செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

தந்தை பெரியார் - சிலை திறப்பு விழா- பட்டாளம்

3.3.1994 பட்டாளம் திராவிடர் கழகத்தின் சார்பில் பட்டாளம் மார்க்கெட் ‘கலைஞர் கருணாநிதி பூங்கா’ அருகில் தந்தை பெரியார் - சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்தேன்.

சென்னை பட்டாளத்தில் தந்தை பெரியார் சிலையை திறந்து வைத்து உரையாற்றும் ஆசிரியர்
மற்றும் விழாக்குழுவினர்

விழாவுக்கு பட்டாளம் திராவிடர் கழகத் தலைவர் - சிவ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கழக செயலாளர் மெய்.சேகர், இளைஞரணி செயலாளர் ரெ.பன்னீர் செல்வம் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

விழாவில் - சென்னை - மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் எம்.ஏ.கிரிதரன் குடுகுடுப்பை வேடமணிந்து, கடவுளர் கதைகளைத் தோலுரித்துக் காட்டினார். ஈரோடு தியாகராசன் ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சியை பல்வேறு முறைகளிலும் செய்துகாட்டி மக்களை ஆச்சரியப்பட வைத்தார்.

பட்டாளம் திராவிடர் கழக செயலாளர் மெய்.சேகர் - தேவி ஆகியோரின் ஆண்குழந்தைக்கு அறிவுச்செல்வன் - என்று பெயர் சூட்டி மகிழ்ந்தேன்.

விழா சிறப்பாக நடைபெறுவதை ஒட்டி கழகக்கொடி தோரணங்களால் அப்பகுதி முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

10.3.1994 பெரம்பூர் நியூ ஹால் திருமண மண்டபத்தில் அயன்புரம் திராவிடர் கழகச் செயலாளர் சீ.மணிவண்ணன் - கவிதா ஆகியோரின் வாழ்க்கை ஒப்பந்த உறுமொழியை கூறச் செய்து மணவிழாவை தலைமையேற்று நடத்தி வைத்தேன். விழாவில் கணவனை இழந்த கைம் பெண்ணான மணமகளின் தாயார் அம்சம்மாள் தாலியை எடுத்துக் கொடுத்தார். திருமண மண்டபமே நிரம்பி வழியும் அளவுக்கு ஏராளமான கழகத்தினரும், கழகப் பொறுப்பாளர்களும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். மணமக்கள் பெரியார் திடலுக்கு வந்திருந்து தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்; அய்யா, அம்மா நினைவிடங்களில் மலர்வளையம் வைத்தும் மரியாதைச் செலுத்தினர்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 16-31.7.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக