சென்னை 7.8.2019
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளான நேற்று (7.8.2019) சென்னை முரசொலி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கலைஞர் அவர்களின் சிலைத் திறப்பு விழாவிற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
கலைஞர் சிலையை திறந்து வைத்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களுக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து, தந்தை பெரியார் நூல்களை வழங்கினார். சிலை திறப்பு விழாவினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
முரசொலி வளாகத்தில்" 'முரசொலி'யின் தந்தையும், தாயுமான கலைஞருக்கு சிலை திறப்பு விழா!
முரசொலித்த கொள்கை முழக்கப் பெருவிழா!
மின்சாரம்
முரசொலி அறக்கட்டளை சார்பாக கலைஞரின் மூத்த பிள்ளையாகிய 'முரசொலி' வளாகத்திலே முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழா நேற்று (7.8.2019) மாலை வரலாற்றுச் சிறப்புடன் நடைபெற்றது.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில், மேற்கு வங்க முதல் அமைச்சரும், திரிணாமுல் காங்கிரசின் நிறுவனத் தலைவருமான மம்தா பானர்ஜி கலைஞர் அவர்களின் சிலையைத் திறந்து வைத்தார். சிலையைத் திறந்து வைத்த நிலையில், சென்னைக் கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்குச் சென்று மலர் மாலை வைத்துமரியாதை செலுத்தினார்.
அய்ம்பெரும் முழக்கங்கள்!
கலைஞர் என்றால் யார்? அவரை ஏன் எவரும் மறக்க முடியாது? அவர் விட்டுச் சென்ற கொள்கை முழக்கங்கள் என்றைக்கும் இருக்கும் என்பதால் அவரைக் கடந்துசெல்ல எவராலும் முடியாது என்று சொன்னார் தமிழர் தலைவர் அவர்கள். அண்ணா மறைந்த நிலையில், திருச்சியில் நடைபெற்ற முதலாண்டு நினைவு மாநாட்டில் மானமிகு கலைஞர் கொடுத்த இலட்சியப் பூர்வமான "அய்ம்பெரும் முழக்கங்களை" எடுத்துச் சொன்னது மட்டுமல்ல; அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்ல எடுத்துச் சொல்ல அனைவரும் தொடுத்துச் சொல்ல வேண்டும் - முழங்கிட வேண்டும் என்ற வேண்டுகோளோடு அந்த அய்ம்பெரும் முழக்கங்களை எடுத்துக் கூறினார்.
1) அண்ணா வழியில் அயராது உழைப்போம்!
2) ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்!
3) இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
4) வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்!
5) மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி இந்த முழக்கங்களை ஒவ்வொன்றாக தமிழர் தலைவர் எடுத்துச் சொன்ன போது, ஒவ்வொரு முறையும் அவற்றை உள் வாங்கி உணர்ச்சிப் பூர்வமாக பொதுமக்கள் முழங்கிய காட்சி கண்கொள்ளாக் காட்சி; காதுகளில் என்றென்றைக்கும் எதிரொலித் துக் கொண்டே இருக்கும் இவை வெறும் முழக்கம் அல்ல - போர் ஆயுதம் என்றும் குறிப்பிட்டார் கழகத் தலைவர்.
இது வெறும் சிலை திறப்பு விழா அல்ல. திராவிட இயக்க சிந்தாந்த விழா, கலைஞர் எதற்காக வாழ்ந்தார் என்பதை நினைவூட்டும் கொள்கை விழா என்பதற்கு இந்த அய்ம்பெரும் முழக்கங்களே கண் கண்ட காட்சி என்றால் அது மிகையல்ல.
***
மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பேனர்ஜி அவர்கள் இந்தக் காட்சிகளை உணர்வுகளை மிகவும் கூர்மையாகக் கவனித்துக் கொண்டே இருந்தார். கழகத் தலைவரிடம் பேசும்போது, 'கொல்கத் தாவுக்கு ஒரு முறை வருமாறு' மம்தா அவர்கள் அழைப்புக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒய்.எம்.சி.ஏ. திடலில் பொதுக் கூட்டம்
மாலை 6 மணியளவில் சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் மேற்கு சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்புப் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனையொட்டி இராயப் பேட்டை பகுதி முழுவதும் திமுக கொடிகள் அலை அலையாகப் பறந்து விழாவின் சிறப்புக்கு விளம்பரத் தூதராகப் பறைசாற்றிக் கொண்டிருந்தன.
'முரசொலி' அலுவலகத்தின் வடிவில் மேடை அமைக்கப்பட்டிருந்தது தனிச் சிறப்பாகும். சிறப்புப் பொதுக் கூட்டத்தில், முதல்நிகழ்ச்சியாக வெளியுறவுத்துறை மேனாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களின் மறைவிற்கும், முரசொலி அறக்கட்டளை உறுப்பினரும் திமுக சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் தலைமை நிலைய செயலாளராக இருந்தவரும் - ஆயிரம் விளக்குப் பகுதியின் அற்புத விளக்கு என்று கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்டவருமான ஆயிரம் விளக்கு உசேன் ஆகியோரின் மறைவிற்கான இரங்கல் தீர்மானத்தை திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் முன்மொழிய அனைவரும் எழுந்து நின்று ஒரு சில மணித்துளிகள் அமைதி காத்தனர்.
முரசொலி ஆசிரியர் செல்வம் வரவேற்புரை வழங்கினார். அவர்தம் உரையில் 'முரசொலி' என்பது கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளை என்று குறிப்பிட்டு, விழாத் தலைவரான திராவிடர் கழகத் தலைவரை விளிக்கும் பொழுது, திராவிட இயக்கத்தின் நடுநிலைக் கருவூலம் ஆசிரியர் அவர்களே என்று குறிப்பிட்டார். விழாவில் பங்கேற்ற தலைவர்களுக்கு பட்டாடை போர்த்தி கலைஞர் சிலையை நினைவுப் பரிசாக அளித்து சிறப்பு செய்தார் தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள்.
மலர்க் குழுவினருக்கும் அவ்வாறே சிறப்பு செய்தார். கலைஞர் சிலையை வடிவமைத்த சிற்பி தீன தயாளனுக்குப் பட்டாடைபோர்த்தி மோதிரம் ஒன்றையும் அணிவித்தார்.
கலைஞர் நினைவையொட்டி வெளியிடப்பட்ட முரசொலி மலரை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி வெளியிட, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி முதல் மலரைப் பெற்றுக் கொண்டார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி அவர்கள் விழாத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் வி.நாராயணசாமி உள்ளிட்ட தலைவர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.
மம்தா அவர்களுக்கு ஆசிரியர் செய்த சிறப்பு
மேற்கு வங்க முதல் அமைச்சருக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணிஅவர்கள் பொன்னாடை அணிவித்து, தந்தை பெரியார் பற்றிய ஆங்கில நூல்களைப் பரிசளித்தார். தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தினார்.
புதுவை முதல் அமைச்சர்
புதுச்சேரி மாநில முதல் அமைச்சர் மாண்புமிகு வி. நாராயணசாமி அவர்கள் தனது சுருக்கமான உரையில் கலைஞர் அவர்களுக்குப் புகழாரம் சூட்டினார்.
தமிழையே உயிர் மூச்சாகக் கொண்ட கலைஞர் அவர்கள் அய்ந்து முறை முதல் அமைச்சராகவும், மூன்று முறை எதிர்க்கட்சித் தலைவராகவும் மிளிர்ந்து சாதனைப் படைத்தவர் என்று எடுத்த எழுப்பிலேயே எடுத்துச் சொல்லி கரஒலியைப் பெற்றார். பெண்கள் மறுமலர்ச்சித் திட்டங்களை செயல் படுத்தினார். விதவைப் பெண்களுக்குத் திருமண உதவி, பெரியார் நினைவு சமத்துவபுரங்களை உருவாக்கினார். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினருக்காக சமூகநீதித் திட்டங்களை செயல்படுத்தினார்.
யூனியன் பிரதேசமாக இருக்கக் கூடிய எங்கள் புதுவை மாநிலத்திற்கு மாநில அந்தஸ்துக்காகக் குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், மத்திய பிஜேபி ஆட்சி என்ன செய்கிறது என்றால் ஏற்கெனவே மாநிலத் தகுதியோடு விளங்கிய ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றுகிறது என்று சொன்ன பொழுது - பார்வையாளர்கள் வெகுவாகவேஅதனை அசைப் போட்டனர்.
விரைவாக புதுச்சேரியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலையை அமைப்போம்! புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கலைஞர் பெயரை இரு முக்கிய சாலைகளுக்குச் சூட்டுவோம் என்றும் அறிவித்தார்.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் கலைஞர் அவர்களுக்கு நினைவிடம் அமைக்க ஓர் இடத்தைக் கொடுப்பதற்குக்கூட தமிழக அதிமுக அரசு மறுத்ததையும் மறக்காமல் இடித்துச் சொன்னார்.
புதுவை மாநிலத்தைப் பொறுத்தவரை 'நீட்', 'நெக்ஸ்ட்' தேர்வுகளை அய்ட்ரோ கார்பன் திட்டங்களை உறுதியாக எதிர்க்கிறது என்றும் தெளிவுபடுத்திய புதுவை முதல் அமைச்சர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக தளபதி மு.க. ஸ்டாலின் அடுத்து வர, தமிழ்நாட்டு மக்கள் உறுதி எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
கவிப்பேரரசு தீட்டிய சித்திரம்
கலைஞர் அவர்களோடு நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்த கவிபேரரசு வைரமுத்து அவர்களின் உரை அழகிய சித்திரமாக அமைந்திருந்தது.
கடைசித் தமிழனின் கடைசி உயிர்ச் சொட்டு இருக்கும் வரை கலைஞர் நம்மோடு உணர்வுப் பூர்வமாக இருப்பார் என்றார்.
அமேசான் நதியைப் பற்றி அவர் சொன்ன கருத்து அனைவருக்கும் புதியது.
மற்ற நதிகள் எல்லாம் கடலில் கலந்த மாத்திரத்திலேயே உப்புக் கரித்து விடும். ஆனால் அமேசான் நதி மட்டும் கடலில் கலந்தாலும் குறிப்பிட்ட தூரம் வரை ஊடுருவிச் சென்று தன்னிலை மாறாது - உப்புக் கரிக்காது நிற்கும்.
நமது கலைஞர் அவர்களும் அத்தகைய அமேசான் நதி போன்றவர் என்று கவிப் பேரரசு சொன்னதை மக்கள் வெகுவாகவே இரசித்தனர்.
கலைஞரின் சதை உடம்பு மறைந்தாலும் அவரது தத்துவ உடம்பு நம்மோடுதானிருக்கிறது என்று கவிஞருக்கே உரிய நயத்தோடு நவின்றார்.
சிங்கப்பூர் அதிபராகவிருந்த லீக்வான்யூவுக்கு நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்து அவரிடம் அதுபற்றி கூறப்பட்டபோது -
"நான் உருவாக்கிய சிங்கப்பூரே எனது நினைவுச் சின்னம்தான் - தனியாக ஏதும் தேவையில்லை" என்று அடித்துச் சொன்னதுண்டு. அதேபோலத்தான் கலைஞரின் நினைவை பறைசாற்றும் அவரின் சங்கத் தமிழும், இலக்கியப் படைப்புகளும் என்றென்றும் நம்மிடையே நினைவுச் சின்னங்களாக இருக்கும் என்றார்.
கலைஞர் போல ஒரு தலைவர் உருவாக இன்னும் எத்தனை நூற்றாண்டுக் காலம் தேவைப்படுமோ என்று நமக்குத் தெரியாது என்றும் ஏக்கத்தோடு கூறினார்.
தனது சுயசரிதையை ஆறு தொகுதிகளாக 4168 பக்கங்கள் அளவுக்கு எழுதிய ஒரே தலைவர் கலைஞர் என்றும் புகழாரம் சூட்டினார்.
இன்றைக்கு இந்தியா முழுவதும் உள்ள முதல் அமைச்சர்கள் ஆகஸ்டு 15 அன்று சுதந்திர நாளில் தேசியக் கொடியை அந்தந்த மாநிலக் கோட்டையில் ஏற்றிட உரிமையைப் பெற்றுத் தந்தவரும் கலைஞரே என்ற கவிஞரின் செய்தி சிறப்பானது.
தமிழர் தலைவரின் முத்திரை உரை
விழாவுக்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியரின் உரை 30 நிமிடங்களைக் கொண்டசிறப்பான கொள்கை முரசொலித்த உரையாகும்.
75 ஆண்டைக் கடந்த 'முரசொலி' ஏட்டின்
வளாகத்திலே வசந்த திருவிழா இன்று - கலைஞர் சிலை திறப்பு விழா இன்று என்று விழாவின் முக்கியத்துவத்தை எடுத்த எடுப்பிலேயே பதிவு செய்தார்.
தந்தை பெரியாரின் மாணாக்கராக, உணர்வுப் பூர்வமாக இருந்தார் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டை முன் வைத்தார்.
தேசிய நீரோட்டத்திலே நீங்கள் கலக்கவில்லை. அதுதான் ஒரு பிரச்சினையா என்று செய்தியாளர் கேட்டபோது - அடுத்த நொடியே கலைஞரிடமிருந்து வெளிவந்த பதில் என்ன தெரியுமா?
"ஈரோடு போனவன் நான் - நீரோடு போக மாட்டேன்" என்று கலைஞர் சொன்னதை, விடுதலை ஆசிரியர் சொன்ன போது வரவேற்புக் குரலும், கை தட்டலும் எங்கும் கேட்டன.
கலைஞருக்குப் பிறகு வெற்றிடம் வெற்றிடம் என்று விமர்சனம் செய்கிறார்கள் அல்லவா - இதன் பொருள் என்ன? திராவிட இயக்கத்தில் தொடர்ச்சி அறுபட்டு விட்டது என்று சொல்லி, அந்த இடத்தில் மதவாதக் கட்சி தலை எடுக்க வேண்டும் என்பது அதன் உள்நோக்கம் - திரைமறைவுச் சிந்தனை.
அந்த நச்சு வேரை நசுக்கும் வகையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் சொன்னார் "கலைஞர் மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் வெற்றிடம் என்பது எல்லாம் பொய். அவர் பெற்றிடம் இங்கே - இருக்கிறது - தளபதி மு.க. ஸ்டாலின் முழுமதியாக தோன்றியிருக்கிறார் என்ற உத்தர வாதத்தைத் தெரிவித்தார் ஆசிரியர் (அவர் ஆசிரியரல்லவா!)
எதிர் நீச்சல் என்பதே திராவிடர் இயக்கத்தின் சிறப்பு - தந்தை பெரியார் என்றால் எதிர் நீச்சல்காரர், அறிஞர் அண்ணா என்றால் எதிர் நீச்சல்காரர், கலைஞர் என்றால் எதிர் நீச்சல்காரரே ஏன் - நமது தளபதியும் எதிர் நீச்சல்காரரே!
இன்றைக்கு மத்தியில் ஓர் ஆட்சியிருக்கிறது; அவசர அவசரமாக சட்டங்கள் வந்துகொண்டே உள்ளன. அத்த னையும், மொழி உணர்வையும், மாநில உணர்வையும், சமூகநீதியையும், மதச்சார்பின்மையையும் நசுக்கக் கூடியவைகளாக அமைந்துள்ளன. அவற்றை எதிர் நீச்சல் போட்டு எதிர்த்து முறியடிக்கும் உணர்வு - தந்தை பெரியார் பிறந்த திராவிடப் பூமியாகிய தமிழ்நாட்டிலிருந்தே கிளம்பும் - கிளம்பவும் போகிறது என்று திராவிட சித்தாந்த ரீதியாக பதில் கூறினார் திராவிடர் கழகத் தலைவர்.
அடுத்து முழுமையான கலைஞரை எப்பொழுது யாரும் பார்க்க முடியும் என்ற கேள்வியை எழுப்பிய 'விடுதலை' ஆசிரியர் அவர்கள், அவரின் உழைப்பிலும் எதிர் நீச்சலிலும் தான் பார்க்க முடியும் என்று விடையாகச் சொன்னார் - ஈரோட்டுக் குரு குலத்தில் முறையாக அவர் கற்றுக் கொண்ட பாடம் இதுதான் என்றார்.
நெருக்கடி நிலை காலத்தை அவர் எப்படி எதிர் கொண்டார்? அவர் கொஞ்சம் சமரசம் செய்துகொண்டிருந்தால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்க முடியும், ஆட்சியைவிட கொள்கைதான் முக்கியம், மாநில உரிமைதான் முக்கியம் என்ற முறையில் நெருக்கடி நிலையை எதிர்த்து இந்தியாவிலேயே தீர்மானம் போட்டவர் கலைஞர் என்றார்.
கலைஞரின் பேனா வாள் முனையைவிட வலிமையானது. நெருக்கடி நிலையில் தணிக்கையையும் சந்தித்து முரசொலியை நடத்திக் காட்டியவரும் கலைஞரே!
மேற்கு வங்க மாநில முதல்அமைச்சர் மம்தா அவர்கள் புரிந்து கொள்வதற்காக இடைஇடையே ஆங்கிலத்திலும் பேசினார் ஆசிரியர். மேற்கு வங்கத்துக்கும் தமிழ்நாட்டுக்கு மிடையே நிலவும் கலாச்சார உணர்வை உறவை எடுத்துக் கூறினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நானும் ஒரு திராவிடனே என்று சொல்லியிருந்ததையும் நினைவூட்டினார். இது கலைஞரின் வெறும் சிலை திறப்பு விழாவல்ல - மாநில உரிமைகளைக் காப்பாற்றும் உணர்ச்சிப்பூர்வமான விழா என்றும் குறிப்பிட்டார். (உரை பின்னர்)
கலைஞர் சிலையின் முக்கிய அம்சங்கள்!
சிலையின் மேல்பகுதி தொடங்கி பீடம் வரை 30 டன் எடை கொண்டிருக்கிறது.
அதில் 16 டன் எடையும் 6 அடி உயரமும் கொண்ட ஒரே கறுப்பு கிரனைட் கல்லால் முப்பரிமாண தோற்றத்தில் பீடம் வடிவமைக் கப்பட்டுள்ளது.
''விஸ்கான் ஒயிட்'' என்ற கிரனைட் கற்களை கொண்டு அலங்கார வடிவமைப்பு கள் செய்யப் பட்டுள்ளன.
நீளம் 10 அடி - அகலம் 10 - உயரம் 9 அடி என்ற அளவில் பீடம் வடிவமைக்கப்பட் டுள்ளது. இதற்கான கல் மைசூர் அருகேயுள்ள சாம்ராஜ் நகரில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
இவற்றை திருவண்ணாமலையில் உள்ள அருணை கிரனைட் கம்பெனி வடிவமைத்துள்ளது.
அமர்ந்த நிலையில் உள்ள கலைஞரின் சிலை, அகலம் 6.3 அடி - உயரம் 6.5 அடி என்கிற அளவில் வெண்கல சிலையாக செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்க சிங்கம் மம்தா பேனர்ஜி
மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பேனர்ஜி தொடக்கத்திலும் இடை இடையேயும் தமிழ்ச் சொற்களை வங்க மொழியில் எழுதி வைத்துக் கொண்டு உரையாடியது பெரு மகிழ்ச்சியைத் தந்தது.
தமிழ்நாட்டுக்கும் வங்கத்திற்கும் உள்ள உறவையும் தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் கோட்பாட்டையும் மக்களால் மதிக்கப்படும் தலைவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் பற்றியும் கலைஞர் மறைவிற்குப் பிறகு அவரது மகன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் போராட்டக் குணம் பற்றியும், மத்தியில் இருக்கக் கூடிய மதவாத ஆட்சியின் ஜனநாயக உணர்வுக்கு எதிரான நடவடிக்கைகளைப் பற்றியும் அழுத்தமாக தன் கருத்துகளைப் பதிவு செய்தார். தமிழ்நாட்டு மக்களைதான் வெகுவாக மதிப்பதற்காகவே "வணக்கம்" என்ற சொல்லை உச்சரித்தேன் என்றும் சொன்னார்.
நானும் புரட்சியாளர் பெயரைத் தாங்கிய ஸ்டாலினும், இந்தியர்கள்தான். அதற்காக, நாங்கள் வங்காளி என்பதையோ தமிழன் என்பதையோ மறந்திட மாட்டோம் என்றும் அழுத்தி சொன்னார் (உரை தனியே)
தளபதி மு.க. ஸ்டாலின் முழக்கம்
நன்றி உரை என்ற பெயரில் திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் உரை முத்தாய்ப்பானது.
தந்தை பெரியார் என்றால் பகுத்தறிவும் சுயமரியாதையும், அண்ணா என்றால் மொழிப் பற்றும், இனவுணர்வும், கலைஞர் என்றால் சமுகநீதியும் மாநில சுயாட்சியும் என்று பொருள். இவர்களின் சிலைகள் என்றால் இந்தத் தத்துவங்களைத்தான் இன்றைக்கும் என்றைக்கும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கும் என்றார். (உரை தனியே காண்க).
தமிழர்தலைவர் எழுப்பிய கேள்வி
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே ரேஷன் கார்டு என்று சொல்லுகிறார்களே, அவர்களை நோக்கி ஒரே ஒரு கேள்வி - முக்கியமான கேள்வி "நாட்டு மக்கள் அனைவரும் ஒரே ஜாதி என்று அறிவிக்கத் தயாரா?"என்று தமிழர் தலைவர் வினாவை எழுப்பிய போது, அதில் பொதிந்துள்ள நியாயத்தை, நேர்மையைப் புரிந்து கொண்ட ஆயிரக்கணக்கான பொது மக்களும் நீண்ட நேரம் கரஒலியை எழுப்பினர்; - சரியான கேள்வி, நெற்றிப் பொட்டில் அடித்தது போன்ற கேள்வி என்று சகல தரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கேள்வியாக அமைந்திருந்தது.
ஜெ. அன்பழகன்
சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நேர்த்தியான விழாவில் அம்மாவட்ட திமுக செயலாளர், சட்டப் பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் ஏற்பாடுகளை நேர்த்தியாக செய்திருந்தார். இணைப்புரையையும் அவரே வழங்கினார்.
தலைவர்கள் பங்கேற்பு
சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்க வளாகத்தில் கலைஞர் முதலாமாண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முரசொலி செல்வம் வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு கலைஞர் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றினார். புதுச்சேரி மாநில முதலமைச்சர் வி.நாராயணசாமி, கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்டவர்கள் உரையாற்றினார்கள்.
நிறைவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
திரிணமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் திரிவேதி, மதிமுக பொதுச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ, இந்திய யூனியன் முசுலீம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கட்சிகளின் தலைவர்கள், பொறுப்பாளர்கள், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் திராவிடர் கழகப் பொறுபபாளர்கள், மாநிலம் முழுவதுமிருந்து திரண்டிருந்த திமுக தோழர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் முதலாமாண்டு நினைவு நாள் பெருவிழாவில் கலந்துகொண்டனர். திமுக பொருளாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், அய்.பெரியசாமி, வி.பி.துரைசாமி,திமுக முதன்மைச் செயலாளர், மக்களவை திமுக உறுப்பினர்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு, திமுக மகளிரணி செயலாளர், நாடாளுமன்ற மக்களவை திமுக குழுத் துணைத் தலைவர் கவிஞர் கனிமொழி மற்றும் திமுக கொறடா ஆ.இராசா, தயாநிதிமாறன், திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், மேனாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, க.பொன்முடி, எ.வ.வேலு, திராவிட இயக்க ஆய்வாளர் எழுத்தாளர் க.திருநாவுக்கரசு உள்ளிட்டவர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
சென்னை கோடம்பாக்கம் முரசொலி அலுவலகப்பகுதி, இராயப்பேட்டை ஒய்எம்சிஏ வளாகம், சென்னை கடற்கரையில் கலைஞர் நினைவிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி நேற்று (7.8.2019) சென்னை மாநகரம் முழுவதும் சென்னை மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர்.
- விடுதலை நாளேடு, 8.8.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக