தியாகமே உருவான திராவிடத் தாய் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா.
அவர்களின் 42ஆம் ஆண்டு நினைவு நாளில் சென்னைப் பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் (16.3.2020 மாலை) சுயமரியாதைச் சுடரொளி பெங்களூரு சொர்ணா அரங்கநாதன் நினைவரங்கில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெகு நேர்த்தியாக நடைபெற்றது. பிற்பகல் முதலே தமிழ்நாட்டின் பல்வேறு
மாவட்டங்களிலிருந்தும் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக வந்து குவிந்தனர்.
பிற்பகல் 5 மணியளவில் மகளிர் சிறப்புக் கருத்தரங்கம் கொள்கைப் பரப்புச் செயலாளர் அ.அருள்மொழி தலைமையில் தொடங்கியது. திராவிடர் கழக மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி அனைவரையும் வரவேற்று உரையாற்றினர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பெண்களுக்கு முக்கியத்துவம் கிடையாது; ஆனால் தந்தை பெரியார் கண்ட இயக்கத்துக்கு ஒரு பெண்ணே தலைமை தாங்கும் நிலை உண்டு; அதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் அன்னை மணியம்மையார் என்று வரவேற்புரையில் அவர் குறிப்பிட்டார்.
“திராவிட இயக்க வீராங்கனைகள்” எனும் பொதுத் தலைப்பின் கீழ் பல்வேறு பொருள்கள் குறித்து திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறையினர் சிறப்பாகக் கருத்து விளக்கவுரை நிகழ்த்தினர்.
வழக்குரைஞர் ம.வீ. அருள்மொழி “இந்தி எதிர்ப்புக் களத்தில்..” எனும் தலைப்பின்கீழ் உரையாற்றும்போது - இந்தி எதிர்ப்பு இல்லையேல் திராவிட இயக்க வரலாறே முழுமைபெறாது என்று குறிப்பிட்டார்.
1948இல் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதல் அமைச்சராக இருந்தபோது, கல்வி அமைச்சராக அவினாசிலிங்கம் செட்டியார் இருந்தார். அப்பொழுது நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் குடந்தையில் 144 தடையை மீறி அன்னை மணியம்மையார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதையும் நினைவூட்டினார்.
‘பெண்ணுரிமைக் களத்தில்...’ எனும் தலைப்பில் ஓவியா அன்புமொழி உரையாற்றினார். மூவாலூர் இராமாமிர்தம் அவர்கள் தான் பிறந்த சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் தேவதாசிகளாக ஆக்கப்படும் கொடுமையை, இழி நிலையை எதிர்த்துப் போராடிய தீரத்தை எடுத்துச் சொன்னார். சனாதன வாதிகளின் எதிர்ப்பை எப்படியெல்லாம் எதிர் கொண்டார் என்பதையும், அவர் கூந்தலை அறுக்கும் அளவுக்குக் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டதையெல்லாம் ஆவேசமாக எடுத்துக் கூறினார்.
கருத்தரங்கிற்கு தலைமையேற்று உரையாற்றும் அ.அருள்மொழி
சுயமரியாதை இயக்கக் கூட்டங்களுக்கு பெண்கள் ஏன் வருவதில்லை என்ற கேள்வியை அவர் எழுப்பிய பொழுது, அங்கு ஆண்கள் இருக்கிறார்கள் என்று அச்சம் தெரிவித்த பெண்களிடையே, இந்திரா பாலசுப்பிரமணியம் அளித்த பதிலை அழகாக எடுத்துக் கூறினார். கோயில்களுக்குக் கூட்டம் கூட்டமாகப் போவதில் பெண்கள்தான் அதிகம். அங்கு செல் வதைவிட அதிகப் பாதுகாப்பு சுயமரியாதை கூட்டங்களில் பெண்களுக்குக் கிடைக்கும் என்று இந்திரா பாலசுப்பிரமணியம் கூறிய கருத்தைக் கணீர்! கணீர்! என்று எடுத்துரைத்தார்.
‘ஜாதி ஒழிப்புக் களத்தில்...’ எனும் தலைப்பில் திராவிடர் கழக மாநில மகளிர்ப் பாசறை அமைப்பாளர் - சட்டக் கல்லூரி மாணவி சே.மெ. மதிவதனி எடுத்துக்காட்டுகளுடன் தன் கருத்தைப் பதிவு செய்தார்.
ஒரு பெண் எந்த ஆணோடு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதைவிட எந்த ஜாதியோடு அது இருக்க வேண்டும் என்பதுதான் இந்தச் சமுதாயத்தில் முக்கியமாக இருப்பதை எடுத்த எடுப்பிலேயே எடுத்துக் கூறிக் கை தட்டலைப் பெற்றார்.
ஜாதி ஒழிப்புக் களத்தில் திராவிட மகளிர் எப்படியெல்லாம் களமாடினார்கள் என்பதை எடுத்துக் காட்டினார்.
சட்ட எரிப்புப் போராட்டத்தில் இடையாற்று மங்கலத்தைச் சேர்ந்த தோழர் நாகமுத்து 53 ஆம் வயதில் மரணமடைந்தார். அவர் வீட்டுக்குச் சென்று, அன்னை மணியம்மையார், ஆசிரியர் அவர்களும் இறந்த தோழர் நாகமுத்துவின் மனைவி சீனியம்மாள் அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அந்த நேரத்தில் வீராங்கனை சீனியம்மாள் கூறியது - புறுநானூற்று காட்சியை நினைவூட் டியது. “அம்மா கவலைப்படாதீர்கள். ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் எனது கணவனைப் பலி கொடுத்துள்ளேன். நான் கலங்கவில்லை. என் மகன் இருக்கிறான், அவனுக்கு வயது 18, அய்யா அறிவிக்கும் அடுத்தப் போராட்டத்துக்கு அவனை அனுப்பி வைத்து, நானும் வந்து பலியாகத் தயாராக இருக்கிறேன் என்றாரே இந்தக் கழக வீராங்கனைக்கு ஈடு இணை யார்?” என்று எக்காளமிட்டார்.
‘சுயமரியாதை களத்தில்...’ எனும் தலைப்பில் திராவிடர் கழக மகளிர் பாசறை செயலர் வழக் குரைஞர் பா. மணியம்மை அனல் தெறிக்கப் பேசினார்.
“பொது வெளியில் பொது மேடையில் தோழர் ஈ.வெ.ரா. என்று தமது துணைவரை அன்னை நாகம்மையார் அழைத்தார் - இந்தப் புதுமையை, புரட்சியை செய்தது திராவிடர் இயக்கம்” என்றார்.
“சுயமரியாதைக் களத்தில்...” எனும் தலைப்பில் பேராசிரியர் மு.சு. கண்மணி உரையாற்றினார்.
இதழின் ஆசிரியராக, பதிப்பாளராக, எழுத் தாளராக பெண்கள் மிளிர்ந்தனர் என்றால் அதற்கான வாய்ப்பை யும், தொடக்கத்தையும் கொடுத்தது சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம் என்று எடுத்துக் கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப் பினராக இருந்தவர் அன்னை நாகம்மையார் என்ற வரலாற்றுக் குறிப்புகளையெல்லாம் பேராசிரியர் கண்மணி எடுத்துக் கூறினார்.
அன்னை மணியம்மையாரை ‘பெண் தலைவர்’ என்று கூறக் கூடாது. பொதுவாக ‘தலைவர்’ என்றே கூற வேண்டும். தந்தை பெரியாருக்கு அன்னை மணியம்மையார் செய்த தொண்டு என்பதன் பொருள் சமுதாயத்துக்கு அவர் ஆற்றிய தொண்டராகவே கருத வேண்டும் என்ற அருமையான கருத்தினைப் பதிவு செய்தார்.
இன்றைக்கு நாம் நின்று பேசக் கூடிய இந்த மேடையை நினைத்துப் பார்க்கிறோம். எவ்வளவுப் பெரிய வரலாற்றையெல்லாம் அரங்கேற்றியது இந்த மேடை. குறிப்பாக - சிறப்பாக இந்த மேடையிலேதான் “இராவண லீலா”வின் போர்ப் பிரகடனத்தைச் செய்ததோடு இராமன் - இலட்சுமணன், சீதை உருவங்களை எரித்துக் காட்டினார். இராமாயணத்தை சந்தி சிரிக்க வைத்ததும் இந்த மேடைதான்” என்று சிறப்பாக எடுத்துக் கூறினார்.
கருத்தரங்கத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி தனது உரையில் -”வரலாற்றில் பேசப் படும் தலைவர்கள் வாழ்ந்த காலத் தில் அவமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தகையவர் களுள் அன்னை மணியம்மையார் குறிப்பிடத் தக்கவர் ஆவார்.
நெருக்கடி நிலை காலத்தில் சுவரண்சிங் தலைமையில் சட்டத் திருத்தத்திற்கான பல்வேறு பரிந்துரைகள் அரசிடம் அளிக்கப்பட்டன. அந்த நேரத்தில் அன்னை மணியம்மையார் ‘விடுதலை’யில் ஓர் அறிக்கை மூலம் (17.8.1976) தெரிவித்த கருத்துகள் முக்கியமானவை. அன்னையாரின் கூர்மையான சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும்.
“அரசியல் சட்ட திருத்தமும் நமது நிலையும்” எனும் தலைப்பில் முக்கியமாக அம்மா அவர்கள் குறிப்பிட்டிருப்பது:
அரசியல் சட்டத்தின் பீடிகையில் (Preamble- TM) Socialist, Secular State என்ற இரண்டு சொற்களை லட்சியச் சொற்களாகச் சேர்ப்பதை நாம் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். அதற்கு உண்மையான பொருள் ஆக்கமும் தரும் வகையில் சோவியத் அரசியல் சட்டத்தில் மத எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு (Anti Religious Propaganda) உரிமை இருப்பது போல் நமது அரசியல் சட்டத்திலும் உரிமை இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதோடு மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரத்திற்கும் (Anti Superstition) சட்ட ரீதியான பாதுகாப்பு தரப்படும் வகையில் அடிப்படை உரிமைகள் பகுதி திருத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகிறோம்.
தந்தை பெரியார் அவர்களால் கேட்கப்பட்டு, தமிழக சட்டப் பேரவையால் நிறைவேற்றப்பட்டு முடக்கப்பட்டுள்ள அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் தீர்மானத்தை நிறை வேற்றும் வகையில் அரசியல் சாசன 25, 26 பிரிவுகளுக்குத் திருத்தம் கொண்டு வந்து ஜாதி, ஒழிய வகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
சாதியை ஒழிக்க சட்டம் தேவை!
திரு. சஞ்சய் காந்தி அவர்களும், இளைஞர் களுக்கு கொடுத்துள்ள திட்டங்களில் அய்ந்தாவது அம்சமாக ஜாதி ஒழிப்பைக் குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. தீண்டாமை எந்த ரூபத்திலும் தலை காட்டக் கூடாது என்பது விதி. ஆனால் நடைமுறையில் அது ஒழிந்தபாடில்லை. தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதற்குப் பதிலாக தீண்டாமைக்கு மூலகாரணமான “ஜாதி ஒழிக்கப்பட்டு விட்டது; அதை எந்த வடிவிலும் நடைமுறைக்குக் கொண்டு வருவதை சட்டப்படி தடை செய்யப்படுகிறது” எனும் திருத்தம் கொண்டு வரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
சட்டம் வந்தால் மட்டும் போதாது; எழுத்துக்கு எழுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்
“சோஷலிச, மதச் சார்பற்ற, ஜனநாயக இந் தியக் குடிஅரசு’ என பெயர் மாற்றம் செய்வதை வரவேற்பதோடு, அதை ஒவ்வொரு எழுத்துக்கும் பொருந்தமாறு நடைமுறைப்படுத்தவும் வேண்டுகிறோம்.
தந்தை பெரியார் அவர்கள் கடந்த 60 ஆண்டு காலத்திற்கு மேலாக சொல்லி வற் புறுத்தி வந்த பல நல்ல கருத்துக்கள் இன்றைய தினம் சட்ட வடிவம் பெற இருப்பதை அறிந்து உண்மையிலேயே நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் - வரவேற்கிறோம்’’ என்று அன்னையார் வெளியிட்ட கருத்தினையும் எடுத்துக் கூறினார்.
திராவிட இயக்க வீராங்கனைகளின் உருவப் படங்களைத் திறந்து வைத்து, தம் சங்கநாதத்தைப் பொழிந்தார் எழுத்தாளர் ஓவியா.
அன்னை மணியம்மையாரை இன்றைக்கும் இருட்டடிக்கச் செய்யும் போக்கை வன்மையாகக் கண்டித்தார்.
அன்னை மணியம்மையார் அஞ்சல் தலை
கருத்தரங்கம் முடிந்த பின் அடுத்த நிகழ்வாக அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவையொட்டி அஞ்சல் தலையை வி.அய்.டி. நிறுவனர் - வேந்தர் - டாக்டர் ஜி.விசுவநாதன் வெளியிட, பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் மற்றும் ஏற்கெனவே பணம் கட்டி பதிவு செய்திருந்த தோழர்களும், புதியவர்களும் வரிசையாக வந்து பெற்றுக்கொண்டனர்.
அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவில் அஞ்சல் தலையை வி.அய்.டி. நிறுவனர் - வேந்தர் - டாக்டர் ஜி.விசுவநாதன் வெளியிட, பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் பெற்றுக் கொள்கிறார். உடன் ஆசிரியர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்.
மூடநம்பிக்கையை ஒழிக்கச் சட்டம் வேண்டும்
வி.அய்.டி.வேந்தர் டாக்டர் ஜி.விஸ்வ நாதன் து முழக்கம்
வி.அய்.டி.வேந்தர் டாக்டர் ஜி.விஸ்வ நாதன் அவர்கள் அன்னை மணியம்மையார் அஞ்சல் தலையை வெளியிட்டார். அதனை வெளியிடுவதற்கு முன் விழாத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வி.அய்.டி. வேந்தருக்கு சால்வை அணிவித்து அம்மா நூற்றாண்டு விழாவின் முதல் மலரையும் அளித்து சிறப்பு செய்தார். அப்பொழுது வி.அய்.டி.வேந்தர் குறித்துக் கழகத் தலைவர் குறிப்பிட்டதாவது:
முதல் தலைமுறையாக கல்வி பயின்று, இன்றைக்கு இந்தியாவே - ஏன் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு ஒரு பல்கலைக் கழகத்தை வேலூரில் நடத்தி வருகிறார். சிறந்த பகுத்தறிவுவாதி - தகுதி திறமை சிலருக்கு மட்டும்தான் என்ற நிலையை தகர்த்தெறிந் தவர் என்றும் பாராட்டி வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
அன்னை மணியம்மையார் பிறந்த வேலூரில் அவர்கள் சிலை வைக்கப்படுவதற் கான குழுவுக்கு வி.அய்.டி.வேந்தர் தலைமை யேற்பார் என்று தெரிவித்தார். அன்னையாரின் அஞ்சல்தலையை வெளியிட்ட வி.அய்.டி. வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் அவர்களின் உரையில் தெறித்த முத்துக்கள்:
* நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் அல்ல. ஆனால் அடிப்படையில் நான் ஒரு சுயமரியாதைக் காரன்.
* அன்னை மணியம்மையார் அவர்களின் விழாவில் நான் கலந்து கொள்வதில் எனக்கு கூடுதல் பெருமை - காரணம் அவர். எங்கள் வேலூரைச் சேர்ந்தவர்.
* எங்கள் பகுதியில் கம்யூனிஸ்ட்கள் அதிகம். ஆறாம் வகுப்புவரை அந்தச் சிந்தனையில் இருந்தேன். நான் ஏழாம் வகுப்பு படித்த போது தந்தை பெரியாரின் பொதுக்கூட்ட உரையை கேட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக ஈரோட்டுப் பாசறைப் பக்கம் நகர்ந்தேன். வசதி வாய்ப்புகள் வந்தாலும் அந்தப் பாசறையிலிருந்து நான் இன்றும் மாற்றம் பெறவில்லை.
* 1960 ஆம் ஆண்டு சென்னை - இலயோலா கல்லூரியில் எம்.ஏ., படித்துக் கொண்டிருந்தேன். விடுதியின் மூன்றாவது மாடியில் அறை. அங்கு தந்தை பெரியார் படத்தை மட்டும் மாட்டியிருந்தேன்.
வார்டனாக இருந்தவர் ஒரு பாதிரியார். திடீரென்று ஒரு நாள் என் அறைக்கு வந்தார். அந்தப் படத்தைப் பார்த்தவுடன் அவர் யார்? என்று கேட்டார். சமயோசித மாக “கிராண்ட் பாதர்” என்று கூறி தப்பித்தேன். உண்மையை சொல்லியிருந் தால் அப்பொழுதே என்னை வீட்டுக்கு அனுப்பியிருப்பார்.
* பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்ததும், பாடுபட்டதும் திராவிட இயக்கமே - வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாருக்கு துணை நின்றவர் அன்னை நாகம்மையார்.
* தேவதாசி ஒழிப்புக்கான மசோதா 1930இல் நீதிக்கட்சி ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது.
* இரண்டு முக்கிய கோரிக்கைகளில் ஒன்று மத்திய அரசுக்கு, இன்னொன்று தமிழ்நாடு அரசுக்கு.
* மத்திய அரசுக்கான கோரிக்கை - 1996ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருக்கிறது, ஒரு சட்ட முன் வடிவு. சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்தி லும் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது 2010ஆம் ஆண்டில் மாநிலங்கள வையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் நிலுவையிலேயே உள்ளது. 49 விழுக்காடு உள்ள பெண்களுக்கு 33 விழுக்காடு என்பது குறைவே. தி.மு.க. முன்னின்று இதற்கான வெற்றியை பெற்றுத் தர வேண்டும்.
* தமிழ்நாடு அரசுக்கு ஒரு முக்கிய கோரிக்கை. மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம், மகாராட்டிரத்தில் கருநாடகாவிலும், கேரளா விலும் நிறைவேற்றப்பட்டது.
நியாயமாக தந்தை பெரியார் பிறந்து பாடுபட்ட தமிழ்நாட்டில்தான் முதன் முதலாக அச்சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்க வேண்டும். இப்போதாவது அதை உடனடியாக தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும்.
* பல்கலைக்கழகத்தில் ஜோதிடம் சொல்லி கொடுக்க முனைவது தடுக்கப்பட வேண்டும்.
* மற்ற மற்ற நாடுகளில் அரசு நடவடிக்கைகளில் மதம் குறுக்கிடுவதில்லை. இங்கு அதற்கு மாறான நிலை - இது தடுக்கப்பட வேண்டும் என்றார் வி.அய்.டி. வேந்தர்.
அன்னை மணியம்மையார் நூற்றாண்டு மலர்
அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா மலரினை தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், மேனாள் மத்திய இணையமைச்சருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியிட, சென்னை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி மற்றும் தோழர்கள் வரிசையாக மேடைக்கு வந்து பெற்றுக் கொண்டனர்.
நமக்கு இருக்கும் மூத்த தலைவர் ஆசிரியர்தான்! - சுப்புலட்சுமி ஜெகதீசன் உரை!
அன்னை மணியம்மையார் நடத்திக் காட்டிய “இராவண லீலா” - திராவிடக் கலாச்சாரத்திற்கான தலைநிமிரும் பண்பாட்டுப் புரட்சி! நெருக்கடி நிலை என்னும் பேரால் பெரும் மன உளைச்சலைக் கொடுத்தனர். நெருப்பாற்றில் நீந்தி வந்தது திராவிட இயக்கம். அந்த முறையிலே எதிர்கொண்டார் நமது அன்னையார்.
ஒரு வாரத்துக்கு முன் இரயிலில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். அப்பொழுது பக்கத்தில் இருந்த ஒரு பார்ப்பனரோடு விவாதிக்கும் நிலை ஏற்பட்டது. 60 ஆண்டு திராவிட இயக்கம் நாட்டை பாழ்படுத்தி விட்டது என்று பேச ஆரம்பித்தார். அப்பொழுது குறுக்கிட்டு நான் சொன்னேன். “உங்கள் சாத்திரப்படி நீங்கள் பிராமணன். நான் சூத்திரச்சி. நாங்கள் படிக்கக் கூடாது என்பது உங்களின் மனுதர்மம். இந்த நிலையில் நான் படித்தேன். பட்டம் பெற்றேன். மாநில, மத்திய அமைச்சராகவும் ஆகியிருக்கிறேன். இவை எல்லாம் திராவிட இயக்க சாதனைதானே” என்று நான் திருப்பி அடித்தபோது, அடங்கிப் போனது.
இன்றைக்கு இருக்கும் மத்திய அரசு சமூக நீதியில் கை வைத்துவிட்டது. “நீட்‘ என்ற பெயரால் ஒடுக் கப்பட்ட சமூகத்தினர், கிராமப்புறப் பிள்ளைகள் மருத்துவராக இனி கனவு தான் காண முடியும். காரணம் அந்தத் தேர்வு சி.பிஎஸ்இ பாடத் திட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. இது ஒரு திட்டமிட்ட உயர் ஜாதியினரின் சூழ்ச்சியே.
சமூக நீதிப் போரிலும், மதச் சார்பற்ற தலைமை யிலும் நமக்கு ஏராளமான பணிகள் இருக்கின்றன. நமக்கு வழிகாட்டிய தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், அன்னை மணியம்மையார், இனமானப் பேரா சிரியர் அன்பழகனார் போன்ற தலைவர்களும் இறந்து விட்டனர். இந்த நிலையில் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக ஆசிரியர் அய்யா தான இருக்கிறார்.
நூற்றாண்டைக் கடந்து ஆசிரியர் அவர்கள் இயக்கத்துக்கும், நாட்டுக்கும் வழிகாட்ட வேண்டும் என அறிய கருத்தினை தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
‘தொண்டறத் தாயின் வரலாற்று வண்ணப் படக் கதை நூல்!’
அன்னையார் நூற்றாண்டு விழா தொடங்கிய 2019 மார்ச் 10 ஆம் தேதிமுதல் ‘விடுதலை’ நாளேட்டில் நாள்தோறும் வெளிவந்த ‘‘தொண்டறத் தாய்’’ அன்னை மணியம்மையாரின் வாழ்க்கை வரலாற்றுப் படக்கதை- நூலாகத் தொகுக்கப்பட்டு, வெளியிடப்பட்டது.
நூற்றாண்டு விழா சிறப்பு கருதி, இந்நூல் தமிழர் தலைவர் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. அவற்றை தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், சி.பி.அய். மாநில மகளிரணி தலைவர் பத்மாவதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
‘’தூற்றலைத் தோற்கடித்தவீராங்கனை’’
இசைப் பேழை வெளியீடு
இந்நிகழ்வில் அன்னை மணியம்மையார் பற்றிய இசைப் பாடல் குறுந்தகடு வெளியிடப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட, சி.பி.அய். மாநில மகளிரணி தலைவர் தோழர் பத்மாவதி பெற்றுக்கொண்டார்.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இரண்டு பாடல்களையும், பாவலர் அறிவுமதி, கவிஞர் கலி.பூங்குன்றன், கவிஞர் யுகபாரதி ஆகியோர் தலா ஒரு பாடலும் எழுதிட, தாஜ்நூர் இசையில் உருவாக்கப்பட்ட இசைப் பேழை இது.
‘‘தூற்றலைத் தோற்கடித்த வீராங்கனை’’ என்று இசைப் பேழைக்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. பாடல்கள் மேடையில் ஒலிபரப்பப்பட்டன. இசையமைத்த தாஜ்நூர் அவர்களைப் பாராட்டி, சால்வை அணிவித்து சிறப்பு செய்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பொறியாளர் என்.எஸ்.ஏகாம்பரம் அவர்களுக்குப் பாராட்டு
அன்னை மணியம்மையார் அவர்களிடத்தில் அன்பு கொண் டவரும், இயக்கத்தில் ஆக்கரீதியான பணிகளிலும், குறிப்பாக சென்னை பெரியார் திடல் முகப்பில் எழுந்து நிற்கும் ஏழு மாடிக் கட்டடம், பெரியார் திடலில் எழுந்து நிற்கும் கட்டடங்களையொத்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொண்டவரும், அன்னையாரின் நினைவு நாளான மார்ச் 16 ஆம் தேதியைப் பிறந்த நாளாகக் கொண்டவரும், 90 வயது நிரம்பிய பொறியாளர் என்.எஸ்.ஏகாம்பரம் அவர்களைப் பாராட்டியும், அவர்தம் தொண்டினையும், அம்மா அவர்களுக்கு உறுதுணையாக இருந்ததையும் நினைவு கூறி, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பொறி யாளருக்குச் சால்வை அணிவித்துச் சிறப்பு செய்தார். பொறியாளர் ஏகாம்பரம் அவர்கள், அம்மாவுடன் தனக்குள்ள இயக்கத் தொடர்பான மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தார்.
நாகம்மையார் இல்லத்தில் வளர்ந்தவர்கள் அளித்த நன்கொடை
திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வளர்ந்து, இன்று பெரியவர்களாகக் குடும்பத்துடன் மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வரும் E.V.R.M என்ற முதல் எழுத்துடன் (இனிஷியல்) பெருமை யுடன் வாழ்வோர் திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்விக் கூடங்களின் ஒருங்கிணைப்பாளர் சி.தங்காத்தாள் வழிநடத்திட மேடைக்கு வந்து பெரியார் மணியம்மை ஃபவுண்டேஷன் நிதிக்கு ரூபாய் ஒரு லட்சத்தைக் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களிடம் பலத்த கரவொலிக்கிடையே வழங்கினர்.
துணைப் பொதுச்செயலாளர் இன்பக்கனி இல்லத்தின் சார்பில் நன்கொடை
திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் இன்பக்கனி - அவரின் சகோதரி டாக்டர் ஆருயிர், ச.முகிலரசு ஆகி யோர் அவர்களின் பெற்றோர் சபாபதி - இந்திராணி நினைவைப் போற்றும் வகையில் குடும்பத்தின் சார்பாக பெரியார் மணியம்மை ஃபவுண்டேஷன் நிதிக்கு ரூ.50 ஆயிரம் நன்கொடையை, கழகத் தலைவரிடம் வழங்கினர்.
அடிமைத் தளையாம் தாலி நீக்கம்
கும்மிடிப்பூண்டி மாவட்டம் திராவிடர் கழக மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் தோழர் முருகன் அவர்களின் வாழ்விணையரும், மாவட்ட மகளிரணி செயலாளருமான தோழர் மு.இராணி அவர்கள் அடிமைத்தளையாம் தாலியை அகற்றிக் கொண்டார்.
தமிழக தலைவர் ஆற்றிய உரையில் முக்கிய முத்துக்கள்
இவ்விழாவிற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விழா நிறைவுப் பேருரையை நிகழ்த்தினார்.
முக்கிய அவ்வுரையில் அவர் குறிப்பிட்டதாவது:
* நெருக்கடி காலத்தில் அன்னையார் பல்வேறு சவால்களைச் சந்தித்தார்.
* தணிக்கைக் குழுவினரின் கத்தரிக்கோலிலிருந்து ‘விடுதலை’ ஏட்டை நாள்தோறும் காப்பாற்ற வேண் டிய நிலை இருந்தது, அதனையும் கடந்து வந்தார்.
* வருமான வரித் துறையின் தொல்லை மற்றொரு பக்கம். இயக்கத்துக்குச் சொந்தமான கட்டடங்களி லிருந்து கிடைக்கும் வருவாயை முடக்கி, பெரியார் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கு முட்டுக்கட்டை - அதனையும் கடந்து வந்தார்.
அன்றைய எதிரிகளும் - இன்றைய எதிரிகளும்!
* அன்றைக்கு வெளிப்படையாக எதிரிகளைச் சந் திக்க முடிந்தது - அவர்களை அன்னையார் எதிர்கொண்டார். இன்று வஞ்சகமான எதிரிகளைச் சந்திக்கவேண்டியவர்களாக இருக்கிறோம்.
* இவற்றை எப்படி சந்திப்பது - வெற்றி கொள்வது என்பதற்கு நமது தலைவர்கள் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோர் வழிகாட்டிச் சென்றுள்ளனர்.
* உயிரை இழந்துதான் நமது உரிமைகளை மீட்க வேண்டும் என்றால், அதற்கும் தயாராவோம்!
* அன்னையார் நினைவிடத்தில் நாம் வைப்பது வெறும் மலர்வளையம் மட்டுமல்ல - செயல்களையே மலர்வளையமாக வைப்போம்!
பெண்களின் நிலை என்ன?
* மக்கள்தொகையில் சரி பகுதியாக இருக்கக் கூடிய பெண்களின் நிலை என்ன? அவர்களுக்குரிய உரிமைகள் நிலை நிறுத்தப்பட்டனவா?
* பெரும்பாலும் பெண்கள் உழைக்கக் கூடியவர்கள் - அவர்களின் உரிமைகள் மீட்கப்பட்டுவிட்டனவா? அவர்களுக்குரிய பிரச்சினைகளை அவர்களால் வெளிப்படையாகக் கூற முடிகிறதா? உரிமைகளைப் பெற முடிகிறதா?
* அன்னையாரின் நூற்றாண்டில் பெண்கள் மத்தி யில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் தேவை. வீட்டுக்கு வீடு பெண்களைச் சந்தித்து எடுத்துக் கூறுங்கள்.
* என்ன கொடுமை என்றால், பெண்களின் உரி மைக்குப் பெண்களே எதிரிகளாக இருப்பதுதான் வேதனை.
* பெண்ணாகப் பிறப்பதற்குக்கூட உரிமை இல் லையே! கருவில் இருக்கும்போதே ஆணா, பெண்ணா என்று அறிந்து, பெண் என்றால், கருவிலேயே அழிக்கப்படும் கொடுமை நீடிக்கலாமா?
* தாய்ப்பால் கொடுத்தவர்களே கள்ளிப்பால் கொடுக்கும் கொடுமையை இனியும் அனுமதிக் கலாமா?
* இங்கே நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வளர்ந்த பிள்ளைகள், திருமணமாகி, குடும்பமாக வசிக்கக் கூடிய அந்தப் பெண் பிள்ளைகளின் பெயர்களுக்கு முன்னால் காணப்படும் முன்னொட்டு - இனிஷியல் அய்யா - அம்மா பெயர்களின் முதல் எழுத்தான ஈ.வி.ஆர்.எம். என்ற அந்தப் பெருமை யைப் பெறுகிறார்கள்.
* அவர்கள் இந்த விழா மேடைக்கு வந்து, அன்னை மணியம்மையார் பெயரில் உள்ள பவுண்டேஷனுக்கு ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து தங்கள் நன்றி உணர்வை வெளிப்படுத்தினார்கள்.
* அன்னையார் அவர்கள் அய்யாவை 95 ஆண்டு காலம் வாழ வைத்தார்கள். ஆனால், அவர்கள் 60 ஆண்டுகள் கூட வாழவில்லை.
* நான்கு ஆண்டுகள் தான் இயக்கத்திற்குத் தலைமை வகித்து நடத்திச் சென்றார்கள் என்றாலும், அந்தக் காலகட்டத்தில் தன் ஆளுமையை நிரூபித்துக் காட்டினார்கள்.
* தி.மு.க.வில் கலைஞர், நாவலர் இருவருக்குமிடையே பிணக்குகள் ஏற்பட்டபோது, அவர்கள் இருவரையும் சென்னை பெரியார் திடலுக்கு அழைத்து, அய்யா, அண்ணா இல்லாத இந்தக் காலகட்டத்தில், கட்டுப்பாடு எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்திக் கூறினார்கள்.
* தந்தை பெரியார் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்களோ, அந்தக் கடமையை அன்னையார் செய்தார்கள். இந்தச் செய்தியை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தமது ‘‘நெஞ்சுக்கு நீதி’’ நூலிலும் பதிவு செய்தும் இருக்கிறார்.
* அம்மா எவ்வளவோ தூற்றலுக்கெல்லாம் ஆளாகி இருந்தார்கள். அப்படி தூற்றியவர்கள் எல்லாம் பிற்காலத்தில் அதே அம்மாவைப் போற்றும் அளவுக்கு அம்மா வெற்றி பெற்றது சாதாரணமானதல்ல.
அய்யா - அம்மா பேணிய
மாபெரும் மனிதப் பண்பு
* ராஜாஜியின் ஆலோசனையைப் பெற்றுத்தான் பெரியார், மணியம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால், உண்மை வேறுவிதமானது என்பதற்கு ஆதாரம் உண்டு - ஆவணமும் உண்டு.
* பெரியாரின் அந்த முடிவு தவறானது - சரிப்பட்டு வராது - பெரியாருக்குப் பிறகு இயக்கத்தை ஒரு பொடிப் பெண் நடத்துவது இயலாது என்றுதான் அன்றைய கவர்னர் ஜெனரல் ராஜாஜி தந்தை பெரியாருக்குக் கடிதம் எழுதினார்.
* நினைத்திருந்தால், அந்தக் கடிதத்தை தந்தை பெரியார் வெளியிட்டு இருக்கலாம். ஏன் வெளியிடவில்லை? அந்தக் கடிதத்தில் ராஜாஜி ‘‘அந்தரங்கம்’’ என்று எழுதி இருந்ததுதான் அதற்குக் காரணம்.
* உயிரோடு இருந்தவரை தந்தை பெரியாரும் சரி, அன்னை மணியம்மையாரும் சரி அதை வெளியிடவில்லை. எத்தகைய உயர்ந்த பண்பாடு - அறிவு நாணயத்தை அவர்கள் கடைப்பிடித்தார்கள். வரலாற்றுக் காரணத்துக்காக அவர்கள் மறைவிற்குப் பிறகு நான் வெளியிட்டேன்! (இந்தத் தகவலை தலைவர் ஆசிரியர் கூறியபோது, மன்றத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் அமைதியின் ஆழத்திற்கே சென்றனர்).
* தலைவர்கள் என்போர் யார்? மக்கள் பின்னால் செல்லுவோர் தலைவர்கள் அல்ல - அரசியலுக்கு வேண்டுமானால் இது பொருத்தமானதாக இருக்கலாம்.
* ஆனால், மக்களைத் தன் பின்னால் அழைத்துச் செல்லுவோர்தான் உண்மையான தலைவர் - அதைத்தான் தந்தை பெரியாரும், அம்மாவும் செய்தார்கள்.
இருபெரும் தலைவர்களுக்கு சிலைகள்
சுயமரியாதை இயக்கம் என்பது ஒரு மனிதநேய இயக்கம். அந்த இயக்கத்துக்குத் தலைமை தாங்கி நடத்திச் சென்ற தந்தை பெரியார். அவர்களின் தன்னிகரற்ற பணிக்குத் தோள் கொடுத்தவர் அன்னை நாகம்மையாரும், அன்னை மணியம்மையாரும் ஆவார்கள்.
* ஈரோட்டில் அன்னை நாகம்மையார் சிலை திறக்கப்படும். அதற்கு நமது திராவிட இயக்க வீராங்கனை - மேனாள் மத்திய இணையமைச்சர் - தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் சகோதரி சுப்புலக்குமி ஜெகதீசன் முக்கிய பங்கேற்கக் கேட்டுக் கொள்கிறேன். அதேபோல, அன்னை மணியம்மையார் சிலை அவர்கள் பிறந்த வேலூரில் நிறுவப்படும் - அதற்கான செயல்பாட்டுக் குழுத் தலைவராக நமது வி.அய்.டி. வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் இருந்து செயல்படுத்துவார்.
என்பனப் போன்ற முத்தான செய்திகளை தமிழர் தலைவர் தமது நிறைவுரையில் பதிவு செய்தார்கள்.
நிறைவாக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் நன்றி கூற அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா வரலாற்றில் பதிவாகி நிறைவுற்றது.
- உண்மை இதழ், 1-15.4.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக