செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

பூரி சங்கராச்சாரி கொடும்பாவி எரிப்பு


மகளிரணிக்கிடையே உரையாற்றும் ஆசிரியர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்

17.2.1994 பெண்கள் வேதம் ஓத உரிமை கிடையாது என்று கல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண்ணை, வேதத்தைக் கூறவிடாமல் பூரி சங்கராச்சாரி மேடையிலிருந்து திருப்பி அனுப்பினார். இதற்கு கல்கத்தாவில் பெண்கள் உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன.

வருணாஸ்ரம - வெறிபிடித்த இந்த பூரி சங்கராச்சாரியின் கொடும்பாவியை தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எரித்தார்கள். கழக மகளிரணியினர் சார்பில் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் - கழகத் தோழர்களும் ஏராளமாகக் கலந்து கொண்டனர். காலை சென்னை பெரியார் திடலில் கழக மகளிரணியினரும், தோழர்களும் ஏராளமாகத் திரண்டனர். அவர்களிடையே உரையாற்றி வழியனுப்பிவைத்தேன்.

மாநில மகளிரணி செயலாளர் க.பார்வதி, தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணி வித்தார்.

அதன்பிறகு பூரி சங்கராச்சாரி எதிர்ப்பு முழக்கங்களுடன் ஊர்வலம் பெரியார் திடலில் இருந்து பூரி சங்கராச்சாரி கொடும்பாவியோடு புறப்பட்டது.

ஊர்வலத்தில் - கலந்து கொண்ட மகளிரணியினர் - ஊர்வலத்தினர் பெரியார் திடலை விட்டு வெளியேவந்தபோது - போலீசார் ‘தினத் தந்தி’ அலுவலகத்துக்கு எதிரே ஊர்வலத்தினரைத்தடுத்து நிறுத்தினர். உடனே பூரி -சங்கராச்சாரியின் கொடும்பாவியை  கழகத் தோழர்கள் - எரித்தனர். “பார்ப்பன திமிர்கொண்ட பூரி சங்கராச்சாரி - ஒழிக’’ என்ற முழக்கங்கள் எழுந்தன; போலீசார் தண்ணீரை ஊற்றி - நெருப்பை அணைத்தனர்;  கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டனர்.

இதற்கிடையே வேப்பேரி காவல் நிலையத்தில் - கடும் பதட்டம் நிலவுவதாகத் தகவல் வந்தது. ஏற்கெனவே மூர்க்கத்தனமாக அடித்து - தனியே ஜீப்பில் ஏற்றிச் சென்ற கழகத் தோழரை காவல் நிலையத்துக்குள் வைத்து போலீசார் மூர்க்கத்தனமாகத்தாக்கினர்; அங்கே காவலில் வைக்கப்பட்டிருந்த கழகத் தோழர்கள்- இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து கொந்தளித்த பிறகுதான் போலீசார் தாக்குதல் நின்றது.

போலீசாரின் இந்த அத்து மீறல் பற்றி காவல் துறை உயர் அதிகாரியிடம் கழக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நிலைய செயலாளர்கள் - கலி. பூங்குன்றன், ஆனூர் ஜெகதீசன் ஆகியோர் வேப்பேரி காவல் நிலையம் சென்று. கழகத் தோழர்களை அமைதிப்படுத்தினர். மகளிரணியினர் உள்பட 250 தோழர்கள் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தனர்.

கழகத் தோழர்களை கண் மூடித்தனமாக தாக்கியதற்காகவும், கேவலமான முறையில்- திட்டியதற்காகவும் காவல்துறை அதிகாரிகள் மீது சென்னை வேப்பேரியில் காவல் நிலையத்தில், திராவிர் கழகத் தலைமை நிலைய செயலாளர் கலி.பூங்குன்றன் புகாரை எழுத்து மூலம் கொடுத்தார்.

“அடிப்படை மனித உரிமைக்கே சவால் விடும் பூரி சங்கராச்சாரி கொடும்பாவியை எரிக்க ஏன் காவல் துறை அனுமதி மறுக்க வேண்டும்? அப்படி மறுப்பது அரசியல் சட்டத்துக்கே எதிரானது’’ என நான் எடுத்துக் கூறினேன்.

-அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 16-31.7.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக