கிருட்டிணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று (30.12.2018) ஒரு புதிய அத்தியாயத்தைப் பூக்கச் செய்தது. நந்தீஷ் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வாலிபரும், சுவாதி என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் காதலித்தார்களாம். ஏன் காதலிக்கக் கூடாதா? காதல் செய்வது பஞ்சமா பாதகமா?
நந்தீஷ் - சுவாதி நினைவரங்கில் திராவிடர் கழகத்தின் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு நேற்று பிற்பகல் 6 மணி அளவில் தொடங்கப்பட்டது.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் தொடக்கவுரையாற்றினார்.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மூன்று மொழி களில் பேசி கலகலப்பை ஏற்படுத்தினார்.
நான்கு வருணங்களை மனுதர்மம் கற்பித்தது. அதில் சூத்திரர் நாலாஞ் ஜாதி ஆக்கப்பட்டு குலத் தொழிலை செய்ய வேண்டும் என்று ஆக்கப்பட்டதால் சூத்திரர் களாகிய நாம் முன்னேற்றம் அடைய முடியவில்லை என்று குறிப்பிட்டார்.
பெரியார் ஒற்றை மனிதரல்ல; ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காக ஓயாது பாடுபட்டவர். சாதாரண மக்கள் மத்தியில் அவர்கள் மொழியில் பேசி வெற்றி பெற்றவர்.
ஓசூர் மாநாட்டில் பெருந்திரளான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர் (30.12.2018)
உலகப் பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்கள், படித்த பெரு மக்கள் பேசுவார்கள். ஆனால் உலகப் பல்கலைக் கழகம் எல்லாம் பள்ளி செல்லாத தந்தை பெரியாரைப் பற்றிப் பேசுகிறது.
ஜாதி ஒழிப்பு இயக்கத்தை கவுதமப் புத்தர் தொடங் கினார். தொடச்சியாக கபிலர் முதலானோர் ஜாதியைச் சாடியதுண்டு. அக்பர் அதற்காகப் பாடுபட்டார்.
காந்தியார் வருணா சிரமத்தில் நம்பிக்கை வைத்துக் கொண்டே தீண்டாமை ஒழிப்புக்காகப் பாடுபட்டார்; அதில் தோல்விதான் கண்டார். தந்தை பெரியார் அதில் மாறுபட்டார். ஜாதிக்கு மூல காரணங்களை எதிர்த்தார். கடவுள் மதங்களை அடித்து நொறுக்கினார்.
கொள்கையில் வீரியமாக இருந்த தந்தை பெரியார் தனிப்பட்ட முறையில் யாரையும் வெறுக்கவில்லை.
கல்வி வளர்ந்தால், விஞ்ஞானம் வளர்ந்தால் ஜாதி ஒழிந்து விடும் என்று நாங்கள் எண்ணினோம். ஆனால் ஒழியவில்லை.
டாக்டர் பட்டம் பெற்றவர்களே ஜாதி சங்கத்துக்குத் தலைமை தாங்குகிறார்கள்.
பெரியார் - அம்பேத்கர் - மார்க்ஸ் கொள்கை யுடையோர் இணைந்து ஜாதி ஒழிப்புச் சுடர் ஏந்துவோம்!
இங்கே ஒரு சிறுமி பேசினார் இதுபோல குழந்தைகள் கூட இயக்கப்படுத்துவது திராவிடர் கழகத்தில் மட்டுமே உண்டு என்றார் தோழர் மு. வீரபாண்டியன்.
தோழர் பி. சம்பத்
இந்தக் கேடு கெட்ட ஜாதி என்பது இந்தியாவைத் தவிர, இந்து மதத்தைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கிடையாது.
ஜாதி என்பது இந்தியாவுக்கே உரிய தனி சிறப்பாம், அதனை யாரும் ஒழிக்க முடியாதாம். இங்கே திராவிடர் கழகம், திமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் இணைந்து நிற்கிறோம். ஜாதியை ஒழிக்காமல் ஓய மாட்டோம். முன்பைவிட இப்பொழுது எங்களிடம் ஒற்றுமை அதிகரித்துள்ளது - வலிமை பெருகி வருகிறது.
ஜாதி என்பது ஆண்டவன் படைப்பாம் - தாழ்த்தப்பட்டோரை ஆண்டவன் படைக்கவில்லை என்றால் அவர்கள்தான் முறையாக பெற்றோர்களுக்குப் பிறந்தார்கள் என்று அர்த்தம்.
ஜாதிக்கும், பொருளாதாரத்துக்கும் தொடர்பு உண்டு. தாழ்த்தப்பட்டவர்களில் 90 விழுக்காட்டினர் விவசாயக் கூலிகள் - ஒரு துண்டு நிலம் அவர்களுக்குச் சொந்தம் கிடையாது.
பிற்படுத்தப்பட்டவர்களுள் 70 விழுக்காட்டினர் விவசாயக் கூலிகள் - ஜாதியும் - பொருளாதாரமும் பின்னிப் பிணைந்துள்ளன.
காலம் மாறவில்லை என்று கூற முடியாது - மாறிக் கொண்டுதான் வருகிறது. தாழ்த்தப்பட்டவர்களைத் தெருவில் நடக்கக் கூடாது என்றார்கள் - நடப்பேன் என்றான். செருப்பு அணியக் கூடாது என்றனர் - அணிவேன் என்றான். மாற்றம் வந்திருக்கின்றதா இல்லையா - இவ்வகையில் கம்யூனிஸ்டுத் தோழர் சீனிவாசராவ் பணி மகத்தானது.
குழந்தைத் திருமணத்தை பார்ப்பனர்கள் ஏன் வற்புறுத்துகிறார்கள் தெரியுமா? சிறு வயதில் திருமணம் நடத்துவதால் அங்கு ஜாதி கலப்புக்கு இடமில்லை, அதனால்தான் அந்தத் தந்திரம்.
2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மதத்தை முன்னிறுத்தும் சக்திகளைத் தூக்கி எறிவோம் என்று கூறினார் தோழர் பி. சம்பத்.
தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புப் போராட்டம் மகத்தானது. காந்தியாருக்கே உரிமையைப் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார். தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன் 1925ஆம் ஆண்டுக்கு முன் காந்தியார் சென்னையில் சீனிவாசய் யங்கார் வீட்டுக்குச் செல்லும் பொழுதெல்லாம் திண் ணையில் உட்கார வைக்கப்பட்டார்.
அதே காந்தியார் 1925ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனிவாசய்யங்காரின் வீட்டுக்குள்ளும் செல்லும் அளவுக்கு காந்தியாருக்கு உரிமை கிடைத்தது என்றால் இந்தக் கால கட்டம் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி பிரச்சாரம் செய்த கால கட்டம். அந்த வகையில் தந்தை பெரியார் தொண்டின் தாக்கம் காந்தியார் வரை சென்றிருக்கிறது.
இப்பொழுதெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கோயில் திருவிழாக்களைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர் ஏதோ அந்த விழாக்களை அவர்களே நடத்துவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
கிராமக் கோயில்களில் நமது இனத்தைச் சேர்ந்த பூசாரிகள் - பண்டாரத்தார் எனப்படுபவர்கள் பூஜை செய்து வந்தனர். சில நாள்களுக்குமுன் என் உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்குப் போனேன்.
அங்கிருந்த கோயில் ஒன்றில் பூசாரி சமஸ்கிருதத்தில் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு இருந்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரை விசாரித்தபோது ஓர் உண்மை தெரிந்தது. அந்தக் குல தெய்வக் கோயிலின் உரிமையாளர்கள் சமஸ்கிருதத்தில்தான் சொல்ல வேண்டும் என்று வற்புறுத்துகிறார்களாம். தங்களுக்கு சமஸ்கிருதம் உண்மையிலேயே தெரியாது என்றும் அந்தப் பூசாரி கூறினார். அப்பொழுது நான் அவரிடம் கூறினேன். சமஸ்கிருதத்தில் மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தால் கொஞ்ச நாள்கள் கழித்து சமஸ்கிருதத்தை சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை என்று கூறி உங்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அந்த இடத்தை எல்லாம் பார்ப்பனர்கள் பிடித்துக் கொண்டு விடுவார்கள் என்று எச்சரித்தேன்.
என்னைப் பொருத்த வரையில் எங்கு சென்றாலும் நான் இந்து அல்ல என்று வெளிப்படையாகச் சொல்லக் கூடியவன். வருணாசிரமத்தை ஏற்காத நான் எப்படி இந்து என்று என்னைச் சொல்லிக் கொள்ள முடியும்? என்று நியாயமான வினாவை எழுப்பினார் மதிமுக பொருளாளர்.
ஆ. இராசா
திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ. இராசா அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
ஒரு கால கட்டத்தில் ஜாதி சங்கங்கள் தங்கள் தங்கள் ஜாதிக்குக் கல்வி வாய்ப்பு வேண்டும் என்பதற்காக ஏற்பட்டன. ஆனால் இன்றோ ஜாதியை சொல்லியே அரசியல் நடத்த ஆரம்பித்துவிட்டனர்.
ஜாதி ஒரு முள் வேலியாக இருந்தால் வெட்டி எறிந்து விடலாம். ஆனால் அந்த ஜாதி என்பது மூளையில் அல்லவா இருக்கிறது என்றார் டாக்டர் அம்பேத்கர்.
ஜாதியை அவ்வளவு எளிதாக ஒழித்து விட முடியாது. ஜாதியை ஒழிக்க அரசியல் சட்டத்தையே எரித்த ஒரே தலைவர் தந்தைபெரியார்தான். 3000 பேர் சிறைபட்டனர். சிறையிலே மாண்டவர்களும் உண்டு. அங்கேயே புதைக்கப்பட்டனர். மணல்மேடு வெள்ளைச்சாமி, பட்டுக்கோட்டை இராமசாமி ஆகிய இரு தோழர்களின் உடல்களைப் போராடி - புதைக்கப்பட்ட பிணத்தை வெளியே எடுக்கச் செய்து திருச்சியிலே மிகப் பெரிய ஊர்வலத்தை நடத்தி அவர்களை அடக்கம் செய்தவர் அன்னை மணியம்மையார் (பலத்த கரஒலி).
இவ்வளவுப் பெரிய போராட்டத்தை நடத்திய பிறகும் இன்னும் சட்டத்தில் ஜாதி இருக்கிறது.
தந்தை பெரியார் பிறப்பால் பெரிய ஜாதி. ஆனால் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தார். பெரியார் பெரும் செல்வந்தார். ஆனால் அவர் ஏழை மக்களுக்காகப் பரிந்து பேசினார். பெரியார் ஆணாகப் பிறந்து பெண்களின் உரிமைக்காகப் பாடுபட்டார் என்று கூறிய மானமிகு ஆ. இராசா அவர்கள் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முக்கியமாகக் குறிப்பிட்டார்.
எல்லா ஜாதியினரும் ஒன்று சேர்ந்து வாழும் ஒரு நிலையை ஏற்படுத்தினார். பறையர்கள் என்று சொல்லப் படுபவர்கள் யார்? யார்? பிராமணர்கள்தான் உயர்ந்த வர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள் தான் பறையர்களாக ஆக்கப்பட்டனர்.
வெறும் கல்வி உத்தியோகங்களால் மட்டும் ஜாதி ஒழிந்து விடாது - சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் என்பதெல்லாம் சட்ட ரீதியாக இருக்க வேண்டும். இதற்கு எதிரானவையை சட்ட ரீதியாக அப்புறப்படுத்த வேண்டும்.
நமது நாட்டில் Division of Labour - தொழிலின் அடிப்படையில் பிரிவுகள் இல்லை. மாறாக Division of Labourers தொழிலாளர்கள் அடிப்படையில் பேதம் இருக்கிறது என்ற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கருத்தையும் எடுத்து வைத்தார் மானமிகு ஆ. இராசா அவர்கள்.
திராவிடர் கழகம் நடத்தும் இந்த மாநாடு மிக முக்கியமானது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இந்த அடிப்படைப் பணியைத் தொடர்ச்சியாக செய்து வருகிறார் என்று குறிப்பிட்டார்.
எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன்
2012இல் இளவரசன் - திவ்யா காதல் திருமணத்தை மய்யப்படுத்தி குறிப்பிட்ட நாளுக்குள் (தேதியையும் நிர்ணயித்து) பெண்ணை ஒப்படைக்காவிட்டால் விபரீதம் என்று அறிவித்து தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் வாழ்ந்த மூன்று கிராமங்களைக் கொளுத்திச் சாம்பலாக்கினார்கள்.
அந்தக் கால கட்டத்திலே தருமபுரியிலே ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்தியவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். திருமாவளவன் தான் இதற்கெல்லாம் காரணம் என்று என்மீது பழி சுமத்திய அந்தக் கால கட்டத்திலே தருமபுரி நகரிலே தீண்டாமை - ஜாதி ஒழிப்பு மாநாட்டை திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்து அதில் என்னையும் பங்கேற்கச் செய்தவர் நமது தமிழர் தலைவர் தான். தந்தை பெரியார் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்களோ அதையே செய்து வருபவர் நமது ஆசிரியர் அவர்கள்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு தீர்மானமும் முக்கியமானவை. ஒவ்வொரு தீர்மானம் குறித்தும் மணிக்கணக்கில் பேசலாம் - அவ்வளவு சிறப்பானவை.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப் படுகிறது என்று சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற தீர்மானம் மிகச் சிறப்பானது. அதற்காகப் பலத்த கரஒலி எழுப்பி ஆதரிக்கக் கேட்டுக் கொள்கிறேன் என்று எழுச்சித் தமிழர் சொன்ன போது கரஒலி அடங்க வெகு நேரமாயிற்று.
அதேபோல ஜாதி கலவரங்களை முன்கூட்டியே அறிய, கண்காணிக்க காவல்துறையில் தனிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் 30 வருடமாக நாங்களும் இந்தக் கருத்தைச் சொல்லி வருகிறோம்.
சிலை திருட்டைக் கண்டுபிடிக்கக் காவல்துறையில் தனிப் பிரிவு இருக்கிறது. நக்சல் பாரிகளைக் கண்காணிக்க தனிப் பிரிவு இருக்கிறது. தமிழ்த் தேசியம் பேசுகின்ற வர்களைக் கண்காணிக்கவும் தனிப் பிரிவு உள்ளது. அதே போல முக்கியமான இந்தஜாதி மோதல்களைத் தடுக்க - கண்காணிக்க ஏன் தனிப் பிரிவை ஏற்படுத்தக் கூடாது? இந்தத் தீர்மானத்தையும் முக்கியத்துவம் கொடுத்து நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று திருமா அவர்கள் கேட்டுக் கொண்டபோது மீண்டும் பலத்த கைதட்டல்! கைதட்டல்!!
திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் மானமிகு ஆ. இராசா அவர்கள் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் உருவாக்கிய பெரியார் நினைவு சமத்துவபுரம் பற்றிக் குறிப்பிட்டார். இந்தியாவிலேயே யாருக்கும் உதிக்காத இந்தத் திட்டம் கலைஞர் அவர்களின் மூளையில் மட்டும் உதித்தது என்றால், அதற்குக் காரணம் கலைஞர் தந்தை பெரியார் சீடர் (பலத்த கரஒலி).
பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் எந்தவித மதச் சின்னங்கள், வழிபாட்டுச் சின்னங்கள் இருக்கக் கூடாது என்று தெளிவாக ஆணையிருந்தும், பல இடங்களில், மதவழிபாட்டுக்கு வழி செய்து இருப்பது எப்படி? இதுகுறித்து இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தை மாநில அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் எழுச்சித் தமிழர்.
தலித்துகளைப் பற்றி இந்த நாட்டில் யார் கவலைப் பட்டார்கள்? அண்ணன் அம்பேத்கர், தந்தை பெரியார், ஜோதி பாபுலே, கலைஞர்தானே கவலைப்பட்டார்கள். தமிழர் தலைவர் ஆசிரியருக்குத்தானே அக்கறை இருக்கிறது.
தந்தை பெரியார் அவர்களால், அவர்கண்ட இயக்கத் தால் பிறந்ததுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. திராவிடர் கழகம் வேறு அல்ல விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேறல்ல. காலத்தில்தான் இடைவெளி!
மாநாட்டு மேடையில் கழக இளைஞர்கள் பலருக்கு ஜாதி மறுப்பு மணங்களை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்.
1957ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் தந்தை பெரியார் அவர்களின் ஆணை ஏற்று ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப்பிரிவைக் கொளுத்தி சிறையேகிய வீரர்கட்கும் - வீராங்கனைகளுக்கும் மாநாட்டு மேடையில் "ஜாதி ஒழிப்பு வீரர்" என்ற சான்றினையும் நினைவுப் பரிசையும் அளித்து சிறப்பு செய்தார்கள்.
அவ்வாறு நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாடுகளின் பட்டியல் இதோ
2) பெரியார் மாவட்டம் - சத்தியமங்கலம் - 3.2.95
3) சேலம் மாவட்டம் - மேச்சேரி - 4.2.95
4) தருமபுரி மாவட்டம் - கல்லாவி - 5.2.95
5) கட்டபொம்மன் மாவட்டம் - வீரவநல்லூர் - 11.2.95
6) காமராசர் மாவட்டம் - அருப்புக்கோட்டை - 12.2.95
7) விழுப்புரம் ராமசாமிப்படையாச்சி - விழுப்புரம் - 18.2.95
8) தஞ்சை மாவட்டம் - மன்னார்குடி - 20.2.95
9) ராமநாதபுரம் மாவட்டம் - ராமேசுவரம் - 25.2.95
10) பசும்பொன் மாவட்டம் - திருப்பத்தூர் - 26.2.95
11) வள்ளலார் மாவட்டம் - கடலூர் - 24.3.95
12) தென் செங்கை எம்.ஜி.ஆர். மாவட்டம் - உத்தரமேரூர் - 1.4.95
13) வட செங்கை எம்.ஜி.ஆர். மாவட்டம் - புழல் - 2.4.95
14) தாம்பரம் மாவட்டம் - இந்திரா நகர் (சென்னை) - 3.4.95
15) காயிதே மில்லத் மாவட்டம் - நன்னிலம் - 9.4.95
16) அரியலூர் மாவட்டம் - செந்துறை - 14.4.95
17) திருச்சி (மேற்கு) மாவட்டம் - குளித்தலை - 15.4.95
18) நீலமலை மாவட்டம் - உதகை - 5.5.95
19) தஞ்சை மாவட்டம் - ஊரணிபுரம் - 10.5.95
20) புதுகை மாவட்டம் - கந்தர்வகோட்டை - 11.5.95
21) அம்பேத்கர் மாவட்டம் - குடியேற்றம் - 21.5.95
22) வி.இரா.ப. மாவட்டம் - சங்கராபுரம் - 22.5.95
23) அண்ணா மாவட்டம் - சின்னாளப்பட்டி - 2.6.95
24) கோவை மாவட்டம் - பொள்ளாச்சி - 3.6.95
25) சம்புவராயர் மாவட்டம் - செய்யாறு - 15.7.95
26) மதுரை (மேற்கு) மாவட்டம் - கே.கே.பட்டி - 28.8.95
சுவாதியின் தந்தை தான் பெற்ற மகளையே கொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்? மன நோயாளியாக அவர் ஆக்கப்பட்டதற்குக் காரணம் சனாதனம்தானே! அந்த சனாதன தர்மம் இருக்கும் வரை - மூளையை இயக்கும் வரை இந்தப் படு கொலைகள் ஜாதிவெறித்தனங்கள் தாண்டவமாடிக் கொண்டுதானே இருக்கும். சனாதன தருமம் என்றாலும், இந்துத்துவா என்றாலும், ஆரியம் என்றாலும், ஆன்மிகம் என்று பெயர் சூட்டினாலும் எல்லாம் ஒன்றுதான்.
சனாதனம் கடவுளின் பெயரால் நிலை நாட்டப்படு கிறது. அதனால் தான் கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்ற கருத்தை முன்னெடுத்தார் தந்தை பெரியார். இதனை தந்தை பெரியார் எடுத்த அளவுக்கு வேறு யாரும் எடுக்கவில்லை.
சமூக சமத்துவத்துக்கும், உரிமைக்கும், ஏற்றத் தாழ்வு களுக்கும் காரணமாக இருக்கக் கூடிய சனாதனத்தை அழிப்பதுதான் நமது முதற்கொள்கை. ஜனவரி 23ஆம் தேதி திருச்சியிலே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற உள்ளது. அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்வார்கள். நமது தமிழர் தலைவரும் பங்கேற்பார் (பலத்த கரஒலி).
தமிழ்நாட்டில் இருப்பது போல வட மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுடன் இடதுசாரிகள் கூட இணைந்து செயலாற்றவில்லை. தமிழ்நாட்டில் இணைந்து செயலாற்றுகிறோம் என்றால் அதற்குக் காரணம் தந்தை பெரியார்தான் - தமிழர்தலைவர் ஆசிரியர்தான்.
அண்ணல் அம்பேத்கர் பிறந்த மகாராட்டிர மாநிலத்தில்கூட இந்த நிலை இல்லை. அம்பேத்கர் பெயரைச் சொல்லிக் கொண்டே சனாதன பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தந்தை பெரியார் மறைந்து 45 ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனாலும் பெரியார் உயிரோட்டமாக இருக்கிறார் என்றால் - அதற்குக் காரணம் நமது ஆசிரியர் அவர்கள்தான்.ஆசிரியர் அவர்கள் தரும் ஊக்கமும், ஆதரவும் நமக்குப் பேருதவியாக இருக்கிறது.
புத்தர் - அம்பேத்கர் - பெரியார் - ஆசிரியர் என்ற தொடர்ச்சிதான் முக்கியமானது. எல்லாவிதத் தடைகளையும், சனாதனத்தையும் கடுமையாக எதிர்க் கும் பேராசிரியராக, ஜாதி ஒழிப்புப் போராளியாக நம்மிடை வாழ்ந்து கொண்டிருப்பவர் நமது ஆசிரியர் என்று ஒவ்வொரு சொல்லும் தீப்பிழம்பாகத் தெறித்தது எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் உரையில்!
நிகழ்ச்சிகளை அமைப்புச் செயலாளர் ஊமை. செயராமன் தொகுத்து வழங்கினார். நிறைவாக
கா.மாணிக்கம் நன்றி கூறினார்.
- விடுதலை நாளேடு, 31.12.18