வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

மதுரையில் இளைஞர் அணி மாநாடும், சமூக நீதி மாநாடும்

20.8.1993 மதுரையில் இளைஞர் அணி மாநாடும், 21.8.1993இல் சமூக நீதி மாநாடும் சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் இளைஞர் அணி மாநாட்டிற்கு தோழர் கொளத்தூர் மணி தலைமையேற்று உரையாற்றினார். “ஜாதி மறுப்புத் திருமணங்கள் அதிகம் நடைபெற வேண்டும்; வடமொழிக் கலப்பற்ற தமிழில் பயன்படுத்தப்பட வேண்டும்; தொலைக்காட்சி, வானொலி, பார்ப்பன ஏடுகளில் வரும் கண்டனத்திற்குரிய செய்திகளுக்கு உடனுக்குடன் தோழர்கள் கடிதங்கள் அதிக அளவில் எழுத வேண்டும்’’ போன்ற கருத்துகளை வலியுறுத்திப் பேசியிருந்தார்.

மாநாட்டில் சிறப்புரையாற்றுகையில், “திராவிடர்களை இழிவுபடுத்தும் இந்து மதத்திற்கு நாங்கள் எதிர்ப்பாளர்கள் தான்.  இந்து மதம் தமிழர்களின் மதமல்ல; திராவிடர்களின் மதமல்ல; இந்து மதம் என்பது பார்ப்பனர்களுடைய மதம். இந்து என்பதே தமிழ்ச் சொல் அல்ல; உனக்கு தைரியமிருந்தால் வா! இதோ ஆதாரத்தை வைத்திருக்கிறேன்; சென்னை உயர்நீதிமன்றத்திலே ஜஸ்டீஸ் ராஜமன்னார் அளித்த தீர்ப்பு இருக்கிறது; அதில் ‘இந்து’ என்ற சொல் இந்தியாவிலே எந்த மொழியிலும் இருக்கிற சொல் அல்ல என்று எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. அதற்கு ஒரு குறிப்பிட்ட கொள்கை கிடையாது என்று ஜஸ்டீஸ் ராஜமன்னார் மிக ஆழமாக எழுதி இருக்கிறார். எனவே நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை; தமிழர்களை சம்பந்தப்படுத்துவது அல்ல; ஆகவேதான், அதைக் கடுமையாக எதிர்க்கிறோம்.

நான் தெளிவாகவே உங்கள் முன்னால் வைக்க விரும்புகிறேன்; அய்யா காலத்தில் அவர்கள் தொடுத்த போரை - நாம் முடித்தாக வேண்டும்; இனிமேலும் நம்முடைய சமுதாயத்தில் சூத்திரப் பட்டம் நமக்கு இருக்கக் கூடாது; எந்தக் கூட்டம் காலம் காலமாக நம்மை அழுத்தி - நம்மை “பார்ப்பானுடைய வேசி மக்களாக’’ ஆக்க நினைக்கிறதோ, அந்தக் கூட்டத்தின் ஆதிக்கத்துக்கு - அதன் கல்லறையின் கடைசிக் கல்லை நாம் கட்டியாக வேண்டும்.’’ போன்றகருத்துகளை எடுத்துக் கூறினேன்.

21.8.1993 இரண்டாம் நாள் சமூக நீதி மாநாட்டில் முதல் நிகழ்வாக புரபசர் சுப.பெரியார் பித்தன் அவர்களின் மந்திரமா தந்திரமா நிகழ்வு வயிற்றைக் கத்தியால் கிழித்து குடலை உறுவி எடுக்கும் காட்சிகள் மெய்சிலிர்க்கச் செய்து காட்டி “மந்திரமல்ல தந்திரமே’’ என்று விளக்கினார். மதுரை வழக்கறிஞர் மகேந்திரன் வரவேற்புரையாற்ற, கு.வெ.கி. ஆசான் அவர்கள் தலைமையில் “ஆரிய திராவிடப் போராட்டம்’’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. பேராசிரியர் நம் சீனிவாசன், வழக்கறிஞர் வை.பாண்டிவளவன், விடுதலை இராசேந்திரன், முனைவர் பு.இராசதுரை ஆகியோர் சமூக நீதி குறித்தும், பார்ப்பன ஆதிக்கம் குறித்தும் உரையாற்றினர்.

மதுரை மாநாட்டில் இளைஞரணி பேரணியை பார்வையிடும் ஆசிரியர் மற்றும் சிறப்பு விருந்தினர்

மாலை 3 மணிக்கு மதுரையே மணக்கும் அளவிற்கு மாபெரும் சமூக நீதி பேரணி ‘தினமணி’ திரையரங்கம் அருகிலிருந்து புறப்பட்டு மாநாட்டு மேடையைச் சென்று அடைந்தது. தந்தை பெரியாரின் படத்தைத் திறந்து வைத்து புலவர் கோ.இமயவரம்பன் உரையாற்றுகையில், தந்தை பெரியாருக்கும், அன்னை மணியம்மையாருக்கும் “குற்றேவல்” செய்வதற்காக என்னை ஒப்படைத்துக் கொண்டேன். தொடர்ந்து ஆசிரியர் அவர்களின் அரிய பணிக்கு உறுதுணையாக இருந்து வருகிறேன் என்று உணர்வு பொங்கக் குறிப்பிட்டார்.!

அதன்பின் மாநாட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அடுத்து துரைச் சக்கரவர்த்தி தலைமையில் “கழகச் செயற்பாடுகள் பணிகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

கருத்தரங்கை தொடர்ந்து மாநாட்டு மேடையில் மூன்று மணவிழாக்களை நான் நடத்தி வைத்தேன்.

கோ.இமயவரம்பன்

தென்னாற்காடு மாவட்டம் அனந்தபுரம் கிருட்டிணன்- - உண்ணாமலை ஆகியோர் மகள் சம்பத்ராணி, கொசப்பாளையம் பெரியசுவாமி- - வள்ளியம்மை ஆகியோரது மகன் பாரதி மணவிழாவினை முதலாவதாக நடத்தி வைத்தேன். தொடர்ந்து ஜோலார்பேட்டை துரைசாமி-- ஜீவராணி ஆகியோரது மகள் தமிழ்ச்செல்வி, ஜோலார்பேட்டை தங்கவேலு- - கண்ணம்மாள் ஆகியோரது மகன் சவுந்தரபாண்டியன் மணவிழாவினை நடத்தி வைத்தேன். மூன்றாவது திருமணமாக பழனி முனியப்பன்- - முத்துலெட்சுமி ஆகியோரது மகள் செல்வி, கள்ளிக்குடி ஆறுமுகம்- - நாகம்மாள் ஆகயோர் மகன் சேகர் மணவிழாவினை தலைமையேற்று நடத்தி வைத்தேன்.

திருமணங்களுக்குப்பின் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் நிகழ்வும், நமது பண்பாட்டை மீட்டெடுக்கும் நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.

மாநாட்டில் மத்திய சமூகத்துறை அமைச்சர் சீதாராம் கேசரி பேசுகையில் முதலில் “நான் தந்தை பெரியார் பற்றாளன், சமூகநீதி கொள்கையில் அவருடைய கொள்கைகளை பின்பற்றுபவன்’’ என்று நெகிழ்வுடன் தெரிவித்தார்.

சீதாராம் கேசரி

இறுதியில், நான் மாநாட்டு நிறைவுரை ஆற்றினேன் அதில், “திராவிடர் கழகத்தை மிரட்டும் பார்ப்பன மதவெறி சக்திகளுக்கு இளைஞரணி மாநாட்டில் கடும் எச்சரிக்கை விடுத்தேன். திராவிடர் கழகத்திடம் மீறி வாலாட்டினால் அதை சந்திக்க தயார். நாங்கள் வன்முறைக்கு போகமாட்டோம். ஆனால் எங்களை தாக்க வந்தால், எதிரியை கொல்லும் வேளையில் சாவோம் என்று தந்தை பெரியார் கூறிச் சென்ற கருத்தை அப்படியே நிறைவேற்றுவோம்.’’ என்று குறிப்பிட்டேன்.

மாநாட்டில் மலேசிய திராவிடர் கழக தேசிய தலைவர் திருச்சுடர் இராமசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், மே 16 ஜூன் - 15 .2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக