவையா? அல்லது ஒரு பாசிச ஆட்சி தேவையா?

பசுவுக்கு இருக்கின்ற பாதுகாப்பு, இந்த நாட்டில் உழைக்கின்ற என்னுடைய சகேதாரனுக்கு, மக்களுக்குக் கிடையாது;, பெண்களுக்குக் கிடையாது;  அறிவார்ந்த மக்களுக்குக்கூட கிடையாது, அவர்களுக்கெல்லாம் புதுப்பெயர் வைத்து அர்பன் நக்சலைட் என்று பெயரிட்டு, அவர்கள் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதப் படையினால் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள். அல்லது குற்றவாளிகளாக நிறுத்தப்படுகிறார்கள் என்ற இந்தக் கொடுமையான, கருத்துரிமை இழந்த, பேச்சுரிமை பறிக்கப்பட்ட பல்வேறு கட்டங்களில், ஏழை, எளியவர்கள், விவசாயிகள், பாட்டாளி மக்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், அத்துணைத் தரப்பினரும் இந்த ஆட்சிக்கு விரோதமாக இருக்கிறார்கள். எல்லாவற்றையும்விட ரிசர்வ் வங்கி ஆளுநர்கூட இந்த ஆட்சியில், மோடி ஆட்சியில் இருக்க முடியாது என்று இரண்டு பேர் ஓடிப் போகிறார்கள்.   விதை நெல்லைக் கொண்டு சமையல் செய்வதைப்போல, இன்றைக்கு மூலதனத்திலிருந்து பணம் வாங்கக்கூடிய கட்டம் இருக்கிறது. இவைகளையெல்லாம் கொண்ட பாசிச ஆட்சி மத்தியில்.

நகைச்சுவையோடு பேசியவரே, நகைச்சுவையானார்!


இங்கே ஒரு அடிமை ஆட்சி; திடீரென்று ஓடிப்போனவர் சொன்னார், திராவிடக் கட்சிகளை, கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும், பார் உள்ளளவும், பார்'க்குக்கூடிய புதிய விளக்கம் எல்லாம் சொல்லி நகைச்சுவையோடு பேசினார்; இன்றைக்கு அவரே நகைச்சுவைக்கு ஆளாகிவிட்ட பரிதாபகரமான வெட்க கரமான இந்தக் காலகட்டத்தில், ஒன்று மிக முக்கியம்.

திராவிட இயக்கங்களோடு கூட்டு சேர மாட்டோம் என்று சொன்னார்; இன்றைக்கு அ.தி.முக..வோடு கூட்டு சேர்ந்ததின் மூலமாக, ஒரு நல்ல பிரகடனத்தை நாட்டிற்குச் சொல்லியிருக்கிறார். கேட்டிலும்கூட, தீமையிலும்கூட ஒரு நன்மை தெளிவாகத் தெரிகிறது. அதுதான், எது உண்மையான திராவிடர் இயக்கம் என்பதை நாட்டு மக்களுக்கு அதிகாரப் பூர்வமாக மோடியோடு, அங்கு தோடி ராகம் பாடிய காரணத்தினால், ஓடிய காரணத்தினால், மிகத் தெளிவாக இங்கே பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள்.

குறைந்தபட்சம் கூட்டணிக்கு என்ன பெயர் என்று முடிவெடுங்கள்!


இன்று காலையில் வெளிவந்த இந்து ஏட்டில் ஒரு செய்தி வந்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தார்; அய்ந்து இடங்கள்தான் என்பதற்கு ஆதங்கப்பட்டார். இரண்டு பேரையும் அழைத்து உத்தரவு போட்டிருக்கிறார். இவர்கள் கைகட்டிக் கொண்டு மதுரை விமான நிலையத்திற்குச் சென்றிருக்கிறார்கள்.

உங்களுடைய கூட்டணியை, மோடி தலைமையில் இருக் கின்ற கூட்டணி அல்ல என்றுதான் சொல்லவேண்டுமே தவிர, அ.தி.மு.க. கூட்டணி  அல்ல என்று  உத்தரவுப் போட்டிருக்கிறார். அதற்கு அவர்களும் கைகட்டி, வாய் பொத்தி வந்திருக்கிறார்கள். எனவே, அவர்களுக்குள்  முதலில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினை, குறைந்தபட்சம் கூட்டணிக்கு என்ன பெயர் என்று சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

எனவே, கொள்கைக் கூட்டணி இந்த மேடையில் இருக்கிறது; நாளைக்கும் வரவிருக்கிறது. கொள்கையற்றவர்கள் வேறு பக்கத்தில் இருக்கிறார்கள்.

திராவிடர் கழகம் யாரை அடையாளம் காட்டுகிறதோ...


தமிழர்களே, தமிழர்களே!  இந்த மாநாடு உங்களுக்குச் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், எது பலமான, எது வெற்றிகரமான கூட்டணி என்றால்,  திராவிடர் கழகம் யாரை அடையாளம் காட்டுகிறதோ,  எந்த அணியை அடையாளம் காட்டுகிறதோ, அந்த அணிதான் பிணி தீர்க்கும். அந்த அணிதான் மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும்.

காரணம், எங்களுக்கென்று எதுவும் கிடையாது; எங்களுக்கென்று ஆசாபாசங்கள் கிடையாது. திராவிடர் கழகத்தினுடைய பார்வை ஒரு விஞ்ஞானப் பார்வை; பெரியாரின் பார்வை. ஆகவே, அந்த விஞ்ஞானப் பார்வையோடுதான் இந்த மாநாடு தொடங்கியிருக்கிறது.

ஒரு விரல் புரட்சி!


எனவே, இந்த மாநாட்டிற்கு வந்திருப்பவர்கள் அத்துணை பேருக்கும் முக்கியமான கடமை என்னவென்றால், நாம் புரட்சி செய்யவேண்டும். அந்தப் புரட்சிக்கு ஆயுதம் தூக்கவேண்டிய அவசியமில்லை. பொத்தான் இருந்தால் பொத்தான், அல்லது வேறு முறை என்றால், அந்த முறையில், ஒரு விரல் புரட்சி என்பதன்மூலமாக, ஒரு அமைதிப் புரட்சியை செய்து, மதவெறி யையும், பாசிச வெறியையும் வெளியே அனுப்பவேண்டும்.

அவரே சொல்லியிருக்கிறார், எங்களுடைய கூட்டணியினுடைய பலன் லஞ்சத்தையும், அதேபோல, ஊழலையும் ஒழிக்கக்கூடிய கூட்டணி என்று சொல்கிறார்கள்.

ஒரு பக்கத்தில் கூட்டணி வைத்துக்கொண்டு, கொஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் நேற்றுகூட வருமான வரித்துறை சோதனைகள் நடைபெறுகின்றன.

இதுபோன்ற ஒரு அதிசயத்தை இந்திய நாடு எந்தக் கால கட்டத்திலும் பார்த்ததே கிடையாது. எனவேதான், கோலெடுத் தால், குரங்கு ஆடும் என்பதைப் போல, ஆட்டிப் படைக்கிறார்கள். இதை எச்சரிக்கையாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதை விளக்கி,

மாநாட்டிற்கு மட்டுமல்ல; கழகத்தின் அடுத்த தலைவராக...


சமூகநீதியைக் காப்பாற்ற

ஜாதியை ஒழிக்க

பெண்ணடிமையை நீக்க

உலகக் குடையின் கீழ் அனைவரையும் ஒன்றாக்க

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்

என்ற கருத்தைக் கொண்ட கொள்கை விளக்கத்தை பின்பு சொல்லவிருக்கின்றோம். ஆகவே, அதனைப் புரிந்து கொள்ளவேண்டும் என்று கேட்டு, இந்த மாநாட்டுத் தலைவராக இருக்கக்கூடிய நம்முடைய கழக துணைத் தலைவர் அருமை சகோதரர் கவிஞர் அவர்கள், இந்த மாநாட்டிற்கு மட்டுமல்ல, அடுத்த தலைவராகவும் அவர்தான் இருப்பார் என்பதை பிரகடனப்படுத்தி அமைகிறேன், நன்றி வணக்கம்.

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 23.2.19

சமுகநீதி மாநாட்டில் மாநாட்டின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் எச்சரிக்கை! எச்சரிக்கை!!

பாசிச பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுகநீதி - பெண்களுக்கான சொத்துரிமை எல்லாமே செத்தே போகும்

பொதுத் துறைகளை தனியார்த் துறைகளாக மாற்றப்படுவதன் சூழ்ச்சி என்ன?


சமுகநீதி மாநாட்டில் மாநாட்டின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் எச்சரிக்கை! எச்சரிக்கை!!


நமது சிறப்புச் செய்தியாளர்




தஞ்சை, பிப்.25  பாசிச பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருமேயா னால், மனுதர்மம்தான் இந்திய அரசமைப்புச் சட்டமாகும் என்று எச்சரித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

24.2.2019 ஞாயிறு முற்பகலில் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர், கல்வி வள்ளல் காமராசர், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் படங்கள் திறக்கப்பட்டன. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டு நிறைவரங்கத்தில் நிறைவுரை யாற்றுகையில், முத் தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களை நினைவு கூர்ந்து தன் உரையைத் தொடங்கினார்.

இதே மேடையில் எத்தனையோ மாநாடுகளிலும், எத்தனையோ நிகழ்ச்சிகளிலும் கலைஞரோடு அமர்ந்து கலந்துறவாடிய நினைவுகளையெல்லாம் நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்து தன் உரையைத் தொடங்கினார்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை இயற்றிய கலைஞர் அவர்களுக்கு இதே இடத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்தியபோது, தான் குறிப்பிட்ட ஒன்றையும், அதற்குக் கலைஞர் கலகலப்பாக அதனை இரசித்ததையும் எடுத்துக் கூறினார்.

பக்கத்தில் இருப்பது தஞ்சைப் பெருவுடையான் கோவில்! அதனைக் கட்டியவன் மாமன்னன் ராஜராஜசோழன். அந்த மாமன்னனின் சிலையை, அவனால் எழுப்பப்பட்ட அந்தக் கோவிலுக்குள் வைக்கவேண்டும் என்று முதலமைச்சர் கலைஞர் விரும்பினார்.

ஆனால், அந்தக் கோவிலோ மத்திய அரசின் தொல் பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருந்ததால், அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.

முதலமைச்சர் கலைஞர் என்ன செய்தார்? அதுதான் கலைஞர். மாமன்னன் சிலையைக் கோவிலுக்குள்ளேதானே வைக்க அனுமதியில்லை. இதோ அந்தக் கோவில் வளாகத்தில், கோவிலின் முகப்பிலேயே திறக்கிறேன் என்று கூறித் திறந்து வைத்தார் அல்லவா! இதனை, கலைஞருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் நினைவூட்டிப் பேசிய நான் ஒரு கருத்தைச் சொன்னேன்.

கோவில் கட்டிய தமிழனெல்லாம் வீதியில்தான் நிற்பான் - கோவில் கட்டுவதற்கு எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாதவன், உழைக்காதவன் எல்லாம் கோவிலுக்குள்தான் இருப்பான்'' என்று நான் அந்த விழா மேடையில் சொன்னதை கலைஞர் அவர்கள் வெகுவாக ரசித்தார் என்பதை மாநாட்டு மேடையில் ஆசிரியர் சொன்னபோது ஒரே கலகலப்பு!

இதேபோல எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் - கலைஞர் அவர்கள் இல்லாத நிலையில், அவர் படத்தினைத் திறந்து வைக்க நேர்ந்ததை மிகவும் உருக்கத்துடன் குறிப் பிட்டார் ஆசிரியர் அவர்கள்.

எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, பிற்படுத்தப்பட்டவர்களைப் பாதிக்கும் வகையில் அவரால் கொண்டு வரப்பட்ட ஆண்டு வருமானம் ஒன்பதாயிரம் ரூபாய்த் தொடர்பான சமூகநீதிக்கு எதிரான அந்த ஆணையை எரிக்கும் போராட்ட விளக்க மாநாடு இதே தஞ்சையில் இதே மேடையில்தான் நடைபெற்றது (17.9.1979).

அந்த ஆணையை எரித்து கோட்டைக்குச் சாம்பலை அனுப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் பின்னடைந்தோருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்னும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 93 ஆம் சட்டத் திருத்த நகலும் எரிக்கும் போராட்டத்தை அறிவிக்கும் நிலையும் ஏற்படும் என்று தமிழர் தலைவர் அறிவித்தபோது மக்கள் கடலின் ஆரவாரம் அடங்க வெகு நேரமாயிற்று.

சமுகநீதி மாநாட்டின் தலைவர் என்ற முறையில் திராவிடர் கழகத் தலைவர் அது தொடர்பான கருத்துகளையும், தகவல்களையும் எடுத்து வைத்தார்.

கருநாடக மாநிலத்தில் அமைக்கப்பட்ட ஹாவானூர் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையில் மிக முக்கியமாக இடம்பெற்றிருந்த கருத்தைக் குறிப்பிட்டார். இந் தியாவில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோருக்கான உரிமைகளும், நலன்களும் பாதுகாக்கப்படும் என்று ஜவகர்லால் நேரு அவர்கள் குறிப்பிட்டிருந்ததை (1946) அந்த அறிக்கையிலிருந்து எடுத்துக்காட்டினார்.

நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு தேவை என்று இம்மாநாட் டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டிய கழகத் தலைவர், உச்சநீதிமன்றத்தில் 31 நீதிபதிகள் இருக்கிறார்களே, இதில் ஒரே ஒரு நீதிபதியாகவாவது தாழ்த்தப்பட்டவர்  உண்டா? என்ற வினாவை எழுப்பியவர் - இந்தியாவிலேயே தாழ்த்தப்பட்டவர்களும், பெண்களும் அதிக எண்ணிக்கையில் நீதிபதிகள் இருப்பது சென்னை உயர்நீதிமன்றத்தில் தான், அதற்குக் காரணம் தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் தானே என்று சொன்னபொழுது பலத்த கரவொலி!

பொதுத் துறைகள் ஒழிக்கப்படுவதன் இரகசியம்


இன்றைக்கு மத்திய பி.ஜே.பி. ஆட்சியில் பொதுத் துறை நிறுவனங்கள் எல்லாம் வேக வேகமாக தனியார்த் துறைகளாக ஆக்கப்பட்டு வருகின்றன. கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கக் கைகள் ஓங்கிக் சொண்டுள்ளன.

தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு இல்லாத காரணத் தாலும், அதேநேரத்தில் பொதுத் துறைகளில் இட ஒதுக்கீடு இருப்பதாலுமே இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட இன்னொரு வகையில் இந்த வேலை நடக்கிறது என்ற ஒன்றை நுட்பமாகச் சுட்டிக்காட்டினார்.

பெண்களுக்கான சொத்துரிமைபற்றிக் கூறும் போது, 1929 ஆம் ஆண்டில் செங்கற்பட்டில் இதே மாதத்தில் கூட்டப் பெற்ற சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாட்டில் பெண் களுக்கான சொத்துரிமை குறித்துத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

அண்ணல் அம்பேத்கர் மத்திய சட்ட அமைச்சராக இருந்த நிலையில், அதற்கானதோர் சட்டத்தைக் கொண்டு வர முயற்சித்தபோது அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதுபோன்ற அடிப்படையான சட்டத்தைக் கூட நிறைவேற்ற முடியாத நிலையில், சட்ட அமைச்சராக இருந்து என்ன பயன் என்று பதவியைத் தூக்கியெறிந்து விட்டு வெளியேறியவர் அண்ணல் அம்பேத்கர் ஆவார். கொள்கையை நிறைவேற்றத் தான் பதவிகள் என்பதை இதன்மூலம் உணர்த்தியவர் அவர். இந்த உணர்வு யாருக்கு வரும்? என்று கேட்டபோது, மாநாட்டுப் பந்தலே நிசப்தம்!

1929 ஆம் ஆண்டிலேயே சுயமரியாதை இயக்கத்தின் தீர்மானமான பெண்களுக்கும் சொத்துரிமை என்ற தீர்மானம்.

(இன்னும் சொல்லப்போனால் சென்னையில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய சீர்திருத் தக்காரர்கள் மாநாட்டிலேயே இதுகுறித்த தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது). தி.மு.க. இடம்பெற்ற அய்க்கிய முற் போக்குக் கூட்டணி ஆட்சியிலே பெண்களுக்குச் சொத் துரிமைக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது (2008).

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் அதற்கு முன்னதாகவே இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது (1989). இதையெல்லாம் திராவிடர் கழகத் தலைவர் தலைமை உரையில் சுட்டிக்காட் டினார்.

இந்த நாட்டில் பெண்களைப் பார்த்த பார்வையை ஒரு பழமொழிமூலம் சுட்டிக்காட்டினார்.

ஆசைக்கு ஒரு பெண்ணும்; ஆஸ்திக்கு ஓர் ஆணும் என்பதுதான் அந்தப் பழமொழி. அது என்ன ஆசைக்கு? இது என்ன பார்வை? என்ற வினாவை எழுப்பிய திராவிடர் கழகத் தலைவர் பெண்களுக்குச் சொத்துரிமை குறித்து சங்கர மடம் - இந்து மதத்தின் பார்வை என்னவாக இருந்தது என்பதையும் எடுத்துக்காட்டத் தவறவில்லை.

சீனியர் சங்கராச்சாரியார் என்று சொல்லப்படும் காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரசுவதி இதுகுறித்துக் கூறியதை - சங்கராச்சாரியாரின் ஆத்ம நண்பர் - ஆலோசகர் அக்னி ஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியாரின் நூலிலிருந்து எடுத்துக்காட்டினார்.

ஸ்திரீகளுக்கு சொத்துரிமை வந்துவிட்டால், இஷ்டப்பட்ட வாளுடன் ஓடிவிடுவா'' என்று சொன்னவர் சங்கராச்சாரியார். இதுகுறித்துக் கழகத் தலைவர் தெரிவித்த கருத்து பெரும் அலையை ஏற்படுத்தியது.

இஷ்டப்பட்டவாளுடன் தானே போகிறார்? அதில் என்ன தப்பு?''

பெண்களுக்குச் சொத்துரிமை அளிக்கப்பட்டால், ஸ்திரீதர்மம் அழிந்து போகும் என்று கவலைப்படுகிறார் சங்கராச்சாரியார் - அதற்கு மனுதர்மத்திலிருந்து எடுத்துக் காட்டையும் எடுத்துக் கூறியிருக்கிறார்.

இந்த நேரத்தில் வாக்காளர்களில் சரி பகுதியாக இருக்கக் கூடிய பெண்கள் கருதவேண்டிய கருத்து ஒன்று உண்டு.

பி.ஜே.பி. மறுபடியும் ஆட்சிக்கு வருமேயானால், இந்த மனுதர்மம்தான் அரசமைப்புச் சட்டமாக மாற்றப்படும் - பெண்களுக்கான சொத்துரிமை சட்டம் என்பது வாபசாகும்.

இவர்களுக்கு வாக்களிக்கலாமா? என்று பெண்கள் சிந்திக்கவேண்டும்.

பெண்கள் வாக்களிக்காமல் இருப்பதோடு, அவர்களின் கடமை முடிந்துவிடாது. இந்தப் பாசிச இந்துத்துவா ஆட்சி மீண்டும் வராமல் தடுக்கும் வேலையிலும் பெண்கள் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்றும் மாநாட்டுத் தலைவர் கேட்டுக்கொண்டார்.

சமூகநீதி மாநாட்டின் தலைமை உரை - நிறைவுரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கவலையளிக்கக்கூடிய ஓர் உணர்வை சுட்டிக்காட்டினார். அது மிகவும் முக்கியமானது.

வாக்குரிமையை விலைக்கு விற்காதீர்!


தங்கள் வாக்குரிமையை விலைக்கு விற்கும் அந்த மனப்பான்மைதான் - கேவலம் பணத்துக்காக வாக்களிக்கும் புத்தி கூடவே கூடாது - உங்கள் உரிமையை விலைக்கு விற்கலாமா? என்று கேட்ட ஆசிரியர் வாக்குரிமையை விற்றால் நல்லாட்சி வளருமா? சமூகநீதியின் நிலை என்னாகும்? விலைக்கு வாங்கியவனிடம் உரிமையோடு கேட்க நம் கையில் எதுவும் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடாதா?

ரூபாய் 50-க்கும், ரூ.500-க்கும், ரூ.5000-த்திற்கும் வாக்குரிமையை விற்றால் சொத்துரிமை மட்டுமில்லாமல் எல்லா உரிமைகளும் செத்தே போகும் என்று எச்சரித்தார் தமிழர் தலைவர் (முழு உரை பின்னர்).

-  விடுதலை நாளேடு, 25.2.19

வியாழன், 29 நவம்பர், 2018

டிசம்பர் 2இல் சுயமரியாதை நாள் விடுதலை சந்தாக்கள் வழங்கும் விழா!

திமுக பொருளாளர் துரைமுருகன், எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், இரா.முத்தரசன் பங்கேற்பு


சென்னை, நவ.29 சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 86ஆம் பிறந்த நாள் 2.12.2018 அன்று காலை சுயமரியாதை நாள், விடுதலை நாளிதழ் சாந்தா வழங் கும் விழா நடைபெறுகிறது. விடுதலை நாளிதழின் ஆசிரியராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பணிபுரிந்து வருகின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக விடுதலை சந்தாக்களை கழகத் தோழர்கள் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் விழாவில் வழங்குகிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள கழக மாவட்டங்களிலிருந்தும், கருநாடகா, மராட் டியம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும், பன்னாட்டளவில் அமெரிக்காவிலிருந்தும் விடுதலை நாளிதழுக்கான சந்தாக்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் அளிக்கப்படுகின்றன.

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 2.12.2018 அன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரை கழக மாவட்டங்களின் சார்பில் விடுதலை சந்தா வழங்குதலும் சந்திப்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முற்பகல் 11 மணிக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலை மையில் தமிழர் தலைவர் 86ஆம் பிறந்த நாள் விழா நடைபெறுகிறது. அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, மண்டலச் செயலா ளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதே வன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், சோழிங்கநல் லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன் முன்னிலையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி வரவேற்புரை யாற்றுகிறார்.  கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அறிமுக வுரையாற்றுகிறார்.

திமுக பொருளாளர் க.துரைமுருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா ளர் இரா.முத்தரசன் ஆகியோர் விழாவில்  பங்கேற்று கருத்துரையாற்றுகிறார்கள்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரையாற்றுகிறார். கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், மாணவர் கழக மாநில செயலாளர்  ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்குகின்றனர்.

விழா முடிவில் கழகப் பொதுச்செயலா ளர் வீ.அன்புராஜ் நன்றியுரையாற்று கிறார்.

26.11.2018 அன்று நடைபெற்ற ஜாதி தீண்டாமை  ஒழிப்பு மாநாட்டில் வெளியி டப்பட்ட அறிவிப் பின்படி, 2.12.2018 அன்று நடை பெறுகின்ற விழாவில் விடுதலை சந் தாவுடன் கஜா புயல் நிவாரண உதவிகள் அளிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு எள்ளது.

நூல் வெளியீடு

2.12.2018 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளில் இயக்க வெளி யீடுகள் வெளியிடப்படுகின்றன.

டிசம்பர் 2 தமிழர் தலைவர் பிறந்த நாள் புதிய வெளியீடுகள்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய அய்யாவின் அடிச்சுவட்டில்... இயக்க வரலாறான தன் வரலாறு (பாகம் 6) ரூ.250

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள்  13ஆம் தொகுதி ரூ. 200

துரை.சக்கரவர்த்தி எழுதிய தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம் ரூ.40

வழக்குரைஞர் கி.மகேந்திரன் எழுதிய தமிழரின் பரிணாமம்  ரூ.40 ஆகிய நூல்கள் வெளியிடப்பட உள்ளன.

தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆண்டு மலர் 2018 ரூ.200

தொடர்புக்கு: 7639818254, 9626657609

பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம், குருதிக்கொடை

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையில் 2.12.2018 அன்று காலையில் குருதிக்கொடை சிறப்பு முகாம் மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்க ளின் 86ஆம் பிறந்த நாளை முன்னிட்டு காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குருதிக்கொடை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

2.12.2018 அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை  பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. பொது மருத்துவம், தாய் சேய் நலம், நீரிழிவு நோய், கண் மருத்துவம், காது மூக்கு  தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், சிறுநீரக மருத்துவம் உள்ளிட்ட பல்துறை களிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடை பெறுகிறது. இம்முகாமில் பரிசோதனை கள், மருத்துவ ஆலோசனைகள், சிகிச் சைகள் வழங்கப்படுகின்றன.

-  விடுதலை நாளேடு, 29.11.18