தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞரின் திராவிட இயக்க
இலட்சியங்களுக்கு ஏற்பட்டுள்ள அறைகூவல்களை எதிர்கொள்ள தயாராவோம்!
சென்னை, ஆக.8 திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், கலைஞர் அவர்களின் முதலா மாண்டு நினைவு நாளான நேற்று (07-08-2019) முரசொலி வளாகத்தில் கலைஞரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. அதன் பிறகு தி.மு. கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர் களும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து, சென்னை இராயப்பேட்டை ஒய்.எம். சி.ஏ. அரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசிய உரையின் விவரம் பின்வருமாறு:
மரியாதை செலுத்துதல்
அனைவருக்கும் வணக்கம், மத்திய அரசின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவர்களான திருமதி.சுஷ்மா சுவராஜ் அவர்கள் நேற்று இயற்கையடைந்திருக்கின்றார்கள். தலைவர் கலைஞர் அவர்களின் மீது மாறாத பற்றும் கட்சிப் பாகுபாடின்றி அனைவரிடத்திலும் நல்ல முறையில் பழகக் கூடியவர், மத்திய அமைச்சராகவும் 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், டில்லி முதல்வராகவும் இருந்து சிறப்பாக பணியாற்றியவர். அவருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்தக்கூட்டத்தின் மூலமாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதேபோல், “ஆயிரம் விளக்கில் ஒரு அற்புத விளக்காய் விளங்கிய நம்முடைய ஆயிரம் விளக்கு உசேன்” என்று தலைவர் கலைஞர் அவர்களால் போற்றப்பட்ட அண்ணன் உசேன் அவர்கள் நேற்று நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்கள். பகுதிச் செயலாளராக, மாவட்ட துணைச் செயலாளராக, துணை அமைப்புச் செய்லாளராக, கொள்கை பரப்பு இணைச் செயலாளராக, தலைமை நிலையச் செயலாளராக, ஏன்? முரசொலி அறக்கட்டளை உறுப்பினராக வாழ்நாள் முழுக்க கழகத் தொண்டாற்றிய தொண்டின் சின்னம் அண்ணன் உசேன் அவர்கள். எனவே, அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் அடையாளமாக, மரியாதை கடைப்பிடிக்கப் படுகிறது.
மு.க.ஸ்டாலின் உரை:
“மானம் அவன் கேட்ட தாலாட்டு
மரணம் அவன் ஆடிய விளையாட்டு”
என்று கணல் வீசும் தனது பேனா முனையால், தாய் தமிழகத்தை தட்டி எழுப்ப 18 வயதில் திருவாரூர் வீதிகளில் முரசொலி எழுப்பிய தலைவர் கலைஞர் அவர்களுக்கு அவர் விரும்பி பயணிக்கும் இடத்தில் முரசொலி அலுவலகத்தில் சிலை எழுந்துள்ள, சிறப்பான நிகழ்ச்சியின் தலைவர் திராவிட இயக்கத்தின் தலைவராக, தமிழர் தலைவராக விளங்கும் பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் அய்யா அவர்களே, வங்கத்து சிங்கமாய் வலம் வந்து இந்தியாவின் சர்வாதிகார குரல்களுக்கு எதிராக தடைக் கற்களை எழுப்பி வருகின்ற, நம்முடைய பெருமதிப்பிற்குரிய சகோதரியார் மேற்குவங்கத்தின் முதல மைச்சர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் சிலையை தன்னுடைய திருக்கரத்தால் திறந்து வைத்து எழுச்சியுரை ஆற்றி அமர்ந்துள்ள மாண்புமிகு மம்தா பானர்ஜி அவர்களே, புதுச்சேரியின் புரட்சி முதலமைச்சர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களே, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு அரசியல் களைப்பு ஏற்படுகின்ற போதெல்லாம் இலக்கியத்தில் இளைப்பாறுதல் தந்துவந்த கவிப்பேரரசர் மதிப்பிற்குரிய வைரமுத்து அவர்களே, மருமகனாய் மட்டுமல்ல - மகனுமாய் இருந்தவரும் சட்டமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்ற சிரித்துக்கொண்டே கூண்டில் ஏறி நின்ற முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம் அவர்களே மற்றும் மேற்குவங்கத்தில் இருந்து வருகை தந்திருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய தினேஷ் திருவேதி அவர்களே, மேடையில் வீற்றிருக்கக் கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடிகளே, எதிரில் அமர்ந்திருக்கக்கூடிய சட்டமன்ற -நாடாளுமன்ற முன்னாள் இந்நாள் உறுப்பினர்களே, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கக் கூடிய தோழமைக் கட்சிகளைச் சார்ந்திருக்கக்கூடிய தலைவர் பெருமக்களே, பெரியோர்களே, தாய்மார்களே, இளைய சமுதாயத்தின் இனிய நண்பர்களே, என் உயிரோடு கலந்தி ருக்கக் கூடிய தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
ஆகஸ்ட் 07- வரலாற்றில் மறக்க முடியாத நாள்
ஆகஸ்ட் 07 தமிழக வரலாற்றில் -திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில், ஏன்? என்னுடைய தனிப்பட்ட வரலாற்றில் மறக்க முடியாத நாள் இந்நாள். எவரை நாம் உயிர் என்று உடலுக்குள் பொத்தி பாதுகாத்து வைத்திருந்தோமோ! அந்த உயிரிணைத் தலைவர் நம்மிடமிருந்து மெல்ல விலகி அவருடைய அண்ணனுக்குப் பக்கத்தில் ஓய்வெடுக்கச் சென்ற நாள் இந்த நாள். பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த நேரத்தில் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள், “நடக்கக்கூடாதது நடந்துவிட்டது, இழக்கக்கூடாதவரை நாம் இழந்திருக்கின்றோம்.” கலைஞர் அவர்கள் நம்மை விட்டு பிரிந்த நேரத்தில், அப்படித்தான் நமக்கும் அந்த உணர்வு ஏற்பட்டது. “நடக்கக்கூடாதது நடந்து விட்டது -இழக்கக்கூடாதவரை இழந்து நிற்கின்றோம்”. அவர் தான் நம்முடைய இயக்கமாக அரை நூற்றாண்டு காலமாக -உயிராக இருந்தார் -உணர்வாக இருந்தார். கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் 1949ஆம் ஆண்டு திராவிட முன் னேற்றக் கழகம் உதயமானது. மிகச் சரியாக 20 ஆண்டுகளில் அதாவது 1969இல் அறிஞர் அண்ணா அவர்கள் நம்மைவிட்டு பிரிந்தார்கள். சாமானியர்களுக்காக இந்த இயக்கத்தைத் துவங்கி, சட்டமன்றத்திற்குள்ளும் -நாடாளு மன்றத்திற்குள்ளும் அழைத்துச் செல்லுவது மட்டுமல்ல; இன்றைக்கு 5 முறை தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கின் றோம் என்று சொன்னால், இந்த இயக்கத்தை ஆட்சியிலும் முதன் முதலில் உட்கார வைத்தவரும் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள் தான். 20 ஆண்டு இயக்கத்தை, 50 ஆண்டுகள் வளர்த்துக்கொடுத்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.
ஆட்சிச் சக்கரத்தை சுழல வைக்கும் வல்லமை
ஒரு முறையல்ல, நான்கு முறை திராவிட முன்னேற்றக் கழகத்தை அரியணையில் ஏற்றியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். நாடாளுமன்றத்திற்கு சென்றது மட்டுமல்ல தன்னுடைய தம்பி மார்களை மத்திய அமைச்சர வையில் இடம்பெறச்செய்து அழகு பார்த்தவர். ஏன்? இந்திய ஆட்சிச் சக்கரத்தை சுழல வைக்கும் வல்லமை தி.மு.கழகத் திற்கு உண்டு என்ற அந்த உண்மையை நிரூபித்துக் காட்டியவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.
14 வயதில் தமிழ்கொடி பிடித்தவர் அதை 94 வயது வரைக்கும் அதனைப்பற்றி நின்றிருக்கக்கூடியவர். முதுமை காரணமாக அவர் கோபாலபுரம் வீட்டில் ஓய்வெடுத்தார். அந்த நேரத்தில் எங்களைப் போன்றவர்கள் அவரிடத்தில் சென்று கேட்போம். முரசொலி போகலாமா? அண்ணா அறிவாலயம் போகலாமா? என்றால், அவருடைய கண்கள் விரிந்தது பேனாவையும், தாளையும் அவர் கையில் கொடுத் தால் அண்ணா என்றே எழுதினார். பேசச்சொன்னால், அண் ணா என்றே உச்சரித்தார். ‘அண்ணா’ என்றே அவருடைய மூச்சுக்காற்று இருந்தது. ‘முரசொலி’ என்றே அவர் காதுக்கு கேட்டது. ‘அறிவாலயம்’ என்றால் அவருடைய கண்கள் விரிந்தது. எத்தகையத் தலைவரை நாம் பெற்றிருந்தோம். நான் கம்பீரமாக சொல்கின்றேன். இந்தியாவில் எந்த இயக்கத்திற்கும் இப்படி ஒரு தலைவர் இல்லை என்கின்ற பெருமையை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உருவாக்கிக் கொடுத்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். அதனால் தான் தலைவர் கலைஞர் அவர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. அவருடைய குருகுலமாம் ஈரோட்டில் சிலை அமைத்தோம். அவர் அண்ணன் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் சிலையை அமைத்தோம். இளமை முறுக்கோடு அவர் கழகம் வளர்த்த திருச்சியிலும் சிலையை நிறுவினோம். அவருடைய மூத்த பிள்ளையாம், அவருடைய முரசொலி அலுவலகத்தில் இன்று சிலை திறக்கப்பட்டுள்ளது. இன்னும் பல ஊர்களில் அவருடைய சிலை எழ இருக்கின்றது. மற்ற இடங்களில் எல்லாம் எழுந்து நின்ற நிலையில் கர்ஜித்துக் கொண்டிருப்பார் கலைஞர் அவர்கள். ஆனால், முரசொலியில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருப்பார். மடியில் அட்டை வைத்து எழுதுவதுதான் அவருக்கு மிக -மிகப் பிடிக்கும் அதுதான் தமிழுக்கும் பிடிக்கும் என்பதால், அதே வடிவில் காட்சி தருகின்றார் முரசொலியில்.
தந்தை பெரியார், - பேரறிஞர் அண்ணா, - தலைவர் கலைஞர் போன்றோரின் கொள்கைகளுக்கு திராவிட இயக்கத்தின் லட்சியங்களுக்கு, தமிழகத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய ஆபத்துக்களை நீக்குவதற்கு, நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து போராடி வந்து கொண்டி ருக்கக்கூடிய செய்திகளை தினமும் பார்க்கின்றோம். இந்நேரம் தலைவர் கலைஞர் அவர்கள் நம்மிடத்தில் இருந்திருந்தால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்திருப்பார்.
ஆயிரம் ஆண்டுகள் அடைய
வேண்டிய பெருமை
கலைஞரை உயிர் வடிவாய் உட்கார்ந்து எழுதிக்கொண் டிருப்பது போல் சிலையை வடிவமைத்துத் தந்திருக்கக்கூடிய திராவிடச் சிற்பி ‘தீன தயாளன்’ அவர்களை நான் மனதாரப் பாராட்டுகின்றேன். முரசொலி அறக்கட்டளையின் சார்பில் பாராட்டுகின்றேன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் அவரை மனதார வாழ்த்துகின்றேன். இன்றைக்கு சிலை திறக்கின்றோம் என்று சொன்னால், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களை பெருமைப்படுத்துவதற்காக மட்டு மல்ல, ஆயிரம் ஆண்டுகள் அடைய வேண்டிய பெருமையை நூறே ஆண்டுகளில் அடைந்துவிட்டவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். கலைஞர் அவர்களுக்கு சிலை வைக்கின்றோம் என்று சொன்னால், அந்த சிலைகள் நம் முடைய கொள்கைகளை நமக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றன -நம்முடைய இலக்குகளை நமக்கு அடையாளம் காட்டிக்கொண்டிருக்கின்றது -நமக்கு உற்சாகத்தை ஊட்டிக் கொண்டிருக்கின்றது.
சமுகநீதிக்கும் - மாநில
சுயாட்சிக்கு அச்சுறுத்தல்
பெரியார் என்றால் பகுத்தறிவும் -சுயமரியாதையும். அண்ணா என்றால், மொழிப்பற்றும் -சுய உணர்வும். கலைஞர் என்றால் சமூக நீதியும் -மாநில சுயாட்சியும். இவர்களது சிலைகள் இந்த தத்துவத்தைத் தான் இன்றைக்கும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றது. பகுத்தறிவுக்கும் - சுயமரியா தைக்கும் -மொழிப்பற்றுக்கும் -இனப்பற்றுக்கும் -சமூக நீதிக்கும் -மாநில சுயாட்சிக்கும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய காலம் இப்பொழுது உருவாகி இருக்கின்றது. எனவே தான், முன்பை விட கலைஞர் நமக்கு இன்னும் தேவைப்படுகின்றார், அதைவிட அதிகம் தேவைப்படுகின்றார். காரணம், ஒடுக்கப் பட்ட -தாழ்த்தப்பட்ட -பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியில், வேலைவாய்ப்பில் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்டார்கள். அவர் களுடைய மேன்மைக்காக கொண்டு வரப்பட்டது தான் சமூக நீதி எனப்படும் இட ஒதுக்கீடு ஆகும். அந்த கொள்கைக்கே உலை வைக்கக்கூடிய அளவிற்கு பொருளாதார அளவுகோலை இன்றைக்கு கொண்டுவந்திருக்கின்றார்கள்.
இட ஒதுக்கீட்டில் அந்தக் கொள்கையால் தகுதி போய் விட்டது! திறமை போய்விட்டது! என்று இதுவரையில் சொல்லி வந்தவர்கள், இன்றைக்கு அவர்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டதும், இட ஒதுக்கீடு கொள்கையை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.
ஜனநாயகம்தான் முக்கியம்
அதேபோல் தன் மாநில சுயாட்சிக் கொள்கையும் ஒரே நாடு - ஒரே தேர்தல் - ஒரே அடையாள அட்டை - ஒரே உணவு - ஒரே தேர்வு, என்று எல்லாவற்றையும் டெல்லியில் குவித்துக் கொண்டிருக் கின்றார்கள். மத்திய அரசு என்பது இன்று ‘மத்திய படுத்தப்பட்ட அரசாக மாறிக் கொண்டி ருக்கின்றது. இதனால் தான், 1971ஆம் ஆண்டே மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று முழங்கினார் முத் தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். மாநில சுயாட்சிக் காக ராஜமன்னார் கமிஷனை அமைத்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். ஏன், இந்தியாவிலேயே அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்ட நேரத்தில் ஆட்சியைப் பற்றி கவலைப்படவில்லை, கட்சியைப் பற்றியும் கவலைப்படாமல், ஜனநாயகம் தான் முக்கியம் என்ற உணர்வோடு, தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். என்னவென்றால் இது சர்வாதிகாரத்திற்கான துவக்க விழா என்று தமிழக முதல மைச்சராக இருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்கள் அன்றைக்கு தீர்மானம் போட்டார்.
திராவிட இயக்கத்தின் லட்சியங்கள்
அந்த துணிச்சலையும் - தைரியத்தையும் - கொள்கை உறுதியையும் தான் முதலாம் ஆண்டு நினைவு கூறுகின்ற பொழுது நாம் ஒவ்வொருவரும் எடுத்துக்கொண்டாக வேண்டும் என்று நான் உங்கள் எல்லோரையும் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் போன்றோரின் கொள்கைகளுக்கு திராவிட இயக்கத்தின் லட்சியங்களுக்கு, தமிழகத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய ஆபத்துக்களை நீக்குவதற்கு, நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து போராடி வந்து கொண்டி ருக்கக்கூடிய செய்திகளை தினமும் பார்க்கின்றோம். இந்நேரம் தலைவர் கலைஞர் அவர்கள் நம்மிடத்தில் இருந்தி ருந்தால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்திருப்பார்.
திராவிடம் வெல்க
கடந்த ஜூன் மாதம் பதவியேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழிலே கம்பீரமாக பதவி ஏற்றார்கள். தந்தை பெரியார் வாழ்க - அறிஞர் அண்ணா வாழ்க - டாக்டர் அம்பேத்கர் வாழ்க - தலைவர் கலைஞர் வாழ்க - திராவிடம் வெல்க - தமிழ் நாடு வாழ்க என்ற முழக்கத்தை டெல்லி நாடாளுமன்றத்தில் முழங்கி இருக்கின்றார்கள். நம்முடைய உறுப்பினர்கள் இன்றைக்கு நாடாளுமன்றத்தையே நடுநடுங்க வைத்துக்கொண்டு இருக்கின்றார்களா, இல்லையா. என் னென்ன பிரச்சினைகள் இருக்கின்றது என்பதை எடுத்துச் சொல்ல அதிக நேரம் இல்லை.
பல பிரச்சினைகளை முன்னெடுத்து...
தலைப்புச் செய்திகளாக நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அய்ட்ரோ கார்பன் திட்டம், பொருளாதார இட ஒதுக்கீடு, சிறுபான்மையினர் மீது தாக்குதல், புதுவை கவர்னர் பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு, சேலம் உருக்காலை பிரச்சினை, சேது சமுத்திரத் திட்டம், தபால் தேர்வுகளில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்ப்பது, சேலம் எட்டு வழிச்சாலை, உள்ளாட்சித் தேர்தல், நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, முத்தலாக் சட்டம், மகளிர் மசோதா, விவசாயிகளின் கடன், காவிரி பிரச்சினை, அணை பாதுகாப்பு மசோதா போன்ற பல பிரச்சினைகளை முன்னெடுத்து நாடாளுமன்றத்தில் உரை யாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அப்படி உரையாற்றிக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய நாடாளுமன்ற உறுப்பி னர்களை, நம்முடைய கூட்டணியில் இடம் பெற்றிருக்கக்கூடிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் உங்கள் அனைவரின் சார்பிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் மனதார பாராட்டுகின்றேன், வாழ்த்துகின்றேன். தலைவர் கலைஞர் அவர்கள் என்ன எதிர்பார்ப்பாரோ, அதை இன்றைக்கு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர் களும் செய்து கொண்டிருக்கின்றார்கள். இப்பொழுது உச்சக்கட்டமாக காஷ்மீர் பிரச்சினை வந்துள்ளது. மம்தா அவர்கள் பேசுகின்ற பொழுது குறிப்பிட்டிருந்தார். பரூக் அப்துல்லா அவர்கள் மேடையில் இருந்திருக்க வேண்டும். அழைப்பிதழில் அவர் பெயர் வெளியிடப்பட்டிருக்கிறது ஆனால் வரவில்லை, என்ன காரணம் என்றால் வீட்டுச் சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார். அதனால் இந்த மேடைக்கு வர முடியாத நிலை.
நினைத்துப் பாருங்கள் ‘காஷ்மீரத்து சிங்கம்’ என்று அழைக்கப்பட்ட ஷேக் அப்துல்லாவின் மகன் அவர். தேசிய மாநாட்டுக் கட்சியை உருவாக்கியவர் ஷேக் அப்துல்லா அவர்கள் தான். 3 முறை காஷ்மீரின் முதல்வராக இருந்தவர் ஷேக் அப்துல்லா அவர்கள். அவருடைய பதவி பறிக்கப்பட்டு, அந்த மாநிலத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டார். அதற்குப் பின்னால் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டார்.
கருப்பு வரலாற்றை மீண்டும் உருவாக்க...
கொடைக்கானல் மலையில் வீட்டுச் சிறையில் அடைத்து வைத்திருந்தார்கள். அந்த கருப்பு வரலாற்றை மீண்டும் உருவாக்க நினைக்கின்றார்கள். நான் கூற விரும்புவது காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு இருக்கக்கூடிய சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக்கூடாது என்பதுதான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. இதைச் சொன்னால் என்ன செய்கின்றார்கள். அதற்காக தேசபக்தி பாடத்தை எங்களுக்கு யாரும் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதே இந்தியாவிற்கு சீனாவால் ஆபத்து வந்ததா, இல்லையா. பாகிஸ்தானால் ஆபத்து வந்ததா, இல்லையா. நாங்கள் யார் பக்கம் நின்றோம் நாட்டின் பக்கம் தானே உறுதியாக நின்றோம். ஆனால், இன்று தேசபக்தியின் பெயரால் மதவெறியைத் தூண்டக்கூடிய காரியத்தை பா.ஜ.க அரசு செய்து கொண்டிருக்கின்றது என்று சொன்னால். இந்த போலித்தனத்தை உறுதியாக சொல்லுகின்றேன், தலைவர் கலைஞர் அவர்களின் சிலையை திறந்து வைத்து இருக்கக்கூடிய மேடையில் நின்று சொல்கின்றேன். உறுதியாக தி.மு.க எதிர்க்கும் - எதிர்க்கும் - எதிர்க்கும் அதில் எந்த மாற்றமும் கிடையாது. என்ன சொல்கின்றோம் என்றால், அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு அமைகின்ற வகையில், எந்த நடவடிக்கையும் காஷ்மீரகத்தில் எடுக்கக்கூடாது என்பது தி.மு.கழகத்தின் நிலைப்பாடு.
தென்னகத்தில் இருந்து காப்போம்....
நான் இன்னும் சொல்கின்றேன் “இமயத்தில் இருமல் ஒளி எழுந்தால்; தென்னகத்தில் இருந்து காப்போம்” என்று பாடினார் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள். அந்தக் குரலாக தி.மு.க எப்போதும் இருக்கும். தலைவர் கலைஞர் அவர்களின் ஓராண்டு நினைவை நடத்துகின்ற நேரத்தில் அதுதான் நம்முடைய இலக்கு.
கழகத்தை வழிநடத்தும் தலைவர் என்பது நான்கு எழுத்து.
தலைவரின் தலைவராம் கலைஞர் என்பது நான்கு எழுத்து.
அந்தக் கலைஞரின் கேடயமாக விளங்கக்கூடிய முரசொலி நான்கு எழுத்து.
முரசொலியில் சிலை எழுப்பிய இந்த ஸ்டாலின் என்பதும் நான்கு எழுத்து.
எனது உயிர் மூச்சாம் கழகம் என்பதும் நான்கு எழுத்து.
கழகத்தின் அடித்தளமாக விளங்குகின்ற தொண்டர் என்பதும் நான்கு எழுத்து.
அந்த தொண்டர்கள் அனைவருக்கும் தலைமை தொண்டனாய் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.
காலையில் நடந்த அமைதிப் பேரணி, அதைத் தொடர்ந்து முரசொலி வளாகத்தில் சிலை திறப்பு விழா. இப்பொழுது இங்கு நடந்து கொண்டிருக்கக்கூடிய மாபெரும் பொதுக் கூட்டம். இதில் பங்கேற்றிருக்கக்கூடிய அத்தனை தலைவர் களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகின்றேன். மலர் வெளியீடு நடைபெற்றது. அந்த மலர் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக, அந்தக் குழுவில் இணைந்து ஏறக் குறைய மூன்று, நான்கு மாதங்களாக பசி மறந்து தூக்கத்தை மறந்து அதில் பணியாற்றி வெற்றியோடு கொண்டு வந்து சேர்த்து வைக்கக்கூடிய வகையில், அந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கக்கூடிய அத்துனை பேருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகின்றேன்.
அதுமட்டுமல்ல; சிலை திறப்பு விழா நிகழ்ச்சியாக இருந்தாலும், இங்கே நடைபெறக்கூடிய பொதுக்கூட்ட நிகழ்ச்சியாக இருந்தாலும் இதை எழுச்சியோடு ஏற்றதோடு தலைவர் கலைஞருக்கு பெருமை சேர்க்கக்கூடிய வகையில் நடைபெறவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து பாடுபட்டு பணியாற்றி பெருமை சேர்த்துதந்திருக்கக் கூடிய நம்முடைய மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எ.வ.வேலு அவர்களுக்கும் நான் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவிக்க விரும்புகின்றேன். இப்படி ஒவ்வொருவராக தனித்தனியாக நான் பெயர் சொல்லி, அனைவருக்கும் நன்றி - நன்றி என்று சொல்லி நேரத்தை வீணடிக்காமல், ஒட்டுமொத்த தலைவர் கலைஞரின் உயி ரினும் உயிரான உடன்பிறப்புகளாக இருக்கக்கூடிய உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- விடுதலை நாளேடு, 8.8.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக