வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

திராவிடர் கழக பொன்விழா மாநாடு

29.9.1994 சமூகநீதிக் காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் திராவிடர் கழகம் நடத்தும் சமூகநீதி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும், வேறு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் டில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவரை விமான நிலையத்தில் பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்றோம். அவர் என்னை கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருக்குச் சால்வை அணிவித்து சிறப்புச் செய்தேன். விமான நிலையத்தில் ஜனதா தள தலைவர் ஜி.ஏ. வடிவேலு, இரா. செழியன், தி.மு.க. பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி, முரசொலிமாறன், முகமது சகி, ஆலடி அருணா ஆகியோரும் அவருக்குச் சால்வை அணிவித்து வரவேற்றனர். வி.பி.சிங்கும் நானும் ஒரே காரில் விருந்தினர் மாளிகைக்குச் சென்றோம். வழிநெடுக வி.பி.சிங் அவர்களை வரவேற்று எழுதிய சுவரெழுத்துகளையும், பதாகைகளையும் பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைந்தார். சிறிது நேரம் கழகத் தோழர்களோடு உரையாடிவிட்டுச் சென்றார்.

30.9.1994 திராவிடர் கழகப் பொன்விழா மாநாடு இரண்டு நாள்கள் திட்டமிடப்பட்டு மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. சென்னை பெரியார் திடலில் காலை 9:00 மணியளவில் புலவர் கோ. இமயவரம்பன் நினைவரங்கத்தில் கலை நிகழ்ச்சிகளோடு மாநாடு துவங்கியது. தந்தை பெரியார் சிலைக்கு கழக மத்திய நிருவாகக் குழு தலைவர் சிதம்பரம் கு. கிருட்டினசாமி மாலை அணிவித்தார். கழக மகளிரணி செயலாளர் க. பார்வதி திராவிடர் கழகக் கொடியை ஏற்றிவைத்தார். தோழர்கள் தந்தை பெரியார் வாழ்க! அன்னை மணியம்மையார் வாழ்க! பொன் விழா காணும் திராவிடர் கழகம் வாழ்க! என்ற ஒலி முழக்கங்கள் விண்ணதிர ஒலிக்கச் செய்தனர். கழகப் பொருளாளர் கா.மா. குப்புசாமி அவர்கள் வரவேற்புரையாற்றினார். கழகத் தோழர்களின் உரை வீச்சுடன் கருத்தரங்கம், பட்டிமன்றம், உரையரங்கம், கலைநிகழ்ச்சிகள் சிறப்புற நடத்தப்பட்டன. துணைப் பொதுச் செயலாளர் கோ. சாமிதுரை தலைமையில் தீர்மான அரங்கம் நடத்தப்பட்டு 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திராவிடர் கழகப் பொன்விழா மாநாட்டில் கலந்து கொண்டவர்களுடன் கைகளை உயர்த்தி  மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஆசிரியர்

மாலை கழகப் பொன்விழா மாநாட்டில் தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து இந்திய சமூகநீதி மய்யத்தின் தலைவர் சந்திரஜித் யாதவ் உரையாற்றுகையில்,  “சமுதாயத்தில் உள்ள எல்லா சுரண்டல்களையும் எதிர்த்துப் போராடக் கூடிய இயக்கம் பெரியார் இயக்கம். இன்றைக்கு எத்தனையோ அமைப்புகள் 60-ஆம் ஆண்டு, 70-ஆம் ஆண்டு என்று விழா கொண்டாடுகின்றனர். அதனால் அந்த அமைப்புகள் எல்லாம் சாதிக்காததைச் செய்து முடித்து, பொன் விழாவைக் கொண்டாடுகிற திராவிடர் கழகம் ஏராளமான நன்மைகளை மக்களுக்கு அளித்துள்ளது. இந்தப் பொன்விழா மாநாட்டில் ஒன்றைத் தெரிவித்து கொள்கிறேன் உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில் முலாயம் சிங் யாதவ் அவர்களின் ஒத்துழைப்புடன் தந்தை பெரியார் சிலையை விரைவில் நிறுவும் முயற்சியில் நான் ஈடுபடுவேன். தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரசிம்மராவ் ஆகியோர் 69 சதவிகிதத்தை ஏற்றுக் கொண்டனர் என்றால் உங்கள் தலைவர் வீரமணி அவர்களின் முயற்சியால்தான் என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.

தந்தை பெரியார் சமுக காப்பணி வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்கும் ஆசிரியர்

மதவெறிகொண்ட வகுப்புவாத சக்திகள், இந்தியாவைப் பிளவுபடுத்தும் சக்திகள்- - அவற்றை முறியடிக்கும் வரை நமக்கு ஓய்வே இல்லை. தந்தை பெரியார் அவர்கள் கண்ட ஒரு புரட்சிகர மாறுதல்களை நாம் உண்டாக்கும் வரை நம் பணி முடியாது தொடர வேண்டும்“ என கழகத்தின் சாதனைகளைப் பாராட்டி, பல கருத்துகளை எடுத்துரைத்தார்.

திராவிடர் கழகப் பொன்விழா மாநாட்டில்  கலந்து கொண்ட சந்திரஜித் யாதவ் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கும் ஆசிரியர்

மாநாட்டு நிகழ்வில் பங்கேற்ற செனல் இடமருகு - டில்லி, முருகு சீனிவாசன்- - சிங்கப்பூர், கே.ஆர். இராமசாமி-- - மலேசியா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். முதல்நாள் நிகழ்வில் நான் உரையாற்றுகையில்,

“திராவிடர் கழகம் வன்முறையை விரும்பாத இயக்கம், ரகசியம் என்பது இல்லாத இயக்கம், பயங்கரவாதம் என்றோ, தீவிரவாதம் என்றோ இளைஞர்களைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிற இயக்கம் அல்ல இந்த இயக்கம். நாம் 21 ஆம் நூற்றாண்டை நோக்கிப் போகப் போகிறோம்; போய்க் கொண்டிருக்கிறோம். 21 ஆம் நூற்றாண்டு வேறு யாருடைய நூற்றாண்டும் கிடையாது; தந்தை பெரியாருடைய நூற்றாண்டு; திராவிடர் கழகத்தினுடைய நூற்றாண்டு! சமூகநீதியின் நூற்றாண்டுக்கு நடைப்பயணத்தைத் துவக்கிவிட்டோம்; நடப்போம், கடப்போம்; நம்முடைய பணிகளை முடிப்போம், முடிப்போம்!” என்று உணர்ச்சி பொங்க பல கருத்துகளை விளக்கிப் பேசினேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 16-31.10.20

 அடுத்து தமிழனாகப் பிறக்கவே விரும்புகிறேன் - வி.பி.சிங்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக