திங்கள், 31 மே, 2021

தோழர் வே.சிறீதர் அவர்களின் திருமணம் 21.4.1996


நமது ‘விடுதலை’ ஏட்டில் செய்தியாளராகப் பணிபுரிந்து வரும் தோழர் வே.சிறீதர் அவர்களின் திருமணம் 21.4.1996 அன்று நடைபெற்றது. வந்தவாசி எம்.எஸ்.வேணு கோபால் _ வே.சுசீலா ஆகியோரின் செல்வன் ‘விடுதலை’ செய்தியாளர் வே.சிறீதர், சென்னை டி.கிருட்டினன் _ ஜி.கஸ்தூரி ஆகியோரின் செல்வி கி.பிரியா ஆகியோரின் வாழ்க்கை ஒப்பந்த விழா 21.4.1996  அன்று சென்னை மயிலாப்பூர் இராஜலட்சுமி திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியிலும், மண விழாவிலும் ஏராளமான முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். பெரியார் திடலில் அமைந்துள்ள பல்வேறு அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்கள், கழகப் பொறுப்பாளர்கள் பெருமளவில் வந்து கலந்துகொண்டனர்.

வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பியவுடன் மணமக்கள் வே.சிறீதர் _ கி.பிரியா ஆகியோர் பெரியார் திடலுக்கு வந்து வாழ்த்துப் பெற்றனர்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 16-31.5.21

செவ்வாய், 18 மே, 2021

காணொலி வாயிலாக நடைபெற்ற சென்னை மண்டலக் கலந்துரையாடல் கூட்டம்:


 திமுக ஆட்சி அமைய 5000 கி.மீ. பிரச்சாரம் செய்த தமிழர் தலைவருக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டு!


சென்னை மே 18. சென்னை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது.

தலைமைச் செயற்குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை செயல் படுத்தும் நோக்கத்தில், 16-.05-.2021, ஞாயிறன்று காலை 11 மணியளவில் சென்னை மண்டலக் கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

தொடக்கத்தில்  திராவிட மாண வர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் கட வுள் மறுப்புக் கூறினார். கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள சென்னை மண்டலச் செயலாளர் தி.செ.கோபால் கலந்துரையாடல் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் நோக்கவுரை ஆற் றினார். அமைப்புச் செயலாளருடன் நிகழ்வை ஒருங்கிணைத்த பிரின்சு என்னாரெசு பெரியார் புதிய கோணத்தில் பிரச்சாரத்தை கொண்டு செல்லவேண்டிய தேவை குறித்து பேசியது அனைவரின் கவனத்தைக் கவர்ந்தது. அதையொட்டி பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

மாவட்டப் பொறுப்பாளர்களாக வடசென்னையின் செயலாளர் கணேசன், தென் சென்னையின் செய லாளர் பார்த்தசாரதி, சோழிங்க நல்லூர் தலைவர் வீரபத்ரன், ஆவடி செயலாளர் க.இளவரசு, தாம்பரம் தலைவர் முத்தையன், கும்மிடிப் பூண்டி செயலாளர் இரா.ரமேஷ். திருவொற்றியூர் தலைவர் எண்ணூர் மோகன் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளையும், ஆலோசனை களையும் பகிர்ந்து கொண்டனர்.

இளைஞரணிப் பொறுப்பாளர் களான மாநில துணைச் செயலாளர் பொழிசைக் கண்ணன், சென்னை மண்டலச் செயலாளர் இர.சிவசாமி, அமைப்பாளர் சோ.சுரேஷ், ஆவடி மாவட்டத்  தலைவர் வெ.கார் வேந்தன், செயலாளர் சோபன்பாபு, நகர தலைவர் தமிழ்மணி, பூவை மணிமாறன், சு.வெங்கடேசன், திரு நின்றவூர் இர.பிரேம்குமார், தாம்பரம் மாவட்டத் தலைவர் தே.சுரேஷ், செயலாளர் சட்டநாதன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் மணித்துரை, அமைப்பாளர் சிவ சீலன், வடசென்னை மாவட்டத் தலைவர் தளபதி பாண்டியன், செய லாளர் இந்தரஜித், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் ப.சக்கரவர்த்தி, திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் இர. சதீசு ஆகியோரும், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரி, திராவிட மாணவர் கழக,   சட் டக் கல்லூரி மாநில துணை அமைப் பாளர் பிரவீன் உள்ளிட்ட தோழர்கள் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

கலந்துரையாடலின் முடிவில் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மரபு வழியாகவும், இக்காலச் சூழலுக்கேற்பவும் பிரச் சாரத்தை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகளின் மனித விரோத முன்னெடுப்புகளின் காரணமாக, இளைய தலைமுறையினரிடம் தந்தை பெரியார் மிகவும் வேகமாக சென்று சேர்ந்து கொண் டிருக்கும் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளத் தவறக் கூடாது என்று குறிப்பிட்டார்.

முன்னதாக பெருந்தொற்றுக் காலத்தையும் துச்சமென மதித்து, தமிழக சட்டமன்ற தேர்தல் வெற் றிக்கு தமிழகம் எங்கும் சுற்றிச் சுழன்று சுமார் 5,000 கி.மீ மேலாகப் பயணம் செய்து தி.மு.க. தலைமையிலான கூட் டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நெஞ்சாரப் பாராட்டு கிறது என்றும், தி.மு.க கூட்டணியை வெற்றி பெறவைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்தும், ’உளமாற’ என்று பதவி யேற்றதற்கும், தகுதி வாய்ந்த அமைச் சரவை அமையக் காரணமாக இருந்த முதலமைச்சர் மானமிகு, மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தும், தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி சுவரெழுத்துப் பிரச்சாரம் செய்வ தென்றும், விடுதலையை ஜீபீயீ வடிவத் தில் அனுப்புகின்ற எண்ணிக்கையை விரிவுபடுத்த உறுதியேற்பதாகவும் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட 5 தீர்மானங்களை,   ஆவடி மாவட்டத்தின் அமைப்பாளர் உடுமலை வடிவேல் முன்மொழிந்தார். அனைவராலும் அய்ந்தும் ஒருமன தாக வழிமொழியப்பட்டது.

இறுதியில் தாம்பரம் மாவட்டத் தின் செயலாளர் கோ. நாத்திகன் நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.

திங்கள், 17 மே, 2021

கால்டுவெல் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்


கால்டுவெல் பிறந்தநாளன்று (7.5.2021) தென்சென்னை மாவட்டத்தலைவர் இரா.வில்வநாதன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

செவ்வாய், 11 மே, 2021

புரட்சிக் கவிஞர் படத்திற்கு மாலை அணிவிப்பு

புரட்சிக் கவிஞர் படத்திற்கு மாலை அணிவிப்பு

புரட்சி கவிஞரின் பிறந்தநாளை முன்னிட்டு தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் காமராஜர் சாலையில் உள்ள சிலைக்கு  மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் கோ.வி. ராகவன், பொறியாளர்.ஈ. குமார், சண்முகப்பிரியன், விசித்ரா, மணிதுரை, மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாகையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் படத்திற்கு பகுத்தறிவாளர்கழகம், திராவிடர்கழகம், பாவேந்தர் மன்றம் சார்பில் மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது

பெலா. சந்திரா மறைவு

மறைவு

பெரியார் பெருந்தொண்டர் பெலாக்குப்பம் முனுசாமி அவர்களின் வாழ்விணையர் சந்திரா அம்மையார் (வயது60) அவர்கள் நேற்று (05.05.2021) இரவு சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவர் கழகம் நடத்திய பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றவர்.

அவரது இறுதி ஊர்வலம் 6.5.2021 இன்று மாலை சூளைமேடு, சங்கராபுரம் இரண்டாம் தெருவிலிருந்து புறப்படுகிறது.

குறிப்பு: பெரியார் வலைக்காட்சியில் பணியாற்றிய தோழர் தமிழ்ச்செல்வி அவர்களின் தாயார் ஆவார்.

செல்: 08056119165

தோழர் தமிழ்ச்செல்வி - பழனிக்குமார்

(இணையர்கள்)



சூளைமேடு பெரியார் பெருந்தொண்டர் பெலா முனுசாமி அவர்களின் வாழ்விணையர் பெலா சந்திரா அவர்கள் இயக்க நிகழ்வு எவையாக இருப்பினும் தகவல் கிடைத்தவுடன் முதல் ஆளாக இருப்பார் அவர் மறைவுற்ற செய்தி அறிந்ததும் கழக பொதுச்செயலாளர் வீ அன்புராஜ் அவர்கள் இறங்கல் தெரிவித்து மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் வந்தோர்  மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் மாவட்ட துணை செயலாளர் கோ.வீ. ராகவன், ந. இராமச்சந்திரன், கலைமணி மற்றும் ஆனந்தன்

தலைமைச் செயற்குழு நடவடிக்கைகள், செயற்குழு தீர்மானம்


திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் காணொலி மூலமாக நேற்று (9.5.2021) காலை 10.30 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தொடங்கி நடைபெற்றது.

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் கடவுள் மறுப்பைக் கூறினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்கவுரையாற்றினார்.

தலைமை வகித்த கழகத் தலைவர் முன்னுரை வழங்கினார். தொடர்ந்து தத்தம் கருத்துகளை எடுத்துக் கூறினர் கழகப் பொறுப்பாளர்கள்.

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர்கள் வீ.அன்புராஜ், முனைவர் துரை.சந்திர சேகரன், தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர் செல்வம், மதுரை வே.செல்வம், தருமபுரி ஊமை ஜெயராமன், ஈரோடு த.சண்முகம், துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி, விவசாய தொழிலா ளர் அணி மாநில செயலாளர் இராயபுரம் கோபால், தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகர், மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரபாண்டி யன், புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, மகாராட்டிர மாநில திராவிடர் கழகத் தலைவர் மும்பை கணேசன், கருநாடக மாநில திரா விடர் கழகச் செயலாளர் முல்லைக்கோ, விழுப்புரம் மண்டல திராவிடர் கழகத் தலைவர் க.மு.தாஸ், தஞ்சை மண்டல கழக செயலாளர் குடந்தை குருசாமி, திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், கழக வழக்குரைஞர் அணித் தலைவர் த.வீரசேகரன், குமரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன், சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பேராசிரியர் பூசி.இளங்கோவன், வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆகியோர் உரையாற்றினர். சென்னை மண்டல கழக செயலாளர் தே.செ.கோபால் நன்றி கூறினார்.

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தீர்மானம்

 திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று (9.5.2021) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி  அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இரங்கல் தீர்மானம் உட்பட 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்தவேண்டும் என்பதிலே பார்ப்பனர்கள் கச்சை கட்டி நின்றனர். பார்ப்பனர் சங்கம் வெளிப்படையாகவே தீர்மானம் நிறைவேற்றியது. பா.ஜ.க. இடம் பெற்ற அ.இ.அ.தி.மு.க.  கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது.

"பொதுவாக நம் நாட்டில் நடைபெறுவது அரசியல் போராட்டம் அல்ல,  ஆரியர் - திராவிடர் போராட்டம்" என்பார் தந்தை பெரியார். மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இது புரியாது;  கடந்த கால வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு பார்த்தால்தான் இந்த உண்மை புரியும்.

நடந்து முடிந்த தேர்தலில் பார்ப்பன ஊடகங்களால்  நடத்தப்பட்ட ஒரு சார்புப் பிரச்சாரம் - மத்திய பார்ப்பன பா.ஜ.க. ஆட்சியின் தந்திரங்கள் இவற்றை எல்லாம் முறியடித்து,  தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி - தமிழ் மண் தந்தை பெரியார் மண்ணே- திராவிட மண்ணே என்பதை வரலாற்றுக்கு மீண்டும் ஒரு முறை முரசடித்துப் பிரகடனப்படுத்தி விட்டது.

திமுகவின் மூன்றாவது முதலமைச்சராக தளபதி மு.க. ஸ்டாலின்  பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஏராளமான சவால்கள் அவரை நோக்கித் தோள் தட்டி நிற்கின்றன. கஜானா காலி என்பதையும் கடந்து கிட்டத்தட்ட 6 லட்சம் கோடி ரூபாய் கடன் என்ற நிலைதான்.

சரியான திட்டமிடலின் அடிப்படையில் இவற்றையெல்லாம் புறங்கண்டு தி.மு.க. ஆட்சி மக்கள் நலன் சார்ந்து, சாதனை மிக்க ஆட்சியாகக் கம்பீரமாகப் பவனி வரும் என்பதில் அய்யமில்லை.

"இந்த ஆட்சியைக் காப்பாற்றுவதில் திராவிடர் கழகம் வாளும் கேடயமுமாக இருக்கும்" என்று திராவிடர் கழகத் தலைவர் நேற்றைய காணொலியில் கூறிய கருத்து மிகவும் முக்கியமானது.

எந்தவிதப் பிரதிப் பலனையும் எதிர்பார்க்காமல்  மக்கள் நலக் கண்ணோட்டத்தோடு திராவிடர் கழகம் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ளும்.

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் முக்கியமாக - தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த - அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதை நிறைவேற்றுவதற்கு திமுக ஆட்சி முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையிலும் இது கூறப்பட்டுள்ளது. தந்தைபெரியார் மறைந்தபோது - முத்தமிழ் அறிஞர் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுப்பது குறித்துக் கூறி இருக்கிறார். அந்த முள் என்பது இந்த அர்ச்சகர் பிரச்சினையை செயல்படுத்தாத நிலையைத்தான் குறிப்பிடும்.

203 பேர் பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலினை சந்தித்த நேரத்தில்கூட தமிழர் தலைவர் அதனை நினை வூட்டினார்.

இதனைச் செயல்படுத்துவதன் மூலம் ஒரு மாபெரும் சமூகப் புரட்சிக்கான புத்தொளியைக் காணப் போகிறோம். ஜாதி ஒழிப்புத் திசையில் இது மிகப் பெரிய பாய்ச்சலாக இருக்கப் போகிறது.

தாழ்த்தப்பட்டவர்களும் ஹிந்துக்கள்தான் என்று கூறும் பார்ப்பனர்கள், பா.ஜ.க. உள்ளிட்ட சங்பரிவார்கள் இந்தப் பிரச்சினையில் சரியாக நடந்து கொள்ளவில்லையானால், மிச்ச சொச்ச நடமாட்டமும் பூண்டற்றுப் போகும் என்பது மிகப் பெரிய உறுதியாகும்.

அண்டை மாநிலமான கேரளாவில் பெரிய அளவில் இந்தப் புரட்சி நடந்தேறியுள்ளது. தமிழ்நாட்டிலும் இருவர் அர்ச்சகராக்கப்பட்டுள்ளனர்.

முத்தமிழ் அறிஞர் நிறைவேற்றிய சட்டத்தை அவரது திருமகனார் முழு வெற்றியாக மலர்ச்சி அடையச் செய்வார் என்பதில் அய்யமில்லை.

இந்த 203 பேரையும் அர்ச்சகராக ஆக்குவதோடு, அர்ச்சகர் பயிற்சியையும் தொடர்ந்து நடத்தி - தமிழ்நாடு முழுவதும் உள்ள எல்லாக் கோயில்களிலும் இடஒதுக்கீட்டின் அடிப் படையில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படும் அந்த நடப்பைப் பார்த்திட நம் அகமும் புறமும் ஆவலோடு காத்துக் கொண்டு இருக்கிறது.

பார்ப்பனப் புரோகிதர் இல்லாமல் நடத்தப்படும் சுயமரியாதைத் திருமணத்திற்கு அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது சட்ட வடிவம் கொடுத்தார். அதுபோலவே இந்த அர்ச்சகர் சட்டமும் தமிழர்களின் தன்மான வரலாற்றில் முக்கிய பொன்னேடாக, கல்வெட்டாக அமையும். அந்த நாளை விரைவில் எதிர்ப்பார்ப்போம்!