சனி, 31 ஆகஸ்ட், 2019

(பவழவிழா மாநாடு) திராவிட முன்னேற்றக் கழக தளபதி மு.க.ஸ்டாலின் பெருமிதம்

மகத்தான இயக்கமாம் தாய்க்கழகத்தின் பவள விழா!

தன்மானப் போருக்கான ஆயத்த விழா!


சென்னை, ஆக.27 சமூகநீதியை காத்துவரும் நமது தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் பவள விழா! தன்மான போருக்கான ஆயத்த விழா சேலம் மாநகரத்தில் இன்று (27.8.2019) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களின் அறிவுரை களுக்குச் செவிமடுப்போம் - தன்மானம் காக்கும் போரில் வெற்றியன்றி வேறில்லை என்ற ஆர்ப்பரிப்புடன் அணிவகுப்போம்! என தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.8.2019) ‘முரசொலி'யில்  ‘உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன்' எழுதும் மடலில் எழுதியிருப்பதாவது:
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்!
‘எல்லா சாலைகளும் ரோமாபுரி நோக்கி’ என்பார்கள். அதுபோல, திராவிட உணர்வுமிக்க தமிழர்களின் திசை தேடும் விழிகள் எல்லாம் இப்போது  சீலம் மிகுந்த சேலத்தை மட்டுமே  நோக்கி இருக்கிறது. காரணம், நமது தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் பவளவிழா சேலம் மாநகரத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. எந்த சேலத்தில் ‘திராவிடர் கழகம்' என்ற சித்தாந்தப் பெயர் சூட்டப்பட்டதோ, அந்த சேலத்தில் எழுச்சியூட்டிடும் சிறப்பு விழா.

கருங்கடல் போன்ற பேரணி!
ஆகஸ்ட் 27 அன்று காலை 9 மணிக்கு, சேலம் அம்மாப் பேட்டை அன்னை மணியம்மையார் நினைவரங்கத்தில் தொடங்கும் நிகழ்ச்சி, மாலையில் கருங்கடல் போன்ற பேரணியால் எழுச்சியும் ஏற்றமும் பெற்று, சேலம் கோட்டை மைதானத்தில் நிறைவு விழா என்ற நினைவில் நிரந்தரமாகத் தங்கும் விழா நிகழவிருக்கிறது. தாய்க்கு விழா என்றால் தனயர்கள் இல்லாமலா? மானமிகு ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறும் தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் பவளவிழாவில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் நிறைவுரையாற்றும் நல்வாய்ப்பினைப்  பெற்றிருக்கிறேன்.
சமூகநீதியைக் காக்கும் தளகர்த்தர்கள்
தோழமைக் கட்சித் தலைவர்களான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மதிப்பிற்குரிய கே.எஸ். அழகிரி அவர்கள்,  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அண்ணன்   வைகோ அவர்கள்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் அன்பிற்கினிய பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்கள், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீ அவர்கள் என சமூக நீதியைக் காத்து, களத்தில் நிற்கும் தளகர்த்தர்கள் பலரும் திராவிடர் கழகத்தின் பவள விழா மாநாட்டில் பங் கேற்கிறோம்.

முற்போக்குத் திட்டங்களை நிறைவேற்றிய நீதிக்கட்சி
திராவிட இனத் தமிழ்க்குடிகளை தன்மானமும் பகுத்தறிவும் மிக்க தகுதிகள் செறிந்த சமுதாயமாக மாற்றும் மகத்தான பணியினை, தொண்டு செய்து பழுத்த பழமாகத் தொடர்ந்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின்  தலைமையில் உருவான சுயமரியாதை இயக்கத்தின் கருஞ்சட்டைப் படையும்; வெள்ளையர் ஆட்சிக்காலத்திலேயே,  பிறப்பின் அடிப்படையிலான சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்றிடும் வகையில் வகுப்புவாரி இடஒதுக்கீடு, பெண்களுக்கு வாக்குரிமை, கோவில் சொத்துகள் கொள்ளை போகாமல் பாதுகாக்க இந்து அறநிலையச் சட்டம், தேவதாசி முறை எனும் பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு, ஆதிதிராவிட மக்களின் நலன் காக்கும் சட்டங்கள் எனப் பல முற்போக்குத் திட்டங்களை நிறைவேற்றிய நீதிக்கட்சியும்; இணைந்து பயணித்து, இந்தி ஆதிக்கத்தை வீழ்த்திட அறப்போர்க் களம் கண்டு தமிழர்களின் மொழி உரிமை மீட்கப்பட்ட காலம் அது.
சமுதாய மறுமலர்ச்சியில் தன்னிகரில்லாப் பெரும்பணி
மிட்டாமிராசுகள், ஜமீன்தார்கள், ‘சர்’ பட்டம் சூட்டப் பட்டோர், ராவ்பகதூர் - திவான்பகதூர் பட்டங்களைப் பெற்றவர்கள் -  இவர்கள்தான் அரசியலில் பங்கேற்று முன் னிலை வகித்திட முடியும் என்ற நிலையினை மாற்றிடவும், எந்த மக்களின் சமூகநீதிக்கும் சுயமரியாதைக்கும் இந்த இயக்கம் பாடுபடுகிறதோ, அந்த எளிய மக்களும் நடப்பு அரசியலைப் புரிந்துகொண்டு, சமுதாயப் பணிகளிலும் சீர்திருத்தப் பணிகளிலும் பங்கேற்றிட வாய்ப்பளித்திடும் நோக்கத்துடன் தந்தை பெரியார் அவர்களும், அவர்தம் தளபதியாக விளங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களும் ஒரே மாதிரி சிந்தித்து செயலாற்றியதன் விளைவுதான், 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் நாள் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் பெயர் மாற்றப்பட்டு, திராவிடர் கழகம் என்கிற பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘அண்ணாதுரை தீர்மானம்' என்ற பெயரில் பேரறிஞர் அண்ணா அவர்கள் முன்மொழிந்த அந்த தீர்மானமும், அதில் அடங்கியிருந்த பெயர் மாற்றமும், திராவிட இயக்கத் தலைவர்களால் நீண்டநேர விவாதத்திற்குட்படுத்தப்பட்டு, ஆரோக்கியமான ஜன நாயக வழிமுறையில் ஆதரவினைப் பெற்று நிறை வேறியதன் காரணமாக, திராவிடர் கழகம் என்ற பெயர் வரலாற்றில் நிலைபெற்று, சமுதாய மறுமலர்ச்சியில் தன்னிகரில்லாப் பெரும் பங்கைச் செலுத்தியிருக்கிறது.
மகத்தான இயக்கத்திற்குப் பவள விழா!
பெயர் மாற்றம் செய்யப்பட்ட இயக்கத்திற்கு புதுக் கொடி ஒன்றை உருவாக்கும் முயற்சியில், தந்தை பெரியாரின் கொள்கைக் குருகுலமான ஈரோடு “குடிஅரசு” அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனையின்போது, அங்கே துணை ஆசிரியராகப் பணியாற்றிய நம் ஆருயிர்த்
தலைவர் கலைஞர் அவர்கள், கறுப்பு வண்ணத்தின் நடுவே சிவப்பு வட்டம் வரைய மை கிடைக்காததால், தன் விரலைக் கீறி அதிலிருந்து வழிந் தோடிய  இரத்தத்தால் சிவப்பு வட்டம் வரைந்து கொடி உருவாக்கத்தை நிறைவு செய்தார். கலைஞரின் குருதியினால் கொடி உருவாக்கம் பெற்ற அந்த மகத் தான இயக்கத்திற்கு இன்று பவள விழா.
பெரியாருக்குக் காணிக்கையாக்கியவர்
தந்தை பெரியாரிடமிருந்து 1949ல் பிரிய நேர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மக்கள் இயக்கத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கியபோதும், திராவிடர் கழகத் தின் சுயமரியாதை - சமூகநீதி - பகுத் தறிவு எனும் அடிப்படைக் கொள்கை களிலிருந்து அது விலகாமல், தமிழர் நலன் காக்கும் உரிமைப்போரில் இரட்டைக் குழல் துப்பாக்கியாகவே செயல்பட்டது. 1967 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்தபோது, சுயமரியாதை திருமணச் சட்டத்தை நிறைவேற்றி தனது ஆட்சியையே பெரியாருக்கு காணிக்கையாக்கியவர் பேரறிஞர் அண்ணா. இயற்கை இரக்கமின்றி அவர் உயிரைப் பறித்தபோது, கட்சி யையும் ஆட்சியையும் தோளில் சுமக் கும் பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் அவர்கள்,   தந்தை பெரியாரின் இலட்சி யங்களைத் தொடர்ந்து நிறைவேற்றும் அவரது குருகுலத்து மாணவராகவே திகழ்ந்தார்.
தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு
பிறப்பால் ஒடுக்கப்படும் அனைத்து தரப்பு மக்களுக்குமான இடஒதுக்கீடு, பெண்களுக்குச்  சொத்துரிமை, தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு எனப் பெரியாரின் பெருங்கனவை நனவாக் கிய தலைவர் கலைஞர் அவர்கள், தந்தை பெரியாரின் நெஞ்சில் இருந்த முள் எனப்படும் ‘அனைத்து ஜாதியின ரும் அர்ச்சகராகும் சட்ட’த்தையும் நிறைவேற்றியவர்.
தாயின் எண்ணங்களை நிறைவேற் றும் தனிச் சிறப்புப் பெற்ற தனயர்களாக  பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் ஆற்றிய சீர்மிகு பணி களின் காரணமாக, இன்று இந்திய அரசியலையும் மாநில உரிமைகளை யும் பாதுகாக்கும் முன்மாதிரி (‘மாடல்’) மாநிலமாகத் தமிழகம் தனித்துவத் துடன் விளங்குகிறது.
போர்க் களங்கள் ஓய்ந்துவிடவில்லை
வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் போர்க்களங்கள் ஓய்ந்துவிடவில்லை. இந்தியாவின் பன்முகத்தன்மையைச்  சிதைத்து, மதவெறியை வளர்த்து, சமூகநீதிக்குக் குழி வெட்ட நினைக்கும்  சக்திகளின் அதிகாரக் கரங்களால் நீட் திணிக்கப்பட்டு தமிழ்நாட்டு மாணவ - மாணவியரின் உயிர்கள் பறிக்கப்படுகிறது.
மாநில உரிமைகள் நசுக்கப்படுகின்றன
ஜம்மு - காஷ்மீரில் தொடங்கி புதுச் சேரி யூனியன் பிரதேசம் வரை மாநில உரிமைகள் நசுக்கப்படுகின்றன. அரசி யல் சட்டத்திற்கு விரோதமான, பொரு ளாதார அடிப்படையிலான இடஒதுக் கீடு திணிக்கப்பட்டுள்ளது. தாய்மொழி யாம் தமிழ் மொழியைக் கந்தலாக்கி இந்தியையும் சமஸ்கிருதத்தையும் புகுத்துவதற்கான சதிவலை பின்னப் படுகிறது. இன்னும் பல வடிவங்களில் மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் வேகம் பெற்றுள்ள இந்தக் காலச்சூழலில் தந்தை பெரியா ரும் பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் நம்மிடையே இல்லை என்றாலும், அவர்கள் வழங்கிய இலட் சிய தீபம் நம் கைகளில் அணையாத அற்புத  விளக்காகச் சுடர் விடுகிறது.
ஜனநாயக விரோத சக்திகளை எதிர்கொள்வோம்
அந்தச் சுடரை உயர்த்துவோம்! இனப்பகை எனும் இருட்டை விரட்டு வோம்! ஜனநாயக விரோத சக்திகளை எதிர்கொள்ளும் வலிமையைப் பெருக்கும் தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் பவளவிழாவினை நமது பயிற்சிக்களமாக்குவோம். மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களின் அறி வுரைகளுக்குச் செவி மடுப்போம். தன் மானம் காக்கும் போரில் வெற்றியன்றி வேறில்லை என்ற ஆர்ப்பரிப்புடன் அணிவகுப்போம்! என தளபதி மு.க.ஸ்டாலின் ‘முரசொலி'யில் உங் களில் ஒருவன் பெயரில் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழக பவளவிழா மாநாட்டுக்கு இனமான பேராசிரியர் வாழ்த்துச் செய்தி
திராவிடர் கழகப் பவளவிழா மாநாடு - 75 ஆண்டுகளுக்கு முன் எந்த மாங்கனி நாட்டில் - சேலம் மண்ணில் கூடினோமோ அங்கேயே நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளம் நிறைந்து வழிகிறது.
75 ஆண்டுகள் என்பது ஒரு இயக்க வரலாற்றில் சாதாரணதல்ல. தலைமைகள் மாறியும் தத்துவங்கள் மாறாத, கொள்கைகள் குறைவுபடாத இயக்கம் பவளவிழா கொண்டாடுவது பாராட்டிப் போற்றி மகிழ  வேண்டிய ஒன்று.
நினைவுகளைப் பின்னோக்கிப் பார்க்கிறேன். அண்ணாமலைப் பல்கலையில் பயிலும் கல்லூரிக் காளை என்னை வரலாற்றுப் புகழ் மிக்க, திராவிடர் வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய மாநாட்டில் ஆங்கில மொழி வித்தகர் 'சண்டே அப்சர்வர்' பி.பாலசுப்பிரமணியம் அவர்களின்  உரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மேடையிலேயே மொழி பெயர்க்கும் பேறு பெற்றதை, இன்றும் அதைக் குறித்து பேசுவதை குறித்துக் கேட்கையில் பெருமிதமும், பேருவுவகையும் அடைகிறேன்.
மாபெரும் சமூக சீர்திருத்த இயக்கம் உரு வாக்கிய சாதனை மகுடங்கள் எண்ணிலடங்கா.
இந்த மாநாட்டில் பங்குபெறும் வாய்ப்பில் லையே என்று ஏங்குகிறேன்.
உடல் நலிவு என்னை இங்கே கட்டிப் போட்டாலும் என் மனம், சிந்தை நினைவு எல்லாம் இப்பவள விழா மாநாட்டின் பால் இருக்கும்.
மாநாட்டை சீரும் சிறப்புமாக ஏற்பாடு செய்த அன்பு இளவல் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆகிய இவர்களுடன் உடனிருந்து தொண்டாற்றும் அன்பு இதயங்களுக்கு நல்வாழ்த்துக்கள். இந்த இயக்கம் சாதித்துள்ள சாதனைக் குவியல்களை எந்தக் கொம்பனாலும் அழிக்கவோ, மறைக்கவோ, மறுக்கவோ இயலாது என்பது கல்லில் வடித்த உண்மை. மாநாடு வெற்றி பெற நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க பெரியார்!
இவ்வாறு திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
- விடுதலை நாளேடு, 27 .8 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக