இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்
சென்னை, ஜூன் 15 சமத்துவ சிந்தனையை அழிப்ப தற்காக உள்ளே நுழைய முயற்சிக்கும் மொழியாக, இந்தி மொழி இருக்கின்றது. அது நம்மைச் சிதைத்துவிடும், நம் பெருமையைக் கெடுத்துவிடும். இந்தப் போராட்டத்தில் ஆசிரியர் அவர்களுக்குத் துணையாக திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்கும். இந்தி வந்தால் நமக்குக் கேடு - நம்முடைய பெருமைகள் கெடும் என்றார் திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., அவர்கள்.
இந்தி எதிர்ப்பு மாநாடு
கடந்த 4.6.2022 அன்று மாலை சென்னை சைதாப்பேட்டை தேரடி வீதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
திராவிடர் கழகத்தின் சார்பாக இங்கே நடைபெறு கின்ற இந்தி எதிர்ப்புத் திறந்தவெளி மாநாட்டிற்குத் தலைமையேற்று இருக்கின்ற அய்யா ஆசிரியர் அவர்களே,
இங்கே எனக்கு முன்பு உரையாற்றி இருக்கின்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ அவர்களே,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் முத்தரசன் அவர்களே,
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பேராசிரியர் சுப.வீ. அவர்களே, வரவேற்புரையாற்றி இருக்கின்ற
இரா.வில்வநாதன் அவர்களே,
தீர்மானங்களை இங்கே நம்முன்னால் முன்வைத்த திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்களே, திராவிடர் கழகப் பிரச்சார செய லாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களே, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்களே, பொருளாளர் வீ.குமரேசன் அவர்களே,
எனக்குப் பின்பு இங்கே உரையாற்ற உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் தொல்.திருமாவள வன் அவர்களே, நன்றியுரையாற்றவிருக்கின்ற செ.ர.பார்த்தசாரதி அவர்களே,
மற்றும் இங்கே திரளாகக் குழுமியுள்ள பெரியோர் களே, நண்பர்களே, தாய்மார்களே உங்கள் அனை வருக்கும் வணக்கம்.
இந்தி நம்மை சூத்திரனாக்கிவிடும்
இந்தி என்ன செய்யும்? என்றால், நம்மை சூத்திரன் ஆக்கிவிடும்.
இந்தி நம்மை சூத்திரனாக்கிவிடும்.
இந்தி எந்த நன்மையையும் செய்யாது.
நான் ஒரு பட்டியலைச் சொல்கிறேன், அந்தப் பட்டி யலைக் கேளுங்கள்.
மேற்கு வங்காளம் வளர்ந்த மாநிலமா, இல்லையா?
அதற்குக் கீழே ஒடிசா வளர்ந்த மாநிலமா, இல்லையா?
அதற்குக் கீழே ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா வளர்ந்த மாநிலமா, இல்லையா?
அதற்குக் கீழே தமிழ்நாடு வளர்ந்த மாநிலமா, இல்லையா?
மேற்கே கேரளா, அதற்கு மேலே கருநாடகம், அதற்கு மேலே மராட்டியம், அதற்கு மேலே குஜராத், அதற்கு மேலே பஞ்சாப் - இவையெல்லாம் வளர்ந்த மாநிலங் களா, இல்லையா?
ஏன் இதைக் கேட்கிறேன் என்றால், இந்த மாநிலங் களில், இந்தி அந்த மக்களுடைய தாய்மொழி இல்லை.
வளராத மாநிலம் என்றால், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், இராஜஸ்தான், இன்னும் புதிதாகப் பிறந்த இரண்டு, மூன்று மாநிலங்கள்.
பிறகு எதற்கு நான் இந்தியைப் படிக்கவேண்டும்?
இங்கே படிக்கப்பட்ட தீர்மானங்களில், இரண்டாவது தீர்மானத்தில் ஒன்றைச் சொன்னார்கள்.
ஒரே மொழியாக இந்தி இருந்தால், உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்று இந்த நாட்டினுடைய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா ஓரிடத்தில் பேசியிருக்கிறார்.
அமித்ஷா என்பவர் இந்தியரா?
எனக்கு வந்த சந்தேகம் என்னவென்றால், அமித்ஷா என்பவர் இந்தியரா? என்பதுதான்.
அமித்ஷா என்பவர் இந்தியரா என்று எனக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. காரணம் என்னவென்றால், 70 ஆண்டுகளுக்குமேல், இந்தியாவை அடையாளப்படுத் துகிற நம்முடைய பெருமை என்னவென்றால், வேற்று மையில் ஒற்றுமைதான் என்பதுதான் இந்தியாவை அடையாளப்படுத்துகின்ற ஒன்று.
நம்முடைய பண்பாடு வேறுபட்ட பண்பாடு.
நம்முடைய மொழி, பல மொழி. இருந்தாலும், ஒற்று மையாக இருக்கிறோமே, இதுதான் உலகளவில் உள்ள மக்களை இந்தியாவைப் பார்த்து வியக்க வைக்கிறது.
1947 வரைக்கும் இந்தியா ஒரு நாடு இல்லை
ஒருவேளை இந்தியர் யார் என்று அவருக்கே இன்னும் தெரியவில்லை போலிருக்கிறது. இந்தி வந்தால்தான், இனிமேல்தான் இந்த நாட்டை அடையாளப்படுத்தப் போகிறாராம்.
அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. 1947 வரைக்கும் இந்தியா ஒரு நாடு இல்லை.
விந்திய மலைக்குத் தெற்கே பார்த்தீர்களேயானால், வெள்ளையர் காலத்தில், சென்னை மாகாணம் (மெட்ராஸ் பிரசிடென்சி) என்று சொல்லக்கூடிய அந்தப் பகுதிதான் ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களுடைய வசம் இருந்தது.
இன்னொரு பெரிய பகுதி -
திருவிதாங்கூர் சமஸ்தானம் மன்னராட்சி
மைசூர் சமஸ்தானம் மன்னராட்சி
அய்தராபாத் சமஸ்தானம் மன்னராட்சி
தென்னிந்தியாவில் நான்கு ராஜாங்கம் இருந்தது.
வடக்கே ஓரளவிற்கு, பாம்பே பிரசிடென்சி, கல்கத்தா பிரசிடென்சி என்று இரண்டு இருந்தது. சென்டர் பிரசிடென்சி என்ற ஒன்று இருந்தது. ஒரு சில குறுநில மன்னர்கள் இருந்தார்கள். ஆனாலும், பெரும்பாலான பகுதிகள் வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் இருந்தது.
சர்தார் பட்டேல் ஒவ்வொரு ராஜாவாகப்
பார்த்துப் பேசினார்
1947 ஆம் ஆண்டு நாம் சுதந்திரம் பெற்ற பிறகு, விடுதலை அடைந்த பிறகு, அப்பொழுது இருந்த உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேல், ஒவ்வொரு ராஜாவாகப் போய்ப் பார்த்து, பேசியதால், நாமெல்லாம் ஒன்றாக சேர்ந்து இந்தியாவானோம்.
ஒரு நாடாக வைத்துக்கொள்வோம் என்று கேட்டு, அதற்கு அய்தராபாத் நிஜாம் முதலில் ஒத்துக்கொள்ள வில்லை; பிறகு இவர்கள் அதிகாரத்தை வைத்து, படைகளை வைத்துப் பணிய வைப்போம் என்று சொன்னதினால், அவரும் சேர்ந்து, அதற்குப் பிறகு இது ஒரு நாடாக ஆயிற்று.
ஆனால், பல்வேறு பண்பாடுகள், மொழிகள் புழங்கி வந்த இந்த நாடு, முழுமையாக வெள்ளையர்கள் ஆதிக் கத்தில் இல்லை; விடுதலையான பிறகு, ஒருங்கிணைக்கும் முயற்சியை காங்கிரஸ் செய்தது. இன்னொரு ஒரு பெரிய நல்ல காரியத்தையும் செய்தார்கள்.
1951 இல் மொழிவழி மாநிலங்களாகப் பிரித்தார்கள்!
அந்தக் காலத்தில் என்ன கோபம் நம்மேல் இருந்தாலும், காங்கிரஸ்மேல் எனக்குப் பிடிமானம் எங்கே வருகிறது என்றால், மொழிவழி மாநிலங்களாக இந்தியாவைப் பிரித்தார்கள் 1951 இல்.
ஏனென்றால், ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பண்பாடு இருக்கிறது. ஒரு நாகரிகம் இருக்கிறது. சில பழக்க வழக்கங்கள் இருக்கின்றன.
அந்த மொழியைக் காப்பாற்றுகின்றபொழுதுதான், அந்தப் பண்பாட்டையும் காப்பாற்ற முடியும் என்று கருதினார்கள். எனவே, மொழிவழி மாநிலங்களாகப் பிரித்தார்கள்.
அதுகூட இவர்களுக்குத் தெரியவில்லை.
இந்தி எதற்கு?
அன்றைக்கு ராஜாக்களிடம் பேசும்பொழுது, சும்மா பேசி, நம்மோடு சேர்ந்து ஒன்றாக இருக்கலாம் அல்லவா!
உனக்கு வருஷா வருஷம் நான் மானியம் தருகிறேன். வாடகைக்குத்தான் குடியிருந்தோம். 1970 ஆம் ஆண்டு வரைக்கும் வாடகைக்குப் பல பகுதியில் குடியிருந்த ஒரு நாடாக இருந்தது.
இந்திரா காந்தி பிரதமராக வந்தவுடன்
மன்னர் மானியத்தை ஒழித்தார்
1970 ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக வந்து, மன்னர் மானியத்தை ஒழித்ததற்குப் பிறகுதான் முழுமையாக மன்னர்கள் ஒழிந்தார்கள்.
இப்படி ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால், அந் தந்த மக்களுக்கான மொழியைக் காப்பாற்றவேண்டும்.
வடமொழியான சமஸ்கிருதத்திற்கு 643 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
எனக்கு ஒரு ஆசை என்னவென்றால், வடமொழிக் கென்று ஒரு மாநிலத்தை உருவாக்கிப் பாருங்கள்.
தமிழர்களுடைய பெருமை என்பது
2000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருமை
இது நம்மை சோதிக்கும் திட்டம். தமிழர்களுடைய பெருமை என்பது 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருமை.
நம்முடைய பண்பாடு என்பது சமத்துவப் பண்பாடு.
நான் நாடாளுமன்றத்திலேயே பேசினேன், விந்திய மலைக்குத் தெற்கே நான்கு நாடுகள் இருந்தன. ஆயிரம் ஆண்டுகளுக்கு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு - சேர, சோழ, பாண்டிய, பல்லவ நாடுகள்.
விந்திய மலைக்கு வடக்கே, பெரிய நாடுகள் என்று - மராட்டியர்கள் இருந்தார்கள், மகதர்கள் இருந்தார்கள், குப்தர்கள் இருந்தார்கள், மவுரியர்கள் இருந்தார்கள் - நான்கு பெரிய நாடுகள்.
என்ன வித்தியாசம் தெரியுமா?
வடக்கே இருந்த மராட்டியர்கள், மகதர்கள், குப்தர் கள், மவுரியர்கள் இவர்களில் யாராவது ஒருவர் மன்ன ராக வரவேண்டும் என்றால், அவர்கள் சத்திரியராக இருக்கவேண்டும்.
ஏனென்றால், வருணாசிரமம் என்பது அவர்கள் தர்மம் - வடமொழி தர்மம்.
ஆனால், நம்முடைய சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் இருந்தார்களே, யார் வீரனோ அவர்கள் ஆட்சிக்கு வரலாம். சத்திரியர்கள்தான் ஆட்சிக்கு வரவேண்டும் - அது விதி என்பது இங்கே கிடையாது.
மனிதர்கள் மனிதர்களாக மதிக்கப்பட்ட காலம்.
இது நம்முடைய பெருமை.
விந்திய மலைக்குத் தெற்கே முழுமையாகப் பரவலாக இருந்த மொழி தமிழ் மொழி.
திருவள்ளுவர் ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘‘ என்று சொன்ன நேரத்திலே இங்கே இருந்த ஒரே மொழி தமிழ் மொழி.
11 ஆம் நூற்றாண்டு வரை
ஜாதியே கிடையாது
பிறகு அவர்கள் வர வர, அந்த மொழியையும் இழுத்துக்கொண்டு வந்தார்கள்; மொழிக் கலப்பு நடந்து, சில புதிய மொழிகள் தோன்றின. மறுபடியும் உள்ளே வந்தார்கள், 10 ஆம் நூற்றாண்டு, 11 ஆம் நூற்றாண்டு வரை ஜாதியே கிடையாது.
ஜாதி இருந்தால், குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த வர்கள்தான் மன்னராக வேண்டும் என்ற விதி அங்கே வரும்.
ஆகவே, ஜாதி கிடையாது -
எல்லோரும் சமம் என்கிற ஒற்றைச் சிந்தனையுடைய ஒரு பண்பாடு இந்த உலகத்திலே இருந்தது என்றால், அது தமிழராகிய நம்முடைய பண்பாடு. இந்தப் பண் பாட்டை அழிப்பதற்காக அவர்கள் முயற்சிக்கிறார்கள்.
மனுதர்மத்தை இங்கே கொண்டு வந்து புகுத்துவ தற்காக அவர்கள் இந்தியைத் திணிக்க முயற்சிக்கிறார்கள்.
முதலிலே சொன்னார்களே, முதலில் இந்தி வரும் - குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது என்று சொன் னார்களே, அதுதான்.
இதிலிருந்து நாம் விடுபட்டு நிற்கவேண்டும். இதை விடக்கூடாது. நாம் மனிதர்களாக இருக்கும்வரை இதை அனுமதிக்கக் கூடாது. இதை அனுமதித்தால், நாம் மனிதர்களாக இருக்கமாட்டோம். அடிமைகளாக, சூத்திரர்களாக இருப்போம்.
நம்முடைய பண்பாடு அல்ல.
நம்முடைய இலக்கியங்கள் சொல்லவில்லை
வள்ளுவர் சொல்லவில்லை
ஏழு, எட்டு மொழியை செம்மொழி என்று சொல் கிறார்களே, தமிழ், வடமொழி, கிரேக்க மொழி, ரோமாபுரி மொழி, சீன மொழி, அரேபிய மொழிகளை செம்மொழி என்கிறார்கள்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த, தொடர்ச்சியாக வழக்கத்தில் உள்ள மொழியை செம்மொழி என்று சொல்வார்கள்.
இந்த ஏழு, எட்டு மொழிகளில் பல இலக்கியங்கள் இன்னும் இருக்கின்றன.
தமிழர்கள்தான் ஆண் - பெண் சமத்துவத்தைக் கடைப்பிடித்தார்கள்
ஆனால், தமிழ் மொழியில் மட்டும்தான், பெண்கள் பாட்டு எழுதி, இலக்கியங்களில் அவை இடம்பெற்றி ருக்கின்றன. காரணம் என்னவென்றால், தமிழர்கள்தான் ஆண் - பெண் சமத்துவத்தைக் கடைப்பிடித்தார்கள்.
சமஸ்கிருதத்தில், ஒரு பெண்கூட கவிதையோ, பாட்டையோ எழுதி நான் பார்க்கவில்லை. வேறு எந்த மொழியிலும் கிடையாது.
கிரேக்க மொழியில் கிடையாது; அரேபிய மொழியில் கிடையாது. 400, 500 ஆண்டுகளுக்குள் வந்திருக்கலாமே தவிர, அதற்கு முன்பு கிடையாது.
தமிழனுக்குள்ள பெருமை, மனிதர்களை, மனிதர் களாக சமத்துவத்தோடு நடத்திய ஒற்றைச் சமுதாயம் உலகத்திலே இருக்கிறது என்றால், அது நம்முடைய தமிழ்ச் சமுதாயம் மட்டும்தான்.
திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்கும்!
அந்த ஒற்றைச் சிந்தனையை, சமத்துவ சிந்தனையை அழிப்பதற்காக உள்ளே நுழைய முயற்சிக்கும் மொழி யாக, இந்தி மொழி இருக்கும். அது நம்மைச் சிதைத்து விடும், நம் பெருமையைக் கெடுத்துவிடும். இந்தப் போராட்டத்தில் ஆசிரியர் அவர்களுக்குத் துணையாக திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்கும்.
இந்தி வந்தால் நமக்குக் கேடு -
நம்முடைய பெருமைகள் கெடும்,
நம்முடைய மரியாதை போகும்,
நம்மிடையே இப்பொழுது நிலவி வருகிற சகோதரத் துவம் அழியும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும் என்று சொல்லி,
இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன், வணக்கம்!
- இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., அவர் கள் சிறப்புரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக